ட்ரிசோ எனப்படும் திரீவீலர்

8
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 52,046 
 
 

பேருந்தில் ஏறுவதற்கு வீட்டை விட்டு வெளியில் வந்த என்னை ஒரு பெண் அழைத்தாள்..

நேரம் காலை 4.30

இந்த நேரத்தில் யாரிந்த பெண்.

‘ஹாய்… குட் மோர்னிங்’ – (நான்)

‘குட் மோர்னிங்.. நீங்க பேஸ்புக்ல இருக்கீங்கதானே? – (அவள்)

யார்தான் பேஸ்புக்கில் இல்லை

‘ஆமா… நீங்க எனக்கு ப்ரெண்டா இருக்கிறீங்கதானே… நான் போட்டோ பார்த்திருக்கேன்’ – (நான்….)

‘ம்….’

‘ இந்த ரைம்ல….?’

‘ஃபோர்ற்க்கு போகனும், யாராவது வருவாங்களானு பார்த்தேன்… நீங்களே வந்துடீங்க…’

‘ஓகே.. நானும் அங்கதான் போறேன்… வாங்க போவம்’

அரை நிமிட அறிமுகத்தோடு எங்கள் நேரடிப் பழக்கம் ஆரம்பமானது….

பேருந்து சந்தி வரையில் சென்ற பின்னர்,

‘ட்ரிசோவ் ஒன்றுல போவமே..’- (அவள்)

‘போலாமே….’ (நான்…)

அவளும் நானும் பேஸ்புக் நண்பர்கள், சில மாதங்களுக்கு முன்னர் அவள் என்னை நட்புக்கு அழைத்த போது அவளின் புகைப்படத்தை பார்த்திருக்கிறேன்..

அதன் பின்னர் அவளது கணக்கைக் கூட ஆய்வு செய்ததில்லை. அரட்டை அடித்ததும் இல்லை.

ஆனால் அவள் நேரில் வந்து என்னோடு முச்சக்கர வண்டியில் வருவாள் என்று சற்றும் நினைக்கவில்லை.

சில நிமிடப் பழக்கத்திலேயே என்னுடன் முச்சக்கர வண்டியில் வருகிறாள் என்றால், அவள் என் மீது நல்ல நம்பிக்கை கொண்டிருக்கிறாள் என்று கருதினேன்.

பார்ப்பதற்கு அவள் ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

நீண்ட கூந்தல், நீளக் கண்கள், சிரிப்பு சிந்திக் கொண்டே இருக்கும் உதடுகள்…. கன்னங்கள் இரண்டிலும் சிவப்பாய் எதையோ பூசுவார்களே… பெயரை மறந்துவிட்டேன்…

அழகான பெண்தான்…

என் வயதே இருக்கும்.

சில நொடிகளில் அங்கு வந்த முச்சக்கர வண்டியில் ஏறி கோட்டையில் உள்ள எங்கள் அலுவலகங்களை நோக்கி பயணித்தோம்….

‘அப்பறம்… என்ன ஸ்பெசல்.. டெயிலி இந்த ரைம்லதான் போவீங்களா…’ (அவள்)

‘வீக்ல நாலு நாள் இந்த ரைம்ல போவேன்…’ – (நான்)

நன்கு பழகிய பெண்களுடன் பேசவே கூச்சம் எனக்கு. அவள் சில நிமிடங்கள் மாத்திரமே பழக்கம்.

அவளும் பெரிதாக பேச முற்படவில்லை.

ஒரு கேள்வி, ஒரு பதில். இடையில் மௌனம்

மீண்டும் ஒரு கேள்வி, மீண்டும் ஒரு பதில் இடையில் மௌனம்….

இப்படியே என் காரியாலய கட்டிடம் வந்தது..

‘நா அங்கால இறங்குறன்… நீங்க எங்க போகனும்.. வந்து விட்டுட்டு வரட்டுமா? – (நான்)

‘பக்கத்துலதான்… நான் போய்டுவேன்…’ – அவள்

முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி சில்லறையை நீட்டினேன்…

‘ இல்ல நான் குடுக்றேன்..’ அடம்பிடித்தாள் அவள்..

‘பிரச்சினை இல்லை.. நானே கொடுக்கிறேன்’ – (நான்…)

‘இல்லப்பா, எனக்கு ஒப்பீஸ்ல ட்ரெவலிங் பேய்மன்ட் தருவாங்க… அதால பரவால்ல’ – (அவள்)

‘அப்படியா… அப்ப ஓகே… எந்த நாளும் வந்தீங்கனா எனக்கும் ஈசீ… ஹா…. ஹா….’ (நான்….)

சில நிமிடப் பழக்கம் முடிந்தது…

அன்று காரியாலயத்தில் இருந்து வேலை முடிந்த பிறகு பேஸ்புக்கில் அவளின் கணக்கை பார்த்தேன்….

சில மாதங்களாக அவள் எந்த பதிவுகளையும் இட்டிருக்கவில்லை.

கடந்த மாதம் 3 ம் திகதி அவளின் பிறந்தநாள்.. பலர் வாழ்த்தி இட்டிருந்த பதிவுகள் மட்டுமே இருந்தன…

பகல் வேலை முடிந்து வீடு செல்ல பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன்…

ஜன்னல் ஓர பயணம் யாருக்குதான் பிடிக்காது…

காலையில் ஏலவே எழுந்தது.. தூக்கம் கண்ணில் இருக்கிறது என்பதை, ஜன்னல் ஊடாக வந்த காற்று நினைவுப்படுத்தி, சில சமயம் மறக்கடித்தது.

ஒவ்வொரு தரிப்பிடமாக நிறுத்தி நிறுத்தி சென்ற பேருந்து எரிச்சலை ஏற்படுத்தியது.

வழியெங்கும் ஒட்டப் பட்டிருந்த சுவரொட்டிகள் கொழும்பில் இத்தனை பேர் காணாமல் போய் இருக்கிறார்களா என்று எண்ண வைத்தது.

அத்தனையும் தேர்தல் சுவரொட்டிகள்… அத்தனைக்கும் இடையில் வெள்ளை நிறத்தில் ஒரு சுவரொட்டி… கிழிந்தும், கிழியாமலும் காற்றில் ஊசலாடியது…

அதை வாசிக்க வேண்டும் என்கிறது உள்ளுணர்வு…

பேருந்தில் இருந்தபடியே வாசிக்க முற்படும் போது எங்கிருந்தோ வீசிய காற்று அந்த சுவரொட்டியை இடம்பெயர்த்தது.

பேருந்தும் வேகமாக நகர்ந்தது…

மறுநாள் காலை…

நேற்றைய அதேநேரத்தில், அதே பெண்….

‘ஹேய்.. குட் மோர்னிங்… இன்றைக்கும் வேலையா….’ – (நான்)

‘யெப்….’ – (அவள்)

‘வாங்க போவம்… ரொம்ப நேரம் நின்றிங்களா?’ – (நான்)

‘ம்ம்…’ – (அவள்)

‘ஓ… சொரி… நீங்க நிற்பிங்கனு எனக்கு தெரியாது….’ – (நான்)

‘தட்ஸ் ஓகே…, இன்றைக்கு இங்க இருந்தே ட்ரிசோவ் எடுப்பமா’ – (அவள்)

‘ஓகே..’ எனும்போதே என்னைத் தாண்டி போன முச்சக்கர வண்டியை கைத்தட்டி அழைத்து நிறுத்தி பயணித்தோம்…

இவ்வாறு 4 நாட்கள் பயணம் தொடர்ந்தது….

நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம்…

பகல் அலுவலகம் முடிந்து வீடு சென்றதன் பின்னர், வழமையாக உணவை வாங்கும் கடைக்கு சென்றேன்…

‘ப்ரோ… உங்கள ஒரு த்ரீவீல் ட்ரைவர் தேடிட்டு வந்தாரு… ஏதோ அவசரம்னு சொல்லி இந்த நம்பர தந்தாரு…’

உணவுக் கடையில் இருந்த நண்பர், அந்த இலக்கத்தை தந்தார்.

இலக்கத்தை கைப்பேசியில் பதிவு செய்தேன்,

ஆனால், நான் அழைக்கவில்லை….

நான் இந்த உணவகத்துக்கு வருவேன் என்று அவருக்கு எப்படி தெரியும்..

முச்சக்கர வண்டி காரர் என்னுடன் என்ன கதைக்க இருக்கிறது…. நான் அதைப் பற்றி யோசிக்கவும் இல்லை.

மாலை மீண்டும் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்….

ஒரு முச்சக்கர வண்டி பாதையின் மறுப்பக்கம் நிறுத்தப்பட்டு அதன் சாரதி கையைத் தட்டி அழைத்தார்.

யாரேனும் கைத்தட்டி அழைத்தால் கடுப்பாகும் எனக்கு.. அப்போதும் அப்படித்தான்… திரும்பி பார்க்காமல் விரைந்தேன்…

முச்சக்கர வண்டி திரும்பி எனக்கு முன்னால் வந்து நிறுத்தப்பட்டது,

‘தம்பி… உங்கள நான் காலையில இருந்து தேடுறேன்…’ சாரதி…

‘ஏன்….’ நான்

‘கொஞ்சம் வண்டில ஏறுங்க… உங்கள்ட்ட முக்கியமான ஒரு விசயத்த பத்தி பேசனும்…’

‘எங்கயும் வரமுடியாது அண்ணே…. வேணுனா இங்கயே வச்சி சொல்லுங்க….’ – நான்…

‘கொஞ்சம் இத பாருங்க…’ – அவர்

அவர் தம் முச்சக்கர வண்டியின் மேற்கூரையில் உள்ள இடுக்கில் வைத்திருந்த காகிதத் துண்டு ஒன்றை என் கையில் தந்தார்.

அது அன்றொருநாள் பகல் பேருந்தில் வரும் போது பார்த்த சுவரொட்டியின் ஒரு பகுதியைப் போல இருந்தது.

அதனை விரித்துப் பார்த்தேன்…

‘அண்ணே…. வண்டிய எடுங்க…’ நான்…

அதே முச்சக்கர வண்டியில், இந்த சுவரொட்டி ஒட்டப் பட்டிருந்த பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் சென்றேன்… கையில் இருந்த சுவரொட்டியின் பாகத்தை மீதமிருந்த பகுதியுடன் சேர்த்துப் படித்தோம்….

காலை என்னுடன் பயணத்த அந்த பெண்ணின் புகைப்படம் பதிக்கப்பட்ட மரண அறிவித்தல் அது….

இரண்டு மாதங்களுக்கு முந்திய திகதி இடப்பட்டிருந்தது.

அப்படியானால் கடந்த நான்கு நாட்களாக அவள் என்னுடன் பயணித்தாளே…

இந்த சுவரொட்டி பொய்யா… அவள் பொய்யா…. இந்த சாரதி பொய்யானவரா?

அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தது….

‘என்னண்ணே… ஒரே குழப்பமா இருக்கே…’ – நான்…

‘தம்பி அவ ஏற்கனவே செத்து போன பொண்ணு… உங்க வீட்டுக்கு முன்னுக்குதான் அவளும், அவ அப்பாவும் போன த்ரீவீல் எக்சிடன்ட் பட்டுது… இரண்டு பேருமே செத்துடாங்க.. காலைல நீங்களும் அவளும் த்ரீவிலர்ல போறத பார்த்தேன்…. அதான் உங்கள்ட சொல்லனும்னு நினைச்சேன்… வாங்க உங்கள வீட்டுல விட்டுட்டு போறேன்..’ – அவர்

முச்சக்கர வண்டியில் ஏறிய போது, சாரதி தன் வலது பக்கம் திரும்பி ஏதோ செய்தார்…

‘ஆனால் அவ என்ன எதுவுமே செய்யலயே அண்ணன்.. நல்லாதான் கதைச்சா….’– நான்

செயலை விடுத்து, முச்சக்கர வண்டியை செலுத்த ஆரம்பித்த அவர், ‘அவ உண்மையா நல்ல பொண்ணுதான் தம்பி.. எந்த கெட்ட பேரும் இல்லை…. இத இதோட விட்டுடுங்க… அவ பின்னாடி போனா உங்களுக்குத்தான் ஆபத்து…’

அவர் எச்சரிக்கும் தொனி எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் சரிதான் என்றும் தெரிந்தது.

———–

மறுநாள் காலை 4.30….

இன்று எனக்கு வேலை இல்லை…. இருந்தாலும் அவள் வருகிறாளா? என்று பார்ப்பதற்காக வேலைக்கு போவதைப் போல தயாராகி வீதியில் இறங்கினேன்…

அவள் இருக்கவில்லை….

சிறிது தூரம் நடந்து சென்ற போது, பின்னால் வந்த முச்சக்கர வண்டியின் வாசல் எனக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

உள்ளே அந்த பெண்…

முச்சக்கர வண்டியின் உள்ளே ஒளிரவிடப்பட்டிருந்த நீல நிற வெளிச்சமும், அந்த பெண்ணின் தோற்றமும் கொஞ்சம் கதி கலங்க வைத்தது.

‘ஹேய்… குட்மோர்னிங்.. நான் லேட் ஆகிட்டேன்… அதான் வீட்டுகிட்ட இருந்தே ட்ரிசோவ்ல வந்துட்டன்…. வா…’ – அவள்…

மனதுள் அச்சம் இருந்தாலும், கடந்த நான்கு நாட்களாக எதையும் செய்யாதவள் இன்று என்ன செய்ய போகிறாள்? என்ற எண்ணம் நம்பிக்கையூட்டியது.

அவள் அருகில் அமர்ந்து கொண்டேன்…

உண்மையை கேட்டுவிடுவோம் என்று உறுதியாக இருந்தேன்…

‘நான் ஒன்று கேட்டா… உண்மைய சொல்வியா….’ – நான்

கொஞ்சம் நாணியவள், ஆனால் சற்று கோபமாக…

‘என்னா?’

‘நீ…. பேயா…?’ – நான்…

‘ஹா… ஹா…. ஹா…’ அவள்

பேய்தான் போல இருக்கு… இப்படி சிரிக்கிறாள். (எனக்குள்)

‘ப்ளீஸ்… உண்மைய சொல்லு…’

‘ஏன் அப்படி கேட்கிற?’ – அவள்

என் கையில் இருந்த சுவரொட்டியை அவளிடம் நீட்டினேன்…

பிரித்து பார்த்தவள்

‘என்ன இது?’

சுவரொட்டியில் அவளின் புகைப்படம் இருக்கவில்லை. சுவரொட்டி மாறுப்படவும் வாய்ப்பில்லை.

எப்படி மாறி இருக்கும்..

‘உனக்கு என்ன பிரச்சின?

தடுமாறிப் போனேன் நான்.

சுவரொட்டியை வாங்கி வெறித்துப் பார்த்துக் கொண்டே…

‘நீ எங்க வீட்டுக்கு முன்னாடி நடந்த எக்சிடன்ட்ல செத்து போய்ட்டதா சொல்லி, ஒருத்தர் இந்த போஸ்ட்டர காட்டினார்… நேத்து இதுல உன்ட படம்தான் இருந்தது… பட்… இப்போ…’

அவள் முகம் சற்றே சோகம் படர்ந்தது..
ஆனாலும்,

‘லூசா நீ… செத்து போனா உன்னோட எப்படி பேசிட்டு இருப்பேன்..’ – என்றாள்..

‘லொஜிக்காதான் பேசுற… ஆனா…..’

‘என்ன ஆனா… இத யாரு தந்தது உனக்கு…? அவர நினைவு இருக்கா…?

அவர் தொலைபேசி இலக்கம் ஒன்றை தந்திருந்தார்… நேற்று என் தொலைபேசியில் பதிவாகி இருந்த இலக்கங்களை சோதித்து அவரது இலக்கத்தை தேடி அழைத்துப் பார்த்தேன்…

தொலைபேசி மறுப்பக்கம் ஒலிக்க அழைப்பில் காத்திருந்தேன்… ஆனால் பதில் இல்லை…

‘இந்த நேரத்துல தூங்குவரா இருக்கும்… கொஞ்சம் லேற் ஆகி எடுத்து பாத்துட்டு எனக்கும் சொல்லு….’ –அவள்

அவள் குரலும், கண்ணில் இருந்த கோபமும் எனக்கு கொஞ்சம் அச்சத்தையே தந்தது… என் இடம் வர நான் இறங்கிவிட்டேன்…

வழமைபோல அவளே பணத்தை கொடுப்பதாக கூறினாள்…

அவளை பின்தொடர்ந்து செல்ல நினைத்தேன்… அவ்வாறே செய்தேன்.. அவள் தமது அலுவலகத்திற்கு அருகில் இறங்கி, முச்சக்கர வண்டி காரருக்கு பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் போது, நான் மறைந்திருந்து பார்த்தேன்… அவள் என்னை கண்டுவிட்டதை போல இடது கன்னத்தில் நாக்கை அழுத்தி இதழ்களின் ஒரு பக்கத்தில் மட்டும் சிரித்து கொண்டே கட்டிடத்துக்குள் சென்றாள்…

சிறிது நேரம் நான் என் அலுவலகத்தில் இருந்து விட்டு 9 மணி அளவில் மீண்டும் அவளதுக்கு அலுவலகத்துக்கு அருகில் வந்தேன்..

நான் எதிர்பார்த்த படியே ஆனால் அந்த கட்டிடத்தில் இருந்து அன்றி வேறொரு திசையில் இருந்து அவளும் வந்தாள்…

‘ஹாய்… நீ வருவனு எனக்கு தெரியும்?’ – அவள்

‘எப்பிடி…’ – நான்

‘எப்படியோ… சரி அந்த ட்ரிசோ காரருக்கு கோல் பண்ணி பார்த்தியா…? – அவள்…

‘ஓ… ஆனா… ஆன்ஸ்வர் இல்ல…’ – நான்…

‘இப்ப எடுத்து பாரு..’ – அவள்…

அழைத்தேன்… பதில் இல்லை….

என்னை விட அவளுக்குதான் அவரை பார்க்க ஆவல் அதிகம் போல் இருந்தது… அவள் முகத்தில் படபடப்பும், கோபமும் தெரிந்தது.

‘நீ ஓஃப் ஆகிட்டியா? – நான்

‘யப்… வீட்டுக்கு போகத்தான் ரெடியானேன்…’ – அவள்

‘சரி வா போவோம்…’ – நான்;…

திரும்பி போகும் போது அவள் இரு கைகளிலும் என் கையை பற்றிப் பிடித்துக் கொண்டாள்…

ஏதோ நான்கைந்து நாட்களுக்குள் இவ்வளவு நெருக்கம் வந்துவிடுமா? என்பது சந்தேகம் தான்.. ஆனால் அவள் எத்தனையோ ஆண்டுகள் என்னோடு பழகியவள் போல நடந்து கொண்டாள்.. நடந்து செல்லும் போது சில இடங்களில் அவள் என் கையில் தலையை சாய்துக் கொண்டாள்… அவள் மீதான பாசத்தை என் தேகம் எங்கும் பரவ செய்தாள்.. அவள் ஆவியாக மட்டும் இல்லாவிட்டால், அவளை எப்படியாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது…

சிறிது தூரம் நடந்து சென்றதும் எனக்கு ஒன்று நினைவு வந்தது. அவளது மரண சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த இடத்துக்கு வலது எதிர் திசையில் இருந்த கடையில் சீ.சீ.ரீ.வி காணொளிப்பதிவி (கமரா) இருந்தது.

அதில் நிச்சயமாக அந்த முச்சக்கர வண்டி சாரதியும் பதவாகி இருப்பார். அங்கு போய் உதவி கேட்கலாம் என்று முடிவெடுத்து, மீண்டும் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறினோம்.

அவள் என் கைகளை இன்னும் விடவே இல்லை…. முச்சக்கர வண்டியில் அமரும் போது என் தோளில் சாய்ந்தவள் இறங்கும் வரையில் எழவில்லை, எதுவும் பேசவும் இல்லை. என்னை எங்கு வேண்டுமானாலும் கூட்டிக் கொண்டு போ என்று அவள் சொல்வதை போல இருந்தது அது எனக்கு…

அவள் ஆவியாக மட்டும் இல்லாமல் இருந்தால், அவளை என் அம்மாவிடம்தான் முதலில் அழைத்து செல்வேன்…

———

‘அண்ணே… ப்ளீஸ்… உங்கட கமரா ரெக்கோர்ட ஒருக்கா செக் பண்ணிக்க விடுவிங்களா..? – நான்

‘யாருங்க நீங்க…’ – கடைக்காரர்…

நான் விடயத்தை விளக்கிச் சொன்னதும் அவர் ஓப்பு கொண்டார்…

ரெக்கோடரில் நேற்றைய பதிவுகளை பரிசோதித்தார்.. நேற்று மாலை 5 மணிக்கும், 5.30க்கும் இடையிலான பதிவினை பரிசோதித்தோம்…

நானும், முச்சக்கர வண்டி காரரும் உரையாடிக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது…

அவரது முகம் தெரியவில்லை…

சாரதி என்னை முச்சக்கர வண்டியில் ஏற்றி வலது பக்கத்தில் திரும்பி ஏதோ செய்யும் போது, அவரது முகம் தெளிவாக தெரிந்தது.

இதுவரையில் என் கையை விட்டு பிரிந்திராத அவள் கைகள், சாரதியின் உருவத்தை கண்டதும் பிரிந்தன…

‘இது என் அப்பா…’ – அவள்…

‘அப்பாவா…’ நான்..

‘ஆனா அவர் இப்ப உயிரோடவே இல்ல’ அவள்…

– தினக்குரல்

Print Friendly, PDF & Email

8 thoughts on “ட்ரிசோ எனப்படும் திரீவீலர்

  1. நன்றிகள்.. தொடர்ந்து வாசியுங்க… உங்கள் கருத்துக்கள் எம்மை ஊக்கப்படுத்தும்..

 1. இந்த கதைய வச்சி ஒரு குரும்படம் எடுக்க உங்கள் அனுமதி வேண்டும்.

  1. அனுமதி கோரியமைக்கு நன்றி.. ஆனால் மன்னிக்க வேண்டும். இந்த கதை தற்போது குரும்படமாக தயாராகி கொண்டிருக்கிறது. விரும்பினால் என்னிடம் வேறுகதைகள் இருக்கின்றன. முயற்சித்து பாருங்கள்.. நன்றி

 2. உங்கள் கதைகள் மிகவும் அழகாக உள்ளன .
  சம்திங் மிஸ் ஆனாலும் யோசித்தே உணர முடிகிறது .
  சூப்பர் !!!!!!!!!!!!!!!!!!!

  1. கருத்துக்கு நன்றிகள்.. என்ன மிஸ் ஆகிறது என்று கண்டறிந்து சொன்னால், அடுத்தக் கதைகளை திருத்திக் கொள்வேன்.. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *