இது என் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 51,657 
 
 

“ஹேய் தேவி நீ வேணும்னா பாரு அம்மா உன் பிறந்தநாள் அதுவுமா தான் போய் சேரும் போல”.

“வேணாம்டி மதி வாய வச்சுக்கிட்டு சும்மா இரு, நான் என் பிறந்தநாளை காலத்துக்கும் கொண்டாட முடியாம போயிடும்டி”.

“ஏய் பெரியம்மா ரெண்டு நாளில் என் பிறந்தநாள் வருது அன்னைக்கு பார்த்து நீ போய் சேர்ந்த அவளோ தான் பார்த்துக்க” என்று இழுத்துக் கொண்டிருந்த தன் பெரியம்மாவை நோக்கிக் கூறினாள் தேவி.

அனைவரும் ஒவ்வொருவராக சீதேவிக்கு பால் கொடுக்க, தொண்டைக்குழி மேலும் கீழுமாக துடித்து நான் உயிர்ப்புடன் இருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

திடீரென எங்கிருந்து வந்த யோசனையோ ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்து தன் அம்மா கையில் மதி கொடுக்க சட்டென்று சீதேவி அதை வாங்கிய கணம் அவர் வாயில் இருந்து பால் கொட்டியது, துடித்துக் கொண்டிருந்த தொண்டையும் நிரந்தர ஓய்வெடுத்தது.

நீண்ட நாட்கள் தைராய்டு மற்றும் சர்க்கரை வியாதி காரணமாக படுக்கையில் இருந்த சீதேவியின் மரணம் அவர்கள் குடும்பத்திற்கு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், அதை விட அவர் பிணியில் இருந்து விடுபட்ட நிம்மதியயே மேலோங்கி இருந்தது.

சீதேவி கல்லையும் காசாக்கும் வித்தைக் காரி. தனது வாய் பலத்தால் எவ்விடத்திலும் சம்பாரிக்கும் திறமைசாலி. ஒரு விஷயத்தை முடித்தே தீர வேண்டும் என்று நினைத்துவிட்டால் அதற்கு எவ்வளவு செலவாயினும் அதற்கான பணத்தை சம்பாதித்து அதை முடித்து விடுவார். அவர் அப்படி தொடங்கிய வீடு தான் இன்று அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் இந்த புதிய மனை.

அவர் வீட்டை கட்டிமுடித்த கணமே அவர் அதில் குடி கொள்ளும் முன் அத்தனை வியாதியும் அவரில் குடி கொண்டது.

சீதேவியின் இறப்பு சொந்த பந்தங்கள் அனைவருக்கும் சொல்லி அனுப்பப்பட்டது. மேலும் பந்தல் போடுபவர், தாரை தப்பட்டை, உடலை வைக்கும் பதனப் பெட்டி, இறுதி சடங்கு செய்பவர்கள், ஒப்பாரி பாடுபவர்கள் மற்றும் ஒப்பனைக் காரர்கள் என அனைவருக்கும் சொல்லப்பட்டு அவரது பூத உடல் வீட்டின் நடுவே பெரிய மர பெஞ்சில் கிடத்தப்பட்டது.

தேவி பெரியம்மா தலைமாட்டில் சிமிழி யை ஏற்ற அது சட்டென அடுத்த நொடியில் அமர்ந்தது. சரி மீண்டும் ஏற்றலாம் என் இரண்டாவது முறை ஏற்ற மீண்டும் அமர்ந்தது. உடனே தேவி பயந்தவாறு மதியை நோக்க.

“அடச்சீ இங்க தா, ஓரமா போடி” என்று தீப்பெட்டியை வாங்கி ஒருமுறை சிமிழியை எடுத்து அசைத்துப் பார்த்தால் அதில் நிறைய மண்ணெண்ணெய் இருந்தது. சிறிது திரியை நன்றாக வெளியே வரவிட்டு பற்றவைத்தவள் உடனே திரும்பி எப்படி என்பது போல் நக்கலாக தேவியை நோக்க தேவியோ மரண பீதியில் விளக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆம் மீண்டும் விளக்கு அமர்ந்தது.

மதி மீண்டும் அடுத்த குச்சியை உரச டம்மென சிமிழி விளக்கு கீழே விழுந்து விளக்கின் மேல் கண்ணாடி உடைந்து சிதறியது. திடீரென வானம் இருண்டு பயங்கர காற்று வீசத் தொடங்கியதும் மொத்த குடும்பமும் பதறியது. வாசலின் மதிலில் இருந்த மண் பூத்தொட்டிகள் மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக சட் சட்டென விழுந்து நொறுங்கியது.

சீதேவியின் மகன் வினோத் எதையும் பெரிதாக பொருட்படுத்தாது “அட என்ன எல்லாரும் பெருசா ஷாக் ஆன எஃபெக்ட் குடிக்குறீங்க, அதெல்லாம் ஒன்னும் கிடையாது” என்று தனது தாயின் கையில் இருந்த இரண்டாயிரம் ரூபாயைத் தொட டமாரென அந்த அறையில் இருந்த குழல் விளக்கு வெடித்து. சட்டென ரூபாய் நோட்டில் இருந்து கையை எடுத்துவிட்டு நடுக்கத்தில் இரண்டடி பின்னே சென்றான் வினோத்.

மொத்த குடும்பமும் ஒன்றாகக் கூடி வீட்டின் ஒரு மூலையில் நிற்க, வீட்டின் வெளியே ஒரு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வண்டியில் இருந்து ஒருவன் கீழே இறங்கி அண்ணன் யாரும் இருக்கீங்களா என்றான். பிறகு சாவு வீடு இதுதானா என்று அக்கம் பக்கம் கேட்டுவிட்டு வீட்டினுள் வந்தான். “அண்ணன் ஐஸ் பெட்டியை எங்க இறக்கட்டும்” என்று கேட்க யாரும் பதில் சொல்லாமல் அனைவரும் விழி பிதுங்க சீதேவியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அண்ணன்” என்று மீண்டும் அவன் குரல் கொடுக்க நினைவுக்கு வந்த வினோத் “வா பா சொல்லு” என்றான்.

“அண்ணன் ஐஸ் பெட்டியை எங்க இறக்கட்டும்னு கேட்டேன். சொன்னா நான் இறக்கி வச்சுட்டு செட் பண்ணி குடுத்துட்டு போயிடுவேன்” என்றான்.

“தம்பி இங்க வேணாம் வெளிய பால்கனியில் இறக்கிடுங்க” என்றான் வினோத்.

பதனப் பேழையை துருத்துமாடத்தில் இறக்கி வைத்துவிட்டு “அண்ணன் எப்போ அம்மாவை எடுக்குறீங்க” என்றான்.

“நாளை காலை ஒன்பது மணிக்கு தம்பி” என்று வினோத் சொல்லிய நொடி பால்கனியில் இருந்த ஒரு குழல் விளக்கு வெட்டிது சிதறியது.

வீட்டினுள் இருந்த மொத்த குடும்பமும் வெளியே ஓடி வந்தனர். பெட்டியை இறக்கி வைத்தவன் “என்னணே ஆச்சு” என்று கேட்டான்.

“தம்பி நல்லா இருப்ப நீ முதலில் கிளம்பு. நாளை 10 மணிக்கு வந்து உன் பெட்டியை எடுத்துக்க” என்றான்.

“அண்ணன் ஓவர் வோல்டேஜ் ஆக இருக்கும்ணே நம்ம எலக்ட்ரீஷியன் தம்பிய வரச் சொல்லவா அண்ணன்” என்று கேட்டான்.

“டேய் நீ இப்போ போகாட்டி இன்னைக்கு இங்க இன்னொரு பெட்டி எடுத்துட்டு வர வேண்டி இருக்கும் டா” என்றான் வினோத்.

உடனே அவன் அங்கிருந்து புறப்பட்டான்.

வினோத் உடனடியாக ஒரு இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தன் நண்பன் ரமேஷிற்கு கால் செய்தான்.

“சொல்லு மச்சி” என்றான் ரமேஷ்.

“டேய் மச்சான் அம்மா தவறிட்டாங்க கொஞ்சம் இங்க வாடா” என்றான்.

“என்ன மச்சான் சொல்ற, இதோ பக்கத்தில் தான் இருக்கேன் வரேன்” என்றான்.

ரமேஷ் வந்ததும் “டேய் மச்சான் இந்தா இந்த இரண்டாயிரத்துக்கும் பேங்கில் போய் பத்து ரூபாய் நோட்டாக மாத்திக்க, அப்படியே மாத்திட்டு இந்த படத்தை பாலு படக்கடை காரரிடம் கொடுத்து ஒரு பெரிய ஃப்ரேம் போட சொல்லு, அப்படியே நீ மாற்றும் பத்து ரூபாயில் ஒரு முப்பது தாளை அவரிடம் கொடுத்து, ஃப்ரம் முழுக்க பணத்தால் ஒப்பனை பண்ண சொல்லு. மிச்ச காசை இங்க எடுத்துட்டு வா மாலை செய்யணும்” என்றான்.

“சரி டா மச்சான்” என்றான் ரமேஷ்.

“டேய் திரும்ப சொல்றேன் அந்த காசில் வேறு எதுவும் பண்ணிடாத மச்சான். இங்க நிலமை சரி இல்ல, எதுவும் சொல்லுறதுக்கு இல்ல. நான் உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன் இதை முடிச்சுட்டு வா மத்தது எல்லாம் நான் சிறப்பா நிதானமா கவனிக்குறேன்” என்று தன் நண்பனுக்கு புரியும் பாஷையில் சைகையோடு சொல்லி அனுப்பினான்.

“ஓகே மச்சான் டன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் ரமேஷ்.

உடனே பாலு படக்கடைக்கு கால் செய்து “மாமா ரமேஷ் வருவான், அம்மா ஓட படம் கொடுத்து விட்டிருக்கேன். கொஞ்சம் பணம் கொடுப்பான், ஃப்ரேம் முழுக்க அந்த காசை வைத்து ஒப்பனை பண்ணிடுங்க மாமா. எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க நான் படத்தை வாங்குற அப்போ காசு கொடுத்து வாங்கிக்கிறேன். முடிஞ்சா இன்னைக்கே முடிச்சு தந்துடுங்க” என்றான்.

“அதுக்கென்ன தம்பி காசெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், ஒரு மூனு மணி நேரத்தில் வேலையை முடிச்சுட சொல்றேன் பசங்கட்ட” என்றார்.

“சரி மாமா ரொம்ப நல்லது”என்று கூறி இணைப்பைத் துண்டித்தான்.

அனைத்து வேலைகளும் வெளியில் மும்மரமாக நடந்து கொண்டிருக்க, பணத்தை எடுத்துக் கொண்டு வந்தான் ரமேஷ். உடனே அந்த பணத்தை தேவியிடம் கொடுத்து ஒரு பெரிய பண மாலையும், ஒரு சிறிய பண மாலையும் கட்டச் சொன்னான்.

பெரிய மாலையைக் கட்டி முடித்ததும் அதை எடுத்து சீதேவி கழுத்தில் போட்டு, ரமேஷ் அம்மா காலைப் பிடி என்றான். ஒருவழியாக உடலை எடுத்துவந்து அந்த பெட்டியில் வைத்தான் வினோத்.

“டேய் மச்சான் அம்மா கையில் இரண்டாயிரம் ரூபாய் டா” என்றான் ரமேஷ்.

உடனே வினோத் தனது பாக்கெட்டில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து “இந்தா மச்சான் இதுவும் இரண்டாயிரம் தான் வச்சுக்க, நல்லா இருப்ப கொஞ்ச நேரம் அமைதியா இருடா” என்றான்.

சற்று நேரத்தில் சீதேவியின் படம் வரவே உடனே அதை வாங்கிக் கொண்டு வீட்டினுள் சென்று தன் தாயின் அறைக்குள் படத்தை மாட்டிவிட்டு, அதில் அந்த கட்டச் சொன்ன சிறிய பண மாலையைப் போட்டான். அந்த அறையை மூடிவிட்டு, அந்த அறையின் மூன்று சாவியையும் தனது சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

அன்றைய இரவு மிகவும் அமைதியாக எந்த அசம்பாவிதமும் இன்றி முடிந்தது. மறுநாள் காலை எல்லா சடங்குகளையும் முடித்துவிட்டு சனிக் கிழமை என்பதால் ஒரு கோழி ஒன்று வாங்கி அமரர் ஊர்தியில் கட்டப்பட்டு சீதேவியின் உடல் அமர சிம்மாசனத்தில் கிடத்தப்பட்டு பட்டாசு வெடிக்க இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இன்றும் நீங்கள் அந்த அறையின் அருகில் சென்று கூர்ந்து கவனித்தால் பணம் எண்ணும் சத்தத்தைக் கேட்கலாம்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *