சோழ நாட்டில், அந்தக் காவிரிக் கரையில் வாழ்ந்த சுக வாழ்வைச் சென்னைப் பட்டினத்திலும் இராம கவிராயர் எதிர்பார்த்து ஏமாந்தால் அது சென்னையின் குற்றமா என்ன? தென்னை, மாந்தோப்புக்களின் அமைதியும், கால் காலாகப் பிரிந்து ஓடும் காவிரி நீரின் குளிர்ச்சியும், பச்சைப் பசேரென்ற பயிர் வெளியும், வெற்றிலைக் கொடிக்காலும், கரும்புத் தோட்டமும், வாழைக் கொல்லைகளுமாக விளங்கும் சோழ நாட்டுச் சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்து வாழ்பவர் அவர். நிழலருமை வெய்யிலிலே’ என்றாற்போல ஊரிலிருந்தபோது தெரியாத அதன் அருமை சென்னைக்கு வந்து சில நாட்கள் கழிந்த அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியது அவருக்கு . காரியார்த்தமாகச் சென்னை சென்று வரவேண்டிய அவசியத்தைத் தவிர்க்க முடியாமல் சென்னைக்கு வந்திருந்தார் அவர் வந்துவிட்டால், என்னதான் ஒத்துக் கொள்ளாத ஊராக இருந்தாலும் காரியத்தை முடித்துக் கொள்ளாமல் திரும்ப
முடிகிறதா?
வந்த காரியமோ பட்டினத்து வீதிகளில் வெய்யிலையும் புழுதியையும் பாராமல் அவரை அலையவைத்து அலைக் கழித்ததே ஒழியச் சட்டென்று முடிவதாக இல்லை. சென்னைப் பட்டினத்துச் சோற்றுக் கடைகளில் வேளா வேளைக்கு நல்ல சோறுகூடக் கிடைப்பதில்லை. அதற்காக மூன்றாம் வருஷத்துத் தஞ்சாவூர்ச் சீரகச் சம்பா – பழைய அரிசியில் வடித்த சோறு வேண்டும் என்று அவர் சடைத்துக் கொள்ளவில்லை. ஏதோ , போடுகின்ற சோற்றை வாங்குகின்ற காசை நினைத்தாவது கல்லும் – உமியுமில்லாமல் கஞ்சி நீங்கவாவது வடித்துப் போட வேண்டாமா? கொட்டை கொட்டையாகக் கஞ்சிப் பசை நீங்காமல் கடனுக்கு இடுவது போல் வடித்துப் போட்ட அந்தச் சாப்பாடு அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஜீரணமாகாமல் கஷ்டப்படுத்தியது.
இதெல்லாம் போதாதென்று வேறு சில துன்பங்களும் இங்கே சென்னையில் வேதனை கொள்ளும்படி அவரை வருத்தின. கை, கால்களில் சொரி, சிரங்கு தோன்றுவதற்கு அறிகுறியான கொப்புளங்கள் தோன்றி அரிப்பெடுத்துத் தின்றன. அந்தத் தண்ணீர் ஒத்துக்கொள்ளவில்லையோ? சாப்பாடு படுத்திய பாடோ? தெரியவில்லை. சொரி, சிரங்கு அவர் கை, கால்களைப் பலமாக முற்றுகையிட்டு ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.
வேறோர் சங்கதி! அதை வெளியே சொன்னால் வெட்கக்கேடு வந்த காரியத்தை நாலு நாளில் முடித்துக் கொண்டு திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில், மடிசஞ்சியில் இரண்டே இரண்டு வேஷ்டி துண்டுகளை மட்டும் எடுத்து அடைத்துக் கொண்டு வந்திருந்தார். ஒன்று ஏற்கெனவே கிழிசல்! இன்னொன்று இங்கே வந்த பிறகு கிழியத் தொடங்கியிருந்தது. காவிரியா ஓடுகிறது. தும்பைப் பூப்போலத் தோய்த்து அலுங்காமல் கொள்ளாமல் அலசி உலர்த்துவதற்கு ? கிழிசலை ஒளித்து மறைத்து முழங்காலுக்கு மேலே மடக்கிக் கட்டிக்கொண்டாலோ அசிங்கமாக இருக்கிறது! விலைக்குப் புதிதாக வாங்கிவிடக் கையிற் பொருள் வசதி போதாது. உடம்பிலேயே சாம்பல் பூசியது போலப் படிந்துவிடும் சென்னை மாநகரத்துத் திவ்யமான தெருப்புழுதி வேஷ்டியை வெள்ளையாக வைத்துக்கொள்ளவாவது விடுகிறதா? அதுவும் இல்லை. ஊரிலிருந்து புறப்படுவதற்கு முதல்நாள் எண்ணெய் தேய்த்து நீராடியதுதான். அதற்குப் பிறகு தலைப்பக்கம் எண்ணெயை மறந்தும் கொண்டு போனது கூட இல்லை. அது சிக்குப் பிடித்துச் சடை சடையாக உறைந்து போயிருந்தது.
இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சென்னைக்கு வந்து சிவபெருமான் பெற்றிருக்கும் அத்தனை கதிகளையும் தாமும் பெற்றுவிட்டதாக ஒரு குறும்புக்கார எண்ணம் அவருக்குத் தோன்றியது. அந்த எண்ணத்தை இரண்டு பொருள் அமைந்த ஒரு அருமையான சிலேடைப் பாட்டாகப் பாடி வைத்தார்.
“சென்னபுரி மேவிச் சிவன் ஆனேன் நல்ல
அன்னம் அறியாதவன் ஆகி – மன்னு சிரங்
கைக்கொண்டு அரைச் சோமன் கட்டிச் சடை முறுக்கி
மெய்க் கொண்ட நீறணிந்து மே.”
அன்னம் = சோறு. நான்முகன். சிரம் கைக் கொண்டு = சிரங்கைக் கொண்டு, சோமன் ஆடை. பிறை. நீறு. புழுதி = சாம்பல்.
“நல்ல அன்னமாக உருவெடுத்து நான்முகனும் காண முடியாதவனாகிக் காபாலி மண்டையோடு கைக்கொண்டு பிறைமதியைச் சடையிற் கட்டி மேனி முழுதும் வெண்ணீ றணிந்தான்” என்று சிவபெருமான் கதிகட்கும், “நல்ல சோறு அறியாதவனாகிச் சொரி சிரங்கைக்கொண்டு, கிழிந்த ஆடையை அரையிலணிந்து, தலையில் எண்ணெய் படாது சடை பின்னிட உடம்பெல்லாம் புழுதி படியச் சென்னையிலே சிவகதி கிடைத்தது எனக்கு” என்று தமக்கும் பொருளமையச் சிலேடையாக இதைப் பாடினார் இராம கவிராயர். பாட்டு, மிகவும் பொருள் செறிந்தது.
– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.