“ஐயா!! ஐயா!!” என்ற மாட்டுக்காரச் சிறுவனின் குரல் கேட்டவர் வெளியே வந்து என்ன என்பது போல பார்த்தார், அவன் “உங்கள தேடி பெரிய பெரிய ஐயமாருங்களாம் வராங்க” என்றான்
“என்னது!! ஐயமாருங்களா?? என்ன தேடியா, என்னடா சொல்ற?” என்றபடி அவர் வாசலில் வந்து எட்டி பார்த்தார், இதென்ன அதிசயம்!! இத்தனை ஐயமாருங்க எதுக்கு இங்க வராங்க!? என்று கருதியவராய் தம் மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி கொண்டார்,
உச்சிகுடுமியும் உத்தரீயமும் கச்சங்கட்டிய வேட்டியும் முண்டத் திருநீற்று நெற்றியுமாய் முப்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் அவரது வீட்டினை நோக்கி வந்து கொண்டிருந்தனை கண்டவருக்கு கையும்காலும் ஓடாமல் நின்றது, அவர்கள் நெருங்கி வந்த வேளையிலேயே இவர் தரையில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி எழுந்தார்!!
எழுந்தவரது நெற்றியில் பொலிந்த நீறும் கண்டத்தில் கிடந்த உத்ராக்கமும் வந்த அந்தணர்களுக்கு பரம திருப்தியை தந்தது,
அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மர்மத்தோடும் ஆர்வத்தோடும் பார்த்துகொண்டு வீட்டு வாசலுக்கு வந்தனர்,
தேவரீர் எல்லோரும் எங்கிருந்து வறீங்க!?, இந்த எளியவன் வீட்டுக்கு இத்தனை மகத்துவம் இல்லையே!! என்றபடி அவர் மீண்டும் விழுந்து வணங்கினார்,
அவரது வணக்கத்தினை அவசரமாக ஏற்று கொண்ட அந்தணர்களில் தலைமையானவர், ஐயா!!, நீங்கள்தான் இந்த ஊர் வேளாளக்குடிகளில் பெருநிலக்கிழாரா!? ஊர்புறத்தில் வயல்வெளியை ஒட்டியுள்ள புளியந்தோப்பு தங்களுடையதுதானா?? என்று நேரடியாக கேட்டார்!!
ஐயமாருங்களுக்கும் புளியந்தோப்புக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தவர் பின் ஒருவாறு ஏதோ புரிந்தவராய், தேவரீர் சொன்னபடி ஊர்வெளியில் இருக்குற புளியந்தோப்பு நம்மளதுதான் என்னவிசயம் ஐயா!! என்று பணிவுடன் கேட்டார் வேளாளர்,
“அதிகம் பேச நேரமில்லை வேளாளரே!! உங்களது தோப்புக்கு எங்களோடு நீங்க இப்பவே வரனும்” என்றனர் அந்தணர்கள், அதைகேட்ட வேளாளரோ!! “தேவரீர் சொல்றது ஒன்னும் புரியவில்லையே, என் தோப்புக்கு என்னையே ஏன் அழைக்கிறீர்கள்!! தவிர நீங்கள் எல்லாம் அந்தணர்கள் வேறு!!, எனக்கு ஒன்னும் புரியவில்லையே!!” என்றார், அதுகேட்டு பொறுமையிழந்த அந்தணர் தலைவர்,
“ஐயா, உங்கள் புளியந்தோப்பில் எங்களது சொத்து இருக்கிறது, உடனே எங்களுடன் வாருங்கள் என்று கையைப் பிடித்து அழைத்து கொண்டு நடக்கலாயினர் அந்தணர்கள்”, நடப்பவை ஒவ்வொன்றுக்கும் ஏதேதோ பொருள் புரிந்தவர் போன்ற முகபாவணையுடன் வேளாளர் நடந்து கொண்டே தொடர்ந்தார்,
“தேவரீர்!! சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே, தங்கள் சொத்து என் தோப்பில் எப்படி இருக்கும்!?” என்றவரிடம் ஒரு அந்தணர் பொறுமை இழந்தவராய் “உம்ம புளியந்தோப்புல ஒரு புளியமரத்திற்கு மட்டும் வேட்டி புடவை எல்லாம் சாத்தி பூஜை பன்னிருக்கிங்களே!? அது என்ன விசேசம்!!” என்று கேட்டார்
அது கேட்டு மேலும் மேலும் ஆனந்தப் பட்ட வேளாளர், “ஐயன்மீர்!! சொல்வது விளங்கவில்லையே!! எந்த புளியை பற்றி கேட்கிறீர்கள்!?” என்ற மாத்திரத்தில் உடன்வந்த மாட்டுகாரச் சிறுவன் *”ஐயாவோ!! இன்னுமா புரியல நீங்க தினமும் பூசப் போடுறீங்களே அந்த அம்பலப்புளியதான் கேக்குறாங்க ஐயமாருங்க!!”* என்றான்
அதுகேட்ட அனைவரும் ஒரு கணம் நின்று வேளாளரை பார்த்தனர், வேளாளர் ஒன்றும் பதில் சொல்லாமல் நடந்து கொண்டே இருந்தார்
அவரது அமைதியை கலைக்கும் விதமாக அந்தணர்கள் மீண்டும் மீண்டும் அந்த புளியமரத்தை பற்றி கேட்டு கொண்டே இருந்தார்கள், அவர்களை எல்லாம் மறித்த வேளாளர்,
“தேவரீருக்கு அந்த புளியமரத்தை பற்றி எப்படி தெரிந்தது, அதில் என்ன இருக்கிறது!?” என்று கேட்டார்
அதற்கு அந்தணர் தலைவர், “நாங்கள் பலகாலம் முன்பு எங்கள் குலதனத்தை எங்கள் ஆருயிரை எங்கள் பொக்கிஷத்தை இந்த புளியத்தோப்பில் விட்டு சென்றோம், இத்தனை காலம் எங்கள் உயிரை பிரிந்து நடைபிணமாக வாழ்ந்த எங்களுக்கு இப்போதுதான் எங்கள் பொக்கிஷத்துடன் சேர காலம் கூடியிருக்கிறது, ஒருநாள் ஆபத்காலத்தில் நள்ளிரவு நேரத்தில் இந்த ஊரில் வந்து இந்த புளியந்தோப்பில் ஒரு பெரிய மரப் பொந்தில் எங்கள் சொத்தை வைத்து அடைத்துவிட்டு சென்றோம், தற்போது தேடுங்காலம் வந்து தேடிவந்தோம், பல வருடங்களுக்கு முன்பு அவசரமாக இரவில் வைத்த மரம் எதுவென்று தற்போது அடையாளம் தெரியாமல் தவித்து நின்ற போதுதான், உங்கள் கழனியில் ஏரோட்டும் மாட்டுக்கார கிழவர் ஒருவர் இந்த சிறுவனிடம், “மாட்டை அம்பலப்புளியின் அண்டையில் விடு” என்று பேசிக் கொண்டிருந்ததை கேட்டோம், அவனை அழைத்து விசாரித்ததில் இந்த தோப்பும் அம்பலப்புளியும் தங்களுடையது, தாங்கள்தான் அம்பலப்புளியை பாதுகாத்து பூசிக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டோம்”
“அம்பலப்புளி என்று தாங்கள் வைத்த பெயரும், இதுகாறும் தாங்கள் மரத்தை பூசித்து வந்த காரணத்தையும் நாங்கள் உய்த்து உணர்ந்து எங்கள் பொக்கிஷத்தின் மகிமை தெரிந்தே தாங்கள் பூசிக்கிறீர்கள் என்று உணர்ந்து தங்களை அழைத்து சென்று எங்கள் ஆருயிரை மீட்டு செல்ல வந்தோம்” என்று ஒரே மூச்சில் பேசி முடித்தார்
அதனை கேட்டு பரவசப் பட்டபடியே வேளாளர் நடக்க அவருடன் அந்தணர்கள் நடக்க அந்த அம்பப்புளியந் தோப்பும் வந்தது, அந்த தோப்பிலேயே பருத்ததும் நீண்டகாலமாக வாழ்வதும் படர்ந்ததும் எண்ணற்ற பக்ஷிகள் இன்பத்துடன் சப்தம் செய்வதும் பெரும்பேறு பெற்றதும் பச்சைபோர்வை போர்த்தியது போன்ற அழகுடனும் ஒய்யாரமாக நிற்கும் அந்த அம்பலப்புளியினிடத்து அனைவரும் வந்து சூழ்ந்தனர்,
சூழ்ந்த அந்தணர்கள் அனைவரது முகங்களும் பரவசத்திலும் வெளிப்படுத்த முடியாத ஆர்வத்திலும் ஆசையிலும் எப்போ பார்ப்போம்!? எப்போ பார்ப்போம் என்ற ஏக்கத்திலும் தவித்தன,
அவர்கள் தத்தமது கட்டுபாட்டை இழந்திருந்தனர், அவர்களது பரவசத்தை கண்ட வேளாளர் “ஐயன்மீர் நிறைவாக ஒரேயொரு கேள்வி கேட்கிறேன், தாங்களெல்லாம் யார் எங்கிருந்து வருகிறீர்கள்” என்றார்,
அதுகேட்ட அந்தணர்கள்
“நாங்கள் தீக்ஷிதர்கள், சிதம்பரம் தீக்ஷிதர்கள் சிதம்பரத்தில் இருந்து வந்திருக்கிறோம் எங்கள் உயிர்க்கு ஒரு தலைவராம் ஸ்ரீமத் ஆனந்ததாண்டவ நடராஜராஜமூர்த்தியையும் ஜெகதம்பிகையையும் கண்டு கூட்டிச்செல்ல வந்தோம்” என்று ஒருசேர கூறினர்.
அதுகேட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிய வேளாளர், அந்த புளியமரத்தின் பொந்தினை மறைத்திந்த மரப்பலகைகள் வைக்கோல்கள், துணிமூட்டைகள் முதலியவற்றை ஒவ்வொன்றாக எடுக்கத் தொடங்கினார், நிறைவாக ஒரு பெரிய நூல்துணியில் கட்டபட்டது போன்ற பெரியபொட்டலத்தை அவிழ்த்தார் அதற்குள் இருந்த உருவத்தை பட்டுத்துணியால் மறைத்திருந்தார்கள், அதனை வேளாளர் உருவியதுதான் தாமதம்,
“அண்ட கடாகங்களையும் படைத்து காத்து அளித்து மறைத்து ஒடுக்கும் பஞ்சகிருத்திய பரமானந்த தாண்டவமூர்த்தியாம் தில்லை ஸ்ரீநடராஜமூர்த்தி தம் துணையொடும் பொலிந்து குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயிற் குமின்சிரிப்பும் காட்டியாடினார்”
அதனை கண்டகண்கள் புனல்பாய களிப்பாய் உள்ளம் கரைபுரள விண்டமேனி நாக்குழற விழுந்து விழுந்து வணங்கிய தீக்ஷிதர்கள், அம்பலவா!! ஆருயிரே!! நடராஜா!! நடராஜா!! என்று கன்னத்தில் போட்டுகொண்டு அழுதழுது விழுந்து விழுந்து எழுந்து எழுந்து வணங்கி விம்மித் துடித்தனர்!!
“எத்தனை நாள் பிரிந்திருந்தேன் என்னுயிர்க்கு இன்னமுதை” என்ற வரிகளமைந்த நம்பிகள் தேவாரத்தை ஒரு தீக்ஷிதர் பாடினார்,
“க்ருபா சமுத்ரம், சுமுகம், த்ரிநேத்ரம், ஜடாதரம், பார்வதி வாம பாகம் சதாசிவம், ருத்ரம் அனந்தரூபம்,
சிதம்பரேஷம் ஹ்ருதி பாவயாமி” என்பது முதலான வடமொழி துதிகளையும் சில தீக்ஷிதர்கள் பாடி வணங்கினர், “தினே தினே சிந்தயாமி சிவகாம சுந்தரீம்” என்றும் சிலர் தேவிசிவகாம சுந்தரியை வணங்கினர்
அத்துணை தீக்ஷிதர்களும் அம்பலப்புளியில் இருந்து வெளிப்பட்ட தங்கள் தேவரை துதித்து தழுவி மகிழ்ந்து ஓய்ந்து நன்றிப்பெருக்குடன் அம்பலப்புளிக்கு சொந்தக் காரரான வேளாளரை பார்த்தனர்,
“ஒருநாள் அடியேனுடைய இந்த தோப்பிற்கு வந்த பொழுது இந்த புளியமரப் பொந்து மாத்திரம் பாதுகாப்பாக அடைக்கப் பட்டிருந்தனை கண்டேன், திருடர்கள் யாராவது திருட்டுப் பொருளை பதுக்கி வைத்திருப்பார்கள் என்று ஆராய்ந்த பொழுதுதான் கூத்தாடும் எம்பிரானது எழிற்கோலம் இங்கு மறைக்கப் பட்டு இருந்ததனை கண்டேன், தேசத்தில் அப்போது துலுக்கப் படையெடுப்பும் தேவாலய மூர்த்திகளுக்கு எல்லாம் பாதுகாப்பு இன்மையும் இருப்பதனை ஊகித்து அறிந்து கொண்டேன், யாரோ நல்லவர்கள்தான் சுவாமியை இங்கு பத்திரப் படுத்தியுள்ளார்கள் என்று எண்ணியவாறு இவரை நாம் இனி பாதுகாக்க வேண்டும் என்று சங்கல்பித்து கொண்டேன்”
“பின்னர் தாங்கள் வைத்து சென்ற அடைப்புக்கு மேலே மேலும் மேலும் பலபொருட்களை கொண்டு அடைத்து பாதுகாத்தேன், ஆனாலும் எனக்கு இந்த சுவாமியை பூசிக்க வேண்டுமே அவர் என்னென்ன நிவேதனம் சாப்பிட்டவரோ என்னென்ன பூசைகள் கண்டவரோ தெரியலை இங்கு பட்டினியாக இருப்பாரே என்று எண்ணி இவரை பூசிக்க ஒரு வழி யூகித்தேன், “என் கனவில் ஒரு தெய்வம் வந்து இந்த புளியமரத்தில் குடியிருப்பதாக கூறிற்று அதனை நாளும் பூசிக்க சொல்லிற்று” என்று ஊராருக்கு தெரியப்படுத்தினேன்”
“அம்பலத்தில் ஆடுங்கூத்தரே உள்ளிருப்பதால் இதற்கு அம்பலப்புளி என்று பெயர்வைத்து அடியோங்கள் வீட்டில் ஆச்சாரம் இன்றி செய்யும் உணவு பதார்த்தங்களை எடுத்து வந்து நிவேதித்து பூசித்து வழிபட்டு வந்தேன், இன்று உரிமைத் தொழில் செய்வோர் வந்தீர்கள்!! என்று கண்கலங்கிய வேளாளர் தொடர்ந்தார்,
அப்பரும் சம்பந்தரும் நம்பிகளும் நாளைப்போவாரும் சேக்கிழார் பெருமானும் புலியும் பாம்பும் தரிசித்த பெருமானையா நான் பூசித்து வந்தேன்!? தில்லை சிதம்பரத்தில் அனவரதமும் நடித்து, பாவாடை பாவாடையாக நிவேதனம் காணும் எம்பெருமானா அடியோங்கள் வீட்டு உணவை ஏற்றருளினார்??” என்று ஆனந்த வெள்ளத்தில் வீழிமாரி பொழிந்து நின்றார் வேளாளர்!!
அவரை பற்றிகொண்ட தீக்ஷிதர்கள், “ஐயனே!! தங்கள் வீட்டு உணவுக்காக ஏங்கிதான் எங்கள் சுவாமி இங்கு வந்து தங்கினார் போலும், அவரது திருவுளம் யாரறிவார்!! உமக்கு இனிபிறவிகள் இல்லை, எம்மிலும் பேறுபெற்றவர் நீரன்றோ!? உம்மை “அம்பலப்புளியன்” என்று இனி உலகம் அழைக்கட்டும் உங்கள் ஊர் இனி புளியங்குடி என்று அறியப் படட்டும்” என்று வாழ்த்தி வணங்கி விடைபெற்றனர் தீக்ஷிதர்கள்,
புலியூரில் இருந்த சுகம் போதாதென்று புளியூரில் சிலகாலம் வாழ்ந்த புலியூரன் தம் தொண்டர்களின் தோளில் ஏறிகொண்டு கருணாகடாக்ஷத்தையும் மந்தகாசப் புன்னகையும் வாரியிறைத்தபடி தேவி சிவகாமியுடன் தில்லை நோக்கி நடக்கலானார்
*திருச்சிற்றம்பலம்*
பின்குறிப்பு: உவேசாவின் “அம்பலப்புளி, கா.வெள்ளவைாரணரின் தில்லை பெருங்கோயில் நூல்களை தழுவி எழுதிய புனைவு இது.