கங்காதரன் கூறிய நீரின் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 25, 2023
பார்வையிட்டோர்: 6,061 
 
 

(1988ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகநாதன் சொன்ன பூமியின் கதை | கங்காதரன் கூறிய நீரின் கதை | அக்கினி புத்திரன் சொன்ன நெருப்பின் கதை


“வான் நின்று உலகம் வழங்கி வருதலால் 
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று” – குறள் 

மறுநாள் மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு கிராமத்துச் சிறுவர்கள் அனைவரும் மண்டபத்தில் ஒன்று கூடி, தேவகுமாரர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல ஆர்வத்தினால் அழகப்பனின் விழிகள் அறிவுக்கு விருந்தான கதை கூறிய அந்தப் புதிய நண்பர்களின் வரவை எதிர்நோக்கி அங்கு மிங்கும் துழாவின. 

சொன்ன சொல் தவறாத தேவகுமாரர்கள் அவர்கள் யாரும் அறியாது எங்கிருந்தோ ‘பளிச்’ சென்று அவர்கள் மத்தியில் வந்து நின்றனர். 

அவர்களது மகிழ்ச்சி ஆரவாரம் அடங்குமுன் கங்காதரன் கூறினான்: 

அன்பார்ந்த சகோதரர்களே, நேற்று உலக நாதன் உங்களுக்கு உலகத்தாயின் கதையைக் கூறினான். இன்று நான் உங்களுக்கு என் தந்தை வருணதேவரின் அம்சமாகிய நீரின் ஆற்றலையும், வலிமையையும், கருணையையும் பற்றிய கதையை சொல்கிறேன். 

“வானம் பொழிகிறது 
பூமி விளைகிறது” 

என்பதை நாமெல்லோரும் அறிவோம். ஆனால், வானம் பொழிய வில்லையென்றால் என்ன ஆகும்? 

நீரின்றி உயிரினங்கள் அழியும்: பயிர்கள் விளைய வழியின்றி வாடி மடியும்.பூமி வறண்டு பாளம் பாளமாக வெடித்துக் காட்சியளிக்கும். பஞ்சமும் பட்டினியும் தோன்றி மக்கள் பசியால் மாண்டு மடிவர். 

உணவில்லாமற்கூடச் சிலநாள் வாழ்ந்து விடலாம்; ஆனால் நீரின்றி வாழவே முடியாது. 

உலகை உயிர்த் துடிப்புடன் இயங்கவைப்பது நீர். அந்த நீரை நமக்கு வாரி வழங்குவது மழை. அந்த மழையின்றி இந்த உலகம் வாழ இயலாது. இதை நான் கூறவில்லை; உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் பெருமானே கூறி இருக்கிறார். 

‘மழை நீரால் இவ்வுலகம் நிலைத்து வருகின்றது. அதனால் அம்மழை நீர் அமிழ்தமென்று எண்ணும் சிறப்புடையதாகும்’- என்றும்; 

“துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை’- 

  • ‘மக்கள் உண்பதற்குரிய உணவுகளை உண்டாக்கித் தருவதோடு; பருகுவதற்குத் தானும் ஓர் உணவாக இருப்பதும் மழையாகும்’- என்றும்; 

“விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே 
பசும்புல் தலை காண்பு அரிது”- 

  • மழை மட்டும் பெய்யவில்லை என்றால், இவ்வுலகில், பசும்புல்லின் முளையைக் கூடப் பார்க்க இயலாமற் போய்விடும் என்பதெல்லாம் வான் சிறப்பு பற்றிய வள்ளுவரின் வாக்காகும். 

மனித உடலில் ரத்தம், சதை, எலும்புகள், நரம்பு என்று இப்படிப் பல பொருள்கள் இருந் தாலும்; மனித உடலில் பெரும்பகுதி நீர்தான். அதுபோன்றே- 

இந்தப் பரந்த உலகின் மொத்தப் பரப்பளவில் முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டு; மீதமுள்ள கால் பகுதியே மக்கள் வாழத் தகுந்த நிலப் பகுதியாக விளங்குகிறது. 

இந்தக் குறுகிய கால்பகுதி நிலப் பரப்பையும் பசுமையா சுபிட்சம் நிறைந்ததாகவும் இருக்கச் செய்வதில்-பெரும்பகுதியான கடலுக்கு மகத்தான பங்கு உண்டு. 

எப்படி என்றால்- 

பரந்த கடல், மற்றும் ஆறு ஏரி போன்ற நீர் நிலைகளிலுள்ள நீரானது சூரிய வெப்பத்தால் ஆவியாக மேலே எழும்பி, வானத்திற்குச் சென்று மேகமாகப் பரவுகிறது. மிதந்து செல்லும் மேகங்கள் குளிர்ச்சியடையும் போது, அவை மீண்டும் மழையாகப் பொழிந்து பூமியிலும், கடலிலும், ஆறு குளங்களிலும் கலக்கிறது. 

இப்படிக் கலக்கிற நீர், சூரிய வெப்பத்தால் மீண்டும் ஆவியாக – மேகமாக -மாறி மழை நீராக மீண்டும் பூமிக்கே திரும்புகிறது. இப்படி இயற்கை தவறாமல் தன் கடமைகளை மாறி மாறிச்செய்து – உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. 

எப்போதாவது இந்த இயற்கை தவறும் போது – மழை நீரின்றி பூமி பாளம்பாளமாக வெடிக்கிறது; நீரில்லாமையால் ஆறுகள் வறண்டு போகின்றன. நிலங்கள் காய்ந்து கருகுகின்றன. விளைச்சலில்லாமலும், நீரில்லாமலும். மக்களும் மற்ற உயிரினங்களும்-பசி, தாகத்தால் மாண்டு மடிகின்றனர். இதனையே பஞ்சம் என்கிறோம். 

இதற்கு நேர்மாறாகவும் இயற்கை சில சமயம் விளையாடி விடுவதுண்டு. 

தொடர்ந்து அளவிற்கு மீறிப் பெய்கிற அடை மழையினால் வெள்ளப் பெருக்கெடுத்து, ஊரைப் பாழ்படுத்தி, மக்களுக்கும், மாக்களுக்கும் அழிவு ஏற்படுத்துவதும் உண்டு. ஆனால் இதெல்லாம் எப்போதாவது ஏற்படுகிற நிகழ்ச்சிகள். 

வானத்திலிருந்து மழை பெய்தாலன்றி தண்ணீரை மட்டும் மனிதன், வேறு எந்தப் பொருளினின்றும் உற்பத்தி செய்துவிட முடியாது. 

வானம் பொய்த்து, நீர்நிலைகள் வற்றினால் மனிதன் நிலத்தடி நீரை-அதாவது மழைக் காலங் களில் பூமிநீரை உறிஞ்சித் தன்னுள் சேமித்து வைத் திருக்கும் நீரை-ஆழமாகத் தோண்டி எடுத்துப் பயன் பெறுகிறான். அந்த நிலத்தடி நீரும் வற்றக் கூடிய சாத்தியம் உள்ளதே! 

ஒவ்வொரு ஆண்டும் பூமியின் நீர்ப் பரப்பி லிருந்து 5,77,000 கன கிலோ மீட்டர் நீரைக் கதிரவன் ஆவியாக மாற்றி வானத்திற்கு அனுப்பு கிறான். மற்ற இடங்களை விடக் கடலிலிருந்து தான் அதிகமான நீர் ஆவியாக மாறுகின்றது. 

இதிலொரு விந்தையைப் பார்த்தீர்களா? – கடல்நீர் இம்மியளவும் மனிதனுக்குக் குடிநீராகப் பயன்படுவதில்லை  ஒரு காலன் கடல்நீரைக் குடி நீராக மாற்ற வேண்டுமானால் லட்சக் கணக்கான ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இந்த ரசாயன மாற்றத்தை இயற்கையே இலவசமாகச் செய்து, பரிசுத்தமான குடிநீராக-மழையாக, வானம் பூமிக்கு அனுப்பி வைக்கிறது. 

மேலும், இந்த அளவு கடல் நீரை செயற்கையாக மனித முயற்சியினால் ஆவியாக மாற்ற வேண்டுமென்றால் நூறு கோடி கிலோவாட் உற்பத்தித் திறனுள்ள, 40 கோடி மின்சார நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் இதற்குத் தேவைப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். 

நமது பூமியில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நீரின் கொள்ளளவு, 1,38,60,00,000 கன கிலோ மீட்டர்களாகும். ஆனால் இதில் மனிதன் அருந்தக்கூடிய நலல நீரின் பங்கு 2.5 சதவிகிதம்தான். 

இவ்வளவு மதிப்பு வாய்ந்த தண்ணீரை வீணாக்கலாமா? அதனால்தான் முன்னோர்கள் “தாயைப் பிழைத்தாலும்; தண்ணீரைப் பிழைக்காதே”, என்று அறிவுரை கூறினார்கள். 

ஒருவன் தன் தாய்க்குக் கெடுதல் செய்தால் அதன் விளைவு அவனோடு, அல்லது அவன் குடும்பத்துடன் நின்றுவிடும். ஆனால், ஓடுகிற ஆற்று நீரை, அல்லது குடிக்கிற குடிநீரை ஒருவன் கெடுத்தால் அல்லது அசுத்தப்படுத்தினால்; அதனால் ஒரு ஊர் மட்டுமல்ல; அந்த நீரைப் பருகுகிற மக்கள் அனைவருமே பிணியால் பாதிக்கப்படுவர் என்பதுதான் பொருள். 

சில சமயங்களில் அதிகமாகப் பெருக்கெடுத் தோடும்போது ஆற்று நீர்; அருகிலுள்ள ஊர்களை யெல்லாம் அழித்துச் சென்றுவிடும். அதே போல சில சமயங்களில் ஆற்றில் குடிக்கக் கூடப் போது மான நீர் இல்லாமலும் வறண்டும் கிடக்கும். அப்போது மக்கள் குடிப்பதற்கும், பாசனத்திற்கும் நீரின்றி அவதிப்படுவார்கள். 

இம்மாதிரி நிலைமை ஏற்படாமல் இருப்பதற்காகவே; பெரிய ஆறுகளின் குறுக்கே பெரிய பெரிய அணைகள் கட்டி நீரைத் தடுத்து டாம் களில் சேமித்து வைத்துக் கொள்வார்கள். 

சேமிப்பு என்பது பணத்திற்கு மட்டுமல்ல – மனிதனின் அத்தியாவசியத் தேவையான, நீர் மின்சாரம், மற்றும் எரிபொருளுக்கும் கூட அவசிய மான ஒன்று. 

இம்மாதிரி நீரைத் தேக்கி வைக்கும் சென்னை மாநிலத்தில் உள்ள அணைக் கட்டின் பெயர், மேட்டூர் அணை. 480 லட்சம் ரூபாய் செலவில் ஆறு ஆண்டு காலத்தில் இது கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு; 98,500 மில்லியன் காலன்கள். 

மைசூரில் கிருஷ்ண ராஜ சாகரம் என்னும் அணையை 250 லட்சம் ரூபாய் செலவில் 16 ஆண்டுகளில் கட்டி முடித்தனர். 

இதன் கொள்ளளவு 43, 835 மில்லியன் காலன்கள். 

ஆந்திராவிலுள்ள “நிஜாம் சாகர்” என்னும் அணைக்கட்டு ஆறு ஆண்டு காலத்தில் 366 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 25, 566 மில்லியன் காலன்களாகும். 

இம்மாதிரி அணைக்கட்டுகள் மழைக் காலங் களில் நீரைச் சேமித்துக் கொண்டு; ஆண்டு முழுது மான, பாசனத் தேவைக்கும், குடிநீருக்குமான நீரை வற்றாது அளித்து வருகிறது. 

மற்றெல்லாவற்றையும் விடத் தண்ணீருக்குள்ள தனிப் பெருமை என்னவென்றால் – அதன் மாறுபடாத – நிலையான தனித்தன்மை தான். 

தண்ணீரை அதிகமாகக் குளிரச் செய்தால் அந்தத் தண்ணீர் பனிக்கட்டியாக மாறி உறைந்து விடுகிறது. 

உறைந்து போன பனிக்கட்டி இயற்கை சூட்டி னால் மீண்டும் தண்ணீரின் பழைய நிலைக்கே வந்து விடுகிறது. 

நீரைக் காய்ச்சினால் அது ஆவியாக மாறி மேலே செல்கிறது, ஆவியைக் குளிரச் செய்தால்- மீண்டும் பழைய நிலைக்கே தண்ணீராகத் திரும்பக் கிடைத்து விடுகிறது. 

இது போன்ற கண்ணா மூச்சி விளையாட்டு, இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல பூமி தோன்றிய நாளிலிருந்தே அது தண்ணீருடன் விளையாடத் துவங்கி விட்டது. 

பொறுமைக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும், பல கோடி உயிரினங்களுக்கு புகலிடமாகவும் உள்ள இந்தப் பூமி; அனற்பிழம்பாகச் சுழன்று கொண் டிருக்கும் கதிரவனிலிருந்து உருண்டு திரண்டு விண்டு விழுந்த ஒரு கோளம் என்பதை உலக நாதன் கூறினான். 

அது, கதிரவனின் ஈர்ப்பு சக்தியால் வெகு தூரம் செல்ல முடியாமல், தடைப்பட்டு, அக்கினி உருண்டையாகச் சுழன்று கொண்டிருந்தது. 

அப்போது விண்வெளியில் நிலவிய கடுங்குளிர் நீராவியைக் குளிரச் செய்த போது, நீர் துளிர்த்தது. துளிர்த்த நீர் பூமியை வாழ வைக்க – பூமியை நோக்கிப் பெய்தது. 

பூமியை நோக்கி வந்த அற்புதமான இந்த முதல் மழை ; சூரியனிலிருந்து விடுபட்டு வெப்பத் தோடிருந்த பூமியின் மேல் பரப்பைத் தீண்டியதுமே – கொதிக்கிற பாத்திரத்தின் மீது தெளித்த நீரைப் போல – பூமி சிலிர்த்து, உடனே தன் மீது விழுந்த மழை நீரை ஆவியாக மாற்றி வானுக்கே அனுப்பி விட்டது. 

பூமியிலிருந்து வானை நோக்கி வந்த நீராவியை, வான மண்டலம் குளிர்ச்சியால் நீராக மாற்றி மீண்டும் பூமிக்கே மழையாகத் திருப்பி யனுப்பியது. 

கொதித்துக் கொண்டிருந்த பூமி மீண்டும் தன் மீது விழுந்த நீரை ஆக்ரோஷத்துடன் ஆவி யாக மாற்றி, மேலே அனுப்பி வைத்தது. 

வானமும் சளைக்காமல், ஆவியை மழை நீராக மாற்றி தொடர்ந்து பூமிக்கே அனுப்பி வைத்தது. 

பல ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இடை விடாது வானுக்கும் பூமிக்கும் நடந்த போட்டி யில்; பூமி அன்னை மனமிரங்கி, மழையை ஏற்றுக் கொள்ளச் சித்தமானாள். 

தொடர்ந்து பன்னெடுங்காலமாகப் பெய்த மழையினால், கொதித்து அக்னி உருண்டையாயிருந்த பூமியின் மேல் பரப்பில் நிலவிய வெப்பம், நாளடைவில் தணிந்தது. நீரினால் குளிர்ச்சியி டைந்த பூமியின் மேற் பரப்பு, மழை நீரைத் தன்னுள் மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ளத் துவங் கியபோது பூமி குளிரத் துவங்கியது. 

பூமியை மூடியிருந்த நீராவியின் பெரும் பகுதி குளிர்ந்து, பூமியின் மேலேயே நீராகத் தங்கியது. பின் அதுவே பெருங்கடலாக உருப்பெற் றது. ஆயினும் – 

பூமி தன்னுள்ளே குளிராமல் எரிமலையாக இன்னும் உள்ளே குமைந்து கொண்டு தானிருக் கிறது. ஆயினும், புறத்தே அதன் வெப்பம் தணிந்து, நீராலும், நிலத்தாலும் சூழப்பட்டு அமைதி பெற்ற போது, கதிரவன் தன் பொன்னி றக் கிரணங்களை பூமியின் மீது வாரி இறைத் தான். எங்கும் ஒளி வெள்ளமாகக் காட்சியளித்தது. 

அதுதான் பூமி அன்னை கண்ட முதல் பகல் பொழுது. பின்னர் பூமியின் சுழற்சியில்- சூரியனது பவனியில் – பகல் போயிற்று-இரவு வந்தது. இப் படிப் பகலும், இரவும் பூமிக்குப் பரிச்சியமாயிற்று. 

பகற்பொழுதில் பூமியின் மீது கதிரவனின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, கதிரவன் தனது வெப்பத்தால் பூமியின் மேற் பரப்பில் நீண்டு கிடந்த கடல் நீரை ஆவியாக மாற்றி, வானத்திற்கு அனுப்பி வைத்தான். 

ஆனால் இப்போது –

வானம் அந்த நீராவியை மழையாக மாற்றி அனுப்பியபோது பூமி அன்னை அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந்தாள். 

இரவும் பகலும் தோன்றி, பருவ மழைகளும் காலம் காலமாகப் பூமியில் பொழிந்து கொண்டிருந்த போது, மண்ணில் மரம் செடி கொடிகள் முளைத்துக் காடுகள் பிறந்தன. உயிரினங்கள் பெருகின. மனிதன் பிறந்தான். அறிவு விரிந்தது. விஞ்ஞானம் பெருகியது. 

இன்று மனிதன்-மண்ணிலிருந்து விண்ணுக்குத் தாவும் மகத்தான ஆற்றல் பெற்றவனாகத் திகழ்கிறான். 

தன் மடியில் தவழும் குழந்தையின் அழகைக் கண்டு பெற்ற தாய் ரசிப்பது போல- 

பூமி அன்னையும் தன் மடியில் பிறந்த மக்களின் அறிவியல் ஆற்றல்களைக் கண்டு அக மகிழ்ந்து சிரிக்கிறாள்” என்று கூறிக் கதையை முடித்த கங்காதரன் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு தன் சகோதரர்களுடன் புறப்பட்டான்.

– தொடரும்…

– பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1988, சாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *