திடீர் மாப்பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 21, 2021
பார்வையிட்டோர்: 22,737 
 
 

“ஏங்க, நாம் பார்த்த மாப்பிள்ளைகளிலேயே, இதுதான் வாட்ட சாட்டமாகவும், முகம் லட்சணமாகவும், நடையும் உடையும் பார்த்தால், நம் சொந்தக்காரர்களே கண் போட்டுவிடும் அளவுக்கு சூப்பர் மாப்பிள்ளை .” “தொழில் அதிபர் என்ற உங்கள் அந்தஸ்துக்கும், ஆஸ்திக்கும் குடும்ப கௌரவத்துக்கும் ஏற்ற மாப்பிள்ளை இதுதான். நம்ம பொண்ணு ஆனந்தி மீனாவுக்கு அச்சில் வார்த்ததுபோல் சூப்பர் ஜோடி பொருத்தம்.” “பி.ஏ. படித்த நம்ம பொண்ணுக்கு பி.எ.. மாப்பிள்ளை எதிர்பார்த்த நமக்கு, எம்.ஈ. மாப்பிள்ளை கிடைத்தது நம்ம பொண்ணு யோகம்தான். சும்மா சொல்லக் கூடாது. அவள் எப்போதுமே யோகக்காரிதான். புடவைக் கடைக்குப் போனால், எப்படியாவது புது டிசைன் புடவை ஒன்றை தூக்கிவிடுவாள். நகைக் கடைக்குப் போனால் அவளுக்கு நவீன மாடலில் ஸ்டட் தொங்கல் கிடைத்துவிடும்” என்று மாபெரும் மகிழச்சியோடு சொன்னாள் மனைவி மல்லிகா.

“உஸ்…. சத்தம் போட்டுப் பேசாதே. யார் காதிலாவது விழுந்தால் மாப்பிள்ளையைக் கலைத்து விடுவார்கள். வீர நடை போட்டு வந்த, வெற்றி சிங்கம் மாப்பிள்ளையை, வெளியில் போய் நாம் விசாரித்து விடக் கூடாது.”

“இப்படித்தான் ஒரு சமயம் ஒருவர் தன் நண்பனை அழைத்து தன் மகளுக்குப் பார்த்த, மாப்பிள்ளையைப் போய் விசாரிக்க அனுப்பினார். அந்த மாப்பிள்ளையின் அழகையும், அந்தஸ்தையும் பார்த்த நண்பர், அந்த மாப்பிள்ளையைத் தன் தம்பி மகளுக்கு செட்டப் பண்ணிவிட்டு வந்து விட்டார். எனவே விசாரிக்க வேண்டாம்” என்றார் கணவன் ரோய் எலியேசர்.

உடனே மனைவி மல்லிகாவும், “ஆமாங்க, காதோடு காது வைத்த மாதிரி சீக்கிரம் கல்யாணத்தையும் வைத்துவிட வேண்டும். அரைக்கல்யாணம் மாதிரி நடக்கிற நிச்சயதார்த்தம் வைத்து, ஆட்கள் வாய்க்கு அவல் கொடுத்துவிடக்கூடாது. அரவமில்லாமல் இன்று நடந்த இந்தப் பூச்சுடலே போதும். மாப்பிள்ளை பொண்ணு போட்டோ ஒன்று சூப்பர் போஸில் நம் மகன் இன்று எடுத்திருக்கிறான். அதையே பந்தாவாகக் கல்யாணக்கார்டில் போட்டுவிடலாம்” என்று மல்லிகா சொல்லி முடிக்கவும் அண்ணனிட மிருந்து மீண்டும் போன் வந்தது.

மல்லிகா சொன்னாள். “அண்ணா, இனி பொண்ணு கேட்கிறதை நிறுத்திவிடு. அந்த ஆண்டவனே நினைத்தாலும் நீ நினைக்கிறமாதிரி நடக்காது. கோட்டைக்குப் போகிறவள், எப்படி குக்கிராமத்துக்கு வருவாள்? பட்டணத்துக்குப் போகிறவள், எப்படி பட்டிக் காட்டுக்கு வருவாள்? பெங்களுர்க்குப் போகிறவள், எப்படி பேரின்பப்புரத்துக்கு வருவாள்? ஒண்ணு உயர்ந்த படிப்பு இருக்கணும். அல்லது உன்னிடம் பை நிறையப் பணம் இருக்கணும். எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு பெண் கேட்கிறாய். நீ கல்யாணத்துக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி” என்று கோபத்தில் பேசி போனை சட்டென்று வைத்துவிட்டாள் மல்லிகா.

கல்யாணத்தேதி குறித்து கார்டு ரெடி. மல்லிகா மகளைக் கூப்பிட்டு; ஆனந்தி, உன் தோழிகளுக் கெல்லாம் கார்டு அனுப்பி விட்டாயே, உன் மாப்பிள்ளைக்குக் கார்டு அனுப்பியாச்சா? அந்த காலத்தில் உங்கப்பாவுக்கு நான் அனுப்பிய கார்டை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள், எனவே உடனே அனுப்பு” என்றதும், மாப்பிள்ளை வேலை செய்யும் ஆபீஸ் விலாசத்துக்கு ஸ்பீட்போஸ்ட் வேகத்தில் கார்டு பெங்களூருக்குப் பறந்தது.

மாப்பிள்ளை லீவு போட்டு விட்டு சென்னைக்குப் போய் விடவே, அவருடைய டைப்பிஸ்ட் டாரதி கையில் கார்டு கிடைத்தது? பளபளக்கும் பட்டு ரிபன் கழற்றி, முதல் கவர் திறந்து, அடுத்த கவர் திறந்து, மூன்றாவது கவருக்குள் இருந்த திருமண மடலில் முழு உயரத்தில் இருந்த புதுமணத்தம்பதிகளைக் கண்டதும், அதிர்ச்சியடைந்தாள்டைப்பிஸ்ட்டாரதி.

“என்ன! என் கணவருக்குக் கல்யாணமா!! அதுவும் நாளைக்கே கல்யாணமா!! இது நடக்கவிடமாட்டேன்.”

தேள் கொட்டியது போல் துடிதுடித்தாள். டைப்பிஸ்ட் டாரதி. தேம்பி தேம்பி அழுதாள். பெண் ஒட்டகம் ஓடும் வேகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினாள். ஓவென அலறினாள்.

“ஐயா, இந்தக் கார்டில் உள்ளது என் கணவர்; பெயர் மோகனக்குமார். இவருடைய ஆபிஸில் நான் டைப்பிஸ்ட்டாக இருக்கிறேன். என்னிடம் பழகி என்னைத் தொட்டதால் என் சொந்தக்காரர்கள் பிடித்துப், பதவித் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்; இதோ என் கையில் இருப்பது அவருடைய ஆண் குழந்தை. பெயர் குயிக்சன்குமார். (Quickson Kumar). “சென்னைக்கு இன்டர்வியுவுக்குப் போகிறேன்; நான் திரும்பிவர ஒருவாரம் ஆகும்” என்று சொல்லி என் கணவர் மோகன்குமார் சென்றார்.

சென்னைக்குப் போலீஸ் படை, புயல் வேகத்தில் பறந்தது? வலை போட்டு அரித்து, கடைசியில் ஆண் அலங்கார பார்பர் ஷாப்பில் வைத்துப்பிடிப்பட்டார் மோகனக்குமார். உடனே பணப்பாக்கத்தில் உள்ள பொண்ணு வீட்டுக்கு போலிசிடமிருந்து சுனாமி வேகத்தில் போன் பறந்தது.

“ஹலோ, போலீஸ் ஸ்டேஷனலிருந்து பேசுகிறோம். புதுமாப்பிள்ளை மோகனக்குமார் எற்கனவே திருமணமானவர். அவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிட்டோம். நீங்கள் கொடுத்த 5 லட்சம் ரொக்கப் பணத்தையும் மீட்டு கோர்ட்டில் ஒப்படைத்து விட்டோம். உடனே திருமணத்தை நிறுத்துங்கள்” என்று சொல்லிப் போனைக் கீழே வைத்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

பொண்ணுவீட்டில் ஒலிப்பெருக்கிப் பாடல் ஒரு நொடியில் நின்றது; பெண்ணை வாழ்த்திய பாடல் வீடு, பெண் பிள்ளை பெற்ற வீடு போல் அமைதியாயிற்று. அடுப்புத்தீ அணைந்தது. ஆனந்த ஆரவாரம் அடங்கியது. கல்யாணக் கலகலப்பு வாலிபர் கூட்டம், கழுகைக்கண்டு ஓடிய கோழிக்குஞ்சுகள் போல் ஓடி ஒளிந்தது. தெருவிளக்கு திருதிரு என முழித்தது. காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை . மைண்டும் ஓடவில்லை மல்லிகாவுக்கு.

விடிந்தால் திருமணம். பிரியாணிக்கு ஐம்பது ஆடு வெட்டி மட்டன் ரெடி. காய்கறி நறுக்கி விருந்துக்கு அத்தனையும் ரெடி. ஆனால் மாப்பிள்ளை மட்டும் இல்லை. மல்லிகார் முகத்தில் ஈ ஆட வில்லை . இமையமலைப் பெருமையிலிருந்து இறங்கி வந்தாள் மல்லிகா.

கூடப்பிறந்த அண்ணனை இப்போது தான் நினைத்தாள். போனைத் தொட கைகள் பதறின. நா கூசியது? சத்தம் சுதி குறைந்தது. இரவு மணி எட்டு.

“அண்ணா , நீ தான் என் பொண்ணுக்குத் தாய்மாமன், பைபிள் எர்மோன் மலை ஆசீர்வாதம் இன்றுதான் ஞாபகத்துக்கு வந்தது. உடனே புறப்பட்டு வா. நேரில் பேசிக் கொள்வோம். மறவாமல் மருமகன் மோரிசனையும் கூட்டிக் கொண்டு வந்துவிடு. டேக்சிக்கு நான் காசு கொடுத்துவிடுவேன்” என்றாள் மல்லிகா.

அதற்கு அண்ண ன், என் “மகன் மோரிசன் நேற்று முழுவதும் சாப்பிடாமல்” அத்தை வளர்த்த ஆனந்தக் கிளியை ஆகாயத்துக் கழுகு தூக்குதே” என்று புலம்பிக் கொண்டே குற்றாலம் போய்விட்டான் என்றார் அண்ண ன்.

அதற்கு மல்லிகா, ப்ளிஸ் அண்ணா , எப்படியாவது எங்கள் மானத்தை நீ தான் காப்பாற்றணும். எப்படியாவது நாளை காலை 8 மணிக்குள் வந்துவிடு என்றாள் மல்லிகா.

உடனே அண்ண ன் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, தேடிக் கடைசியில் குற்றாலம் தேனருவில் மகன் மோரிசனைக் கண்டுபிடித்து ராக்கெட் வேகத்தில் இருவரும் சென்னை வந்து சேரக் காலை 9 மணி ஆகிவிட்டது.

மருமகன் மோரிசனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. ஒருவர் தன் கோட்செட்டைக் கழற்றிக்கொடுத்தார். திடீர் மாப்பிள்ளை ரெடி. பால்பொங்கும் வேகத்தில் பதிவுத் திருமணம் நடத்தி பாப்பம்மாள் கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தனர் புதுமணத்தம்பதிகள். புதுமாப்பிள்ளை தன் அத்தையைப் பார்த்து, “அத்தை, இனி ஆனந்தி எனக்குதானே” என்று கேட்கவும் அருகிலுள்ள ஆலயக் கோபுரக் கடிகாரம் அழகானவசனம் சொல்லிற்று.

“தேவன் இணைத்ததைமனுஷன்பிரிக்காதிருக்க கடவன்.” (மத்தேயு 19:6)

உடனே பேரின்பபுரம் வாலிபர் சங்கம்பாடிற்று.

“மன்றல் செய் தேவி மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறைமேதாவி
அன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி
அவளை இல்லாதவன் ஒரு பாவி – நல்ல மண”

(பெயர்கள் அனைத்தும் கற்பனையே)

– சாம் குருபாதம் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *