திடீர் கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 22,907 
 

“என்னடா, பாபு. இப்பதாண்டா உனக்கு 23. அதற்குள் கலியாணக் கார்டு கொண்டு வந்து விட்டாயே” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் நண்பன் நவீன்.

“சே! சே! இது எங்க அண்ண ன் கலியாணக் கார்டுடா. என் கலியாணக் கார்டு இப்படியாடா இருக்கும். என் கலியாணக் கார்டு பார்த்தாலே, இது கோடீஸ்வர மாப்பிள்ளை என்று சொல்லுமளவுக்கு பட்டு ரிபன் கட்டி, பந்தாவாக அனுப்புவேன்.”

“இது மாதிரி பட்டிக்காட்டு கல்யாண மண்டபத்தில் வைத்து நடப்பதெல்லாம் ஒரு கல்யாணமாடா? புளியங்கொம்பு மாதிரி ஒரு புதுக் கோடீஸ்வர மாமனாரைப் பிடித்து, புதுமைப் புதுமையாக நடத்த வைப்பேன்.”

“ஆம், என் கல்யாணம், சென்னைப் பட்டணத்தில், செந்தாமரை செவன் ஸ்டார் (7 நட்சத்திரம்) ஹோட்டல் உச்சியில், 100வது மாடியில், சதா சுற்றிக் கொண்டிருக்கும் சுழலும் ஹோட்டலில் வைத்து, ஜே! ஜே! என்று நடக்கும்.” “சொந்தம் பந்தம் என்று பிட் நோட்டீஸ் கொடுப்பது போல் கொடுக்காமல் மாப்பிள்ளை நண்பர்கள், பொண்ணு தோழிகள் சுமார் 100 பேருக்கு ராஜ விருந்து செம சாப்பாடு போடுவேன், மன்னிக்கவும், மாமனாரைப் போடவைப்பேன்.”

“அவ்வளவு உயரத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டே, ஹோட்டல் சுற்ற, சாப்பாடு மேஜை சுற்ற, சேர்ந்து நாமும் சுற்ற, எட்டுதிக்கும் பார்த்து சென்னை முழு பட்டணத்தையும் பார்த்துப் பரவசமடையும் போது, இது பாபு இல்லத்திருமணமா, அல்லது ஒரு பட்டத்து இளவரசன் திருமணமா என்று எல்லோரும் மூக்கில் கைவைக்கும் அளவுக்கு அசத்தல் கல்யாணமாக இருக்கும்டா.”

“அகில உலகையும் சுற்றி, ஓர் அழகியைக் கண்டு பிடித்து, ஐந்தங்கல உயரக் கழுத்தில் தான் தாலி கட்டுவேன். டீனேஜ் பொண்ணாகப் பார்த்து 19 வயது பெண்ணைத்தான் கட்டுவேன்.”

“பொண்ணு என்னை மாதிரி குண்டா இல்லாமல், ஸ்லிம் ஆக குறைந்தது ஐந்தரை அடி உயரம், எலுமிச்சம்பழ நிறம், சுண்டினா இரத்தம் வரும் ரோஸ் கன்னம், செவ்வாழைப் பழம்போல் செவத்த பொண்ணு, கொடி இடை, மிடி உடை, பிடி நடையில் வரும் மணப்பெண்ணைப் பார்க்கிறவர்கள், தங்கள் வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் பார்க்குமளவுக்கு ஆ! என ஆச்சரியப்படும் அளவுக்கு அசத்தல் திருமணமாக இருக்கும்டா.”

“இன்னும் நிறைய மேள, தாளம், மத்தாப்பு மற்றும் வானவெடி வேடிக்கை நிறைய இருக்கு. பிறகு சொல்லுகிறேன். எப்படியாவது எங்கண்ணன் கல்யாணத்துக்கு வந்துவிடு. மறவாமல் மற்ற நண்பர்களையும் அழைத்து வந்துவிடு” என்றுசொல்லிவிட்டு பால் பொங்கும் வேகத்தில் பறந்தான் பாபு.

மண நாள் வந்தது. அது ஓர் குக்கிராமம். மாப்பிள்ளையின் தகப்பனார் தத்மோர் ஊர் பஞ்சாயத்து பிரஸிடெண்ட்; மணப் பெண்ணின் தகப்பன் மங்களாபுரி எம்.எல்.ஏ.

மாப்பிள்ளை 8 பாஸ். பொன்னு 10 பெயில். பொண்ணு கருப்பு நிறம். கனத்த உடம்பு. குழிவிழுந்த கண். நகைகளை விழுங்கிய கழுத்து. உயரம் கீல் செருப்பு போட்டும் 4 3/4 அடிதான். பொண்ணு, முக்கோண இடை. மூச்சுவிடும் நடை. மூன்று கிலோ உடை, 80 கிலோ எடை, முழுநீள ஜடை. வயதோ 27.

ஆலயத்தில் முதல் மணி அடித்தாகிவிட்டது. மாப்பிள்ளையைக் காணோம். ஓடினர். தேடினர். கிடைக்காமல் வாடினர். “இளையமகன் பாபு எங்கிருந்தாலும் உடனே வரவும்” என்று ஒலிப்பெருக்கி கத்தியது. பாபு ஓடோடி வந்தார்.

தகப்பனார் சொன்னார். “மகனே பாபு, நீ தான் இப்போ மாப்பிள்ளை, அன்பு மகனே, அண்ணன் ஓடி ஒளிந்து கொண்டான். நீ தான் என் மானத்தைக் காப்பாற்றணும், நம் குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்றணும்” என்று பாபுவின் கைகள் இரண்டையும் அள்ளிக் கெஞ்சினார் தகப்பனார்.

“அதெப்படி அப்பா! நான் B.A., பொண்ணு 10 பெயில். இரகசியமாய் இங்கிலிஷில் நான் லெட்டர் எழுதினால் அவளுக்குப் படிக்கத் தெரியாது. உலக்கை மாதிரி பொண்ணு இருந்தாலும் பரவாயில்லை; இந்த உரலுக்குப் போய் தாலி கெட்டச் சொல்லுகிறீர்களே! இது நியாயமா என்றான் பாபு.”

“அப்படி சொல்லாதே மகனே. இப்போ மானம் தான் பெரியது. 300 பவுன் நகை, 3 லட்சம் ரொக்கம். மோரீஸ் கார் வாங்கி விட்டேன். மகனே சூட் கோட் போட்டு மாலை போட்டுமாப்பிள்ளை காரில் ஏறு” என்றுசொல்லவும் பாபு திடீர் மாப்பிள்ளை ஆனான்.

மாப்பிள்ளை கார் முன் செல்ல, மணப்பெண் கார் பின் செல்ல, இரண்டாம் மணி அடித்து ஆலயத்தில் திருமணம் நடந்தது.

இந்த தீடீர் கல்யாணத்தில் பாபுவைத் திடீர் மணக்கோலத்தில் பார்த்த நண்பர்கள் வாடி வதங்கி வாயடைத்துப் போனார்கள். “மனக்கோட்டை கட்டி பெருமையாய்ப் பேசின பாபுவுக்கு ஒரு கல்யாணக் கார்டு கூட அடிக்காமல் போய் விட்டதே” என்றான் ஒரு நண்பன்.

பாபு சொன்னான், “எவ்வளவு பெருமையாய் பந்தாவாகத் திருமணம் முடிக்க நினைத்த எனக்கு இப்படி திடீர் கல்யாணம் நடந்து விட்டதே என்று புலம்பினான். பெருமையாய்ப் பேசின என் தலையில் பேரிடி விழுந்தாற்போலாயிற்றே. ஜோடிப் பொருத்தம் 81க்கு ஏங்கிய எனக்கு 88 ஆக முடிந்து விட்டதே. பெருமை பீத்தக் கலயம் என்று என் பாட்டி சொல்வது எத்தனை உண்மையாயிற்று” என்று வருந்தவும், அருகிலுள்ள ஆலயக் கோபுரக் கடிகாரம் மதியம் ஒரு மணி அடித்து, பைபிள் வசனம் ஒன்றும் சொல்லிற்று.

“தேவன் பெருமையுள்ளவர்களுக்குத்
எதிர்த்து நிற்கிறார்.
தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கோ
கிருபையளிக்கிறார்” (யாக்கோபு 4 : 6)

உடனே மாப்பிள்ளை பாபுவின் கையிலுள்ள மொபைல் போன் ஒரு பாடல் பாடிற்று.

“என் இஷ்டப்படி நடந்தேன்
ஐயோ முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை
இப்பதோ நடத்துமேன்.
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன்
அன்பாக மன்னியும்.”

(பெயர்கள் யாவும் கற்பனையே)

– சாம் குருபாதம் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *