“ஒரு நொடி இன்பத்துக்கு ஓராயிரம் நாட்கள் துன்பத்தைக்கொடுக்கும் பூமி இது. அந்த ஒரு நொடியைத்துறந்தவர்களை, சகித்து கடப்பவர்களை துன்பம் ஒரு போதும் அணுகுவதில்லை. ஐம்புலன்களை வென்று விட வேண்டும். இல்லையேல் அவை நம்மை விரைந்து கொன்று விடும்” என தத்துவமாகப்பேசிய இருபது வயது இளைஞனான ராகவனை கல்லூரி விழாவில் ஆச்சர்யமாகப்பார்த்தார் பேராசிரியர் பரமசிவம்.
அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, எக்காலத்திலும் சரி வாழ்வில் மனதில் தோன்றியதை பின் விளைவுகளைச்சிந்திக்காமல் செயல்படுத்தி வாழ்ந்து விட்டு நடை தளர்ந்த பின்பே இது சரி, அது தவறு என ஆராய்ந்து பேசும் மனப்பக்குவத்துக்கு பெரும்பான்மையான மக்கள் வருகின்றனர். ஆனால் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே சிறுவயதிலேயே பக்குவமடைந்து, தவறைத்தவறென்று உணர்ந்து பின் விளைவுகளை யோசித்து சீராக வாழ்கின்றனர். ஆனால் அவர்களால் பொருளாதாரத்தில் மட்டும் மற்றவர்களைப்போல் உயர முடிவதில்லை. அதைப்பற்றிய கவலையும் அவர்களுக்கு இருப்பதில்லை. அவ்வகையைச்சேர்ந்த ஞானிகளை புத்தகங்களில் படித்தும், செவி வழிச்செய்தியாகக்கேட்டதும் தவிர நேரில் பார்த்ததில்லை. இன்று நேரில் பார்த்தபோது உடல் சிலிர்த்தது பரமசிவத்துக்கு.
ராகவனது பெற்றோர் சாதாரண நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்த விவசாயிகள்தான். நன்கு படித்தவர்களுமில்லை. அரசு பள்ளியில் படித்து, தன் திறமையால் கல்லூரிக்குள் நுழைந்தவனுக்கு வேலை, பணம் பற்றிய சிந்தனைக்கு பதிலாக ஆன்மீக சிந்தனையும், பற்றற்ற போக்கும் பேராசிரியரை வியக்க வைத்தது.
தன் மகனுடன் காலையில் வீட்டில் நடந்த, பணம் சம்மந்தமான, நற்குணமற்ற, கசப்பான வார்த்தைப் பரிமாற்றங்களால் ஏற்பட்ட சம்பவம் கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்தது. ‘ராகவன் போன்ற மகன் தனக்கு பிறக்கவில்லையே….’ என நினைத்து ஏங்கினார். மேடையில் பேசிவிட்டு வந்தவனை அழைத்து, மார்போடு அணைத்து தனது வாழ்த்துகளைச்சொன்னார்.
அன்று மாலை வீட்டிற்குச்சென்ற ராகவனிடம் அவனது பெற்றோர் அவனுடன் சரியாகப்பேச்சுக்கொடுக்காதது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. கல்லூரியில் பெற்ற கைதட்டல் வீட்டினருக்கு மகிழ்ச்சியைத்தந்திருக்கவில்லை என்பதாகப்புரிந்து கொண்டான்.
“நீ உன்ற மனசுல என்ன நெனைச்சிட்டிருக்கறே….?” என தாய் பார்வதி கோபமாகக்கேட்டாள்.
“ஏம்மா…?” புரியாமல் கேட்டான்.
“நீ காலேஜ்ல என்ன பண்ணீட்டு இருக்கறீன்னு உன்ற மாமம் பொண்ணு ரம்யா அன்னாடும் வந்து என்ற கிட்ட சொல்லிப்போட்டுத்தாம்போறா? நாங்களும் வயசான காலத்துல உனக்கொரு கண்ணாலத்தப்பண்ணி பேரம் பேத்தியப்பாத்துப்போடோணும். கெணத்த ஒன்னங்கொஞ்சம் வெட்டி தோட்டம் பூராந்தண்ணி பாயர மாதர பண்ணிப்போடோணும். அதுக்கு நீ படிச்சுவேலைக்குப்போயி சம்பாறிச்சு கொடுத்துப்போடுவீன்னு பார்த்தா…. நீ சாமியாராப்போகப்போறீன்னு சொல்லறது எங்களுக்கு எத்தன வேதனையா இருக்குதுன்னு தெரியுமாடா உனக்கு? உன்னப்பெத்ததுக்கு ஒரு ஆட்டாங்கல்லப்பெத்திருந்தாக்கூட நாலுபேரு மாவாட்டீட்டு காசக்கொடுத்துட்டாச்சும் போயிருப்பாங்க….” சொல்லி விசும்பினாள் தாய் பார்வதி.
ராகவனின் மாமன் மகள் ரம்யாவுக்கு அவன் மீது அளவு கடந்த காதல். காரணம் அவனது ஒழுக்க குணம். பிற பெண்களை கண்ணெடுத்தும் பார்க்காத உத்தமனாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளும் முறைப்பெண்ணான தன்னையே முறைத்து வெறுப்பது போல் நடப்பது அவளுக்கு கவலையளித்ததால் அவனது பெற்றோரிடமே புகாராக அவனைப்பற்றிச்சொன்னதன் விளைவே அவனது தாயின் புலம்பலுக்கு காரணமாக அமைந்து விட்டது.
“நீங்க என்னைப்பெத்தவங்க. என்ற மேல பாசம் வெச்சிருக்கீங்க. அதனால இப்படிப்பேசறீங்கன்னு புரியுது. அதே சமயம் ஒன்னுமே புரியாத கிணத்துத்தவளையா நடந்துக்கறீங்க. ஒழுக்கத்தப்பத்தி பேசுனா சாமியாரா ஆயிடுவாங்கன்னு உங்களுக்கு ஆரு சொன்னது? குடும்ப வாழ்க்கைல இருந்துட்டும் துறவி மாதிரி வாழ முடியும். எனக்கு கல்யாணம் பண்ணிக்கோணும்னு எண்ணம் இல்லாமில்லை. அதே சமயம் என்ற விருப்பத்துக்கு வாழோணும்னு ஆசையும், அது மத்தவங்களுக்கும் வழிகாட்டியா இருக்கோணும்கிற எண்ணமும் உங்களுக்கு பெருமையக்கொண்டு வருமே தவிர சிறுமையக்கொண்டு வராது. பணம் மட்டுமே வாழ்க்கைல முக்கியமில்ல. ஆனா பணமும் முக்கியம். ரம்யா மேல எனக்கு விருப்பம் இல்லாமில்ல. அதுக்காக படிக்கிறத உட்டுட்டு அவ பின்னால சுத்தவும் முடியாது. படிப்ப முடிச்சுட்டு வேலைல சேர்ந்ததுக்கப்புறம் முறையா பொண்ணு கேட்டு கல்யாணத்தப்பண்ணிக்கிறேன். வாரத்துல அஞ்சு நாளைக்கு வேலைக்கு போனாலும் ஒரு நாளைக்கு ஊட்டுக்கும், ஒரு நாளைக்கு நாட்டுக்கும் ஒதுக்கோணும். நமக்கு தெரிஞ்சத நாலு பேருக்கு சொல்லோணும். எல்லா மனுசங்களுக்கும் எல்லாமே தெரியாது. தெரியாதவங்களுக்கு தெரிஞ்சவங்க சொல்லோணும். பேச்சா சொல்லோணும், எழுத்தா சொல்லோணும்” என தன் மகனின் பேச்சைக்கேட்ட போது அவனது பேச்சைப்புரிந்ததால் மகிழ்ச்சி பொங்க ” நீ நெனைக்கிறத செய்யு சாமி. உன்ற பேச்ச எதுத்து ஒன்னி மேலு பேசமாட்டோம். உன்னப்பெத்ததுக்கு புண்ணியம் பண்ணியிருக்கோணும் நாங்க” என்கிற தாயின் பேச்சால் மனதில் இருந்த கவலையை மறந்தான் ராகவன்.
உலகமே புகழ்ந்து பேசும் காரியத்தை ஒருவர் செய்தாலும் சொந்த வீட்டில், பெற்றோர், மனைவி, குழந்தைகள் புரிந்து கொள்ளாத போது வெளிப்புகழ் பலனற்றுப்போய் விடுகிறது. உள் தடை இல்லாதோருக்கு வெளித்தடை தூசி மாதிரி. குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு சாதனையாளர்களாக வேண்டுமென்றால், பொதுக்காரியத்துக்குப் போக வேண்டுமென்றால் முதலில் வீட்டிற்குள் ஏற்படும் உள் தடையை நீக்க வேண்டும். நாட்டில் உள்ளவர்களுக்கு புரியும் படி பேசுவது போல் வீட்டில் உள்ளவர்களுக்கும் புரியும் படி பேசுவதால் தான் தன் செயலின் முழு பலன் கிடைக்கும் என்பதைப்புரிந்ததால் அவனது முயற்சிக்கு தற்போது உள் தடையும் விலகியது ராகவனுக்கு பூரண மகிழ்ச்சியைக்கொடுத்தது.