வேற்று கிரகத்தின் வாகனங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 3,225 
 
 

சேகர் இஸ்ரோ மீட்டிங் அறையில் மௌனமாக அமர்ந்திருந்தான். கடந்த மூன்று மாதங்களை சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள வேற்று கிரகமான KY-995ல் கழித்து வந்த களைப்பும் சோர்வும் அவன் உடலில் மிஞ்சியிருந்தது. அவன் பாஸ் சோமசுந்தரமும், இஸ்ரோவின் உளவியலாளர் டாக்டர் ராமச்சந்திரனும் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தார்கள்.

“வெல்கம் பேக் சேகர், KY-995ல் என்ன கண்டுபிடித்தாய்?” என்று கேட்டார் சோமசுந்தரம் ஒரு பேனாவை உருட்டியபடி.

சேகர் சோகையான புன்னகை ஒன்றை உதிர்த்தான். “நம்முடைய மிஷன் குறிக்கோளின் படி நான் KY-995 ஐ விரிவாக ஆராய்ந்தேன். அங்கு அறிவார்ந்த உயிரின் அறிகுறிகளைத் தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் புதிரான ஒரு விஷயத்தை அங்கு சந்தித்தேன்.”

“என்ன விஷயம் அது?” என்றார் சோமசுந்தரம் ஆர்வத்துடன்.

“நகரும் வாகனங்களை அங்கு பார்த்தேன்.”

“வாகனங்கள்?” டாக்டர் ராமச்சந்திரன் புருவத்தை உயர்த்தினார். “அவை பார்ப்பதற்கு எப்படி இருந்தன?”

“நம்முடையதைப் போலவே. நான்கு சக்கரங்கள் கொண்ட வாகனங்கள்.”

சோமசுந்தரம் முன்னோக்கி சாய்ந்தார். “இந்த வாகனங்களில் ஏதேனும் உயிரினங்கள் ஏறியோ அல்லது இறங்கியோ பார்த்தாயா?”

“இல்லை, அப்படி எதுவும் நான் பார்க்கவில்லை. “

“அந்த வாகனங்களுக்குள் என்ன இருந்தது?”

“நான் வெளியிலிருந்து பார்த்த வரையில்,” சேகர் சிறிது தயங்கி விட்டு, “ஒன்றுமே இல்லை, காலியாக இருந்தது.” என்றான். “ஏதாவது ஒரு வாகனத்தை நிறுத்தி உள்ளே நுழைந்து ஆராயலாம் என்று பெரிதும் முனைந்தேன். ஒரு வாகனத்தைப் பின் தொடர்ந்து சென்றேன், ஆனால் அது வேகம் பிடித்து மறைந்து போனது.”

சோமசுந்தரமும் டாக்டர் ராமச்சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சிறுது நேர மௌனத்திற்குப் பின் சோமசுந்தரம், “சேகர், நீ அங்கு மூன்று மாதம் இருந்தாய். நகரும் வாகனங்களைப் பார்த்தேன் என்கிறாய். ஆனால் வாகனங்களை ஒரு உயிரினம் இயக்கியதற்கான எந்த ஆதாரத்தையும் பார்க்கவில்லை?”

“ஆமாம்,” என்றான் சேகர் குரலில் விரக்தியுடன். “…அது சரி தான், ஆனால்-“

டாக்டர் ராமச்சந்திரன் குறுக்கிட்டார். “சேகர், KY-995 கிரகத்தில் மூன்று மாதம் மனித தொடர்புகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், உன்னுடைய மனம் உன்னை ஏமாற்றி ஒரு சில கற்பனைக் காட்சிகளை நிஜம் போல உனக்கு காட்டியிருக்கலாம்.”

சேகரின் முகம் சுருங்கி, குரல் உயர்ந்தது. “தயவு செய்து நான் சொல்வதை நம்புங்கள். நான் பார்த்தது எதுவும் கற்பனை அல்ல. அந்த வாகனங்கள் உண்மையானவை!”

சோமசுந்தரம் எழுந்தார். “சரி, சேகர். இப்போதைக்கு நீ சொன்னதையெல்லாம் நாங்கள் ரிப்போர்ட்டில் பதிவு செய்து கொள்கிறோம். ஆனால் நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். ஒரு வாரம் லீவில் சென்று எல்லாவற்றையும் மறந்து ஓய்வெடுத்துக் கொண்டு வா.”


அதே நேரம், KY-995 கிரகத்தில், சேகர் முகாமிட்ட இடத்திற்கு வெகு அருகில், KY-995 கிரகவாசியான ஜோர்லான் தனது நண்பன் கிராவிக்ஸ் வருவதற்காக காத்திருந்தான்.

இறுதியாக கிராவிக்ஸ் வந்தபோது, ஜோர்லான் புன்னகைத்து, “நீ பிரபலமாகிவிட்டாய்!” என்றான்.

“அது சரி, வேற்று கிரகவாசியால் துரத்தப்பட்டால் நீயும் தான் பிரபலமாகி விடுவாய்!” என்றான் கிராவிக்ஸ் சிரித்துக் கொண்டே.

“அந்த வேற்று கிரகவாசி எப்படி இருந்தார்?”

“அவரைப் போல் யாரையும் நான் இது வரை பார்த்ததில்லை. நிமிர்ந்த தோரணையுடன் இரு கால்களை வைத்து நடந்து வந்தார். பக்கவாட்டில் இரு கைகள். அவரது உடல் மென்மையான தோலால் மூடப்பட்டிருந்தது.”

“அவரிடமிருந்து எப்படி தப்பினாய்?”

“நான் வேகம் பிடித்து ஓடிப் போனேன். இந்த வயதில் எனக்கு அது கஷ்டமாகத்தான் இருந்தது, ஆனாலும் எப்படியோ சமாளித்து தப்பி விட்டேன்.”

“நீ தப்பியது உன் அதிர்ஷ்டம் தான். ஆனாலும்,” ஜோர்லான் கிராவிக்ஸை உன்னிப்பாகப் பார்த்துவிட்டு, “உன்னுடைய நான்காவது கால் தான் உடைந்து போனது போல் தெரிகிறது.” என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *