கருகாவூர் எந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 5, 2022
பார்வையிட்டோர்: 6,561 
 

(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோழ நாட்டில் பாபநாசம் என்னும் ஊருக்கு அருகில் வெட்டாறு என்ற ஆற்றின் கரையில் திருக்கருகாவூர் என்ற தலம் இருக்கிறது. இப்போது திருக்களாவூர் என்று அதை வழங்குகிறார்கள். அத்தலத்தில் அம்பிகை, கருவுற்றிருந்த பெண்மணி ஒருத்தியைப் பாதுகாத்து அவள் கருவைக் காத்து மருத்துவம் செய்ததாக ஒரு வரலாறு உண்டு. கருவைக் காத்த ஊராதலின் கருகாவூர் என்ற திருநாமம் அதற்கு உண்டாயிற்று. அம்பிகைக்குக் கருக்காத்த நாயகி என்றும். கர்ப்பரக்ஷகியம்பிகை என்றும் திருநாமங்கள் அமைந்தன.

கருகாவூருக்குத் திருநாவுக்கரசர் சென்று இந்த வர லாற்றையெல்லாம் கேட்டார். இறைவி கருவைக் காத்த ஊர் என்பதைக் கேட்ட போது அவருடைய சிந்தை இறை வனுடைய திருவருட் பெருமையிலே ஆழ்ந்தது. அம்பிகை இறைவனுடைய திருவருளின் உருவந்தானே? கருத்தோன்றி வளர்ந்து உருவாகி மேலும் அவ்வுரு வளர்கிறது. எல்லா நிலைகளிலும் இறைவனே காப்பாற்றுகிறான். உலகமெல்லாம் உருவாவதற்கு முன்னே அது இறைவனுடைய திருவுள்ளத் திலே கருவாய் இருக்கிறது. அந்தக் கரு இறைவனிடத்திலே தோன்றி வளர்ந்து உலகாகிறது. உலகம் தோன்றுவதற்கு முன்னே, தான் அருளுடன் வெளிப்பட்டு உலகை வெளிப் படுத்துகிறான். அதனால் உலகுக்கு அவனையே கரு என்று சொல்லி விடலாம். உலகுக்கு முன்னே தோன்றும் கருவாகிய எம்பெருமான் அவ்வுலகம் வளர வளர உயிர்களுக்கெல்லாம் வாழ வழி காட்டுகிறான்; கண்ணைப்போலே நின்று வழி காட்டுகிறான்.

கருகாவூர் என்ற ஊரின் வரலாற்றோடு இந்த எண்ணங் கள் நாவுக்கரசர் கருத்திலே தோன்றின.

கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

என்ற அடி உருவாயிற்று.

உலகம் தோன்றுவதற்கு முன்னரே உள்ளவன் இறை வன். அதனால் அவன் மிகப் பழையவன், பழைய பொருள் கள் காலம் ஆக ஆகப் பயனற்றுப் போவது உண்டு. இறை வன் பழைய பொருளாதலால் பயனற்ற பொருளாகி விட் டானா? இல்லை, இல்லை; அவன் அன்றும் பயனுள்ளவனாக இருந்தான்; இன்றும் பயன் தரும் பொருளாக இருக்கிறான்; இனியும் இருப்பான். பழமைக்குப் பழமையாகவும் புதுமைக் குப் புதுமையாகவும் இருக்கும் நித்தியப் பொருள் அவன்.

“முன்னைப் பழம்பொருட்கும்
முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும்
பேர்த்தும்அப் பெற்றியனே!”

என்று மணிவாசகர் பாடினார்.

இறைவன் காலம் கடந்தவன்; காலத்தைத் தந்தவன்; காலமாகவே இருப்பவன். பழமையும் அவன் தான்; புதுமை யும் அவன்தான்; இந்த இரண்டும் அவனிடம் உள்ளன. அது எப்படி?

பழைய ஆலமரம் ஒன்று பல ஆண்டுகளாக வளர்ந்து படர்ந்து வேரோடு வீழ்து இறங்கி நிற்கிறது. ஆயினும் அதில் புதுமை இல்லாமல் போகவில்லை. அது வளர்ந்து கொண்டே யிருக்கும் மரமாதலின், ஒவ்வொரு நாளும் அதில் புதுமை தோன்றுகிறது. அதனிடத்தே தோன்றும் தளிர் புதுமையின் அறிகுறி. நாட்பட நாட்பட மரத்தில் வயிரம் பாயும். ஆல மரத்தில் தளிரின் வடிவத்தில் புதுமையும் வயிரத்தின் வடி வத்தில் பழமையும் இருக்கின்றன. இறைவன் தளிர் அல்லது குருத்தாகவும் இருக்கிறான்; வயிரமாகவும் இருக்கிறான். வயிரம் காலத்தின் ஓர் எல்லைக் கோட்டுக்கு அடையாளம்; குருத்து மற்றோர் எல்லைக் கோட்டுக்கு அடையாளம். இரண்டு எல்லையாகவும் இருக்கிறான் இறைவன், ஆதலால் அவனைக் குருத்தென்றும் வயிரமென்றும் கூறுகிறார் அப்பர் சுவாமிகள்.

குருகாம், வயிரமாம்.

அப்பர் உணர்ச்சியிலே மிதந்து பாடுகிறார். அவர் பெரிய அன்பராக இருப்பதோடன்றிச் சிறந்த கவிஞராகவும் இருக் கிறார். பழைய பொருள், புதிய பொருள் என்றால் உள்ளம் கவ்வாது. அதையே உருவுள்ள பொருளோடு ஒட்டிக் காட்டி னால் மனத்திலே நன்கு பதியும். அவ்வாறு பதிய வைக்கிறது கவிஞனுடைய கலையின் ஆற்றல். அப்பர் என்ற கவிஞர் கால மென்னும் மரத்தின் ஓர் எல்லையை, ‘இதோ பார் குருத்து; இது இறைவன்’” என்று காட்டிவிட்டு, மற்றோர் எல்லையை, “இதோ உள்ளே ஊடுருவிப் பார்; வயிரம்; இதுவும் இறை வனே” என்று காட்டுகிறார்.

இந்த இரண்டு எல்லைக்கும் இடையே காலத்தைத் துண்டுபோட்டுக் கணக்கு வைத்துக் கொள்கிறோம். கணம், விநாடி, நாழிகை. முகூர்த்தம், நாள், பக்ஷம், மாதம், ஆண்டு, யுகம் என்று வருவது பழைய கணக்கு. செகண்டு,நிமிஷம். மணி, தேதி, மாதம், ஆண்டு, நூற்றாண்டு என்று வருவது புதிய கணக்கு. இந்தக் காலப்பகுதிகள் இவ்வளவும் இறைவன்தான்.

“ஞால மேபிற வேஅவை வந்துபோம்
காலமே’”

என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.

அந்தக் காலக் கணக்கில் சில அப்பர் சுவாமிகளுக்கு நினை வுக்கு வருகின்றன. முதலில் நாளை நினைக்கிறார். நாள் என்பது நட்சத்திரம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத் திரம் தலைமை பெற்று வானத்தில் தோன்றுகிறது. அதனால் நாளை நட்சத்திரத்தினால் குறிப்பது வழக்கம். இறைவன் அந்த நாளாக இருக்கிறான்.

ஏழு நாள் சேர்ந்ததை வாரம் என்று சொல்கிறோம். அதைப் பழங்காலத்தில் கிழமை என்று சொன்னார்கள். இப் போதும் யாழ்ப்பாணத்தில் வாரத்தைக் கிழமையென்றே குறிக்கிறார்கள். இறைவன் வாரமாகவும் இருக்கிறான்.

“மணி என்ன பார், அப்பா” என்று கேட்டார் ஒருவர் ஒரு பையனைப் பார்த்து.

“பத்துக்கு மேல் ஆயிற்று” என்றான் பையன்.

“சின்ன முள் எங்கே இருக்கிறது?” என்று மறுபடியும் கேட்டார்.

“பத்தைத் தாண்டி” என்று விடை வந்தது.

“பெரிய முள் எங்கே இருக்கிறது?” என்று மறுபடியும் கேட்டார்,

“இரண்டைத் தாண்டி” என்றான் பையன்.

“எத்தனை நிமிஷத்தில்?” என்று மீண்டும் கேட்டார்.

மறுபடியும் பையன் ஏதோ சொன்னான். அவர் பொறுமையை இழந்து, “அந்தக் கடிகாரத்தையே இங்கே கொண்டு வா” என்று கூவினார்.

இப்படித்தான் அப்பர் சொல்லுகிறார். புதுமையானவன் என்றார்; பழமையானவன் என்றார்; நாளாக இருக்கிறவன் என்றார்; கிழமையாக இருக்கிறவன் என்றார். இப்படியே சொல்லிக்கொண்டு போனால் அதற்கு முடிவு எங்கே? ஆகை யால் காலத்தைக் காட்டுவதற்குரிய க ருவிகளாக உள்ள கிரகங்களே அவன்தான் என்று சொல்லி விட்டார்.

குருகாம்; வயிரமாம்; கூறும் நாளாம்;
கொள்ளும் கிழமையாம்; கோளே தானாம்.

[குருத்தாக இருக்கிறான்; வயிரமாக இருக்கிறான்; காலத்தை வகுத்துக் கூறும் தினமாக இருக்கிறான் : ஏழு நாட் களைத் தொகுத்துக் கொள்ளும் வாரமாக இருக்கிறான். காலக்கணக்குக்கு மூலக்கருவியான கிரகங்களே அவன் தான்.

குருகு-குருத்து. கிழமை-வாரம். கோள்-கிரகம்; இவை ஒன்பது.]

காலத்தின் எல்லையாகவும் காலத்தின் பகுதிகளாகவும் விளங்குகின்றவன் சிவபெருமான் என்று இதனால் தெரிவித் தார் வாகீசர்.

காலமாக நிற்கும் பெருமானை, அநுபவித்தற்குரிய இன்பப் பொருளாகக் கண்டவர் அப்பர். அவனுடைய அருளி னால் உண்டான அமைதியான இன்பத்தில் திளைத்த அவர், எங்கோ இருக்கும் ஒருவனைப் பற்றிச் சொல்வது போலச் சொல்லலாமா? அப்படிப் பெரிய பொருளாக இருக்கும் அவன் தன் அருளினால் அடியார்களுக்கு இன்பம் தரும் பொருளாக வருகிறான். அதை நினைக்கையில் தேனைச் சுவைத்தவன் நாக்கைச் சப்புக் கொட்டுவது போன்ற உணர்ச்சி அப்பருக்கு வருகிறது.

இப்படிக் காலத்திற்குப் புறம்பேயும் உள்ளேயும் இருக்கும் எம்பெருமான் எப்படிஇனித்திருக்கிறான் தெரியுமா? இனிமை என்றாலே அதற்கு உவமை அமுதந்தான் என்று உலகம் திட்டம் செய்துவிட்டது. அவன் அமுதமாக இருக் கிறான். ஆனால் தேவர் உண்ட அமுதமா அது? தேவரால் எள்ளளவும் அநுபவிக்கப் பெறாத அமுதம் அது; ‘பருகா அமுதம்” என்கிறார்.

“தேவர் பருகிய அமுதமே எங்களுக்குத் தெரியாதே; பருகாத அமுதம் எப்படித் தெரியப் போகிறது? எங்களுக்குத் தெரிந்ததாக ஒன்றுசொல்லுங்கள்” என்று அவரைக் கேட்டுப் பார்த்தால் உடனே, “பாலில் நெய்யாம்” என்று விடையிறுக் கிறார். “பாலில் நெய் சாரமாக இருக்கும்; சுவையாக இருக் குமா? ‘ என்று சிறிதே ஐயத்தோடு நிற்பதைக் கண்டு, “பழத்தின் ரசம்போல இருப்பான்” என்கிறார்.

பருகா அமுதமாம்; பாலில் நெய்யாம்;
பழத்தின் இரதமாம்.

[தேவர்கள் பருகாத அமுதம் போல இருப்பவன்; பாலில் உள்ள நெய்போல இருப்பவன்; பழத்தின் சுவைபோல இருப்பவன்;

இரதம்-ரசம்; சுவை. பாலில் நெய்யாக இருக்கிறான்; பழத்தின் சுவையாக இருக்கிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.]

“இந்தப் பொருள்களெல்லாம் தெவிட்டிவிடுவன அல்லவா? இறையின்பத்துக்குச் சமானமாகச் சொல்ல லாமா?” என்று யாராவது யோசிக்கலாம் அல்லவா? ஆத லால் இதுவரைக்கும் சொன்னதில் திருப்தி பிறவாமல் பின்னும் மேற்பட்ட ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார் அப்பர். வாயாரப் பாடும் பாட்டுக்குப் பண் இனிமை தருகிறதே, அதைச் சொல்கிறார்.

பாட்டில் பண்ணாம்.

[இசைப் பாட்டிலே இணைந்து இனிமை தருகின்ற பண்ணைப் போல இருக்கிறான்.]

காலமே தானாக இருக்கும் கடவுள், அன்பர்களுக்கு நெய் யாகவும் ரசமாகவும் பண்ணாகவும் இனிக்கும் கடவுள், தன்னுடைய கருணையையே ஒரு பாகத்தில் மனையாட்டியாக ஏற்றிருக்கிறான். உமையாளை ஒரு கூற்றிலே அமைத்துக் கொண்டு, “என்னிடமிருந்து கருணை விலகாதிருக்கும்” என்பதைக் காட்டுகிறான்.

ஒருகால் உமையாள் ஓர் கூறனும் ஆம்.

[ஒரு சமயம் உமையம்மையை ஓர் கூற்றிலே ஏற்றிருப் பவனும் ஆவான். கூறு-பகுதி.]

இறைவனுடைய அருளையே சக்தியாக வழிபடுகிறோம். அவன் தன் அருளினால் அன்பர்கள் நுகரும் பொருளாக நிற்கிறான். அன்பு செய்யாதவர்களுக்குக் கூட அவன் அருள் நன்மையைப் புரிகிறது. இறைவனைப் போற்றுகிற மனிதனும் உலகில் வாழ்கிறான்; தூற்றுகிறவனும் வாழ்கிறான். இறை வன் யாவருக்கும் வேண்டியவற்றைக் கொடுத்தருளி மனிதன் காலில் இருந்து கொண்டு நடக்கச் செய்கிறான்; கையிலிருந்து கொண்டு செயல் செய்யச் செய்கிறான்; கண்ணிலிருந்து காணச் செய்கிறான்.

நன்றாகப் பேசுகிறான் ஒருவன்; மற்றொருவன் ஊமையாக இருக்கிறான். பேசுகிறவனைப் போலவே ஊமைக்கும் நாக்கு இருக்கிறது. ஆனால் ஊமை பேசுவதில்லை. வாயில் உள்ள நாக்கு மட்டும் பேசுவதற்குப் போதுமானதாக இருந் தால், ஊமை பேசவேண்டும். இந்த நாக்கைப் பேசும்படி இயக்குவதற்கு அகநாக்கு ஒன்று இருக்கிறது. அது மனத்தின் பகுதி. அகக்கண் என்ற ஒன்று இருப்பதுபோல அக நாக்கும் உணடு. நாம் சொல்லும் உள்நாக்கு அன்று அது. அந்த அக நாக்குப் பேசினால் புறநாக்குப் பேசும்,

அகநாக்குக் கூடத் தானே பேசாது. அதை இயக்கு கிறவன் ஒருவன் இருக்கிறான். நாடகம் போடும் போது திரைக்குப் பின்னாலிருந்து, நடிப்பவர்களுக்கு அவர்களுடைய பேச்சை அவ்வப்போது சொல்லிக் கொடுக்கச் சிலர் இருப்ப துண்டு. அவர்களை உரையாடி (Prompter) என்று சொல் வார்கள். உள்ளே உள்ள அகநாக்குக்கு அப்படி ஓர் உரை யாடி உண்டு. அவன் தான் இறைவன். அவன் உரைக்க, அதனை உள்நின்ற நாக்கு உரைக்க, அதையே வெளியே உள்ள நாக்குச் சொல்கிறது. இறைவன் உள்ளே நின்று உரைக்கும்படி தூண்டாவிட்டால் பேச்சே எழாது. ஆதலின் அவனே உள்ளே நின்ற நாவுக்கு உரையாடியாக இருந்து அருள் செய்கிறான்.

உள் நின்ற நாவுக்கு உரையாடியாம்.

[உள்ளே நின்ற அகநாவுக்குச் சொல்லித் தருகின்றவனாம்.]

உலகுக்கு முன்னே கருவாய்த் தோன்றி, அது வளர வளர யாவற்றையும் காட்டும் கண்ணாக உதவும் கருகாவூர்ப் பெருமான் காலமாகி நிற்கிறான்; அடைந்தார்க்கு இன்பப் பொருளாய் இழைகிறான்; அருளோடு இணைந்து விளங்கு கிறான்; எல்லோருக்கும் உள் நின்ற நாவுக்கு உரையாடி யாகவும் திகழ்கிறான். இப்படி இறைவனுடைய இயல்புகளை அமைத்துக் காட்டுகிறார் அப்பர்.

குருகாம்; வயிரமாம்; கூறும் நாளாம்;
கொள்ளும் கிழமையாம்; கோளே தானாம்;
பருகா அமுதமாம்;பாலில் நெய்யாம்;
பழத்தின் இரதமாம்; பாட்டில் பண்ணாம்;
ஒருகால் உமையாள் ஓர் கூறுனும் ஆம்;
உள்நின்ற நாவுக்கு உரையா டியாம்;
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.

[கருகாவூர் எந்தை குருகு முதலியன ஆவான் என்ற கூட்டுக.குருகு முதல்கோள் வரையில் உள்ளவை காலத்தைப் பற்றியவை].

இது ஆறாந் திருமுறையில் 15 – ஆம் திருப்பதிகத்தில் முதல் பாட்டு.

– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *