மாங்கனிக்காக அல்ல…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 8,730 
 

(இதற்கு முந்தைய ‘வராஹ அவதாரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

எங்கும் வியாபித்திருந்த தண்ணீரில் இருந்து விஷ்ணு தோன்றினார். அதன் பின்னர் பிரும்மதேவன் தோன்றினான்.

அசரீரி வாக்கு அவனை தவம் செய்யுமாறு பணித்தது. அவன் கடும் தவம் புரிந்த பின்னர், அவன் முன் விஷ்ணு தோன்றினார். “நீ யார்?” என்று பிரும்ம தேவன் கேட்க; “என்னிடமிருந்துதான் நீ தோன்றினாய்” என்று விஷ்ணு கூறினார். இருவருக்குள் வாக்குவாதம் நடந்தது. அப்போது, அவர்கள் முன் ஒளி வீசிக்கொண்டு ஒரு பெரிய லிங்கம் தோன்றியது.

விஷ்ணு, “நாம் நமது வாக்குவாதத்தை நிறுத்திவிட்டு, இந்த லிங்கத்தைப் பற்றி அறிய முயற்சிப்போம். நீ ஒரு அன்னத்தின் உருவெடுத்து, பறந்து சென்று மேல்புறம் பார்ப்பாயாக. நான் ஒரு காட்டுப்பன்றி உருவம் எடுத்து கீழ்ப்புறம் சென்று பார்க்கிறேன். இந்த லிங்கத்தின் தொடக்கமும், முடிவும் எங்கிருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்வோம்…” என்று கூறினார்.

இதற்கு பிரும்மதேவனும் இணங்க, இருவரும் மேலும் கீழுமாகச் சென்று தேடினர். ஆனால் லிங்கத்தின் தொடக்கத்தையோ முடிவையோ (ஆதி, அந்தம்) அவர்களால் காண முடியவில்லை.

பின்னர் இருவரும் பழைய இடத்திற்கே திரும்பி வந்து துதித்தனர். அப்போது ‘ஓம்’ என்ற ஒலி கேட்டது. அவர்கள் முன் மஹாதேவன் எனும் சிவன் தோன்றினார்.

“எங்கள் சண்டையும் நன்மையில் முடிந்தது. அதனால்தான் தங்களைக் காண முடிந்தது..” என்று விஷ்ணு மகிழ்ச்சியுடன் கூறினார்.

உடனே சிவன், “நாம் மூவருமே ஒன்றுதான். படைப்பிற்கு பிரும்மதேவன்; காத்தலுக்கு விஷ்ணு; அழித்தலுக்கு நான் என நாம் மூவராகப் பிரிந்து இருக்கிறோம். என்னிடமிருந்து ருத்ரன் தோன்றுவார். ஆனால் அவரும் என்னுடைய அம்சமே என்பதால், அவரும் நானே. பிரும்மதேவன் இப்போது படைப்புத் தொழிலைத் தொடங்கட்டும்” என்று கூறினார்.

இதன் பின்னர் படைப்பு நடந்தது. பிரும்மதேவனால் முதலில் படைக்கப்பட்டவர்களில் ஒருவனாகிய தஷனின் மகள் ‘ஸதி’யை ருத்ரன் மணந்தார். தஷன் நடத்திய யாகத்திற்கு, அவன் ருத்ரனை அழைக்கவில்லை. ஸதியும் அழைக்கப் படாவிட்டாலும், அவள் யாகத்திற்குச் சென்றாள். அவளையும் தஷன் அவமதித்தான்.

பொறுக்க முடியாத கோபத்தில், ருத்ரன் தனது கணங்களை அனுப்ப, அவர்கள் யாகத்தையும் தடுத்து, அங்கு கூடியிருந்த தேவர்களையும் கொன்றனர். பின்னர் சமாதானப் படுத்தப்பட்ட ருத்ரனால், அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டனர்.

ஆனால் அவமானப் படுத்தப் பட்டதால், மனமுடைந்த ஸதி தன்னையே அழித்துக்கொண்டு, ஹிமவானின் மகளாகப் பிறந்து, பார்வதி என்று அழைக்கப்பட்டு, சிவனைக் குறித்து துதி செய்தாள்.

இதற்கிடையில் அசுரர்களின் தலைவனாகி, தேவர்களுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்த தாரகாஸுரனை அழிப்பதற்காக, தேவர்கள் பிரும்மதேவனின் உதவியை நாடினார்கள்.

பிரும்மதேவன், “சிவனுடைய மகனைத் தவிர, வேறு யாராலும் தன்னை அழிக்க முடியாது” என்ற வரத்தை என்னிடமிருந்து தாரகாஸுரன் பெற்றிருக்கிறான். ஆனால், சிவனோ தவ நிலையில் இருக்கிறார். அவரை மணப்பதற்காக பார்வதி காத்திருக்கிறாள். ஏதாவது செய்து அவர்கள் இருவரையும் மணம் புரிய வையுங்கள். அவர்களுக்குப் பிறக்கும் மகன், தாரகாஸுரனை அழிப்பான்” என்று கூறிவிட்டார்.

இந்திரனின் யோசனைப்படி, சிவன் தவத்தைக் கெடுத்து, அவர் பார்வதியை விரும்புமாறு செய்வதற்காக, மன்மதன் அனுப்பப்பட்டான். அவன் தனது தவத்திற்கு இடையூறு செய்தபோது, கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைத் திறந்து, அவனை எரித்து சாம்பலாக்கிவிட்டார்.

மன்மதனின் மனைவி ரதிதேவி, தேவர்களிடம் சென்று கதறினாள். அனைவரும் சென்று சிவனிடம், “மன்மதன் தானாக வந்து உங்களுடைய தவத்தில் குறுக்கிடவில்லை. தாரகாஸுரனை அழிக்க உங்கள் மகனால்தான் முடியும் என்பதால், நீங்கள் பார்வதியை மணம் புரிவதற்காக அவன் தேவர்களால் அனுப்பப்பட்டான். இப்போதோ ரதி பரிதாபகரமான நிலையை அடைந்து விட்டாள். நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்” என்று முறையிட்டனர்.

“நடந்தது நடந்ததுதான். ஆனால் மன்மதன் துவாரகையில் கிருஷ்ணனுடைய மகன் பிரத்யும்னனாகப் பிறப்பெய்தி, பின்னர் ரதியுடன் இணைவான்” என்று கூறினார்.

நாரதரின் யோசனையின் பேரில், பார்வதி மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டாள். தேவர்களும், ரிஷிகளும் சிவனிடம் சென்று, பார்வதியை மணக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் சிவன் ஒரு வயோதிக அந்தணனாக உருக்கொண்டு பார்வதியின் முன் தோன்றி, “நீ எதற்காக இப்படித் தவம் புரிகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அவரை உபசரித்து வணங்கிய பார்வதி, “சிவனைக் கணவனாக அடையவே நான் தவம் புரிகிறேன்” என்றாள்.

“இது அறியாமை. கங்கை நீர் இருக்கையில், யாராவது கிணற்று நீரை அருந்துவார்களா? கண்ணாடித் துண்டிற்காக, தங்கத்தை விடுவார்களா? மண்ணாங்கட்டிக்காக, மணம் வீசும் சந்தனக் கட்டையைப் புறக்கணிப்பார்களா? எண்ணற்ற தேவர்கள் இருக்கிறார்கள்; அவர்களில் ஒருவரை நீ திருமணம் செய்துகொள். தேவேந்திரன் இருக்கிறான்; அவனை மணம் புரிந்துகொள்…

சிவன் எப்படிப்பட்டவன்? ஐந்து முகங்கள், மூன்று கண்கள், சடைமுடி, பாம்புகளை மாலையாக அணிகிறான், உடல் முழுதும் சாம்பலைப் பூசிக் கொள்கிறான், அவன் செல்வமற்றவன், யார் அவன் என்பது எவருக்கும் தெரியாது, அவனுடைய கழுத்தோ அவன் விஷமுண்டபோது நீல நிறமுடையதாகி விட்டது. இப்படிப் பட்டவனை நினைத்து உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே…” என்றார்.

பார்வதி உடனே கோபமுற்றாள்.

“உமது வயோதிகத்தன்மை கண்டு நான் உமக்கு மரியாதை காட்டினேன்… சிவனைப் பற்றி நீர் என்ன அறிவீர்? அனைத்துக்கும் அரசர் அவரே! சிவனை நிந்திக்கிற உமக்கு மரியாதை காட்டியது என் குற்றம். உமது முன் நான் நிற்கவும் மாட்டேன்…” அங்கிருந்து விரைந்து புறப்பட பார்வதி முனைந்தாள்.

சிவன் அவளைத் தடுத்து நிறுத்தி, “எங்கே போகிறாய்? என்னை அடையத்தான் நீ தவம் செய்தாய்…” தன் சுய உருவை எடுத்தார். “உனக்கு என்ன வேண்டுமோ, அதைக் கேட்பாயாக!” என்று இன்முகத்துடன் கூறினார்.

பார்வதி வெட்கத்துடன் தன் ஆசையைச் சொல்ல, சிவன்-பார்வதி திருமணம் இனிதே நடந்தது.

அவர்களுக்கு ஸ்கந்தன், கார்த்திகேயன் என்றெல்லாம் அழைக்கப்படுகிற சுப்ரமண்யர் மகனாகப் பிறந்தார். அவர் தேவர் படைக்குத் தலைமை தாங்கி, தாரகாஸுரனை வதம் புரிந்தார்.

இவ்வாறு சிவனின் பெருமைகளை விவரிக்கிற சிவபுராணம், விநாயகர் வரலாற்றையும் குறிப்பிடுகிறது. ஒரு மாங்கனிக்காக முருகனும் விநாயகரும் போட்டியிட்ட கதை நமக்குத் தெரிந்ததே. அது சிவபுராணத்தில் வருகிறது.

ஆனால் இப்புராணத்தின்படி, அவர்கள் போட்டியிட்டது மாங்கனிக்காக அல்ல. “இருவரில் யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறீர்களோ, அவனுக்கே முதலில் திருமணம்” என்று சிவன் கூற, முருகன் உலகைச் சுற்றிவர வேகமாகப் புறப்பட்டுவிட்டார். ஆனால் விநாயகர், தாய் தந்தையரை வலம் வந்து, உலகைச் சுற்றிய பலனை அடைந்தார்.

விசுவரூபன் என்பவனின் மகள்களாகிய சித்தி, புத்தி ஆகிய இருவரையும் விநாயகர் மணந்தார். தான் வஞ்சிக்கப்பட்டதாக நினைத்த முருகன், கோபத்தில் க்ரெளஞ்ச மலைக்குச் சென்றுவிட்டார். மணமே வேண்டாம் என்று அப்போது அவர் கூறியதால், அவர் குமரக் கடவுள் ஆனார்.

பிறகு கோபம் குறைந்து வள்ளி, தெய்வானை என்று இரண்டு பேரை மணந்து கொண்டார். முருகனுக்கும் இரண்டு மனைவிகள்; ஒருவேளை அண்ணன் விநாயகருக்கு இரண்டு மனைவிகள் என்பதால் தானும் வீம்புக்காக இரண்டு பேரை மணந்தாரோ?

அப்படியும் இருக்கலாம்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *