ஒரு விரலும் ஒன்பதாவது மனிதனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 6,374 
 
 

கி.பி. 1885

சென்னை நகரின் நடுவே நவீனமாக தோற்றமளித்த அந்த இரண்டடுக்கு கட்டிடத்தின் முதல் மாடியில் அமர்ந்து வேக வைத்த கோழித்தொடையை கடித்துக் கொண்டிருந்த அவன் முன் வந்து அமர்ந்தான் பீட்டர்.

இரண்டு பேருமே அந்த சூழ்நிலைக்கு சிறிதும் பொருந்தாதவர்களாக தோற்றமளித்தனர். இருவரும் வெள்ளையர்கள் என்றாலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.

“ஜேம்ஸ். என்ன சொல்லுது சிக்கன்? காரம் போடாம ஒழுங்கா சமைக்கிறானா?”

“ஏதோ.. ஆனாலும் நம்ம ஊர் ருசி வரல”

“ம்ம்ம்ம் சகிச்சிக்க வேண்டியதுதான்”

“அது இருக்கட்டும், க்ரோவர் க்ளீவ்லேன்ட் எதுனா செய்வாரா? இருபது வருசம் கழிச்சி டெமாக்ரட்ஸ் ஜெயிச்சி இருக்காங்க”

பீட்டர் பதில் சொல்ல வாயெடுக்கும் முன், அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் அவன்.

“ஹே.. ரெண்டு பேருமே இருக்கீங்களா நல்லது. கடல் உயிரினங்கள் பத்தின ஆராய்ச்சில நம்ம ஆளுங்க ஒரு முக்கியமான விசயம் கண்டுபிடிச்சி இருக்காங்க. மெட்றாஸ்லயிருந்து 250 கி.மீ தெற்கில கரையிலிருந்து சுமார் 5 கி.மீ உள்ளாற நம்ம கப்பல் நங்கூரம் அடிச்சிருக்கு. இன்னிக்கு கடலோட தரை மட்டத்துல பவளப்பாறை மாதிரி ஏதோ ஒண்ணு கிடைக்க அதை எடுத்துட்டு வந்திருக்காங்க. அதை உடைச்சப்ப அதுக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியுமா?”

“என்ன பில்? எதுனா மீன் கிடைச்சதா?”

“இல்லை. கிடைச்சது ஒரு மனித விரல்”

திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்றனர் இருவரும்.

“உட்கார்ங்க. அது எப்படி அங்க கிடைச்சதுன்றது இன்னும் புரியல. எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன். தேவைப்பட்டா உடனடியா அதை அமெரிக்காவுக்கு அனுப்பலாம். எனக்கென்னவோ இது இந்த உலகத்தையே மாத்தப்போற ஏதோ ஒண்ணுன்னு தோணுது. நீங்க ரெண்டு பேரும் உடனடியா இதுல இறங்குங்க.” என்றார் பில் என்றழைக்கப்பட்ட வில்லியம்.

“கண்டிப்பா” என்றனர் இருவரும் ஒரு சேர.


இரண்டு மாதங்கள் கழித்து, லேசாக மழை தூறிக் கொண்டிருந்த மதிய வேளையில் அவர்கள் மீண்டும் கூடி இருந்தனர்.

“இப்ப என்ன முன்னேற்றம் ஜேம்ஸ்?”

“கிடைச்சிருக்குறது மனித விரல் அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லை. என்ன ஆகி இருக்கும்ன்னா ஏறத்தாழ 700 வருசத்துக்கு முன்னால அந்த மனுசன் கடல்ல மூழ்கி இறந்துட்டாரு. நாளாக நாளாக அவரோட உடல் சிதைய ஆரம்பிச்சிடுச்சி. அந்த சமயத்துல அவரோட விரல் தனியா கழண்டு விழுந்து இருக்கு. அதை சுத்தி பவளப்பாறைகள் வளர இந்த விரலை சுத்தி ஒரு வேக்வம் உருவாகி இருக்கு. அதனால இது அதிகமா சிதைவடையாம நமக்கு கிடைச்சிருக்கு. ஆனா..”

“என்ன பிரச்சினை?”

பீட்டர் தொடர்ந்தான்.. “இதை வெளியே எடுத்தப்புறம் சரியா பாதுகாக்கலை. அதனால இதிலிருந்து டி என் ஏ சரியா கிடைக்கலை. 1869ல டி என் ஏ வை தனியா முதல் முதலா பிரிச்ச ஃப்ரெடரிக் மேஷர் டீம்ல இருந்த நாங்க எல்லாம் தனியா வந்து இந்த ஆராய்ச்சிய ஆரம்பிச்சோம்ன்றது உங்களுக்கு தெரியும். ஆனா அதற்கப்புறம் இத்தனை வருசமா நாங்க என்ன பண்றோம்றது வெளி உலகத்துக்கு தெரியாது. இந்த நிலைமைல இந்த ஒரு டி என் ஏவை வைச்சி ஒரு முழு மனுசன உருவாக்க நாங்க முயற்சி செய்யப்போறோம். ஒரு நல்ல டி என் ஏ சாம்பிளை வெச்சி இந்த ஆராய்ச்சி பண்றதை விட இது போல முழுமை பெறாத டி என் ஏ வை வெச்சி ஆராய்ச்சி பண்ணினா இதுல இருக்குற எல்லா பிரச்சினைகளும் தெரிய வரும், ஆராய்ச்சியும் முழு வெற்றி அடையும். இது பத்தி ஒரு சின்ன தகவல் கூட வெளிய போகாம நீங்கதான் பாத்துக்கணும்”

“கண்டிப்பா பாத்துக்குறேன். இது ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி மட்டுமில்லை ரொம்ப பிரச்சினையானதும். அதனால முழு முடிவும் தெரியற வரை நாம இதைப் பத்தி வெளிய பேசவே வேணாம். உங்களுக்கு தேவையான பணம் வந்துகிட்டே இருக்கும். பிரசிடன்ட் கிட்ட நான் பேசிக்கிறேன். உடனே ஆரம்பிங்க”


கொஞ்சம் வேகமாவே ஃபாஸ்ட் ஃபார்வேட்…

1972ன் இறுதியில்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த அந்த அமெரிக்க நிறுவனத்தின் நான்காவது மாடியில் அவர்கள் கூடி இருந்தனர்.

“இப்ப என்ன சாக்கு போக்கு சொல்லப்போறீங்க விக்டர்?”

“இங்க இருக்குற எல்லாருமே இந்த திட்டம் பத்தி தெரிஞ்சவங்களா இருந்தாலும் பெரும்பாலான ஆட்களுக்கு இதன் வரலாறு தெரியாது. அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு வருசமும் உயிரியல் ஆய்வுகளுக்காக பல பில்லியன் டாலர்களை செலவழிக்குது. நம்ம ஆராய்ச்சி அதில் ஒரு பகுதிதான். ஒரு டி என் ஏ ல இருந்து ஒரு முழு மனுசனையும் உருவாக்குறது மட்டுமே இல்லை இந்த ஆராய்ச்சி, அப்படி உருவாக்கப்பட்டா க்ளோனிங் மூலமா பல உயிர்க்கொல்லி வியாதிகளுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும். இதயம், சிறுநீரகம் மாதிரி ஒரு உறுப்பை மட்டுமே ஆய்வகத்துல வளர்த்துக்க முடியும்.

இப்போ கணினித்துறையில நடந்து வர்ற வளர்ச்சிகளையும் இது கூட இணைச்சி இனிமே எதிர்காலத்துல வரப்போற எத்தனையோ வியாதிகளையும், குறைபாடுகளையும் களைய முடியும். இப்படி பலப்பல பயன்களும் அது மூலமா டிரில்லியன் கணக்கான பணமும் எதிர்பார்க்கப்படுற ஆராய்ச்சி இது..”

“எல்லாம் சரி.. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இதையே நாம சொல்லிட்டு இருக்கப்போறோம்? ரிசஸ்சன், டிப்ரஸன், கென்னடி கொலை, இப்ப வாட்டர் கேட் ஊழல்னு ஒவ்வொருமுறை எதாவது ஒரு பிரச்சினை வர்றப்பவும் நம்ம பிரச்சினையில மாட்டுறோம். ஏறத்தாழ 80 வருசமா இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு. இப்ப மறுபடியும் பட்ஜெட் ஒதுக்குங்கன்னு கேட்டுப் போறதுக்கு நம்ம எதாவது முடிவுகளை காட்டணும் விக்டர்”

விக்டர் புன்னகைத்தான். “இந்த முறை கண்டிப்பாக முடிவை காட்டலாம் டீம்”

“என்ன சொல்றீங்க?”

“இதுவரைக்கும் நம்ம 8 தடவை தோத்திருக்கோம். முதல் முதல்ல ப்ரொஃபசர் பீட்டரும் ப்ரொஃபசர் ஜேம்ஸும் கிடைச்ச டி என் ஏ வை முழுமையடைய வெக்க என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க. கிடைச்ச டி என் ஏ ல மிஸ் ஆன சில ந்யூளியோடைட்ஸை அவங்க வேறு மனிதர்களோட டி என் ஏ ல இருந்து எடுத்து நிரப்புனாங்க‌. அந்த விரல் ஒரு பெண்ணோடதா இருக்கலாம்னு நெனச்சி அதற்கு தகுந்த மாதிரி டி என் ஏ வோட மாதிரிகளை உபயோகப் படுத்துனாங்க. நமக்கு அந்த பொண்ணு கிடைச்சாலும் அவங்களால முழுமையான பொண்ணா இருக்க முடியல. முக்கியமா மூளை வளர்ச்சி இல்லை.

அதுக்கப்புறம் நடந்த ஆய்வுகள்ல அது ஆணாத்தான் இருக்கணும் அப்படின்னு முடிவு தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினை. ஒரு தடவை உயரம் அதிகமா போயிடுச்சி, ஒரு தடவை நிறம் வெளுத்துப் போச்சி இப்படி எட்டு தடவையுமே எதாவ‌து ஒரு பிர‌ச்சினை. அது எல்லாத்தையும் இப்ப‌ உருவாக்கி இருக்கிற‌ இந்த‌ ஒன்பதாவ‌து கருவுல‌ ச‌ரி செஞ்சாச்சு. பிறந்து 2 மாசம் ஆன‌ அந்த குழந்தை நம்மோட எல்லா பரிசோதனைகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் குடுத்திருக்கு”

“இப்ப அந்த குழந்தை எங்க இருக்கு?”

“ஒவ்வொரு முறையுமே நாம அந்த கருவை உருவாக்கியதும் பரிசோதனைக்கூடத்திலயே வெச்சிக்கறதில்லை. அதை ஏதோ ஒரு பெண்ணோட கருப்பையில செலுத்திடுவோம். அது பரிசோதனைக் குழந்தை அப்படின்றதே அந்த பொண்ணுக்கு தெரியாது. மருத்துவர்களோட நமக்கு இருக்கும் நல்ல உறவு மற்றும் பணபல‌ம் மூலமா இதை சாதிக்க முடியுது. சொல்லப்போனா ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பின்புலத்துல பிறந்து வளர்ந்தது. ஒரு சில குழந்தைகள் வெளிநாடுகள்லயும் பிறந்தது. அது மட்டுமில்லாம இந்தியா மாதிரி வளரும் நாடுகள்ல இதையெல்லாம் பத்தி கவலைப்பட ஆள்கிறவர்களுக்கும் நேரம் இல்லை, பொது மக்களுக்கும் தெரியறதில்லை.

இந்த குழந்தையும் அதே மாதிரி இதே மெட்றாஸ்ல ஒரு குடும்பத்துலதான் பிறந்து வளந்துட்டு வருது. இதுவரைக்கும் பார்த்ததுல அதோட உடல்நிலை, மனநிலை எல்லாமே ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சொல்லப்போனா கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்க முன்னால இருக்குற ஃபைல்ல இது பத்தின எல்லா தகவல்களும் இருக்கு”

பதினைந்து நிமிடங்களுக்கு ஃபைல் புரட்டல்கள், குசுகுசு பேச்சுகளுக்கு பிறகு,

“ரொம்ப நல்லது விக்டர். இந்த தகவல்கள் எல்லாமே நமக்கு அடுத்த பட்ஜெட் கிடைக்க உதவியா இருக்கும். ஒரு முக்கியமான விசயம்.”

‘என்ன?’ என்பது போல் பார்த்தான் விக்டர்.

“மத்த எல்லாருமே இன்னும் உயிரோட இருந்தாலும் நாம அவங்கள கண்காணிக்கிறதில்லை. ஒரு அஞ்சு வருசம் மட்டும் ஃபாலோ பண்ணி டேட்டா கலெக்ட் பண்ணிட்டு அப்புறம் மறந்துடுறோம். இப்ப அவங்க எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்க எதுவுமே நமக்குத் தெரியாது. இந்த கேஸ்ல அந்த மாதிரி ஆகக் கூடாது. அந்த பையனை எப்பவும் நம்ம கண்காணிப்பிலயே வைங்க.. ஓரளவு வளர்ந்ததும் அவனை எப்படியாவது ஸ்காலர்ஷிப் ஆசை காட்டி அமெரிக்காவுக்கு இழுத்துடலாம். அதுக்கப்புறம் அவனை கண்காணிக்கிறது சுலபமாகிடும். இதுதான் அந்த விரலை வெச்சி நாம உருவாக்கிற கடைசி உயிரா இருக்கணும்.”

“நல்லா புரிஞ்சது” என்றான் விக்டர்..


ஹலோ.. நாந்தாங்க வெண்பூ.. கதை இன்ட்ரெஸ்டா படிச்சிட்டு இருக்குறப்ப இவன் எதுக்குடா தொந்தரவு பண்றான்னு திட்டாதீங்க. ஸாரி.

அந்த கடலுக்குள்ள கிடைச்ச விரலோட சொந்தக்காரன் எப்படி கடலுக்குள்ள போனான், அப்புறம் அதனால என்ன நடக்குது அப்படின்றது மட்டுமில்லாம இப்ப உயிரோட இருக்குற ஒன்பது க்ளோன்களும் சந்திக்கிற மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைய எழுதி வெச்சிருந்தேன். அந்த பேப்பர்லாம் எங்க போனிச்சின்னு தெரியலயே.

ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சி. இந்த கதைய எழுதி முடிச்ச அன்னிக்கு என்னை பாக்குறதுக்காக கமலஹாசனும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் வந்திருந்தாங்க. பாதிக் கதைய இங்க படிச்சவங்க மீதி கதையவும் படிச்சு பாத்துட்டு தரேன்னு வாங்கிட்டு போனாங்க. அதுக்கப்புறம் அவங்கள பாக்கவே முடியல. நானும் கல்யாணம், குழந்தை, வேலைன்னு செட்டில் ஆகிட்டேன்.

இப்ப அந்த மீதி பக்கங்கள் இல்லாம கதைய அனுப்ப முடியாதே!! அவங்கள பாத்தா நான் அந்த கதையோட பேப்பர்களைக் கேட்டேன்னு சொல்றீங்களா? ப்ளீஸ்.

– ஜூன் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *