CEO எடுத்த மார்கட்டிங் பாடம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 2,479 
 
 

எங்களுடைய மாடல் A காரின் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. நாங்கள் இதுவரை வடிவமைத்த சுயமாக ஓட்டும் செல்ப் டிரைவிங் கார்களில் மாடல் A மிகவும் புதுமையான ஒன்று. சூரிய சக்தியைப் பயன்படுத்தி தன் பேட்டரிகளை தானே சார்ஜ் செய்து கொள்ளக் கூடிய முதல் கார் எங்கள் மாடல் A கார் தான். உங்கள் காரை நீங்கள் இனி சார்ஜ் செய்ய வேண்டியதேயில்லை என்ற எங்களுடைய மார்க்கட்டிங் முழக்கத்தை நீங்கள் கூட அடிக்கடி டிவியில் கேட்டிருப்பீர்கள்.

எங்கள் நிறுவனத்தின் CEO என்ற முறையில், நான் கடந்த ஒரு மாதமாக மாடல் A கார் சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று கவனிப்பதில் பிசியாக இருந்தேன். இன்று காலை முழுவதும் மாடல் A உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கழித்தேன். மதிய உணவுக்குப் பிறகு மாடல் A கார்களை பரிசோதனை செய்யும் தளத்திற்கு வந்தேன். சோதனை மேலாளர் என்னை வரவேற்று சுற்றிக் காட்டினார்.

வட்டப் பாதையுடன் கூடிய ஒரு பெரிய மைதானம் சோதனைத் தளமாக இருந்தது. பாதையில் பளபளப்பான கறுப்பு மாடல் A ஒன்று அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. வட்டத்திற்கு வெளியே இன்னும் நூறு கார்கள் சோதனைக்காகக் காத்திருந்தன.

வட்டத்தை சுட்டிக் கட்டிய சோதனை மேலாளர் பேச ஆரம்பித்தார். “ஒவ்வொரு காரும் தனித்தனியாக வட்டத்திற்குள் நுழைந்து ஆறு சுற்றுகளைச் சுற்றும். அப்படி சுற்றும் போது காரின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் தொண்ணூற்று ஆறு அளவுருக்களை நாங்கள் அளவிடுவோம். ஆறு சுற்றுகளுக்குப் பிறகு அது வெளியேறும். அடுத்த கார் அதன் இடத்தை எடுக்கும். இப்படியாக தினமும் சுமார் ஆயிரம் கார்களை நங்கள் சோதனை செய்ய முடிகிறது.”

வட்டத்தில் அந்தக் கருப்பு கார் ஆறு சுற்றுகளுக்கும் மேலாக சுற்றிக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன். சோதனை மேலாளரிடம் அதைப் பற்றி கேட்டேன்.

“ஓ, இது குறைபாடுடைய கார். ஏற்கனவே நாற்பது சுற்றுகளுக்கு மேல் இது சுற்றிக் கொண்டிருக்கிறது.”

“என்ன பிரச்சனை?”

“சில நேரங்களில், காரை இயக்கும் மென்பொருள் ஒரு எல்லையற்ற வளையத்திற்குள் (Infinite Loop) நுழைந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொள்ளும். கடுமையான வெயிலில் கார் தானே சார்ஜ் செய்து கொள்வதால், சார்ஜ் தீரவே தீராது . எனவே, கார் வட்டப் பாதையில் நிற்காது சுற்றிக் கொண்டே இருக்கும்.”

“அப்படியானால், அதை எப்படி நிறுத்துவது?”

“காரின் மென்பொருளை தொலைவிலிருந்து மறுதொடக்கம் (Reboot) செய்வது ஒரு வழி. ஆனால் இந்தக் காரில் அது வேலை செய்யவில்லை. காரின் பாதையில் ஒரு பெரிய தடையை வைத்து நிறுத்துவது தான் ஒரே வழி. இப்போது நாங்கள் அதை செய்ய இருக்கிறோம்.”

சில நொடிகள் அமைதியாக இருந்த நான், “இந்த காரை நிறுத்தாதீர்கள். அது இப்படியே சுற்றிக் கொண்டே இருக்கட்டும்.” என்றேன்.

“ஏன் அப்படி சொல்கிறீர்கள்?”

“பொதுமக்கள் அதைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

சோதனை மேலாளர் என்னை வியப்புடன் பார்த்தார்.

“குறைபாடுள்ள காரைப் பொதுமக்கள் பார்க்க வேண்டுமா?”

நான் சிரித்துக் கொண்டே கேட்டேன், “இந்த காரில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்ன?”

“சூரிய சக்தியைப் பயன்படுத்தி கார் தன்னைத்தானே சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது.”

“பொதுமக்களே நேரில் பார்த்து அதை தெரிந்து கொள்வது எவ்வளவு பயனுள்ள ஒரு விஷயம்? எந்த ஒரு விளம்பரமும் அதற்கு ஈடாகாது அல்லவா?”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *