மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரத்தை நாத பிரம்ம «க்ஷத்திரம் என்பார்கள். பண்டரிபுரத்தில் பஜனை செய்யும் பக்தர்களது இசைக் கருவிகளில் இருந்து கிளம்பும் நாதமே அதை மெய்ப்பிக்கும்.
புண்டரீகன் என்ற பக்தனின் பிரார்த்தனையில் மகிழ்ந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு செங்கல்லின் மேல் நின்று ஸ்ரீபாண்டுரங்கனாக& பண்டரிநாதனாக அருள் புரியும் திருத்தலம் பண்டரிபுரம். இங்கு வாழ்ந்த மகான்கள் பலர் புண்ணிய பாரதத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள். குலம், கோத்திரம், மதம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவர்களுள் ஒருவர் ஸ்ரீதுக்காராம் சுவாமி. பக்தியிலும் பண்பிலும் சிறந்தவர். ‘பகவான் நாமத்தைச் சொல்லியே இறைவனை அடையலாம்!’ என்று இறை நாம மகிமையை மக்களிடையே பரப்பியவர். இவர், இறைவனைக் குறித்து அபங்கங்கள் எனப்படும் பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.
பண்டரிபுரத்தில் நடைபெற்ற திருவிழாவுக்கு ஒரு முறை துக்காராமினால் செல்ல முடியவில்லை. அந்த ஏக்கத்தை, ஓர் ஓலையில் எழுதி பாண்டுரங்கனுக்கு அனுப்பி வைத்தார் அவர். அதற்கு அந்த பண்டரிநாதனே பதில் ஓலை அனுப்பியதுடன், தன் அன்புத் தொண்டரான துக்காராமை அழைத்து வருமாறு கருடாழ்வாரை அனுப்பி வைத்தாராம்.
அன்பின் மிகுதியால் பெண் ஒருத்தி துக்காராமுக்கு அளித்த ஓட்டைச் சொம்பு, பத்தரை மாற்றுத் தங்கமாக மாறியது; அன்புக்குரிய வணிகர் ஒருவரின் இறந்துபோன குழந்தையை துக்காராம் பிழைக்க வைத்த அற்புதம்; இப்படி துக்காராமின் வாழ்வில் நடந்த அற்புதங்கள் ஏராளம்.
பக்திமானாக வாழ்ந்து காட்டிய ஸ்ரீதுக்காராம் சுவாமி, நடு வீதியில் பஜனை செய்து கொண்டிருந்தபோதே புஷ்பக விமானத்தில் ஏறி, பூத உடலுடன் மேலுலகம் சென்றதாக கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
இந்த மகானின் மகள் வயிற்றுப் பேரன் ஸ்ரீவாசுதேவ பாவாவும் தாத்தாவைப் போல் தெய்வ பக்தியும், ஒழுக்கமும், புராண ஞானமும் மிக்கவர். அனுதினமும் ஆலயம் சென்று, அங்கு பக்தர்களிடையே பெருமாள் அடியவர்களது திவ்ய சரிதங்களை சொற்பொழிவாற்றுவது இவரது வழக்கம்.
ஒரு நாள்… ‘‘மகனே பாவா… அதற்குள் பிரவசனம் முடிந்து விட்டதா? ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாய்? உடம்புக்கு சங்கடமா?’’ என்று கற்சிலையென அமர்ந்திருக்கும் மகனிடம் கேட்டாள் அவரது தாயார்.
‘‘சங்கடம் இல்லையம்மா… ஒரு சந்தேகம்!’’ என்று பதிலளித்தார் பாவா. ‘‘சந்தேகமா?’’
‘‘ஆமாம்! எனக்கல்ல. பாதுஷாவுக்கு. அம்மா… நம் பாதுஷா, எனது பிரவசனம் கேட்க தினமும் ஆலயத்துக்கு விஜயம் செய்வது உங்களுக்குத் தெரியுமல்லவா?’’ ‘‘தெரியுமே. மகான்களான ஸ்ரீதுளசிதாஸர், ஸ்ரீகபீர்தாஸர், ஸ்ரீ ஜெயதேவ ஸ்வாமிகள், பக்த மீரா போன்றோரின் சரிதத்தை நீ மெய்யுருகிக் கூறும்போது, பாதுஷா அதை பக்திப் பெருக்குடன் செவிமடுப்பதாக நீயே என்னிடம் கூறியுள்ளாய். பக்தி மிக்கவர் அல்லவா அவர்!’’
‘‘இன்றைய பிரவசனம், உங்கள் தந்தையாரான ஸ்ரீதுக்காராமைப் பற்றி. அதில்தான் பாதுஷாவுக்குச் சந்தேகம். பாதுஷாவுக்கு ஏற்பட்ட சந்தேகமும், அதனால் அவருக்கு ஏற்பட்ட கோபத்தையும் நினைத்தால் மனம் தடுமாறுகிறது!’’
‘‘என்ன?… சதா சர்வ காலமும் மதுசூதனன் நாமாவையே பெரிதெனக் கொண்ட அந்த மகானின் சரிதத்திலா சந்தேகம்?’’
‘‘ஆமாமம்மா! ‘பூரண சந்திரனாக பூவுலகில் பிரகாசித்த அந்த மகான், தமது தம்பூராவை மீட்டியபடி, பஜனை செய்தவாறே, பூதவுடலுடன் விண்ணகம் சென்றார்!’ என்று நான் கூறியதை பாதுஷா நம்பவில்லை. அந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் யாரேனும் உள்ளனரா என்று கேட்டார். உங்களிடம் ஊர்ஜிதம் செய்து கொண்டு வருவதாகச் சொன்னதும் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார் பாதுஷா!’’
அப்போது வாயிற்புறத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. ‘‘பாவா… பாவா!’’
உடனே வெளியே வந்தார் வாசுதேவ பாவா. அங்கு, ஐந்தே முக்காலடி உயரத்துடன் ஆஜானுபாகுவாக நெற்றியில் சந்தன& குங்குமம் துலங்க, சிரித்த முகத்துடன் நின்றிருந்தார் ஒருவர். அவரைக் கண்டதும் பிரமிப்பும் மரியாதையும் ஏற்பட்டது பாவாவுக்கு.
‘‘தாங்கள் யார்?’’_ வாசுதேவ பாவா.
வந்தவர் கூறினார்: ‘‘குழந்தாய்! நான் உன்னை நன்கு அறிவேன். தினமும் பக்திப் பரவசமான உனது சொற்பொழிவு கேட்டுப் பேரின்பத்தில் திளைக்கும் பக்த கோடிகளுள் அடியேனும் ஒருவன். ஒரு வகையில் நான் உனக்கு உறவினனும் கூட!’’
‘‘என்ன கூறுகிறீர்கள்?’’
‘‘ஆம்… நீ என் பேரன். அடியேன்தான் துக்காராம்!’’
அப்போது உள்ளேயிருந்து வந்தாள் வாசுதேவ பாவாவின் தாயார். வந்துள்ள மனிதரைக் கண்டதும் அனலிடை மெழுகானாள். ‘‘வாருங்கள் அப்பா!’’ உணர்ச்சிப் பெருக்கில் அவள் நா தழுதழுத்தது. அவர்கள் இருவரையும் அன்புடன் நோக்கிய துக்காராம், ‘‘மகளே… பாதுஷாவின் ஐயத்தையும், பேரனின் சஞ்சலத்தையும் போக்குவது இந்தத் தாத்தாவின் கடமையல்லவா? பாவா… இதோ, எனது தம்பூரா. இதை பாதுஷாவிடமும் சபையோரிடமும் காட்டு. பிறகு, ‘துக்காராம் பூத உடலுடன் விண்ணுலகம் சென்றது உண்மையானால், அவரது இந்த தம்பூராவும் அந்தரத்தில் செல்லட்டும்!’ என்று இதை மேல் நோக்கி வீசி எறி. அத்துடன் அவரது சந்தேகமும், உனது சஞ்சலமும் தீரும்!’’ என்று தம்பூராவை பாவாவிடம் கொடுத்துவிட்டு மறைந்தார் ஸ்ரீதுக்காராம்.
மறு நாள் ஆலய மண்டபத்தில் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார் பாதுஷா. சுற்றிலும் பக்தர் கூட்டம். அப்போது, அங்கு வந்த வாசுதேவ பாவாவைக் கண்ட பாதுஷா, ‘‘பாவா, என்ன இது… தம்பூராவும் கையுமாக?’’ என்று கேட்டார்.
உடனே, ‘‘பாதுஷா அவர்களே… இது என் பாட்டனார் ஸ்ரீதுக்காராம் ஸ்வாமிகளது தம்பூரா. இதன் மூலம் உங்கள் சந்தேகத்தைப் போக்குகிறேன்!’’ என்ற பாவா, உரத்த குரலில், ‘‘இறையே… உன் மெய்யடியாரான ஸ்ரீதுக்காராம், பூத உடலுடன் விண்ணுலகம் சென்றது உண்மையானால், அவரது தம்பூராவும் அதே போல் ஆகாயத்தில் செல்லட்டும்!’’ என்று கூறிவிட்டு தம்பூராவை மேல் நோக்கி வீசி எறிந்தார்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, அந்த தம்பூரா ஆகாயத்தில் போய் மறைந்தது. ‘ஜெய ஜெய விட்டல… பாண்டுரங்க விட்டல’ என்ற கோஷத்துடன் ஸ்ரீதுக்காராமின் இனிய குரலிலான அபங்கமும் அங்கிருந்தவர்களின் செவிகளில் அமுதமாகப் பொழிந்தது.
கண்களில் நீர் கசிய, வாசுதேவ பாவாவைக் கையெடுத்து வணங்கினார் பாதுஷா.
‘பாண்டுரங்கா… பண்டரிநாதா. ஹரிஹரி விட்டல’ என்ற கோஷம் அங்கு விண்ணதிர ஒலித்தது! ஆலய மண்டபத்திலும் சுற்றிலும் கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்திக் கூப்பி, பாண்டுரங்க கோஷம் எழுப்பி மெய் சிலிர்த்தார்கள்.
– ஏப்ரல் 2007