அன்றொரு மதியம். புழுக்கம் கதகதப்பை தரவும், கடலோரமாக சென்று சற்று இளைப்பாறலாமென எழுந்து பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். எங்கள் வீட்டிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் வங்கக்கடலின் விளிம்பவள் நீல நிறத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.
கடல் அருகில் அதன் கரையோரமாக நெடு நெடுவென வளர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசையாகி நிற்கும் சவுக்கு மரங்கள். அதன் நிழலோடு ஒற்றை வழி பாதை ஒன்று. அந்த பாதையில் மெதுமெதுவாக பைக்கை ஓட்டிச் செல்லும்போது மெல்லிய- சில்லெனும் கடல் காற்றோ மேனியெங்கும் வருடிச் செல்லும். காற்றோ உடலெங்கும் சூட்டை தணித்து குளிரோ சிலிர்த்துவிட்டுச் செல்லும். அது எனக்கு தொடர்ந்து பிடித்துபோயிருந்தது. அப்பப்போ அந்த இன்பம் கிடைக்கவே கடலோரமாக வந்து செல்வேன்.
அந்த கடற்கரைக்கு செல்லவதென்றால் மெயின் வீதியையைதான் பயன்படுத்தி்க்கொள்வேன். பழைய கட்டிடங்கள் ஏதாவதை பார்த்தால், பைக்கை அதன் ஓரமாக நிறுத்திவிட்டு அந்தகால மனிதர்கள் அதில் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்? எப்படியெல்லாம் மகிழ்சியாக இருந்தார்கள்! எனும் பசுமைகளை நானே எனக்குள் கற்பனை செய்து ரசித்தும்கொள்வேன். அப்படியேதான் அன்று செல்லும்போது குறுக்குவழிச்சாலை ஒன்று தென்படவே முதன்முதலில் பைக்கை அவ்வழியாக விட்டுச்சென்றேன். வழியெங்கும் இருபக்கமும் மரங்களும் அடர்ந்த செடிகொடிகளுமாகவே இருந்தது. பார்ப்பதற்கு ரம்மியாகவும் இருந்தது. ஓரிடத்தில் நீண்டகாலமாக என் கண்ணுக்கு படாமல் பழங்காலத்து கட்டிடம் ஒன்று இருந்தது.
பைக்கை திருப்பிக்கிட்டே அங்கு வந்தேன். பழைய மரத்தளான குட்டி மாடி வீடு ஒன்று அது. கீழே பழங்கால கடைகள் திண்டுக்கல் பூட்டினால் பூட்டிக்கிடந்தது கடைசி மூலையில் இருந்த கடை மட்டும் பெட்டிக்கடையாக திறந்து இருந்தது. கீழ் பக்கமாக தங்க நிறத்திலும் மேல் பக்கமாக காக்கை நிறத்திலும் வாழைக்குலை ஒன்றும் தொங்கியிருந்தது. பழுதான வாழைப்பழங்களை குருவிகள் சில கொத்தி உண்டு கும்மியடித்தது. அதன் அருகில் புகை பிடித்துப்போய் அரிக்கேன் விளக்கும் ஒன்றும் தொங்கிக்கொண்டு இருந்தது. கடையோடு ஒட்டியபடி நீண்டு வளர்ந்திருந்த புளியமரத்தின் அடியில் போஸ்ட் பாக்ஸ் பெட்டி ஒன்றும் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.
பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு கெல்மெட்டை கழட்டி பைக் மிறரில் மாட்டிவிட்டு கடையருகே சென்றேன். வீட்டை மேலும் கீழுமா பார்த்தேன். அழகான கைவண்ணத்தில் பார்த்து பார்த்து மரங்களை செதுக்கி வீட்டை கட்டியிருந்தார்கள். இடையிடையே சொறுகிய பழங்கால ஓடுகளை கூரைக்கு போட்டிருந்தார்கள். மழையில் பாசி படர்ந்து கருப்பும் பச்சையுமா அந்த ஓடுகள் இருந்தன. நீத்துக்கட்டினால் சுவறுகள் அங்கங்கு சிறு சிறு வெடிப்போடு உதிர்ந்த பெயிண்டுமாகவும் இருந்தது. மேலே பெரும் தடிப்பத்திலான தொடர் கம்பிகளினால் ஜன்னல், அதன் நடு சுவற்றில் 1949 என்ற ஆண்டுடைய கல்வெட்டு. 9மட்டும் உடைந்து சைபர் வடிவத்தில் இருந்தது.
மரங்களுக்கிடையே இருந்த அந்த அழகான வீட்டை கண் இமைக்காமல் நீண்ட நேரம் பார்த்தபடி என்னையறியாமலே அந்த இடத்தில் நின்றுவிட்டேன்.
“தம்பி…” என கரகரத்த குரலில் ஒரு சத்தம். அந்த பெட்டிக்கடைக்குள் இருந்து ஒரு பெரியவர் என்னை கையசைத்து கூப்பிட்டார்.
சுருங்கி ஒடுங்கிய வெறுமேனியோடு நரைத்து பழுத்த பஞ்சு போன்ற தலைமுடியும், பழமையான சோடாபுட்டி மூக்கு கண்ணாடியும் அணிந்திருந்தார். அவர். கிட்டத்தட்ட 70-75 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவராக இருப்பார். பெட்டி கடைக்குள் எழுந்து நின்றிருந்தார் அவர். கடையருகே சென்றேன்.
“என்ன தம்பி மிச்சம் நேரமா எதை எதையோ பார்த்துகிட்டே நிற்க்கிறீங்க?” “அது ஒன்னுமில்ல உங்க வீடு அழகா இருக்கு அதான் பார்த்தேன் பெரியவரே. எனக்கு பழைய இடங்கள், கட்டிடங்கள்னா ரொம்ப பிடிக்கும்” என பினாத்தத் தொடங்கினேன்.
பொக்கை வாயால் அவர் சிரித்துக்கொண்டே உள்ளே இருந்த தடிகளை பிடித்து தட்டுத்தடுமாறி வெளியே வந்தார். வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் வந்து முக்கி முனங்கி உற்கார்ந்துகொண்டார். கையசைத்து என்னையும் வந்து அவர் பக்கத்தில் உற்கார சொன்னார்.
நானும் பம்மிக்கொண்டே அந்த பெஞ்சின் நுனியில் உற்கார்ந்து கொண்டேன்.
நான் எதுவும் கேட்காமலே அந்த வீட்டின் கதையை கூற ஆரம்பித்தார் அந்த முதியவர்.
“இதுதான் எங்களுடைய பூர்வீக வீடு. என்னுடைய வாப்பா அந்தகாலத்தில் கஷ்டப்பட்டு காசு சேர்த்து அவரே இதை கட்டி முடிச்சாரு. இந்த கடைகளைத்தான் அந்த நாளில் செஞ்சார் மனுஷன். நாங்க மொத்தம் ஏழு பேர். நான்தான் மூத்தவன், என்னோட பிறந்த எல்லோரும் மறஞ்சிட்டாங்க. இப்ப நான் மட்டும்தான் உசுரோடு இருக்கேன். எனக்கு ஐந்து பிள்ளைங்க அதுல நாலு பையனும் கடைசியா பொறந்த ஒரு பொட்டக்குட்டி மட்டும்தான். பையனெல்லாம் லண்டன், சுவிஸ்னு வெளிநாடுகளில் செட்டிலாகிட்டானுங்க. மனைவியும் காலமாகிட்டா இப்போதைக்கு பொண்ணுக்கிட்டதான் இருக்கேன். வயசாகிடுச்சுலே பொழுதுபோக்குக்கென்னு ஒன்னுமில்ல அதான் இந்த பெட்டிகடையை துறந்து பொழுதை போக்கிட்டுருக்கேன்.”
“சரி பெரியவரே இங்கேயா நீங்க தங்கியிருக்கீங்க?” என கேட்டேன்
அதற்கு அவர் “இல்லப்பா இருட்டு படும்போதே, பொண்ணு கார்ல வந்து நின்றிடுவா. நானும் கடையை சாத்திட்டு மறுநாள் காலம்காத்தாலதான் வந்து திறப்பேன். எவ்வளவுதான் புள்ளைங்ககிட்ட பண வசதி இருந்தாலும் ஏசி, பங்களானு இருந்தாலும் இந்த வாழ்க்கை தருகிற சந்தோஷம் எங்கப்பா கிடைக்கப்போகுது?” என கூறிக்கொண்டே சிரித்தார் அவர்.
கொஞ்சநேரம் எதுவும் பேசாமலே இருந்த அவர், ஏதோ யோசனையுடன் எழுந்து கடைக்குள்ளே சென்றார். அஙகிருந்த பாட்டில் ஒன்றை மல்லுக்கட்டி திறந்து அதில் டொபிகள் சிலவற்றை அள்ளிக்கொண்டு வந்து எங்கிட்ட நீட்டினார். நானும் “ஐய்யயோ வேணாம் பெரியவரே” என்று அடம்பிடித்ததும் “காசெல்லாம் கேட்கமாட்டேன் என்னமோ எனக்கு உன்னைப் பார்த்ததும் பிடிச்சுப்போச்சு
அதுதான் பாசத்துல தர்ரேன் வாங்கிக்கோ” என்று சொல்லிக்கொண்டே என் பேண்ட் பாக்கெட்டில் சிலதை திணித்துவிட்டு கையிலும் சிலவற்றை தந்தார்.
அவரும் டொபியில் ஒன்றை எடுத்து அதன் பாக்கெட்டை பிய்த்துவிட்டு தன்னுடைய பொக்கை வாயில் போட்டு ருசித்து ரசித்து மெண்டுகொண்டே எதுவும் பேசாமல் மறுபடியும் பெஞ்சில் குந்திக்கொண்டார்.
நானும் ஒன்றை வாயில் போட்டுவிட்டு ஏனைய டொபிகளை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன். நேரே பார்த்துக்கொண்டிருந்த அவர் என்னை திரும்பி பார்த்து “என்ன யோசிக்கிறே?” என கேட்டார்.
“இல்ல… இந்த சொகோமோல்ட், பாண்டி டெல்டா டொபியெல்லாம், இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் சிறுவனாக இருந்தப்பதான் பார்த்திருக்கிறேன். இப்ப மட்டும் எப்படி அதே டேஸ்ட்டும், அதே விலை லேபலோடு இருக்கு!” என்று எனது சந்தேகத்தை அவரிடம் சொன்னேன். அதை கேட்டதும் அவர் விக்கிவிக்கி சிரித்துவிட்டு”அட என் மகளோடு, நான் வெளியூர் போய் வரும்போதெல்லாம் இதெல்லாத்தையும் வாங்கி வந்துரேன். ஊருக்குள்ள எங்கிட்ட மட்டும்தான் இருபது வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே வகையான சாப்பாட்டு சாமான்களெல்லாம் இருக்கு. பழைய ஞாபகங்களையெல்லாம் என்னால மறந்து வாழ முடியாதுப்பா” என்று சந்தஷாமாகவும்-கவலையுமா கூறினார்.
நானும் அப்போதுதான் அவரது பெட்டிக்கடையை உற்று எட்டிப்ப்பார்த்தேன். அட என்னவொரு ஆச்சரியம்!. அப்படியே இருபது வருஷங்களுக்கு முன்னாடி இருந்த அதே கம்பெனி பிராண்டுகளில் நிறைய பொருட்கள் தென்பட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. பெரியவரின் கதைகளை கேட்டுக்கொண்டிருக்கவே நேரம் பத்தல. மாலைப் பொழுது இருள் பட்டுக்கொண்டிருந்தது.
நான் எழுந்து “நேரமாச்சு நான் போயிட்டு நாளைக்கு இதேபோல் இதே டைமுக்கு வாறேன் பெரியவரே” என்றேன்.
“சரிப்பா தினமும் வந்து போப்பா… எனக்கும் இப்பதான் நிம்மதியாக இருக்கு… என் கதை கேட்க ஒருத்தரும் இருக்கமாட்டார்களானு ஏங்கிக்கிட்டுருந்தேன் நீயாவது கடைசிகாலத்தில வந்தியே…” என உடைந்த குரலோடு சொன்னார் அவர்.
“கவலைப்படாதிங்க நண்பரே இதுக்காவது நான் தினமும் வருவேன்” என்றேன். அப்போ பார்க்கனுமே, அவர் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டே பைக்கை ஸ்டார்ட் பண்ணிய நான், கடல் காற்று வாங்க வந்த எனக்கோ எதிர்பாராமல் அற்புதமான இடமும், முதியவரும் கிடைச்சதை எண்ணி மகிழ்ச்சியில் பறந்து சென்றுகொண்டிருந்தேன்.
வீட்டுக்குள் நுழைந்ததும் இரவாகிவிட்டது. பேண்ட் பாக்கெட்டிலிருந்த நாலைந்து டொபிகளை எடுத்து கையில் வைத்து ஒருமுறை பார்த்துவிட்டு ஒரு டப்பாவில் போட்டு வைத்துவிட்டேன்.
தூக்கம் கண்ணை முட்டியது. கொட்டாவியோடு பெட்டில் சாய்ந்துகொண்டு லைட்டை ஓப் பண்ணிவிட்டேன். தூங்கும் முன்பே இடையில் என் மண்டையில் ஏதோ ஒன்று தோன்றியது . “அவ்வளவு நேரமும் அவரோடு பேசிக்கொண்டுருந்தபோதும், அந்த பெரியவரின் கடையில் பொருட்களை வாங்குவதற்கென்று எவருமே வரவில்லையே! மனித நடமாட்டம் கூட இல்லையே!” என எனக்குள் நானே பேசிக்கொண்டேன்.
யோசிச்சுக் கொண்டிக்கும்போதே என்னை அறியாமல் தூக்கமும் சென்றிருந்தது.
காலையில் வளமைக்கு மாறாக லேட்டாகி எழுந்தவிட்டேன். குளித்து முடித்துவிட்டு புறப்பட்டு ரெஸ்ட்டாரண்ட் ஒன்றுக்கு சென்றேன். சாப்பிட்டு விட்டு பெரியவருக்கும் சாப்பாடு ஒரு பார்சல் எடுத்துக்கொண்டேன். பைக்கை எடுத்து வேகமாக அவரது பெட்டிக்கடையை நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.
அந்த வீதியில் இருந்த பள்ளிவாயல் மையவாடியை கடக்கும்போது அதன் பக்கத்து சுவற்றோடு கிடந்த பாராண்கல்லில் ஒருவர் குந்திக்கொண்டிருந்தார். யதார்த்தமாக எனக்கு அதை பார்க்க கிடைத்ததும். அதே சோடாபுட்டி மூக்கு கண்ணாடியோடு அந்த பெரியவர் போன்ற உருவத்தில் ஒருத்தர் அதில் உற்கார்ந்திருந்தார்.
வேகமாக சென்ற நானோ, மறுபடியும் பின்னாடி திரும்பித்திரும்பி பார்க்கவே முன்னாடி வந்து ஆட்டாக்காரனோ சத்தமாக ஹோர்னடிக்க தடுமாறிய சுதாரித்துக் கொண்டு ப்ரேக்கை பிடித்து நின்றுவிட்டேன்.
“டேய் எருமை மாடு கோமாவுலையா இருக்கேய்? ச்சும்மா லூசுமாதிரி வர்றே…”” கூடவே ரெண்டு கெட்ட வார்த்தைகளும் அந்த ஆட்டோக்காரன் வாயிலிருந்து டெலிவிரியானது.
அந்தபக்கமாக போன எல்லோரும் இதை வேடிக்கை பார்த்து சிரித்துக்கொண்டே போனதும் “அசிங்கப்பகுத்திட்டான் ஆட்டோக்காரன்” என கடுப்பாகிய நான், பதிலுக்கு நாலு கெட்ட வார்த்தை ரெடி பண்ணும்போதே அதுக்குள்ள அவன் போயிட்டான் படுபாவி.
“சரி அவன் கிடக்கான்” என பைக்கை திருப்பிக்கொண்டே அந்த பெரியவர் உற்கார்ந்திருந்த மையவாடி சுவற்றின் இடத்துக்கு ஓடிப் போனேன். அங்கோ ஒருத்தரையும் காணோம்!. வெறும் மனப்பிராந்தியாக இருக்குமோ என எண்ணிக்கொண்டே மறுபடியும் பெரியவரின் பெட்டி கடை பகுதிக்கு சென்றேன்.
அந்த பகுதி வந்தது. அங்கு நடந்துகொண்டிருக்கும் காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தேவிட்டேன். அந்த பெரியவரின் வீட்டை பெட்கோ மெசினை கொண்டு யாரோ முற்றாக இடித்து தள்ளிக்கொண்டு இருந்தார்கள்.
பதறியபடி பக்கத்தில் நின்ற ஒருவரிடம் சென்று “ஏன் அந்த வீட்டை இடிக்கிறாங்க”னு கேட்டேன்.
அதற்கு அவரோ “அவங்க வீடு அவங்க இடிக்காங்க இப்ப உனக்கென்ன பிரச்சனை?” என்றார்.
“இல்ல… பெரியவர். பெட்டிகட.நேத்து.!” என உளரிக்கொண்டே மறுபடியும் அவரிடம் தடுமாறி எதையெதையோ கேட்டு விட்டேன்.
என்னையே மேலும் கீழுமாக ஏற இறங்க பார்த்துவிட்டு “என்னதான் உன் பிரச்சனை?” என அதட்டியதுபோல் கேட்டார், இல்ல பயங்கரமாகவே அதட்டி கேட்டார்.
அவர் என்ன பிரச்சனையோடு அங்கு வந்து நின்றாறோ தெரியவில்லை!. அவரிடமிருந்து அடி விழுவதற்குள் ஸ்டெடியாகிய நான், மெதுவாக “சார் ஒன்னுமில்ல… இந்த வீட்டில் பெட்டி கடை ஒன்றும் வெச்சிருந்தாரே ஒரு முதியவர் அவரைப்பற்றித்தான கேட்டேன்” என பம்மியபடி 32 பல்லையும் இளித்து தலையையும் விராண்டிக்கொண்டே கேட்டேன்.
அந்த ஆளோ, நான் கேட்ட கேள்விக்கு ஹிரோஷிமா நாகாசியில் போட்ட சைசோடு ஒத்த ஒரு அணுகுண்டை தூக்கி என் தலையில் போட்டான்.
“யோவ் அவர் எந்தக்காலம்யா பெட்டி கடை வெச்சிருந்தாரு…? அவர் இறந்து இருபது வருஷங்களுக்கு மேலாச்சுயா. மிச்சநாள் பாலடஞ்சி கிடந்த வீடு இது. சுவிஸ்ல இருக்கும் அவர் மகன் புதுசா மாடிவீடு கட்ரதுக்கின்னே இடிக்கான்யா, நீ என்னடனா காலாவதியான ஸ்டோரிக்கு ரீமேக் கேட்கிறதுமல்லாம, இப்ப வந்து அந்த கிழவனை குசலம் விசாரிக்கே!?” என்று என் மூஞ்சில் பூரான் விடாத குறையாக பாய்ந்து குறைத்துவிட்டார்.
ஒரு நிமிஷம் ஆடிப்போய் நின்ற எனக்கு உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டியது. “அப்போ நேற்று மதியம் வரை மாலைவரை யாரோடு இருந்தேன்!” என ஒரே படபடப்புடன் வீட்டுக்கு ஓடிச்சென்றேன்.
அறையில் இருந்த லாட்ஜை திறந்து டப்பாவில் வைத்திருந்த பெரியவர் தந்த அந்த டொபிகளை தடபுடலாக தேடி எடுத்தேன். எல்லாவற்றையும் முழுவதுமாக பிரித்து பார்த்தேன். ஒரு டொபியின் பாக்கெட்டில் மூலையில் மாத்திரம் உற்பத்தி தேதியும் காலாவதி தேதியும் அழிந்த நிலையில் அதில் இப்படியாக இருந்தது.
‘டெல்டா டொபி’
‘உபாலி பிரைவேட் கம்பெனி’
தயாரிப்பு தேதி: 13-03-1987
காலாவதி தேதி: 13-03-1988 என..!.