கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 220 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘எனவே, நீ பட்ட கடனே நீ வழங்கிய தானமாகவும் அமைந்தது….’ 

அவன் கிங்கரன்; இவன் சங்கரன். 

அவன் எமதூதன்; இவன் நரன். 

‘உன்னைச் சொர்க்கத்திற்கு அழைத்து வரக் கட்டளை இதோ!’ என்றான் அவன். 

‘நன்று. அமரும். ஓர் ஐயம் உளது. தயை செய்யும்’ என்பான் இவன். 

‘சங்கரா! சீக்கிரம் கேள் … ‘-கிங்கரனுச்குக் கடமையிற் கண்.

‘எனக்கு முன்னரும் இறந்தனர் பலர். மாடிவீட்டு மாணிக்கமும், பண்ணையார் கண்ணப்பரும், மளிகைக்கடை மார்க்கண்டுவும் அவர்களுள் அடங்குவர். அவர்கள் இக்கணம் யாங்குளர் அறிவிரோ?’ 

‘அறிவேன். சொர்க்கத்தில் சேமமுடன் வாழ்கிறார்கள்.’ 

‘அப்படியா?’ இவன் முகத்திற் சோகம் கவிந்தது. 

‘ஏன் கவலை?’ 

‘அவர்கள் விடாக்கண்டர்களாகவும், நான் கொடாக் கண்டனாகவும் இப்பூவுலகில் வாழ்ந்தோம். அவர்களிடம் நான் பட்ட கடனை இறுதிவரை இறுக்கவே யில்லை. அவர்கள் தொல்லை சொர்க்கத்தில் தொடருமோ என அஞ்சுகின்றேன்.’ 

‘அச்சம் தவிர். அவர்கள் உன்னை வரவேற்பதற்கு மாலையுடன் காத்திருக்கிறார்கள்….’ 

‘மனமாற்றத்திற்குக் காரணம் யாதோ?” 

‘சொர்க்க பதவி கிடைப்பதற்குத் தான தர்மம் செய் வதினாற் குதிரும் புண்ணியமும் சேரல் வேண்டும். அந்தப் புண்ணியத்தை அவர்கள் உன்னாலேதான் பெற்றார்கள்….’

‘எனக்கு விளங்கவில்லை….!’ 

‘உன்னிடமிருந்து கடன் தொகைகளை வசூலிக்கும் அலுவல்கள் அலுத்துப் போகவே, அவற்றைத் தர்மக் கணக்கில் எழுதிவிட்டார்கள். பின்னர், நீ கடன் கொடுக்காது தப்பியோடும் வித்தையை ரசிப்பதற்கு உன்னை விரட்டினார்களே யொழிய, கடன் வசூலிக்கும் நோக்கம் அவர்களுக்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லை’. 

‘நான் யாருக்குந் தான தர்மம் செய்ததாக ஞாபகம் இல்லை….’ 

‘ஈதலறம் சம்பாதிக்கும் புண்ணியத்தை அவர்கள் பெற நீ காரணனாய் அமைந்தாயல்லவா? எனவே, நீ பட்ட கடனே நீ வழங்கிய தானமாகவும் அமைந்தது வா, சீக்கிரம்….’ 

இவனுக்கு அவன் கூறியவை விளங்கவில்லை. புரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும் இல்லை. 

இவன் அன்புடன் புறப்பட்டான்!

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *