சிசுபால வதம் (மஹாபாரதம்)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 17, 2022
பார்வையிட்டோர்: 15,173 
 

பாகம் இரண்டு | பாகம் மூன்று | பாகம் நான்கு

இந்திரபிரஸ்த பிரயாணம்.

மந்திராலோசனை சபையில் ஸ்ரீகிருஷ்ணர், அண்ணன் பல ராமரிடமும், உத்தவரிடமும் அவர்களுடைய கருத்துக்களைகத் தெரியப்படுத்தும் படிக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க பலராமர் தன்னுடைய கருத்துக்களைக் கூறலானார்.

“சிசுபாலனை வதம் செய்யும் வெற்றிப் பயணம் தான் முக்கியம். இப்போது ராஜசுய யாகத்திற்காக யக்ஞ பயணம் முக்கியமல்ல.சிசுபாலன் வதம் செய்வதற்கு உசிதமான காலம். ஏனென்றால் உலகத்தினருக்குத் துன்பமும் துயரமும் விளைவிப்பவன் மட்டுமல்ல, உனக்கும் பகைவனாவான். முன்னொரு காலத்தில் அவன் இப்போது உன் மனைவியாக இருக்கும் ருக்மிணியை விவாகம் செய்ய விரும்பினான். அதற்கு அவள் உடன்படவில்லை. அதனால் வெகு கோபமடைந்த சிசுபாலன் உனக்கு எப்போதுமே துன்பம் விளைவிக்கவே விழைகிறான்.

இதுபோல சிசுபாலன் ஒருமுறை இருமுறையல்ல பலமுறைகள் உனக்கு அபவாதம் செய்வதே கருமமாக இருக்கிறான். அவனை எப்பொழுதும் போல் மன்னித்து விட்டு விடுவது ஏற்புடையது இல்லை. முதன்மையான கார்யம் அவனைக் கொல்வது தான். இது தான் இப்போது மிக முக்கியம்.

யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்யட்டும் அல்லது செய்யாமல் போகட்டும். இப்போது நமக்கு இது முக்கியமில்லை. நாம் இது சமயம் நமது சத்ருவாகிய சேதிநாட்டு அரசன் சிசுபாலனை வதம் செய்து முடிப்போம்.அவனைக் கொல்லுவதே நமது முதன்மையான கார்யம்” என்றுமிகவும் திடமாக, தீர்மானமாக பலராமர் தனது அபிப்பிராயத்தைஉறுதியாக த் தெரியப்படுத்தினார்.

பலராமனது வீரமான, தீராக்கோபத்துடன் பேசிய பேச்சுக்கள் மந்நிர சபையின் பல திக்குக்களிலும் எதிரொலித்தது. மந்திர சபையின் சுவர்களில் பல பெண் தெய்வங்களின் சித்திரப் படங்கள் காணப்பட்டன. அந்த படங்களில் இருந்த பெண் தெய்வங்கள் கூட பலராமரின் அபிப்பிராயங்களை ஆமோதிப்பது போலத் தோன்றியது

பலராமருடையக் கருத்துக்களை கேட்டதற்கு பிறகு உத்தவர் தனது கருத்துக்களைக் கூறலானார். “நமது உற்சாகத்தினால் மட்டும் இந்தக் கார்யத்தைச் சித்தி பெறச் செய்ய இயலாது. இப்போது பொறுமை தான் நமக்கு மிகவும் முக்கியம். அவசரம் அவசரமாக கார்யங்களைச் செய்தல் கூடாது. மிகவும் அல்பமான விஷயத்திற்காக வெகு பிரயாசம் செய்வது உசிதமன்று. மிகச் சிறிய ஒரு எலியைக் கொல்வதற்காக ஒரு பெரிய மலையையே உடைத்து தோண்டுவது போலாகும்.

மேலும் சிசுபாலனுடைய சமீபம் ராஜசமூகத்தைச் சார்ந்த பலர் இருக்கின்றனர்.

துரியோதனனுடையக் கூட்டாளியும் ஆவான்.மிகந்த தோள் வலிமையுடைய மன்னர்களும் அவனைச் சுற்றி நண்பர்களாக இருக்கின்றனர். அதனால் சிசுபாலனை வெற்றி பெறுவதும் சுலபமானது அல்ல.

அதனால் இப்போது நாம் யுதிஷ்டிரருடைய யாகத்திற்குத் தான் செல்ல வேண்டும். நாம் இந்நிரப்பிரஸ்தம் செல்லவில்லை என்றால் பந்துக்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம். நாம் இப்போது யாகத்திற்குச் சென்றோம் என்றால் அங்கு வைத்து சிசுபாலனைக் கொல்லுவதற்கு ஏதுவாக இருக்கும். யாகசாலையில் வைத்துதான் அவன் கொல்லப்பட வேண்டும். இதனை இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் முன்னொரு காவத்தில் ஸ்ரீகிருஷ்ணனாகிய நீங்கள் சிசுபாலனின் தாய்க்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்கள்.

சிசுபாலனின் நூறு தப்புகளை மன்னிப்பேன் அதன்பிறகு தான் தண்டிப்பேன். என்று பிரதிக்ஷனை செய்துள்ளீர்கள். அதனால் நூறாவது தப்பு செய்வதற்கு முன்னர் கொல்லுவது என்பது உங்களுடைய சத்திய வாக்குக்கு பங்கம் விளைவிக்கும் எனவே இப்போது யாக யாத்திரை செய்வதே உசிதமாகும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்று இரண்டு வேலைகளும் நன்றாக முடியும்.” என்று உத்தவர் தனது கருத்தைக் கூறினார்.

உத்தவரின் கருத்துக்கள் மிக சிறப்பாக இருந்ததினால் ஸ்ரீகிருஷ்ணர் மிகவும் சந்தோஷமடைந்தார். அதனால் ஆனந்தமடைந்த ஸ்ரீகிருக்ஷ்ணர் யக்ஞ யாத்திரை செய்வதற்கு தீர்மானித்தார். அதனால் யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தில் பங்கெடுக்க இந்திரபிரஸ்தம் செல்வதற்கு வேண்டிய வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்.

இவ்வாறாக ஸ்ரீகிருஷ்ணருடைய இந்திரபிரஸ்த பிரயாணம் துவாரகா நகர மக்களுடன் ஆரம்பித்தது.

இத்துடன் சிசுபாலவதம் மூன்றாவது பாகம் முடிவுற்றது.

நான்காவது பாகம் தொடரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *