பேய் வீட்டு வால் மரைக்காயர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 21,872 
 

கொழும்பிலிருந்து வடக்கே மேற்கு கரையோரமாக 82 மைல் தூரத்தில் உள்ள ஊர் புத்தளம். வரலாறு நிறைந்த ஊர். புத்தளம் என்றவுடன் உப்புத்தளம் தான் நினைவுக்கு வரும். “எத்தளம் போனாலும் புத்தளம் போகதே, புத்தளம் போனாலும் புத்தியோடு நட” என்று அர்ததம் தெரியாமல் புத்தளத்தை பற்றி சொல்வோருமுண்டு. அந்த வசனம், எந்த ஊருக்குப் போனாலும் புதிய ஊருக்குப் போகதே. அப்படி போனால் புத்தியோடு நட என்பதாகும். வன்னியர் ஆண்ட இடமது. புத்தளத்து துறைமுகம் ஒருகாலத்தில் தென் இந்தியாவுடன் வியாபாரம் செய்ய பாவிக்கபபட்டது. அதை சுற்றியுள்ள மதுரங்குளி , நுரைச்சோலை, கற்பிட்டி, ஆனமடுவ, முந்தல், போன்ற ஊர் பெயர்கள் எல்லாம் தமிழ் பெயர்களாகவே ஒரு காலத்தில் இருந்தது. படிப்படியாக சிங்களப் பெயர்களாக மாறிவிட்டது.

தமிழ் நாட்டில உள்ள கீழக்கரையிலிருந்து வணஜகம் காரணமாக வந்த முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரது. மன்னாருக்குப்போகும் பாதையிலும் அனுராதபுரத்துக்குப் போகும் பாதையின்; இருபக்கங்களிலும்; அடர்ந்த யானைக் காடுகள்.

நான் புத்தளத்தில் சகிராக் கல்லூரியில் 1950ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலம். கல்லூரிக்கு முன்னால் ஒரு பிரமாண்டமான அரண்மனை போன்ற வீடு. நான் முதல் தடவையாக அது போன்ற வீட்டைக் கண்டு அதிசயித்தேன். “அடேயப்பா! இந்த பெரிய வீட்டில் எத்தனை அறைகள் இருக்கும்? இது செல்வந்தன் ஒருவன் கட்டிய வீடாகத்தான் இருக்கும்” என் சந்தேகத்தை என் நண்பன் ரசீட்டை கேட்டேன். அவனுக்கு புத்தளத்து மரைக்காயர்களைப் பற்றித் தெரியாதது ஒன்றுமில்லை?

“எனக்கே எத்தனை அறைகள் என்ற கணக்குத் தெரியாது. காரணம் நான் அந்த வீட்டுக்கு போனது கிடையாது… ஆனால் இவ்வீட்டுக்குச் சொந்தக்காரரான முகம்மது மஜீத் மரைக்காயர்; ஒரு பெரிய பணக்காரரர்… புத்தளத்தில் ஹஜ் யாத்திரைக்கு போய் வந்தவர். ஒருகாலத்தில கடலில் மரக்களத்தில் இந்தியாவுக்கு போய் வணிகம் செய்து வந்ததினால் “மரைக்காயர்” என பெயர் வந்தது. அவர் ஒருவரே!… ஏராளமான தென்னந்தோட்டங்களுக்கும் உப்பளங்களுக்கும் அதிபதி. இன்னமும் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறார். ஒரு பெரிய கப்பல் போன்ற நீண்ட, நீல நிற ஹட்சன் கார் வைத்திருக்கிறார். அந்த வீட்டில் இரு வேலைக்காரர்களைத் தவிர அதிகம் பேர் வசிப்பதில்லை. மேல் வீட்டில் வெளவால் குடிபுகுந்திருக்கிறது. அவர் ஒரு கஞ்சன். ஏழைகளுக்கு உதவமாட்டார். ஏன் இந்தக் காசை வைத்திருக்கிறாரோ தெரியாது?…” என்றான் என் நண்பன்.

“வீட்டை பார்த்தால் ஒரு பேய் குடிபுகுந்த வீடு போல இருக்கிறதே?…”

“சரியாகச் சொன்னாய்!… அவரைப் பேய்வீட்டு மரைக்காயர் என்று தான் அழைப்பார்கள். அவரின் தகப்பன் நஞ்சு வைத்து இந்த வீட்டில் கொலை செய்யப்பட்டார்.”

“என்ன?!… கொலை செய்யப்பட்டாரா?.. யாரால்?..”

“இப்போதைய உரிமையாளரின் மாமனாரால்.”

“எதற்காக?!”

“வேறு எதற்காக? எல்லாம் சொத்துக்காகத்தான்.”

“இவ்வளவு சொத்தையும் யார் சேர்த்தது?… தற்போதைய உரிமையாளரின் தந்தையா?

“இல்லை!… இவரின் பாட்டானருக்கு ஒரு புதையல் கிடைத்தது. அதுவே ஏழையாக இருந்த அவரைத் தீடீரென்று பணக்காரனாக்கிற்று.”

“கேட்க ஒரு சுவார்சியமான கதை போல் இருக்கே!.. இது உண்மைக் கதையா?… அல்லது ரீல் விடுகிறாயா ரசீட்?..”

“என் பாட்டி பொய் சொல்லமாட்டா… அவ எனக்குச் சொன்ன படியால் உண்மையாகத்தான் இருக்கும். சும்மா வந்த பணமாகையால் மரைக்காயர் கஞ்சனாக வாழ்கிறார்.”

“முழுக்கதையும் எனக்குச் சொல்லேன்… எனக்குப் பேய்க் கதை கேட்க சரியான விருப்பம்” என்றேன்.

ரசீட்டும் தனது கற்பனை கலந்த பேய்வீட்டு மரைக்காயர் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

“கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன், அதாவது 1940 மட்டில் புத்தளத்தை சுற்றி ஒரே அடர்ந்த, கருவேல மரக் காடுகள். அப்துல்காதர் என்ற ஏழை ஒருவன் காட்டில் மரம் வெட்டி, விற்று பிழைத்து வந்தான். குடிசையில் வாழந்த அவனுக்குச் சொந்தமாக ஒரு மாடும், வண்டியும் தான் இருந்தது. வண்டியில் காட்டுக்குப் போய் மரங்களை வெட்டும் போது சில விலை உயர்ந்த கருங்காலி மரங்கள் இருப்பதைக் கண்டு அதை வெட்டிக் கொண்டு வந்து விற்று, கொஞ்சப் பணம் சம்பாதித்தான். முஸ்லீம்கள் சீதனம் கொடுத்துத் தான் பெண் எடுப்பது ஊர் வழக்கம். கிடைத்த காசில் ஒரு அழகிய பெண்ணைத் திருமணம் செய்தான். பெண்ணோ காசாசைப் பிடித்தவள், ஆனால் பேரழகி. மேலும் கருங்காலி மரங்களைக் கண்டுபிடித்து வெட்டிவந்து காசு உழைக்கும் படி கணவனுக்கு யோசனை கூறினாள். ஒரு நாள் மரங்களைத் தேடி காட்டுக்குள் வெகுதூரம் போன போது களைப்பால் ஒரு பெரிய முதிரை மரத்தின் கீழ் காதர்; தூங்கிவிட்டான் ;. அவன் தூங்கிய இடத்துக்குப் பக்கத்தில் ஒரு பாம்பு புற்று. அதில் இருந்த பாம்பொன்று அவனைத் தீண்டியது. அவன் உடலில் விஷம் ஏறியது. ஆனால் அவனது நல்ல காலம் அருகில் இருந்த எறும்புப்புற்றில் இருந்த எறும்புகள் அவனைக் கடித்ததால் அவனின் உடம்பில் பாம்பின் விஷம் நீங்கி எறும்புகள் எல்லாம் இறந்து கிடந்தன. அவனுக்கு என்ன நடந்தது தெரியாது. ஆனாலும் அந்த நீண்ட நித்திரைக்குள் அவன் கண்ட பயங்கரக் கனவு மட்டும் அவன் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டது. கனவில் வந்த பேயின் தோற்றத்தை நினைத்தாலே அவனது உள்ளம் பகீர் என்றது. அதோடு அது சொன்ன விடயங்கள் அவனுக்கு பெரும் குழப்பமாகவும் இருந்தது. அந்தப் பேய் ஒரு புதையலுக்குக் காவலாக இருப்பதாகவும். காலம் காலமாக அப்புதையலைத் தான் காத்து வருவதாகவும், அப்புதையல் வேண்டுமாகில்; காதர் தன் அழகிய மனைவியை ஒரு இரவு மட்டும் கருங்காலி மரத்தடியில் கொண்டு வந்து விட்டு போகும்படி கட்டளையிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தோடு வீடு திரும்பிய காதர், ஆறுமாதத்திற்கு முன்னர் திருமணமாகிய தன் அழகிய மனைவிக்கு எப்படிப் பேயின் வேண்டுகோளை எடுத்துச் சொல்வது என்று கவலைப்பட்டு யோசித்தபடி இருந்தான். அவனின் கவலையான முகத்தைக் கண்ட காதரின் மனைவி காட்டில் என்ன நடந்தது?! ஏன் கருங்காலி மரத்தை வெட்டி வராமல் வெறுங்கையோடை வந்தனீர்?… எனக்; கோபமாகக் கேட்டாள்.

காதருக்கு உண்மையை மறைக்க முடியவில்லை. பேயின் வேண்டுகோளை மனைவிக்கு விபரமாய்ச் சொன்னான். பண ஆசை பிடித்த அவள்.

“இதற்கேன் யோசிக்கிறீங்கள்?.. பேய் என்னை ஒன்றும் செய்யாது. கொண்டு போய் என்னை அந்த மரத்தடியில் ஒரு இரவுக்கு அது கேட்ட மாதிரி கொண்டுபோய் விடும்;!… திரும்பக் காலையில் என்னை வந்து கூட்டிட்டு வாரும்!.. பிறகு பேய் பாதுகாக்கும் புதையல் எமக்கு கிடைத்தால், நீர் கஷ்டப்பட்டு மரம் வெட்டிப் பிழைக்கத் தேவையில்லை. அந்தக் காசிலை பெரிய வீடு கட்டி சௌகரியமாக வாழலாம்.” என்றாள்.

“நல்ல பேராசைக்கார மனைவி!.. காதர் அவள் சொன்ன மாதிரி செய்தானா?” என்றேன் ஆவலுடன்

“செய்யாமல் இருக்க மனைவி விடுவாளா?… ஒருத்தருக்கும் தெரியாமல் அன்றிரவே மனைவியை அந்த கருங்காலி மரத்தடியில் கொண்டு போய் விட்டிட்டு, பாதுகாப்புக்கு ஒரு கோடரியையும் அவளுடைய கையில் பாதுகாப்புக்கு கொடுத்துவிட்டு வீடு திரும்பியிட்டானாம் காதர்.” மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டவன் காதர்.

“அடுத்த நாள் காலை என்ன நடந்தது?..” நான ரசீட்டை கேட்டேன்.

“காதர் அடுத்த நாள் காலை போய் பார்த்தபோது மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் ஆடை அரை குறையாக கலைந்திருந்தது. அவளை எழுப்பி என்ன நடந்தது?… என்று கேட்டான் காதர். தான் தூங்கி விட்டதால் தனக்கு நடந்தது என்னவென்று தெரியாது என்று சொன்னாள் அவள். எதற்காக சேலை அரைகுறையாக கலைந்திருந்தது என்று அவன் கேட்டதற்கு அவளால் பதில் சொல்லமுடியவில்லை. ஆனால் பேய் கனவில் வந்து தன்னோடு உடலுறவு வைத்தது போன்ற ஒரு நினைவு…” என்றாள் அவள் மயக்கத்தில்.

“என்ன!… பேயைக் கனவில் கண்டாயா?!.. என்று காதர் கேட்டதற்கு, ஆமாம்! அது கனவில் என்னைத தழுவிப் பேசிப் புதையல் இருக்கும் இடத்தையும் சொல்லிப்போயிற்று…” என்றாள்.

“என்ன நீ சொல்லுகிறாய்?!… கனவில் உன்னோடு உறவு வைத்தபின் புதையல் இருக்குமிடத்தைச் சொல்லிப்போனதா?…” என்றான் காதர்.

“ஆமாம்!.. இங்கிருந்து வடக்கே இருபது யார் போனால் ஒரு பெரிய சடைத்த கருங்காலி மரம் இருக்கிறதாம். அதன் கீழ் மண்பிட்டியொன்று இருக்கிறதாம். அதை சில அடிகள் ஆழமாகத் தோண்டினால் புதையல் இருக்கிறது. என்று எனக்கு பேய் சொல்லி மறைந்தது”

“ரசீட்!… அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா?…” நான் ஆவலுடன் நண்பனைக் கேட்டேன்.

“புதையல் கிடைக்காமலா இந்தப் பெரிய வீடு வந்திருக்கும்.? பேய் சொன்ன மாதிரி கணவனும் மனைவியுமாக சேர்ந்து கருங்காலி மரத்துக்குக் கீழ் இருந்த மண்பிட்டியை ஐந்தடி அளவிற்கு தோண்டிய போது மூன்று குடங்களில் தங்க நாணயங்கள் இருப்பதைக் கண்டார்கள்;. அவர்களுக்கு மகிழ்ச்;சி தாங்கவில்லை. அதை ஊருக்குத் தெரியாமல் கொண்டுவந்து வீட்டில் புதைத்து வைத்து காணி நிலம் வாங்கி, வீடு கட்டி பெரும் பணக்காரனானான் அப்துல்காதர்”

“அப்போ!.. அந்த பேராசைக்கார மனைவிக்கு, தான் பணக்காரியானது பெரும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே?…

“பாவம் அவளுக்குப் பேய் மூலம் கிடைத்த செல்வத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை! அந்தச் சம்பவம் நடந்து சில நாட்டகளில் அவள் கருவுற்றாள். பிரசவத்தின் போது அவளுக்கு கிடைத்த ஆண் குழந்தைக்கு ஒரு சிறு குட்டி வாலும் இருந்தது. காதரின் துரதிஷ்டம்!.. பிரசவத்தின் பின், மனைவி காலமாகிவிட்டாள்.”

“என்ன ரசீட் சொல்கிறாய்?!… பிள்ளைக்கு வாலா?!. நம்பமுடிவில்லையே?”

“நானும் முதலில் அதை நம்பவில்லை. பேயுக்குப் பிறந்த குழந்தையாக இருந்திருக்கலாம், அதுதான் அது வாலுடன் பிறந்திருக்கும்.”

“அப்போ மரைக்காயரின் தகப்பனுக்கு வால் இருந்திருக்கிறது என்று சொல்கிறாய்”

“அமாம்! இது தான் என்பாட்டி எனக்கு சொன்ன கதை. அந்த வால் உள்ள மனுசனைத் தான் சொத்துக்காக நஞ்சு வைத்துக் கொண்று விட்டார்கள். அப்போது இந்த மரைக்காயருக்குப் பத்து வயது. நல்லகாலம், அந்த வால் வைத்த மனிதன் சாகும் போது சொத்தையெல்லாம் மகனுக்கு உயில் எழுதிவைத்துவிட்டு இறந்ததால் மற்றவர்களால் சொத்தை ஒன்றும் செய்யமுடியவில்லை. மரைக்காயரின் பாட்டன் புதைத்து வைத்த ஓரு குடம் தங்க நாணயம் இன்னும் இந்த வீட்டில் இருக்கிறதாம். ஆதைக் காக்க இறந்த வால்மனிதனின் ஆவி அதை ஒருவரும்; நெருங்காதவாறு இந்த பேய்வீடடைச் சுற்றிச் சுற்றி வருகிறதாம். இது தான் இந்த வீட்டின் வரலாறு” என்று மரைக்காயரின் பூர்வீகம் முழுவதுமாய்ச் சொல்லி முடித்தான் என் நண்பன் ரசீட்.

ரசீட் சொன்ன கதையை நம்புவதா?.. இல்லையா?… என நான் யோசித்தபோது, பேய்வீட்டு மரைக்காயரின் ஹட்சன் கார், வீட்டுக்கு முன் வந்து நின்றது. ஒரு வேலை இவருக்கும் வால் இருக்கிறதோ!, அது தான் ஒரு பெண்ணும் இவரைத் திருமணம் செய்ய முன் வரவில்லையோ!.. என நினைத்தேன். அவர் என்னைப் பார்த்த பார்வை பயங்கரமாக இருந்தது. பயத்தில் பேயறைந்தவன் மாதிரி நான் நின்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *