கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 11,347 
 

தான் கனவு காண்போமா என்று குருவுக்கு வியப்பாக இருந்தது. மனதைக் குலைக்கும் கனவு வருவதற்கு ஓர் இரவு நீடிக்காத உறக்கமே கூட போதும் எனும்போது, ஒரு நூற்றாண்டிற்கு உறங்க வேண்டுமே என்று அவர் அஞ்சினார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் அவரது மருத்துவர் அச்சத்துடன் கூறியது அவருக்கு நன்றாக நினைவுள்ளது. “அய்யா, உங்கள் இதயம் செயலிழந்து வருகிறது. இன்னும் ஓராண்டே நீங்கள் வாழ முடியும்”. மரணத்தை கண்டு அவர் அஞ்சவில்லை எனினும் ஞானத் தேடலின் பாதையில் அவர் முடிக்க வேண்டிய பணிகள் பாதியில் நிற்பதை எண்ணிக் கலக்கமடைந்தார். “நீங்கள் எதுவும் செய்ய இயலாதா” என வினவினார். “இல்லை அய்யா, நாங்கள் செயற்கை இதயம் உருவாக்கும் பணியில் நூறாண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். இன்னும் ஒரு நூற்றாண்டில் அநேகமாக அதை உருவாக்கிவிடுவோம்” என்றார். “நல்லது” அமைதியாகக் கூறிய குரு “நான் வேண்டுமானால் இன்னுமொரு நூறாண்டுகள் காத்திருக்கிறேன். அதுவரை தொந்தரவு இல்லாத ஓரிடத்தைத் தேர்வு செய்து என்னை உறக்கத்தில் ஆழ்த்தி உறைய வைத்தோ அல்லது ஏதாவது ஒரு வகையில் பாதுகாத்து வைத்திருங்கள். அதை உங்களால் செய்ய முடியும் என்பதை அறிவேன்” என்றார்.

எவரெஸ்ட் சிகரத்தின் ரகசிய இடத்தில் அமைந்த கல்லறைக் கட்டிடத்தை குரு நோக்கினார். குருவின் உடலை அழித்தொழிக்க உலகில் லட்சக்கணக்கானோர் தேடுதலில் ஈடுபடுவர் என்பதால் அவர் உறங்க வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரே அறிந்திருந்தனர். இதய நோயை விஞ்ஞானம் வெற்றி கொள்ளும் நாள் வரை அந்த ரகசியத்தை தலைமுறைதோறும் அவரது சீடர்கள் காப்பாற்றி வருவார்கள். பிறகு குரு அவரது உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்யப்படுவார்.

மருந்துகள் அவருடைய புலன்களை மயக்கிக் கொண்டிருந்த போதும் அந்த அறையின் நடுவில் ஒரு படுக்கையில் அவரைக் கிடத்தியது நினைவிற்குத் தெரிந்தது. அந்தப் பெட்டகத்தின் ரப்பர் விளிம்புகள் மீது இரும்பாலான கதவுகளை மூடிய பின்னர் பம்புகள் மூலம் அவரைச் சுற்றி இருந்த காற்றை வெளியேற்றி நைட்ரஜன் வாயுவை நிரப்பும் “ஹிஸ்ஸ்…” என்ற ஓசை கேட்டது. பின்னர் அவர் உறங்கினார். சிறிது காலத்திலேயே உலகம் குருவை மறந்தது.

அவர் எதற்காகக் காத்திருந்தாரோ அந்தக் கண்டுபிடிப்பு பல்லாண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டிருந்த போதும் அவர் நூறாண்டுகள் உறங்கிக் கொண்டே இருந்தார். அவர் சென்ற பின்பான உலகம் மாறிவிட்டதுடன் அவர் மீண்டும் வர வேண்டும் என்று விழைவோர் எவரும் இல்லை என்பதால் குருவை யாரும் விழிப்படையச் செய்யவில்லை. அவரது சீடர்கள் மரித்துப் போனார்கள். அவருடைய ஜீவசமாதி இருக்கும் இடம் மர்மமான முறையில் தொலைந்து போனது. சிறிது காலம் குருவின் ஜீவசமாதி இருக்குமிடம் அறியப்பட்டிருந்தபோதிலும் அது மறக்கப்பட்டது. அதனால் அவர் மீண்டும் உறங்கினார்.

இமயமலையின் எடையை நீண்ட காலமாக சுமந்து கொண்டு இருப்பதாக புவியோட்டுப் பகுதி முடிவு செய்தது போல மலைப் பகுதி கீழே சரிந்ததில் இந்தியாவின் தென் பகுதி வான் நோக்கி மேல் எழுந்தது. அதனால் தற்போதைய சிலோன் பீடபூமி உலகின் மிக உயர்ந்த நிலப் பகுதியானதுடன் எவரெஸ்ட்டின் மேல்புறமுள்ள கடல் ஐந்தரை மைல்கள் ஆழம் கொண்டதாக மாறியது. இனி எதிரிகளாலோ நண்பர்களாலோ குருவுக்கு எந்தத் தொல்லையும் ஏற்படப்போவது இல்லை.

ஆழிப் பேரலையின் உயரத்தால் இமயமலையின் இடிபாடுகளால் ஏற்பட்ட வண்டல்கள் மெல்ல மெல்ல நீரில் கரைந்தன. ஒரு காலத்தில் சுண்ணாம்பாக மாறவுள்ள கடலடி வண்டல்கள் ஒரு நூற்றாண்டுக்கு சில அங்குலங்கள் என்ற அளவில் தடிமனாகிக் கொண்டிருந்தன. சில காலம் கழித்து காண்போர், கடல் பரப்பானது ஐந்து மைல்கள் ஆழமல்ல என்றும் நான்கு அல்லது மூன்று மைல் கூட இருக்காது என்பதையும் அறிவர்.

பின்னர் நிலம் மீண்டும் சரிந்து ஒரு காலத்தில் திபத்தியப் பெருங்கடல் இருந்த இடத்தில் மாபெரும் சுண்ணாம்புப் பாறைத் தொடர்களால் மலையென உயர்ந்தது. இந்த இயற்கை நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை அறியாமல் நித்திரையில் இருந்தார் குரு.

மழையும் ஆறுகளும் சுண்ணாம்புப் பாறைகளை கரைத்தழித்துக் கொண்டு சென்று புதிய பெருங்கடல்களில் சேர்த்ததால் புதைந்திருந்த அந்தக் கல்லறைக் கட்டிடத்தை நோக்கி நிலப்பகுதி அமிழ்ந்தது. மைல் கணக்கான பாறைகள் அடித்துச் செல்லப்பட்ட பின் குருவின் உடல் வைக்கப்பட்டிருந்த உலோகத்தாலான பெட்டகம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் கண்களை மூடிய போது இருந்ததைவிட அந்த நாள் நீளமானதாகவும் மங்கலானதாகவும் இருந்தது. அரிக்கப்பட்ட சமவெளியில் ஒரு பாறைப் பீடத்தின் மீது அவரை விஞ்ஞானிகள் ஒருவாறு கண்டுபிடித்தனர். ஏனெனில் அந்த ரகசிய சமாதியைப் பற்றி அவர்கள் அறிந்திராததால் அவர் உறங்கிக் கொண்டிருந்த அறையைக் கண்டடைய முப்பது ஆண்டுகள் பிடித்தன.

குருவின் மனம் அவரது உடலுக்கு முன்பே விழிப்படைந்தது. மூடியிருக்கும் தனது கண்ணிமைகளைக் கூட திறக்க இயலாத வலிமையின்மையால் கிடந்த போதும் நினைவுகள் வெள்ளமென ஊற்றெடுத்தன. நூறாண்டுகள் பாதுகாப்பாகக் கடந்து போயின. அவரது நம்பிக்கையற்ற சூதாட்டம் வெற்றி பெற்றுவிட்டது. சமாதிக்குள் தான் இருந்த போது இந்த உலகம் எப்படியெல்லாம் வளர்ந்திருக்கிறது என்பதைக் காணும் ஆவல் அவருக்குள் புதிரென எழுந்து வந்தது.

ஒவ்வொன்றாக அவரது உணர்வுகள் திரும்பின. அவரால் அவர் படுக்க வைக்கப்பட்டிருக்கும் கடினமான தரைப் பகுதியை உணர முடிந்தது. ஒரு மென்காற்று அவரது புருவத்தை வருடிச் சென்றது. இப்போது தன்னைச் சுற்றி நடைபெறும் தேய்த்தலும் உரசலுமான ஒலியை அவரால் உணர முடிந்தது. ஒரு கணம் அவர் குழப்பமடைந்தார். அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தங்களது கருவிகளை தள்ளி வைத்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டார். கண்களைத் திறந்து பார்ப்பதற்கு சக்தியின்றி வியந்து கொண்டே படுத்திருந்தார்.

மனிதர்கள் ரொம்பவும் மாறியிருப்பார்களா? அவரது பெயர் இன்னும் அவர்களிடையே நினைவு கொள்ளப்பட்டிருக்குமா? மனிதர்களானாலும் தேசங்களானாலும் அவற்றின் வெறுப்பைக் கண்டு அவர் அஞ்சவில்லை எனினும் அக் கேள்விகளுக்கு “அநேகமாக இல்லை” என்ற பதில் கிடைப்பதே நல்லது. அவர்களது அன்பை அவர் உணர்ந்ததில்லை. அவரது நண்பர்கள் யாரேனும் அவரைப் பின் தொடர்ந்திருப்பார்களா என்று வியப்பு தோன்றினாலும் அப்படி யாரும் இருக்கமாட்டார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். கண்களைத் திறந்து பார்க்கும் போது அவருக்கு முன்னால் இருக்கும் முகங்கள் எல்லாம் விசித்திரமாக இருக்கப் போகின்றன. எனினும் அவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்ததை பார்க்கும் அவர்களின் முகத்தில் தென்படும் உணர்வுகளைக் காண விரும்பினார்.

சக்தி கிடைத்தது. அவர் கண்களைத் திறந்தார். ஒளி மென்மையாக இருந்தது. அவர் திகைப்படையவில்லை எனினும் சிறிது நேரத்திற்கு எல்லாமும் தெளிவற்றும் பனிமூட்டம் போலும் தெரிந்தன. அவர் முன்னே உருவங்கள் சுற்றி நிற்பதை வேறுபடுத்த முடிந்தாலும் விசித்திரமாகத் தெரியும் அவர்களை அவரால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

பிறகு குருவின் கண்கள் அலைபாயாமல் ஓரிடத்தில் நின்ற போது அவர்கள் கூறிய செய்தியைக் கேட்டு பலவீனமான வீறிடலுடன் இறந்து போனார். அவரது வாழ்வின் கடைசிக் கணத்தில் அவரைச் சுற்றி நின்றிருப்பவர்களைப் பார்த்து மனிதர்களுக்கும் பூச்சிகளுக்கும் இடையேயான நீண்ட போர் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அறிந்தார். அப்போரின் இறுதியில் வென்றவன், மனிதன் அல்ல !.

The Awakening – ஆர்தர் சி. கிளார்க்

தமிழில்: க.ரகுநாதன் – ஜூன் 7, 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *