இதுவல்லவோ குருபக்தி!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 8,751 
 

வியாக்ரபாதரின் மகன் உபமன்யு; இவன், வசிஷ்டரின் தங்கை மகனும்கூட! குருகுலத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் உபமன்யுவை அழைத்த குரு, ”இங்குள்ள ஐம்பது பசுக்களையும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வா!” என்றார்.

இதுவல்லவோ குருபக்தி!அதன்படி பசுக்களை ஓட்டிச் சென்று மேய்த்த உபமன்யு மாலையில், அவற்றைத் தொழுவத்தில் கட்டிவிட்டு, சாப்பிட அமர்ந்தான். ”உனக்கு உணவு வழங்கக் கூடாது என்பது குருநாதரின் உத்தரவு!” என்றார் சமையல்காரர். மறுபேச்சு பேசாமல் எழுந்து சென்றான் உபமன்யு.

ஒரு வாரம் கழிந்தது. குருகுலத்தில் எதுவும் சாப்பிடாத நிலையிலும் சுறுசுறுப்புடன் திகழும் உபமன்யுவைக் கண்டு குருநாதர் வியந்தார். அவனை அழைத்து விசாரித்தார். ”இந்த ஏழு நாட்களும் பிச்சை எடுத்து உண்டேன்!” என்றான் உபமன்யு. மறுகணம், குருநாதரிடம் இருந்து அடுத்த கட்டளை பிறந்தது: ”இனி, நீ பிச்சை எடுக்கக் கூடாது!”

இதை ஏற்று, பிச்சை எடுப்பதை நிறுத்தினான் உபமன்யு. சில நாட்கள் கழிந்தன. ஆனாலும் திடகாத்திரமாகவே வலம் வந்தான் உபமன்யு! அவனை அழைத்த குருநாதர், ”இப்போதும் திடகாத்திரமாகவே இருக்கிறாயே? உனக்கு ஏது உணவு?” என்று கேட்டார்.

”கன்றுகள் பால் அருந்தியதும் அவற்றின் வாயிலிருந்து வரும் நுரையை வழித்துச் சாப்பிடுகிறேன்!” என்றான் உபமன்யு. குருநாதர் யோசித்தார். பிறகு அவனிடம், ”இனி, நீ எதையும் சாப்பிடக் கூடாது” என்றார்.

குருவின் கட்டளைப்படி எதையும் சாப்பிடாமல் இருந் தான் உபமன்யு. மூன்றே நாட்களில் துவண்டு போனான். பசியின் கொடுமை தாங்காமல், அருகில் இருந்த எருக்கம் செடியை உடைத்து, அதன் பாலை எடுத்துப் பருகினான். அது அவனது பார்வையைப் பறித்தது. தட்டுத் தடுமாறி எழுந்து சிறிது தூரம் நடந்தவன், ஒரு கிணற்றில் விழுந்து விட்டான்.

அன்றிரவு, ‘உபமன்யுவைக் காணோம்’ என்று தகவல் வந்ததை அடுத்து, நாலாதிசைகளிலும் அவனைத் தேடி அலைந்தார் குருநாதர். வழிநெடுக, ‘உபமன்யு… உபமன்யு…’ என்று கூவியபடி நடந்தவர், அவன் விழுந்து கிடக்கும் கிணற்றின் அருகில் வந்தார். அப்போது, அவரது குரல் கிணற்றுக்குள் இருந்த உபமன்யுவுக்கும் கேட்டது. ”ஸ்வாமி, நான் கிணற்றில் இருக்கிறேன்” என்று கத்தினான். கிணற்றுக்குள் இருந்து குரல் வருவதை அறிந்த குருநாதர் அதிர்ந்தார். ஓடோடி வந்து உள்ளே எட்டிப் பார்த்தார். அவரிடம், தான் எருக்கம்பால் குடித்ததையும், அதன் பலனால் பார்வை பறிபோனதையும் விவரித்தான் உபமன்யு.

மனம் இரங்கிய குருநாதர், அச்வினி தேவர்களை (தேவ வைத்தியர்கள்) அழைப்பதற்கான மந்திரத்தை அவனுக்கு
உபதேசித்தார். உபமன்யு அந்த மந்திரத்தை ஜபிக்க… அவன் முன் அச்வினி தேவர்கள் தோன்றினர்.

கண்ணொளி தருமாறு அவர்களிடம் வேண்டினான் உபமன்யு. இதை ஏற்ற அச்வினி தேவர்கள், ”சரி… ஆனால், நாங்கள் தரும் பதார்த்தங்களை நீ சாப்பிட வேண்டும்!” என்று கூறி, தங்கத் தட்டு ஒன்றில் உணவு வைத்துத் தந்தனர். ஆனால், குருநாதரின் கட்டளையை மீற விரும்பாத உபமன்யு சாப்பிட மறுத்தான்.

”இதை சாப்பிடாவிட்டால் உனக்குப் பார்வை கிடைக்காது!” என்றனர் அச்வினி தேவர்கள்.

”பரவாயில்லை… குரு கட்டளையை மீறுவதை விட பார்வை இல்லாமலேயே வாழ்ந்து விடுகிறேன்” என்று உறுதியாகச் சொன்னான் உபமன்யு.

அவனது குருபக்தியைக் கண்டு மெச்சிய தேவர்கள், தேவலோகத்து சோமநதியின் நீரைக் கொண்டு வந்து அவன் கண்களில் ஊற்றினர்; மீண்டும் பார்வை பெற்றான் உபமன்யு. சற்றும் தாமதிக்காமல், ஓடோடிச் சென்று குருநாதரை வணங்கினான் உபமன்யு.

அவனை ஆரத் தழுவிக் கொண்டார் குருநாதர். குருபக்திக்கு உதாரணமாக வாழ்ந்த உபமன்யுவை அனைவரும் போற்றினர்!

– எம்.வி. குமார், மதுராந்தகம் (ஜூன் 2009)

Print Friendly, PDF & Email

தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

நகைத் திருடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2023

நாகலோகக் காதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *