பூமி அதிர்ந்தது; விந்தியமலை கண்காண நடுங்கியது. மரங்கள் நிலை தடுமாறி மடமடவென்று சரிந்தன. வனவிலங்குகள் உயிருக்குப் பயந்து ஒண்டிப்பதுங்கின.
வான வீதியில் பறந்து கொண்டிருந்த பறவைகள் செயலிழந்து சிதறி விழந்தன. மேகக் கூட்டங்கள் கலைந்து பஞ்சாகிக் கரைந்தன.
லங்கேசன் ராவணனது குரலொலி இடி முழக்கம் போலத் திசைகளில் புரண்டது. திசைகள் அதன் பயங்கர வேகம் தாங்காது குமுறி முறுமுறுத்தன.
“கால தேவா! அவள் என் உடைமை, அந்த ஜீவனைத் தொடாதே” என்று அமரரை அடக்கியாட்டும் அதிகாரக் குரலில் சொன்னான் ராவணன். ஒரு கணம் பொறுத்தான்; பதில் இல்லை. கோபவெறியேறியது. “உனக்கு அவ்வளவு துணிவா! காலா! உன் திமிரைக் காலால் தேய்ப்பேன்.மரணமே! உன்னையே மாய்ப்பேன்” என்று முழக்கிக்கொண்டு பாய்ந்தான்.
தேவ குரு பிரகஸ்பதியின்மைந்தன் கசனது வளர்ப்புப்புதல்வி, வேதவதி, விந்தியமலைச் சாரலில் வந்து தவம் செய்கிறாள் என்ற செய்திராவணனுக்குலங்கையில் எட்டியது. அவள் புருஷோத்தமன் ஸ்ரீமன் நாராயணனையே பதியாக அடையத் தவம் செய்கிறாள் என்றும் அறிந்தான். அலட்சியமாகச் சிரித்து விட்டு அவளை மறந்து விட முயன்றான். ஆனால் இயலவில்லை. சாரர்கள் வந்து அவள் எழிலை வருணித்த சொற்கள் அவன் செவிகளிலிருந்து நீங்காமல் ரீங்காரம் செய்து கொண்டேயிருந்தன.
புறப்பட்டுவிட்டான் புஷ்பக விமானத்தில்,
அவளை நேரில் கண்டவுடன் லங்கேசனது இதயமே நின்று விடும் போலிருந்தது. கண்டவர் நெஞ்சிலே பயபக்தியை ஊட்டும் பேரழகு அது.
அந்த அபூர்வச் சித்திர சிங்கார வடிவத்தைத் தனக்கே உரிமை யாக்கிக் கொள்ள வேண்டுமென்ற தாகம் வெள்ளமாகப் பெருகியது அவன் நெஞ்சிலே.
அவன் வந்த சமயம் வேதவதி வன மலர்களால் மாலைகட்டி, மண்ணால் செய்த தன் நாயகன் சிலைக்கு அதைச் சூட்ட வந்து கொண்டிருந்தாள். சிலையின் முன் நின்று, “பிரபு! இன்னும் எவ்வளவு காலம்?” என்று கேட்டுவிட்டு மாலையுடன் குனிந்தாள்.
பின்னாலிருந்து, “பொறு! வேதவதி” என்று வந்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
ராவணன் அவளருகையடைந்து,”அந்த மாலையை அணியப் பொருத்தமும், உரிமையும் உள்ள தோள்கள் இதோ இங்கே இருக்கின்றன” என்று தன் மார்பைத் தொட்டுக் காட்டினான்.
பாவம்! வேதவதிக்கு ஒன்றும் புரியவில்லை . மிரள மிரள விழித்தாள்.
ராவணன் காமவெறியுடன் சிரித்துக்கொண்டேசொன்னான்: “வேதவதி! ஏன் தயங்குகிறாய்? நீ மகா பாக்கியவதி, திரிலோகாதிபதி ராவணனே நேரில் வந்திருக்கிறேன், நீ அணிவிக்கும் மாலையை ஏற்க.”
வேதவதியின் கண்கள் எள்ளி நகையாடின. “நாயகனுக்குப் படைத்ததை நாய் தின்ன வந்திருக்கிறதா!” என்று சொல்லி விட்டுத் திரும்பினாள் சிலையிடம்.
அவள் மாலையை அதற்குச் சூட்டி விடாதபடி தடுக்கக் கையை வீசினான் ராவணன். வேதவதி அவனது பதிதக்கை மேலே பட்டுவிடக் கூடாதேயென்று ஒதுங்கினாள். அவளை எட்டிப் பிடிக்க முயன்றான். தப்பிச் செல்ல நகர்ந்தாள்.
ராவணன் சுருதி மாற்றிச் சிரித்தான். “இந்த ராவணனுக்கு எட்டாத இடம் ஏதாவது தெரியுமா உனக்கு!” என்றான் எகத்தாளமாக.
வேதவதி அவனைத் திரும்பிக்கூடப் பாராமல் மறுபடி சிலையை நோக்கிப் பாய்ந்தாள். ஒரேயெட்டில் அவள் சிகையைப் பற்றிவிட்டான் அரக்கன். வேதவதியின் உடல் நடுங்கியது, உள்ளம் பதைத்தது.“பிரபு! தங்களையே பதியாக அடைய ஆசைகொண்டு வளர்த்த உடலை, இவன் நாற்றக் கையால் தீண்டி அசுசிப்படுத்தி விட்டான். இனி இந்தச் சரீரத்துடன் நான் தங்களை அடைய இயலாது. விண்ணாதி பூதங்களிலெல்லாம் நிறைந்திருக்கிறீர்கள். ஏதாவது ஒரு பூதமாக வந்தாவது இந்த உடலை ஏற்றுக் கொள்ளுங்கள். வாருங்கள் வந்து விடுங்கள்” என்று ஓலமிட்டு அழைத்தாள். அடுத்த கணம் அவளைச் சூழ்ந்து பெருந்தீ பொங்கிக் கொண்டு எழுந்தது. அந்தப் பரபரப்பில் ராவணன் சிகையைவிட்டுக் கையை இழுத்துக் கொண்டான். மறுகணமே அவன் தன் சுய திடமடைந்து விட்டான். “அக்னி! உனக்கு அவ்வளவு ஆணவமா!” என்று கையை ஓங்கினான்.
– வேதவதியைச் சூழ்ந்த தீ சட்டென்று தணிந்து அடங்கி மறைந்தது. தரையில் வேதவதியின் கருகிய சடலம் கிடந்தது. ஏமாற்றத்தின் வேகத்தில் ராவணன், “கால தேவா! அவள் என் உடைமை. அந்த ஜீவனைத் தொடாதே” என்று மரணத்திற்கு உத்தரவிட்டான்.
தன் உத்தரவு நிறைவேறவில்லை என்று கண்டவுடன் ராவணனைக் கோபவெறி பற்றிக்கொண்டது.“உனக்கு அவ்வளவு துணிவா! காலா! உன் திமிரைக்காலால் தேய்ப்பேன். மரணத்தையே மாய்ப்பேன்” என்று இடிக் குரலில் முழக்கிக்கொண்டு பாய்ந்தான்.
தன்னை மறந்த கோபாவேசத்தில் பாய்ந்து ஓடினான், கால தேவனைத் துரத்திக்கொண்டு. வழியில் ஓரிடத்தில் காட்டுத் தீமண்டி எரிந்து கொண்டிருந்தது. தீயிலிருந்து தப்ப முயன்று ஓடிக் கொண்டிருந்த விலங்குகளைப் பிடித்துப் பிடித்து அதனுள் எறிந்தான். தீ அவற்றை ஏற்று விழுங்கிய பொழுதில் கையை வீசினான் காலனைப் பிடிக்க, அவன் அருகில் எங்கிருந்தோ வந்தது ஒரு சிரிப்பொலி. ஆம்; ராவணனது வெறி விளையாட்டைக்கண்டு கெக்கெலி கொட்டி நகைத்தான் காலன்.
ராவணனது கோபவெறி உயர்ந்தது. மறுபடி பாய்ந்தான். கங்கை வெள்ளத்திலே தோணியொன்று தத்தளித்துக் கொண் டிருந்தது. அதிலிருந்து மக்கள் தங்கள் உயிரைக் காக்க தெய்வத்தைக் கூவியழைத்துக் கதறிக் கொண்டிருந்தார்கள். ராவணன் பேய்ச் சிரிப்புடன் அணுகித் தோணியை வெள்ளத்தில் கவிழ்த்து விட்டுக் கையை வீசினான், மறுபடி காலனைப் பிடிக்க. மறுபடி அருகில் எங்கிருந்தோ வந்தது காலனது சிரிப்புக் குரல்.
கரையேறிய ராவணன் கோபத்தில் கபோதியாகிக் கைகளைத் திசைகளிலெல்லாம் வீசினான். காலன் அகப்படவில்லை. வான வீதியிலே தடுமாறிச் சென்று கொண்டிருந்த ஒரு பறவை அவன் கையில் சிக்கயது.
அதை இரண்டு கைகளுக்குள்ளும் அடக்கிக் கொண்டு அதன் உயிரைப்பிழிந்து கொண்டேவெற்றிப் பெருமிதத்துடன் கூவினான், “காலா! அகப்பட்டுவிட்டாய்!” என்று.
மறுபடி. அருகிலிருந்து குரல் வந்தது. சிரிப்புக் குரலல்ல; காலனது வேதனைக் குரல். “விட்டு விடு. ராவணா! அந்த அற்ப ஜீவனைவிட்டு விடு. வேண்டாம். உனக்குரிய காலம் வரும்வரை நீ என்னைத் தீண்டவும் முடியாது” என்றான் மரண தேவன்.
ராவணன் சிரித்துக் கொண்டே, “முடியாதா?” என்று கை களை நெருக்கினான்.
“வேண்டாம். விட்டுவிடு. உனக்கு என்னவேண்டும், கேள் பதில் சொல்லுகிறேன். அதைவிட்டு விடு” என்று கெஞ்சினான் நமன்.
ராவணன் யாரிடமும் எதையும் கேட்டுத் தெரிந்து கொள்வது வழக்கமில்லை. “கால தேவா! என் உத்தரவை அசட்டை செய்தாய்! என் உரிமையான ஓர் உயிரைக் கவர்ந்து சென்றாய். உன்னை இன்று அழிப்பேன்” என்று கைகளை உதறினான். பறவையின் கசங்கிய சக்கை தரையில் விழுந்தது.
“போதும் உன் ராட்சசவெறியாட்டம். பேசாமல் லங்கைக்குத் திரும்பிச்சென்று விடு” என்று உபதேசித்தான் காலன்.
“உன்னை அழிக்காமல் இனி நான் இலங்கை புகுவதில்லை” என்று வீரம் பேசிச் சுழன்றான் ராவணன்.
காலன் நிதானமாகப் பேசினான்.”ராவணா! நீவேதசாஸ்திரங் களைப் பயின்றவன். ஆதலால் உண்மையை உணர்ந்திருக்க வேண்டும். உன் கோபாவேசத்தில் அதையெல்லாம் மறந்து பிதற்றுகிறாய். என்னை உன்னால் அழிக்க முடியாது. அழிப்பதற்கு எனக்கொரு வடிவம் வேண்டாமா? நான் மரணம். உடலைவிட்டு உயிர் பிரியும் அந்தத் துடிப்பளவு நேரமே நான். அதனால்தான் என் பெயர் காலன். எதை நீ அழிக்கப் போகிறாய்? உடலிலிருந்து உயிர் பிரியும் இயற்கை இயக்கத்தையா?” என்று கேட்டான்.
“இல்லை. அந்த இயக்கத்தை நிகழ்த்திவைக்கும் சக்தியான உன்னை . காலா! என்னை ஏமாற்ற முடியாது. இனி நீ என் கையிலிருந்து தப்பவும் முடியாது” என்றான் ராவணன்.
மறு கணம் அவன் எதிரில் தகத்தகாயமாக ஒளி வீசிய ஒரு ஜோதிக் கொடி எழுந்து நின்றது. அதனுள்ளிருந்து உருவமெடுத்து வெளி வந்தான் காலதேவன். அவன் கண்களும் முகமும் கருணை மழை பெய்தன.
கால தேவன் இதமான குரலில் பேசினான் “லங்கேசா! என்னைப் பார். நான்தான் அந்தச் சக்தி; மரணதேவன், நீயாக வந்து என்னைத் தீண்டினாலும், அல்லது நானாக உன்னைத் தொட்டா லும் உனக்கு மரணம். உன் உடல் பிணமாகிக் கீழே விழுந்துவிடும். ஒதுங்கிப் போய் விடு” என்றான்.
ராவணனது கண்களும் முகமும் கோபக்கனல் வீசின. “என்னை அழிக்கும் சக்தி நீயா, அல்லது உன்னை அழிக்கும் சக்தி நானா என்பது இதோ முடிவாகிவிடும்” என்று முழங்கி, சிவபெருமான் அவனுக்களித்த வாளை உருவி வீசிக்கொண்டு முன்னேறினான்.
மரண தேவன் லாகவமாக அவனிடமிருந்து விலகி நின்று மறுபடி சொன்னான், “ராவணா! போய்விடு. நான் உன்னைத் தீண்டும் காலம் இன்னும் வரவில்லை” என்று.
ராவணன் ராட்சசச் சிரிப்புடன் மறுபடி பாய்ந்தான். கால தேவனது கண்கள் சிவந்தன. தனது கால தண்டத்தை ஏந்திக் கையை உயர்த்தினான்.
அதே சமயத்தில், “காலா பொறு! ராவணா, நில்!” என்று பதைத்த குரலில் யாரோ கூவியதைக் கேட்டு இருவரும் அந்தத் திசையில் திரும்பினார்கள்.
வேதரிஷி நாரதர் வானவெளியைக் கிழித்துக் கொண்டு வந்து இருவருக்கும் இடையில் நின்றார்.
ராவணன், “விலகிப்போய் விடுங்கள் மகரிஷே’” என்றான் பொறுமையற்று.
நாரதர் அவன் புறம் திரும்பி,”ராவணா! காலதேவன் உன்வர பலங்களை அறியான். அதனாலேயே தனக்கு வந்துள்ள மகத்தான அபாயத்தைப் புரிந்துகொள்ளாமல் உன்னை எதிர்க்கத் துணிகிறான். நீ அவனை அழித்துவிடப் போவது நிச்சயம். அப்புறம்?” என்றார்.
ராவணன், “அப்புறம் என்ன?” என்று தயங்கினான்.
நாரதர், “அதைப்பற்றிச் சிந்தித்து எனக்குப் பதில் சொல்ல வேண்டும். முதலில் உன் திரிலோகாதிப்பத்தியத்தின் ரகசியமே காலனிடம்தானே அடங்கியிருக்கிறது?” என்றார்.
“மகரிஷே! என்னை வார்த்தைகளால் ஏமாற்ற முயன்றால்…” என்று மிரட்டினான் ராவணன்.
“நீதான் என்னை மிரட்டுகிறாய். உலகத்தில் ஜனங்கள் உன்னைக் கண்டு அஞ்சி நடுங்கி நடப்பதற்குக் காரணமே மரண பயம்தானே? நீ அவர்களைக் கூற்றுக்கிரையாக்கி விடுவாய் என்ற அச்சத்தால்தானே அவர்கள் அவ்வாறு ஒடுங்கிக் கிடக்கிறார்கள்? மரண பயம் ஒழிந்துவிட்டால் அப்புறம் அவர்கள் உனக்கு ஏன் அடங்க வேண்டும்? அதன் பின் உனக்கு அவர்கள் மேல் ஆதிபத்தியம் ஏது? இதையெல்லாம் யோசித்தாயா?” என்றார் நாரதர். ராவணன் முகத்தில் தயக்கம் படர்ந்தது. சிவபெருமான் அளித்த வாளை ஏந்திய கை தளர்ந்து இறங்கியது. “ஆம்; மரண பயமின்றேல் மனிதர் என்னைக்கண்டு அஞ்சுவானேன்? எனக்கு மூவுலக ஆட்சியேது? மகரிஷே! நல்ல சமயத்தில் வந்து நான் செய்ய இருந்த பெரிய தவறைத் தடுத்துக் காப்பாற்றினீர்கள்… கால தேவா! பிழைத்தாய். ஓடிப்போ …” என்று கடகட வென்று சிரித்தான். “நாரதரே! மரணமே இன்று மரண பயத்தால் நடுங்கியதை என் கண்ணாரக் கண்டேன்… கூற்றையும் ஆடல் கண்டேன்” என்று மறுபடி சிரித்துக் கொண்டே திரும்பி நடந்தான்.
நாரதர் மெள்ளக் காலன்புறம் திரும்பினார். அவனுடைய ஜோதி முகத்திலே கவலை தேங்கியிருந்தது. தயங்கிய குரலில், “நாரதரே! நீங்கள் சொல்லியதில் தவறில்லையே? என்னை அஞ்ச வேண்டிய சக்தியாகவா மனிதர்கள் கருதுகிறார்கள்? மகரிஷே! சொல்லுங்கள். நான் அத்தகைய பயங்கர சக்தியா?” என்றான்.
நாரதர், “மனிதர் மரணத்தை எண்ணிப் பயந்து நடுங்குவது மெய்தான். ஆனால் அது உன் தவறல்ல காலா! அவர்கள் சிந்தனையில் பாசி பிடித்துவிட்டது” என்றார்.
காலன் புன்னகை புரிந்தான். மறுகணம் அவன் உருவம் தேய்ந்து ஜோதிக்கொடியாக நின்று மறைந்தது. நாரதர், “நாராயண” என்று ஜபித்துக்கொண்டே நடந்தார்.