அரசனை உதைத்த துறவி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,689 
 

கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள்.

‘‘மகனே… முற்பிறவியில் நீ செய்த புண்ணியங்களின் பலனாக, சிறிது காலம் நான் உன்னுடன் தங்கி இருக்க வேண்டியது நியதி. என் அனுக்கிரகத்தால் உனக்கு எந்த விதத் தீங்கும் நேராது. இந்த நாட்டு மக்களும் மன்னனும் உன்னைப் போற்றிப் புகழ்வார்கள்!’’ என்றாள் திருமகள்.

‘‘தாயே… புகழ்ச்சி& இகழ்ச்சி, இரண்டையும் சமமாகப் பார்க்கும் பற்றில்லாத துறவி நான். இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள பலர், உனது அருளுக்காக ஏங்குகிறார்கள். அவர்கள் உன் திருவருளால் மிகுந்த பலன் பெறுவார்கள்.’’ என்றார் துறவி.

உடனே திருமகள், ‘‘மகனே… நாம் அனைவருமே கர்ம விதிக்குக் கட்டுப்பட்டவர்கள்! உன் புண்ணியங் களுக்காக நான் உன்னுடன் இருக்க வேண்டியது நியதி. தடுக்காதே மகனே! என் திருவருள் உன்னை விட்டு விலகுவதற்கு முன் தெரிவிக்கிறேன்.’’ என்று கூறி மறைந்தாள். அந்த விநாடியிலிருந்து திருமகளின் திருவருள் அவரிடம் செயல்படத் துவங்கியது. துறவியின்அரசனை உதைத்த வசிப்பிடமான மலைச் சாரலுக்கு அருகே நகரம் ஒன்று இருந்தது. அதை பராந்தகன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.

திருமகளின் வாக்கைச் சோதிப்ப தற்காக துறவி, அந்த நகருக்குச் சென்றார். அப்போது மன்னன், தன் மந்திரிப் பிரதானிகளுடன் ராஜ்ய பரிபாலனம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தான்.

துறவியைக் கண்ட மன்னன் அரியணை யிலிருந்து எழுந்து, அவரை வரவேற்று, அவரின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தான். அவன் தலையைத் தன் காலால் எட்டி உதைத்தார் துறவி. அதனால் மன்ன னின் தங்கக் கிரீடம் எகிறி, சற்றுத் தொலைவில் போய் விழுந்தது. துறவியின் செய்கையால் மந்திரிப் பிரதானிகள் கடும் கோபத்தில் கொதித்தனர். வாள்களை உருவியவாறு வீரர்கள், துறவியை நெருங்கினர். சில விநாடிகளில் அரசவை அமர்க்களப்பட்டது.

ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில், அந்த கிரீடத் திலிருந்து நல்ல பாம்பு ஒன்று சீறியவாறு வெளியே வந்து, படமெடுத்து ஆடியது. அனைவரின் முகங்களிலும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.

‘அரசரைக் காப்பாற்றவே துறவி அவரின் தலையை எட்டி உதைத்தார்’ என்று எண்ணிய அவர்கள், மறு கணம் அவர் பாதங்களில் வீழ்ந்தனர்.

‘‘முக்காலமும் உணர்ந்தவர் நீங்கள்.’’

‘‘மன்னரின் உயிரைக் காத்த உங்களின் மகிமையை என்னவென்பது!’’

‘‘எங்கள் அரசரைத் தேடி வந்து, அவரது ஆபத்தைத் தடுத்த உங்க ளுக்கு கோடானு கோடி நன்றிகள்!’’

ஆளாளுக்கு துறவியைப் புகழ்ந்தனர். துறவியோ, தம் மைக் காப்பதற்காகத் திருமகள் நடத்திய அற்புதம் இது என்று உணர்ந்தார்.

தன் உயிரைக் காத்த உத்தமர் என்று துறவியைப் புகழ்ந்து, அவரைப் பட்டத்து யானை மேல் அமர்த்தி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் நடத்தி கௌரவித்தான் அரசன். பின்னர், அவரைத் தனது அரண்மனையிலேயே தங்கும்படி வேண்டினான். துறவியும் அவனது கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டார்.

அரண்மனையை ஒட்டிய பெரிய மாளிகையில் அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காட்டில் காயும், கனியும், உலர்ந்த சருகுகளையும் உண்டு வாழ்ந்த துறவி, இப்போது மலர்ப் பஞ்சணையில், பாலும் பழமும் உண்டு ‘ராஜ போக’மாக வாழ்ந்தார்.

ஒரு நாள் அவர் அரசனும் அரசியும் படுத்துறங்கும் அறைக்குள் நுழைந்தார். ஆழ்ந்து உறங்கிய அரசனையும் அரசியையும் எழுப்பிப் பளீரென்று அறைந்தார். பிறகு இருவரையும் இழுத்துக் கொண்டு மாளிகைக்கு வெளியே வந்தார். அவரின் செய்கையைக் கண்டு குழம்பி இருவரும் திக்பிரமை பிடித்தவாறு நின்றிருந்தனர். மறுகணம் அரசனும் அரசியும் படுத்து உறங்கிய கட்டடம் இடிந்து விழுந்தது.

தங்கள் உயிரைக் காக்கவே அவர் இப்படிச் செய்தார் என்பதை உணர்ந்த இருவரும், கண்களில் நீர் மல்க அவரின் பாதங்களில் வீழ்ந்தனர்.

தூக்குத் தண்டனை விதிக்க வேண்டிய அரசன், தன் பாதங்களில் வீழ்ந்து பணிவது சந்தேகத்துக்கு இடமின்றி, திருமகளின் திருவருளே என்று உணர்ந்தார் துறவி.

ஒரு நாள், அந்த அரண்மனையை ஒட்டிய நந்தவனத்தில் உலாவிய துறவியின் கண்களில் மாமரம் ஒன்று தென்பட்டது. அதன் உச்சியில் தொங்கிய மாங்கனிகளில் ஒன்றைப் பறித்த துறவி, அதை மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார். மாங்கனியை மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட மன்னன், தனது அறைக்குச் சென்று அதை பத்திரப்படுத்தினார்.

அன்றிரவு துறவியின் முன் திருமகள் தோன்றி, ‘‘மகனே… உன்னை விட்டுப் பிரியும் காலம் இது எனக்கு. வருகிறேன்!’’ என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.

மறு நாள் காலையில் மலைச் சாரலுக்குத் திரும்பிச் செல்வதை மன்னனிடம் தெரிவிக்க அரண்மனைக்குச் சென்றார் துறவி. அப்போது, மன்னன் அவர் கொடுத்த மாங்கனியை வாயில் வைத்துக் கடித்தான்.அடுத்த கணம் அவன் தலைசுற்றி, உடல் நீலமாகி… மயங் கிக் கீழே விழுந்தான். வைத்தியர்கள் பரிசோதித்ததில், அந்த மாங்கனியில் கடுமையான விஷம் கலந்துள்ளதைக் கண்டறிந்தனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த மன்னன், விஷயமறிந்து கோபம் கொண்டான். அவரைத் தண்டிக்க எண்ணினான். எனினும், தன்னை மரணத்திலிருந்து இரு முறை காப்பாற்றி யதால், அவரை பத்திரமாக மலைச் சாரலில் விட்டு வருமாறு ஆணையிட்டான்.

‘‘தேவி… உன் திருவிளையாடலை என்னவென்பேன்? உனது திருவருள் இருந்தவரை, என்னைக் கொண்டாடினார்கள். தீமைகளை நன்மைகளாக மாற்றித் திருவருள் புரிந்தாய். உன் திருவருள் விலகியதும் அனைவரும் தூற்றி அரண் மனையிலிருந்து வெளியேறும் நிலை வந்தது எனக்கு!’’ என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்ட துறவி பழையபடி தனது தவ வாழ்வைத் தொடர்ந்தார்.

– ஜனவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *