அர்ஜுன், என் எட்டு வயது மகன், தன் அறையிலிருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வந்தான், “அப்பா, இதப் பாருங்க. இணையத்தில கிடைச்சுது!”
அவன் தனது போனை என்னிடம் கொடுத்தான். அதில் ஒரு அழகான இளம் வாலிபன் பரந்த புன்னகையுடன் மிளிரும் புகைப்படம் இருந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம். படத்தின் கீழ், நடிகர் சூர்யா என்று பெயர் இருந்தது.
“அப்பா, இந்த ஆளோட உதடுகளுக்கு நடுவில் என்ன இருக்கிறது? வெள்ளையா எதோ இருக்கே.”
“அதுவா. அதுக்குப் பேரு பல். நம் முன்னோர்களுக்கு அது இருந்தது.”
அவன் ஒரு கணம் யோசித்து வீட்டு கேட்டான், “நமக்கு மட்டும் அது ஏன் இல்லை?”
“நம் முன்னோர்கள் தம் உடலுக்கு சக்தியை பெற திட உணவை சாப்பிட்டார்கள். அந்த உணவை அரைக்க பல்லை பயன்படுத்தினார்கள். நாம் திட உணவை சாப்பிடாததால், நமக்கு அது தேவையில்லை.”
“ஓ.”
என் மனைவி தன் அறையில் இருந்து கத்தினாள், “அர்ஜுன் , மணி 6 ஆகி விட்டது. சூரியன் மறைவதற்குள் வெளியே போய் கொஞ்சம் சக்தியை உடம்பில ஏத்திக்கிட்டு வா!”