நான் இறை தூதுவன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,953 
 
 

சரியாக அறுபதாயிரம் வருடங்கள் கழித்து…..

ஒரு புறம் மிகப் பெரிய புனித விழா ஒன்று கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்து சூரியனிலிருந்து மூன்றாவதாக இருக்கும் அந்த கிரகத்தில். அங்கே ஏற்கனவே மக்களுடன் மக்களாக வாழ்ந்த ஒரு மாபெரும் இறை தூதரைப் பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்தது. கூடியிருந்த மனிதர்கள் எல்லோரும் ஒரு தேவனை நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தார்கள், அந்த இறைவனை அடைய வழிமுறைகள் கற்பித்து விட்டுப் போன அந்த இறை தூதர் சில்லா என்பவரின் கோட்பாடுகள் எனக் கூறிக் கொண்டு ஒன்று புத்தகமாக வெளிவந்திருந்தது. அந்த புத்தகத்தில் இறைவன் செவ்வாயைய்ப் படைத்தார், அதற்கு வெளிச்சம் தருவதற்கு சூரியனைப் படைத்தார் என்றும், இரவு வெளிச்சத்திற்கு போபோஸ், டெய்மோஸ் எனும் இரண்டு நிலாவையும் படைத்தார் எனவும் மனிதர்களாலேயே எழுதப் பட்டிருந்தது. அது இறை தூதர் சொன்னதல்ல. அதே சமயத்தில் அதிலிருந்து சில நூறு வருடங்களுக்கு முன்பு தோன்றி மறைந்த இன்னொரு இறை தூதராக கருதப்பட்ட பயஸ் என்பவர் கூறிய வழிமுறைகளின் படி வாழ்ந்து வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் கடுமையான மன வேறுபாடு இருந்தது. மிகப் பெரிய போர்க் கருவிகளுடன் இன்னொரு புறம் இரு தரப்பினரும் பெரிய திடல் ஒன்றில் சண்டையிடுவதற்காக தயாராக இருந்தனர். அப்பொழுது அழிந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் காப்பாற்ற ஒரு புது இறை தூதர் ஒருவர் வானிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர் அவருக்குக் கற்பிக்கப்பட்டதை எடுத்துரைத்து மனிதர்களைச் சமாதானப் படுத்த வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கையிலிருந்த தமிழில் எழுதப் பட்டிருந்த ஒரு குறிப்பேட்டை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். இந்த மூன்றாவது கிரகத்தில் வாழ்பவர்களுக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். இதுவரை வந்த எல்லா இறை தூதர்களும் கொண்டு வந்த அந்த அந்த புத்தகத்தில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள், ஹிந்தி எழுத்துக்கள், உருது எழுத்துக்களும் தேவ பாஷையாக நினைக்கப் பட்டது. அது இறை தூதர்களுக்கு மட்டுமே புரியுமெனவும் சித்தரிக்கப் பட்டது. இருப்பதிலேயே குறைவாகப் பேசப்பட்ட மொழிகளை எடுத்து தேவபாஷைக்குப் பயன்படுத்திக் கொண்டனர் இறை தூதர்கள்.

அப்பொழுது சூரிய குடும்பத்தின் மூன்றாவது கிரகமாக செவ்வாய் இருந்தது. ஆமாம் ஒரு மிகப் பெரிய எரிகல் ஒன்று சுமார் கி.பி. 3200 வது ஆண்டு பூமியைத் தாக்கியது. அப்பொழுது அந்த எரிகல்லின் விசையை தாங்கிக் கொள்ள முடியாத பூமி வெடித்துச் சிதறியது, சுமார் 48 மணி நேரத்தில் அந்த இடத்தில் ஏற்பட்ட வேகமான வெற்றிடத்தால் செவ்வாய் கிரகம் பூமியிருந்த இடத்திற்கு இழுக்கப் பட்டது. இறுதியில் தனது பாதையைக் கடந்து பூமியின் பாதைக்கும் வரமுடியாமல் தனது இயல்பு பாரம் காரணமாக சற்றே பூமி இருந்த இடத்திலிருந்து 5000 கி.மீ தூரத்தில் நிலைபெற்று சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. இதனால் ஏற்கனவே இருந்த இரண்டு துணைக் கோள்களுடன் உடைந்து சிதறிய சின்னச் சின்ன துண்டுகளும் சேர்ந்து மொத்தம் 6 துணைக்கோள்களுடன் செவ்வாய் சுற்ற ஆரம்பித்தது. ஆனால் இரண்டு மட்டும்தான் இரவில் தெரியும். மற்றவை மிகவும் சிறியதாக இருப்பதால், அது கொஞ்சம் பெரிய நட்சத்திரம் அளவிற்கே தெரியும். இந்த நிகழ்வு நடந்த பொழுது பூமியின் விஞ்ஞான வளர்ச்சியினால் ஒளி வேகத்தை தொட்டுவிடும் மனிதர்கள் பயணிகக் கூடிய வானூர்திகள் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது, மேலும் மிகப் பெரிய வான் திடல் மூன்றும் அமைக்கப் பட்டிருந்தது. இந்த பேராபத்தின் பொழுது உலக பணக்காரர்கள் பலரும், அந்த தொழில்நுட்பம் அறிந்த வல்லுனர்களும் சரியாக சூரியனிலிருந்து 4.3 ஒளி வருடத் தொலைவில் இருக்கும் ப்ராக்ஸிமா சென்ச்சரி எனும் சூரிய குடும்பத்திற்கு பயணமானார்கள். அவர்கள் மொத்தம் 350 பேர் கொண்ட குழு. அவர்கள் அங்கே சென்று சேருவதற்கு 6 வருடம் ஆகியது. பின்னர் அங்கேயே வசிக்கக் கூடிய அளவிலான ஒரு இடத்தில் இறங்கி 58,802 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

சுமார் கி.பி. 3200 இல் ஏற்பட்ட இந்த சம்பவத்திற்குப் பிறகு 45000 வருடங்களில் செவ்வாய் கிரகத்தில் வெகுவாக ஆக்ஸிஜனும், தண்ணீரும் பெருகத் தொடங்கியது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் இருந்ததும் அதன் படிமங்களும் மனிதர்கள் கண்டு பிடித்திருந்தனர். அந்த சமயத்தில் அங்கே ப்ராக்ஸிமாவிலிருந்து மனிதர்கள் செவ்வாய்க்கு வந்திறங்கினார்கள். அவர்கள் திரும்ப அந்த ப்ராக்ஸிமாவிற்குச் செல்லவில்லை. காலப் போக்கில் சுமார் 13,800 வருடங்களில் மனிதர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருந்தது. சென்றவர்கள் திரும்பி வராததால் அங்கே அனுப்பி வைக்கப் பட்ட வெவ்வேறு மனிதர்கள் செவ்வாய்க்கு வந்தார்கள். அவர்கள் வெவ்வேறு இடத்தில் இறங்கி மனிதர்களைச் சமநிலைப் படுத்த பல வழிமுறைகள் கற்பித்து பின்னர் இறந்து போனார்கள். அவர்கள் தான் வாழ்ந்த ப்ராக்ஸிமா எனும் இடத்தில் சொர்க்கம் நரகம் இருப்பதாகவும் அங்கே வாழ்பவர்கள் இறைவன் எனவும் இவர்கள் செய்யும் பாவங்களிற்கேற்ப அங்கே தண்டனை வழங்கப் படும் என்றும் பயமுறுத்தினர். அப்படி வந்த அந்த இருவர்தான் பயஸும், சில்லாவும்.

தன்னுடைய பெரும்பணியை மட்டும் கருத்தில் கொண்டு செவ்வாயில் வாழும் மனிதர்களை நன்னெறிப் படுத்த வந்து கொண்டிருந்தார் அவர் பெயர் தில்கி. ஏற்கனவே சில்லா எனும் இறைதூதர் வந்த பிறகு அந்தப் பகுதியில் அதுநாள் வரை இருந்த மக்கள் சிலபேர் இடம் பெயர்ந்து வசிக்கும் இடம்தான் இப்பொழுது தில்கி வந்து இறங்கும் இடம். இவர்களுக்கு தில்கி என்ற பெயரில் இறை தூதர் ஒருவர் வருவார் என்பது பயஸ் என்பவர் சொல்லிச் சென்ற சில குறிப்புகளை வைத்து அந்த மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அங்கே வந்து இறங்கிய தில்கி அந்த மக்களுக்கு தாந்தான் தில்கி என்றும், தான் இறைதூதுவன் என்றும் அறிமுகப் படுத்திக் கொண்டார். இங்கே நடப்பதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தனர் இறைவனாகக் கருதப்படும் ப்ராக்ஸிமாவில் வாழும் பழைய பூமியின் மனிதர்கள்…..

Print Friendly, PDF & Email

1 thought on “நான் இறை தூதுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *