வெல்லத்துடன் கலந்த எலி பாஷாணம்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,909 
 
 

கேசவ ஸ்வாமி என்பவர், கண்ணனின் பால லீலைகளில் நெஞ்சைப் பறி கொடுத்து, கண்ணனது புகழ் பாடி ஊர் ஊராக அலைந்தவர். இவரது குரல் இனிமையால் பெரிய கும்பல் இவரை எங்கும் சூழ்ந்து விடும். ஒரு முறை தன் குருவுடன் மராட்டிய மாநிலத்தில் உள்ள விஜயபுரத்துக்கு வந்தார். அங்குள்ள பக்தர்கள் இவரிடம் ஏகாதசி வரை தங்கி பஜனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

வெல்லத்துடன்ஏகாதசியன்று பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உபவாசம் (விரதம்) இருந்ததால், வறட்சியின் காரணமாக நா உலர்ந்து போய், கேசவ ஸ்வாமிகளுடன் பாடுவதற்குச் சிரமப்பட்டனர். உடனே கேசவ ஸ்வாமி தன் சீடனிடம், ‘‘பக்தர்கள் தாகத்தால் சிரமப் படுகிறார்கள். நீ கடைக்குச் சென்று சுக்கும் வெல்லமும் வாங்கி வா!’’ என்று அந்த இரவு வேளையில் அனுப்பினார்.

கடைத் தெருவில் அப்போது திறந்திருந்த ஒரே ஒரு கடையையும் மூடுகிற நேரம்… சீடன் அவசரம் அவசரமாக ஓடிப் போய், ‘‘சுக்கும் வெல்லமும் வேண் டும்!’’ என்று பணத்தை நீட்டினான்.

‘‘பாகவத கைங்கரியத்துக்குக் காசு வாங்கலாமா? மாட்டவே மாட்டேன்!’’ என்று சொன்ன கடைக்காரர், கதவைத் திறந்தார். விளக்கை ஏற்கெனவே அணைத்து விட்டதால் இருளில் தட்டுத் தடுமாறிப் பொருட்களைத் தேடினார். வெல்லப் பானை தட்டுப்பட்டது; அதிலிருந்து வெல்லத்தை எடுத்தார். பிறகு பை ஒன்றிலிருந்து சுக்கு போல் தோன்றியதையும் எடுத்துச் சீடனிடம் கொடுத்தார்.

சீடன் அவசர அவசரமாக அவற்றைப் பொடியாக்கி கேசவ ஸ்வாமியிடம் கொடுத்து, ‘‘பிரசாதம் தயாராக இருக்கிறது. நிவேதனம் செய்யலாம்!’’ என்றார். இறைவனுக்கு முதலில் அர்ப்பணித்த பிறகு, அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்யத் துவங்கினர்.

மறு நாள் காலையில் அந்தக் கடைக்காரர் பொருட்களை ஒழுங்குபடுத்தும்போது எலி பாஷாணப் பை அவிழ்ந்து கிடப்பதைக் கண்டார். உடனே, முந்தின நாள் இரவில், தான் சுக்கும் வெல்லமும் எடுத்துக் கொடுத்தது நினைவில் எழுந்தது. ‘பாகவத கைங்கர்யம், பணம் வேண்டாம் என்று சொல்லி கடைசியில் பாஷாணத்தையா கொடுத்தேன்! அதை வெல்லத்துடன் கலந்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கும் விநியோகித்திருப் பார்களே! நான் செய்த தவறு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது?’ என்று புலம்பினார்; தவித்தார்.

‘சரி… எதற்கும் நேரில் போய்ப் பார்ப்போம்’ என்று எண்ணி பக்தர் களது வீட்டுக்குச் சென்றார். என்ன ஆச்சரியம்! எல்லோரும் எப்போதும் போல் நலமாக இருந்தனர். பின்னர் கேசவ ஸ்வாமியின் இருப்பிடத்தை அடைந்து அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் கடைக்காரர். நித்திய கர்மானுஷ்டங்களை முடித்து விட்டு அப்போதுதான் அவர் வந்து அமர்ந்தார். அப்போது அறையில் இருந்த கண்ணன் விக்கிரகத்தின் மேல் கேசவ ஸ்வாமியின் பார்வை செல்ல… அதிர்ந்தார். அந்த விக்கிரகம் நீல நிறமாகி இருந்தது. கடைக்காரர், நடந்ததைக் கூறி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.

கண்ணபிரான் விக்கிரகத்தை நோக்கிய கேசவ ஸ்வாமி, ‘‘சர்வலோக சரண்யா! பிரசாதத்தில் விஷம் கலந்திருப்பது தெரிந்து, சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டது போல தாங்கள் உண்டு விட்டீரே! பகவத் பிரசாதம் விஷமாகி மக்கள் இறந்திருந்தால், என்ன ஆகியிருக்கும்! பாகவதர்களைக் காத்ததால், தங்களது திருமேனி மேலும் நீலமாகி விட்டதே! எனவே, எங்களது தவறை மன்னித்து கருணை கூர்ந்து முன்போல் காட்சி தர வேண்டும்!’’ என்று பிரார்த்தித்தார். அப்போது, ‘‘அன்பனே! உனது மெய் அன்பை உலகினருக்குக் காட்டவே இந்த நாடகம். நீங்கள் குற்றமற்றவர்கள். உங்கள் மனம் துன்புறுவதால், உங்கள் அன்னை ஸ்ரீதேவியே வந்து சமாதானம் கூற விழைகிறாள். உங்களது விருப்பம்போல எனது வண்ணம் மாறி, மழை வண்ணமாக எப்போதும் போலவே விளங்குவேன். உங்கள் பக்தி உலகத்தாருக்கு ஒரு படிப்பினையாக விளங்கட்டும்!’’ என்ற குரல் அவர்கள் செவிகளில் தெளிவாகக் கேட்டது. கேசவ ஸ்வாமி மெய்ம்மறந்து நின்றார். இறைவன் தனது புதிய வடிவத்தை மறைத்து விக்கிரகத் திருமேனி யாக அவர் எதிரே நின்றார்.

இதைக் கண்ட விஜயபுரம் மக்கள் கேசவ ஸ்வாமியைத் தங்களது ஊரிலேயே தங்குமாறு வேண்டினர். அவரும் அப்படியே செய்தார். அதனால் விஜயபுரம், ஹரி பக்தியின் உறைவிடம் என்று பெயர் பெற்றது.

– கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி-4 (செப்டம்பர் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *