கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்  
கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 71,560 
 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

கொக்கிரகுளம் சப்ஜெயில் சேகண்டி பன்னிரண்டு மணி அடித்தது.

அந்த இடமே பயங்கரமானதுதான். ‘பிள்ளையைப் போட்டு பிலாப்பழம் எடுத்த ஓடை ‘ச் சரிவில் உள்ள அடவிப் பிராந்தியம் அது. அங்கு வானுயர்ந்த பல சாதி மர வர்க்கங்களும் அர்ச்சுனன் வகுத்த சரக்கூடம் போலப் பின்னி நிற்கும். அந்த இடம் பேய் பிசாசுகளுக்குப் பெயர் போனது. அயலூர்க்காரன்கூட அந்த அடவியின் நெருக்கத்தைக் கண்டு அஞ்சுவான். அந்தத் தோப்பின் மேலாக ஓடும் ஐரோட்டுத் திருப்பத்தில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகமானதால், அங்கு துர்மரணப் பைசாசங்களின் ஆதிக்கம் உண்டு என ஊரிலே பேச்சுப் பிரபலம்.

ஆகவே அவன் மனசிலும் பயம் குடியேறியிருந்ததில் வியப்பில்லை. பயந்து பயந்து அவன் அந்த இடுகாட்டுப் பிராந்தியத்தில் அலைந்து கொண்டிருந்தான். அவன்மனசிலே ஒரே ஒரு எண்ணம்: ‘அவள் வந்துவிட்டால்– ? ‘

வான மண்டலம் கலக்கிவிட்ட சேற்று நீரைப் போல, இருண்டு கிடந்தது. மேகக் கூட்டத்துக்கு மேலாக எங்கோ கிணற்று விளக்காகத் தெரியும் சோனி நிலவின் பசப்பொளியில் மேகத் திரளின் கர்ப்போட்டம் அசைவு காட்டியது. வடிகட்டப் பெற்ற சோகை நிலவொளியில் எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. தூறல் வேறு பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.

இடுகாட்டில் சமாதிக் கற்கள் குத்துக் குத்தாக நின்றன. அந்த இருளில், வெள்ளையடிக்கப் பெற்ற அந்தக் கற்கள் உயிர் பெற்று அவனைச் சூழ்ந்து மெது மெதுவாக நடந்து வருவதாக ஒரு பிரமை; அது வெறும் பிரமை என்ற பிரக்ஞை அவனுக்கு இருந்தாலும், பயத்தின் நாடித் துடிப்பை அவனால் சமனப்படுத்த முடியவில்லை. ஆகவே அவை கற்கள்தான் என்று மனப் பிராந்திக்கு சூடு கொடுக்கும் தன்மையில் அவனும் அந்தக் கற்களை நோக்கி நடந்தான். நிலவொளியில் அந்தச் சமாதிக் கல்மீது செதுக்கப்பட்டிருந்த வரிகள் கண்ணில் பட்டன.

ஸ்ரீமதி கற்பகத்தம்மாள்

தேக வியோகம்: 1112 தை மீ 4–ம்தேதி

அவனுக்குத் திக்கென்றது. அன்றைக்கும் தை மாதம் நாலாம் தேதியேதான். பெயரும் கூடப் பொருந்தியிருந்தது. ஆனால் இந்தக் கற்பகம் வேறு. அவன் எதிர்பார்த்திருந்த கற்பகமோ மண்ணுள் புதைந்து கிடக்கும் கற்பகம் அல்ல; மணமகள் கற்பகம். அவன் காதலி ‘

அவன் மனசைத் தேற்றிக்கொண்டு மீண்டும் உலவ ஆரம்பித்தான்.

தூறல் பிசுபிசுத்தது. தவளைகள் முனகின. மருத மரக்கிளையில் ஒரு கோட்டான் சிறகடித்துக் குழறிக் கூவியது. எங்கிருந்தோ ஒரு கரு வண்டு கிர்ரென்று இரைந்து கொண்டு அவன் முகத்தில் மோதியடித்துக் கீழே விழுந்தது.

‘சீ ‘ என்று அவன் அதை உதறியடிக்கும்போது, அந்தச் சிரிப்புச் சத்தம் கேட்டது.

அவன் திரும்பினான்.

ஓடையோரமாக ரோட்டுச் சரிவில் பட்டுப் போய் மூளியாய் நின்ற மருத மரக்கிளைகள் குரக்கு வலித்த பைசாசக் கரங்களைச் சுருக்கி நிற்பதுபோலத் தோற்றமளித்தது.

மீண்டும் சிரிப்பு. நரம்புக் குருத்துக்குள் பனிபெய்த மாதிரி ஜ்உரச் சிலிர்ப்பை யூட்டும் லாகிரிச் சிரிப்பு

அவள் அந்தக் குத்துக் கல்லின்மீது அட்டணைக்கால் போட்டு உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள்; வெள்ளை வெளேரென்று பாலில் தோய்த்த மாதிரி ஒரு புடவை; மற்றப்படி அவளது முகராசியே போதும். ஆளை உருக்கும் கொள்ளைச் சிரிப்பு; உதட்டில் ரத்தச் சிவப்பு ‘

‘யாரது ?…யாரங்கே ? ‘

மீண்டும் அதே சிரிப்பு. அவனுக்கு உள்ளூர பயம். பேயோ பிசாசோ என்று ஒரு அரிப்பு. மீண்டும் கேட்டான்.

‘கற்பகமா ? ‘

‘நானேதான். ‘

அப்போது விழுந்த நிலவுத் துண்டத்தில் அவள் முகம் நன்றாகத் தெரிந்தது. கற்பகம் தான். அவளை நோக்கிக் காலடி எடுத்து வைத்தான். காலடியில் ஏதோ ‘கடக் ‘ கென்றது. குனிந்து பார்த்தான். அது ஒரு மண்டையோடோ, நண்டுக் கூடோ ?

அவளும் அதற்குள் ஆற்றங்கரைப் படிகளின் வழியே அவனை நோக்கி நடந்து வந்தாள். மெட்டி ஓசை கலுக் கலுக்கென்றது.

‘கற்பகம், நீ எப்போது வந்தாய் ? ‘

‘இப்போதுதான். ‘

‘கிளம்பலாமல்லவா ? ‘

‘ம். ‘

‘சரி, நீ தூங்கவே இல்லையா ? ‘

‘எனக்கா–தூக்கமா ? ‘

அவன் அவள் கையை எட்டிப் பிடித்தான்; கை சில்லிட்டது.

‘உன் கை ஏன் இப்படிக் குளிர்ந்திருக்கிறது ? ‘

‘என் கையா ? இல்லையே. உங்கள் கைதான் அப்படி ‘ என்றாள் அவள். சிரித்தாள். அவன் ஏனோ நடுங்கினான்.

ஆற்றுக்கு அப்பாலுள்ள பனங்காட்டுச் சுடலையில் ஒரு பிணம் பஞ்சவர்ணக் கோலமிட்டு புகை திரித்து எரிந்தது. உடல் வெடித்துப் பாயும் நிண நெய் சுடர்விட்டு நின்று எரிந்தது. பிண மூட்டத்தைக் கிளற முடியாமல் சுற்றிச் சுற்றி ஒரு நரி ஊளையிட்டது.

அவன் அவள் கையை இறுகப் பற்றினான்.

சிலுசிலுத்த பனிக்காற்றில் புளியம் பூக்கள் தலைமேல் உதிர்ந்து விழுந்தன.

‘நமக்குப் பூமாரி பெய்கிறது, பார்த்தீர்களா ? ‘

‘பூமாரியா ? புளிய மரத்தில் பிசாசுதானே குடியிருக்கும் ‘ என்றான். பிசாசு என்னும்போதே அவன் விரல்கள் நடுங்கின.

‘ஏன் ? பிசாசு என்றால் உங்களுக்குப் பயமா ? ‘

‘யாருக்குத்தான் பயமில்லை ? ‘

‘எல்லப் பிசாசுகளுமா அப்படி ? மோஹினிப் பிசாசுகளும் அப்படியா ? ‘

‘சரி சரி, போதுமே ஆராய்ச்சி. இடம், பொருள், ஏவல் தெரியாமல். கிளம்பு, கிளம்பம்மா தாயே. ‘

அவர்கள் புறப்பட்டனர். ஒரு மர நாய்குட்டி அடி வயிற்றுக் குரலில் ஊளயிட்டுக் கொண்டு அவர்களுக்குக் குறுக்கே விழுந்து ஓடியது.

2

செல்லப்பாவுக்குச் சொந்த ஊர் அம்பாசமுத்திரத்தை அடுத்த பிரம தேசம். தீர்த்தபதிக் கலாசாலையில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கொக்கிரகுளம் டிஸ்டிரிக் கோர்ட்டில் குமாஸ்தா வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கொக்கிரகுளத்தில் வேலை; வண்ணார்பேட்டையில் ஜாகை. வண்ணார் பேட்டையில் அவன் குடியிருந்த இடத்துக்கும் அவனது தாய் மாமன் வீட்டுக்கும் ஒரு பர்லாங் தூரம்கூட இல்லையென்றாலும், குடும்பப் பகை காரணமாக அவன் ஜாகை தனியாகவே இருந்தது. அவன் வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும்தான் பகையே ஒழிய, அவனுடைய கொழுந்தியாளான கற்பகத்துக்கும், அவனுக்கும் பகையே இல்லை. செல்லப்பாவோ கற்பகத்தைத்தான் கலியாணம் பண்ணுவது என்று வைராக்ய சித்தனாயிருந்தான். ஆனால் அது அவன் கைக்குள்ளடங்கிய விஷயம் அல்லவே ‘ எனினும் பேராச்சியம்மன் கோயில் படித்துறை அந்தக் காதலர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை சிருஷ்டித்துக் கொடுத்தது. கற்பகம் விடியுமுன்னரே அங்கு குளிக்க வருவாள். செல்லப்பா தற்காலக் கல்லூரி சரக்கேயாயினும், விடியுமுன்னர் ஸ்நானபானக் கடனை முடித்து விடுவான். ஆகவே இருவரும் ஆளரவம் அற்ற குமரியிருட்டில் சந்திப்பதற்கு வசதி கிடைத்தது. சந்தித்தனர்; காதல் வளர்ந்துவிட்டது ‘ ஆனால் காதல் வேறு, கலியாணம் வேறு அல்லவா ? ஆகவே, கற்பகத்துக்கு வேறொரு இடத்தில் பேச்சு வார்த்தை நடந்து வெற்றிலையும் கைமாறிவிட்டது. இன்னும் ஒரு வார காலத்தில் கலியாணம். ஆகவே அவர்கள் இருவருக்கும் ஒரே ஒரு வழி தான் தென்பட்டது.

தை மாதம் நாலாம்தேதி இரவு இருவரும் ஓடிப் போய் விடுவது என்று தீர்மானம். அதன்படியேதான் எல்லாம் நடந்தது.

3

கற்பகம் செல்லப்பாவின் திட்டப்படியே ஸ்ரீமதி செல்லப்பா ஆகிவிட்டாள். எனினும் செல்லப்பாவுக்கோ உள்ளூர பயம். ஊரிலே மணப் பெண்ணைக் காணவில்லை என்ற பரபரப்பில் பெண்ணைத் தேடும் வேட்டை நடக்கும்; பத்திரிகையில் செய்தி வரும்; ஒரு வேளை இருவரும் கையும் மெய்யுமாக அகப்படக் கூடும். அப்படி அகப்பட்டால், என்ன பண்ணுவது ? எப்படியும் கற்பகம் மேஜரான பெண்; அவள் இஷ்டப்படி யாரையும் திருமணம் புரிந்துகொள்ள உரிமை உண்டு. இருந்தாலும் அவளுக்கு மனத்திடம் குறைந்தால்–என்றெல்லாம் செல்லப்பாவுக்குப் பலவாறாகச் சிந்தனை ஓடியது.

ஆகவே தினம் தினம் ஏதோ ஒரு ஆபத்தை எதிர்பார்ப்பது போல் அவன் விழித்தெழுவான்; காலைச் சூரிய ஒளியில் ஜன்னல் வழியே விழுந்து கிடக்கும் தினசரிப் பத்திரிகையைப் பரபரவெனப் புரட்டியப் பார்ப்பான். ஆனால், அவன் அதிலோ எந்த விதச் செய்தியையும் காணவில்லை.

கடைசியில் கற்பகத்துக்கு அவளது பெற்றோர் குறிப்பிட்ட திருமணத் தேதியும் வந்து போயிற்று. திருமணம் நடந்தாலல்லவா செய்தி வரும் ? ஒரு வேளை பெண் காணாமற் போன விஷயத்தை கமுக்கமாக மூடி வைத்திருக்கிறார்களோ என்று கருதினான் செல்லப்பா. இருந்தாலும் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் அமுக்க முடியுமா ? அவன் எதுவுமே புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தான்.

‘என்ன ? எப்ப பார்த்தாலும் இப்படி பிரம்மஹத்தி பிடித்த மாதிரியே இருக்கியளே, என்னோடே பேசப் பிடாதா ? ‘ என்று கற்பகம் ஒரு கப் காப்பியை நீட்டிக் கொண்டே அவன் பக்கம் நெருங்கி வந்தாள்.

‘இந்தா பாரு, கற்பகம். நம்ம விஷயமா இன்னும் ஒண்ணும் தெரிந்த பாடில்லையே என்றுதான் கவலை ‘ என்று ஆரம்பித்தான் செல்லப்பா.

‘உங்களுக்கேன் அந்தக் கவலை ? உங்களுக்கு நான்தானே வேண்டும். நானே வந்தாச்சு ‘ என்று சொல்லிவிட்டு, சிரித்துக் கொண்டே ‘ஒருவேளை அதே முகூர்த்தத்திலேயே வேறு யாரையாவது பார்த்து திருமணம் நடத்தியிருக்கலாமல்லவா ? ‘ என்றாள் கற்பகம்.

அதைச் சொல்லிவிட்டு கற்பகம் கொல்லென்று சிரித்தாள்.

அவனுக்கு நரம்புக் கால்களெல்லாம் சிலிர்த்தன.

‘கற்பகம், ஏன் இப்படிச் சிரிக்கிறே ? உன் சிரிப்பு என்னை என்னவோ பண்ணுகிறதே. எங்கிருந்து வந்ததடி, இந்தப் புதிய சிரிப்பு ? ‘

‘அப்படியானால் நான் சிரிக்கக் கூடாதா ? அழட்டுமா ? ‘

அவள் மீண்டும் சிரித்தாள்.

அவனுக்கு அந்தச் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. அதில் மோகன லாஹிரி பொங்கியது என்பதை அவனும் உணரத்தான் செய்தான். எனினும், அதில் இருந்த வேதனை ‘

அவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, பத்திரிக்கைப் பையன் அன்றைய தினசரியை ஜன்னல் வழியே விட்டெறிந்து விட்டுப் போனான்.

செல்லப்பா பத்திரிகையைப் பாய்ந்து எடுத்து விறுவிறு என்று புரட்டினான். அவன் மனம் திடுக்கென ஒரு கணம் ஸ்தம்பித்து உலுங்கிற்று. அவன் அந்தச் செய்தியைப் படித்தான்:

செல்வி கற்பகாம்பாளுக்கும், செல்வன் சீனுவாசனுக்கும் வண்ணார்பேட்டையில் பெண் கிரகத்தில் சகல வைபவங்களுடனும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது என்று இருந்தது. அது மட்டுமல்ல. மாலைசூடிய தம்பதிகள் இருவரின் புகைப்படமும் பக்கத்திலே காணப்பட்டது ‘

‘கற்பகம் ‘ என்ன இது ? ‘ என்று திகைத்துப்போய்க் கேட்டான்.

அவளும் அதைப் பார்த்துவிட்டுச் சிரித்தாள்.

‘சிரிக்காதே. இதற்கு என்ன அர்த்தம் ? ‘

‘என்னைக் கேட்டால் ? ‘

‘அப்போது இந்தச் செய்தி ? ‘

‘பொய்யாயிருக்கலாம். ‘

‘பொய்யா ? நீயா, அவளா ? ‘

‘இதோ உங்களெதிரில் கல்மாதிரி நிற்கிறேனே, உங்களை யுகக் கணக்காய் காதலித்துக் கழுத்தையும் கொடுத்து விட்டு நான்தான் பொய்யாகி விட்டேன். அப்படித்தானே ‘ ‘ என்று கூறிவிட்டு அவள் கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.

அவனுக்கு எதுவுமே புரியவில்லை.

‘இந்தா பாரு, கற்பகம், அழாதே. நீ அழுதால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் ‘ என்றான். பிறகு அவளைச் சமாதானப்படுத்த முடியாமல் எழுந்து வாசல் நடைக்கு வந்தான்.

அவன் வாசலுக்கு வரவும், வாசல் நடைக்கு அந்தப் பரதேசிச் சாமியார் வருவதற்கும் சரியாக இருந்தது.

வந்தவன் பும்பூம் எனச் சங்கையும் முழக்கி, சேகண்டியையும் அடித்துக் கொண்டே, ‘ஏ, சாமி உன்னை மோகினிமாயை புடிச்சிருக்கு. ஒரு பொண்ணு ஒம்மனசை ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிவைக்கிறா. அந்த மகாலெச்சுமி… ‘ என்று ஏதேதோ சொல்ல ஆரம்பித்தான்.

‘அட, சரிதாம்ப்பா போ ‘ என்று எகத்தாளமாய்ச் சொன்னான் செல்லப்பா.

‘என்னை விரட்டாதப்பா. விரட்ட வேண்டியதை விரட்டு ‘ என்று கூறிக்கொண்டே, தனது சம்புடத்திலிருந்து கொஞ்சம் சாம்பலை எடுத்து, ‘இந்தா இதைப்பிடி. இது சுடுகாட்டு முண்டன் பிரசாதம் உனக்கு எதுவும் வராது ‘ என்று நீட்டினான்.

இந்த விவகாரத்திலெல்லாம் நம்பிக்கை யில்லாதவனாயினும் செல்லப்பாவின் கை ஏனோ நீண்டது.

விபூதியை வாங்கிக்கொண்டான்.

4

கற்பகமும் செல்லப்பாவும் ஒன்றாய்த்தான் வாழ்ந்து வந்தார்கள்…அன்றிரவு செல்லப்பாவுக்கு ஏனோ தூக்கம் பிடிக்கவில்லை. வெகு நேரம் புரண்டு கொடுத்து விட்டு அப்போதுதான் தூங்க ஆரம்பித்தான். நல்ல தூக்கம். திடாரென்று அவன் விலாவில் யாரோ ஓங்கிக் குத்தி வாங்குவதாக ஒரு வலி; ஒரு உணர்ச்சி. திடுக்கிட்டு எழுந்தான்.

‘கற்பகம், கற்பகம் ‘ ‘

அவளை உசுப்பினான்.

அவள் முனகிக் கொண்டே எழுந்திருந்தாள்.

‘இந்தா விளக்கைப்போடு. ‘

விளக்கேற்றப் பட்டதும் அவன் தன் விலாவைத் தொட்டுப் பார்த்தான். கையில் ஈரக்கசிவு தட்டுப்பட்டது. வெளிச்சத்தில் பார்த்தான். அது ஒரு துளி பச்சை ரத்தம் ‘

‘என்ன இது ? ரத்தம் ஏது ? ‘ என்று அவனாகவே கேட்டுக் கொண்டான்.

‘ஏதாவது கொசு–இல்லை–மூட்டையாக இருக்கும் ‘ என்றாள் அவள்.

‘இருந்தாலும் இந்த வலியா வலிக்கும் ? ‘

‘சொப்பனம் கண்டிருப்பீங்க; படுத்துத் தூங்குங்க ‘ என்று சொல்லிச் சிரித்தாள் கற்பகம்.

அவனுக்கு அந்த இரவில் அந்தச் சிரிப்புத்தான் விலாவில் குத்தி வாங்குவதாகப் பட்டது. அதைக் காணச் சகிக்காதவனாய் உடனே விளக்கை அணைத்தான்.

விளக்கு அணைந்து இருள் கவிந்தவுடன் திறந்து வைத்த ஜன்னல் வழியாக ஏதோ நறுமணம் மிதந்து வந்தது. சண்பகமா, மனோரஞ்சிதமா ? பக்கத்தில் எந்தப் பூ மரமும் இல்லையே. ஏது இந்த வாசனை ?……

எங்கிருந்தோ ஒரு சுவர்க்கோழி கிரிக்கிரிக் கென்று இரவின் அமைதியைக் குலைத்தது. அறைக்குள் அகப்பட்டுத் திசை தெரியாமல் தவிக்கும் ஒரு வெளவால் சுவரில் மோதி மோதி விழுந்தது.

அவனுக்கு மீண்டும் தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். காலையில் அவன் எழுந்திருக்கும் போது, சூரிய ஒளி அவன் முகத்தில் சுள்ளென்று உறைத்தது.

காபி சாப்பிடலாம் என்று அடுப்பங்கரைப் பக்கமாய்ப் போனான். அங்கு அவன் கண்ட காட்சி ‘…

அடுப்பில் மதமதவென்று தீ எரிந்தது; சட்டியில் வெந்நீர் கொதித்தது. எனினும் அடுப்பில் விறகு எரியவில்லை. கற்பகம் தன் காலைத்தான் நெருப்பில் தூக்கிப் போட்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தாள் ‘ அவளது வலது கை நீண்டு வளர்ந்த கேச பாரத்தைச் சிக்கெடுத்துக் கொண்டிருந்தது. அந்தச் சிணுங்கு வலி ‘ அது ஓர் எலும்பு; விலாவெலும்பு ‘

அவன் பதறிப்போய், ‘கற்பகம் ‘ ‘ என்று அலறினான். அப்போது அவன் இடுப்பில் லேசாக வலி தோன்றியது.

அவள் சிரித்துக்கொண்டே திரும்பினாள்.

‘என்ன இது ‘ ‘ என்றான் அவன்.

‘எது ? ‘

‘நீ ஏன் அடுப்பில் காலைப் போட்டிருந்தாய் ? ‘

‘அடுப்பிலா ? தூக்கக் கலக்கத்தில் உங்களுக்கு அப்படித்தான் தோணும். ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு கண்களைத் திறந்து பாருங்கள் ‘ என்று சொல்லிச் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு அவன் குடலை மீண்டும் உருவியது.

‘சிரிக்காதே, சிரிக்காதேன்னு எத்தனை தரம் சொல்றது ? ‘ என்று எரிந்து விழுந்து கொண்டே கூடத்துக்கு விரைந்தான்.

அவனுக்கு எதுவுமே புரியவில்லை. திகைத்தான். இதெல்லாம் வெறும் மனப்பிரமையா அல்லது….

அவனால் எதுவும் வெளியில் சொல்ல முடியவில்லை. மானத்துக்கு ஆபத்து நேர்ந்ததாகக் கனவு கண்ட மங்கையைப்போல தனிமையில் உள்ளுக்குள் உருகினான். நாளடைவில் அவன் உடம்பு வற்றி மெலிந்து போயிற்று. அவனுக்கு எதிலும் உற்சாகமில்லை. இரவில் திடுக்கிட்டுத் திடுக்கிட்டு விழித்தெழுந்தான்.

எனினும் கற்பகமோ கொஞ்சம் கூடக் கவலையற்று இருந்தாள். முகத்தில் எப்போதும் அந்தக் குறுஞ் சிரிப்பு; ஆளைக் கொல்லும் மோகினிச் சிரிப்பு.

ஒருநாள் அவனே துணிந்து கேட்டுவிட்டான். ‘நான் துன்பப்படுவதைப் பார்த்து உனக்கு ஏனோ இந்தச் சிரிப்பு ? தயை செய்து சிரிக்காமல் இரேன் ‘ ‘ என்று கூறிவிட்டு ‘நீ யார் ? என்னை ஏன் கொல்லுகிறாய் ? ‘ என்று துணிந்து கேட்டான்.

‘உங்களுக்குச் சித்தப் பிரமையா என்ன ? நானும் மனுஷிதான் ‘ ‘ என்றாள் அவள்.

அவனுக்கு உண்மையிலேயே சந்தேகம் உண்டாகி விட்டது: ‘எனக்குத்தான் ஒரு வேளை பயித்தியம் பிடித்திருக்கிறதோ ? ‘

5

அவனுக்கு அந்த ஊரில் இருக்க நிலை கொள்ளவில்லை; ஒரு நாள் ‘கற்பகம், வாயேன் ஒரு தடவை ஊருக்குப் போய்விட்டு வரலாம் ‘ என்றான்.

‘எந்த ஊருக்கு ? ‘

‘பிரமதேசத்துக்குத்தான் ‘

அவர்கள் இருவரும் மீண்டும் தெற்கு நோக்கிக் கிளம்பி, திருநெல்வேலி வந்து சேர்ந்தார்கள். அன்றிரவு திருநெல்வேலியில் தங்கிவிட்டு, காலை எட்டரை மணி வண்டிக்கு அம்பாசமுத்திரத்துக்கு டிக்கெட் எடுப்பதாகத் தீர்மானித்தார்கள்.

திருநெல்வேலியில் தங்கியிருந்த அன்று, அவனுக்கு தாமிரபருணி யாற்றில் குளிக்க வேண்டும் என்று சபலம் தட்டியது. வழக்கம்போல, காலையில் எழுந்து விடிவதற்கு முன் ஆற்றங் கரைக்குச் செல்ல முனைந்தான். கற்பகமும் உடன் கிளம்பினாள்.

இருவரும் பேராச்சியம்மன் துறைக்கு குமரியிருட்டில் வந்து சேர்ந்தார்கள். சீக்கிரமே குளித்து விட்டால், காப்பி பலகாரம் ஆனதும் ரயில் ஏற வசதியாயிருக்கும் என்ற நினைப்பு.

இருவரும் தாமிரபருணி நீரில் குளித்தார்கள். தேகநிலைகாரணமாக, செல்லப்பா விரைவில் கரையேறி விட்டான். கற்பகமோ ‘அப்பா ‘ இந்த நீரில் கும்மாளம் போட்டு எத்தனை நாளாகிறது ? நீங்கள் கரையிலேயே இருங்கள். நான் கூடக் கொஞ்சநேரம் குளிக்கிறேன் ‘ என்று சொல்லிக் கொண்டே நீந்தினாள். விராலைப் போலத் துள்ளிப் பாய்ந்தாள்.

அவன் கரையிலிருந்தவாறே அவள் குளிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

கலுக் கலுக்கென்ற மெட்டியோசை கேட்டுத் திரும்பினான். யாரோ வந்து கொண்டிருந்தார்கள். இடுப்பில் ஒரு குடம்; தோளில் துவைப்பதற்காக ஒரு சேலை. அவன் கூர்ந்து பார்த்தான்; அதற்குள் அவளே நெருங்கி வந்து விட்டாள்.

‘அத்தான் ‘ ‘

மங்கிய நிலவொளியில் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டனர். அவள் கழுத்தில் தங்கத்தாலி மின்னியது.

‘யாரது ? கற்பகமா ? ‘

அவனுக்குத் திடுக்கிட்டது; உடம்பு புல்லரித்தது.

இருவரும் ஏதேதோ பேசினார்கள்.

‘என்னை வரச் சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டார்களே. அத்தான் ‘ நான் வழக்கம்போல் விடியற்காலம்தான் வர முடிந்தது. உங்களைக் காணோம். எப்படியோ நமது திட்டம் பொய்த்து விட்டது. அது யார் தண்ணீருக்குள் ? அக்காளா ?… ‘ என்று அவள் ஏதேதோ சொல்வதற்குள் அவன் கண்கள் இருண்டன. நாக்கு கட்டுவது போலிருந்தது.

‘கற்பகம், ஏமாந்து விட்டேனே ‘ ‘ என்று சொல்லிக் கொண்டே அவளை எட்டிப் பிடிக்கப் போனேன். அவள் விலகினாள். கால் வழுக்கிக் கீழே விழும்வரை அவனுக்குப் பிரக்ஞை இருந்தது.

கீழே விழும்போது கலுக் கலுக்கென அவள் படியேறி வரும் ஓசை அவன் காதில் கடைசியாகக் கேட்டது ‘

6

மறுநாள் காலையில் வெளிறிப்போன சவம் ஒன்று ஆற்றங்கரையை அடுத்த அடவியில் காலைக் கடன் கழிக்க வந்தவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. வேட்டியிலே ரத்தக்கறை; குரக்கு வலித்த முகம்; பிதுங்கிய கண்கள்: ரத்தத்தை முறுக்கிப் பிழிந்தெடுத்த வெளிறிய சவப் பிண்டம் ‘

‘சின்னஞ்சிறுசுகள் பார்த்து நடமாட வேண்டாம் ? மோகினிப் பிசாசு தான் அடிச்சிருக்கும் ‘ என்று கூட்டத்தில் யாரோ சொன்னார்கள்.

அந்தப் பிணத்தைத் துணியால் இழுத்து மூடுவதற்குக் கூட ஒருவனும் துணிந்து முன்வரவில்லை ‘

– 1948 – ரகுநாதன் கதைகள் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.…மேலும் படிக்க...

2 thoughts on “மாயை

  1. புரியவே இல்ல…!!
    நான் அதிகமா எதிர் பார்த்தன்……………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *