வந்து போனார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 5, 2022
பார்வையிட்டோர்: 6,855 
 

(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தோழி கேட்டாள்: “நீ இப்படி யாரையோ எண்ணி எண்ணி நைந்து புலம்புகிறாயே; உன்னிடம் உண்டான. இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன?’ என்று கேட்டாள். அந்த அழகிய இளம் பெண் உடனே விடை சொல்லவில்லை; சொல்ல வும் முடியவில்லை. தன்னுடைய உள்ளம் கொள்ளை கொண்ட கட்டழகனை முதல் முதலில் கண்ட காட்சியை நினைத்துப் பெருமூச்சு விட்டாள். முதற் காட்சி என்ன? அன்று பார்த் ததுதான்; அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை. அவனைக் கண்டது முதல் அவள் ஒரு வண்ணமாக மயங்கி யிருக்கிறாள். தோழி இதை அறிந்துதான் கேட்டாள். சிறிது நேரம் கழித்துக் காதல் கொண்ட பெண் பேசத் தொடங்கினாள்.

“ஆமாத்தூர் என்ற ஊர் உனக்குத் தெரியுமா?” என்று அவள் பேச்சும் ஒரு கேள்வியாக வந்தது.

“தெரியும்.நடு நாட்டில் உள்ள தலம் அது. அந்த ஊரைப்பற்றி இப்போது என்ன யோசனை?”

“அந்த ஊருக்குத்தான் அவர் போயிருக்கிறார்.”

“அவரா? அவர் யார்?”

“என்னை இந்தக் கோலம் செய்தவர்.”

தோழி விழித்துப் பார்த்தாள். “நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டாள்.

அந்த இளம் பெண் கூறத் தொடங்கினாள்.

நான் அன்று வீட்டுக்குள்ளே ஏதோ வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது என் காதில் ஓர் இனிய ‘ஓசை விழுந்தது. யாரோ உள்ளத்தை இழுக்கும்படி பாடினார்கள். பாட்டென்று ஒரு சமயம் தோன்றியது; வீணையென்று ஒரு சமயம் தோன்றியது; இரணடும் இழைந்து ஒன்றுபட்டு ஒரு சமயம் காதில் ஒலித்தன. இத்தகைய இன்னிசையை நான் அதுவரையிலே கேட்டதில்லை அந்த இசை வீதியிலே கேட்டது. நெடுந்துாரத்திலே கேட்டு வர வர அண்மையிலே கேட்டது.

யாரோ வீணையோடு பாடுகிறாரென்று தெளிந் தேன். அற்புதமான காந்தாரப் பண்ணைப் பாடினார். இவ்வளவு அழகாகப் பாடுகிறவர் யார் என்று பார்க்க வேண்டு மென்ற ஆவல் எழுந்தது. அந்த ஆவல் வர வர வளர்ந்தது. அந்த இசையோ, வா, வா என்று என்னை வலை போட்டு. இழுத்தது.

நான் வெளியில் வந்தேன். வீதியிலே பார்த்தேன். ஒருவர் வீணையைக் கையில் ஏந்திக்கொண்டு பாடிச் சென்றார். அழகாகப் பாடுகிற அவரைப் பார்த்தேன். உடம்பெல்லாம் தூய வெண்ணீறு பூசி இருந்தார். தலையின்மேல் வெள்ளை மாலையை அணிந்திருந்தார். வெண் சோதி வீசச் சிறுய வெள்ளிக்குன்று போலே அவர் சென்றுகொண்டிருந்தார்.

முதலில் அவர் பாட்டைக் கேட்கலாமென்றுதான் வந்தேன், பிறகு அவரைப் பார்த்நேன். பார்த்த பிறகு அவர் அழகும் என் உயிரை இழுத்தது. அவரோ மெல்ல மெல்லப் பாடிக்கொண்டே சென்றார். வெண் பொடியாடிய மேனி யைக் கண்டேன். அந்த வெண்மையின் நடுவே கழுத்தில் ஒரு கறுப்பு. அது எத்தனை அழகாக இருந்தது, தெரியிமா?

அவரிடம் என் உயிரையே பணயம் வைத்து விடலாம் என்று தோன்றியது. அவரை அணுகி இரண்டு வார்த்தையாவது பேசாவிட்டல் என் வாழ்வே பயனற்று விடும் என்ற நினைவு ஒன்று முளைத்தது. ‘பெண்ணாயிற்றே; ஆடவரிடம் வலியப் பேசலாமா?’ என்று மனம் தடுமாறியது. அவரிடம் என்ன பேசுவது? என் உள்ளம் அவரைக் கண்ட பிறகு அடைந்த தடுமாற்றத்தைச் சொல்வதா? நாணத்தை இழந்து பெண் மையை உதறித் தள்ளினால் அதைச் சொல்லலாம். நான் அந்த நிலைக்கு வரவில்லை; பேசாமல் இருக்கவும் முடிய வில்லை. ஒரு விதமாக மனத்தில் அமைதியை ஏற்படுத்திக் கொண்டேன். நாணத்துக்கு அழிவு நேராமலும் என் ஆசைக்கு ஏமாற்றம் உண்டாகாமலும் பேசத் துணிந்தேன் விருந்தினரிடம் யாரும் கேட்கும் கேள்வியைக் கேட்டேன். “சுவாமி,உங்கள் ஊர் எது?” என்று மாத்திரம் கேட்க எண்ணி வாய் திறந்தேன். அவருடைய வெண் திருமேனி யில் உள்ள வெண்மைக்கிடையே பளிச்சென்று விளங்கிய அவருடைய அழகிய கழுத்தைப் பார்த்துக் கொண்டே பேசினேன். என்னையும் அறியாமலே, அந்த அழகில் மயங்கி நின்ற மயக்கத்தால், “கறை சேர் மணிமிடற்றீர், ஊர் எது?” என்று சொல்லி விட்டேன். சொன்ன பிறகு நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

அதைக் கேட்டதுதான் தாமதம்; அவர் உடனே என் வீட்டுக்குள்ளே வந்து விட்டார். நெடுந்தூரம் அலைந்து வந்து நொந்து போய், “யாராவது நம்மைத் தம் வீட்டுக்கு அழைக்க மாட்டாரா?” என்று ஏங்கினவர் போலத் தோன்றியது.

அவர் வருகை எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. “எங்கள் வீட்டுக்கு வரலாமே!” என்று நான் சொல்லவில்லை; நாணந்தான் காரணம். எப்படியோ அவர் என் உள்ளத்தை உணர்ந்து கொண்டார் போலும்! நான் வருந்தி அழைத்து நொந்து கிடந்து தவம் செய்தாலும் வரக் கூடியவர் அல்லர் அவர். அவரைப் பார்த்தால் அப்படித் தோன்றியது. ஆனால், தோழி, அவருடைய கருணையை என்னவென்று சொல்வேன்! தாம் மிகவும் நொந்தவரைப் போலக் காட்டிக்கொண்டு, நான் அவருக்கு நலம் செய்கிறதாக எண்ணி என் வீட்டுக்குள் வந்தார்.

வந்தது மாத்திரமா? அவர் என்னோடு பேசினாரடி தோழி! ஆம், பேசினார். அந்த ஒரு கணத்திலே என் உள்ளத்தைத் தொடும்படி பேசினார். என்னை அவர் விளித்தாரே, அந்த அழகு ஒன்றே போதும். நான் இடை நுடங்க நின்றேனாம்.

அவர் கழுத்தைப்பற்றி அணைத்துக் கொள்ள வேண்டு மென்ற எண்ணம் என் உள்ளத்தின் அடித் தளத்திலே இருந்திருக்க வேண்டும். அதனால் தான் நான் ‘கறை சேர் மணி மிடற்றீர்’ என்று அவரை அழைத்தேன். அது மாத்திரம் அல்ல. அவர் பாடினாரே, அந்த இன்னிசையைத் தரும் கண்டம் அல்லவா அது? அதனால் அதனிடம் என் மனம் சென்றது.

இப்போது அலர் என் இடையைப் பற்றி அணைக்க எண்ணினாரா, என்ன? என் ஆசை அப்படி நினைக்கச் செய்தது. “நுடங்கு ஏர் இடைமடவாய்!” என்று என்னை அவர் அழைத்தார். அவர் தம் திருக்கரத்தால் என்னை அணைக்கவில்லை.ஆனாலும் அவர் என்னை அழைத்தாரே, அந்த அன்புச் சொல் என்னை அணைத்தது. அது என் காது வழியே புகுந்து அமுத தாரையைப் பாய்ச்சியது.

“எம்முடைய ஊரையா கேட்கிறாய்? சொல்கிறேன் கேள். அங்கு எல்லோருமே வீணையும் யாழும் வாசிக்கிறவர்கள். நான் பாடுவதைக் கேட்டு நீ மகிழ்ச்சி அடைகிறா யென்று தோன்றுகிறது. எங்கள் ஊருக்கு வந்தால் எங்கும் இன்னிசைதான் கேட்கும். அழகிய தாமரை மலர்களின் மேல் அன்புடைய வண்டுகள் யாழைப் போலப் பாடிக் கொண்டிருக்கும். அந்த ஊருக்குப் பேர் ஆமாத்தூர். அது தான் நம்முடைய ஊர்” என்றார்,

அவர் பேசப் பேச நான் பாவை போலச் சமைந்து போய்க் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் பாட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அவர் பேசினாலே போதும்; இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். அவர் பேச்சிலே என்னை மறந்து கேட்டிருந்தேன். ”ஆமாத்தூர் தான் நம்முடைய ஊர்” என்று சொன்னவர், மேலே ஒன்றும் சொல்லாமல் உடனே போய்விட்டார்.

போன பிறகு பார்க்கிறேன்; அவரைக் காணவில்லை. சுவாமி வந்தார், போனார் என்பதைத் தவிர நான் வேறு என்ன சொல்வது? அவரிடம் நான் இன்னும் நாலு வார்த்தைகள் பேசியிருக்கக்கூடாதா? சற்றுத் தங்கிச் செல்லுங்கள் என்று சொல்லியிருக்கலாகாதா? அவர்தாம் இன்னும் கொஞ்சம் இருந்து, நீ யார் என்று என்னைக் கேட்டிருக்கக்கூடாதா?

இன்று நான் இவ்வாறு எண்ணி எண்ணி ஏங்குகிறேன். ஆனால் அன்று அவரைக் கண்டேனே, அது என் தவப் பயன் அல்லவா? அவரோடு துணிந்து பேசினேனே, அது என் பாக்கியம் அல்லவா? அவர் என் வீட்டுக்கு வந்தாரே, அது பெறாப் பேறு அல்லவா? வந்ததோடு, என்னை துடங்கேரிடை மடவாய் என்று அழைத்தாரே, அது ஒன்றே போதுமே, என் உயிரில் இனிமையை ஊட்ட! தம் ஊர் இன்னதென்று சொன்னாரே. அதை வைத்துக்கொண்டு மேலே முயற்சி செய்து அவர் இன்னருளைப் பெறலாம் அல்லவா?

ஆமாத்தூர்ப் பெருமானைக் கண்ட இளம் பெண் தன் உள்ளத்திலும் உயிரிலும் ஊடுருவிப் புக்க அந்தக் காட்சியை எண்ணி எண்ணி இன்புற்றும் ஏங்கியும் நிற்கிறாள்.

வெந்தார்வெண் பொடிபூசி வெள்ளை மாலை
விரிசடைமேல் தாம்சூடி வீணை ஏந்திக்
கந்தாரம் தாம்முரலாப் போகா நிற்கக்
கறைசேர் மணிமிடற்றீர் ஊர்ஏது என்றேன்;
நொந்தார்போல் வந்தெனது இல்லே புக்கு,
நுடங்குஏர் இடைமடவாய், நம்ஊர் கேட்கில்,
அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய்
ஆமாத்தூர் என்று அடிகள் போயி னாரே.

[நன்றாக வெந்து வெண்மை நிரம்பிய வெள்ளிய திரு நீற்றைப் பூசி, வெள்ளை மலர் மாலையைத் தம்முடைய விரிந்த சடையின்மேல் அணிந்துகொண்டு, வீணையைக் கையில் ஏந்திக் காந்தாரப் பண்ணைப் பாடியபடியே திரு வீதியில் போக, அவரை அணுகி, “கறுப்பு வண்ணம் சேர்ந்த அழகிய கழுத்தை உடையவரே, தேவரீருடைய ஊர் எது?” என்று கேட்டேன். பல இடங்களுக்குச் சென்று வருந்திய வரைப் போல வந்து என் இல்லத்திற் புகுந்து, ‘தளரும், அழகையுடைய இடையைப் பெற்ற பெண்ணே, நம்முடைய ஊரைக் கேட்டால், அழகிய தாமரை மலர்களின்மேல், அன்பையுடைய வண்டுகள் யாழைப் போன்ற இசையை ஒலிக்கும் ஆமாத்தூர் ஆகும்” என்று கூறி அப்பெரியார் போய்விட்டார்.

வெந்து ஆர்-வெந்து நிறம் நிரம்பிய; வெந்தாருடைய வெண்பொடி என்று கொண்டு, மயானத்தில் வெந்தவர் களுடைய வெண்பொடியை என்றும் பொருள் சொல்லலாம். வெள்ளை மாலை-தும்பை முதலிய மலர்களால் அமைந்த மாலை; வெண்டலை மாலையுமாம். கந்தாரம் – காந்தாரம்; எதுகையை நோக்கிக் குறுகியது. முரலா-பாடி. போகா நிற்க -போய்க் கொண்டிருக்க, கறை-கறுப்பு, மணி- அழகு. மிடறு – கழுத்து. நுடங்கு-தளரும். ஏர்-அழகு. அளி-அன்பு அளியும் வண்டுமாகிய வண்டினங்கள் என்றும் சொல்லலாம். அடிகள்- சுவாமி; பெரியார்; துறவிகளையும் கடவுளரையும் மதிப்புடைய பெரியோரையும் அடிகள் என்பது வழக்கு]

இறைவன் திருக்கரத்தில் வீணை ஏந்திய நிலை ஒன்று உண்டு. வீணா தட்சிணாமூர்த்தி என்ற கோலத்தில் அவன் வீணையை ஏந்தியிருக்கிறான்.

“தங்கையின் யாழும் வைத்தார்” (4.30:1), “எம் இறைநல் வீணைவாசிக்குமே” (4.112:7) என்று பிற இடங்களிலும் அப்பர், இறைவன் வீணை வாசித்தலைச் சொல்கிறார்.

இந்தப் பாட்டு ஆறாந் திரு முறையில் 9-ஆம் திருப் பதிகத்தில் இரண்டாம் பாடலாக அமைந்தது.

– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *