சுற்றுலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 55,858 
 

நான் ஒரு முறை ஆழ மூச்சிழுத்து விட்டேன். அது எனக்கு தேவையே இல்லை எனினும், நானே என்னை ஒரு அந்நிய மண்ணில் வேறுபடுத்திக் காட்ட விரும்பவில்லை என்பதால் அதை அவ்வப்போது நேரம் பார்த்துச் செய்ய வேண்டி இருந்தது.

பிறகு நான் அந்த பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை அண்டினேன். அங்கு ஊரே கூடி இருந்தது. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது அந்தப் பள்ளிக்கூடம். கடந்து போகும் மேகங்கள் அந்த மலையின் இடுப்பைத்தான் தொட முடிந்தது. அத்தனை உயரம் அந்த மலை. இருப்பினும் ஜவ்வாது மலையின் உச்சி பனிக்குல்லாய் உடுத்தியிருக்கவில்லை. இந்த கிரகத்தின் இந்தப்பகுதி பூமத்திய ரேகைக்கு வெகு கீழே அமைந்திருப்பதால் அப்படி இருக்கலாமென்று தோன்றியது.

இன்னும் இரவு கனிந்திருக்கவில்லை. நிலாவொளி அந்த இடத்தில் வெளிச்சமூட்டியிருந்தது. விளக்கு வெளிச்சப்புள்ளிகளால் பண்டிகைக்கென அலங்காரப்படுத்தப்பட்டிருந்த அந்த இடம் ஒரு அழகான ஆயில் பெயிண்டிங் போலிருந்தது. மேடை நாடகம் துவங்க இன்னும் நேரமிருந்தது. அங்கே கூடியிருந்தவர்களை பொழுதுபோக்குவிக்கும் நோக்கில் கரகாட்டம் என்றொரு கலாச்சார நடனம் நடந்தேறிக்கொண்டிருந்தது.

அங்கே கூடியிருந்த குழந்தைகளை, அளவில் அத்தனை பெரியதாக இல்லாத ரங்கராட்டினம் ஒன்று மேலும் கீழுமாக ஒரு வட்டப்பாதையில் நகர்ந்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது. சக்கர வண்டிகளில் அமைக்கப்பட்டிருந்த நடமாடும் கடைகளில் கையால் செய்யப்பட்ட இனிப்புகள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவைகள் சற்றே வினோதமான கடைகள். நான்கு மறுங்கிலும் சைக்கிள் சக்கரங்களால் தாங்கி நிறுத்தப்பட்டிருக்கும் இரும்புக்கூடொன்றின் மேல் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட தட்டி அது. அதன் மீது லாந்தர் ஒன்று வெளிச்சம் கூட்ட வைக்கப்பட்டிருந்தது. இந்த லாந்தர்களிலிருந்து வெளிப்படும் குறைவான வெளிச்சம் அந்த ஆரோக்கியமற்ற இனிப்புகளை விற்றுவிட உதவியது. நான் அந்த உணவுகளைச்சுற்றிலும் நிறைய ஈக்கள் இருக்கப் பார்த்தேன். ஆயினும், மெல்லிய வலை போன்ற துணியால் செய்யப்பட்ட குடையால் அந்த இனிப்புகள் ஈக்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தன.

நான் அந்த கடைகளினூடே, அவைகளைச்சுற்றிலும் சிறு சிறு குழுக்களாய் நின்றுகொண்டிருந்த மக்களைக் கடந்து நடந்தேன். நான் பூமி ஆண்கள் குறித்து கேள்வியுற்றிருக்கிறேன். என் போன்றவர்களுக்கு பூமி கிரகம் ஒரு நல்ல சுற்றுலாத்தளம். என் போன்று சிலர் தெற்காசிய பகுதிகளில் சுற்றுலா பயணப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் ரஷ்ஷியாவுக்கும் கூட சென்றிருக்கிறார்கள். பூமி மனிதர்கள் அழகானவர்கள் என்று கேள்வியுற்றிருக்கிறேன். இந்த பூமி கிரகம் சிலிக்கானால் உருவானது, இங்குள்ள மனிதர்கள் கார்பனால் உருவானவர்கள்.

சில காரணங்களால், பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட பிற கிரகங்களில் உள்ள உயிர்களுள் எதுவும் பூமி மனிதர்கள் போல் அழகானவைகளாக இல்லை. இது தான் பிற கிரகங்களிலிருந்து பூமி கிரகத்தை பிரத்தியேகமானதாக, தனிச்சிறப்புமிக்கதாக ஆக்குகிறது. அதனால் தான் எங்களைப்போன்றவர்களுக்கு பூமி கிரகம் ஆகச்சிறந்த சுற்றுலாத் தளமாகவும் இருக்கிறது.

தெற்காசியாவின் இந்தப்பகுதியில் ஆண்கள் சற்று கருப்பாக இருந்தாலும், நிலாவின் சன்னமான ஒளியில் அவர்களின் தோல் மின்னுகிறது. நான் பூமிக்கு வருவதற்கு முன்பே இவர்களை பார்த்திருக்கிறேன். எங்கள் கிரகத்தில், சில குறிப்பிட்ட சமூக இடங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிற கிரகங்களுக்கு பயணிக்க முடியும். அவர்களே பூமிக்கு வந்து, பூமியின் சுகங்களை அனுபவித்துவிட்டு திரும்பியிருக்கின்றனர். சிலர் ஒரு படி மேலே போய், தங்கள் மரபணுக்களைக் கொண்டு பூமிப்பெண்களின் மரபணுக்களை வைத்து கலப்பினங்களை உருவாக்க முயன்றிருக்கின்றனர். அந்தக் குழந்தைகள் பூமி கிரகத்தின் தன்மைகளோடு தங்களை பொருத்திக்கொள்ள இயலாமல் மரணித்தும் இருக்கின்றன. அவைகளை பூமியிலேயே புதைத்துவிட்டு அவர்கள் திரும்பியுமிருக்கிறார்கள்.

கருப்புச் சந்தையில் இது போன்ற அனுபவங்களை நாங்கள் பெற்று, பார்த்து ரசித்திருக்கிறோம். அவைகளிலிருந்து பூமியில் மனிதர்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கிறார்கள் என்று கண்டுகொண்டோம். அதிலும் பூமிப் பெண்களின் தேகம் அத்தனை வசீகரமாக இருக்கிறது. பூமிப்பெண்ணின் குலுங்கும் ஸ்தனங்களில் எந்த கிரகவாசியும் சொக்கிப்போவான். கார்பன் சார்ந்த சிலிக்கானை அடிப்படையாகக்கொண்ட உடல்கள் பிரபஞ்சத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பினும் பூமி கிரகத்தில் இருப்பது போல் வேறெங்கும் இத்தனை வசீகரமாக இல்லை.

எனக்கு குறிப்பாக கருப்பான, அதே நேரம் புஜங்கள் உயர்ந்த, மார்பு விடைத்த ஆண்களைத்தான் பிடிக்கிறது.

பூமி கிரகத்திற்கு வர திட்டமிடுகையில் தெற்காசியா, தெற்காப்பிரிக்கா இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டி இருந்தது. நான் தெற்காசியாவை தேர்வு செய்தேன். அதற்கு காரணம் இருந்தது. இங்குதான் நறுமணப்பொருட்களும், மூலிகைகளும் விளையக்கூடிய மண் இருந்தது. ஆம். பூமிக் கிரகத்தில் எல்லாமும் எல்லா இடத்திலும் விளைவதில்லையாம். நான் இந்த மூலிகைகள் குறித்து கேள்வியுற்றிருக்கிறேன். இந்த மூலிகைகள் இந்த கிரகத்து ஜீவராசிகளை என்னவெல்லாம் செய்கின்றன என்பதை பார்க்க ஆர்வமாக இருந்தேன்.

எனக்கு பூமி மனிதர்களிடம் மிகவும் பிடித்த விஷயம், அவர்களின் அப்பாவித்தனம் தான். நூற்றாண்டுகளாக நாங்கள் அவர்களை சந்திக்க தொடர்ந்து பூமிக்கு வருகிறோம், ஆயினும் அவர்களுக்கு நாங்கள் இன்னமும் பேய்கள் தான். பிசாசு, பிடாரி என்று பல்வேறு பெயர்களை எங்களுக்கு வைத்திருக்கிறார்கள் அவர்கள். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள அனுப்பிய அத்தனை செய்திகளையும் நாங்கள் புறக்கணித்திருக்கிறோம். நூற்றுக்கு தொண்ணூறு சதவிகித பூமி மனிதர்களுக்கு இன்னொரு கிரகம் இருக்கலாம் என்பது குறித்த எந்த பிரஞையும் இல்லை. அவர்கள் பெண்களுடனும், மதுவுடனுமே தங்கள் காலத்தை போக்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமாகிறது என்று நான் வியந்திருக்கிறேன்.

அவர்களின் தர்க்கம் என்னானது? அவர்களின் எதையும் தெரிந்துகொள்ளத்தூண்டும் ஆர்வம் என்னானது?

எங்களைப்பற்றி பூமி கிரகத்தில் யாருக்கும் தெரியவில்லை என்பது முழுக்க உண்மையும் இல்லை. சிலருக்கு எங்கள் மேல் சந்தேகங்கள் இருக்கிறது. சிலர் எங்களை பார்த்தும் இருக்கிறார்கள். அதாவது, எங்களை என்றால், எங்களை அல்ல, எங்கள் நிழல்களை. ஆனால் அவைகள் எல்லாம் ஐயங்கள் தான். ஐயங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்களுக்கு இரவுகளில் வரும் பற்பல கனவுகளுக்கும் ஐயங்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கப்போவதில்லை. நாங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை. அவர்களே அவர்களுக்கு தெரிந்ததை வைத்து தங்களைத் தாங்களே குழப்பிக்கொள்வார்கள். ஆகையால், அவர்களை அவர்களின் ஐயங்களை நாங்கள் பொருட்படுத்தியதே இல்லை.

நான் ஒரு புடவையும், ரவிக்கையும் அணிந்திருந்தேன். அது அவர்கள் என்னை தங்களில் ஒருவராக பார்க்க வேண்டித்தான். அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் போல என்னை நான் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய என்னுடைய பிரயத்தனங்கள் சற்று சுலபமாகத்தான் இருந்தது. ஒரு ஒன்பது கஜ புடவையை என்னைச் சுற்றி, சுற்றிக்கொண்டாலே போதுமானது.

என் கூந்தலில் ஜாதி மல்லிப்பூ சரத்தை சூடியிருந்தேன். இந்த பூவின் வாசம் ஆண்களை ஈர்க்குமாம். இந்தப் பகுதியில் புடவைகள் தான் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆடையாக கருதப்படுகிறது. இங்குள்ள ஆண்கள் புடவை அணிந்த பெண்களை, அதில் தெரியும் அவளில் சதைத்திரளை, வளைவுகளை, ஏற்ற இறக்கங்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்…. இல்லையில்லை.. வெறிக்கிறார்கள்.. இந்தப் பெண்கள் குனிய நேர்கையிலெல்லாம் இந்த ஆண்கள் அவளின் மார்புப்பகுதியில் எதையோ தேடுகிறார்கள். இந்த நடத்தையெல்லாம் எனக்கு கேளிக்கையாக, நகைப்பைத் தருவனவாக இருந்தது.

இந்த கிரகத்தின் பிற பகுதிகளின் பெண்கள் மிகக்குறைவாகத்தான் ஆடைகள் அணிகிறார்கள். இதிலிருந்து நான் ஒன்றை புரிந்துகொண்டேன். பூமி கிரகத்தின் இந்தப் பகுதியில் , ஒன்று எத்தனை மறைக்கப்படுகிறதோ அத்தனைக்கு எதிராளியின் ஆர்வத்தை தூண்டுகிறது என்பதுதான்.

எனக்கு நேரமிருக்கவில்லை என்பதால் நான் மார்புக்கச்சை அணியவில்லை. நாளை, நான் என் கிரகத்திற்கு திரும்ப வேண்டிய நாள். நான் சற்றே உயரமான, இரட்டை நாடி உடல் ஒன்றை தேர்வு செய்து அதை என் உடலாக்கியிருந்தேன். அந்த உடலில் கண்கள் பெரிதாகவும், இதழ்கள் சற்றே தடித்தும், முகம் வட்டமாகவும், தோள்கள் அகண்டும், மார்பு திரண்டு விம்மியும், இடை சிறுத்தும், பிருஷ்டம் பெறுத்தும், அடிவயிறு உள்வாங்கியும், தொடைகளில் சதைத்திரள் கூடியும் இருந்தது. இந்த கிரகத்திலிருக்கும் ஆண்கள் இப்படிப்பட்ட உடலென்றால் பித்தாகிவிடுவார்கள் என்று கேள்வியுற்றிருந்தேன்.

நான் அந்த திருவிழா பூண்ட இடத்தினூடே நடந்து சென்றபோது ஆண்கள் என்னை வெறிப்பது தெரிந்தது. பிற பெண்கள் மார்புக்கச்சை அணிந்திருந்தார்கள். தங்கள் தோழிகளுடன் சின்னஞ்சிறு குழுக்களாக நின்றிருந்தார்கள். எனக்கு யாரையும் தெரியாது என்பதால் அந்தத் திடலில் எங்கு நின்று பார்த்தால் அந்த இடம் முழுமையும் தெரியுமோ அங்கு நான் தனியாக நின்றுகொண்டேன். எனக்கு பின்னால் மலை அடிவாரத்துக்கு இட்டுச்செல்லும் காடு இருந்தது.

சில நாழிகைகள் கழித்து என் உடலின் ஸ்தனங்கள் மீது சில ஆண்களின் கண் பார்வை படர்வதை நான் அவதானித்தேன். அவர்களின் பார்வைக் கோணத்தை அவதானித்ததில் அது என் உடலின் மார்பின் மீதும், பிருஷ்டத்தின் மீதும் மேய்வதை உணர முடிந்தது. அந்தக் காட்சி அவர்களுக்கு எப்படி இருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த காட்சியை அவர்களின் உடல் எப்படி மொழிபெயர்க்கிறது, எவ்விதம் அவர்களின் சுரப்பிகளை தூண்டிவிடுகிறது, எப்படி அவர்களின் உள் உடல் உறுப்புகள் ஒருங்கிணைந்து காமத்தின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி அவர்களை செலுத்துகிறது என்று நான் தெரிந்துகொள்ள விரும்பினேன்.

அவர்களின் பார்வையை நான் பார்த்தும் பாராமல் தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தேன். ஆனால், என்னை அவர்கள் தங்களின் மனதுக்குள் எப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பார்கள் என்று என்னால் கிரகிக்க முடிந்தது. அது ஒரு விசித்திரமான அனுபவம். போதை தரக்கூடிய ஒன்றுதான்.

அவர்கள் மூன்று பேராக இருந்தார்கள். அவர்களின் ஒருவன் என்னை நோக்கி நகர்ந்து வந்தான். அதை நான் எதிர்பார்த்தேன். ஏனெனில், ஏனைய பெண்கள் போல் நான் மார்புக்கச்சை அணிந்திருக்கவில்லை. தவிரவும், நான் அங்கே பெண்கள் கூட்டத்தில் ஒருத்தியாகவும் நிற்கவில்லை. தனித்திருந்தேன். அதை அவர்கள் அவதானித்திருக்க வேண்டும். தலை நிறைய மல்லிகைப்பூ. அடர்ந்த உதட்டுச்சாயம். பூமியின் இந்தப்பகுதியில் விலைமாதர்கள் இப்படித்தான் தோன்றுவார்களாம். அதை அப்படியே என் உடலில் பிரதிபலித்திருந்தேன். அது கச்சிதமாக வேலை செய்வதாகத் தோன்றியது.

என்னை நோக்கி வந்தவன் உயரமாக, ஒல்லியாக, அகண்ட தோள்களுடன், புஜங்களுடன் இருந்தான். மார்பு கட்டாக இருந்தது. கத்தியின் இதழ் போல வசீகரமாக இருந்தது. அவனுடைய சதைத்திரள் கூடிய தொடைகளை அவன் அணிந்திருந்த, காற்றில் விலகி படபடக்கும் லுங்கியினூடே என்னால் பார்க்க முடிந்தது. அதில் ரோமங்கள் இருந்தன. புழுதி லேசாக இருந்தது. உடல் வலு தேவைப்படும் ஒரு செயலை தொடர்ந்து செய்வதின் மூலமாக சதைகள் பக்கவாட்டில் ஒதுங்கி, முட்டிப்பகுதியில் ஒருங்கிணைந்து ஒரு விதமான வசீகரம் கூடி இருந்தது. அவனின் அடி வயிற்றுப்பகுதி உள்ளடங்கி இருந்தது. அவன் நடையில் இருந்த லேசான தள்ளாட்டம் அவன் மது அருந்தியிருக்கவேண்டும் என்று என்னை ஊகிக்கவைத்தது. அவனைத்தொடர்ந்து இன்னும் இருவர். மூவரின் நடையிலும் ஒரே விதமான தள்ளாட்டம்.

“நான் நடராஜ். நீ என்னை நட்டி என்று கூப்பிடலாம்” என்றான் முதலாவதாக வந்தவன் என்னை அண்டி.

“நான் கணேஷ். கன்ஸ் என்று கூப்பிடு”

“நான் வேந்தன். வெட்டி என்று கூப்பிட்டு என் தொழிலை உலகறியச்செய்யாதே”

கணேஷும், வேந்தனும் தொலைவிலிருந்தே உரக்கச் சொல்லி சிரிப்பூட்டினார்கள்.

“ஹாய்” என்று நான் பொதுவாகச் சொன்னேன்.

“நீ வெளியூரா?’ என்றான் நட்டி.

“ஆமாம்.. திருவிழா பார்க்க வந்தேன்” என்றேன்.

“எந்த ஊரு?” என்றான் நட்டி தொடர்ந்து.

நான் அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று எனக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து பூமிக்கு வந்து போக வேண்டுமானால், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பது குறித்து யாருக்கும் சொல்லக்கூடாது என்பது எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதிகளுள் ஒன்று.

“பக்கத்துலதான்” என்றேன் நட்டியிடம்.

அது அவனை ஆச்சர்யமூட்டியிருக்க வேண்டும். அவனது புருவங்கள் சுருங்கின. அவன் அதற்கு மேல் என் பூர்வீகம் குறித்து பேசாமல் இருந்தால் போதுமென்று இருந்தது.

நட்டி என் வலது கையை பிடித்தான். அவனது கரம் கரடு முரடாக இருந்தது. அவன் தொடர்ந்து காட்டுக்குள் நுழைந்தான். நான் ஒத்துழைத்தேன். உடன் நடந்தேன். லேசாக திரும்பிப் பார்த்தேன். பின்னால் வேந்தனும், கணேஷும் சற்று தொலைவில் நடந்து வந்துகொண்டிருந்தனர். நடையில் லேசான தள்ளாட்டம். திருவிழா கூட்டத்தின் இரைச்சல் மெல்ல மெல்ல தேய்ந்துகொண்டிருந்தது.

நட்டி ஒரு சின்னப் பையை காட்டினான். சன்னமான ஒளியில், என்னால் அது ஒரு ஆணுறை என்று பகுக்க முடிந்தது. அது அவனது உள்நோக்கத்தை எனக்கு உணர்த்தியது. நான் பூமியில் இருக்கும் காலகட்டத்தில் என்னை எவ்வித பூமத்திய நோயும் பீடித்துவிடக்கூடாது. அப்படி ஏதும் பீடித்துவிட்டால் நான் என் கிரகத்திற்கு திரும்பிப்போக முடியாது.

நடந்து நடந்து நாங்கள் வந்து சேர்ந்துவிட்டிருந்த இடத்தில் பறவைகளின் கீச்சுக்குரல்கள் மட்டுமே கேட்டது. நட்டி அவன் அணிந்திருந்த லுங்கியை கழற்றி தரையில் விரித்தான். காட்டின் தின்மையால் அங்கே இருளாக இருந்ததால் அந்த லுங்கிதான் அவன் அணிந்திருந்த ஆடைகளில் கடைசியா என்பது எனக்கு சரிவர ஊர்ஜிதமில்லாமல் இருந்தது. அங்கே ஒரு மங்கலான லாந்தராவது இருந்திருக்கலாம் என்று ஒரு கணம் தோன்றியது. அவன் அந்த சின்னப் பையைப் பிதுக்கி ஆணுறையை எடுத்து தன்னுறுப்பில் அணிவதை நான் பார்த்தேன்.

பின் அவன் என் கையை பிடித்து இழுத்தான். அவன் கால்களில் தடுக்கி நான் அவன் லுங்கியில் விழுந்தேன். அவன் என்னை வேண்டுமென்றே தான் தடுக்கிவிழ வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தொடர்ந்து அவன் என் மீது விழுந்தான். பின் படந்தான். அவன் ஏதோ ஒரு அவசரத்தில் இருப்பது போல் பட்டது. எங்கள் இதழ்கள் தழுவின. எங்கள் காமத்தின் இந்தப் பகுதி குறித்து எனக்கு எவ்வித அறிவுருத்தலும் இல்லை.

அங்கும் இங்குமாய் தடவிப்பார்த்துவிட்டு, “நீ கன்னி கழியாதவளா?” என்றான் நட்டி.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆதலால் மத்திமமாக தலையசைத்தேன்.

அவன் என் மீது சுற்றிக்கிடந்த புடவையை அவிழ்த்தான். பின் என் ரவிக்கையை விலக்கினான். அவன் முகத்தை என் கழுத்தின் மீதும் மார்பின் மீதும் தேய்த்தான். அதில் ஒரு அவசரம் இருந்தது. அவன் விரல்கள் என் உடலெங்கும் ஊர்ந்தன. தடவின. ஆங்காங்கே கசக்கின. பிசைந்தன. அவனின் செய்கை எல்லாமும் எனக்குள் நகைப்பை உண்டாக்கின.

நானும் அவனுக்கு ஈடாக என் விரல்களை அவன் உடல் மீது செலுத்தினேன். அவனின் சருமம் உணர்ந்தேன். என் புற உடலின் சருமம் போன்றே அதுவும் இருந்தது. அவனின் எலும்புகளை உணர முடிந்தது. அவன் ஒல்லியான தோற்றத்துடன் இருப்பினும் மிகவும் கனமாக இருந்தான். அவனுடைய கைகள் என் புற உடலின் மார்புப்பகுதியிலும், பிருஷ்டத்திலும் அதிக கவனம் செலுத்தியது. சற்று நேரத்தில் வேந்தனும், கணேஷும் சேர்ந்து கொண்டார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவர்களை நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் வரவை நான் ஒரு தொந்திரவாகவே கருதினேன். கணேஷும், வேந்தனும் என் கால்களை வலுவாக அழுத்திப் பிடித்துக்கொண்டனர். நான் எதிர்க்க முற்பட்டேன். அப்போதுதான் அவர்களில் ஒருவன் என் முகத்தில் ஓங்கிக் குத்தினான். நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் நினைவிழந்தது கூட எனக்கு நினைவிருக்கவில்லை.

எத்தனை நேரம் சுய நினைவற்று இருந்தேன் என்று நினைவில்லை. நான் எழுந்த போது, வேந்தன் என் கால்களை இறுக்கமாக பிடித்திருந்தான். நட்டியின் கையில் ஒரு நீளமான மரத்தாலான முனை ஒடுங்கப்பட்ட சிறிய கட்டை இருந்தது. தோராயமாக அது ஒரு பத்து இன்ச் நீளம் இருந்தது. அதை அவன் என் புற உடற்கூட்டின் துளையின் உள்ளே செலுத்தினான். அந்தத்துளை வெறும் ஒரு ஏற்பாடு மட்டுமே. அதன் நோக்கம், பூமிப்பெண்ணை உடல் அளவில் ஒத்திருப்பது மட்டுமே. அந்த துளையில் ஒரு பத்து இன்ச் நீளமுள்ள ஒரு பொருள் செலுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது என் அவதானமாக இருந்தது, அந்தத் துளை மேலும் ஆழமாக கிழிக்கப்பட்டாலொழிய.

என் புற உடற்கூட்டில் எதுவோ கிழியும் சத்தம் லேசாக மிக மிக சன்னமாக கேட்டது. சற்றைக்கெல்லாம் அந்த பொருளை உறுவிவிட்டு நட்டி என் மீது மீண்டும் விழுந்தான்.

பின் அவன் என் உடலை மூர்க்கமாக குலுங்கச்செய்தான். எனக்கு அவன் செய்தது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது இந்த நிகழ்வில் எனக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. நான் அதை அதன் போக்கிலேயே தான் இயங்கி அதிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள வேண்டும். சற்றைக்கெல்லாம் நான் கட்டுப்பாடிழந்தேன். என் புற உடற்கூட்டின் உள்ளே எதுவோ அன்னியமாக நுழைந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன்.

அது நடந்திருக்கக்கூடாது என்று மட்டும் எனக்கு ஊர்ஜிதமாகத்தான் தெரியும். என் புற உடற்கூடு என் உடலை பாதுகாக்கத்தான். என் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அவனை தள்ளிவிட்டு நான் எழுந்தேன். என்னை பலவந்தமாகப் பிடித்திருந்த அந்த இருவரும் அதிர்ந்து இரண்டடி தள்ளிப்போனார்கள். நட்டி என்னை ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து பார்த்தான். நான் என் புற உடற்கூட்டின் மீது என் விரல்களை செலுத்தினேன். சற்று நேர திணறலுக்குப்பின் அந்த கிழிசலை நான் கண்டுபிடித்தேன்.

நட்டி என் அருகே மீண்டும் வந்து என்னை இறுக்கமாக பிடிக்கப்பார்த்தான். என் உடல் பலத்தையெல்லாம் ஒன்றுகூட்டி அவனை நான் தள்ளிவிட்டேன். என் போன்றவர்களின் உடல் தகுதியின் தரத்தில் அது ஒரு மூர்க்கமான உதறல். நான்கைந்து பூமி மனிதர்களின் பலம் ஒட்டுமொத்தமாக. அவன் பத்துப்பதினைந்து அடி தள்ளிப்போய் விழுந்தான். மற்ற இருவரும் என்னையும் நட்டியையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவர்கள் முகத்தில் பீதி படர்ந்தது.

நட்டி பயன்படுத்திய ஆணுறை அங்கே கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தேன். திரவத்தின் பிசுபிசுப்பு அதில் இருந்தது. அதன் முனையில் லேசாக கிழிந்திருந்தது. என் புற உடற்கூட்டில் கிழிசல் நேர்ந்த இடத்தை தொட்டுப்பார்த்தேன். அங்கும் அதே பிசுபிசுப்பு. அந்த இடம் கல் போல் இருந்தது. அது நான் எதிர்பார்த்தது தான். அப்படித்தான் என் போன்றவர்களின் சருமம், அன்னிய திரவங்களை எதிர்கொள்ளும்.

சற்று நேரத்தில் நான் உடல் சுகவீனமாக உணர்ந்தேன். எது என் அசலான உடலை தீண்டியதோ அது என் உட்புற உறுப்புகளின் இயக்கங்களை சிதைக்கத்துவங்கியிருந்தது. அது ஒரு தொற்று தான். அந்த தொற்றோடு நான் என் கிரகத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை.

அவர்கள் மூவரும் இப்போது என்னை நோக்கி வந்தார்கள். நான் ஓட முயற்சித்தேன். அவர்கள் சற்று தொலைவில் என்னை பின் தொடர்ந்து ஓடி வந்தார்கள். நான் என் புற உடற்கூட்டை களைத்து கீழே வீசி அதன் மீது ஏறி நின்றுகொண்டேன். பின் திரும்பி அவர்கள் வருகிறார்களா என்று பார்த்தேன்.

“அவள் எங்கே போனாள்?” என்றான் நட்டி.

“தெரியலை. ஆனால் அதிக தொலைவு போயிருக்க முடியாது” என்றான் வேந்தன்.

அவர்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தார்கள். என்னைத் தேடினார்கள். அவர்களில் கணேஷ் ஒரு சிகரெட் பெட்டியைத் திறக்க, ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டார்கள். பின் வேந்தன் அந்த சிகரெட்டுகளை பற்ற வைக்க, அந்த மெல்லிய ஒளியில் அவர்களின் முகங்களை நான் திருத்தமாகப் பார்த்தேன்.

“ஆளுக்கொரு திசையில தேடுவோம். யாரு அவளை பாத்தாலும் விசிலடிக்கணும்” என்றான் நட்டி.

“சோர்வா இருக்கு நட்டி. ” என்றான் வேந்தன். அவன் முகத்தில் களைப்பு அப்பிக்கிடந்தது.

“இந்தா.. இந்த பாறையில கொஞ்சம் நேரம் உக்காரு” என்றான் கணேஷ் என்னைக்காட்டி.

“நான் இங்க நிறைய தடவை வந்திருக்கேன். ஆனா, இந்தப் பாறையை பாத்தது இல்லையே” என்றான் வேந்தன்.

“எங்க மாமா சொல்வாறு. மலையிலேர்ந்து அப்பப்போ பாறை உருண்டு வருமாம்” என்றான் நட்டி.

சற்று நேரத்தில், புலி ஒன்று உறுமுவது கேட்டது. அது அவர்களை பீதியடையச் செய்திருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் கிராமத்தை நோக்கி அவர்கள் ஓடினார்கள்.

அவர்கள் பார்வையிலிருந்து அகல, புலி ஒன்று என் மீது தாவி ஏறி கால்கள் பரப்பி அமர்ந்தது. தொலைவில், திருவிழாக் கோலம் பூண்ட திடலிலிருந்து லாந்தர் ஒளி தெரிந்தது. அந்த ஒளி, விண்வெளியில் என் கிரகத்திலிருந்து வெளிப்படும் ஒளியை ஒத்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *