தசக்ரீவன், ராவணன் ஆன கதை!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,623 
 
 

தசக்ரீவன்இலங்கை மன்னனாக இருந்து ராஜ போகம் உட்பட அனைத்தையும் இழந்தவன் சுமாலி, அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒரு முறை பாதாளத்தில் பதுங்கி வாழ்ந்தான். ‘அரக்க வீரன் ஒருவனை உருவாக்கி, அவன் மூலம் தேவர்களை வீழ்த்தி, மீண்டும் இலங்கையை ஆட்சி புரிய வேண் டும்!’ என்ற ஆசை அவன் மனத்தில் தோன்றியது. வானத்தில் பொன் விமானத்தில் குபேரன் உலவி யதைப் பார்த்த சுமாலிக்கு, அவனைப் போல் தன் புதல்வி கைகஸி மூலம் தனக்கு ஒரு பேரன் பிறக்க வாய்ப்பு உண்டு என்று ஆறுதலடைந்தான். எனவே, மகளிடம் சென்றான்.

‘‘மகளே! அரக்கர் குலம் தழைக்க நீ, மகாதபஸ்வி யான விச்ரவசு முனிவரை அணுகி, அவரைத் திரு மணம் செய்து குழந்தை ஒன்றைப் பெற வேண்டும். அவர் கடுமையான தவசாலியானதால் இந்த உல கில் அவரால் ஆகாதது எதுவும் இல்லை. என் ஆசையை நிறைவேற்று!’’ என்று கூறினான்.

அதற்கு ஒப்புக் கொண்டாள் கைகஸி. விரை விலேயே விச்ரவசுவின் ஆசிரமத்துக்குச் சென்றவள் அவரை வணங்கி, ‘‘மாமுனிவரே, உங்களை காந்தர்வ மணம் புரியவும், பிள்ளை பெறவும் தீர்மானித்து விட்டேன். தயை புரிந்து எனது வேண்டுகோளை ஏற்க வேண்டும் சுவாமி!’’ என்று விநயமாகக் கேட்டாள் கைகஸி. கைகஸியின் இளமை மற்றும் எழிலில் மனதைப் பறி கொடுத்த விச்ரவசு, ‘‘அந்தி நேரம் திருமணத்துக்கு உரியதல்ல. ஆகவே, இரவில் மணம் புரிந்து உனது ஆசையை நிறைவேற்றுகிறேன். அதுவரை பொறுமையாக இரு கைகஸி!’’ என்றார். ‘முனிவர் மனம் மாறி விட்டால், தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் அவரின் பழிச் சொற்களுக்கு ஆளாக நேரிடுமே!’ என்று தவித்தாள் கைகஸி. எனவே, ‘‘நீங்கள் உடனே என்னை மணம் புரியாவிடில் உயிரை மாய்த்துக் கொள்வேன்!’’ என்று முனிவரைக் கட்டாயப்படுத்தினாள்.

‘‘இது அரக்கர்களும் பேய், பிசாசுகளும் நடமாடும் அந்தி நேரம். இப்போது உன்னை மணம் புரிந்து உறவாடி னால், குழந்தை அரக்க குணம், கோர வடிவத்துடன் பிறக் கும். அதனால் பொறுமையாக இரு!’’ என்றார் முனிவர்.

கைகஸி அதையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல் அடம் பிடித்தாள். வேறு வழி தெரியாததால் விச்ரவசு அவளின் வேண்டுகோளுக்கு உடன்பட்டார். அதன் பயனாக, பத்து தலைகள், கோரமான பற்கள், இருபது கரங்கள் கொண்ட கருமை நிறக் குழந்தை ஒன்று பிறந்தது. அதைப் பார்த்த கைகஸி தனது தவறை உணர்ந்தாள். ‘‘அவசரப்பட்டு விட் டேன். ஏதாவது செய்து இவனை அழகான குழந்தையாக மாற்றுங்கள்!’’ என்று அழுது புலம்பினாள்.

‘‘தவறை நீ உணர்ந்தால் மட்டும் போதாது. அதன் பலனை அனுபவிக்கவும் வேண்டும். எனவே, அதன் கடுமையை வேண்டுமானால் சற்றுக் குறைக்கிறேன்!’’ என்று கூறிய விச்ரவசு, குழந்தையை அழகான ஆண் பிள்ளையாக மாற்றினார். பத்துத் தலைகள் கொண்ட தால், ‘தசக்ரீவன்’ என்றும் பத்து கழுத்துகளைக் கொண்டதால், ‘தசகண்டன்’ என்றும் அந்தக் குழந்தை அழைக்கப்பட்டான். விச்ரவசுவைக் காண ஒரு முறை குபேரன் வந்தபோது தசக்ரீவனை அழைத்த சுமாலி, ‘‘இதோ இருக்கும் குபேரன் உன் அண்ணன். கடுமையாக தவம் செய்து, பிரம்மாவிடமிருந்து பல வரங்கள் பெற்றுள் ளான். அது போல நீயும் கடுமையாக தவம் புரிந்து புகழ் அடையலாமே!’’ என்றான்.

எனவே தசக்ரீவன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகிய மூவரும் தவம் செய்யப் புறப்பட்டனர். இவர்களது கடுமையான தவத்தால் மகிழ்ந்த பிரம்மா அவர்கள் முன் காட்சியளித்து, ‘‘உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று வினவினார்.

‘‘தேவர்கள், கந்தர்வர்கள், பெற்றோர் போன்ற எவராலும் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது!’’ என்று வரம் கேட்டான் தசக்ரீவன். மானிடர்களைத் துச்சமாகக் கருதிய அவன், அவர்களால் தனக்கு மரணம் ஏற்படும் என்று கருதவில்லை. உறக்க நிலையிலிருந்த கும்பகர்ணன், ‘‘சதா தூக்க நிலையில் இருக்க வேண்டும்!’’ என்று வரம் கேட்டான். விபீஷணனோ, ‘‘நான் என்றென்றும் அறப் பாதையில் செல்ல வேண்டும்!’’ என்று கேட்டான்.

‘என்னை எவரும் வெற்றி கொள்ள முடியாது!’ என்ற கர்வம் இருந்தது தசக்ரீவனுக்கு. இதன் வெளிப்பாடாக குபேரனிடம் இருந்து பொன் விமானத்தை அபகரித்து அதில் ஆர்ப்பாட்டமாக உலவி வந்தான். ஒரு முறை அவ்வாறு உலாவும்போது நந்தி தேவர் எதிர்ப் பட்டார். ‘‘இது கயிலாய மலை. இங்கே இப்படி ஆர்ப்பாட்டமாகப் போகாதே. மலையடிவாரத்தின் வழியாகச் செல்!’’ என்று தசக்ரீவனை நிறுத்தி எச்சரிக்கை செய்தார். ‘‘யாரடா நீ என்னை வழி மறித்து வேறு பாதையில் செல்ல உத்தரவிட? கயிலாய மலையாக இருந்தால் என்ன? அங்கு யார் வசித்தால் எனக்கென்ன? யாராக இருந்தாலும் என்னை சண்டையிட்டு வெல்லட்டும்!’’ என்று கோபமாக பதிலுரைத்தான் தசக்ரீவன்.

‘‘கயிலையம்பதியை விரோதித்துக் கொள்ளாதே. புத்தி கெட்டு கர்வத்தால் ஏதேதோ உளறுகிறாய். மரணம் உனக்குக் கிட்டாவிட்டாலும் மரண வேதனையை விரைவில் அனுபவிக்கப் போகிறாய் பார்!’’ என்று நந்தி தேவர் மீண்டும் எச்சரித்தார்.

அதற்கு தசக்ரீவன், ‘‘இதோ பார்! இந்தக் கயிலையங் கிரியை அப்படியே எனது இருபது கரங்களாலும் தூக்கிக் கடலில் எறிகிறேன் பார்!’’ என்று அதைத் தூக்கும் முயற்சியில் ஈடுபட்டான். சிவபெருமான் சிரித்தபடி தன் கால் கட்டை விரலால் ஓர் அழுத்து அழுத்தினார். தசக்ரீவன் மீது மலை அமுக்கியது. அவனால் எழுந்திருக்க முடியவில்லை. கதறி அழுதான். அவனது அழுகையால் உலகமே நடுங்கியது. அப்போது நாரதர் அங்கு வந்தார். ‘‘முட்டாளே! சர்வேஸ்வரனான கயி லாயபதியை பகைத்துக் கொண்டு வாழ முடியும் என்று நினைக்கிறாயே! அது முடியுமா? உள்ளம் உருக அவரை தியானம் செய். கருணா சாகரமான ஈஸ்வரன் உன்னைக் கட்டாயம் காப்பாற்றுவார்!’’ என்று உபதேசித்தார்.

உடனே, ஈஸ்வரனுக்குப் பிடித்த சாம வேதத்தைப் பாடத் துவங்கினான் தசக்ரீவன். அதனால் மகிழ்ந்த ஈஸ்வரன் அவன் முன் தோன்றி, ‘‘தசக்ரீவா… உனது கானத்தால் மகிழ்ந்தோம். உன் பிழையை மன்னித்தோம். உனது ராவிதத்தினால் அதாவது அழு குரலினால் மூவுலகமும் அச்சத்தில் நடுங்கியதால் உன்னை இனி ‘ராவணன்’ என்றே அழைப்போம். அதுவே நிலைக்கும்!’’ என்றார். அத்துடன் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றையும் அன்புடன் அளித்தார்.

அன்று முதல் ராவணன் தலைசிறந்த சிவபக்தனாகத் திகழ்ந்தான். இவ்வாறு இலங்கேஸ்வரனாகத் திகழ்ந்த முதல் அரக்கர்குல மன்னன் அவன்தான்!

– கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி-4 – செப்டம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *