குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,425 
 
 

பரந்தாமனின் பெருமிதம்

‘உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் புராணங்களில் உண்டு. அவற்றில் ஒன்று இந்தக் கர்ணபரம்பரைக் கதை…

‘பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பினாலும், அவர்களுக்கு தேசத்தை திருப்பித் தர மாட்டோம்’ என்றான் துரியோதனன். இதையடுத்து, பாண்டவர்களின் சார்பில் தூதராகச் சென்று, துரியோதனனைச் சந்திக்க முடிவு செய்தார் கிருஷ்ணர்.

பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன் மற்றும் துரியோதனன் உள்ளிட்டோர், கிருஷ்ணரைத் தங்களது மாளிகையில் தங்க வைத்து உபசரிக்க விரும்பினர். எனவே, தங்களது மாளிகைகளை அழகுபடுத்தினர். ஊரெங்கும் தோரணங்கள் கட்டி, கிருஷ்ணரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்தனர். அஸ்தினாபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ஆனால், இதுகுறித்த எந்த தகவலும் விதுரனுக்குத் தெரியாது.

யார் இந்த விதுரன்?

வியாசரின் மைந்தர்; திருதராஷ்டிரனின் சகோதரன். ஞானம் படைத்தவர். தர்ம தேவதையின் அம்சமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக கிருஷ்ணரிடம் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டவர்.

ஆனால், ‘அரசாங்க விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு விதுரன் ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர் அல்ல!’ என்று துரியோதனன் கருதினான் போலும். எனவேதான் கிருஷ்ணரின் வருகையைப் பற்றி அவரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை!

அஸ்தினாபுரத்துக்கு வந்து சேர்ந்தார் கிருஷ்ணர். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் பீஷ்மர். மிக்க அலங்காரத்துடன் திகழ்ந்த மாளிகையைக் கண்ட கிருஷ்ணர், ‘இது, யார் மாளிகை?’ என்று கேட்டார்.

”எனது மாளிகைதான். தங்களது வருகையையட்டி அலங்கரித்துள்ளேன்!” என்றார் பீஷ்மர்.

இதைக் கேட்ட கிருஷ்ணர் எதுவும் பேசாமால், அங்கிருந்து மெள்ள நகர்ந்தார். வரவேற்க வந்தவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

அடுத்து ஒரு மாளிகை. இது, பீஷ்மரது மாளிகையை விட பிரமாண்டமாக இருந்தது.

”இந்த மாளிகை யாருக்கு?”- மீண்டும் வினா எழுப்பினார் கிருஷ்ணர்.

உடனே துரோணர், ”இது என்னுடையது கிருஷ்ணா! இங்கே எல்லா வசதிகளும் உள்ளன! தாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்துள்ளேன்” என்றார்.

அதனுள்ளும் செல்லாமல் நடையைத் தொடர்ந்தார் கிருஷ்ணர். அடுத்து தென்பட்டது துச்சாதனனின் மாளிகை. ”என் மாளிகையை தங்களுக்காக உல்லாசபுரியாகவே மாற்றியுள்ளேன்!” என்றான் துச்சாதனன்.

அவன் சொன்னதை கிருஷ்ணர் தன் காதிலேயே வாங்கவில்லை. மாளிகைகளின் ஆடம்பரமும் ‘என்னுடையது… என் மாளிகை…’ என்ற அவர்களது வார்த்தைகளில் தொனித்த கர்வமும் கிருஷ்ணருக்கு அறவே பிடிக்கவில்லை.

அங்கிருந்தும் அகன்றவர், தான் செல்லும் வழியில் சிறிய குடிசை ஒன்றைக் கண்டார்.

”அட! இந்தக் குடிசை அழகாக இருக்கிறதே… இதன் உரிமையாளர் யார்?” என்று கேட்டார்.

அதற்குள் அரவம் கேட்டு வெளியில் வந்த விதுரன், கிருஷ்ணரைக் கண்டதும் முகம் மலர்ந்தார். ”இது உனது வீடு கிருஷ்ணா! உனது அருளால் அடியேன் இங்கு வசிக்கிறேன். இந்த இல்லத்தில் உன் திருப்பாதங்கள் பட, நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தயவுசெய்து உள்ளே வர வேண்டும்!” என்று கூறி, கிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

கிருஷ்ணருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. மிகுந்த உற்சாகத்துடன் அந்தக் குடிசைக்குள் நுழைந்தார். பரமாத்மா அமர்வதற்கு அங்கு தகுந்த ஆசனம் கூட இல்லை. தர்ப்பையால் ஆன பாயைத் தரையில் விரித்து, அதில் அமரும்படி வேண்டினார் விதுரன். அடுத்த கணம், எந்தத் தயக்கமும் இல்லாமல் அதில் ஆனந்தமாக அமர்ந்தார் கிருஷ்ணர்.

பிறகு, ”என்ன விதுரா… உங்களது வீடு தேடி வந்திருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது. சாப்பிட எதுவும் தர மாட்டீர்களா?” என்று உரிமையுடன் கேட்டார் கிருஷ்ணர்.

”காலையில் கஞ்சி மட்டுமே குடிப்பது அடியேன் வழக்கம். இன்றைக்கும் அவல் கஞ்சி உள்ளது. ஆனால், அதை எப்படித் தங்களுக்கு…” – தயங்கினார் விதுரன்.

ஆனால், கிருஷ்ணர் குதூகலம் அடைந்தார்.

”அடடா! அவல் கஞ்சியா… எனக்கு ரொம்பவே பிடிக்கும். கொடு விதுரா!” என்று முகம் நிறைய உற்சாகமானார் ஆவலுடன்.

உடனே விதுரன், ஒரு குவளையில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வந்து கொடுக்க, அதை ரசித்துக் குடித்தார் கிருஷ்ணன். இதைக் கண்டதும் விதுரனின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

”என்ன விதுரரே? ஏன் உங்கள் விழிகளில் நீர் பெருக்கெடுக்கிறது?”- பரிவுடன் கேட்டார் கிருஷ்னர்.

”பரந்தாமா! உனக்கு, பாலும் தேனும் கலந்து… சுவையான விருந்து படைக்க பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரர் முதலானோர் காத்திருக்கிறார்கள். ஆனால் நீயோ, இந்த ஏழையின் குடிசையில் கஞ்சிக் குடிப்பதில் களிப்புறுகிறாயே..!” என்றார் விதுரன்.

அவரைப் பார்த்துப் புன்னகைத்த கிருஷ்ணர், ”அவர்கள் ஆடம்பரப் பிரியர்கள். தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்தனர். அவர்களது பேச்சில், ‘நான்’, ‘எனது’ என்ற அகந்தையே வெளிப்பட்டது. ஆனால் நீங்கள் மட்டுமே, ‘இது உனது இல்லம்’ என்று கூறி என்னைப் பெருமைப்படுத்தினீர்கள்.

கஞ்சி என்றில்லை, தாங்கள் அன்புடன்… சிறிய உத்தரணியில் தீர்த்தம் தந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்!” என்று கூறி விதுரனை ஆசீர்வதித்துச் சென்றார்.

– ஆகஸ்ட் 2008

Print Friendly, PDF & Email

2 thoughts on “குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!

  1. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இந்த வலைத்தொடரை இன்னும் நன்றாக கொண்டு செல்லுங்கள் என வாழ்த்துகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *