இறைவனே தந்த நவமணிகள்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,375 
 
 

பாண்டிய நாட்டில்…

முடிசூட்டு விழாவுக்கு..இறைவனே தந்த நவமணிகள்!

பாண்டிய நாட்டை வழுதியின் மைந்தன் வீரபாண்டியன் சீரும் சிறப்புமாக நல்லாட்சி நடத்தி வந்தான். அவனிடம் நற்பண்புகள் பல இருந்தாலும், திருஷ்டி பரிகாரம் போல் சிற்றின்ப ஆசையும் இருந்தது. முறையான பட்டத்து அரசி இருந்தும், காமக் கிழத்தியர் பலர் வீரபாண்டியனுக்கு இருந்தனர். அவர்களும் அந்த அரண்மனையிலேயே தங்கியிருந்தனர்.

பட்டத்தரசிக்கு வாரிசு இல்லை. ஆனால், காமக் கிழத்தியருக்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர். எனவே, அங்கயற்கண்ணம்மை சமேத சொக்கநாத பெருமானை பல்வேறு வகை நோன்புகளை நோற்று விரதமிருந்து வழிபட்டாள் பட்டத்தரசி. விரைவிலேயே கருவுற்றாள். உரிய காலத்தில் அழகான ஆண் மகவு ஒன்றை ஈன்றாள். குலம் விளங்க வந்த திருமகனைக் கண்டு, மகிழ்ச்சியுற்று பொன்னும் மணியும் தான தர்மமாக வாரி வழங்கினான் அரசன்.

இறைவனே தந்தவீரனாக வளர்ந்தான் இளவரசன். ஒரு முறை பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்ற மன்னனை புலி ஒன்று கொன்று விட்டது. மன்னனின் மரணச் செய்தி கேட்ட காமக் கிழத்திகள் அகப்பட்ட தைச் சுருட்டிக் கொண்டு ஓடினர். அந்தக் கொள்ளையில் மன்னனது மணிமகுடம்கூட மிஞ்சவில்லை. இளவரசனுக்கு முறைப்படி மகுடம் சூட்ட அமைச்சர் பெருமக்கள் ஏற்பாடு செய்தனர். மணிமகுடம் காணாமல் போனதை அப்போதுதான் கண்டுபிடித்தனர். மட்டுமின்றி அரண்மனைக் கருவூலம் காலியாகி இருப்பதும் தெரிந்தது.

புதிய மணிமகுடம் செய்வதற்குத் தேவையான தங்கமும் இல்லை. எல்லோரும் இறைவனிடம் முறையிட ஆலயம் சென்றனர். அப்போது இறைவன் ஒரு நவமணி வணிகர் போல ஆலய வாசலுக்கு வந்தார். தம்மிடம் இருந்த நவமணிகளைப் பரப்பிக் காட்டினார். அவரின் தோற்றத்தில் ஐயம் கொண்ட அமைச்சர் ஒருவர், ‘‘வணிகரே! தாங்கள் இந்த நாட்டினர் போல் தெரியவில்லையே… தாங்கள் யார்?’’ எனக் கேட்டார்.

‘‘நான் இமய மலையை ஒட்டிய நாட்டைச் சேர்ந்த வைர வியாபாரி. பாண்டிய நாடு வளமானது என்பதால், இங்கு வணிகம் செய்ய வந்துள்ளேன்!’’ என்றார் வணிகர் (இறைவன்). அவரிடமிருந்த நவமணிகளைச் சோதித்த அமைச்சர்கள் வியப்படைந்தனர். அவை தரத்தில் சிறந்தவையாக இருந்தன. ‘ஒருவேளை இது தேவ லோகத்தைச் சேர்ந்தவையோ?’ என ஐயமுற்றனர்.

‘‘ஐயன்மீர்! உலகத்தில் கிடைக்கும் சாதாரணமான வைரங்கள் அல்ல இவை. அனைத்துமே ‘வலன்’ என் பவனது உடற்கூறுகள்!’’ என்றார் வணிகர்.

‘‘யாரந்த வலன்? அவன் உடற்கூறு எவ்வாறு நவ மணிகளாயின?’’ என அமைச்சர்கள் கேட்டனர்.

‘‘வலன் ஓர் அசுரன். அவன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டான். சிவபெருமான், அவனுக்குக் காட்சி தந்து, வேண்டிய வரம் யாதெனக் கேட்டார். வலனும் பரமனைத் துதித்து, ‘இறைவா! எவராலும், எந்த ஆயுதத்தாலும் சாகாத வரம் தந்தால் சந்தோஷம் அடைவேன். ஊழ்வினையினால் நான் சாக நேர்ந்தால், என் உடற்கூறுகள் நவமணிகளாகி பிறருக்குப் பயன்பட வேண்டும்!’ என்றான். பரமனும் அப்படியே வரம் தந்தார். உடனே வலன், இந்திரனைப் போருக்கு அழைத்தான். வலன் பெற்ற வரத்தால் இந்திரன் போரிடாமல், வேறு வழிவகை காண விரும்பினான். ஆகவே, வலனை பிரமாதமாக வரவேற்றான். ‘வெற்றி வீரனே! உன் போன்ற மாவீரனை வரவேற்பதில் பெருமை கொள்கி றேன். உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள், தருகிறேன்!’ என்றான். இந்திரனை ஏளனமாகப் பார்த்த வலன், ‘இந்திரனே! உன்னைவிட நான் சக்தி வாய்ந்தவன். பரமனிடம் வரம் வாங்கியவன். நீ வேண்டுமானால் என்னிடம் வரம் கேள். தருகிறேன்!’ என்றான்.

‘சரி… மேரு மலைச் சாரலிலே நான் யாகம் ஒன்று செய்ய உள்ளேன். அப்போது, நீ ஒரு யாகப் பசுவாக வர வேண்டும்!’ என்றான் இந்திரன். வலனும் சம்மதித்தான். தாமதிக்காமல் வேள்வியை ஆரம்பித்தான் இந்திரன். தான் சொன்னபடியே வலன் வந்து சேர்ந்தான். யாக முனிவர்கள் தர்ப்பைக் கயிறு கொண்டு வலனைத் தூணில் பிணைத்து அங்கம் அங்கமாக வெட்டி, யாகத் தீயிலிட்டனர். உடன் வலன் தெய்வ உடம்பு பெற்றான்.யாகத் தீயிலிட்ட வலனின் ரத்தம் மாணிக்கமாகவும், பற்கள் முத்துகளாகவும், எலும்புகள் வச்சிரமாகவும், கண்கள் நீலக் கற்களாகவும், தசை பவழமாகவும், நிணம் கோமேதகமாகவும், பித்தம் மரகதமாகவும், கோழை புஷ்பராகமாகவும், தலைமுடி வைடூரிய மாகவும் மாறின. இப்படித்தான் இவை தோன்றின!’’ என்றார் வணிகர்.

பின்னர் வணிகர், மணிகளைத் தேர்ந்தெடுத் துக் கொடுத்து, ‘‘இவற்றால் மணிமகுடம் தயாரித்துச் சூட்டுங்கள். இளவரசனை அரிய ணையில் அமர்த்தும்போது ‘அபிஷேகப் பாண்டியன்’ என்று பெயர் சூட்டுவீர்களாக!’’ என்றார்.

நவமணிகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள், அவற்றுக்குப் பணம் தர முற்படுவதற்குள் வணிகர் மறைந்து போனார். ‘வணிகர் வடிவில் வந்தவர் சோமசுந்தர கடவுளே!’ என்றுணர்ந்து அனைவரும் வியந்தனர். முடிசூட்டுவிழா கோலாகலமாக நடை பெற்றது. அபிஷேகப் பாண்டியன், சோமசுந்தர கடவுளை வணங்கி, அரியணை ஏறினான். வாழ்வில் நலம் பல பெற்றான்.

– மெய்விளம்பி மெய்யப்பன், கிருஷ்ணகிரி-1 (மார்ச் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *