யானை யானையாகும் தருணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 69,331 
 
 

நாங்கள் ஒரு வரிசையில் சுமார் நூற்றி அறுபது பேர் காட்டுக்குள் நடந்து கொண்டிருக்கிறோம். ஏன் நூற்றி அறுபது பேர்? ஒரு கணக்கின் பிரகாரம் நூற்றி அறுபதுக்கும் மேல் மனிதர்கள் மனிதர்கள் ஓரிடத்தில் குழுமினால், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குழு இரண்டாக உடைந்துவிடும். ஆக நாங்கள் மனிதர்கள் நூற்றி அறுபது பேர்களாக குழு குழுவாகப் பிரிந்து கிடைத்த காடுகளுக்கெல்லாம் ஊடுறுவிக்கொண்டிருக்கிறோம்.

நகரங்கள் இனி அர்த்தப்படப்போவதில்லை. நகரங்களுக்கென , நாகரீகங்களுக்கென ஒரு அர்த்தமிருந்தது. அது இனி பிழைப்புக்குத் தேவைப்படப்போவதில்லை.

முதலில் நாங்கள் ஒரு கொடிய வன விலங்காகக் தேடிக்கண்டுபிடித்து அதன் ராஜ்ஜியத்தை அடைய வேண்டும் என எங்களுக்கு கட்டளை. அதுவும் அவசராமாக. காரணங்கள் சொல்லப்படாமல். அதன் ராஜ்ஜிய நிலத்தை அடைவது எப்படி என்று எங்கள் ஆலோசனைகள் தரப்பட்டிருக்கிறது. ரேடியோ மூலமாக. அந்த ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு மூலையிலும், அந்த வன விலங்கின் கழிவு வாசனை இருக்கும். கழிவு வாசனையில் இறைச்சியின் வாசம் வரும். மான், பன்றி, மாடு, கழுதை போன்ற விலங்குகளின் இறைச்சி வாசனை எங்கு தொடர்ச்சியாக வெளிப்படுகிறதோ அந்த இடம் தான் அந்த வன விலங்கின் வசிப்பிடம் என்று கண்டுகொள்ளலாம்.

அந்த வன விலங்கு என்னவாக இருக்கலாம் என்றும் ஆலோசனையில் தெளிவாக இருக்கிறது. புலி, சிங்கம், சிறுத்தை போன்றவைகள் தான் அந்த கொடிய விலங்குகள். இவைகள் மனிதர்களையும் உண்பவைகள். ஆனால், அவைகள் தான் எங்களைக் காக்கவும் போகின்றன என்றது அந்த ஆலோசனை. கொடிய விலங்குகள் எப்படி எங்களை உண்ணாமல் விட்டுவிடும் என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், ரேடியோ ஒருவழிப்பாதையானது. தகவல்களை நாங்கள் பெற மட்டுமே முடியும். அனுப்ப எங்களிடம் வசதி இல்லை.

நாங்கள் இவ்விதம் காட்டிற்கு செல்லும் வழியில் வேறெந்த தாவர உண்ணிகளும் எங்களை உண்டுவிடாமல் இருக்க உபாயங்கள் தரப்பட்டிருக்கின்றன, அந்த உபாயம் என்னவென்றால், நாங்கள் கடுகு வகையைச் சேர்ந்த ஒரு அலங்காரச்செடியுடன் – தங்கம் நிறை கூடை – எங்கள் மரபணுவை பிறழ்வு (mutation) செய்துவிடவேண்டும். இந்த விதமான தாவரங்கள் பார்வைக்கு அழகாக, வசீகரமாகத் தோன்றும். ஆனால், இவைகளைத் தாவர உண்ணிகள் உண்பதில்லை. இந்தப் பிறழ்வு நிலை தான் எங்களை தாவரங்களை உண்ணும் விலங்குகளிடமிருந்து காப்பதுடன், எங்கள் உடலுக்கு சூரிய ஒளியிலிருந்து சக்தியைத் தரப்போகிறது என்றது அந்த ஆலோசனை. நாங்கள் கேள்வி கேளாமல் செய்துவிட்டோம்..

ஆம்.

நாங்கள் இப்போது பாதி மனித உடலுடனும், மீதி தாவர உடலுடனும் இருக்கிறோம். இந்த நிலைப்பாட்டில் எங்களுக்கான சாதகங்கள் அதிகம். உடலுக்கு தேவையான சக்தியை உடலில் இரண்டறக் கலந்துள்ள தாவரம் சூரிய சக்தியிலிருந்து பெற்றுவிடும். தாவர உண்ணிகளான மான்கள், ஆடுகள், மாடுகள் போன்ற தாவர உண்ணி விலங்குகள் எந்தத் தாவரங்களை உண்பதில்லையோ அந்தத் தாவரங்களின் விதைகளோடு எங்கள் மரபணுக்களைக் கலந்து பிறழ்வு செய்துகொண்டால் மட்டும் போதும். அந்தத் தாவரங்களாக எங்கள் உடலின் ஒரு பாதி இருப்பின், தாவர உண்ணிகள் எங்களை தவிர்த்துவிடும்.

நாங்கள் சென்றுகொண்டிருக்கையில் வழியில் தீடீரென்று ஒரு பெரிய குன்று தோன்றியது. அதன் பாரிய விட்டத்தைப் பார்த்து நான் உள்பட எல்லோரும் திகைத்துவிட்டோம். சற்று உற்று நோக்க, அது ஒரு குன்றல்ல, யானை என்று விளங்கியது. நாங்கள் ஆடாமல் அசையாமல் நின்றோம். நகர வாழ்வின் அடையாளமாக என்னிடமிருந்த போத்தல் மூடிகளில் ஒன்று செருகி வைத்திருந்த என் இடுப்பிலிருந்து நழுவி முன்னே விழுந்தது. அதைக் கண்டுகொண்ட அந்த யானை, சட்டென, ஏதோ பழக்கப்பட்டது போல தன் தும்பிக்கையால் எடுத்துக்கொண்டு ஒரு காலை தூக்கி ஊனமுற்றதுபோல் நிறுத்தியது. சில நொடிகள் அப்படி நிறுத்தி இருந்துவிட்டு பின் கீழிறக்கி எங்கள் பாதையிலிருந்து அகண்டது. நகரங்களில் வனவிலங்குப் பூங்கா ஒன்றில் நெடு நாட்களாக சிறை வைக்கப்பட்டிருந்த யானையாகத்தான் அது இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன் நான். பாதையின் இடர் நீங்கிவிட்ட பிறகு நாங்கள் தொடர்ந்து நடந்தோம்.

நாங்கள் சென்ற வழியில் ஒரு தடாகம் வந்தது. அந்த இடம் எங்களுக்குத் தோதான இடமாகத் தோன்றியது. நீர் எங்களுக்கும் தேவை. தாகம் தணித்துக்கொள்ள கொடிய விலங்குகளும் தடாகம் வரும். காட்டுவழியில் பலவேறு உயிரினங்கள் தங்கள் ராஜ்ஜியங்களைக் குறிக்க உடற்கழிவுகளால் குறித்து வைத்ததில் எங்கெங்கும் கழிவுகளின் வாசமே. அவற்றினூடே இரைச்சி வாசத்தை பிரித்தறிவது சற்று கடினமாகவே இருந்தது. இப்போதுதானே நகரத்தை விடுத்து காட்டுக்குள் பயணப்படுகிறோம். போகப் போகப் பழகிவிடும் என்று தோன்றியது.

அப்போது புலி ஒன்றின் கர்ஜனை கேட்டது. நான் சட்டென சிலைபோல் நின்று என் கையை உயர்த்தி விரல்களை மடித்துக் காட்ட என் பின்னால் என்னைத் தொடர்ந்து வந்த அனைவரும் அப்படி அப்படியே நின்றனர். சற்றைக்கெல்லாம் ஒரு புலி எங்கள் பாதையின் குறுக்கே சற்று தொலைவில் வந்து நின்றது. அதன் கண்களில் பசி கண்கூடாகத் தெரிந்தது. அதன் கர்ஜனையில் வேட்டைக்கான முகாந்திரம் மிகுத்திருந்தது. வரிசையின் முதல் ஆளாய் நான் நின்றிருந்தேன். புலி தன் பசிக்கு என்னைத் தின்றுவிடுமோ என்ற அச்சம் வந்தது.

சற்றைக்கெல்லாம் அது எங்களை நெருங்கி வந்தது. சற்றே தன் தலையைத் தாழ்த்தி என்னருகே குனிந்து நுகர்ந்தது. அதன் மூச்சுக்காற்று என் மீது ஒரு சிறு புயலென வீசியது. நான் எவ்வித சலனமுமற்று நின்றேன். அந்தப் புலியின் உடல் வாசத்தை எனக்குள் வாங்கிக்கொண்டேன். இப்படி காடு முழுக்க நுகர்ந்து நுகர்ந்து எனக்கு வாசங்களை அடையாளம் காணும் திறன் வளர்ந்துவிட்டிருந்தது போல் உணர்ந்தேன். அந்தப் புலியின் வாசத்தை என் நினைவடுக்குகளில் சேமித்துக்கொண்டேன். என்னைப் பின்பற்றி ஏனையோர்களும் எவ்வித சலனமும் இன்றி நின்றனர். புலி உரத்த குரலில் தலையை உயர்த்தி ஒருமுறை உருமியது. காடே அதிர்வது போலிருந்தது எனக்கு. பின் அது பக்கவாட்டில் நகர்ந்து மரங்களுக்கிடையே தாவி ஓடி மறைந்தது.

நான் ஆழ்ந்த பெருமூச்செறிந்தேன். அகோரப் பசி இருந்தும் அந்தப் புலி என்னை உணவாகக் கொள்ளாமல் தவிர்த்தது ஆச்சர்யமாய் இருந்தது. ஏன் என்று தான் புரிந்திருக்கவில்லை.

நாங்கள் தொடர்ந்து நடக்கத்துவங்கினோம். சற்று தொலைவில் ஒரு குகை போல் தெரிந்தது. அதற்குப் பக்கவாட்டில் சற்று தள்ளி ஒரு சிறிய நீர் வீழ்ச்சி இருந்தது. அந்த இடத்தைப் பார்த்ததும் எங்கள் அனைவர் முகங்களும் ஒருங்கே மலர்ந்தது. நான் ஓடிச்சென்று அந்த குகைக்குள் நுழைந்து நுகர்ந்து பார்த்தேன். அந்த குகைக்குள்ளிருந்த வாசத்தை என் நினைவடுக்குகளில் தேடிப்பார்த்துவிட்டு, அந்த குகை அந்தப் புலி வாசம் செய்யும் இடம் தான் என்பதைப் புரிந்துகொண்டேன்.

பின் திரும்பி என்னைத் தொடர்ந்து வந்த கூட்டத்தைப் பார்த்தேன். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். அவர்கள் பார்வையிலிருந்து கேள்வியை உள்வாங்கியவனாய் நான் லேசாக சிரித்தேன். அவர்களுக்கான பதில் கிடைத்திருக்க வேண்டும். எல்லோரும் மகிழ்ந்தார்கள். குதூகலித்தார்கள். எங்களுக்கெல்லாம் ஓர் வசிப்பிடம் கிடைத்த மகிழ்வு எல்லோரிடமும் இருந்ததைக் கண் கூடாகக் காண முடிந்தது. அவரவர் அவரவர்க்குத் தோதான இடங்களைத் தேர்வு செய்துகொண்டனர். சிலர் அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர்.

புலி குகைக்குள் நாங்கள் கிடைத்த ஓரங்களிலும், மூலைகளிலும் குழுக்குழுவாய் ஒண்டிக்கொண்டோம். எங்களை உண்ணக்கூடிய சிறு சிறு விலங்குகள் புலிக்கு பயந்து புலியின் குகைக்கு வரப்போவதில்லை. புலி தாவரங்களை உண்ணுவதில்லை.

ஆதலால், நாங்கள் இரையானால், அது புலியின் அகோரப் பசிக்காகத்தான் இருக்க முடியும்.

பூமியில் இயற்கை தன் வசீகரத்தை இழந்துவிட்ட காலம் இது. சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டது. சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை. வீர்யமிக்க ரசாயனங்களால் மண் மலடாகிவிட்டது. எதையுமே விளைவிக்க லாயக்கற்றதாகிவிட்டது. பயிர்கள் இல்லை. பழங்கள் இல்லை. சுவாசிக்க பிராணவாயு இல்லை. இல்லை என்றால் முற்றிலுமாக இல்லை என்றில்லை. ஆனால் கிட்டத்தட்ட பூமியின் தொண்ணூறு சதவிகிதம் சீர்குலைந்து அழுக்காகி அசுத்தமாகி எதற்கும் பயணற்றதாகிவிட்டது. பூமியின் காடுகள் தவிர்ந்த ஏனைய நிலப்பகுதிகள் வாழ்வதற்கு லாயக்கற்றதாகிவிட்டன. காடுகளோ கிரகத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் பத்து சதவிகிதத்துக்கும் குறைவாகிவிட்டது. மண் வளம் கெட்டுவிட்டது. காற்று மாசடைந்துவிட்டது.

பூமியின் காற்று மண்டலத்தில் அடர்த்தியாக தூசு படர்ந்திருக்கிறது. அது, சூரிய ஒளியை நிலத்தின் மீது பட அனுமதிப்பதில்லை. ஆனால், காற்று மண்டலம் முழுக்க இப்படி இல்லை. சில இடங்களில் தூசு இன்றி, சூரிய ஒளி மண்ணில் விழுகிறது. அங்கெல்லாம் தான் மரம் ,செடி, கொடிகள் வளர்ந்து காடுகள் இருந்தன. காடுகளும், காடுகளையொட்டிய இடங்களில் மட்டுமே நிலமும், காற்றும் தூய்மையாய் இருக்கின்றன. இதனாலேயே நாங்கள் காடுகளுக்குள் ஊடுறுவிச்செல்ல வேண்டி வந்தது. இருக்கும் சொற்ப வளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள் மனித இனம் தள்ளப்பட்டுவிட்ட பிறகு ‘விழித்து’ என்ன பயன்?

இயற்கை வளங்கள் பெரும்பான்மை அழிந்துவிட்ட பிறகு மனித இனத்தில் பிரச்சனைகள் என்ன? ஒரு சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு ஐந்நூற்றி ஐம்பது லிட்டர் பிராணவாயு தேவைப்படுகிறது. அப்படியானால் உணவுத்தேவையையும், நீரின் தேவையையும் புரிந்துகொள்ளலாம். ஆனால், இயற்கையிடம் இல்லாததை யார் தான் கேட்க இயலும்? கேட்டாலும் என்ன கிடைக்கும்?

காற்றில் பிராணவாயுவுடன், நைட்ரஜன், ஹைட்ரஜன் உள்ளிட்ட எஞ்சிய வாயுக்களின் சம நிலை குலைந்தால், பூமி கிரகமும், செவ்வாய், சனி கிரகங்கள் போல வாழ்வதற்கே லாயக்கற்றதாகிவிடும். அதைத் தடுக்க வாயுக்களின் சம நிலையைக் காக்க வேண்டும். இதற்காய் மனித இனம் உருவாக்கிய யோசனைகள் பற்பல.

நல்ல நீரின்றி, வளமான மண்ணில்லாத நிலத்தில் பயிர்கள் விளையாது என்பதால், சில மாத்திரைகளை உட்கொண்டு எங்கள் உடலை பாதி தாவரமாகவும், மீதி மனித உடலாகவும் ஒரு பிறழ்வாக எங்களை நாங்களே மாற்றிக்கொண்டோம். இதனால், உணவு தேட வேண்டிய தேவைகள் இல்லாமல் போனது. உடல் தனக்கான சக்தியை சூரிய ஒளியிலிருந்தோ அல்லது கார்பன் டை ஆக்ஸைடு வாயுவிலிருந்தோ பெற்றுக்கொண்டது.

புலி, தனக்கு அகோரப் பசி இருந்தும், ஏன் என்னை உண்ணவில்லை என்ற கேள்வி என் மனதை அரிக்கத்துவங்கியிருந்தது. உடலில் பாதி தாவரமாகிப் போனதால் அளவில் பெரிய, கொடிய வன விலங்குகளின் உணவுச்சுழற்சியில் நாங்கள் தேவைப்படாமல் போய் விட்டோமோ என்று தோன்றியது. உண்மையில், முன்னர் புலி, சிங்கம், கரடி, சிறுத்தை, யானை என்று ஒரு சில விலங்குகளுக்குத்தான் நாங்கள் பயப்பட வேண்டி இருந்தது. பூமியில் இவைகளின் எண்ணிக்கையும் அதிகமிருக்கவில்லை.

ஆனால், இப்போதெல்லாம் சின்னஞ்சிறு உயிர்களான அட்டை, இலை சுருட்டி, இலைப்பேன், ஈ, ஈசல், உன்னி, எறும்பு, கரப்பான், கட்டை எறும்பு, கம்பளி, குளவி, சிலந்தி, தும்பி, தெள்ளு, தேனீ, தேள், நட்டுவாக்கலி, பூராண், பேன், மூட்டைப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, நத்தை, வெட்டுக்கிளி, விட்டில்பூச்சி, முயல், அணில் போன்றவைகளின் உணவுச்சுழற்சியில் தான் பங்கேற்க வேண்டி உள்ளது. அதனாலேயே எங்கள் உடலில் பாதியை, இந்த பூச்சிகளுக்குப் பிடிக்காத தாவரங்களைக் கொண்டு பிறழ வேண்டிவந்தது.

செவ்வந்திப்பூச் செடிகள் பூச்சிகளை அண்டவிடாத எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துவதறிந்து, அந்தச் செடிகளின் விதைகளுடன் எங்கள் மரபணுக்களை சேர்த்து பிறழ்வு செய்துகொண்டோம். மேலும், வேறெங்கும் இயற்கை உணவுகள் கிடைக்காததால் பூச்சிகள் தங்களைத்தாங்களே உண்டு ஒரு சம நிலை உருவானது. பூச்சிகளின் எண்ணிக்கையும் ஒரு கட்டுக்குள் வந்தது. இதன் பிறகு தான் பூச்சிகளிடமிருந்தும், இன்னபிற அளவில் சிறியதான ஜந்துக்களிடமிருந்தும் எங்களுக்கு விடுதலை கிடைத்தது.

காடுகளில் தான் இந்தப் பூச்சியினங்கள் அதிகம். ஆனாலும், காடுகளுக்குள் தான் நாங்களும் இடம் பெயர வேண்டி இருந்தது. காரணம், பாதி உடலை தாவரமாகக் கொண்டிருப்பதால், எங்களை உண்ணக்கூடிய ஆடுகள், மாடுகள், கழுதைகள் போன்ற தாவர உண்ணிகளை இந்தக் கொடிய விலங்குகள் வேட்டையாடுவதால் அளவில் பெரிய, கொடிய வன விலங்குகளுக்கருகாமையில் தான் எங்களுக்கான பாதுகாப்பும் நிச்சயமாகிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.

இந்த நிலைப்பாட்டிலேயே இன்னும் எத்தனை காலம் தொடர்வது என்பதுதான் கேள்வியாக எஞ்சியிருந்தது. மீண்டும் பழையபடி பூமி மீளுமா? மண் விளையுமா? தெரியவில்லை. அது அத்தனை சுலபமில்லை என்பது மட்டும் தெரியும்.

நாங்கள் காடடைய வேறொரு காரணமும் இருக்கிறது. இப்போதைக்கு காட்டில் மரங்களிலிருந்து தானாக விழும் இலைகளை நாங்கள் தொகுத்து சற்று தள்ளி உள்ள ஒரு சமதளத்தில் கொட்டுகிறோம். இதைத் தொடர்ச்சியாக ஒவ்வொருவராக முறை வைத்து செய்துகொண்டிருக்கிறோம். ஏனெனில் எல்லோருக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம், எப்படி செய்கிறோம், எங்கே செய்கிறோம் என்று எல்லாவற்றையும் பொதுவில் வைக்கிறோம். இது அவசியம். நூறு பேரில் பொறுப்புணர்ச்சியும், தொலை நோக்குப் பார்வையும் ஏதோ அவுட்சோர்ஸ் மூலம் வெளியாட்களிடம் பணி ஒப்படைக்கப்படுவது போல் ஒரு சிலருக்கு மட்டுமே இருந்தால் போதாது. எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

எங்கள் முயற்சிகளின் பலனாக முதல் கட்டமாக, புழுக்கள் உருவாக வேண்டும். அந்தப் புழுக்கள் மண்ணை உழுது தயார் செய்ய வேண்டும். தயாரான மண்ணில் விதைகள் இடைவெளிவிட்டு விழவேண்டும். மழை பொழிய வேண்டும். பூமிக்கிரகம் வாயுக்களால் சமன்பட்டு நிரம்பவேண்டும். இது காற்றில் உள்ள மாசின் அளவை குறைக்க வேண்டும். மாசு குறையக் குறைய சூரிய ஒளி மண்ணில் விழும் விகிதம் அதிகமாகும். இப்படியாக, அந்த நிலம் தயாரானதும், அந்த புழுக்களில் ஒரு பகுதியை எடுத்து வேறெங்கேனும் இட்டு, அங்கும் இலை தழைகளை இட்டு வைக்க வேண்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை பண்படுத்த வேண்டும். மழை ஏமாற்றாமல் பொழிய வேண்டும். இவையனைத்தும் சீராக, அடுத்தடுத்த ஓர் ஒழுங்குடன் தொடர்ந்து சுழற்சியில் நடக்க வேண்டும். நடக்குமா? தெரியவில்லை.

பூமியில் காடுகள் தவிர ஏனைய எல்லாவிடத்திலும் மிகுத்துவிட்ட மாசுக்களால் உருவத்தில் பெரிய மிருகங்களால் காடுகளை விட்டு வெளியேற முடிந்திருக்கவில்லை. பூச்சிகளும், தாவர உண்ணிகளும் விரும்பாத தாவரங்களாய் நாங்கள் ஆகிவிட்டபிறகு இப்போது அவைகளுக்கும் நாங்கள் தேவைப்படுவதில்லை. நான் அவதானித்த வரையில், புலிகள் கூட எங்களைச் சீந்துவதில்லை. ஏதோ சட்டென இந்த பூமியின் எல்லா சுழற்சிகளிலிருந்தும் விடுதலை கிடைத்துவிட்டது போல் உணர்ந்தோம்.

பூமியின் உயிர்களுள் பாதி கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடவல்லது. எஞ்சியவை ஆக்ஸிஜனை வெளியிடுபவை. ஆனால், நாங்கள் இரண்டையும் உட்கொண்டு இரண்டையுமே வெளியிடுவதால், நாங்கள் வெளியிட்டதை நாங்களே உட்கொள்கிறோமோ என்று அவ்வப்போது தோன்றும். இந்தப் பின்னணியில், இப்பூலக இயக்கங்கள் எதற்குள்ளும் எங்களுக்கு எவ்வித வேலையும் இருப்பதாகத் தெரிவதில்லை. சமயத்தில் இந்த உலகத்திலேயே நாங்கள் இருந்தும் இல்லாமல் இருக்கிறோமா என்றொரு எண்ணம் தோன்றும். சமயத்தில், இந்த பூவுலக வாழ்வே வெறும் ஒரு கொடுங்கனவோ என்றும் கூடத் தோன்றும்.

நாங்களாக ஜனித்து பின் பிறழ்வடைந்தும், அல்லது பிறழ்வடைந்த நிலைப்பாட்டிலேயெ ஜனித்தும், எதையும் உணவாக உட்கொள்ளாமலும், எதன் உணவுச் சுழற்சியிலும் பங்கேற்காமலும் இருப்பதால் நாளடைவில் காலம் என்ற ஒன்று முன்னோக்கி நகர்கிறதா, அல்லது பின்னோக்கி நகர்கிறதா அல்லது நகராமல் ஒரே இடத்தில் உரைந்துவிட்டதா என்பதையே உணர முடியாத ஒரு தவிப்பு, பிரயாசை எப்போதும் உடனிருப்பது போலொரு பிரஞை எப்போதுமிருக்கிறது. இது ஒரு பெரும் மன நோய் போல எங்கள் எல்லோரையும் பீடித்திருக்கிறது. யாருடைய, எதனுடைய வாழ்விலும் நாங்கள் இல்லை. எங்கள் வாழ்விலும் யாரும், எதுவும் இல்லை.

இந்தப் பின்னணியில் பார்க்கின், பூமி என்னும் இக்கிரகத்தில் எங்கள் வாழ்க்கை இப்போதெல்லாம், மன நோய் பீடித்த வாழ்வாகத்தான் தெரிகிறது. இதற்கும் கூட இந்த பிரபஞ்சம் ஏதும் சொல்வதில்லை. எதையும் செய்வதில்லை. எனக்கு அவ்வப்போது பல கேள்விகள் தோன்றுகிறது. ஒரு பைத்தியம் போல, செய்வதற்கு ஏதுமில்லாத மலட்டுப் பொழுதொன்றில், இந்தக் கேள்விகளை அசை போட்டபடி இருந்தேன் நான்.

அகோரப் பசி இருந்தும், புலி ஏன் எங்களை உண்ணவில்லை? பார்க்கப்போனால், காட்டுக்குள் புலியின் குகை தேடி வந்த எங்கள் பிரயாணத்தில் எந்தக் கொடிய விலங்கும் எங்களை உண்ணாததை தற்செயல் என்று எண்ணியிருந்தது தவறோ? உருவத்தில் பெரிய மிருகங்களுக்கு மனிதர்களால் இருந்த அச்சுறுத்தல் ஏன் திடீரென்று மறைய வேண்டும்? உருவத்தில் மிக மிகச் சிறிய ஜந்துக்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளச்சொல்லி ஏன் ஆலோசனைகள் தரப்பட வேண்டும்.

இப்படியெல்லாம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோதுதான், மனித இனம் தன் பிழைத்திருந்தலுக்காக கைகொண்ட இன்னுமொரு தீர்வு நினைவுக்கு வந்தது.

‘அந்த ஆண் விந்தணு சுரைக்காய்க்குள் வைக்கப்பட்டு நாற்பது நாள்கள் ஒரு குதிரையின் கர்பப்பைக்குள்ளோ அல்லது அதற்கு சமமான வேறொன்றிலோ அசைவு தெரியும் வரை வைக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யின் அது உருவத்தில் ஓரளவிற்கு ஒரு மனித ஆணையொத்த ஆனால் உடல் முழுவதும் ஒளி ஊடுறுவும் வகையினதாக மாறிவிடும். இதற்குப் பிறகு மனித ரத்தம் அதற்குள் புகுத்தப்பட வேண்டும். இப்படி நாற்பது வாரங்கள் அந்த கரு உயிர்ச் சத்தூட்டப்பட வேண்டும். பிறகு அது மீண்டும் ஒரு குதிரையின் கர்ப்பப்பையில் வளர அனுமதிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு பெண்ணின் கருவில் உருவாகும் மனிதக் குழந்தைப் போல் ஒரு மனித இனம் உருவாகும். ஆனால் அது உருவத்தில் மிக மிகச் சிறியதாக இருக்கும்.’

சித்திரக் குள்ள மனிதர்களை உருவாக்க ஒரு ஜெர்மானிய ரசவாத வல்லுனரால் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறை விளக்கத்தின் ஒரு பகுதி தான் இது. ஆனால், நாங்கள் இவ்விதம் உருவாகவில்லை.

எனக்குத் தெரிந்த அளவில், கருவாக இருக்கையிலேயே வளர்ச்சிக்கான சுரப்பிகளை மட்டுப்படுத்துவதன் மூலம் மனித உடலின் வளர்ச்சியை ஆறிலிருந்து பத்து இன்ச்சுக்குள் குறைத்துவிடுவது தான் தீர்வானது. இப்படிச் செய்வதால், வாயுக்கள், தண்ணீர், சூரிய ஒளி, வசிப்பிடம் போன்றவைகளுக்கான மனித இனத்தில் நாளொன்றின் தேவையின் அளவில்,பெருமளவு குறைந்துவிடுகிறது. இதனால், மனிதர்களின் வாயுத் துய்ப்பு கட்டுக்குள் இருக்கும். இதனால், இயற்கையின் சம நிலையும் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும்.

இது இந்தக் கிரகத்தில் எங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து தக்க வைக்க உதவும். இந்த யோசனை எங்கள் பிரச்சனைகளைத் தற்காலிகமாகத் தீர்த்தது. வேறு வழியின்றி உருவ அளவில் சிறியதாக உருமாறினோம். இதனால் யானைகள் எங்களுக்கு குன்றுகளாயின. உருவத்தில் மிக மிக சிறியதாக இருப்பதாலும், பாதி உடல் தாவரமாகிவிட்டதாலும், புலிகள், சிங்கங்கள் போன்ற பெரிய விலங்குகளின் அகோரப் பசிக்கு நாங்கள் போதாமையாகப் போய்விட்டோமோ என்று தோன்றியது. நியாயமாக, இது என்னை மகிழ்ச்சியூட்டியிருக்க வேண்டும். ஆனால், யாருக்குமே, எதற்குமே தேவைப்படாதவர்களாக ஆகிவிட்டோம் என்கிற உண்மை அனாதையாக்கப்பட்ட உணர்வையே தந்தது.

எனக்கு இப்போது எல்லாமும் புரிந்தது. புலி மட்டுமல்ல, எந்தப் பெரிய கொடிய வன விலங்கும் எங்களை உண்ணப்போவதில்லை. இதனால் தான் நாங்கள் கொடிய விலங்குகளின் வசிப்பிடம் நோக்கிச் செல்ல அறிவுருத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் இது எனக்குக் கேள்விகளையே தந்தது.

ஆயிரம் கோடி ஜீவராசிகள் பிழைத்திருந்த இந்த கிரகத்தில் உயரம் என்பது மனித இனத்திற்கு மட்டும், பிழைத்திருத்தலுக்கு தேவையற்ற ஒன்றாகிவிட்டது. ஆதலால், மனித இனம் சாதுர்யமாக, உயரத்தை கைவிடத் துணிந்துவிட்டது. ஆனால், யானைகள் மனிதர்களை விடவும் உயரமானவை.

எங்கோ ஒரு மூலையிலிருந்து குவிகண்ணாடி ஒன்றின் மூலமாகப் பார்க்கக் கூடியதா பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கு என்பது? ஆனால், அவ்விதம் பார்ப்பவர்களைப் பொறுத்தும் இந்த பிரபஞ்சம் நெகிழ்வுத்தன்மையை கொண்டிருக்கிறது. அவர்களின் பொருட்டும் அது தன்னைத் தானே நெகிழ்த்திக்கொள்ளவும் செய்கிறது. மனிதர்களின் பொருட்டு, கோடிக்கணக்கான விண்மீன் கூட்டங்களில் ஒரேயொரு விண்மீன் கூட்டத்தில் ஒரேயொரு கிரகத்தை சற்றே ஊனமாக்கியது போல. கோயில் வாசல்களிலும், வன உயிரியல் பூங்காக்களிலும் நிற்கக்கூடிய பெரிய யானை ஒன்று, மனிதர்கள் வீசும் ஒரு சிறிய உலோகத்திற்காய் ஒரு கால் தூக்கி ஊனமாய் நிற்பது போல.

கால் தூக்குவதைத்தான் மனிதனென்னும் மிக மிகச் சிறியவன் எதிர்பார்க்கிறான் என்பதை அறிந்து, யானையும் தன் காலை தூக்கிவிடுகிறது. ஆனால், அதில் தான் யானை யானையாகியும் விடுகிறது.

பிரபஞ்சமும் தான்.

அப்படியானால், மனித இனம்?

– ஏப்ரல் 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *