கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் கிரைம்
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 13,277 
 
 

(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-50

அத்தியாயம்-41

திறந்த கதவையும் கவனியாமல் சீதாவும் திலீபனும் மெய் மறந்து இருந்தனர். ரத்தம் என் உடலில் வேகமாக ஓட ஆரம்பித்தது. காரணமில்லாமல் எனக்குக் கோபம் மூண்டது. சீதாவை மறந்து அவன் அடையாறுக்குச் சென்றபோது என்னிடம் தோன்றாத கோபம், குற்றாலத்திலிருந்து காரில் திரும்பும்போது திலீபன் நடந்து கொண்ட நடத்தையைக் கண்டு ஏற்படாத கோபம் – இப்போது மூண்டது. 

நான் என்னையும் மறந்து கூச்சலிட்டதுதான் என் ஞாபகத்தில் இருக்கிறது. “போதும் திலீபா போதும்! உனக்கே வெட்கமாக இல்லை? கதவைத் திறந்து வைத்துக் கொண்டா இப்படி இருப்பது?” என்று கூறி முடிப்பதற்குள், இருவரும் பிரிந்து விட்டனர். 

சீதா வேகமாக நடந்து அறைக்கு வெளியே சென்று விட்டாள். போகுமுன் அவள் பார்த்த பார்வையில் இருந்த வெறுப்பு இது வரை அவள் கண்களில் நான் பார்த்ததே இல்லை. 

திலீபனை நோக்கினேன்; ஆனால் திலீபன் முகத்தில் கோபம் இல்லை. வெறுப்பில்லை. அவன் கண்களில் மகிழ்ச்சி இருந்தது. 

என்னை அணைத்துக் கொண்டு, “அண்ணா! நீ மறுபடியும் என்னைக் காப்பாற்றிவிட்டாய். அதோடு சீதாவையும் காப்பாற்றி விட்டாய்”, என்று நன்றி தெரிவித்தான். 

திலீபனின் பேச்சு எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவனைத் திகைப்போடு பார்த்தேன். 

திலீபன், ”ஒன்றுமறியாதவள் சீதா. நான் எல்லாம் உணர்ந்து பாழாய்ப் போனவன். அவளைத் தடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் நான் என்னையே மறந்து அவளுக்குத் தீங்கு இழைக்க இருந்தேன். என்னை அவள் நெருங்குவது மின்சாரக் கம்பியைத் தொடுவது போலாகும். நான் இன்னும் பக்குவமாக இல்லை. நல்ல சமயத்தில் வந்து என்னைத் தடுத்தாய்!” என்று கூறிவிட்டு, தன்னுடைய தேகத்தோடு கட்டி இருந்த காரியத் தகட்டை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். நானும் அந்தத் தகடும்தான் அன்று வரவிருந்த ஆபத்தைப் போக்கிய சாதனங்கள் என்ற நினைப்பு. திலீபனுக்கு. 

மறுநாளிலிருந்து திலீபனது நடவடிக்கைகளில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. வெளியே போய் வருவதைக் குறைத்துக் கொண்டான். சீதாவோடு நெருங்கிப் பழகுவதையும் நிறுத்திக் கொண்டான். அவனது பழக்கவழக்கங்களில் ஏற்படட மாறுதல் சீதாவை வேதனைக்குள்ளாக்கியது. திடீரென்று நாகரிகமான முறையில் உடல் அழகு தெரியும்படி அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். 

“சீதா! திலீபனைக் கவர இந்த மட்டமான முயற்சிகள் தேவை இல்லை. அவன் உன்னை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்கிறான். உன் மீதுள்ள ஆசைதான் எவ்வளவோ விசித்திர அனுபவங்களுக்கு இடையில் கூடப் பித்தனாகாமல் அவனை வீடு திரும்ப உதவி இருக்கிறது. அவன் சங்கடம் அவனுக்குத்தான் தெரியும். ஆகையால் பொறுமையாக இருந்து அவனை அடைய வேண்டும்”, என்றேன். 

சீதா, “என் வேதனை உங்களுக்குத் தெரியாது. என்றும் தெரியவே தெரியாது! ஒருமுறை இழந்து விட்டேன். மறுபடியும் அவரை இழக்கச் சொல்கிறீர்களா?” என்று கேட்டாள். 

அவளிடம் பேசிப் பயனில்லை என்று விட்டுவிட்டேன். இரவு நிகழ்ச்சிக்குப் பின் தினமும் காலையில் திலீபன் குளிக்கக் கடற்கரைக்குச் செல்லும் வழக்கத்தை வைத்துக் கொண்டான். குளித்தபின் வெகுநேரம் கடலைப் பார்த்தபடியே மணலில் உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருப்பான். கடல் குளிப்பு அவனுக்கு வலிமை தருவதாகச் சொன்னான். மனிதனின் மூதாதை மீன், ஆகையால் அவன் கடல் நீரில் அதிக நேரம் தங்கிக் குளித்தால் ஒருவித பலம் வரும் என்று புரியாத விளக்கம் கொடுத்தான். அமாவாசை அன்று அவன் கடலில் குளிக்கப் போன போது நானும் உடன் சென்றேன். இருவரும் வெகுநேரம் குளித்தோம். வெளியே வந்து உடலைத் துடைத்துக் கொண்டோம். எனக்கு உடலெல்லாம் பிசுபிசுவென்று இருந்தது. இரண்டாவது முறை குளிக்கச் சுத்தமான தண்ணீர் இல்லை. ஆகையால் நான் அருவருப்போடு மணலில் உட்கார்ந்தேன். திலீபன் உதயசூரியனைப் பார்த்தபடி பத்மாசனம் போட்டு உட்கார்ந்தான். திடீரென்று கலவரத்தோடு எழுந்தான். தரையில் பார்த்தபடி அங்குமிங்கும் நடந்தான். முதலில் நான் இதுவும் ஒருவித விநோதப் பயிற்சியாக இருக்குமோ என்று பேசாமல் இருந்தேன். அவன் முகத்தில் இருந்த பீதியைப் பார்த்ததும் எனக்குக் கவலை ஏற்பட்டது. திலீபன் கடல் ஓரத்தில் போய்த் தேட ஆரம்பித்தான். அலைகளின் நடுவே நின்று தரையைப் பார்த்தபடி கவலையோடு நின்றான். ”என்ன திலீபா, தேடுகிறாய்?” என்றேன். 

“என் உடலைச் சுற்றி அணிந்திருந்த காரீயத் தகட்டை இழந்து விட்டேன்,” என்றான். ‘நான் பாங்கில் போட்டிருந்த பணமெல்லாம் போய்விட்டது!’ என்று சொல்வது போல் இருந்தது அவன் பேச்சுத் தொனி. வெகு நேரம் தேடிய பிறகு, வருத்தத்தோடு, “வீட்டுக்குப் போகலாம்” என்றான். 

இருவரும் வீட்டுக்கு வந்தோம். அன்று மாலை வரை அவன் வெளியே எங்கும் போகவில்லை. பூஜை அறையிலேயே இரவு 7 மணி முதல் 8 மணி வரை இருந்தான். அன்று இரவு என்னுடைய அறையில் வந்து படுத்துக் கொண்டான். சிறு பூண்டைப் பக்கத்தில் வைத்துக் கொண்டான். படுத்தவுடன் நான் விளக்கை அணைத்தேன். 

விளக்கு அணைந்தவுடன் திலீபன். “அண்ணா, நீ எனக்குச் செய்து கொடுத்த சத்தியம் ஞாபகமிருக்கிறதா?” என்று கேட்டான். 

“ஞாபகமிருக்கிறது. அதற்கு இப்பொழுது என்ன?” 

“ஒன்றுமில்லை. எனக்குப் பயமாக இருக்கிறது. எனக்கு ஏதாவது நேர்ந்தால், மாறுதல் ஏற்பட்டால், நீ உடனே என்னை இந்த வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, அறையில் தள்ளிப் பூட்டிக் காவலில் வைக்க வேண்டும்!” என்றான். 

”உனக்கு ஏதாவது நேரும் என்று நினைக்கிறாயா? மேஜரும் ஆனந்தியும்தான் வெகு தொலைவில் இருக்கிறார்களே?” 

“ஆமாம். அவர்கள் தொலைவில்தான் இருக்கிறார்கள். இருந்த போதிலும் எனக்குப் பயமாக இருக்கிறது” என் உள்ளத்தில் எழும் ஆசைகள், என் தேகத்தில் ஏற்படும் ஒரு துடிப்பு, ஒரு புயலின் வருகையை அறிவிக்கிறது. இது என் மனத்தின் வீண் பிரமையாகவும் இருக்கலாம். எதற்கும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா? நான் நானாக இருக்கும்போதே சொல்லிவிட வேண்டுமல்லவா?” 

பிறகு இருவரும் தூங்கிவிட்டோம். இரவு 12 மணி சுமாருக்கு நான் விழித்துக் கொண்டேன். திரும்பிப் படுத்தபோது திலீபனின் படுக்கை காலியாக இருப்பதைப் பார்த்தேன். எனக்கு உடனே பயமேற்பட்டு விட் டது. எழுந்து சீதாவின் அறையை நோக்கிப் போனேன். அறைக் கதவு தாளிடப்பட்டிருந்தது. கதவின் பக்கத்தில் நின்று, அறையினுட்புறத்திலிருந்து ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கவனித்தேன். அறையினுட்புறம் அமைதிதான் நிலவியது. பேச்சுக் குரலே கேட்கவில்லை.உடனே படிக்கட்டு வழியே இறங்கிக் கீழே சென்றேன். பூஜை அறையின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. திலீபன் குளித்துவிட்டு விபூதி அணிந்துகொண்டு எதையோ படித்தபடி இருந்தான். நான் வந்ததும் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு வந்தான். 

“என்ன திலீபா, என்ன நடந்தது?” என்று கேட்டேன். 

திலீபன், “விவரிக்க முடியாத ஆசைகள் எழுந்தன. எனக்குப் பயமாக. இருந்தது. உடனே எழுந்து வந்து குளிர்ந்த தண்ணீரில் குளித்து விட்டு ஆண்டவனைத் துதித்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் அமைதி ஏற்பட்டுவிட்டது. என்னுடைய சோதனைகளின் இறுதிக் காலம் இது என்று நினைக்கிறேன். என்னைப் பிடித்த பேயுணர்ச்சிகள் நீங்கும் காலம் இது. நான் சில நாட்கள் வெளியூரில் தங்கியிருந்து இந்த இறுதிச் சோதனைகளை வென்று விடலாம் என்று நினைக்கிறேன்”, என்றான். 

“வெளியூரிலிருந்தால் மட்டும் போதுமா?” 

“சீதா இல்லாத இடத்தில் இருந்தால் சவுகரியமாக இருக்கும்,” என்று சொன்னான். 

இருவரும் வந்து மறுபடியும் என் அறையில் படுத்துக் கொண்டோம். 

மறுநாள் விடியும் வரையில் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் கழிந்தது. மறுநாள் காலையிலிருந்து, திலீபன் திருவண்ணாமலைக்குச் செல்வது பற்றியே சொல்லிக் கொண்டிருந்தான். 

சீதாவுக்குத திலீபன் மனத்தில் நிகழும் போராட்டத்தின் அருமை தெரியாது. அவன் வீட்டை விட்டுச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாள். திலீபன் அவளிடம் மன்றாடி, அவளை ஓரளவுக்குச் சம்மதிக்கச் செய்தான். அன்றே திலீபன் திருவண்ணாமலை செல்ல வேண்டுமென்று துடித்தான். ஆனால் சீதாவும் திலீபனின் தாயும் என் தந்தையின் சிரார்த்த தினம் கழிந்து திலீபன் செல்ல வேண்டுமென்று தீர்மானித்தார்கள். 

தந்தை இறந்தது சென்னையிலே. அவர் இறந்து ஒரு வருடமாகி விட்டது. அதற்குள். எங்கள் வாழ்க்கையில் எவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன என்பதை எண்ணிப் பார்க்கவும் பயங்கரமாக இருந்தது. தந்தைக்குத் திதி கொடுக்கும் நாள். காலையில் எழுந்து குளித்துவிட்டு முறையாகச் செய்ய வேண்டியதைச் செய்தோம். 

முதல் நாள் இரவு, திலீபன் தாய், தான் கண்ட கனவைப் பற்றிச் சொன்னாள். எங்கள் தந்தை வீட்டுக்கு வருவது போலவும் என் சிற்றன்னையிடம் வாழ்க்கையில் அவர் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்பது போலவும் கனவு கண்டார்களாம். அது மட்டுமல்ல, “மீனாட்சி, ராமநாதனால் உன் வாழ்க்கையின் துக்கமெல்லாம் தீர்ந்துவிடும். திலீபனைக் கவனித்துக் கொள். எல்லா ஆறுகளையும் கடந்துவிட்டான். கடைசியில் ஒரு பெருநதிச் சுழல் இருக்கிறது,” என்று சொல்லிவிட் டுச் சென்றார் என்று சொன்னாள் 

திதி கொடுத்த அன்று மாலையே திலீபன் திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டுமென்றான். ஆனால் மறுநாள் காலை செல்லலாம் என்று சொன்னேன். திலீபன் பிடிவாதமாகச் செல்ல வேண்டுமென்று மன்றாடினான். மாலை ஆறு மணிக்குக் காரில் சாமான்களை எடுத்துக் கொண்டு தாயை வணங்கிவிட்டு என் காரில் சென்றான். அவனுக்கு உதவியாக இருக்கும்படி என் டிரைவரையும் அனுப்பி வைத்தேன். சீதா கலங்கிய கண்களோடு அவனுக்கு விடை கொடுத்தனுப்பினாள். அன்றிரவு சாப்பிடும்போது நானும் சீதாவும் சேர்ந்தே சாப்பிட்டோம். 

சீதா மெளனமாக உணவருந்தி விட்டு மாடிக்குச் சென்றாள். நான் என் அறைக்குச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று வீணையின் நாதம் கேட் டது. எழுந்து சீதாவின் அறைக்கு வந்தேன். அவள் தன்னுடைய அறையில் இல்லை. அவளுடைய அறையை அடுத்த நிலா முற்றத்தில் உட்கார்ந்து கண்களில் நீர் வழிய வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். அன்றும் பௌர்ணமி தினம். அவள் வாசித்த ராகமும் மாயா மாளவ கெளள ராகம். சோகத்தின் முத்திரை இசையில் நின்று நிலவியது. 

நான் சப்தமில்லாமல் வந்து அறையில் படுத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் வீணையின் நாதம் மறைந்தது. சீதா வந்து தன் அறையில் படுத்துக் கொள்ளும் சப்தம் கேட்டது. 

என் அறை கடியாரம் மணி 10 காட்டியது. நான் கண்களை மூடிச் சில நிமிடங்கள் தூங்கி இருப்பேன். கார் ஹாரன் சப்தம் கேட் டது. விழித்துக் கொண்டேன். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். 

என்னுடைய கார். அதிலிருந்து அலட்சியமாகத் திலீபன் இறங்கிக் கொண்டிருந்தான். அவன் கண்களைச் சுற்றிக் கறுப்பு நிறமும் அவன் நடையில் ஓர் அசுரத்தனமும் தெரிந்தன. அடுத்த வினாடி கதவைத் தட தடவென்று தட்டும் சத்தம் கேட்டது. பயங்கரமான எதிர்காலத்தின் முதல் படியில் நான் நிற்கிறேன் என்பதை மட்டும் உணர்ந்தேன். என் உடல் வியர்த்தது. இன்றிரவு திலீபன் சீதாவை நெருங்கக்கூடாது என்ற எண்ணம் மட்டும் என் மனத்தில் தோன்றியது. 

அத்தியாயம்-42

என்ன காரணத்தினால் திலீபனிடமிருந்து சீதாவைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் எண்ணினேன்? 

திலீபன் அடிக்கடி என்னிடம் கடந்த நாட்களில், “எனக்கு மாறுதல் ஏற்பட்டால் சீதாவுக்கு ஆபத்து வரும்!” என்று கூறியது காரணமாயிருக்கலாம். அதோடு, அவன் ஒரு நாள் என்னிடம் வாங்கிக் கொண்ட சத்தியமும் ஞாபகத்துக்கு வந்தது. “நான் பழையபடி மாறினால், என்னைத் தப்ப முடியாதபடி அடைத்துக் காவலில் வைத்துவிடுங்கள்!” என்று கூறியது ஞாபகத்துக்கு வந்தது. திருவண்ணாமலைக்குப் போய்ச் சில நாட்கள் இருக்கப் போகிறேன் என்று புறப்பட்டுப் போனவன் உடனே திரும்பிய நிகழ்ச்சி; காரை விட்டு இறங்கிய திலீபனது கண்களைச் சுற்றி இருந்த கருவட்டம்; அவனுடைய ரத்தச் சிவப்பான உதடுகள்: அவனுக்கு முன்னால் நடுங்கியபடி நின்ற என்னுடைய டிரைவரின் தோற்றம் – எல்லாம் சேர்ந்து, திலீபன் பயங்கரமாக மாறிவிட்டான் என்ற ஊகத்தையே கொடுத்தன. 

சீக்கிரமே, காலத்தை வீணாக்காமல், ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னுடைய மனம் என்னை உந்தித் தள்ளியது. என் அறைக்கு ஓடினேன். 

அவசர அவசரமாக டெலிபோனில் டாக்டர் சண்முகசுந்தரத்தின் மருத்துவமனைக்குத் தொடர்பு கொள்ள முயன்றேன். 

இரவு வேளையாகையால் டெலிபோன் அடித்துக் கொண்டே இருந்தது. டெலிபோனை எடுக்கத் தாமதமான ஒவ்வொரு வினாடியும், எனக்குள் பீதியையும் ஆத்திரத்தையும் கொடுத்தன. 

“டாக்டர் ஆஸ்பத்திரியில் இல்லை,” என்று தூங்கி வழிந்தபடி ஒருத்தி -நர்ஸ் காந்தா போலும் – சொன்னாள். 

நான் அவளிடம், நான் டாக்டர் சண்முகசுந்தரத்தின் நெருங்கிய நண்பன் என்றும். உடனே ஆஸ்பத்திரி காரோடு சில பலசாலிகளான ஆட்களையும் அனுப்பி வைக்கும் படியும் கேட்டுக் கொண்டேன். நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், உடனே சொல்வதைச் செய்ய வேண்டும் என்று அவளுக்கு அறிவுறுத்தினேன். 

என் பரபரப்பும், நான் கட்டளையிட்ட விதமும், நர்ஸ் காந்தாவை உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்திருக்க வேண்டும். 

நான் டெலிபோனை வைப்பதற்குள், படிக்கட்டில் தடதட வென்ற சப்தம் கேட்டது. மறு வினாடி என் அறைக்கதவு திறந்தது. 

திலீபன் நின்றான். என்னை முறைத்துப் பார்த்தான். 

அவன் பார்வையில் வழக்கமாக உள்ள மரியாதையோ கூச்சமோ இல்லை. நேரே சீதாவின் அறைக்குள் நுழைந்தான். நான் பீதியோடு பின் தொடர்ந்தேன். கொஞ்ச நேரம் அறைக்குள் அமைதி இருந்தது. 

சீதா. “திருவண்ணாமலையிலிருந்து திரும்பி விட்டீர்களா?” என்று கேட்டுக் கொண்டிருந்தவள், திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டாள். 

அறையினுள்ளிருந்து கச முச வென்ற ஒலி கேட்டது. சீதாவின் முனகல், திணறல் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டது. நான் உள்ளே செல்வதா வேண்டாமா என்று அதிக நேரம் யோசிக்கவில்லை. 

அதற்குள், ”ஐயோ! விடுங்கள்! என்னை விடுங்கள். நீங்கள் இப்படி இருக்க மாட்டீர்களே! ஏன் இப்படி மாறி விட்டீர்கள்?” என்ற சீதாவின் கூச்சல் உட்புறமிருந்து கேட்டது. 

அதைத் தொடர்ந்து, “என் கண்களைப் பார்! மூதேவி, கூச்சல் போடாதே! என் கண்களைப் பார்,” என்ற திலீபனின் பதிலும் ஒலித்தது. 

‘கண்களைப் பார்’ என்று திலீபன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முன் ஒரு தடவை, ”என் கண்களை மட்டும் பாராதே!” என்று திலீபன் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தது என் நினைவுக்கு வந்தது. 

உடனே உள்ளே பாய்ந்து சீதாவைக் காப்பாற்றுவது என்ற எண்ணத்தோடு அடி எடுத்து வைப்பதற்குள், அறையினுள்ளிருந்து சீதாவின் பயங்கரமான அலறல் கேட்டது. “உங்கள் கண்களை என்னால் பார்க்க முடியவில்லை. தலை சுற்றுகிறது!” 

அத்தோடு அறையின் உட்புறம், துணி ‘டர்’ என்று கிழிக்கப்படும் சப்தமும் கேட்டது. 

அதைத் தொடர்ந்து கதவு திறந்தது. தலை விரிந்த கோலத்தோடு, கண்களில் பீதியோடு சீதா ஓடிவந்தாள். அவள் ரவிக்கை கிழிக்கப்பட்டிருந்தது. சீதா என்னைத் தாண்டி அலங்கோலமாக ஓடினாள். அவளைப் பின் தொடர்ந்து வந்தான் திலீபன். 

நான் அவனைத் தடுத்து நிறுத்தினேன். திலீபன் திமிறினான். 

இந்த இடைவெளிக்குள் சீதா கீழே இறங்கி ஓடிவிட்டாள். 

திலீபன் என் முகத்தில் ஓங்கி அடித்தான். என் கண்கள் இருண்டன. இருந்தாலும், திலீபனோடு மல்லாடிக்கொண்டு என் அறைக் கதவுவரை வந்தேன். என் முகத்தில் சரமாரியாகக் குத்துகள் விழுந்தபடியே இருந்தன. என் கால்கள் தள்ளாடின. ஒருவித மயக்கம் என்னை விழுங்கத் தொடங்கிற்று. 

அதே சமயத்தில், திறந்திருக்கும் என்னுடைய அறைக்கதவு, என் பார்வையில் பட்டது. என்னிடமுள்ள பலத்தையெல்லாம் சேகரித்து என் கை முஷ்டியில் கொண்டு வந்து, திலீபனது வயிற்றில் குத்தினேன். அலறியபடி என் அறையின் உட்புறம் போய்க் குப்புற விழுந்தான். அவன் எழுந்திருப்பதற்குள், அறையின் கதவை வெளிப்புறமாகத் தாளிட்டு விட்டேன். உள்ளிருந்தபடி அவன் கூச்சலிட்டான். நிலைக்கண்ணாடியை உடைத்தான். பிறகு, கால்களால் கதவை எட்டி உதைத்தபடி இருந்தான். 

வெளியே இடியும் காற்றும் மழையும் திடீரென்று ஆரம்பித்தன. திலீபன் வரும்போது இடி மழையையும் அழைத்துக் கொண்டு வந்திருப்பானோ என்றுகூடத் தோன்றியது. அவன் கொடுத்த உதைகளால், தாளிடப்பட்ட கதவின் தாழ்ப்பாள் பெயர்ந்து வந்துவிடுமோ என்ற அச்சமும் என் மனத்தில் எழுந்தது. 

பளீரென்று ஒரு மின்னல் கண்ணைப் பறித்துக்கொண்டு சென்றது. உடனே தொடர்ந்து, தலை மேல் பயங்கரமான இடி விழுவது போன்ற ஒரு சப்தம் கட்டிடத்தை மோதிச் சென்றது. 

”ராமநாதா! கதவைத் திற! இந்த மாதிரியான இடி மழை கலந்த இரவு எனக்குக் கிடைக்காது! கதவைத் திறடா, கதவைத் திற!” என்று அலறியபடி இருந்தான் திலீபன். 

இடி மழைக்கும் திலீபனுக்கும் இடையே, அல்லது அவன் போட்டிருந்த விபரீதத் திட்டத்துக்கும் திலீபனுக்கும் இடையே ஏதோ ஒரு வித விசித்திரப் பிணைப்பு இருந்தது போலும்! 

திலீபன் அடைபட்டிருக்கும் அறைக் கதவைப் பார்த்தபடி நான் பத்து நிமிடங்கள் இருந்திருப்பேன். திலீபன் அலுத்துப் போய் உதைப்பதை நிறுத்திக் கொண்டான். 

அதே சமயத்தில் வீட்டுக்கு வெளியே ஆஸ்பத்திரி வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது. நான் கீழே இறங்கிப் போய்க் கதவைத் திறந்து பார்த்தேன். ஆஸ்பத்திரி ஆட்கள் நான்கு பேர் இறங்கி வந்தனர். அவர்களை அழைத்துக்கொண்டு மாடி அறைக்கு வந்து தாழ்ப்பாளைத் திறந்துவிட்டேன். கதவு திறந்ததும் திலீபன் அறைக்கு வெளியே பாய்ந்தான். நான்கு முரட்டு ஆட்கள் நிற்பதைப் பார்த்ததும் அவன் கலங்கி நின்றான். 

“ராமநாதா! எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தாயா? நீ ரொம்பப் புத்திசாலி ராமநாதா. ஆனால் உன் புத்திசாலித்தனம், உனக்குப் பெரிய ஆபத்தைக் கொடுக்கப் போகிறது”, என்று சொல்லி விட்டு என்னை வெறுப்போடு பார்த்தான். 

அவன் உள்ளத்திலிருந்த வெறுப்பு அவன் கண்களுக்கு ஒரு விதமான ஒளியைக் கொடுத்தது. அதே சமயத்தில் வெளியில் மின்னல் பளீரென்று மின்னியது. 

அந்த மின்னல் ஒளியில் திலீபனின் முகம் விகாரமான, மனிதத் தன்மை சிறிதும் இல்லாத முகமாகக் காட்சி தந்தது. அவன் கண்ணின் ஒளி, ஒருவிதப் பயங்கரப் பச்சை ஒளியாகத் தெரிந்தது. என் உடலில் மின்சாரம் பாய்ந்து என்னைத் தாக்குவதுபோல், என் உடல் பூராவும் வெடவெடவென்று நடுங்கியது. 

டாக்டர் சண்முகசுந்தரத்தின் ஆஸ்பத்திரி ஆட்களிடம் உடனே எச்சரித்தேன் அவன் கண்களை மட்டும் பார்க்காதீர்கள். அவனைக் கொண்டுபோய், பூட்டப்பட்ட அறையில், பத்திரமான பாதுகாவலில் வையுங்கள், என்று கட்டளை இட்டேன். 

திலீபன் மீறி ஓட யத்தனித்தான். ஆஸ்பத்திரி ஆட்கள் பாய்ந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். அவனை இறுகப் பிடித்துத் தரதர வென்று இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர். 

திலீபன் கூச்சலிட்டு, ஆஸ்பத்திரி சிப்பந்திகளைக் கடித்துத் தப்ப முயற்சித்தான். இம்மாதிரி முரண் செய்யும் பல நபர்களைக் கொண்டு செல்வதில் பழக்கப்பட்டவர்களாதலால், அவர்கள் வெகு லாகவமாக அவனை இழுத்துச் சென்றனர். 

மாடியிலிருந்து கீழே இறங்கு வதற்குள் திலீபன் போட்ட கூச்சல், காட்டு மிருகங்களை வலைவீசிப் பிடிக்கும்போது அவை போடும் கூச்சலைப் போல் இருந்தது. 

சீதா. “என்ன அத்தான் இது! ஏன் அத்தான் அவரை இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்?’ என்று திலீபன் சார்பில் என்னிடம் சண்டையிட்டாள். 

தன் மகனை நான்கு முரட்டு ஆடகள் இழுத்துச் செல்வதைப் பார்த்துக் கண்கலங்கியபடி தவித்து நின்றாள் மீனாட்சியம்மாள். 

சீதாவுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல், குழம்பி நின்றேன் நான். சீதா, “இது உங்களுக்கு நன்றாயிருக்கிறதா? உங்கள் சகோதரனையே இப்படிச் செய்வது உங்களுக்குச் சரியா?” என்று ஓலமிட்டாள். 

சீதாவின் கூச்சலை நான் பொருட்படுத்தவில்லை. 

திலீபனுடைய தாயின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, “அம்மா! என்னை மன்னித்துவிடுங்கள். இதை நான் விரும்பிச் செய்யவில்லை. திலீபன் நல்ல நிலையில் இருந்தபோது, அவன் என்னிடம் கேட்டுக் கொண்டபடிதான், அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிறேன். திலீபனுக்காக. இந்த வீட்டின் நன்மைக்காக, நான் இதைச் செய்ய வேண்டுமென்று திலீபனே என்னிடம் கேட்டுக் கொண்டான். அதைத்தான் நான் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அந்த உத்தமத் தாயின் முகத்தைப் பார்த்தேன். 

ஒன்றும் புரியாமல், துக்கம் நெஞ்சை அடைக்க அந்த அம்மாள் சொன்ன மொழிகள் என் இதயத்தை ஊடுருவிப் பாய்ந்தன. “ராமநாதா! தக்க காரணம் இல்லாமல் நீ எதையும் செய்யமாட்டாய். ஆனால் நான் பெற்ற பிள்ளையை இப்படிக் கட்டி இழுத்துச் செல்வதை என்னால் பார்க்க முடியவில்லையடா!” என்று அழுதாள். 

அத்தியாயம்-43

சீதா என்னிடம், திலீபன் தூக்கிச் செல்லப்படுவதைத் தடுக்கும்படி மன்றாடினாள். நான் அவளிடம் கடுமையாக நடந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்தேன். 

‘சீதா! உனக்கு இது புரியாத விஷயம். இதில் நீ தலையிடாதே,” என்று வெளியே ஓட இருந்தவளைப் பிடித்துத் தரதர வென்று இழுத்துத் தள்ளினேன். 

வாழ்நாளிலேயே இவ்வளவு திடசித்தத்துடனும் கண்டிப்பாகவும் நான் நடந்துகொண்டதைச் சீதா பார்த்ததில்லை. அதனால் அவள் திகைத்துப் போனாள். 

“சீதா! உன்னுடைய நன்மைக்காகத்தான் நான் இரக்கமில்லாமல் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதைப் புரிந்து கொண்டால், இப்படி அர்த்தமில்லாமல் கூச்சலிடமாட்டாய். நீ மட்டும் பொறுத்து இருந்தால் எல்லாம் நல்லபடியாகவே முடியும்,” என்று கூறிவிட்டு நான் என் அறைக்குப் போய்ப் படுத்துவிட்டேன். படுத்தவன், அமைதி இல்லாமல் புரண்டு கொண்டிருந்தேன். 

மறுநாள் காலை டாக்டர் சண்முகசுந்தரத்துக்குப் போன் செய்தேன். அவர், திலீபனுக்கு வேண்டிய வசதிகள் செய்திருப்பதாகவும், இருந்த போதிலும், அவன் ஓயாமல் வெளியே செல்ல வேண்டுமென்று தொந்தரவு செய்வதாகவும் சொன்னார். அன்று மாலை நான் சென்று அவரைச் சந்தித்துப் பேசினேன். அவரிடம் முன்பு ஒரு முறை திலீபனைப் பற்றி விவாதித்ததை ஞாபகப்படுத்தினேன். அவன் இரண்டு விதப் பாத்திரமாய், இரண்டு விதக் குண அமைப்பு உள்ளவனாக இயங்குவதைச் சொன்னேன். “அவன் நல்லவனாக இயங்கிய நிலையில் என்னிடம், ‘என் குணத்தில் மாறுதல் ஏற்பட்டால் என்னைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில், காவலில் அடைத்துவிடு. வீட்டில் வைக்காதே. என் கண்களை நிமிர்ந்து பார்க்காதே!’ என்று கேட்டுக் கொண்டான்”, என்ற எச்சரிக்கையை அவரிடம் சொன்னேன். டாக்டரும், ஆஸ்பத்திரி நர்ஸ், மற்றும் இதர சிப்பந்திகள் அனைவருக்கும் அந்த எச்சரிக்கையைக் கொடுப்பதாகச் சொன்னார். 

தினமும் அவரிடம் திலீபனின் நிலையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். திலீபன் ஆர்ப்பாட்டத்தை நிறுத்திவிட்டு இப்போது மிகவும் அமைதியாக நடந்து கொள்கிறான் என்றும் சொன்னார். 

மறுநாளே அந்தத் திட்டம் என்ன என்று புரிந்து போய்விட்டது. ஆஸ்பத்திரியில் இருந்தபடியே. திலீபன், டாக்டரிடம் வக்கீலைப் பார்க்க வேண்டும் என்று கூறினானாம். டாக்டர், “வக்கீல் எதற்கு?” என்று கேட்டிருக்கிறார். “காரணமில்லாமல் நீங்கள் நல்ல புத்தியுள்ள மனிதனைப் பைத்தியமாகக் காவலில் அடைத்து வைத்திருக்கிறீர்கள். அண்ணன் தூண்டுதல் பேரில்! அதற்காக உங்கள் மீதும், உங்கள் ஆஸ்பத்திரி மீதும் மான நஷ்ட வழக்குத் தொடரப் போகிறேன். ஜாக்கிரதையாக இருங்கள்,” என்று பயமுறுத்தினானாம். இந்தப் பயமுறுத்தல்களைக் கேட்ட டாக்டர், என்னைத் தேடி வந்தார். “விஷயம், ஆஸ்பத்திரியின் நல்ல பெயரைப் பாதிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. எல்லாச் சோதனைகளின்படியும். நான் திலீபனைப் பைத்தியமாகக் கருத முடியாது. ஆகையால், சோதனைக் காலமாகிய ஒரு வாரத்துக்கு மேல், நான் அவனை ஆஸ்பத்திரியில் வைத்திருக்க முடியாது”, என்று கூறி விட்டார். 

“ஒரு வாரம் வரையாவது வைத்திருங்கள். அதற்கப்புறம் செய்ய வேண்டியதை யோசிப்போம்”, என்று சொல்லி டாக்டரை அனுப்பிவிட்டேன். 

டாக்டர் சென்ற பின்பு ஒரு வாரம் முடிந்ததும், திலீபனை எங்கு சேர்ப்பது, எப்படிக் காவலில் வைப்பது என்று யோசித்தேன். சித்த சுவாதீனமுள்ள ஒருவனை, ஒரு தனி மனிதன் காவலில் வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். அந்த உரிமை, அரசாங்கத்தைச் சேர்ந்தது. அதுவும் நீதிமன்றத்தின் முன்பு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட பின்புதான். அரசாங்கம்கூட ஒரு மனிதனின் சுதந்திரத்தைப் பறிக்க முடியும். சட்டம் படித்து வக்கீல் ஆன நானே. சட்டத்தை மீற முடியுமா? 

ஆனால் திலீபனை இந்த நிலையில் சுதந்திரமாக உலாவ விடுவது பெரும் தவறாகும் என்றும் எனக்குத் தெரியும். இவ்வாறு யோசித்துக் கொண்டே படுக்கையில் படுத்திருந்தேன். என்னுடைய அறையின் டெலிபோன் மணி அடித்தது. 

ஒரு மணிக்கு முன்புதான் டாக்டர் சண்முகசுந்தரம் வந்து விட்டுப் போய் இருந்தார். 

அவர்தான் என்னை டெலிபோனில் அழைக்கிறாரோ, ஆஸ்பத்திரியில் ஏதாவது நடந்துவிட்டதோ, திலீபனுக்கு ஆபத்தோ அல்லது திலீபனால் மற்றவர்களுக்கு ஆபத்தோ என்று கலவரத்தோடு டெலிபோனை எடுத்து, “என்ன டாக்டர் சண்முகசுந்தரமா?” என்று கேட்டேன். உடனே பதில் இல்லை. 

நான் தொடர்ந்து, “யார் பேசுவது? யார்?’ என்று கேட்டேன். 

வெறும் காற்று ஊதுவது போன்ற குரலில் பதில் வந்தது. “நான்தான் பேசுகிறேன்”, என்று அதற்கப்புறம் பேச்சு இல்லை. 

யாரோ டெலிபோனைப் பறித்து மடக்கென்று வைப்பது போல் சத்தம் கேட்டது. 

நானே, டாக்டர் சண்முகசுந்தரம் ஆஸ்பத்திரிக்குப் போன் செய்து, அங்கிருந்து யாராவது என்னிடம் பேச முயற்சித்தார்களா என்று கேட்டேன். அங்கிருந்து யாரும் என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிந்தது. 

எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது. 

காற்று ஊதுவது போன்ற ‘உஸ்…’ என்ற குரலில், ‘நான்தான் பேசுவது’ என்று கூறியது யாராக இருக்க முடியும்? 

டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்குப் போன் செய்து, எனக்குச் சற்று முன் வந்த டெலிபோன் ‘கால்’ எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்கச் சொன்னேன். 

சிறிது நேரம் கழித்து டெலிபோன் எக்ஸ்சேஞ்சைச் சேர்ந்தவர்கள், எனக்கு வந்த டெலிபோன் அடையாறிலிருந்து வந்தது என்று சொல்லி, அந்த முகவரியையும் கொடுத்தார்கள். 

அந்த முகவரி மேஜரும், ஆனந்தியும் குடியிருந்த வீடு! நான் திகைத்தேன். மேஜரும், ஆனந்தியும் தான் இந்தியாவிலேயே இல்லையே! மேலும் அந்த வீடு பூட்டப்பட்ட வீடு ஆயிற்றே! அங்கிருந்து எப்படி டெலிபோன் செய்தி வந்திருக்க முடியும்? 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. டிரைவரை அழைத்து. “நீ அடையாற்றில் திலீபன் தங்கியிருந்த வீட்டுக்குப் போய், அங்கு யாராவது குடியிருக்கிறார்களா என்று உடனே பார்த்துவா”, என்று சொல்லி அனுப்பினேன். 

டிரைவர் போய்த் திரும்பும் வரை, மாடியிலேயே உலவியபடி இருந்தேன். 

அரைமணியில் டிரைவர் திரும்பி விட்டான். “வீடு பூட்டப் பட்டு இருக்கிறது. வீட்டில் யாரும், சில மாதங்களாகவே குடியிருந்ததாகத் தெரியவில்லை. அவ்வளவு புழுதியும் குப்பையுமாக இருக்கிறது,” என்று சொன்னான். 

டிரைவரை அனுப்பிவிட்டு வெகுநேரம் சிந்தித்தபடி இருந்தேன். 

இரவு மணி 2.35 காட்டியது.

‘இவ்வளவு நேரமாகச் சிந்தித்தபடியா உட்கார்ந்திருந்தோம்!’ என்று நினைத்துப் படுக்க ஆயத்தமானேன். 

அறையின் விளக்கை அணைத்து விட்டுத் தெருவை ஒட்டியிருந்த ஜன்னலைத் திறந்து வைத்தேன். 

பட்டென வீசும் நிலவொளியில், தெரு நிசப்தமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. 

என் வீட்டு வாசலில் ஒரு பெண் நிற்பது தெரிந்தது. ஒரு வேளை சீதாவாக இருக்குமோ? குறிப்பாகப் பார்த்தேன். 

சீதா இல்லை. 

அந்தப் பெண் மஞ்சள் சேலையும், சிவப்பு ரவிக்கையும் அணிந்திருந்தாள். மெள்ள அடிமேல் அடி யெடுத்து  வைத்து என் வீட்டு வாசலை நோக்கி நடந்து வந்தாள்.

கதவு திறக்கும் சப்தம் கேட்டது. 

அடையாறு சென்று திரும்பி வந்து என்னிடம் தகவல் சொல்லி விட்டுப் போன டிரைவர், கதவை அப்படியே மூடாமல் விட்டுவிட்டுப் போயிருக்கிறான். 

மெள்ள அடிமேல் அடிவைத்து மாடி பால்கனியில் வந்து நின்றபடி. கீழ்ப்புறமுள்ள ஹாலைக் கவனித்தேன். 

வாயிற்புறக் கதவு திறந்து கிடந்தது. அதன்முன் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். பிறகு மெள்ள திருடன் நகருவதுபோல் நகர்ந்து வந்தாள். 

திறந்த ஜன்னல் வழி வந்த சந்திரன் ஒளியில், அவள் முகமும் தெரிந்தது! வந்தவள் ஆனந்தி! 

அதே வெளுத்த முகம், சிவந்த உதடுகள். அப்படியே காற்று போல் தவழ்ந்து வரும் நடை! 

பூட்டப்பட்ட அடையாறு வீட்டில் இருந்த பேசியவள் இவள் தானே! இங்கு யாரைப் பார்க்க வந்திருக்கிறாள்? 

என்னையா. இல்லை. சீதாவையா? அவள் சீதாவை நெருங்கக்கூடாது என்று நினைக்கும் போதே ஆனந்தி மாடிப்படியின் முதல் படிக்கட்டில் கால் வைத்தாள். 

இப்போதெல்லாம் சீதா, கீழே மீனாட்சி அம்மாளோடு வடக்குப்புற அறையில் படுத்திருந்ததால், வந்தவள் என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறாளோ என்று நினைத்தேன். 

முதலில் திலீபன்!

இரண்டாவது நானா? 

என் மனத்தில் திகில் குடி கொண்டது. மெள்ள நகர்ந்து வந்து படுக்கையில படுத்துக்கொண்டேன். 

கையில் ஒரு தடியையும் தயாராக வைத்துக்கொண்டு படுத்திருந்தேன். 

ஆனந்தி படிகளில் ஏறிவரும் சப்தம் மென்மையாகக் கேட்டது. 

அதிலிருந்து. அவள் சப்தம் செய்யாமல், ஜாக்கிரதையாக வருகிறாள் என்பதும் தெரிந்தது. 

முடிவில் அவள் என் அறைப்பக்கம் திரும்பினாள். 

என் அறையின் திறந்த கதவின் அருகில் நின்றபடி என்னைக் கவனித்தாள். அவள் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது. அதைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருந்தது. என் படுக்கையை நோக்கிச் சப்தமில்லாமல் நகர்ந்து வந்தாள். 

அத்தியாயம்-44

அறைக் கதவோரத்திலிருந்து ஆனந்தி என் படுக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்ததும் என் மனத்தில் விவரிக்க முடியாத உணர்ச்சிகள். இப்படித்தானே திலீபனைக் கடந்த காலத்தில் ஒரு நாள் நெருங்கி இருப்பாள்; அவனைத் தொட்டிருப்பாள்; அல்லது அணைத்திருப்பாள்! திலீபன், மோகத்தில் தன்னை இழந்திருக்கிறான். இன்றும், ‘அவன் பைத்தியமா? அரக்கனா? அல்லது நோயாளியா?’ என்று எந்த விதத்திலும் விவரிக்க முடியாதபடி எல்லாம் கலந்த ஒருவனாக இருக்கிறான். திலீபன் இந்த ஆனந்தியிடம் உடலையும், உள்ளத்தையும் பறிகொடுத்தபோது, அவன் சீதாவைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ளும் ஆர்வத்தில் துடித்துக் கொண்டிருந்த உத்தம இளைஞன். அவனே இவளுடைய காந்தத்தால் இழுக்கப்பட்டு பலியானான் என்றால், என் நிலை என்னவாகும்? 

போலீசாரால் ஆனந்தியை ஒன்றும் செய்ய முடியாது என்று திலீபன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இந்த ஆனந்தியின் சக்தியின் அடிப்படைதான் என்ன? ஆன்மா வரையில் பாயும் அவளுடைய கவர்ச்சியின் பலம் எதிலிருந்து வந்தது? மண்ணிலே பிறந்தவளா, அல்லது விண்ணிலிருந்து இறங்கி வந்தவளா. அல்லது மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையே தோன்றி உலவி வரும் அதிசயப் பிறவியா? இவ்வாறு நினைத்தபடி கண்களை லேசாகத் திறந்து ஆனந்தியைப் பார்த்தேன். கண்களைத் திறந்து பார்க்கவும் பயமாக இருந்தது. பயத்தால் அடித்துக்கொண்ட என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது. 

ஆனந்தி என்னைப் பார்த்தபடி இருந்தாள். அவளது சிவந்த உதடுகள் பார்ப்பதற்கு அப்போதுதான் ரத்தம் குடித்துவிட்டு வந்த ஒரு பிராணியின் வாயைப் போல் எனக்குத் தோன்றியது. சிவந்த உதடுகளுக்குப் பின் பளீரென்று வெளுப்பாக மின்னும் கடைவாய்ப் பற்கள் வளைந்து கூர்மையாக இருந்தன. அழகான வாய்தான். அதே சமயத்தில் பயத்தைத் தரும் அழகாயிருந்தது. ஆனந்தியின் கரங்கள் சாவின் வெளுப்போடு மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தன. அவள் கைகள் என் முகத்தை நோக்கி வரும் பொழுது, நான் அப்படியே நடுங்கிவிட்டேன். பயத்தால் வெந்து தணலாகக் கொதிக்கும் என் நெற்றியில் அவளது விரல்கள் பனிக்கட்டி போல் இல்லை, பிணத்தின் விரல்களைப் போல்- ஜில்லென்று பதிந்தன. வீரிட்டு அலறவேண்டுமென்று தோன்றியது. ஆனால் என் உதடுகள் அசையவில்லை. சப்தம் வெளிவரவில்லை. கட்டுண்டு கிடந்தேன். திலீபனைப் பைத்திய ஆஸ்பத்திரியில் அடைத்து வைத்து எனக்கே அழிவைத் தேடிக் கொண்டேன் என்று நினைத்தபடி படுத்திருந்த நான், ஆனந்தி என்னைக் குனிந்து, உற்றுப் பார்ப்பதைப் பார்த்தேன். அவளது விழிகளில் கண்ணீர் தேங்கியிருப்பதையும், அவை என் மார்பில் உதிர்வதையும் உணர்ந்தேன். அவள் முகத்தில் கண்ணீர்க் கறையைப் பார்த்தேன். அவள் மார்பு உணர்ச்சியால் விம்மியது. 

மற்றவர்களை அழவைக்கும் இந்த அரக்கி ஏன் அழுகிறாள்? இவளால் அழக்கூட முடியுமா? அழுகை என்பது ஆண்டவனால் மனித இனத்திற்கு மட்டும் அளிக்கப்பட்ட பிது ரார்ஜித சொத்தல்லவா? ‘சொர்க்கத்தில் அழுகை இல்லை. கண்ணீர் விட வாய்ப்பில்லை. அதனால் எனக்குச் சொர்க்கம் வேண்டாம்.’ என்று கவி தாகூர் எங்கேயோ எழுதியிருப்பதாக எனக்கு ஞாபகம். தீமை செய்தே வாழ்பவர்கள். பணத்தின் பலத்தால் சுகபோகத்தோடு வாழ்பவர்கள், இவர்களால் கண்ணீர் சிந்தவே முடியாது. நல்ல உணர்ச்சிகளோடு வாழும் சாதாரண உத்தம மனிதன் ஒருவனால்தான் அழ முடியும். அப்படியிருக்கும்போது ஆனந்தி ஏன் அழுகிறாள் என்று ஆச்சரியத்தோடு ஆனந்தியைப் பார்த்தேன். 

ஆச்சரியம் என்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டதும், பயம் என்ற உணர்ச்சி குறைய ஆரம்பித்தது. எனக்குப் பயம் குறையும்பொழுது ஆனந்தியின் முகத்தில் பீதி படருவதைப் பார்த்தேன். அவளது புருவங்கள் நெற்றியில் ஒன்று சேர்ந்தன. அவள் பற்கள், உதடுகளை நெருடின. அவள் என்னைக் கண்டு பயந்திருக்க முடியாது. அவளது பயத்தின் காரணம், வேறு எதுவாக இருக்க முடியும் என்று நான் யோசிக்கும் போதே ஆனந்தி ஓடிப் போய், என் அறையின் தெருப்புற ஜன்னல் வழியே தெருவைப் பார்த்தாள். பிறகு பரபரப்புடன் அறைக்குள் வந்தாள். அவளோடு கொண்டு வந்திருந்த துணிப் பையிலிருந்து ஒரு நீண்ட பருமனான நோட்டுப் புத்தகத்தையும், அதனுள் செருகி வைக்கப் பட்டிருந்த காகிதத்தையும் ஒரு முறை நோக்கினாள். அதற்குள் எங்கள் வீட்டின் வெளிப்புறம் ஆள் நடமாடும் சத்தம் கேட்டது. நானும் துணிவாக எழுந்து உட்கார்ந்தேன். 

உடனே ஆனந்தி, “அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி இருப்பதையும், கடிதத்தில் எழுதி இருப்பதையும் படியுங்கள். அதன்படி செய்யுங்கள். சீதாவுக்கு ஒன்றும் தெரிய வேண்டாம். சீதாவுக்குக் கட்டாயம் தெரிய வேண்டாம். கடிதத்தில் உள்ள கட்டளைப்படி செய்யுங்கள்,” என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே ஓடினாள். 

நான் அவளைப் பின் தொடர்ந்து ஓடினேன், “ஆனந்தி, ஆனந்தி!” என்று கூவியபடியே . 

அதற்குள் ஆனந்தி படிக்கட்டைத் தாண்டி, கீழ்ப்புற ஹாலுக்குச் சென்று விட்டாள். அங்கிருந்தபடி என்னைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, வெளிப்புறக் கதவை நோக்கி ஓடினாள். அதே சமயத்தில் வெளிப்புறக் கதவு திறந்தது. மேஜர் மாயநாதன் நுழைந்தார். அவர் ஆனந்தியை இழுத்துக்கொண்டு சென்றார். இதையெல்லாம் நான் மாடிப்படிக் கட்டின் மேல் படியிலிருந்து பார்த்துக்-கொண்டிருந்தேன். சீதா கீழ் ஹாலின் மூலையில் நின்று பார்த்துக்கொண்டு இருந்தாள். 

ஆனந்தியும் மேஜரும் சென்ற பின்பு சீதா, படிக்கட்டை நோக்கி வந்தாள். அவள் பார்வையில் வெறுப்பு இருந்தது. “அத்தான், இரவு வேளையில் இங்கு ஏன் ஆனந்தி வந்தாள்? அவளுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டா? ஆனந்தியின் உத்தரவுப்படிதான் நீங்கள் திலீபனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைத்தீர்களா? ஐயோ, வேலியே பயிரை அழித்தால்…” என்று கதற ஆரம்பித்தாள். “ஆனந்தி எப்பொழுது ரங்கூனிலிருந்து திரும்பினாள்? ஏன் இன்று இரவு என் அறைக்கு வந்தாள்?” 

“எனக்குத் தெரியாது.” என்று எவ்வளவோ சொல்லியும் சீதா நம்பவில்லை. 

எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ஆனந்தி கொண்டுவந்த நோட்டுப் புத்தகத்தையும், கடிதத்தையும் காட்டி, சீதாவுக்கு என் விஷயத்தில் நம்பிக்கை ஏற்படுத்த நினைத்தேன். ஆனந்தி விட்டுச் சென்ற நோட்டுப் புத்தகத்திலும், கடிதத்திலும், என்ன விஷயம் இருக்கும் என்று எனக்கே தெரியாத நிலையில் அதை அவளிடம் காட்டினால் என்ன விபரீதங்கள் ஏற்படுமோ என்ற பயமும் எழுந்தது. பேசாமல் இருந்துவிட்டேன். நேரே என் அறைக்குள் போய், அந்தப் பருத்த நீண்ட நோட்டுப் புத்தகத்தில் என்னதான் எழுதி இருக்கிறது என்று படிக்க ஆரம்பித்தேன். 


ராமநாதன் தனது வாக்கு மூலத்தை நிறுத்தினான். 

நீதிபதியும் எதிர்த்தரப்பு வக்கீல், ராமநாதன் வக்கீல், மற்றும் அந்த ஜட்ஜ் சேம்பரில் உள்ள சிப்பந்திகளும் ஏதோ ஆல்பிரட் ஹிட்ச்காக் டைரக்ட் செய்த பயங்கரத் திரைப் படத்தைப் பார்த்துவிட்டுத் தியேட்டரை விட்டு வெளிவரும் மக்கள் போல் திகைத்தபடி எதுவும் பேசாமல் இருந்தனர். 

உடனே போலீஸ் தரப்பு வக்கீல், “அந்தப் பருமனான புத்தகத்தையும், லெட்டரையும் நீங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லையா சாட்சியமாக?” என்று கேட்டார். 

“அந்த நீண்ட பருமனான புத்தகம்தான் திலீபனின் டைரி. அந்தக் கடிதம்தான் திலீபன் கடிதம்.” என்று ராமநாதன் கூறினான். 

போலீஸ் தரப்பு வக்கீல். திலீபனின் டைரியையும், கடிதத்தையும் உங்களிடம் எடுத்து வந்து ஆனந்தி ஏன் கொடுக்க வேண்டும்? அதைத் திலீபனிடமே கொடுத்திருக்கலாம். அல்லது எரித்திருக்கலாம். இரண்டையும் விட்டு, தன்னையும் மேஜரையும் குற்றம் சாட்டும் சாட்சியங்களை உங்களிடம் கொண்டு வந்து தருவது ஆச்சரியமாக இல்லை?” என்று ராமநாதனின் பேச்சை நம்பாதவர் போல் கேட்டார். 

ராமநாதனும் புன்னகை புரிந்தபடி, ‘நீங்கள் நினைப்பது போல்தான் நானும் நினைத்தேன். திலீபனின் டைரியைப் படித்து முடித்த பின்புகூடச் சந்தேகம் தீரவில்லை. அப்புறம் திலீபன் எழுதிய நீண்ட கடிதத்தைப் படித்த பின்பு தான் என் சந்தேகம் தீர்ந்தது. இனி கோர்ட்டார் திலீபன் எழுதிய நீண்ட கடிதத்தைப் படிக்கலாம்,” என்று ராமநாதன் கேட்டுக் கொண்டான். 

நீதிபதி கோர்ட் கடியாரத்தைப் பார்த்தார். “நாளைக்குக் காலையில் அந்தக் கடிதத்தைப் படிப்போம். ஆஸ்பத்திரியிலிருந்து ஏதாவது தகவல் தெரிந்ததா?” என்று கேட்டார். 

கோர்ட் சிப்பந்தி, திலீபன் ஆஸ்பத்திரியில் அப்படியே மயங்கிக் கிடக்கிறான் என்றும். ஆனால் அவன் உடல் பூரிப்பையும், பலத்தையும் அடைந்த பின்பும், கண்கள் மட்டும் திறக்கவில்லை என்றும் சொன்னான். 

ஜட்ஜ், கோர்ட்டாரின் அனுமதியின்றித் திலீபனை யாரும் நெருங்கக் கூடாதென்ற உத்தரவை டாக்டர் சண்முகசுந்தரத்திற்குத் தெரிவித்துவிட்டு, எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டார். 

ராமநாதன் மறுபடியும் விசாரணைக் கைதிகளின் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். 


அன்றிரவு, பல்லாவரத்தில் ஒரு பாழடைந்த வீட்டின் ஒரு பகுதியில் மேஜர் மாயநாதன் குழம்பிப் போன மனத்தோடு உட்கார்ந்திருந் தார். 

அவர் எதிரே ஒரு கட்டிலில் துணி மூட்டைபோல் ஆனந்தி கிடந்தாள். மேஜர் எழுந்து வந்து, ஆனந்தியின் அருகில் நின்றார். அவளைக் குனிந்து பார்த்தார். பிறகு மல்லிகைப் பூவைப் பந்துகளாக எடுத்து வந்து, ஆனந்தியின் மீது போட்டார். பிறகு வீணையை எடுத்து வந்து உட்கார்ந்து வாசித்தார். அரை மணி நேரத்துக்கு வீணையின் நாதம் ஏதோ ஊளையிடுவது போல் ஒலித்தது. மேஜர் மறுபடியும் எழுந்து ஆனந்தியைப் பார்த்தார். ஆனந்தி அப்படியே மயங்கிக் கிடந்தாள். மேஜர் கவலையோடு நின்றார். தான் நடத்திய சோதனையில் தோல்வி அடைந்தவர் போல் தோற்றமளித்தார். மேஜர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்: “ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும்! நான் நினைப்பது ஒன்றும் நடக்கவில்லையே!” 

ஆத்திரத்தோடு அறையைப் பூட்டிக் கொண்டு சென்றார் மேஜர். அவர் அறையைப் பூட்டிச் சென்ற சில வினாடிகளுக்கு நிசப்தம் நிலவியது.

அத்தியாயம்-45

பின்பு, துணி போல் கட்டிலில்  உணர்வற்றுக் கிடந்த ஆனந்தி எழுந்திருந்தாள். தன்னைச் சுற்றிக் கிடக்கும் மல்லிகைப் பூக் களைப் பயத்தோடு பார்த்தாள். அங்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த வீணையைக் கண்டாள். பெருமூச்சு விட்டு ஏங்கினாள். ‘இந்த வீணை மட்டும் என் கையில் கிடைத்தால், நான் மட்டும் இந்த வீணையோடு ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!’ 

மேஜர் மாயநாதன் அறையை நோக்கி வரும் காலடிச் சத்தம் கேட்டவுடன் மறுபடியும் படுக்கையில் படுத்தாள். மல்லிகைப் பூச்சரங்களைத் தன் உடல் மீது எடுத்துப் போட்டுக் கொண்டாள். மேஜர், அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும், ஆனந்தியைப் பார்த்தார் ஒரு சவுக்கை எடுத்து நான்கு ஐந்து முறை அடித்தார். படுக்கையில் கிடந்த ஆனந்தி அசையவில்லை. பிறகு, அவர் திருப்தியோடு, “ஆனந்தி!” என்று அழைத்தார். 

ஆனந்தி தூக்கத்தில் எழுந்திருப்பவள்போல் எழுந்திருந்தாள். மெள்ள, கண்களை மூடியபடியே நடக்க ஆரம்பித்தாள். 

மேஜர், “நில்!” என்றார் ஆனந்தி அப்படியே நின்றாள். 

மேஜர். ”உன் உடலையும் வைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவனையும் வைத்துக் கொள்ள நினைத்தேன். அது முடியாமல் போய் விட்டது. அதனால் உன் மீது பெட்ரோல் தெளித்து உன்னைத் தீக்கிரையாக்கப் போகிறேன். நெருப்பு உன்னைச் சுடாது. உனக்கு வலி தெரியாது. உன் உடல் மட்டும்தான் எரிந்து போகும். நீ கூச்சலிடாதே. அப்படியே தூக்கத்திலிரு. ஹிப்நாடிக் தூக்கத்தில் இருக்கப் போகிறாய்”, என்று கையை ஆனந்தியின் முகத்தின் முன் அசைத்தார். 

ஆனந்தி. “சரி”, என்று சொல்லிவிட்டு, கண்களை மூடியபடி இருந்தாள். மேஜர் ஆனந்தியை அப்படியே விட்டுவிட்டுத் திரும்பினார். பாவம்! ஆனந்தி ஹிப்நாடிக் தூக்கத்தில் இருக்கிறாள் என்று நினைத்தார். எவ்வளவோ முறை மல்லிகைப் பூவாடையும், வீணையின் நாதமும், சக்தி வாய்ந்த மேஜரின் கண்களும் ஆனந்தியை ஹிப்நாடிக் மயக்கத்தில் ஆழ்த்தி அவளை, அவர் கைப்பொம்மையாக ஆக்கி இருக்கின்றன. 

இந்த முறை ஆனந்தி கபடமாக ஹிப்நாடிக் மயக்கத்தில் இருப்பதுபோல் நடிக்கிறாள் என்பதை அவர் உணரவில்லை. மேஜர் அந்த அறைக் கதவை நெருங்கியதும் திடீரென்று அவருக்குச் சந்தேகம் வந்தது. ஆனந்தி உண்மையிலேயே உடல் உணர்வற்றுத்தான் இருக்கிறாளா அல்லது நடிப்பா என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றியது. அறைக் கதவின் பக்கத்தில் நின்றபடி பார்த்தார். அவள் கண்களை மூடியபடி கைகளை விரித்தபடி ஒரு மெழுகுச் சிலை போல் நின்றாள். மேஜர் அவள் மனத்தில் உள்ள எண்ணங்களைத் தன் மனத்துக்கு இழுக்கக்கூடிய திறமை உடையவர். ஆகையால், தன்னுடைய அறிவை, ஆனந்தியின் அறிவுக்கு மனோவசிய முறைப்படி ‘ட்யூன்’ செய்தார். அவளை உற்றுப் பார்த்தபடியே அவளை நெருங்கினார். அவள் உண்மையிலேயே மயக்கத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டவுடன் ஆத்திரத்துடன் நெருங்கினார். 

“என்னிடமே நீ கற்ற வித்தையைப் பதம் பார்க்கிறாயா? நீ என்ன முயன்றாலும் நான் சீதாவையும் அவள் சொத்தையும் அடையாமல் விடமாட்டேன்” என்று மேஜர் சொல்லி முடிப்பதற்குள், ஆனந்தி அவர் மீது பாய்ந்தாள். பக்கத்தில் உள்ள தடியால் அவர் தலையில் அடித்தாள். உடனே ஓடிப்போய் ஒரு கறுப்புத் துணியால் அவர் கண்களைக் கட்டினாள். அவர் கைகளைப் பின்புறமாகப் பிணைத்தாள். அவர் வாயில் ஒரு பூண்டுப் பொட்டலத்தை அடைத்துவிட்டுப் பிறகு, ஒரு பாட்டிலை எடுத்து அவர் நாசிக்கு முன் பிடித்தாள். அந்த பாட்டிலில் இருந்து கிளம்பிய ஒருவிதப் புகை மேஜருக்கு ஒருவித மயக்கத்தைக் கொடுத்து அவரைச் செயலற்றபடி ஆக்கிவிட்டது. ஆனந்தி அந்த வீணை, மல்லிகைப் பூச்சரங்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள். 

ஆனந்தியின் நோக்கமெல்லாம் திலீபன் மயங்கிக் கிடக்கும் ஆஸ்பத்திரியை அடையவேண்டும் என்பதுதான். 


மறுநாள் ஜட்ஜ் மணிவாசகம் பிள்ளையின் அறையில் கூடியதும், ராமநாதன் காலம் தாழ்த்திக் கோர்ட்டுக்குக் கொண்டுவரப்பட்டான். திலீபன் எழுதிய கடிதத்தைக் கோர்ட் கிளார்க்கை விட்டு வாசிக்கச் சொன்னார் நீதிபதி. குமாஸ்தா கடிதத்தைப் படிக்கலானார். 


என்னுடைய டைரியைப் படித்தபோது சில விஷயங்கள் உனக்கு விளங்கியிருக்கும். சில விஷயங்கள் பாதி விளங்கியிருக்கும். இன்னும் பல விஷயங்கள் விளங்காமலே இருந்திருக்கும். எனக்கே எல்லா விஷயங்களும் புரிந்துவிட்டன என்று என்னால் சொல்ல முடியாது. 

நான் கூறப் போகும் விஷயங்களை உன்னால் நம்ப முடியாது. யாராலும் நம்பமுடியாது. அதனால் தான் நான் எவ்வளவோ முறை உன்னைச் சந்தித்தபோது, நான் மாட் டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உன்னிடம் விளக்கிச் சொல்ல வேண் டுமென்று துடியாய்த் துடித்தேன். என்னுடைய கஷ்டம் ஒழுங்கான, முறையான நம்பும்படியான கஷ்டமாய் இருந்தால் அதை விளக்கிக் கூறலாம். என் சிக்கலை நானே விலக்கிக் கொள்ளவேண்டுமென்று, என் பிரசினையை நானேதான் தீர்க்க வேண்டுமென்ற நினைப்பில்தான் இது நாள்வரை நாள்வரை பேசாமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறிவிட்டது. 

ஆனந்தியும் மேஜரும் ரங்கூன் சென்றுவிட்டார்கள். அவர்கள் வலையிலிருந்து தப்பிவிட்டோம். பணம் கொடுத்து அவர்களை ஒதுக்கி விட்டோம் என்ற நினைப்பில்தான் நான் எல்லாவற்றையும் மறந்திருந்தேன். ஆனால், அன்று சமுத்திரத்தில் நீயும் நானும் குளிக்கச் சென்ற போது, அந்தக் காரியத் தகடு அலையில் அடித்துச் செல்லப்பட்டது உனக்கு ஞாபகமிருக்கும். அதை இழந்த பின்பு, நான் மிக்க கவலை அடைந்ததும், உனக்கு ஞாபகம் இருக் கும். சாதாரண தகடு. அதுவும் தங்கத் தகடு அல்ல. வெள்ளித் தகடு அல்ல. காரீயத் தகடு. அதை இழந்ததனால் திலீபன் இவ்வளவு வருந்துவானேன் என்று நீ நினைத்திருப்பாய். மின்சார நிலையத்தில் வேலை செய்யும் ஒருவனுக்கு ரப்பர் செருப்புக்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாய் எனக்கு அந்தக் காரீயத் தகடு இருந்தது. 

ரயில் வண்டிப் பெட்டிகளை இழுத்துச் செல்லும் மின்சாரம், அறையைக் குளிரச் செய்யும் மின்சாரம், தண்ணீரைக் காய்ச்சும் மின்சாரம். சாதாரண ரப்பர் முன்பு பதுங்கித் தயங்கிவிடுவது ஆச்சரியமில்லையா? மின்சாரத்தின் இயற்கையை, அதன் சட்ட திட்டங்களைப் புரிந்துகொண்ட விஞ்ஞான அறிவுள்ள நாம், மின்சாரம் ரப்பரில் பாயாது, மரத்தில் பாயாது என்று பள்ளியில் படித்திருப்பதனால், அந்த ஆச்சரியத்தை நாம் ஆராய்வதில்லை. மின்சாரத்தின் விளைவுகளாகிய வெளிச்சம் விளக்குள், காற்றாடிகள், அடுப்புக்கள் எல்லாவற்றையும் கண்ணால் பார்க்கிறோம். ஆனால் மின்சாரம் என்ற சக்தியை யாரும் கண்ணால் பார்த்ததில்லை. இடி இடிக்கும்போது கூட அதன் ஒளியையும் அதன் ஒலியையும் உணர்கிறோமே அல்லாது அதன் உண்மை உருவத்தை நாம் உணர்வது இல்லை. ஆண்டவன் போல் அதுவும் மர்மமாகவே இருக்கிறது. அதுபோல்தான் நம்மைச் சுற்றியுள்ள பல சக்திகளும், என் வாழ்வைச் சூழ்ந்து அதன் திசையை மாற்றி நரகமாக்கிய ஒரு சக்தியும் இம்மாதிரியே. 

மனத்தைப் பற்றி, மனவசியத்தைப் பற்றிப் பல நூல்கள் படித்துத் தேர்ந்த எனக்குகூட ஒன்றும் முழுமையாகப் புரியவில்லை. மேஜர், ஆனந்தி இருவரும்கூட, எல்லாம் புரிந்துதான் அந்தப் பயங்கர சாதனைகளைச் செய்து வந்திருக்கிறார்களா என்று என்னால் சொல்ல முடியவில்லை. அந்தப் பயங்கர சக்திக்கும் சில தடைகள், தடுப்புக்கள் இருக்கின்றன என்பதையே நான் எதேச்சையாகத்தான் புரிந்துகொண்டேன். நான் இழந்த காரீயத் தகடு, சாதாரண உள்ளிப் பூண்டு இவைகளுக்கு உள்ள வலிமையை நினைக்கும்போது மின்சாரத்தைப் பொறுத்தவரையில், மரப் பலகை, ரப்பர் செருப்பு இவைகளுக்கு உள்ள பலம்தான் எனக்கு ஞாபகம் வருகிறது. 

நான் இனிமேல் கூறப் போவதை நீ நம்பினாலும் சரி, நம்பா விட்டாலும் சரி. நான் எழுதுவதை கவனமாகப் படித்து வைத்துக்கொள். என்னைப் புத்தி சரியில்லாதவன் என்று நினைக்காதே. இதுவரை உனக்கு முன்னால் நான் இரண்டுவித மனிதனாக மாறிமாறிக் காட்சியளித்திருக்கிறேன். அதனால் நீ என்னைப் பற்றி எதையும் நம்பக்கூடாது என்ற நிலைக்கு வந்திருப்பாய். ஆனால் இன்று இந்தக் கடிதம் எழுதும் கை திலீபனுடைய கை. உன் நலத்துக்காக, உன் சீதாவின் நலத்துக்காக ஏங்கி நிற்கும் திலீபனின் உண்மையான, குழப்பமில்லாத கடிதம் இது.

மற்றவர்களுக்கு ஏற்படாத சோதனைகள் எனக்கு மட்டும் ஏற்படுவானேன் என்று கேட்கலாம். அதற்குக் காரணம் ஒன்று என் இயற்கை. மனம் என்ற துள்ளும் மாயையின் ரகசியங்களைக் கண்டு கொள்ளத் துடித்த என்னுடைய ஆர்வம்தான் இம்மாதிரிப் புத்தகங்களைத் தேடிப்படிக்கச் செய்தது. வெகு காலமாகவே நான் இம்மாதிரி மந்திரப் புஸ்தகங்களின் சாதனைகளில் ஈடுபட்டிருந்தேன். அதற்குக் காரணம் ஓரளவுக்கு நம் தந்தைதான். நம் தந்தையின் கடைசிக் காலத்தில் அவர் எதையோ நினைத்து நினைத்துப் பயந்து மிரண்டிருந்தார். அவர் சாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேளையில் என்னைக் கூப்பிட்டு, “கதவைத் திறந்து பார். தெருவில் யாராவது நிற்கிறார்களா?” என்று சொன்னார். கதவைத் திறந்து பார்த்தேன். தெரு காலியாக இருந்தது. ஒருவருமில்லை என்று சொன்னேன். அப்பாவே, ‘மல்லிகை வாடை வீசுகிறது. அவளாகத்தான் இருக்கும். அவளாகத்தான் இருக்கும்’, என்று பலமுறை சொன்னார். ‘அவள் என்றால் யாரப்பா? மல்லிகை வாடைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டேன். என் முகத்தை ஒருமுறை பார்த்தார். பிறகு வேறுபக்கம் திரும்பியபடி சொன்னார். ‘அதிக ஆசை வைக்கும் பெண்கள் அழிவதுமில்லை, அவர்களின் ஆசையும் அழிவதில்லை. அவளால் என்னைப் பழிவாங்க முடியவில்லை. நான் இறந்துவிடுவேன். நீ ஜாக்கிரதையாக இருந்து கொள்’, என்று சொன்னார். பிறகு அவருக்கு ஞாபகம் தப்பிவிட்டது. 

அவர் இறந்த பின்புதான் நான் அவர் வைத்திருந்த நோட்டுப் புத்தகம், யந்திரங்கள், ரட்சைகளைப் பார்த்தேன். மயங்கிக்கிடந்த அவருக்கு மரண தினத்தன்று காலையில் பதினைந்து வினாடிகளுக்கு ஞாபகம் திரும்பி வந்தது. அப்போது அம்மாவைக் கூப்பிட்டு இதுநாள் வரை செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். உனக்குத் தந்தி கொடுத்து வரவழைக்கச் சொன்னார்.

– தொடரும்…

– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *