இன்பத்தையோ துன்பத்தையோ, இரண்டுங் கலந்த நிலைகளையோ அனுபவிப்பதும், அனுபவித்து மறந்து விடுவதும் எளிதுதான். ஆனால், அந்த அனுபவத்தைச் சுவை குன்றாமல் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது தனிப்பட்ட ஒரு கலை. தனிப்பாடல் திரட்டிலுள்ள கவிதைகளில் பெரும்பாலானவை இந்த அனுபவ வெளியீட்டுக் கலைக்கு ஒரு முத்திரை வைத்தாற் போல விளங்குகின்றன. வாழ்க்கையின் சிறியவும் பெரியவும் ஆகிய இன்ப துன்ப அனுபவங்களை, அனுபவித்தவரே வெளியிடும் சிறப்பும் இவைகட்கு உண்டு. சொந்த அனுபவத்திலிருந்து பிறக்கும் எதிலுமே மனோபாவக் கலப்பு இருக்கும்.
வீரராகவ முதலியார் குருடர். ஆனால், ஒளி படைத்த அறிவுக் கண்கள் பெற்ற தமிழ்ப் புலவர். ஒருமுறை இவர் தம் நண்பர் ஒருவரின் துணைகொண்டு பக்கத்து ஊருக்குக் கால்நடையாகச் சென்று கொண்டிருந்தார். புலவருக்கும் தமக்கும் இடைவழியிலே பசி தீர்த்துக்கொள்ள உதவுமென்று கருதி, வழிகாட்டி அழைத்துச் செல்லும் நண்பர் கட்டுச்சோற்று மூட்டையொன்று கொண்டு வந்திருந்தார். வழிநடைத் துன்பம் தெரியாதிருக்க ஒருவருக்கொருவர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டே நடந்தனர். பாதி வழி நடந்ததும் இருவருக்கும் வயிற்றில் பசி எடுத்தது. பொழுதும் நடுப்பகல் ஆகியிருந்தது. வைகறையில் பயணத்தை ஆரம்பித்த அவர்கள் புறப்படுவதற்கு முன் அவசர அவசரமாக இரண்டு வாய் சோற்றை அள்ளிப் போட்டுக்கொண்டு புறப்பட்டிருந்தார்கள். நடந்துவந்த களைப்பும், உச்சிப் பொழுதின் வெய்யிற் கடுமையுமாக வயிற்றில் பசியைக்கிளறிவிட்டிருக்க வேண்டும். எதிரில் வழியோரமாக ஒரு நீர்ப்பொய்கை. அதன் அக்கரையில் ஒரு பெரிய வாழைத் தோட்டம். அதைக் காவல் காக்கும் தோட்டக்காரனின் சிறு குடிசை. இப்படியாகத் தோன்றிய ஓர் இடத்திற்கு வந்தவுடன் நண்பர் கட்டுச்சோற்று மூட்டையை அவிழ்த்து அந்தப் பொய்கைக் கரையிலேயே உணவை முடித்துக் கொள்ளக் கருதினார். புலவரிடம் கூறியபோது அவரும் அப்படிச் செய்வதே நல்லதென்றார். இருவரும் கைகால்களைக் கழுவித் தூய்மை செய்து கொண்டு பொய்கைக் கரையில் உட்கார்ந்தனர். கீழே ஒரே கரம்பை மண்ணாக இருந்ததால் ஒரு வாழை இலை கொண்டுவரப் புறப்பட்டார் நண்பர்.
புறப்படும்போது புலவர் குருடராகையால் பக்கத்தில் பொய்கை என்பதைக் கூறி எச்சரித்துச் சோற்று மூட்டையை அவர் பக்கத்தில் நகர்த்தி வைத்துவிட்டுப் போனார். தோட்டக் காரனின் குடிசையை நெருங்கியதும் அவரை முதன் முதலில் வரவேற்றது காவலுக்காக அவன் வளர்த்து வந்த சொறி நாய்தான். பார்க்க நோஞ்சலாகச் சொறிபிடித்துத் தோன்றிய அந்த நாய் அவரைக் கண்டதும் உயிரைப் பிடித்துக்கொண்டு கத்துவது போல் குரைத்துக் கொண்டே பொய்கை பக்கமாக ஓடிவிட்டது. அவர் தோட்டக்காரனைச் சந்தித்து ஓர் இலை வேண்டுமென்று கேட்டார். அவன் நன்றாக வளர்ந்த பெரிய இலை ஒன்றைக் கிள்ளிக் கொடுத்தான். நண்பர் பெற்றுக்கொண்டு திரும்பினார். வாழைத்தோட்டத்திலிருந்து பொய்கைக் கரைக்கு வரும் வழியில் பாதி தூரம் நடந்திருப்பார். எதிரே அந்தச் சொறி நாய் இரைக்க இரைக்க ஓடி வந்து கொண்டிருந்தது. அது மட்டும் வந்திருந்தால் அவர் கவலைப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை, அதன் வாயில் கவ்விக்கொண்டு வந்து கட்டுச்சோற்று மூட்டையைக் கண்டதும்தான் அவருக்கு அடிவயிற்றில் பகீரென்றது. இலையும் கையுமாக நாயை விரட்டினார். அந்த அப்பாவி நோஞ்சல் நாய் பொய்கைக்கும் தோட்டத்திற்கும் நடுவில் இருந்த சேறும் சகதியுமான வாய்க்காலைத் தாண்டும்போது மூட்டையை அதற்குள் தவற விட்டுவிட்டு ஓடிப்போயிற்று. மூட்டை அவிழ்ந்து சோறு சேற்றோடு கலந்துவிட்டது. தலைவிதியே என்று வாழை இலையைத் தூர எறிந்துவிட்டு வீரராகவ முதலியாரிடம் திரும்பி வந்தார் நண்பர்.
“இலை கிடைத்ததா இல்லையா? இங்கே சிறிது நேரத்திற்கு முன் ஏதோ ஒரு நாய் வந்து குரைத்துக்கொண்டே இருந்தது.” புலவர் ஒன்றும் தெரியாதவர்போலப் பேசினார். குருடராகிய அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றால் அது நியாயந்தானே? நண்பர் எல்லாவற்றையும் சொன்னார். வேறு வழியின்றிப் பசியோடு பயணத்தைத் தொடர்ந்தனர். வயிற்றில் தானே பசி? கற்பனைக்கும் உள்ளத்துக்கும் பசி இருக்க வேண்டியதில்லை! இந்த நிகழ்ச்சி புலவரால் பாட்டாகியது.
“சீராடையற்ற பைரவன் வாகனம் சேரவந்து &
பாராரும் நான்முகன் வாகனத் தன்னை முன்பற்றிக் கவ்வி
நாராயணன் உயர்வாகனம் ஆயிற்று நம்மை முகம்
பாரான் மைவாகனன் வந்தேவயிற்றிற் பற்றினனே “
பைரவன் வாகனம் = நாய், நான் முகன் வாகனம் = அன்னம் (கட்டுச்சோறு), நாராயணன் உயர் வாகனமாயிற்று = கருடனைப் போல் வேகமாகப் பறந்து ஓடிப் போயிற்று. மைவாகனன் = அக்னி, வயிற்றில் பற்றல் = பசி எடுத்தல், முகம்பாரான் தாட்சண்யமில்லாமல். பாட்டின் பொருளைச் சங்கேதமாக மறைத்துச் சொல்வதிலும் ஓர் அழகே காண்கிறோம்.
– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.