கண்ணில் உள்ளவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 5, 2022
பார்வையிட்டோர்: 7,935 
 

(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இறைவன் எங்கே இருக்கிறான்? அவனைக் காண முடியுமா?” என்று கேட்கிறது மனம்.

“உன்னிடத்திலே இருக்கிறான். உனக்குத் தெரியாமலே ஒளிந்து நிற்கிறான்” என்கிறார் அப்பர்.

“எனக்குத் தெரியவில்லையே! எனக்குள்ளே உள்ளதைக் காண்பது அரிதுதான். எனக்கு அயலாக உள்ள இடத்தில் இருந்தால் காண்பது எளிது. அப்படி எங்கேயாவது இருக்கிறானா?” என்று உசாவுகிறது மனம்.

“எத்தனையோ இடங்களில் இருக்கிறான். உனக்கு அண்மையிலே இருக்கிறான். வணங்குவதற்குரிய தலையின் மேல் இருக்கிறான். தலை வணங்கினாலும் வணங்காவிட்டா லும் அதன்மேல் நின்று தலைவனாக என்றும் விளங்குகிறவன் அவன் தான்.”

மனம் அதையும் தெளிந்துகொள்ளவில்லை. “இன்னும் எனக்கு அருகில் உள்ள எங்காவது எங்காவது இருக்கிறானா?” என்று கேட்கிறது.

“பேசும் வாக்கில் உள்ளான்” என்று விடைவருகிறது, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணத்திலும் கலந்து தின்று யாவரையும் இயக்கும் இறைவனுடைய சிறப்பை அப்பர் சுவாமிகள் அறிவுறுத்தினார்.

மனத்தகத்தான், தலைமேலான் வாக்கின் உள்ளான்.

“உன்னில் இருக்கிறான்: உன்னைச் சார்ந்த இடங்களில் இருக்கிறான்” என்று சொல்லியும் தெரிந்து கொள்ளாத மனத்துக்குப் பின்னும் சொல்லுகிறார்.

“அருகில் இருக்கிற பொருளின் அருமை தெரியாதது உலகத்தின் இயல்பு. புழைக்கடை மூலிகை மருந்துக்கு உதவாது. அதுவே காட்டில் இருந்தால் அரியது என்று எடுத்து வருவார்கள். உனக்கு அருகில் இறைவன் இருப்பது புலப் படவில்லை என்பது உலகத்தோடு ஒத்த இயல்புதான். இனி அவன் இருக்கும் வேறு இடங்களை, உனக்கு அயலாகிய இடங்களைச் சொல்கிறேன், கேள்” என்று தொடங்கிறார்.

“எப்போதும் இறைவனுடைய திருவடிப் புகழை வாய் நிரம்ப வஞ்சகமின்றி நாணமின்றிப்பாடுகிற தொண்டர்களை நீ பார்த்திருக்கிறாயா? அந்தத் தொண்டர் கூட்டத்திலே அவன் கலந்திருப்பான். அவர்கள் கூட்டத்துக்குள்ளே இருப்பான்.”

வாய்ஆரத் தன்அடியே பாடும் தொண்டர்
இனத்தகத்தான்.

“இந்த இனத்தினரும் நம்முடனே தானே இருக்கிறார் களென்று நீ நினைத்துப் புறக்கணிக்கலாம். இந்த உலகத் துக்கு அப்பாலே அவன் இருக்கும் இடத்தைச் சொல்கிறேன். தேவலோகம் தெரியுமா. உனக்கு? அதைப்பற்றிக் கேட்டிருப் பாயே! அங்குள்ள தேவர்களுக்கு இடுக்கண் தீர்க்கும் பெரு மான் அவன். அவர்கள் எப்போதும் இறைவனை வணங்கி வழி பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய தலையின் மேல் நிற்கும் தலைவன் அவன்.”

இமையவர்தம் சிரத்தின் மேலான்.

மனம் மயங்கி நின்றது. “உன்னிடம் இருக்கிறான். நீ உள்ள வீடாசிய உடம்பில் வேறு பகுதிகளில் இருக்கிறான். உடம்பு பழகும் ஊரில் உள்ள தொண்டர் கூட்டத்தில் இருக்கிறான். நீ உள்ள உலகத்துக்கு அப்பாலுள்ள தேவலோகத்தில் தலைவனாக இருக்கிறான்” என்று இறைவன் வர வரத் தூரத்தில் இருப்பதை உணர்த்தியும், மனம் இன்னும் தூரம், இன்னும் தூரம் என்று எட்டிப் பார்த்தது.

ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போவதற்கும் அளவு இல்லையா? அடுத்தபடி இவ்விடம், அடுத்தபடி இவ்விடம் என்று சொல்லிக் கொண்டே வந்தவர், “உனக்குத் தெரிந்த இடங்களுக்கெல்லாம் அப்பால் இருக்கிறான்” என்று சொல்லி விடுகிறார். “உன்னுடைய கணக்கிலே அகப்பட்டவை ஏழு உலகம்; அண்டம் ஏழு. இறைவன் அவற்றிற்கும் அப்பால் இருப்பவன். அந்த அப்பால் என்பதை எப்படி நீட்டிக் கொண்டாலும் அங்கெல்லாம் அவன் இருக்கிறான்” என்று மனத்தின் யாத்திரைக்கு முடிவு கட்டி விடுகிறார்.

ஏழ்அண்டத்து அப்பாலான்.

“ஏழண்டத்துக்கும் அப்பாற்பட்டவன்” என்று சொன்னவுடன் மனம் தான் அளப்பதற்குரிய அண்டங்களை யெல்லாம் சிந்தித்துப் பார்த்தது. அவற்றிற்கும் அப்பால், அவற்றிற்கும் அப்பால் என்ற இந்தச் சிந்தனை யாத்திரையை முடிவின்றி நடத்திக் கொண்டே இருக்கலாம் அல்லவா?

இப்போது மனத்துக்கே சலிப்பு வந்து விட்டது. அப்பால், அப்பால் என்று போய்க் கொண்டிருப்பதில் பயனில்லை என்று கண்டுகொண்டது. வெளியே திரியத் திரிய முயற்சி விரிகிறது; இடம் விரிகிறது; காலம் விரிகிறது; லட்சியமும் கைக்கு எட்டாமல் எட்ட எட்டப் போகிறது. உள்ளே நுழைய நுழைய முயற்சி ஆழ்கிறது; இடம் சுருங்குகிறது; காலம் நழுவுகிறது; லட்சியத்துக்குள்ளே ஆழும் நிலை வருகிறது. அப்பால், அப்பால் என்று அகன்று செல்வதில் பயன் இல்லை.இப்பால், இப்பால் என்று ஆழ்ந்து செல்வதில்தான் பயன் உண்டு.

மனத்துக்கு ஓரளவு தெளிவு பிறந்தது. அப்பர் சுவாமி கள் காட்டிய வழியில் மீண்டு வந்தது. இறைவன் ஏழண்டத் துக்கு அப்பாலானவன்; ஆனாலும் கருணையினால் இமையவர் தம் சிரத்தின் மேல் இருப்பவன்? பின்னும் இறங்கி வந்து தொண்டர் இனத்து அகத்தே இருப்பவன்; அதனிலும் அணி மையனாகி வாக்கில் வருவான்; பின்னும் அணியனாகித் தலை மேல் இருப்பான்; பின்னும் அருகே வந்து மனத்தையே கோயிலாகக் கொள்வான். அவ்வளவு சேய்மையில் உள்ளவன் இவ்வளவு அணிமையிலும் இருப்பதற்கு அவன் கருணையே காரணம் என்பதை மனம் உணர்ந்துகொண்டது.

அப்பால் அப்பால் என்று தாண்டிச் சென்றதை மாற்றி. இப்பால் இப்பால் என்று நெருங்கி வருவதை விரும்பியது. “இப்பால் எங்கெங்கே இருக்கிறான்?” என்று கேட்டது.

“இப்பால் இருக்கும் இடம் ஒன்றா, இரண்டா? நிலத்தில் அழகான இடங்களில் எல்லாம் அவன் இருக்கிறான். நிலத்திலே சிறந்த குறிஞ்சியில் அவன் இருக்கிறான். பொன்போன்ற நிறம் படைத்த தினை விளையும் புனத்திலே இருக்கிறான். பொன் நிறம் படைத்த அழகிய கொன்றைப் பூவில் இருக்கிறான். மலையிலே இருக்கிறான்; நெருப்பிலே இருக்கிறான்; காற்றிலே இருக்கிறான்; மழை பொழியும் மேகத்தில் இருக்கிறான்” என்கிறார் வாகீசர்.

இப்பால் செம்பொன்
புனத்தகத்தான்; நறுங்கொன்றைப் போதின் உள்ளான்;
பொருப்பிடையான் நெருப்பிடையான், காற்றின் உள்ளான்,
கனத்தகத்தான்,

“பொதுவாக இப்படிச் சொன்னால் அவனுக்கு என்று ஒரு விலாசம் இல்லையா?”

“உண்டு. அவனைக் கைலாசபதி என்று சொல்வார்கள். அவன் கைலாச மலையின் உச்சியில் இருக்கிறான்.’

“கைலாசம் எளிதிலே சென்று தரிசிக்கும் இடமா? மனி தர்கள் நினைத்தால் போய்க் காணுகின்ற இடம் ஒன்றிலும் அவன் இருப்பதில்லையா?”

“உண்டு. வடக்கே உள்ள கைலாசத்திற்குச் சமான மாகத் தெற்கேயும் ஒரு தலம் இருக்கிறது. அதற்குத் திருக் காளத்தி என்று பெயர். அதற்குத் தக்ஷிண கைலாசம் என்ற திருநாமமும் வழங்கும்.”

“மனம் முதலிய கரணங்களில் இருப்பதையும் அடி யாரிடம் இருப்பதையும் இன்னும் பல இடங்களில் இருப்ப தையும் எடுத்துச் சொன்னீர்களே. நீங்கள் எங்கே கண்டீர்கள்?” என்று மனம் கேட்டது:

“நான் அவனை எங்கும் காண்கிறேன். எதைப் பார்த்தா லும் அதுவாக அங்கே இறைவன் எழுந்தருளியிருக்கிறான.’, “எல்லோருக்கிம் அப்படி அவன் புலப்படுவதில்லையே!”

“அவன் என் கண்ணில் இருக்கிறான். அதனால் கண் காணும் இடங்களில் எல்லாம் அவனையே காண்கிறேன்.”

கைலாயத் துச்சி உள்ளான்,
காளத்தியான், அவன் என் கண்ணுளானே.

அப்பர் சுவாமிகளின் கண்ணிலே இருக்கும் இறைவன் அவருக்கும் எல்லாமாய்த் தோன்றுகிறான். அப்பாலைக்கும் அப்பாலாக இருக்கும் அவன் இப்பாலும் இருக் கிறான் என்று உணர்த்தியவர் தம் கண்ணுளான் என்று முடிக்கிறார்.

மனத்தகத்தான், தலைமேலான், வாக்கின் உள்ளான்;
வாயாரத் தன் அடியே பாடும் தொண்டர்
இனத்தகத்தான்; இமையவர்தம் சிரத்தின் மேலான்;
ஏழண்டத்து அப்பாலான்; இப்பால் செம்பொன்
புனத்தகத்தான்; நறுங்கொன்றைப் போதின் உள்ளான்;
பொருப்பிடையான்; நெருப்பிடையான்; காற்றின் உள்ளான்;
கனத்தகத்தான்; கயிலாயத்து உச்சி யுள்ளான்;
காளத்தி யான்அவன்என் கண்ணு ளானே.

[மனத்தின் உள்ளே இருப்பவன், தலைக்குமேல் இருப்ப வன், பேசும் பேச்சில் இருப்பவன், வாய் நிரம்பத் தன் அடியையே புகழ்ந்து பாடும் அடியார்களுடைய கூட்டத்தி னுள்ளே இருப்பவன், தேவர்களுடைய தலையின்மேல் அவர் கள் வணங்குவதற்குரிய தலைவனாக இருப்பவன், ஏழு உலகங் களுக்கும் அப்பால் நிற்பவன்; இவற்றை யன்றி நமக்கு அணியனவான இந்தப் பகுதிகளில் சிவந்த பொன் போன்ற தினையை விளைக்கும் புனத்தினுள்ளே இருப்பவன், நறுமணம் வீசும் கொன்றை மலரில் இருப்பவன், மலையிடையே உள்ள வன், தீயிடையே இருப்பவன, காற்றில் இருப்பவன். மேகத் திடையே இருப்பவன், கைலாய மலையின் உச்சியில் எழுந்தரு ளியிருப்பவன், திருக்காளத்தியாகிய தலத்தில் கோயில் கொண்டவனாகிய அப் பெருமான் என் கண்ணில் இருக்கிறான்.

ஆர- நிரம்ப. இனம்-கூட்டம். அண்டம்-உலகம். புனம்- தினைப்புனம். கனம்-மேகம்.]

இது ஆறாம் திருமுறையில் 8-ஆம் பதிகத்தில் உள்ள ஐந்தாவது திருப்பாட்டு.

– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *