மோகினிப்பேய்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 54,817 
 
 

வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து,சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன்.

அவன் தனது இருபத்திமூன்றாம் வயதில் யுனிவர்சிட்டிப் படிப்பை முடித்து,கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து கொஞ்சநாட்களில், கல்லூரி நாட்களிலும் யுனிவர்சிட்டி நாட்களிலும் இருந்து சுதந்திரமோ,நேரமோ இனிவருவது அருமை என்று அவனுக்குத் தெரிந்தது. இனி அப்படியான சுதந்திரமும் தான் நினைத்ததைச் செய்ய நேரமும் கிடைப்பதென்றால் அவனடைய உழைப்பு வருமானம் போன்றவற்றையும் யோசிக்க வேண்டும் என்பது யதார்த்தத்தின் வெளிப்படை என உணர்ந்தான்.

பணத்தைப்பற்றிக் கவலைப்படாமல் கொஞ்சநாட்கள் தான் நினைத்தததைச் செய்யலாம் என்ற அவனுடைய அந்த ஆசை இப்போது லண்டனில் நிறைவடையப்பதைப்பற்றி ராகவன் மிகச் சந்தோசப்பட்டான்.

முழுச்சம்பளத்துடன்,அவனாக எடுத்துக் கொண்ட ‘மூன்றுமாத விடுமுறை’!

அவன் வேலை செய்த கொம்பனியின் தலைமையகம், லண்டனிலிருந்து நியுகாஸில் என்ற இடத்திற்கு நகர்த்தப்படுகிறது. அங்கு போக விரும்பாதவர்கள் வேலையை விட்டு விலகிக் கொள்ளலாம் என்றும் அதற்குப் பரிகாரமாக, அவர்களின் சேவைக்காலத்தைப் பொறுத்து நிவாரணப் பணம் வழங்கப் படும் என்றும் கொம்பனி சுற்றிக்கை வந்தபோது,ராகவன், தான் நியுகாசுலுக்குப் போவதில்லை என்று முடிவுகட்டிவிட்டான்.

லண்டனை விட்டு நகர அவன் விரும்பவில்லை. ஓருகாரணம் அவனின் சினேகிதர்கள் பலரும், பெரும்பாலான உறவினர்களும் லண்டனில் இருக்கிறார்கள்.அத்துடன், மேலதிக பட்டப்படிப்பும், லண்டனில் வேலை செய்த அனுபவும் உள்ள அவனுக்கு,இனனும் சில மாதஙடகளில்,லண்டனில் இன்னுமொரு வேலை எடுப்பது பெரிய கடினமான வேலையல்ல என்று அவனுக்குத் தெரியும்.

இப்போது கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு,இந்தியாவில் இருக்கும் தாய் தகப்பனை ஒருதரம் போய்ப் பார்த்து விட்டு வரலாம்.அவர்கள் இலங்கையில் தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளால்,இந்தியாவில் தஞசமடைந்திருக்கிறார்கள்.அதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், இவனைக் கண்டதும் அம்மா கல்யாணம் பேசத் தொடங்குவாள். பேசுவதுமட்டுமல்ல, ‘யாரையும்’இவனிற் தலையிற் கட்டிவிடத் தயங்கமாட்டாள்.அவன் தனக்கு விரும்பிய ஒருத்தியைச் சந்தித்துத் திருமணம் செய்யவேண்டும் என்று கற்பனை செய்கிறான். அந்தக் கற்பனையால் ராகவன் காலத்தைக் கடத்தாமல் அவனுக்கு ஒரு ‘காற்கட்டைப் போட’ அம்மா திட்டமிடுவது அவனுக்குத் தெரியும்.அதனால்,தற்போது இந்தியா போகும் திட்டத்தைத் தற்காலிகமாக ஓதுக்கி வைத்தான்.

தம்பியின் குடும்பத்தைப் பார்க்க கனடா போகலாம். ராகவனின் தம்பி, இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளால் தனது மேற்படிப்பைத் தொடர முடியாமல்,ஏ லெவலுடன் கனடா போனவன், ஏதோ ஒரு வியாபாரம் செய்யத் தொடங்கி வசதியாக வாழ்கிறான் என்று சொன்னான். மும்பத்தி மூன்று வயதுத் தமயன் ராகவனுக்குத் திருமணமாகவில்லை,ஆனால் அவன் தம்பி காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டான். அண்மையில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. தமயனுக்குப் பணம் சேர்க்க முடியாத இயலாமையைப் பற்றி அவன் சொல்வது ராகவனுக்குப் பிடிக்காது. எனவே பணம்பற்றிய உபதேசம் கேட்கக் கனடா போகும் யோசனையும் ராகவனுக்குச் சரிவரவில்லை.

அக்காவும், தங்கச்சியும் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். போன வருடம்தம்பியின் கல்யாணம் இந்தியாவில் நடந்தபோது,ராகவன் அவர்களைச் சந்தித்தான்.

பாரிசில் இருக்கும் நண்பனைப் பார்க்கப் போகலாமென்றால்,அவன் தன் எதிர்காலத் துணைவியாக இறக்குமதி செய்யவிருக்கும் பெண்ணை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறான். அதனால் அவனையும் குழப்ப விருப்பமில்லை.

இவற்றையெல்லாவற்றையும் விட, அவனின் அடிமனத்தில் தேங்கிக் கிடக்கும் ஆசையை இந்தச் சந்தர்ப்பத்தில் நிறைவேற்றத் திட்டமிட்டான்.அடுத்த வேலை ஒன்று தேடமுதல் அந்தத் திட்டத்தை எப்படியும் செயற்படுத்தவேண்டும் என்று அவன் மனம் துடித்தது.

அந்தத் திட்டம் சரிவர எவ்வளவுகாலம் எடுக்குமொ தெரியாது.அதனால் வேலை விட்டபோது தரப்பட்ட பணத்தைக் கவனமாகச் செலவழிக்க வேண்டும். இப்போது இருக்கும் வசதியான பிளாட்டைக் காலி செய்து விட்டு, மலிவான ஒரு இடத்தில் ஒரு அறையைத் தற்கால்pமாக எடுத்தாற் போதும்.

ராகவனின் ‘இலட்சியம்’ நிறைவேற,ஒரு புது இடம் பார்க்கும் படலம் ஆரம்பமானது. அவன் இப்போதிருக்கும், இஸ்லிங்ரன் நகர் வசதியும், கலைக்கூடங்களும், நாடகக் கொட்டகைகளும்,சினிமாத் தியேட்டர்களும்,நவீனமான ‘கணணி’பார்களும் உள்ள,சுறுசுறுப்பான், கவர்ச்சியான இடம். அதை விட்டுப்போக அவனுக்கு மனம் வரவில்லை. ஆனாலும் கையிலிருக்கும் பணம் செலவழியமுதல் இன்னொரு வேலை எடுக்கவேண்டும். அதற்கிடையில், வாழ்க்கை முழுதும் அவனின் அடிமனத்தில் தேங்கிக் கிடக்கும்,’அந்த இலட்சியத்தைச்’ செய்து முடிக்க முயற்சி செய்யவேண்டும்.அதற்கு, அமைதியான ஒரு இடம் தேவை. நகரின் சந்தடிகளற்ற இடமாக இருப்பது நல்லது என்று முடிவுகட்டினான்.

அவனின்,’அறைதேடு படலம்’ ஆரம்பமானது. கிளப்ரன் என்ற இடத்தில் ஒரு அறை காலியாக இருக்கிறது என்ற விளம்பரத்தைக் கண்ட அவன் மனம் சந்தோசத்தாற் துள்ளியது. ஹக்னி என்ற பிரதேசத்தின்,வறுமையான ஒரு மூலையில் கிளப்ரன் என்றொரு பகுதியுண்டு. அவனுக்குப் பிடித்த,இஸ்லிங்ரன் என்ற நகரிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மைல்களுக்கப்பால் கிளப்ரன் இருக்கிறது.

அங்கு போனதும், அந்த இடம் நானுறு வருடங்களுக்குப் பின் தங்கியிருப்பதாக அவன் நினைத்தான்.ஏழ்மையின் சின்னங்கள் எங்கும் பரவிக் கிடந்தன.

ஆரவாரத்தில் பொங்கி வழியும் இஸ்லிங்ரன் எங்கே, அழுதுவழியும் கிளப்ரன் எங்கே என்று அவன் மனம் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டது. கிளப்ரன் என்ற பகுதியில், பார்க்கஸ் வீதியில் பதின்மூன்றாம் இலக்க வீட்டின் மாடியில் அவனுக்கு ஒரு அறை கிடைத்தது.

தனது சாமான்களை எடுத்துக்கொண்டு வந்து ‘புதிய’ அறையில் அடுக்கியபோது,தனது வாழ்நாளில் ஒரு கொஞ்சகாலம்,பொருளாதாரப் பிரச்சினை பற்றி யோசிக்காமல்,தான் நினைத்ததைச் செய்யலாம் என்று நினைத்து சந்தோசப் பட்டான்.

அவனின் இலட்சியத்தை நிறைவேற்ற மிகவும் அமைதியான சூழ்நிலை தேவை.அதனால் மிக மிக நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் தனது டெலிபோன் நம்பரைக் கொடுப்பதில்லை என்று முடிவுகட்டினான்.

அடுத்ததாக, ஒரு நல்ல மேசையும் கதிரையும் வாங்கிக் கொண்டான். ஓய்வு நேரத்தில் வாசிக்கத் தனக்குப் பிடித்த எழுத்தாளர்களின்; சில புத்தகங்களை வாங்கிக் கொண்டான்.

அந்த வீடு,பெரும்பாலான பிரித்தானிய குடும்பத்தாரின் வீடுகள்போல மூன்று அறைகளையும் முன் ஹாலையும், டைனிங் றூம்,சமையலறை, மேல் மாடியில் ஒரு டொய்லெட்,பாத்றூம் என்பவற்றுடன் அதிகப் படியாக ஒரு பாதாள அறையையும் கொண்டதாக இருந்தது.

முதலாவது மாடியில்,மூன்று படுக்கையறைகள் அதில் ஒன்றைத் தான் பாவிப்பதாக வீட்டுக்கார சீக்கியரான மிஸ்டர் சிங் சொன்னார்.அவருக்கு லண்டனிற் பல வீடுகள் இருப்பதாகவும் அவற்றின் வாடகைகளை அறவிட வரும்போது சிலவேளை லண்டனிற் தங்கவேண்டியிருப்பதால், தான் அந்த அறையை வைத்திருப்பதாக அவர் சொன்னார்.அத்தோடு, தனக்குச் சிலவேளை,’தனியாக’ வாழவேண்டும்போலிருந்தால் அங்கு வருவதாக அவர், தனது பெரிய மீசையைத் தடவி விட்டபடி குறும்புச் சிரிப்புடன் சொன்னார்.அவனது அறைக்கு அடுத்ததாக இருக்கும் அறை ஒரு ஸ்ரோர் றூம் என்று மிஸ்டர் சிங் சொன்னார்.

கீழேயுள்ள டைனிங் றூம் ஒரு படுக்கையறையாக மாற்றப் பட்டு அதில்; இரு ஆபிரிக்க மாணவர்கள் வாடகைக்கு இருப்பதாக அவர் சொன்னார். அவர்கள்,பகுதி நேர வேலை செய்துகொண்டு படிக்கும் மாணவர்களாக இருக்கவேண்டும். அவன்,வெளியே போகாமற் தனது அறையில் இருக்கும் நேரங்களில்,கடந்த ஒரு வாரமாக அந்த மாணவர்களை ஒன்றிரண்டு தடவைகள் மட்டும் சந்தித்திருக்கிறான்.

ஓக்டோபர் மாதக் கடைசியில், லண்டன், சிறு தூறல்களாலும், ஓயாத காற்றாலும் சிணுங்கி வழியத் தொடங்கியிருந்தது.இலையுதிர்காலத்தின் பெருங்காற்றால் இலைகளைப் பறக்கவிட்ட பெருமரங்கள் நிர்வாணமாகக் காட்சியழித்தன.வானம், ஏதோ தூரம்போன கணவனை நினைத்து ஏங்கும் மனைவிபோல் சூரியனின் முழு வரவுக்கும் சோகத்துடன் லண்டன் காட்சியழித்தது.

அந்த வீட்டின் சுற்றுப் பகுதியுள்ள வீடுகள் அவனிருக்கும் வீடுபோல் பழைய வீடுகளே. அதில் வாழ்பவர்கள்,பெரும்பாலோர், தஞ்சம் கேட்டு வந்த அகதிகள்,வேலையற்றவர்கள், வேலை தேடுபவர்கள்,வசதியற்ற மாணவர்கள்,போதைமருந்தெடுப்பவர்கள்,சட்டவிரோத நடவடிக்கையிலீடுபடும் காவாலிக் கூட்டத்தினர் என்று பல ரகத்தினர்.விக்டோரியா மகாராணி காலத்தில் வாழ்ந்து லண்டனின் வறுமையைத் தன் இலக்கியப் படைப்புக்கள் மூலம் பொதுசனங்களுக்க விளக்கிய பிரித்தானியாவின் பிரபல எழுத்தாளரான சார்ள்ஸ் டிக்கின்ஸ் இந்த இடத்தைக் கண்டால் ஒரு சோக காவியமே படைத்திருப்பார் என்று அவன் நினைத்தான்.

நீண்டு வளைந்துபோகும், அந்தத் தெருவில் பெரிய பணக்காரர்களையோ,அல்லது அவர்களின் அடையாளங்களான விலையுயர்ந்த கார்களையோ காணமுடியாது.

அவன் இதுவரையிருந்த இஸ்லிங்ரனுக்கும், இப்போது வாழும் கிளப்ரனுக்கும்தான் எத்தனை வித்தியாசம்?இந்தச் சூழ்நிலையில் அவன் இலட்சியம் நிறைவேறுமா?

அவனது ‘இலட்சியம்’, எப்படியும்,ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்பதாகும்.அவன் இதுவரையும் அதுபற்றி யாரி;டமும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.தெரிந்த சினேகிதர்கள்பலர், எழுத்தில் ஆர்வமும் வாசிப்பதில் அக்கறை காட்டுபவர்களாக இருந்தாலும், வேலையைத் துறந்து விட்டு, எழுதவேண்டும் என்ற சங்கற்பத்தை எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

இளமையில் அவன் நிறைய வாசித்திருக்கிறான். தமிழில் வாசிக்கத் தொடங்கிய ஆர்வம். இங்கிலாந்துக்கு வந்ததும் பெரிதாக உருவெடுத்தது. அவனுடன் வேலை செய்யும் ஒரு ஆங்கில நண்பன், வார விடுமுறைக்கு,அவனின் சொந்த இடமான டோர்செற் என்ற இடத்திற்கு ராகவனை வரச்சொல்லிக் கேட்டபோது அவன் மிகச் சந்தோசப் பட்டான். இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளரான தோமஸ் ஹார்டியின் கதாநாயர்கள் கதாநாயகிகள் நடமாடிய மண்ணை மிதிக்கும் ஆவலை அவனாற் கட்டுப் படுத்த முடியவில்லை.

இப்போது, சட்டென்று அவன் வேலைத் தலத்தில்; நிகழ்ந்த மாற்றத்தால்,அவனுக்குக் கொஞ்சகாலம் ஓய்வு கிடைத்திருக்கிறது. அவன் நினைத்ததைச் செய்து முடிக்கத் தேவையான அவகாசம் கிடைத்திருக்கிறது. பகலில், அந்த வீட்டில் அவனைத் தவிர யாரும் யாரும் இருக்கமாட்டார்கள்.

அவன் குடிபெயாந்த காலம் குளிர் காலமென்றபடியால், வெளியில் இலையுதிர்காலக் குளிர்காற்று ஊசி முனைபோல் உடலில் குத்துகிறது. வீpட்டுக்குள்ளும் பெரிய சூடாக இல்லை. மிஸ்டர் சிங் சொன்னதுபோல் வீடு மிகவும் வசதியாகவோ சூடாகவோ இருக்கவில்லை என்பதை வந்து ஒன்றிரண்டு நாட்களிற் புரிந்து கொண்டான். சரியான சூடுதரும் ஹீட்டர்கள் வீட்டில் பொருத்தியிருக்கவில்லை. ஆதிகாலத்தில் பாவனையிலிருந்த சில ஹீட்டர்கள் அறைகளிற் பொருத்தப் பட்டிருந்தன. அதுபோதாது என்றால். தூர்ந்துபோன பழைய ஜன்னற் சட்டங்களுக்குள்ளால் குளிர் தாராளமாக அழையாத விருந்தாளியாக வந்து அவதி தந்து கொண்டிருந்தது.

அமைதியாக, வசதியாக ஒரு இடத்திலமர்ந்து, எழுத வேண்டுமென்ற ஆவல் ஒன்றிரண்டு நாட்களில் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. அவனது வாழ்க்கையில் இதுவரையும் தனியாக வாழ்ந்து அனுபவம் இல்லாதபடியால், அவனக்கு அந்தச் சூழ்நிலை தர்மசங்கடமாகவிருந்தது.சட்டென்று அவன் இப்படி ஒரு முடிவு எடுத்தது சரிதானா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

இதுவரை, பரவாயில்லாத வசதியான வீடுகளில் வாழ்ந்த பழக்கத்தால், இந்த வீட்டின் வசதியின்மை மனத்தில் ஒரு ‘இல்லாமையை’ உண்டாக்கியிருந்தது.

கவிதையோ கதையோ எழுதுவதற்கு ஒரு உந்துதல் தேவை அத்துடன், அதைச்செயற்படுத்த ஒரு இடம் தேவை.தனது கற்பனைக் கரு பிறப்பதற்கு இந்த இடம் சரிதானா என்று யோசித்தான்.ஆனாலும், அந்த வீட்டில் அவனது முதற்கிழமையனுபவத்தை வைத்துக்கொண்டு,தனது இலட்சியத்தை விட அவன் தயாராகவில்லை.

வீடு பெரும்பாலும் ‘அமைதியாக’ இருக்கும். வெளியில் போகும் வாகனங்கள், குழந்தைகள், மனிதர்கள்; உண்டாக்கும் சப்தங்கள்மட்டும்தான். அவன் இன்னும் ஒரு சாதாரண உலகத்தில் வாழும் ஞாபகத்தைத் தரும் இல்லாவிட்டால். மூடிய அறையில் அவன் சிறைப் பட்ட உணர்வுதான் வரும்.

அதிகம் ஓடியாடாமல் வீட்டுக்குள் இருந்ததால் உடம்பு குளிரில் வருந்தியது. ஓன்றுக்குப் பதில் இரண்டு ஸ்வெட்டர்களை அணிவதைப் பழக்கப் படுத்திக் கொண்டான். வேலையால் வரும்போது சிலவேளைகளில்,சினேகிதர்களுடன்; ‘பாருக்’;குப்போய் ஒரு பியர் குடிப்பவன் இப்போது ஒரு நாளைக்கு இரண்டு பியர் என்றாலும் காலி செய்தான.; ஆனால் அவன் நினைத்தபடி ‘கற்பனைகள்’ வந்து கதையொன்றும் எழுத முடியவில்லை.

இலக்கியம்,எழுத்து என்பவற்றின் கரு, அதைப் படைக்கும் எழுத்தாளனின் அடிமனத்தில் உண்டாகும் ஒரு உணர்வுப் பிரளயத்தின் உருவகம் என்பதை அவன் முழுக்க உணரவில்லை.எழுத்தானாகவேண்டும் என்று ஆசைப் பட்டவனுக்கு எதை எழுதவேண்டுமென்ற வேகம் சரியாக வந்து சேரவில்லை என்று உணர்ந்தான்.

எழுத வேண்டும் என்று பேனாவுடன் உட்கார்ந்தால் அவன் கற்பனைகள் கண்ணாமூஞ்சி விளையாடுகிறது.

காதற் கதை, சோகக் கதை,சரித்திரக் கதை,நகைச்சுவைக்கதை,போர்க்காலக் கதை என்று பல தரப் பட்ட யோசனைகள் மனதில் வந்து போயின

காதற்கதை எழுதலாமா என்று யோசித்தபோது,அவனின் இளமைக்காலத்தில், இயற்கையான பாலியற் சுரப்பிகள் உடம்பில் மாற்றங்களைத் தந்த காலத்தில், அவனது உணர்வுகளைத் தட்டியெழுப்பி நித்திரையைக் குழப்பிய, கவர்ச்சியான பக்கத்து வீட்டு வேலைக்காரியின் நினைவு சட்டென்று வந்தது. ஆனாலும், அந்த உணர்வுக்கப்பால்,உருப்படியாக ஏதும் கதை எழுத ஒரு கரு இருப்பதாக அவன் புரிந்து கொள்ளவில்லை.

அதைத் தொடர்ந்து வந்த சிந்தனையின்படி. பாடசாலை நாட்களில் அவனது பருவ உணர்ச்சிக்குக் கற்பனையிற்; தீனிபோட்ட காந்திமதி என்ற மாணவி,அவனுடன் சர்வகலாசாலையில், கொஞ்சம்’சகசமாகப்’ பழகிய ஒன்றிரண்டு சினேகிதிகளைக் கதைகளின் கதாநாயகிகளாக்கப் பயம். அவர்களில் பெரும்பாலோர் கல்யாணம் செய்து குழந்தை குட்டிகளுடன் உலகின் நாலாபக்கமும் வாழ்கிறார்கள். அவன்,பழைய விடயங்களை எழுதப்போய் அதை அடையாளம் கண்ட சிலர் சண்டைக்கு வந்தால் அதுவே பெரிய கதையாகி விடும்.

வேலையிடங்களில், ‘நெருக்கமாகப்’ பழகிய ஒன்றிரண்டு பெண்கள் கதாநாயகிகள் ஸ்தானத்துக்கு வரவில்லை என்பதும் அவனுக்குத் தெரியும்.

எழத வேண்டுமென்ற இலட்சியத்துடன் வீடுமாறி வந்து,ஒரு கிழமை ஓடிவிட்டது. காலியான பியர்க்கேன்களும், எழுதிச் சரிவராமல் கசக்கி எறியப் பட்ட பேப்பர்களும் மேசையையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் அலங்காரம் செய்யத் தொடங்கி விட்டன.

ஊர் உறங்கும்போது,இவன் விழித்திருந்து எதையோ எழுத முயற்சித்தான். எத்தனை மணிக்குப் படுக்கையில் விழுந்தான் என்று தெரியர்து.

வெளியிற் சரியான குளிர், பழையகாலத்து ஜன்னல் சட்டங்களால் ஊடறுத்துவந்து அவனை நடுங்கப் பண்ணியது.

போட்டிருந்த ஸ்வெட்டர்கள் இரண்டுடனும்,இரண்டு சோடிக் காலணிகளுடனும்,படுக்கையுள் புகுந்தான்.

‘ என்ன தூங்கிவிட்டேனா?’ கொஞ்ச நேரத்தில் அவன் தன்னைத்தானே கேட்க நினைத்தான். தூக்கமும் விழிப்புமற்ற ஒரு இரண்டும் கெட்டான் நிலை.

அவன் கண்களைத் திறக்க முயன்றான்,திறக்க முடியவில்லை.

மாடிப்படிகளில் யாரோ வருவது போலிந்தது.

மிஸ்டர் சிங் நடுச்சாமத்தில் வரமாட்டார். அவர் வருவது அப்படியே அவர் நடையிற் தெரியும். தனது அறையிற் தங்கும் நாட்களில் நன்றாகக் குடித்துவிட்டு தள்ளாடிக் கொண்டு வருவார்.ஆபிரிக்க மாணவப் பையன்கள் மேல்மாடி பாத்றூமுக்கு வருவதானால் ஆரவாரமாகச் சத்தம்போட்டு சிரித்துக்கொண்டு, இருமாடிப்படிகளை ஒரேதாவலிற் கடந்து பட படவென வருவார்கள்.

அனால் மாடிப் படிகளிற் கேட்பது, மெல்லியதான தாளத்துடனான ஒரு பெண்ணின் நடை.

யார் இந்த நேரத்தில் இப்படிப் பதுங்கி வருபவர்கள்?

இந்தப் பக்கம் கள்வர்கள், ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள்.ஏழ்மையின் காரணமாக எதையும் சுருட்டிக்கொண்டோட இப்படி மெல்லமாக வருகிறார்களா?, இந்த வீட்டில் பெரும்பாலும் ஏழை மாணவர்கள்தான் குடியிருப்பார்கள், அவர்களிடம் என்ன இருக்குமென்று வருகிறார்கள்?

பக்கத்துத் தெருவில் போதை மருந்து விற்பவர்கள் அல்லது பாவிப்பவர்கள் யாரும் வருகிறார்களா? போதை மருந்து எடுப்பவர்கள் சுயமாகச் சிந்திக்க மாட்டார்களே,அவர்கள் போதை மருந்து வாங்க எதையும் செய்து பணம் தேடுவார்கள்!

அவன் யோசிப்பதுபோலிருக்கிறது ஆனால் அவனாற் தனது கண்களை திறக்க முடியவில்லை.அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.இந்த நேரத்தில் அவன் யாரையும் சந்திக்க விரும்பவில்லை.

‘மலிவான இடம் தேடி வந்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’; அவன் தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

வாழ்க்கையில் எதற்கும் ஒரு விலையுண்டு. ஓரு எழுத்தானாக வரவேண்டும் என்ற அவனின் அப்பழுக்கற்ற கற்பனைக்கு இதுவா தண்டனை? அந்த மெல்லிய நடை அவனின் அறைப் பக்கம் நெருங்குவதாகக் கேட்டது.அவனின் கதவு மெல்லமாகத் திறந்து கொண்டது போன்ற ஒரு பிரமை.அதைத் தொடர்ந்து அவனின் கட்டிலின் அருகில் யாரோ வந்த நிற்பது போன்ற உணர்வு.

அவனுக்கு நா வரண்டது.மேலண்ணம் ஒட்டிக் கொண்டது.இருதயம் பட படவென அடித்துக்கொண்டது.சரம் நனைந்து விடுமோ என்றளவுக்குப் பயம் அவனை நடுங்கப் பண்ணியது.

‘என்ன பைத்தியக்காரத்தனமிது? யாரென்று கேட்கத் தைரியமற்றவனா நான்?’

அவன் கனவுக்கும் நனவுக்குமிடையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது,பக்கத்துத் தெருவில் காரும் லாரியும் பெரிய சத்தத்துடன் மோதிக்கொண்டது. அந்த சப்தத்தில் அவன் பட்டென்று கண்களைத் திறந்தான். அவனின் உடம்பு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது.

அவன் தனது தைரியத்தை மீட்டெடுக்க எத்தனையோ நிமிடங்கள் எடுத்தன.

அவன் சட்டென்று,நடுங்கும் தனது கரங்களால,பக்கத்து மேசையிலிருந்த தனது லைட்டைப்போட்டான்.கையில் ஆயுதத்துடன் அவனைத் தாக்க வந்திருக்கும் ஒரு திருடனை அவன் மனம் கற்பனை செய்தது.

உலர்ந்த தனது உதடுகளை நாக்காற் தடவிக் கொண்டு கண்களைத் திறந்தான்.

அவனது அறையில் யாருமேயில்லை.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,படுக்கையை விட்டெழுந்தான்.அவனது அறை ஆவென்று திறந்து கிடந்தது.

தள்ளாடும் நடையுடன்,வெளியில் வந்தான்.

எப்போதும் மூடிக் கிடக்கும் அந்த இருண்ட பக்கத்தறை சாடையாகத் திறந்திருந்தது.மிஸ்டர் சிங் அது ஒரு ஸ்ரோர் றூம் என்று சொல்லியிருக்கிறார். அந்த அறை மிஸ்டர் சிங் தனது தலைப்பாக்கள் அல்லது அவரின் தனிப்பட்ட சாமான்கள் வைக்கும் இடமாக இருக்கலாம் என்று ராகவன் யோசித்தான்.

மெல்லமாக மாடிப்படியேறி வந்த திருடன் அந்த அறையில் மறைந்திருக்கிறானா என்று ராகவன் யோசித்தான். ஆனாலும், திறந்து பார்க்க மனம் ஒப்பவில்லை. திருடன் இரவு முழுக்க அந்த அறையில் ஒளிந்து இருக்கப் போவதில்லை. எப்படியும் வெளியில் வருவான் என்றெல்லாம் ராகவனின் சிந்தனை பல பக்கமும் சிதறியது.

ஓருசில நிமிடங்கள் மிகவும் உன்னிப்பாக, உள்ளேயிருக்கும் திருடனனின் அசைவுகள் ஏதும் காதுக்குக் கேட்கிறதா என்று நின்று பார்த்தான். உள்ளேயும் வெளியேயும் ஒரேயடியாக நிசப்தமாகவிருந்தது.

அவன் தனது அறைக்கு வநது படுக்கையில் வீழ்ந்தான். நித்திரை எப்போதோ குட்பை சொல்லி விட்டதால் புரண்டு புரண்டு படுத்தான். அவன் முதல் இருந்த இஸ்லிங்டன் வீட்டின் அருகில் ஒர பிரபல நாடக கொட்டகை இருக்கிறது. நடுச்சாமத்தினபின் நாடகம் பார்த்து விட்டுப்போவோரின், நாடகக் கலைஞர்களின் ஆரவாரம் கேட்கும்.

அடுத்த நாள் பின்னேரம் வரைக்கும் அந்த வீட்டுக்கு யாரும் வரவில்லை. அன்று சனிக்கிழமை என்றபடியால்,ஆபிரிக்க மாணவர்கள் படிப்பை முடித்த கையோடு, அவர்கள் செய்யும் இரவு வேலைக்குப் போயிருக்கலாம்;. வார விடுமறைநாட்களில் வாடகை அறவிடும் மிஸ்டர் சிங்கும் வரவில்லை.

அன்று பின்னேரம், ராகவனுடன் வேலை செய்த நண்பர்களில் ஒருத்தனான சைமன் போன் பண்ணினான்.இருவரும் இஸ்லிங்டன் ஜாஸ் கிளப் ஒன்றில் சந்தித்தார்கள்.சைமன் ஜாஸ் இசையில் மிகவும் பிரியமுள்ளவன். பல தரப் பட்ட ஜாஸ் சி;டிகளைச் சேர்த்து வைத்திருக்கிறான்.அவன் மூலம் ராகவனும் அந்த இசையை ரசிக்கப் பழகியிருந்தான்.

இருவரும் ஜாஸ் கிளப்பால் ராகவனின் அறைக்கு வந்து சேர அதிகாலை நான்கு மணியாகி விட்டது. இருவரும் குடித்திருந்ததால் டாக்சியில் வந்திருந்தார்கள். டாக்சியால் இறங்கியதும், ராகவன் தனது அறையை நிமிர்ந்து பார்த்தான்.

‘என்ன காதலி காத்திருக்கிறாளா, வந்ததும் வராததுமாக அறையை அண்ணாந்து பார்க்கிறாய்?’ சைமன் ராகவனைக் கேலி செய்தான்.

ராகவன் மறுமொழி சொல்லவில்லை.

‘என்ன பேய்வீட்டைப் பார்ப்பது போல் பார்க்கிறாயே’என்று சைமன் கேட்டிருந்தால் ராகவன் பதறியிருப்பான். நேற்றிரவு நடந்த விடயம் அவன் அடிமனத்தை ஏதோ ஒரு விதத்தில் உலுக்கியிருந்தது.

அவன் தர்ம சங்கடத்துடன் சிரித்து விட்டு,தனது கதவைத் திறந்தான். மேல் மாடியில் லைட் எரிந்து கொண்டிருந்தது. மாணவர்களின் அறையிலிருந்து பாடல் ஒலி கேட்டக்கொண்டிருந்தது.

அப்பாடா, மாணவர்கள் வந்திருக்கிறார்கள்.அவன் நிம்மதியுடன் மேலே போனான்.

அவர்களின் ஆரவாரத்தைத் தாண்டி அவன் நன்றான உறங்கினான். முதல் நாள் நித்திரையில்லாதது ஒருகாரணம், அடுத்தது, அவன் சைமனுடன் சேர்ந்து குடித்து விட்டு வந்திருந்தான்.

அதையடுத்த சில நாட்கள் அவன் எழுதுவதாற்காக எடுத்த முயற்சிகள் ஒன்றும் சரிவரவில்லை. ஓருகாரணம், எதை எழுதுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. எழுதுவது என்பது ஒரு பொழுதுபோக்கல்ல, அது ஒரு மனிதனின் அடிமனத்து சிந்தனைகளின் ஒரு பிரதிபலிப்பு என்று உணரத் தொடங்கினான்.ஆனாலும் தன்னால் முடியும் வரை முயற்சிக்க யோசித்தான்.

அந்த வார இறுதியில், மிஸ்டர் சிங் இரண்டுவார வாடகையை அறவிட வந்திருந்தார்.

முதல் சனிக்கிழமையிரவு நடந்த விடயத்தை அவரிடம் கேட்கலாமா என்று ஒரு கணம் யோசித்தான்.

வாடகை வாங்கிய கையோடு ராகவனையும் இழுத்துக் கொண்டு பக்கத்து ‘பாருக்குப்’ போனார். அவர் ஏன் தனக்கென்ற ஒரு அறையை அந்த வீட்டில் வைத்திருக்கிறார் என்று ராகவனுக்க அன்று விளங்கியது. மூக்கு முட்டக் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டிருந்தார்.

அந்த ‘பாரில் நிறைய இளம் பெண்கள், தங்களின் ஆண்நண்பர்களுடனும், பெண்சினேகிதிகளுடனும் வந்திருந்தார்கள். ‘உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? அப்படியிருந்தால் தனியாக ஒரு அறையில் இருக்கமாட்டாய்…காதலியிருக்கிறாளா…’இளம் பெண்களில் ராகவனின் பார்வை அவனையும் தாண்டி வளையவந்ததைக் கண்ட அவர் கேட்டார்.

‘இன்னுமில்லை..’ அவன் சாடையான வெட்கத்துடன் சொன்னான். ‘என்ன இன்னுமில்லை…கல்யாணமா அல்லது காதலா?’ அவர் ஒளிவு மறைவின்றிப் பேசுவது அவனுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது.மிஸ்டர் சிங் பெரும்பாலான சீக்கியரைப்போல் மிகவும் உயர்ந்து வளர்ந்து காணப்பட்டார். அவர் கண்களில் பாசம் தெரிந்தது. வாழக்கையின் பெரும்பகுதியைத் தனது வீடுகளின் அறைகளில் வாடகைகுக் குடியிருக்கும் இளம் தலைமுறையினருடன் செலவழித்ததால் அவர் போக்கு ஒரு தகப்பன் நிலைக்கு வந்திருக்கலாம் என்று அவன் நினைத்தான்.

அவன் பதில் சொல்லாமல் பியரை மடமடவென்று குடித்தான்.அவனுக்கு முப்பது மூன்று வயதாகிறது. தமக்கை தங்கை என்ற குடும்பப்பொறுப்புக்கள் அவனுக்குக் கிடையாது.அக்காவும் தங்கையும், ஏன் அவனது தம்பியும் கூடத்தான் ‘செட்டிலாகி’ விட்டார்கள்.இவன் பிரமச்சாரியாக இருப்பதற்கு ஒரு காரணமும் கிடையாது. அம்மா அப்பா பேசிய சில பெண்களை இந்தியாவுக்கப் போய்ப்; பார்த்தான். அவனுக்கு ஏனோ ஒருத்தரையும் ஒத்துக்கொள்ளவில்லை. அம்மா அப்பாக்களின் தேர்வுகள் அவனுக்குச் சரிவரவில்லை. தம்பி கெட்டிக்காரன், தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அம்மா முணுமுணுத்தாலும், அப்பா அவளைச் சமாதானம் செய்து தம்பிக்கு ஆசிர்வாதம் கொடுத்தார்கள்.

யாருக்காகவும் அவசரப்பட்டுத் திருமணம் செய்வதில்லை அவன் எப்போதோ முடிவுகட்டிவிட்டான். அடுத்தது. ஆங்கில நண்பர்களின் பழக்கதோசமோ என்னவோ, சுற்றுலா போவது, நாடகம்,இசை என்று கலை விடயங்களில் ஈடுபடுவதெல்லாம் அவனுக்குப் பிடித்திருந்தது. ‘சுதந்திரமாக’ இருக்கும்போது, நாங்கள் விரும்பியதைச் செய்ய வேண்டும்’ என்று அவன் சினேகிதர்களில் ஒருத்தனான சைமன் அடிக்கடி சொல்வான் சைமனுக்கு இதுவரை பல காதலிகள் வந்து போய்விட்டார்கள்.

ராகவனுக்குச்’ சீரியசாக’ இதுவரை யாரும் ‘கேர்ள் ப்ரண்டாக’ இருக்கவில்லை.படிக்கும் காலத்தில், கலகலப்பான அவனது குணத்தால் பல பெண்கள் கபடமின்றிப் பழகினார்கள். ஓன்றிரண்டுபேர் அவனுடன் படித்தவர்களுடன் காதல் வயப்பட்டார்கள்.கல்யாணம் செய்து கொண்டார்கள்.

பல்கலைக்கழகத்தில், அவனுக்கு ஓரளவு மனக்குழப்பத்தைந் தந்த பெண்ணை ராகவனுக்கு முன் இன்னொருத்தன் தட்டிக்கொண்டு போய்விட்டான்.

‘ஏன் எனக்கு ,உண்மையாகவே ஒரு ஆழமான ஒரு பெண்ணுடனும் ‘நெருக்கம்’ இதுவரையும் வரவில்லை என்று அவன் ஒரு நாளும் யோசித்தது கிடையாது. எது நடக்குமோ அது தன்பாட்டுக்கு ஒரு நாள் வரும் என்பது அவனது சித்தாந்தம்.

‘ஏதோ காலாகலத்தில் ஒரு நல்ல பெண்ணைப் பார், இல்லாவிட்டால் கண்டபாட்டுக்குக் கனவுகளும் கற்பனைகளும் வந்து தொல்லை தரும்’ மிஸ்டர் சிங் தகப்பன் மாதிரி ஆலோசனை கூறினார்.அவர் கண்களிற் குறும்பு.

அவன் தனது அறைக்குத் திரும்பியபோது, ஆபிரிக்க மாணவர்கள், சமையலறையில் பிசியாக இருந்தார்கள்.

தங்கள் சாப்பாட்டை ருசிபார்க்கச் சொல்லி அவர்களின் ஆபிரிக்க சாப்பாட்டைக் கொடுத்தார்கள். மரவளிக் கிழங்குக் களியும் மாட்டிறைச்சி வதக்கலும், அவித்த மிளகாய்களும் பீன்சும் நன்றாக இருந்தது.

சாப்பாட்டுக்கு நன்றி சொன்னவன்,

‘எவ்வளவு காலம் இந்த வீட்டில் இருக்கிறீர்கள்’ என்று கேட்டான்.

அவர்கள் இருவரும் தங்கள் மொழியில் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். அவன் அவர்கள் மறுமொழிக்கு ஆறுதலாகக் காத்திருந்தான்.

பின்னர் அவனை ஊடுருவிப் பார்த்துக்கொண்டு,’ நாங்கள் இங்கு வந்து கொஞ்சகாலம்தான்…நீண்டகாலம் இந்த வீட்டில் தங்குவதாக எந்த யோசனையும் கிடையாது’ என்றார்கள்.

அது நடந்த சில நாட்களில் அவர்களைக் காணவில்லை.

‘ நான்கு கிழமையாக வாடகை தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்..இப்போது சொல்லாமற் கொள்ளாமல் ஓடிவிட்டார்கள்.. இதுதான் மாணவர்களுக்க அறை கொடுத்தால் வரும் கஷ்டம்’ மிஸ்டர் தனது வாய்க்கு வந்தபடி அவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார்.

‘இனி இரண்டு மாணவர்கள் வர எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது. நத்தார்ப்பண்டிகை முடியும் மட்டும் யாரையும் வாடகைக்கு வைப்பது கஷ்டம்.. உனது சினேகிதர்கள்.ஒன்றிரண்டு இரவுகள் தங்க வந்தால் அந்த அறையையும் பாவித்துக் கொள்…நீ அந்த அறைக்கு வாடகை தரத் தேவையில்லை’ தாராள மனப் பான்மையுடன் சொன்னார் மிஸ்டர் சிங்.அவர் தனது கண்களைச் சிமிட்டி அவனைக் குறும்பாகப் பார்த்தார். அவர் அவனின் சினேகிதர்கள் என்று சொன்னதற்குப்பின்’ சினேகிதிகளும்’ என்ற கருத்தும் அடங்கியிருப்பதை அவன் உணர்ந்தான்.

அவனுக்குப் பகிர் என்றது. இதுவரைக்கும் அந்த மாணவர்கள் அந்த வீட்டில் இருந்தார்கள். இனி அவன் தனியாகவா?.

‘எனக்கு இந்த வீட்டில் தனியாக இருக்கப் பிடிக்காது’ என்று அவன் சொன்னால் அந்த மனிசன் தனது பெருத்த உடம்பு குலுங்கச் சிரிக்கத் தொடங்கி விடுவார் என்று அவன் எரிச்சலுடன் யோசித்தான்.

அன்று வெள்ளிக் கிழமை.சரியான மழை பெய்து கொண்டிருந்தது.அவன்; சமைத்து,நன்றாகச் சாப்பிட்டுவிட்டு எழுதத் தொடங்கினான். என்ன எழுத வேண்டும் என்று தடுமாறிக் கொண்டிருந்தவனுக்கு, ஒரு புதிய இடத்தில் தனியாக அகப் பட்டுத் தவித்த ஒரு இளம்பெண்ணைப் பற்றி எழுத வேண்டும்போலிருந்தது. அதற்குக் காரணம், அவன் தனது நண்பர்களுடன்,ஸ்பெயின் நாட்டுக்குப் போயிருந்தபோது,அங்கு, ஒரு ஆங்கிலப் பெண் தன்னுடன் வந்த சினேகிதிகளைத் தொலைத்து விட்டு அல்லற்பட்டதைக் கண்டார்கள். மோபைல் டெலிபோன்கள் இல்லாத கால கட்டம்,.அவள்; பெரிய நகரத்துக்கு அப்பாலுள்ள சிறு நகரத்திறகு, பழைய சரித்திரத் தடயங்களைப் பார்க்கவந்த கூட்டத்துடன் வந்தவள் எப்படியோ அவர்கள் வந்த சுற்றலாப் பிரயாணிகளின் வாகனத்தைத் தவற விட்டுத் தவித்துக்கொண்டிருந்தாள். இரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் பல சுற்றுலாக் காரர்களும்,சுற்றிலாவை ஒழுங்கு செய்பவர்களும் போய்விட்டார்கள். அந்த இடத்துவாசிகள் பலருக்கு ஆங்கிலம் தெரியாதபடியால்,அவளால் அவர்களிடம் உதவி கேட்கமுடியவில்லை.

ராகவனும் சினேகிதர்களும்,தங்கள் பாட்டுக்குச் சுற்றித்திரிந்து விட்டு அந்திபடும் நேரத்தில் அங்கு வந்தார்கள்.அவளைத் தங்களுடன் தங்கள் வாகனத்தில் அழைத்துவந்து, அவளின் சினேகிதிகளிடம் ஒப்படைத்தார்கள்.

அன்றிரவு, ராகவனும் நண்பர்களும், தாங்கள் அங்கு போயிருக்காவிட்டால்,அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று பல கற்பனை செய்தார்கள்.அவர்களின் கற்பனை கண்டபாட்டுக்குக் கடிவாளமற்ற குதிரைபோல்ப் பறந்தது.

அந்த ஞாபகம் வந்ததும் அதைப் பற்றி எழுத யோசித்தான்.ஆனால் பெருங்காறறும் மழையும் அவன் ஜன்னலைத் தட்டிக் கலாட்டா செய்துகொண்டிருந்தது.இனி எழுத நினைப்பதிற் பிரயோசனமில்லை என்று தனக்குள்ச் சொல்லிக் கொண்டான். டி.வியைப் போட்டான்,அப்படியே தூங்கிப் போய்விட்டான்.

எவ்வளவு நேரம் தூங்கினான் என்று தெரியாது. யாரோ தன்னையுற்று நோக்குவதுபோன்ற உணர்வு வந்ததும் சட்டென்று எழுந்தான்.

அந்த அறையில் யாருமில்லை. டி.வி நிகழ்ச்சிகள் முடிந்து விட்டது.

வெளியில் சரியான குளிர்காற்று ஜன்னலிடுக்குகளால் எட்டிப் பார்த்து உடம்பை நடுங்கப் பண்ணியது. ஆனால், அவனுக்கு நன்றாக வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது.

எழும்பி லைட்டைப் போட்டான்.யாரோ மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருப்பது போன்ற பிரமை.இது கனவா,நனவா அல்லது பியர் மயக்கமா,அவன் குழம்பிப் போனான்.

கதை எழுதப் பல கற்பனைகள் செய்ததன் விளைவா இது?

ஓரு காலத்தில், ஜெயகாந்தனும், சுஜாதாவும்,வேறுபலரும் அவனுடைய கற்பனையைத் துண்டி விட்டிருந்தார்கள். இப்போது, மிஸ்டர் சிங்கின் வீட்டில்,வெளியில் அடிக்கும் பேய்க் காற்றையும்,பெருமழையையும் தவிர அவனுக்கு எதுவும் கற்பனையைத் தூண்டும் காரணிகளாக இருக்கப் போவதில்லை.

அவனின் இலட்சியம் இந்த வீட்டில் நடக்கும் சில அனுபவங்களால் அர்த்தமற்றுப் போவதா?

கல்கியின் கதையொன்றில் அவர் தனது கதாநாயகியின் கண்களை வர்ணித்ததுபோல் அவனுக்கும் தனது ‘கதாநாயகியை’ வர்ணிக்க ஆசை.இரவில் இந்த வீட்டில் அத்துமிறி நுழைந்து அவனைக் குழப்பும் யாரோ ஒரு உருவத்தால்(?) அவன் மனம் குழம்புவது அர்த்தமற்றதாகப் பட்டது.

அந்த வினாடி அவனுக்கு வந்த எரிச்சலில்,கதையும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம் என்று நினைத்துக்கொண்டபோது அவனது சினேகிதனின் ஒருத்தனான மூர்த்தி போன் பண்ணினான். அவனுக்கு ராகவன் தனது டெலிபோன் இலக்கத்தைக் கொடுக்கவில்லை. யாரிடமோ இருந்து வாங்கியிருக்கிறான். மூர்த்தியைக் கண்டு பலமாதங்களாகின்றன. மூர்த்தி ஸ்கொட்லாந்தில் வேலை செய்கிறான். லண்டனை விடப் பலமடங்கு குளிரான இடம். ஆனாலும் அவன் அங்கு நல்ல வேலை கிடைத்ததாற் போய்விட்டான்.

லண்டனுக்கு வந்தால் அழையா விருந்தாளியாக வந்து குதித்து விடுவான்.

மூர்த்தி வந்தால் அவன் கலகலவென்று பேசிக்கொண்டிருப்பான்.தன்னையும் சந்தோசப் படுத்திக்கொண்டு மற்றவர்களையும் சந்தோசப் படுத்தும் மனிதன் அவன்.அவன் வந்தது; ராகவனின் வீட்டை ஒருமாதிhப் பார்த்தான். ‘என்ன பேயிருக்கும் வீடுமாதிரியிருக்கிறது’ என்று அவன் சொல்லாமல் இருக்கவேண்டும் என்று ராகவன் சிந்தித்தான்.

மூர்த்தியின் தகப்பன் இலங்கையில் ஒரு அப்போதிக்கரியாக வேலை செய்தவர். அவர் தனது குடும்பத்துடன் பல இடங்களிலும் வாழ்ந்திருக்கிறார். மட்டக்களப்பு மலையகம், மொனறாகல போன்ற இடங்களில் வேலை செய்தவர். மூர்த்தி தனது இளவயதில் தகப்பனுடன் பல ஊர்களிலும் வாழ்ந்தபடியால், இலங்கையின் பல தரப்பட்ட மக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் ஓரளவு புரிந்தவன். பல தரப்பட்ட அனுபவங்களுமுள்ளபடியால் மிகவும் சுவாரசியமாகப் பேசுவான். முக்கியமாகப் பெண்கள் பற்றிப் பேசுவதில் மிகவும் அக்கறை காட்டுவான்.பல தரப்பட்ட பேய்க்கதைகள் சொல்வதில் விண்ணன்.அவன் சொல்லும் பேய்க்கதைகளைக் கேட்டால் இரவில் தனியாக இருக்கப் பயம் வரும்

ராகவனும் மூர்த்தியும் கொழும்பு பல்கலைக்கழக மாணவ சினேகிதர்கள்.

இருவருக்கும் ஒரேவயது.இன்னமும் திருமணமாகவில்லை.அவர்களுடன் படித்த கிட்டத்தட்ட அத்தனைபேரும் திருமணம் செய்து விட்டார்கள். மூர்த்திக்கு ஒரு தங்கையிருப்பதால் அவளின் திருமணம் நடக்கும் வரைக்கும் அவன் திருமணம் செய்து கொள்ள முடியாது. அத்துடன் அவன் மனதில் சாடையான நெருடலையுண்டாக்கிய அவனின் மைத்துனி வேறு யாரையோ திருமணம் செய்து விட்டுப் போனபின்,அவன் கொஞ்ச நாள்,பார்வதியையிழந்த ‘தேவதாஸாகக்’ குடித்துக் கொண்டு திரிந்தான்,அதெல்லாம் பழைய கதை.

இப்போது, பெண்களை ரசித்துப் பேசுவதை அவன் பிரமச்சரிய வாழ்க்கை தடுத்து நிறுத்தவில்லை.மூர்த்தி வந்ததும் இருவரும் ‘பாருக்குப்’ போனார்கள் முட்ட முட்டக் குடித்தார்கள். பெண்களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். கல்யாணமாகாத தனது பிரம்மச்சரிய வாழ்க்கையின் விரக்தியைப் பற்றி ஒப்பாரி வைத்தான் மூர்த்தி. நிறையக் குடித்ததால் தள்ளாடிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். ராகவன் ஆபிரிக்க மாணவர்கள் இருந்த அறையில் படுத்துக் கொண்டான்.

ராகவனின் அறையில் மூர்த்தி படுத்தான். அவனுக்கு அந்த வீட்டில் நடமாடுவதாகத் தான் நினைக்கும் ‘உருவத்தைப்’ பற்றிச் சொல்ல ராகவன் மறந்துவிட்டான்.

இரவு மூன்று மணியிருக்கும், மூர்த்தி சத்தம் போட்டு யாரையோ பேசுவதுபோற் கேட்டது. அவன் நல்ல குடிவெறியிற் படுத்தவன், வெறியில் உளறுவதாக ராகவனால் ஒரு வினாடி நினைத்தாலும், அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்ன புரிந்தது.

குளிரும் மதுவின் மயக்கமும் இருவரையும் நீண்டநேரம் படுக்கையை விட்டெழும்ப விடவில்லை.மூர்த்தி எழும்பமுதல் ராகவன் எழும்பிக் காலைச் சாப்பாட்டைச் செய்து கொண்டிருந்தான்.

மூர்த்தி வந்தான் அவன் முகம் வெளிறியிருந்தது.

‘என்ன புது இடமென்டபடியால நித்திரை வரவில்லையா?’ ராகவன் நண்பனின் முகத்தைப் பார்த்துக் கேட்டான். ஆனாலும் அவனுக்குத் தெரியும் மூர்த்தியின் வெளுத்துப்போன,பேயடித்தாற்போலிருக்கும் முகத்திற்குக் காரணம் என்னவென்று.

மூர்த்தி ராகவனின் முகத்தைப் பார்க்கவில்லை.’என்ன. இந்த வீட்டில நான் தனியாக இருக்கும்போது அடிக்கடி நீ வரலாம் என்று இரவு உளறினாய்…இப்ப என்ன பேசாமலிருக்கிறாய்?’ ராகவன் மூர்த்தியின் வாயால் சில உண்மைகளைக் கேட்கத் துடித்தான். அந்த வீட்டில் தான் காணும் அனுபவங்கள் தனது வெறும் மனப் பிரமையல்ல என்று தனது நண்பன் மூலம் அறிய நினைத்தான்;.

மூர்த்தி தர்மசங்கடத்துடன் சிரித்தான். ராகவனுக்கு மறுமொழி சொல்லவில்லை. அவன் போனபின், அவன் படுத்த படுக்கைத் துணிகள், அவனுக்குக்கொடுத்த சரம் போன்றவற்றைத் துவைக்க எடுத்தவன்,நனைந்து தோய்ந்துபோயிருந்த சரத்தைப் பார்த்துத் திடுக்கிட்டான்.

மூர்த்தி தனது முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், தர்மசங்கடத்துடன் நடந்துகொண்டதற்கு சரத்தை நனைத்த வெட்கம் காரணமா?

அதன் பின் இரண்டொருநாள் மூர்தியிடமிருந்து ஒரு டெலிபோனும் இல்லை.அவன் ஸ்கொட்லாந்துக்குப் போக முதல்; தனது மாமாவைப் பார்க்க கன்ரபரி என்ற இடத்துக்குப் போவதாகச் சொல்லியிருந்தான்.ஆனால் ராகவனுடன் ஒரு தொடர்பும் இல்லை.

இரண்டுமூன்று நாட்கள் செல்லவிட்டுச் சடடென்று வந்து சேர்ந்தான். ராகவனுக்கு அவன் வருவதாகச் சொல்லவில்லை. ஆனாலும் அவன் வருகை ராகவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

வழக்கம்போல்,இருவரும் ‘பாருக்குப்’ போனார்கள். நான்காவது பியர் அவனுக்குள் போனபின் மூர்த்தி அலட்டத் தொடங்கினான்.

‘மச்சான் உன்ர வீட்டில பேய் இருக்கு… மோகினிப்பேய் இருக்கு..’ அவன் வெறியில் வந்த தைரியத்தில்(?) மனம் விட்டுப் பேசத் தொடங்கினான்.

‘ சும்மா பேய்க்கதை பேசாதே’ ராகவன் நண்பனைச் சீண்டினான். அவர்கள் பல்கலைக் கழகத்தில் படித்த நாட்களில், இப்படித்தான், பியர் அடித்த கால கட்டத்தில் மூர்த்தி பல ‘பேய்க்’ கதைகள் சொல்வான். இலங்கையில் பல இடங்களில் வாழ்ந்து. அவனின் தகப்பனிடம் வரும் நோயாளிகளிடம் கேட்ட பல கதைகளுடன் அவனின் கற்பனையிற் பிறக்கும் பல பேய்க் கதைகளையும் அவன் நண்பர்களுக்குச் சொல்லியிருக்கிறான்.

‘மச்சான்….’மூர்த்தியின் குரல் சட்டென்று தாழ்ந்தது.அங்குமிங்கும் பார்த்துக்கொண்டான்.

‘ராகவன். உன்னுடைய அறையில…எனக்குப் பக்கத்தில ஒரு பெண்…நிர்வாணமாக வந்து நின்றதைப் பார்த்தேன்’ மூர்த்தியின் குரல் பயத்தால் நடுங்கியது. ‘ மச்சான் எனக்கு என்ன நடந்தது என்ற ஞாபகமில்லை…’ நீ எனக்குத் தந்த உன்னுடைய சரத்தைக் கழுவும்போது கண்டிருப்பாய்……’ அவன் வெட்கத்துடன் விம்மினான்.அவன் அழுதுவிடுவான் போலிருந்தது.

‘ஸ்..ஸ் மூர்த்தி.. நாங்கள் கல்யாணமாகாத இளைஞர்கள், அன்று கண்டபாட்டுக்குக் குடித்துவிட்டு பெட்டைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தம்.. அதுதான்….கனவாக..’ ராகவன் தனது நண்பனைத் தேற்றும் குரலிற் சொன்னான்.

‘அன்றைக்கு எனக்கு நித்திரையே வரல்ல..’ மூர்த்தி தனது அனுபவத்திற்குக் காரணம் தேடும் தோரணையிற் சொன்னான்.

‘ஏனென்டால் என்னுடைய வீடு சரியான குளிரான வீடு” ராகவன் தனது நண்பனைச் சமாதானம் செய்தான்.

அன்றிரவு அதிகாலைவரை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அரசியல், அரசியல்வாதிகள், சினிமா, நடிக நடிகையர்கள், குடும்பம், உறவினர்கள் என்று பலவற்றையும் பேசிக்கொண்டிருந்தார்கள். மூர்த்தி அந்த வீட்டில் நித்திரைசெய்வதைத் தடுக்கத்தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ராகவனுக்குத் தெரியும்.

அதன் பிறகு மூர்த்தி ராகவனைப் பார்க்க ஒருதரம் வந்தான், ஆனால் அந்த வீட்டில் தங்கவில்லை. கிழக்கு லண்டனில் வாழும் ஒன்றை விட்ட தமயனைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அந்த வீட்டிற் தங்க அவனுக்கு விருப்பமில்லை என்று ராகவனுக்கு நன்றாகத் தெரியும்.

நாட்கள் கடந்து கொண்டிருந்தன. ராகவனின் ‘எழுத்து’ஆர்வத்தின் வெளிப்பாடாக ஒரு பக்கமும் எழுதப் படவில்லை!

கையிலுள்ள பணம் செலவழியமுதல் வேலை தேடவேண்டும். நத்தார்ப்பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. மிஸ்டர் சிங் இன்னுமிரு மாணவர்களை வாடகைக்கு வைக்கத் தேடிக் கொண்டிருந்தார். பண்டிகை காலத்தில் பலர் தங்கள் வீடுகளுக்குப் போய்விடுவார்கள்,நத்தார்ப் பண்டிகைககுப் பின்தான் மாணவர்கள் வாடகைக்கு வருவார்கள்.’ என்று சொன்னார்.;

நத்தார்ப் பண்டிகைக்குச் சிலநாட்கள் இருந்தன. லண்டன் பண்டிகைக் கோலாகலத்தில் கலகலத்துக்கொண்டிருந்தது.

பொல்லாத குளிரும் பனியுமடித்துக்கொண்டிருந்தது. டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் அப்படியே தூங்கி விழந்து விட்டான். தனக்குப் பக்கத்தில் யாரோ படுத்ததிருப்பது போன்ற பிரமை. முழுக்கு முழுக்கத் திருமணக்கோலத்தில் ஒரு அழகிய தேவதை மாதிரியான பெண் தனது கட்டிலில் வந்து படுத்துக்கொண்டதாகக் கனவு கண்டானா அல்லது…..?

அவனின் உணர்வு வந்தபோது அவன் வியர்த்துக் கொட்டினான். அவனின் சரம் நனைந்திருந்தது.அவன் உடம்பு கூனியது.உள்ளம் கூசியது. தேனிலவுகாலத்தில் சிலநாட்கள் விடாமல் கலவிசெய்த களைப்பு அவனைத் திகைக்க வைத்தது.

அந்த அறையை விட்டு உடனடியாக ஓடவேண்டும் போன்ற உணர்வு அவனை உந்தியது.மிஸ்டர் சிங் பண்டிகைக் கோலாகலம் முடியும்வரை இந்தப் பக்கம் வரமாட்டார். அவரிடம்தான் சொல்லிக்கொண்டுதான் போகவேண்டும் என்றில்லை, அவரின் வாடகைப் பணத்தைத் தபாலில் அனுப்பி விட்டாற் போகிறது. ஆனால் நத்தார்ப்பண்டிகை விடுதலையில் எங்கேபோய் வீடு தேடுவது?

அதன்பிறகு தொடர்ந்த இரவுகளில் அவனின் ‘கனவும்'(?) தொடர்ந்தது.

பெரும்பாலான நத்தார்ப் பண்டிகைகளை அவனுடைய ஒன்று விட்ட தமக்கை குடும்பத்துடன் கழிப்பவன் இந்தத் தடவை எதோ ஒரு சாட்டுச்சொல்லி அதையும் தவிர்த்து விட்டான்.அந்த அளவுக்கு அவன் மனம் பேதலித்துப் போயிருந்தது.அவனுக்குச் சாப்பாடு பிடிக்கவில்லை.சரியான நித்திரையில்லை.

அவனுக்கு உடம்பு மிக மிகக் களைப்பாகவிருந்தது.

ஏதோ ஒரு ஆழமான திகிலுடன் மனம் அல்லாடியது. அவனுக்குத்; தாங்கமுடியாத பயம் வந்தது. மூர்த்தி நத்தார்ப்பண்டிகை காலத்தில் லண்டனுக்கு வருவான் என்று தெரியும். ராகவன், அவனுக்குப் போன் பண்ணி வரச் சொன்னான்.

இருவருக்கும் நல்லவெறி. ராகவன் தனது அனுபவங்களை அரைகுறையாகச் சொன்னான. நித்திரையின்றித் தான் படும் அவதியைப் பற்றிச் சொன்னான். ‘நடுஇரவில் அவனை ஆடகொள்ளும்’பேய்’பற்றிச் சொல்லவில்லை. ஆனால் அந்த வீட்டில் யாரோ நடமாடுவதுபோலிருப்பதால் தான் குழம்பிப்போயிருப்பதாகச் சொன்னான்.

மூர்த்திக்குத் தலைபறந்த வெறியாயிருந்ததால், ராகவன் சொன்னதை முழுமையாகக் கிரகிக்கவில்லை.; ‘அரைகுறையாய் உடைந்த பழைய வீட்டில் வெளியில அடிக்கிற பேய்க்காற்றுக்குக் கதவும் திறபடும் ஜன்னலும் அடிபடும் நீ வேலை கிடைக்குமா என்ற பெரிய யோசனையில் நித்திரையில்லாமற் தவிப்பதற்கு ஏன் வீட்டிலுள்ள கதவையும் ஜன்னiலுயம் சொல்லிப் பேய்க்கதை சொல்கிறாய்’ மூர்த்தி நண்பனைத் தேற்றினான் சாதாரணமாகப் பல பேய்க் கதைகளை அள்ளிக் கொட்டும் மூர்த்தி அன்று நண்பனுக்குப் புத்திசொன்னது ராகவனுக்குப் புரியவில்லை. ராகவனுக்கு அழவேண்டும்போல் இருந்தது.

‘நீ எத்தனையோ பேய்க்கதைகளை அந்த நாட்களிற் சொல்லியிருக்கிறாய்..’ராகவன் நண்பனை எப்படியும் தனது அனுபவங்களை ஆராய்ந்து சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்தான்.

‘ ஆமாம், இலங்கையில் இருக்கிற பேய்களை விட ஆயிரம் மடங்கு பேய்கள் இங்கிலாந்தில இருக்கு தெரியுமா? உலகத்திலிலேயே பேய்க்கதைகள் கூடவுள்ள நாடு இங்கிலாந்து என்று உனக்குத் தெரியுமா’ மூர்த்தி வெடித்தான்.

ராகவனுக்குப் பைத்தியம் பிடிக்கும்போலிருந்தது. இடைவிடாத தலையிடியாற் தவித்தவன், நத்தார்ப் பண்டிகை முடிந்த கையோடு டாக்டரைப் பார்க்கப் போனான்.

‘உனக்கு ஏன் தலையிடிக்கிறது?’ வயதுபோன டாக்டர் வெறும் தலையிடிக்காகத் தன்னிடம் வந்து முறையிடும் இளைஞனை எரிச்சலுடன் கேட்டார்.

‘அதன் காரணத்தை அறியத்தானே உங்களிடம் வந்தேன்’ அவன் பதிலுக்கு ராகவன் அவரிடம் எரிந்து விழுந்தான்.

தலையிடி என்று வருபவர்களிடம் கேட்கும் கேள்விகளான:

-காதுக்குத்து இருக்கிறதா?

-கண்பார்வை சரியாக இருக்கிறா?

-சாப்பாடுகளில் ஏதும் அலர்ஜியானவையுண்டா?

-அவனின் தலையிடி எப்போது வருகிறது?

-தலையிடியோடு தலைசுற்றும் இருக்கிறதா?

-தலையிடியோடு சத்திவரும் அறிகுறிகளும் வருவதுண்டா?

-அவனது சாப்பாடுகளில் ஏதும் வித்தியாசம் உண்டா?

-கண்டபாட்டுக்குக் குடிக்கிறானா?

– போதைப்பொருட்கள் எடுக்கிறானா?

-மலம்போவதிற் சிக்கலிருக்கிறதா,

-செக்ஸ் வாழ்க்கையில் பிரச்சினையிருக்கிறதா?

டாக்டர் வழக்கமான கேள்விகளை அடுக்கிக் கொண்டுபோனாh.;

‘வேலைக்குப் போகிறாயா?’

‘அது பிரச்சினையில்லை…செய்தவேலையிலிருந்து நிறுத்தப்பட்டதால்,அடுத்த வேலை எடுக்கும் வரை நான் கொஞ்சகாலம் றெஸ்ட் எடுக்கிறேன்’ அவன்தான ஒரு எழுத்தானாக வர ஒரு பழைய வீட்டுக்குக்குடிவந்து அங்கு ஏற்கனவே குடியிருக்கும் ஒரு’பேயுடன்’ வாழ்வதைச் சொல்லவில்லை.

‘எத்தனை வயது?’

அவனுக்கு அந்தக் கேள்வி எரிச்சலைத் தரும் கேள்வி. அம்மா அவனின் வயதைச் சொல்லித்தான் கல்யாணம் பேசிக்கொண்டு அவனைத் துரத்துகிறாள்

ஆனாலும் தனது வயதைச் சொன்னான்.

‘கல்யாணமாகிவிட்டதா?’

‘இல்லை’

‘காதலியுண்டா?’

‘ம்….ம்….இப்போது இலலை’

‘காதலன் உண்டா’?

‘நான் ஹோமொசெக்சுவல் இல்லை’.

‘ அளவுக்கு மீறிக் குடிக்கும் பழக்கமுண்டா?”

‘சிலவேளைகளில் மட்டும்..’அவன் முணுமுணுத்தான்.

டொக்டர் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.அவர் ஒரு ஆங்கிலேயன், வயது போன டாக்டர். கண்ணாடி போட்ட அவர் கண்கள் அவனில் சில கணங்கள் நிலைத்து நின்றன. ஒளிவுமறைவின்றிக் கேள்விகளைக் கேட்டுத் தனது நோயாளிகளின் பிரச்சினைக்கு காரணங்களைக் கண்டுபிடிப்பவர்.

‘உனக்குக் கல்யாணம் காதலி, காதலன், ஒன்றும் கிடையாது…..அப்படியானால் நீ சுய இன்பம் தேடுபவனா?’

அவரின் கேள்வி ஒரு கணம் ராகவனுக்கு விளங்கவில்லை. வுளங்கிக் கொண்டதும்,அவனின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அவர் தனது உத்தியோக தோரணையில் அத்து மீறி நுழைந்து விட்டதாக அவன் ஆத்திரப்பட்டான்.

‘அளவுக்கு மீறிய செக்சும் சிலவேளை தலையிடி தரும் தெரியுமா?’

டாக்டரின் குரலில் கிண்டலா அல்லது அவரது உத்தியோக தோரணையான கரிசனையா தெரியவில்லை.அவனுக்கு அவமானமும் அழுகையும் வந்தது. தனி வீட்டில் இரவில் வந்து தொல்லை தரும் ‘அந்தப்பெண்’ உருவத்தைப் பற்றியும், அதனால் வரும் பயத்தாலோ அல்லது…..தனது சரம் கண்டபாட்டுக்கு நனைவது சிறுநீராலல்ல என்பதையும் டாக்டரிடம் சொன்னால் அவர் தன்னை பைத்தியம் என்று நினைக்க மாட்டாரா?

‘உனது செக்ஸ் வாழ்க்கைக்கு என்ன பரிகாரம் என்று நீ கண்டு பிடி, அத்துடன் கெதியில் ஒருவேலை எடு.. வாழ்க்கையின் மாற்றத்தால் வரும் வித்தியாசங்களை ஏற்றக்கொள்ளாமல் மறைப்பதால் அதன் எதிரொலியாகத் தலையிடி வரலாம். தலையிடியைக் குறைக்க நான் மருந்து தருகிறேன்..ஆனால் உனது …’அவர் ஏதோ சொல்லவந்த ‘அதைச்’ சொல்லாமல் விட்டதை அவன் உணர்ந்தான்.

‘அதன் பிறகும் தலையிடி தொடர்ந்தால் அதன்காரணத்தைக் கண்டுபிடிக்க ஸகானிங் செய்ய ஏற்பாடு செய்கிறேன்’ டாக்டர் உத்தியோக தோரணையில் அவனை விசாரித்து விட்டு மருந்தெழுதிக் கொடுத்தார்.சில நாட்கள் டாக்டர் கேட்ட கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.

வாழ்க்கையின் போக்கை உடனடியாக மாற்றவேண்டும்.

அவனது தனிமையும் இரவில் நடக்கும் ‘சேட்டையும்’ அடிக்கடி தொடர்ந்தது.அவன் மிகவும் இளைத்து வாடிவிட்டான். அதற்குக் காரணம், நத்தார்ப் பண்டிகை காரணமாக அதிகம் குடித்ததும் நேரத்துக்குச் சாப்பிடாததமட்டுமல்ல என்று தெரியும்.

நத்தார்ப் பண்டிகை முடிந்துவிட்டது. தைபிறந்தால் வழிபிறக்குமா? நத்தார்ப்பண்டிகைக்கு முதலே மதுக்கடலில் குளிக்கத் தொடங்கிய லண்டன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்பின் சமுகநிலைக்குத் திரும்பத் தொடங்கியது.

உடனடியாக அந்த வீட்டிலிருந்து மாறவேண்டும்.

வேலைபோனபின் இன்னொரு வேலையை உடனடியாகத் தேடாமல் நேரத்தை வீணாக்குவதுபற்றி அம்மா ஒரு பெரிய புராணம் பாடிக் கடிதம் போட்டிருந்தாள்.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் தமக்கை தனது சினேகிதிக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் குறிப்பை அனுப்பியிருந்தாள்.அவன் அவளுடன் தர்க்கம் செய்யாமல் அந்தப் பெண்ணைப் பற்றித் தனக்கு மேலதிக விளக்கங்களைத் தரச் சொல்லி டெலிபோனிற் சொன்னது அவனுக்கே ஆச்சரியமாகவிருந்தது.

லண்டனில் புத்தாண்டு மலிவுவிற்பனைகள் ஆரம்பமாகிவிட்டன. ராகவன் கொஞ்சகாலத்துக்கு முன் அவனுடன் அந்த வீட்டிற் குடியிருந்த ஆபிரிக்கமாணவர்களைச் ஷொப்பிங் சென்டரிற் கண்டான்.

‘நீ இன்னும் அந்த வீட்டிலேயே இருக்கிறாயா?’ அவர்கள் கேட்டார்கள்.

‘ஆமாம் தனியாகத்தானிருக்றேன்..நத்தாருக்குப் பின் வேறுயாரும் வரலாம் என்று மிஸ்டர் சிங் சொன்னார்’ என்று அவர்களுக்கு ராகவன் சொன்னான்.

அவர்களில் ஒருத்தன்’ ‘ராகவன் உனக்கு முதல் அந்த அறையிலிருந்த மாணவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது…அந்த அறைக்குப் பெண்பேய் ஒன்று வருவதாக அவன் ஒப்பாரி வைத்தான்.எங்களுக்கு மேலேயிருக்கும் டொய்லெட்டுக்கு வரவே பயம். அங்கேயிருந்துகொண்டு,யாரோ எங்களைப் பார்ப்பது போலிருக்கும்’…

ராகவன் வீட்டுக்கு வந்தான். மாடிப்படியேறி தனது அறைக்குப் போகமுதல் மேலே ஒருகணம் தனது பார்வையைச் செலுத்தினான். வெளியில் பனியடித்துக்கொண்டிருந்தது.உள்ளே சரியான குளிர். புழைய காலத்து ஜன்னல்கள் காற்றுக்குக் கிறிசிட்டது.அறைக்கதவுகள் தன்பாட்டுக்குத் திறந்து மூடிக்;கொண்டன. மாடியில் தன்னை யாரோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பதான பிரமை.

அவன் தன்னையறியாமல் அழத் தொடங்கி விட்டான்.’எனக்கு நேர்வஸ் ப்ரேக்டவுன் வந்து விட்டதா?

தனது மனக் குழப்பத்திற்கு மருந்துகள் சரிவராது என்று அவனுக்குத் தெரியத் தொடங்கியதும், தனது கிழட்டு டாக்டரிடம்போய் அலைவதை அவன் விரும்பவில்லை.

அவன் சைமனுக்குப் போன் பண்ணி அவனுக்குத் தெரிந்த ஒரு சைக்கோலஜிஸ்ட்டிடம் அப்போயின்ட்மென்ட் எடுத்தான்.

சைக்கோலஜிஸ்ட் என்பவர்கள் மனவியாதி வைத்தியர்கள் அல்லர்.மனிதர்களுக்கு வரும் மனக்குழப்பங்களுக்குக் காரணத்தைக் கண்டுபிடித்து உதவி செய்பவர்கள்.

ராகவன் ஒரு சாதாரண தமிழன். வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குக் கோயிலுக்குப் போய்க் கடவுள்களுக்கு அர்ச்சனைபோட்டு நிவாரணம் தேடும் கலாச்சாரத்திலிருந்து வந்தவன்.ஆனால், கடந்த பத்துவருட லண்டன் வாழ்க்கையில் பெரும்பாலான சினேகிதர்கள் ஆங்கிலேயர்களாக இருந்தபடியால், அவர்கள் தங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குப் பதிய பரிமாணப் பார்வைகளைப் பயன் படுத்துபவர்கள். ராகவனின் ‘நெருங்கிய சினேகிதர்களில் மூர்த்தியும் சைமனும் முக்கிய இடம் வகிப்பவர்கள்.

மூர்த்தியிடம்ஆலோசனை கேட்டால்,அவன் என்ன சொல்வானோ தெரியாது. ‘பேயுலகத்தை’அதிகம் தெரிந்த மூர்த்தியே ராகவனை அந்த வீட்டிலிருந்து வெளியேறச் சொல்லவில்லை.ஏன்?

சைமன் ராகவனிடம் அவனது தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கேட்காமல்,ராகவனை ஒரு சைக்கோலஜிஸ்ட்டிடம் போகச் சொல்லி ஆலோசனை சொன்னான். பிரைவேட்டாக ஒழுங்கு செய்ததால் சைக்கோலஜிஸ்ட்டின் அப்போயின்ட்மென்ட் தாமதிமின்றிக் கிடைத்தது.

அவர் மிகவும் ஸ்மார்ட்டாக ஆடையணிந்த, உயர்ந்து வளர்ந்த நடுத்தரவயது ஆங்கிலேயன.;

அவரின் கண்களிலிலெயே பைனாகுலர் வைத்துக்கொண்டு தூரத்து விடயங்களைக் கண்டுபிடிப்பவர்போல் அவனைக் கூர்மையாகப் பார்த்தார். ராகவன் ஒரு ஆசியன், அவனைப் பார்ப்பவர்களிடமிருந்து ஒரு மதிப்பைப் பெறும்; முகபாவத்தைக் கொண்டவன். அப்பழுக்கற்ற உடைகளை அணிவதில் அக்கறைகாட்டுபவன். உலகத்தில் அத்தனை மனிதரையும் சினேகித பாவத்துடன் நடத்தும் பெரியமனத்துடனான முற்போக்குவாதி.

ஆரம்பத்தில் மிகவும் தயங்கிய ராகவன், சைக்கோலஜிஸ்ட்டிடம்,மெல்ல மெல்லமாகத் தனது பிரச்சினையை மனம் விட்டுச் சொல்லத் தொடங்கினான். அவனது மிகவும் இளைய வாலிப வயதில்,பாடசாலைக்குப் போகும்போது கண்டு ரசித்த காந்திமதி தொடக்கம்.பல்கலைக்கழகத்தில் உண்மையாகவே அவனின் மனதைக் கவர்ந்த மாலினி வரைக்கும் தனது மனதில் செக்ஸ் கிளர்ச்சியையுண்டாக்கிய பெண்களைப் பற்றிச் சொன்னான்.அவனுக்குத் தற்போது வரும்’கனவுகள்(?) பற்றிச் சொன்னான்.அதனால் அவனது விந்து விரயமாவதை வெட்கமின்றிச் சொன்னான்.சொல்லும்போது கூனிக் குறுகி விட்டான். சொல்லி முடித்ததும் ஒரு பாரத்தை இறக்கி விட்ட உணர்வு வந்தது.

‘காந்திமதிக்கு உன்ன நடந்தது?

‘ தெரியாது.. நான் பல்கலைக்கழகம் போய்விட்டேன்’

‘மாலினிக்கு என்ன நடந்தது?’

‘அவள் ……நான் எனது உணர்வுகளை அவளிடம் சொல்ல முதல் எனது நண்பன் அவளைக் கவர்ந்து விட்டான்,பின்னர் அவளைத் திருமணம் செய்தான்’;.

‘அந்தப் பெண்களில் யாருடனாவது கலவி செய்யவேண்டும் என்று கற்பனை செய்ததுண்டா?’

அந்தக் கேள்வி ஒரு பெரிய பாரதூரமான கேள்வி. நேர்மையான மறுமொழி சொல்லவேண்டும்

பதினெட்டு வயதில் பார்த்து வாயுறிய பக்கத்து வீட்டு அழகிய இளம் வேலைக்காரியைப் பற்றிச் சொன்னான்.

பார்க்கவும் பழகவும்,சிலவேளை ஓரளவு ‘தடம்புரளப்’ பண்ணிய தனது சர்வகலாசாலைச் சினேகிதிகளைப் பற்றிச் சொன்னான்.

ஆனால் அவர்களில் யாருடனும்,’கலவி’ செய்யுமளவுக்கு நெருக்கமில்லை என்ற உண்மையை அழுத்திச் சொன்னான்.

‘மனதில் அடக்கி வைக்கப் பட்டிருக்கும் ஆசைகள் கனவாக வருவதுண்டு.’

ஹா, இது ப்ராய்டின் விளக்கமில்லையா?

‘பெரும்பாலான ஆண்கள் தங்களின் ஆண் உடம்பின் உணர்விலிருந்து பெண்ணுலகைக் கணிக்கிறார்கள் என்றம் சிலர் சொல்வது தெரியுமா?’அவர் ஆறதலாகக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.ஃ

ராகவன் மௌனமானான்.அவனைப் பொறுத்தவரையில் அவன் மிகவும் கண்ணியமானவன். எத்தனையோ ஆங்கிலச் சினேகிதர்கள் அடிக்கடி கேர்ள் ப்ரண்ட்சுகளை மாற்றிக் கொண்டபோதும், தான் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்யும் வரைக்கும் பிரமச்சாரியாக வாழவேண்டும் என்ற பிடிவாதத்துடனிருப்பவன்.

‘வெளிமனம் நினைப்பது ஒன்று,உள்மனம் தேடுவது இன்னொன்று’ சைக்கோலஜிஸ்ட் அமைதியாகச் சொன்னார்.

‘உனது கனவில் வரும் பெண் எப்படியானவள்?’

‘ வெள்ளையான உடுப்புடன் கல்யாண தோற்றத்தில் வரும் மிக மிக அழகியவள்’;

‘மோகங்களின் பிம்பங்கள் கனவாக எதிரொலிக்கும் என்று உனக்குத் தெரியும்தானே?’

அவன் காதலித்து, தனது சினேகிதனுக்காக விட்டுக்கொடுத்த தனது ஆத்மீகக் காதலி மாலினி பற்றிச் சொன்னான்.அவன் இதுவரைக்கும் நினைக்க விரும்பாத நிகழ்ச்சியது. அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பதால், திருமணத்தின் பின் அவர்களைக் கண்டதேயில்லை.அவளைப் பற்றிச் சொல்லும்போது அழுதுவிட்டான். அந்தக் காதல் அவனை எவ்வளவு தாக்கியிருக்கிறது; என்பது அன்றுதான் அவனுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது.

சைக்கோலஜிஸ்ட் அவனைக் கவனமாகப் பார்த்தார்.

‘உன்னைக் கவர்ந்த பெண்ணைக் கலயாணக் கோலத்தில் காண உனது அடிமனத்தில் ஆசையிருக்கிறது என்று நினைக்கிறாயா?’

‘எனக்குத் தெரியாது’ அவன் விம்மி விம்மியழுதான்.

கொழும்பில், விக்டோரியா பார்க்கில் அவளுடன் இருந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவள் சிரிப்பு அவளைச் சுற்றியிருந்த மலர்களின் மலர்ச்சியைவிட அழகாக இருந்ததும் அப்போது அவளை அணைத்துக் கொள்ளவேண்டும் வந்த உணர்வும் சட்டென்று அவன் நினைவிற் தட்டியது.

‘தனிமை பல குழப்பங்களையும், மனப்போராட்டங்களையும் உண்டாக்கும் காரணியாக அமைவதுண்டு. கதை எழுதுவதையும், கற்பனையில் கதா நாயகிகளைப் படைப்பதையும் ஒத்திப் போட்டுவிட்டு, வாழ்க்கையை எப்படித் திருப்பி அமைப்பது என்று யோசிப்பது நல்லது ;’

சைக்கோலஜிஸ்ட் ஆலோசனை சொன்னார்.

சில நாட்களின்பின்,ராகவன் புதிய இடம் பார்த்து வாடகை முன்பணமும் கொடுத்து விட்டான். இன்னும் சிலநாட்களில் இந்த வீட்டைக் காலி செய்யப் போகிறான்.

ஸ்கொட்லாந்துக்குத் திரும்பமுதல் மூர்த்தி வந்திருந்தான்.

‘இந்த வீட்டில் பேய் இருப்பதாகவும்,அது உன்னைக் குழப்பியதாகவும் சொன்னாயே,அது உனது மதுபோதையில் உளறிய பேச்சா?’

ராகவன் தனது நண்பனைக் கேட்டான்.’பேய்க் கதைகள்’ சொல்லும் மூர்த்தி தன்னிடம் வரும் பேயைப்பற்றிப் பெரிதாக எடுக்காதது அவனின் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.

‘மச்சான்;, ஆசைகள் ஏமாற்றங்களின் பிரதிபலிப்புத்தான் கனவு அதுபோலத்தான், பேய் என்கிறதும். அது எங்கட மனப் பயத்தின் எதிரொலி.

ஆனாலும், இந்த வீட்டப் பார்த்தா ஏதோ சோகமாகத் தெரியுது, யாரோ அநியாயமாகச் செத்ததுபோல பிரமைவருகிறது. ஏனென்று எனக்குத் தெரியாது.ஆனாலும் பாட்டி கதைகளில, அநியாயமாகச் செத்தவர்களின்ர ஆவிகள் அவர்களின் உண்மையான இறப்புக் காலம் வரைக்கும் அலைந்து திரிவதாகச் சொல்வார்கள். அத்தோடு தன்னில் விருப்பமானவர்களைத் தேடியலைவதாகவும்,அநியாயமாக இறந்தவர்கள் இளம் பெண்களாகவிருந்தால் அவர்கள் தாங்கள் விரும்பியவனைத் தேடித் திரிவதாகவும் சொல்வார்கள்.அதுமட்டுமில்லாமல், கொலை செய்யப் பட்ட ஆவிகள் தன்னைக் கொலை செய்தவனைப் பழிவாங்கத் திரிவதாகவும் சொல்வார்கள்.; இதெல்லாம் உண்மையானால், சிங்கள ஆர்மியால கொலை செய்யப்பட்;ட ஆயிரக் கணக்கான தமிழர்களின் ஆவிகள் ஏன் சிங்கள ஆர்மிகளைப் பழிவாங்க முடியவில்லை?’ மூர்த்தி வெறியில் பிதற்றியபடி தூங்கி விட்டான்.

அவன் வழக்கம்போல: ராகவனின் அறையில் படுத்திருந்தான்.

அடுத்த நாட்காலை,ராகவன் மூர்த்திக்குக் காலைச்சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தான்.

மூர்த்தி சாப்பிட வந்தான். அவன் முகம் வெழுத்திருந்தது.

முதலிரவிற் களைத்த மாப்பிள்ளைக்கு முட்டை கொடுக்கலாமா, ராகவன் குறும்புத்தனமாக யோசித்தான்.

‘மச்சான்,இரவு ஒரு புதினமான கனவடா, கல்யாணக் கோலத்தில ஒரு பெண்வந்து…’ ராகவன் பேச்சை மாற்றினான்.மூர்த்தி நண்பனை உற்று நோக்கினான்.

இருவரும் ஒருத்தரை ஒருத்தர் ஆழமான அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.அப்போது இருவருக்குமிடையில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்ற உணர்வு பளிச்சிட்டது.

ராகவனுக்குப் புதுவேலையும் கிடைத்து விட்டது.

ஆபிரிக்க மாணவர்கள் இருந்த அறைக்க ஒரு சீன தம்பதிகள் குடிவந்திருந்தார்கள்.வந்தவுடனேயே அவர்களின் சினேகிதர்களின் வருகையும் கும்மாளமும் வீட்டைக் கலகலப்பாக்கியது.

அடுத்த நாள், அவர்களின் அறையிலிருந்து வந்து இளம் சீனப் பெண் அரைகுறையாடையுடன் ராகவனுக்குக் குட்மோர்ணிங் சொன்னாள்.அவர்களின் அறையிலிருந்து,பியானோ இசையும் கஞ்சா மணமும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாக அவனின் மூக்கிலும் காதிலும் ஓங்கியடித்தன.

அவன் தனது சாமான்களைக் கட்டிக்கொண்டிருந்தான். மிஸ்டர் சிங் வாடகை வாங்க வந்திருந்தார்.’உனது அறைக்கு வருபவர்கள் அதிகம் தங்குவதில்லை’ அவர் தனக்குத் தானே முணுமுணுத்தார்.

அவன் மறுமொழி சொல்லவில்லை.

‘போனவருடம் இந்த அறையில் ஒருபெண் தனது காதலனுடனிருந்தாள். மிக மிக அழகானவள்….திருமணம் செய்ய எல்லா ஆயத்தமும் செய்தார்கள்.,இருவரும் மிக மிக அன்பான காதலர்கள். அவன் ஒரு இந்தியன், கிட்டத் தட்ட உன்னைப்போலிருப்பான்…அவள் ஒரு அழகிய ஐரிஷ்பெண், கல கலவென்றிருப்பார்கள். காதலர்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நான் அடிக்கடி யோசித்ததுண்டு..’அவர் மேலே சொல்லாமல் பெருமூச்சு விட்டார். ராகவன் தனது சாமான்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.

அவனக்கு,மேலதிகமான சமான்களை அடுக்க இன்னுமொரு பெட்டிதேவை.

‘மிஸ்டர் சிங்கின் ஸ்ரோர் றூமில் ஏதும் பழைய காட்போர்ட் பெட்டிகள் கிடக்குமா,’

அவன் அவரைக் கேட்டான்.

‘அங்கே ஏதும் கிடக்கும்,வா போய்ப் பார்க்கலாம்’அவரைப் பின் தொடர்ந்தான் ராகவன்.

எப்போதும் மூடிக்கிடக்கும் அந்த அறையைத் திறந்து கொண்டிருந்தார் மிஸ்டர் சிங்.

‘அந்தப் பெண்ணுக்கு என்ன நடந்தது?’ ராகவன் கேட்டான்.

‘ஓ,போனவருடம் நத்தார்ப்பண்டிகை காலத்தில் குடித்த விட்டுக் காரோட்டிய ஒருத்தன் அவளின் வாழ்க்கையை ஒரு நொடியில் முடித்துவிட்டான். நத்தார்ப் பண்டிகை முடியத் திருமணம் செய்வதாக இருந்தார்கள்…அவள் அநியாயமாகக் காரில் அடிபட்டு இறந்ததும்,அவளின் காதலனுக்குக் கிட்டத்தட்ட பைத்திமே பிடித்துவிட்டது. கொஞ்ச காலத்தின்பின் அவன் இந்த அறையில் இருக்க முடியாது என்று போய்விட்டான்.’ அவர் பேசிக் கொண்டே கதவைத் திறந்தார்.

அங்கு ராகவன் கண்டகாட்சி!

ராகவனின் கனவில்,(நனவில்?) வந்து புணர்வு செய்யும் அழகிய பெண் அணிந்து வரும்,நீண்ட கல்யாண சட்டை ஸ்ரோர் றூமின் ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது!.

அவன் அதை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.அவன் நாடி நரம்புகள் ஒரேயடியாக உணர்விழந்த உணர்வு அவனை ஆட்கொண்டது.

‘ஓ,அந்தச் சட்டைதான் அந்தப் பெண் லோரா மார்ட்டின் தனது திருமணத்துக்காகத் தைத்த உடுப்பு.

மிக மிக அழகான பெண்.அவள் தனது திருமணத்திற்குத்தைத்த மிக மிக அழகான சட்டை இது. அவள் இறந்ததும் அவளது காதலன் அது தனக்கு வேண்டாமென்று சொல்லிவிட்டான்….அந்தச் சட்டையை அனுப்ப,அவளது உறவுகளை எனக்குத் தெரியாது.அதுதான் அந்தச் சட்டை அங்கே தொங்குகிறது. மிகவும் விலையானது,அவளது காதலனோ அல்லது உறவினரோ எப்போதாவது வந்து கேட்டாலும் என்பதற்காக நான் வைத்திருக்கிறேன். அத்துடன், லோரா ஒரு நல்ல பெண், அவள் இந்த வீட்டில் மிகவும் சந்தோசமாக இருந்தாள்.. எனக்கென்னவோ அவள் இன்னும் இந்த வீட்டிலேயே இருப்பதாக ஒரு உணர்வு.. உனக்கு அது புரியுமோ தெரியாது,நீ அதை பைத்தியக் காரத்தனமாக நினைக்கலாம்….’

மிஸ்டர் சிங் சொல்லிக்கொண்டபோனார்.

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

2 thoughts on “மோகினிப்பேய்

  1. சிறு கதை மிக மிக சிறப்பாக இருக்கிறது.தாயும் பிள்ளையும் ஒன்றானலும் வாயும்,வயிறும் வேறுதான் என்னும் சொல்வழக்கு தமிழகத்தில் இருக்கிறது.சிங்களப் பேரின வா தத்தால் போர்வெறியால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும்,ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டிருப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டும்,படித்துக்கொண்டும்,கேட்டுகொண்டும் இருக்கிறோம்.பெற்றோரையும்,தம்பியையும்,அக்கா,தங்கையயும் பிரிந்து வாழும் இளமையின் எல்லையை தொட்டுக்கொண்டிருக்கும் வாலிபன் தனக்கான வாழ்க்கையை தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறான்.இலக்கியம் படைக்க தனிமையில் இருக்க விரும்பியவன் புறவய தாக்குதலான குளிரிலும்,நியாயமாக அந்த வயதில் அவன் விரும்பியவாறுபெறவேண்டிய தாம்பத்திய உறவு கிடைக்காமல் போனதால் உண்டான அகவய உணர்களும் மிக நுனுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.கொலை செய்யபப்ட்டவர்களின் ஆவி கொலை செய்தவர்களை பழிவாங்கும் என்றால் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்தவர்களை சிங்கள ஆர்மிகாரர்களை ஏன் கொலை செய்யவில்லை என்று சொல்லும் இடத்தில் தான் ஈழத்தமிழர்களின் ஆன்மா இருக்கிறது.அருமையான படைப்பு வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *