ஏழாவது அறிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 56,784 
 

சங்கரின் வருகைக்காக காத்திருந்த ஜான் தன் அலுவலகத்தில், செய்தித்தாளை பார்த்து கொண்டு இருந்தார். சிறுவர்கள் மர்மமாக காணாமல் போவது அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் நீள்கிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 21 சிறுவர்கள் காணாமல் போய் உள்ளனர். இதற்காக DGP.திரு.ஜான் தலைமையில் ரகசிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. என்ற செய்தியை படித்து முடிக்கும் போது, அவர் முன் ஆஜரானார், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி சங்கர்,

ஜானிற்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு மிடுக்காக அவர் முன் நிற்கிறார்.

“வெல்கம் சங்கர் உட்காருங்க, நீங்க என்னை நேரா பாக்கனும்னுசொல்லும் போதே, கேஸ் பாதி முடிச்சிடீங்கண்ணு நினைச்சேன். இன்வெஸ்டிகேசன் எந்த STAGE ல இருக்கு சங்கர்…”

“ஆல்மோஸ்ட் கம்ப்ளீட் சார்..”

“குழந்தைகள் இருக்குற இடம் தெரிஞ்சிருச்சா…?”

“நோ சார்.. கடத்தலுக்கான காரணம் கண்டு பிடுச்சுட்டோம்.. ரொம்ப சென்சிட்டிவ் ஆன உலகளாவிய பிரெச்சனை …”

“டெரரிஸ்ட் இன்வால்வா…?”

“அதெல்லாம் இல்ல சார்.. நாம எதிர்பாக்காத… வினோதமான… விபரீதமான கராணம்.”

“வாட் யூ மீன்..?”

“குழந்தைகள் பணத்துக்காகவோ… இல்ல தீவிரவாதிகளாலேயோ கடத்தபடவில்லை …”

“வேற என்ன காரணம்…?”

“குழந்தைகளோட அறிவு காரணமா கடத்த பட்டு இருக்குறாங்க… காணாமல் போன எல்லா குழந்தைகளும் சாதாரண குழந்தைகள் மட்டும் இல்ல பாதி பேர் கிரிஸ்டல் குழந்தைகள், பாதி பேர் ரெயின்போ குழந்தைகள்..”

ஜான், சங்கர் சொல்வதை உன்னிப்பாய் கவனிக்க, சங்கர் தொடர்ந்து விளக்குகிறார்.

“அதாவது 80களில் பிறந்த சில குழந்தைகள் இண்டிகோ குழந்தைகள் எனவும்,. 97, மற்றும் 2004 வருடங்களுக்குள் பிறந்தவர்கள் கிறிஸ்டல் குழந்தைகள் எனவும் 2013 க்கு மேல் பிறந்த குழந்தைகள் ரெயின்போ குழந்தைகள் எனவும் அழைக்கபடுகின்றனர். ( 2009 முதல் 2012 வரை உள்ள குழந்தைகள் இண்டிகோ மற்றும் கிறிஸ்டல் குணங்கள் கலந்த குழந்தைகள்)

இண்டிகோ குழந்தைகள் என்பவர்கள் பரிமான வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை எட்டியவர்களாக உணரபட்டனர். சிறுவயதிலேயே பெரியவர்களின் உதவியின்றி முக்கிய பணிகளைத் தீர்க்கத் தொடங்கினர். மிகுந்த செயல்திறன், ஒரு நன்கு வளர்ந்த அறிவாற்றலைக் கொண்டிருப்பது. எடுத்துகாட்டு ரஸ்யாவில் உள்ள சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ்கா (Boriska).

பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா ? நான்கு மாதத்தி லேயே ‘அம்மா’ என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா ? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா ? ஆனால் இவை அனைத்தும் நிகழ்ந்தது போரிஸ்காவிற்கு, இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே ‘தானாக’ பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறுகின்றனர். செவ்வாய் கிரக வாசியாக தான் இருந்தபோது, பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாக கூறிய பொழுதுதான் உலக மக்கள் கவனம் இவன் மீது சென்றது. அப்பொழுதுதான் முதன் முதலாக மக்கள் இண்டிகோ குழந்தைகளை பற்றி கேள்விப்பட ஆரம்பித்தனர். இயற்கைக்கு மாறான அசாதாரண செயல்களை செய்பவர்களாக இவர்கள் இருந்தனர். அதேபோன்று கிரிஸ்டல் குழந்தைகளுக்கும் சிறுவயதிலேயே அபார அறிவு வளர்ச்சி இருந்தது. பெரியவர்களுக்கு ஈடாக அனைத்தும் தெரிந்தவர்களாக தானாக கற்றுகொள்பவர்களாக அதீத மனப்பாட சக்தியோடும், இருந்தனர். அதற்கு அடுத்தது ரெயின்போ குழந்தைகள் இவர்கள் எல்லாவற்றையும் விட அதி புத்தி சாலிகள், சிறு வயதிலேயே மொபைல், இன்டர்நெட், அறிவியல், மருத்துவம், என அதிமேதாவித்தனம் உள்ளவர்களாக படைக்கப்பட்டவர்கள்.

இவர்கள் தான் புதிய பரிணாம வளர்ச்சி அடைந்த குழந்தைகள். இவர்களை வைத்து ஆராய்ச்சி செய்ய தான் கடத்தப்பட்டு இருக்கின்றனர்”

“இவங்கள கடத்துனது யாருன்னு சொல்லவறீங்க..?”

“ஏலியன்கள்..”

“எதவச்சி சொல்றீங்க…”

“காணாமல் போன ஒரு பையனோட அப்பாவ விசரிக்குறப்ப சில விஷயம் தெரிஞ்சுகிட்டேன். பிறந்தது முதலே அவனுடைய நடவடிக்கைகள் வித்தியாசமாவே இருந்திருக்கு. போரிஷ்கோவிற்கு நடந்தது போலே இவனுக்கும் நடந்துள்ளது. சிறு வயதிலேயே அனைத்திலும் சிறப்பாக இருந்துள்ளான். பெற்றோர்கள் கற்றுத்தரும் முன்பே அனைத்தும் கற்றுகொண்டிருக்கிறான். அவனுடன் சேர்த்து வீட்டில் மூன்று பேர்தான் ஆனால் அவனிடம் யாரேனும் கேட்டால் எங்கள் வீட்டில் நான்குபேர் இருக்கிறோம் என்பானாம்.

தனியாக யாரிடமோ பேசிக்கொண்டு இருப்பானாம். ஏலியன் படங்களையும், நிலவின் படங்களையும் அதிகமாக வரைந்து வைதுள்ளானாம். இதில் என்ன விசேசம் என்றால் இதுவரை அவன் ஏலியன் படங்களை பார்த்ததே இல்லையாம். மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவதே இல்லையாம். தனிமையாகவே இருந்துள்ளான். ஆனால் படிப்பில் கெட்டி. ஏழாவது படிக்கும்போதே பன்னிரெண்டாவது வரை உள்ள அணைத்து புத்தகங்களையும் படித்து முடித்து விட்டான். அவன் கேட்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்களால் கூட பதில் கூற முடியாதாம்.

அவன் எப்பொழுதுமே பேப்பரில் ஸ்பேஸ் ஷிப் போன்று செய்து அதில் சீக்கிரம் போக போகிறேன் என கூறுவானாம். ஆராய்சிக்காக தான் நான் இங்க வந்திருக்குரேன் என் வேலை முடிஞ்சதும் போய்டுவேன்.. என்று அடிகடி சொல்லி வந்திருக்கிறான். அவன ரெண்டு மூனுதடவ மருத்துவமனைக்கு மனநல ஆலோசனைக்கு அழைசிட்டும் போயிருக்குறார் அவங்க அப்பா.. டாக்டர்ஸ் கேக்குற கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லிருக்குறான்..

ஒருவேள ஆட்டிசம் குறைபாடா கூட இருக்கலாம்னு அதுக்கும் கொஞ்ச நாள் ட்ரீட்மென்ட் எடுக்க வச்சிருக்குறார். அப்பவும் நீங்க தப்பு பண்ணுறீங்க.. என்னமாதிரி உள்ள எனக்கு ஈகுவலான பசங்க கூடதான நான் விளையாடவோ,பழகவோ முடியும், என்னோட சின்ன பசங்க கூட நான் எப்படி பழகுறது, அதுமில்லாம நான் என் பிரண்டு கூட தான் இருக்குறேன். உங்க கண்ணுக்கு அவன் தெரிய மாட்டான் என சொல்லி அவங்க அப்பாவ வேற பயப்பட வச்சிருக்குறான். அவரும் இத வெளில எப்டி சொல்றது நம்ம பையன லூசுன்னு சொல்லிருவாங்கலேன்னு மறைச்சிருக்குறார். இப்ப பையன் காணாமல் போனதும் இந்த விசயங்களை என்னிடம் மறைக்காமல் சொன்னார். அதுவும் நானா விரிவா விசாரிச்சதுனால சொன்னார். அதனால தான் நான் இது ஏலியன் பண்ணதுன்னு சொல்றேன்..”

என தான் சேகரித்த அணைத்து தகவல்களையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சங்கர்.

“கன்பார்மா சொல்றீங்களா… இல்ல ஒரு ஊர்ஜிதத்துல சொல்றீங்களா..?”

“அவங்க அப்பாவ நான் விசாரிச்ச வரையில இந்த சம்பவத்துக்கு ஏலியன் காரணமா இருக்கலாம் சார்… நாம அப்படியே ரிப்போர்ட் குடுத்தறலாம் சார்..”

“ஒ.. காரணமா இருக்கலாம்… ம்ம் ஏன் இப்டி இருக்க கூடாது…?”

“எப்படி சார்..?”

“நீங்க சொன்ன காரணமெல்லாம் அப்படியே கரக்ட்டுனு வச்சிக்குவோம்.. ஆனா கடத்தினது மட்டும் ஏலியன் இல்லை..”

“புரியல சார்…”

“அந்த பையனோட அப்பா சொன்ன சில விசயத்தை நீங்க மறந்துடீங்கனு நினைக்குறேன் சங்கர். அந்த பையனுக்கு டெலிபதி மாதிரி ஒரு சக்தியும் இருந்திருக்கு.. அவன பேர சொல்லி கூப்பிடாமலேயே மனசில அவனை நினச்சாலே அவனுக்கு அது தெரிஞ்சு அவன் வந்திடுவான். அதேபோல பூட்டிய கதவுக்கு வெளில யார் வந்து நிக்குறாங்கனு வீட்டுக்கு உள்ள இருந்து பாக்காமலே யாருனும் சொல்லிருவான்.. இதெல்லாம் ஏற்கனவே கவுன்சலிங் போனபோது அந்த டாக்டர்கிட்ட அவர் சொல்லிருக்குறார். அந்த டாக்டர் அந்த பையன கவுன்சலிங் பண்ணபோது அவன் சொன்ன விஷயங்களையெல்லாம் கேட்டு ஆச்சர்யபட்டு அவனோட ரகசியத்தை தெரிஞ்சுகிட்டு அவர் நண்பர் கூட சேர்ந்து அமெரிக்காவுல இருக்குற ஏலியன் பற்றிய ஆராய்ச்சி செய்துவரும் தனியார் நிறுவனுதுக்கு இந்த தகவலை குடுத்துருக்குறாங்க. அவங்க, இனிவரும் காலம் மனிதர்களும் ஏலியன்களும் இணைந்து வாழும் காலம். ஏழாவது அறிவு உள்ள இந்த பசங்கள வச்சிதான் சீக்கிரமாக ஏலியன்களை தொடர்பு கொள்ள முடியும், என சொல்ல. இந்த மாதிரி சக்தியுள்ள எல்லா பசங்க டீட்டெயிலையும் அவங்களுக்கு கொடுத்து, பசங்களை கடத்துரதுக்கு ஐடியாவும் கொடுத்து பெரிய தொகையை அன்பளிப்பா வாங்கிக்கிட்டு, அத ஏலியன் மேல ஏன் அவங்க போட்ருக்க கூடாது..?”

என அவர் பேசியதை கேட்டு சங்கருக்கு வியர்த்து ஊற்றியது..

“சார்…சா…….ர்” என சங்கருக்கு நாக்கு குழறியது. உடலெங்கும் நடுக்கமெடுத்தது. சங்கரை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த ஜான்,

“நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் சங்கர்..”

என கூறி, கையைத்தட்டவும் கதவை திறந்து துப்பாக்கி முனையில் உள்ளே நுழைந்த காவலர்கள் சங்கரை சுற்றி வளைக்கிறார்கள். வாசலில் இருகாவலர்கள் கைப்பிடிக்குள் சங்கரின் நண்பர், டாக்டர் நின்று கொண்டு இருக்கிறார். காவலர்கள் சங்கரை இழுத்து செல்கிறார்கள். ஜான் சங்கர் அருகில் சென்று,

“நானும் ஒரு இண்டிகோ குழந்தை தான் சங்கர்” என சொல்லிவிட்டு சிரிக்குறார்…

————————————————————

‘’அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அற்புதங்கள் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு பாருங்கள். உங்களைச் சுற்றி ஏராளமான அற்புதங்கள் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள்.” – ஜோன் போன் ஜோவி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *