ராவணன் ஏன் அசுரன்?

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,044 
 

பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான புலஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது, அங்கே வந்த தெய்வ நங்கையர்களது கூச்சலால் புலஸ்தியரின் தவத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கோபம் கொண்ட புலஸ்தியர், “இங்கு வரும் கன்னிப் பெண்கள் கர்ப்பிணியாகக் கடவர்!”என்று சபித்தார். இதை அறிந்த பெண் கள், அந்த பகுதிக்கு வருவதையே தவிர்த்தனர்.

இந்த நிலையில், திரணபிந்து என்ற ராஜரிஷி யின் மகள் ஆவிற்பூ, முனிவரது சாபம் பற்றி அறியாமல், அவர் தவம் செய்யும் இடத்துக்கு வந்தாள். அவரைப் பார்த்த மறு நிமிடமே கர்ப்பமானாள். பின்னர், ‘தன் மகளை ஏற்க வேண்டும்!’ என்று திரணபிந்து வேண்டிக் கொள்ள, அவளையே மணம் புரிந்தார் புலஸ்தியர்.

மனைவியின் நல்ல குணங்களால் மனம் மகிழ்ந்த புலஸ்தியர் “நம் மகன், என்னைப் போலவே மகா தபஸ்வியாக இருப்பான்!”என்று ஆசிர்வதித்தார். அதன்படி பிறந்த விஸ்ரவஸ், மகரிஷியாக விளங்கினார்.

இவருக்குத் தன் மகள் இளிபிளையை மணம் செய்து வைத்தார் பரத்வாஜ மகரிஷி. இவர்களுக்குப் பிறந்தவனே

குபேரன்.

இதனிடையே, மகாவிஷ்ணுவால் இலங்கையில் இருந்து பாதாளத்துக்கு விரட்டப்பட்டனர் அசுரர்கள். இதனால் கலக்கமுற்ற அசுரர்களின் தலைவன் சுமாலி, ‘இனி, நம் குலம் சிறப்பது எவ்விதம்?’ என்று சிந்தித்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக, தன் மகள் கைகசியை அழைத்தான். அவளிடம், “விஸ்ரவஸ் என்பவர் மகா தபஸ்வி. பரத்வாஜ முனிவரின் மகளை மணந்து, செல்வத்துக்கு அதிபதியான குபேரனை மகனாகப் பெற்றவர். அவரிடம் சென்று, உன்னை மணந்து கொள்ளும்படி வேண்டிக் கொள். அவர் உன்னை மணந்தால், உனக்கும் குபேரன் போல், சிறப்புள்ள மகன் பிறப்பான்”என்ற சுமாலி இன்னொன்றையும் சொன்னான்:

“நானே போய் ‘என் மகளைத் திருமணம் செய்து கொள்’ என்று கேட்டால், ‘அசுரனின் மகளை நான் திருமணம் செய்வதா? முடியாது!’ என்று மறுத்து விடுவார். எனவே, நீ மட்டும் செல். தானே விருப்பத்துடன் வரும் கன்னிப் பெண்ணை மணம் புரிய மறுப்பது அதர்மம் என்ற தர்மசாஸ்திரத்தை அறிந்தவர் அவர். உன்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்; நம் குலம் மீண்டும் தழைக்கும்!”என்றான் சுமாலி ஒரே மூச்சில்.

அதன்படி கைகசி, விஸ்ரவஸிடம் சென்று தனது விருப்பத்தைச் சொல்லி, “தங்கள் மூலம் எனக்குக் குழந்தை வேண்டும். எனவே, என்னை இப்போதே திருமணம் செய்து கொள்ளுங்கள்”என்றாள். அதற்கு விஸ்ரவஸ், “இது நல்ல நேரம் அல்ல. நாம் இப்போது சேர்ந்தால் அசுரனே பிறப்பான்”என்றார். கைகசியோ, “இப்போதே மணம் புரியுங்கள்”என்று வற்புறுத்தினாள்.

அதற்கு அவர், “நமக்கு நான்கு குழந்தைகள் பிறப்பர். மூவர் அசுர குணங்களைக் கொண்டிருப் பர். இதில் ஒரு பெண்ணும் உண்டு. நான்காவது பிள்ளை தர்மாத்மாவாக இருப்பான்!”என்று ஆசிர்வதித்தார். அதன்படி விஸ்ரவஸ§க்கும் கைகசிக்கும் பிறந்தவர்களே ராவணன், கும்ப கர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன். இதில் கடைசி மகனான விபீஷணன், தர்மாத்மாவாகவே வாழ்ந்தான் என்கிறது புராணம்.

– எம்.கே. ராதாகிருஷ்ணன், சென்னை-44 (ஏப்ரல் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *