”பந்தய நாள் நெருங்க நெருங்க முனியாண்டிக்குத் துணிச்சலும், தைரியமும் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பெருகிக் கொண்டு வந்தன. ஆனால், மன விளிம்பில் இனம் புரியாமல் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் பயச் சலனத்தை அடக்க முடியவில்லை. அந்தச் சலனம் அவனுடைய சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. வென்று விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து கொண்டிருந்தது.
ஆயிற்று! அமாவாசைக்கு இன்னும் மூன்றே நாட்கள் இருந்தன. பூந்துறை கிராமம் முழுவதும், அந்தப் பந்தயத்தின் முடிவை எதிர் நோக்கிக் காத்திருந்தது என்றால், அதில் சற்றளவும் வியப்பிற்கு இடமே இல்லை. இருந்தாலும் ஒன்று மட்டும் உண்மை – பந்தயத்தின் முடிவு பந்தயம் போட்ட முனியாண்டிக்கு வெற்றியாக இருக்காது; ஏன்? இருக்கவே கூடாது என்பது கிராமத்தின் ஏகோபித்த விருப்பம். ஏனென்ற கேள்வியை எழுப்பினால், முனியாண்டியின் பந்தயம் அத்தகைய முறையில் அமைந்திருந்தது. கிராம மக்களின் தலைமுறை தலைமுறையான நம்பிக்கையைத் தகர்த்து எறிவதாக இருந்தது அவன் பந்தயம். அவன் வெற்றி அவர்கள் நம்பிக்கையைப் பாதித்தது. அந்தப் பாதகம் ஏற்படுவதை அவர்களால் ஒரு போதும் பொறுக்க முடியாது.
ஊறிப் போன பழைய எண்ணங்களை உடனடியாக விலக்குவது என்பது அவ்வளவு எளிய காரியமல்ல. பலருடைய ஒன்று சேர்ந்த நம்பிக்கை ஒரு தனி மனிதனால் எள்ளப்படுவதை எப்படிச் சமூகமாகிய அந்தப் பலர் பொறுப்பார்கள்? எனவே, முனியாண்டிக்கு வெற்றி கிடைத்து விடுமோ என்ற சந்தேகத்தைக் கூடத் தங்கள் மனத்தில் தோன்ற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தனர். நண்பர் திருவடியா பிள்ளை இவ்வாறு கூறி விட்டுப் பொடி மட்டையை அவிழ்த்தார். “அது என்ன ஐயா? அப்படி ஆச்சரியமான பந்தயம்” நான் வியப்புத் தாங்க முடியாமல் கேட்டேன். “அதைத்தானே சொல்லப் போகிறேன்” என்று ஆரம்பித்தார் நண்பர்.
எனக்கு ஞாயிற்றுக் கிழமைப் பொழுதுபோக்குச் சாதனம் பிள்ளை அவர்தான். இதோ பொடி மட்டையை உள்ளே சொருகிக் கொண்டு அவர் கனைத்த வண்ணம் கதையைத் தொடங்கி விட்டார். பிலாவடியார் கோவில் மகிழ மரம் என்றால், பூந்துறையில் அழுத பிள்ளை வாய் மூடும். பரந்து விரிந்த அந்த வயதான மகிழ மரத்தடியில் கோவில் கொண்டிருக்கும் பிலாவடிக் கருப்பண்ண சாமிக்குக் கூட அவ்வளவு ஆற்றல் இருந்ததாகச் சொல்வதற்கில்லை. பொழுது சாய்வதற்கு ஆரம்பித்து விட்டால் போதும், உயிருக்கு ஆசையுள்ளவர்கள் பிலாவடியார் கோவில் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டார்கள். யட்சிணிகளுக்கும், மோகினி தேவதைகளுக்கும் அந்த மரம் இருப்பிடம். என்பது கர்ண பரம்பரையாக அந்த ஊர் அறிந்து வந்த உண்மை. வருடத்தில் ஒருவராவது அந்த மரத்தடியில் பலியாகத் தவறினதே இல்லை. போன ஆனி மாசம் மாலை மயங்கும் நேரத்தில் அதே இடத்தில் ரத்தம் கக்கிச் செத்த சின்னக்கருப்பனை ஊரார் மறந்துவிட முடியுமா என்ன? இப்படிப் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பரம்பரை நம்பிக்கையாலும் பிரத்யட்சத்தாலும் உண்மையான ஒன்றை இந்த நேற்றுப் பயல் முனியாண்டி நாலு கோணல் எழுத்தைப் படித்துவிட்டு மறுப்பதைச் சகிக்க முடியுமா என்ன? இதையெல்லாம்விட இயற்கையாகவே பிலாவடியார் கோவில் அமைந்திருந்த இடம் இருட்டின பிறகு போவதற்கு வசதியற்றது. இந்த நம்பிக்கை வேறு முனியாண்டிக்குத் தோல்வி என்று அவர்கள் கருத இடங் கொடுத்துக் கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் காரணமான அந்தப் பிலாவடியார் கோயில் அமைந்திருக்கும் விதத்தைச் சற்றுத் தெரிந்து கொள்ளவேண்டும்.
கிழக்கு நோக்கி மேல் கீழாக அமைந்த பூந்துறை கிராமம் மூன்று புறங்களிலும் குன்றுகளால் சூழப்பட்டு இருந்தது. ஊரைச் சுற்றி முத்தாரம் இட்டது போல் சிற்றாறு ஒன்று இரண்டாகப் பிரிந்து ஒடிக் கொண்டிருந்தது. இந்தச் சிற்றாறு மேற்கேயுள்ள குன்றில் உற்பத்தியாகிறது. அது பின் இரண்டாகப் பிரிந்து ஊருக்குத் தென்பகுதியில் ஒன்றும், வடபகுதியில் ஒன்றுமாகப் பாய்கிறது. இந்த ஆறு உற்பத்தியாகுமிடத்தை ஒட்டித்தான் பிலாவடியார் கோவில் அமைந்திருக்கிறது. மலைச் சரிவில் அடர்த்தியான மரக் கூட்டத்திற்கிடையே இருந்த அந்த இடத்தில் பகற்பொழுதில் வெய்யிலே நுழைய முடியாது. ஊரிலிருந்து அதற்கு ஒரு ஒற்றையடிப்பாதை உண்டு. அந்தப் பாதையின் முற்பகுதி ஒழியப் பின்னுள்ள வழி முழுவதும் அடர்த்தியான காட்டுக்கிடையே செல்லக் கூடியது. அந்த ஒற்றையடிப் பாதையை விட்டு விலகாமல் நேரே சென்றால் மூன்று மைல்களில் பிலாவடியார் கோவிலுக்கு வந்து சேரலாம். காட்டுச் சிள்வண்டுகளின் ‘கீஇஇ…’ என்ற ரீங்கார சப்தம் இடை விடாது ஒலிக்கும். அந்த சப்தத்தை வெற்றி கொள்வது போல் சோவென்ற இரைச்சலுடன் முப்பது அடி உயரத்திலிருந்து அருவி ஒன்று விழுந்து கொண்டிருக்கும். கோவிலுக்குப் பின்புறம் அமைந்திருந்த மலைப் பிளவிலிருந்து விழும் இந்த நீர் வீழ்ச்சியின் தண்ணீர்தான் ஊருக்குள் ஆறாக ஒடுவது. அருவி விழும் பள்ளத்தை அடுத்துச் சிறிது சம அளவான தரைப்பகுதி இருந்தது.அதன் நடுவில் ஒரு பெரிய மகிழமரம் கொப்பும் கிளையுமாக விரிந்து படர்ந்திருந்தது.காலை நேரத்தில் அந்த இடத்திற்கு வந்தால் ஒரே மகிழம்பூ மணம் மூக்கைத் துளைக்கும்.மகிழ மரத்தை ஒட்டி எப்போதோ கட்டப்பட்ட ஒரு சிறு கோவில் மதிலோடு உராய்ந்துகொண்டு வளர்ந்திருந்த ஒரு முதிர்ந்த பலாமரம். இவ்வளவுதான் குறிப்பிடத்தக்கவை.
எப்பொழுதாவது கூட்டமாகச் சாமி கும்பிட வருகிறவர்கள் அடுப்பு வைத்துக் கரியேறிய குண்டுக் கற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடக்கும். தரையில் மகிழம்பூ திரட்டுவாரற்று உதிர்ந்து கிடக்கும்.அதைத் திரட்டவோ, மூக்கில் நுகரவோ தலையிற் சூடவோ கூடாது என்பது அந்தப் பக்கத்து நியதி. யட்சிணி மோகினிகள் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது அவர்கள் பயம் ஒரு சமயம் கிராம மக்கள் சொல்வதைக் கேலிசெய்த பாரஸ்ட் ரேஞ்சு ஆபீஸர் முருகப்ப முதலியார் அனுபவித்த கஷ்டத்தை இப்பொழுதும் மேற்கோளாக எடுத்துச் சொல்வார்கள் அப்போதுதான் கணவன் வீட்டிலிருந்து வயிறும் பிள்ளையுமாக வந்த முதலியார் மகள் அப்பா கொடுத்த மகிழம்பூவை விஷயம் தெரியாமல் வைத்துக்கொண்டாள். நிறைமாசம். பெண் குழந்தை பிறந்தது,வளர்ந்தது. இதோ இன்றைக்கு எட்டு வயசு தலையில் மயிரே முளைக்கவில்லை. வழுக்கை, இப்படியாகப் பல பல செய்திகள்.
இருந்தும் முனியாண்டி தளரவில்லை. ஒப்புக்கொண்டு விட்டான். முதலில் இந்தப் பந்தயம் போடவேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டது என்பதைக் காண்போம்.
சர்வ சாதாரணமாக ஆரம்பித்த தகராறு,பேச்சு முற்றிப் பந்தயமாக முடிந்துவிட்டது. ஊர்ச் சாவடியில், விடுமுறைக்காகப் பூந்துறை வந்திருந்த முனியாண்டி உட்கார்ந்து கொண்டிருந்தான். பல் விளக்கிக் கொண்டே அங்கே வந்து சேர்ந்தான் முத்தையா. அடுத்தாற்போல் செங்கப்படையன் வந்தான். எதை எதையோ பேசினபின் பேச்சு பிலாவடியார் கோவிலில் வந்து நின்றது. பிலாவடியார் கோவில் மகிழ மரத்தின் பிரதாபங்களைச் செங்கப் படையன் ஒரேயடியாக அளந்தான். முத்தையா அதற்கு ஒத்துதினான். பேச்சு வளர வளரச் சாவடியில் ஊர் விடலைப் பிள்ளைகள் நிறைந்து விட்டன. முனியாண்டி எல்லாம் சுத்தப் புரட்டு என்று சாதித்தான்.
“மோகினியாம்.! யட்சணியாம்! அந்தக் கதையெல்லாம் மூட்டை கட்டி வை! அப்பேன்,சும்மா உருட்டாதே. வேணும்னா வா அப்பேன். ஒரு பந்தயம் போட்டுவிடலாம்!” முனியாண்டி எகத்தாளமாகப் பேசிவிட்டான்.
“அப்படி வா தம்பி வழிக்கு. வர்ற அமாவாசை அன்னிக்கி இரவு புத்து மணிக்குப் புறப்பட்டுப் போய் அந்த மகிழ மரத்திலே நாங்க கொடுக்கிற ஆணியை அடிச்சுட்டு வந்துடு. ஆனா ஒண்ணு. நீ தனியாகத்தான் போகணும். போக வர ரெண்டு மணி நேரம் குடுத்திருக்கோம். இதெ நீ செஞ்சிட்டா இருபது ரூபா பந்தயம்! நான் பத்து, முத்தையாப் பய பத்து. பணம் போனாப் போவுது. எங்கே பார்க்கலாம்! உம். ஆம்பளை சிங்கத்தை…?” செங்கப்படையன் கொஞ்சம் அழுத்தமாகப் பேசினான்.
“ஏன், இருக்கிற பேயி என்னைக்குந்தானே இருக்கும்? அதுக்கு அமாவாசை என்னத்துக்காம்? பேயடிக்காமப் புழைச்சுக்கிட்டாலும், இருட்லே பூச்சி பொட்டாவது கடிக்கட்டுமேன்னு பார்க்கிறீங்களா? அப்படித்தானே?” சிரித்துக் கொண்டே முனியாண்டி இதைக் கேட்டான்.
“அப்ப ஒண்னு செய்! இருட்டுங்கறதுக்காக ஒரு பேட்ரி லைட் வச்சுக்க, அவ்வளவுதானே?” முத்தையன் அனுதாபப்பட்ட மாதிரி இதைச் சொல்லி வைத்தான்.
“நிறுத்து அண்ணே! ரொம்ப அளக்காதே! உம் பந்தயப் பணம் கெடக்குது விடு. அதுக்காக இதெ நான் செய்யறேன்னு நினைச்சிராதே.உங்க முட்டாள்தனத்துக்கு ஒரு பாடம் காட்டனும் அதுதான் என் நினைவு. இருட்டுக்குப் பயந்தவன் நான் இல்லெ. அமாவாசயானா என்ன பெளர்ணமியானா என்ன? துணிவு இருந்தா நடக்காது..? பயந்தானே இருட்டு”.
இயற்கையாகவே துடுக்குத்தனம் நிறைந்த முனியாண்டி இப்படிப் பேசியதில் ஆச்சரியமில்லை. உண்மையில் அவன் அந்தப் பந்தயத்தைப் பற்றிக் கவலைப்பட வில்லைதான். அதற்கு மாறாகச் சந்தோஷப்பட்டான் என்று கூடச் சொல்லலாம். கல்லூரியில் படித்து வந்த அவன் விடுமுறைக்காகக் கிராமம் வந்திருந்தான். அவனுடைய கல்லூரி வாழ்வின் சூழ்நிலை இந்த அசட்டு நம்பிக்கைகளில் ஒரளவு இகழ்ச்சி ஏற்படும்படி செய்திருந்தது. அதோடுகூட இம்மாதிரி நம்பிக்கைகளைப் பொய்யாக்க வேண்டுமென்ற அழுத்தமான எண்ணம் அவனைப் பற்றியிருந்தது. அதுதான் இந்தப் பந்தயத்தை விளையாட்டும் வினையுமாக ஏற்படுத்திவிட்டது.
செங்கப்படையன், முத்தையா, முனியாண்டி இவர்களெல்லாரும் இருபது இருபத்தைந்து வயதுடைய விடலைப் பிள்ளைகள். முன்னிருவரும் கிராமத்திலேயே விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள். ஆகவே இது விஷயமாக நம்பிக்கை இழக்க முடியாமல் சூழ்நிலை அமைந்திருந்தது.
முனியாண்டியின் வேண்டுகோளின் பேரில் இந்தப் பந்தய ஏற்பாடு கமுக்கமாக நான்கைந்து விடலைப் பிள்ளைகளுக்குள் மட்டும் தெரிந்திருந்தது. காரணம் பெரியவர்களுக்குத் தெரிந்தால் இதை நிச்சயமாகக் கலைத்து விடுவார்கள் என்பதுதான். முனியாண்டி இதை ரகசியமாக முடிப்பதற்கு ஏற்பாடு செய்தது வெறொரு காரணத்தால், அவன் தகப்பனார் காதில் இந்த விஷயம் விழுந்துவிட்டால் அவனை வீட்டை விட்டே வெளியில் போகாதே என்று சொல்லிவிடுவார். பிலாவடியானையும் மகிழ மரத்தையும் பற்றி அவருக்குச் செங்கப்படையனைக் காட்டிலும் அழுத்தமான நம்பிக்கை.
ஆனால் எல்லாம் திட்டப்படி நடக்கிறதா என்ன? எப்படியோ விஷயம் ஊர் முழுவதும் பரவியிருந்தது. நல்ல வேளையாகச் சதுரகிரி மகாலிங்கம் வரை போயிருந்த முனியாண்டியின் தாய் தந்தையர் அமாவாசைக்குப் பிறகு தான் வருவதாகச் சொல்லிப் போயிருந்தனர். ஊரில் தன்னைத் தடுத்த வேறு சில பெரியவர்களையும் உறவினர்களையும் மறுக்க முடியாதபடி தன் சாமர்த்தியமான பேச்சால் தடுத்துவிட்டான் முனியாண்டி.
எப்படியோ பந்தயம் பயங்கரமானது என்று பிலாவடியைப் பற்றிக் கேள்விப்பட்டு நம்பியவர்கள் கருதினாலும் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேலே நாம் குறித்தபடி கிராமமே எதிர்பார்த்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அமாவாசை வந்தது. குறித்தபொழுதில் சாவடியில் நண்பர்கள் கூடினர். சாவடிக்கு வெளியே ஒரே மைக் குழம்பாயிருந்தது. ஒன்பதரை மணிக்கு முனியாண்டி சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். செங்கப்படையானுக்கு முனியாண்டியின் முகச்சாயலில் பயத்தின் அறிகுறி சிறிதும் இருப்பதாகவே தெரியவில்லை. “பய! போய்ட்டு வந்தாலும் வந்திடுவான் போலிருக்கே” என்று எண்ணினான். புதிதாகக் கரண்ட் அடைத்த ஒரு மூன்று ஸெல் பாட்டரியை முத்தையா முனியாண்டியிடம் நீட்டினான். செங்கப்படையன் சாவடி மாடப் பிறையிலிருந்து தயாராக வைத்திருந்த சுத்தியலையும், சாண் நீள ஆணி ஒன்றையும் முனியாண்டியிடம் கொண்டுவந்து கொடுத்தான். முனியாண்டி புன்சிரிப்புடன் அவைகளை வாங்கிக் கொண்டான்.
கூடியிருந்த விடலைப் பிள்ளைகளுக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. பட்டணத்தில் இருட்டையே கண்டறியாத முனியாண்டி எப்படி இந்த மைக்குழம்பிலே சிறிய பேட்டரியைத் துணைகொண்டு போக முடியும்? முனியாண்டியின் கேலிச் சிரிப்பு அவர்களுக்குத் தங்கள் நம்பிக்கை கரைவது போன்ற உணர்ச்சியை உண்டாக்கியது. மணி பத்து! முனியாண்டி விடைபெற்றுக் கொண்டான், அதே புன்சிரிப்புடன்.
“முனி ஜாக்கிரதை காலையில் பொழுது விடிந்ததும் நாங்க வந்து பார்ப்போம். ஆணி குறித்த இடத்தில் அடிச்சிருக்கணும்! இங்கேயே சாவடியில் ஒரு மணிவரை காத்திருக்கோம். வந்திடு, பிறகுதான் வீட்டுக்குப் போவணும். என்னமோ? மனத்துலே தடம் புறண்டுச்சுன்னா திரும்பிடு! அதுக்காவ. எக்கச்சக்கமா மாட்டிக்கிடாதே! ஏதோ விளையாட்டுப் பந்தயம்: உசிருக்கு வினையாயிடப்படாது.” முத்தையாவின் குரலில் இப்போது இரக்கந்தோய்ந்திருந்தது.
முனியாண்டி “என்ன அண்ணே மிரட்றே சரியா பதினொன்றரைக்குப் பாத்துக்குவே ஆளை வர்ரேன்” என்று கூறிவிட்டு இருளோடு ஐக்கியமானான். முனியாண்டி போகிற போக்கில் மீண்டும் கேலியாகச் சிரித்த சிரிப்பு செங்கப்படையனை ஏதோ செய்தது. நண்பர்கள் சீட்டுக்கட்டைப் பிரித்துக்கொண்டு சாவடியில் உட்கார்ந்தனர். ஆனால் ஆட்டம் ஒடவில்லை இந்நேரம் முனியாண்டி எங்கே இருப்பான்? என்ன செய்வான்? என்ற பேச்சிலேயே மணி பதினொன்றாகி விட்டது.
முனியாண்டிக்குத் தனி நடை ரொம்ப வேகமாக ஒடும். எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பே மகிழ மரத்தை அடைந்து விட்டான். சுற்றி ஒருமுறை நன்றாக பாட்டரி அடித்துப் பார்த்துக்கொண்டான். சோ என்று விழும் அருவி ஓசை சிள்வண்டுகளின் கீஇஇ சப்தம், வேறு ஒன்றுமே ஒலியில்லை. காற்றில் சில முதிர்ந்த இலைகள் உதிர்ந்தன. சில படபடத்தன. மரத்தையும் அதன் அமைப்பையும் லைட் அடித்து மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொண்டான். செங்கப்படையனை நினைத்தபோது அவனது அப்பாவி நம்பிக்கையும் நினைவுக்கு வந்தது. முனியாண்டி தனக்குள் சிரித்துக் கொண்டான்.
திடீரென்று அவனுக்கு ஒரு நல்ல பிளான் தோன்றியது. இருட்டில் மரத்தில் ஏறி ஆணி அடிப்பதைவிட மரத்தில் வெளிச்சம் படும்படி பாட்டரியை சாய்வாக வைத்து ஸ்விட்சையும் போட்டுவிட்டு ஏறினால் என்ன? யாரோ அடுப்புக் கல்லாகக் கூட்டி வைத்திருந்த இரண்டு குண்டுக் கற்களுக்கிடையில் பாட்டரியைச் சாய்வாகச் சார்த்தி வைத்துப் பார்த்தான். அவன் ஆணி அடிக்க வேண்டிய இடத்தில் ஸ்பஷ்டமாக வெளிச்சம் விழுந்தது. தனது பிளானை நினைத்துத் தானே மகிழ்ந்து கொண்டான். தரையிலிருந்து சாய்வாக வைக்கப்பட்டபாட்டரி எரிந்து கொண்டிருந்தது. அதன் வட்டவடிவமான ஒளி விரிவு மரத்தின் குறிப்பிட்ட கிளையில் போதுமான அளவு விழுந்தது. முனியாண்டி அரை வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டுமரத்தில் ஏற ஆயத்தமானான்சுத்தியலை மடியில் சொருகிக் கொண்டான். ஆணியைச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான். சுற்றும் முற்றும் ஒருமுறை கண்ணோட்டம் விட்டுவிட்டு மரத்தில் ஏறினான்.
மூன்று கிளைகள் பிரியும் மரத்தின் நடு மையமான ஒரிடம் அவன் ஆணி அடிக்க வேண்டியதாகும். அந்த இடம் நிற்க வசதியற்றுக் கப்பும், கவருமாக மண்டி அடர்ந்திருந்தது. எப்படியோ சமாளித்துக்கொண்டு ஏறி அதே இடத்திற்கு வந்து விட்டான். அப்போது பாட்டரி அதற்கு வெளிச்சத்தின் மூலம் நல்ல உதவி செய்தது. பையிலிருந்து ஆணியை எடுத்தான். காரியம் முடியப் போகிறது என்ற சந்தோஷத்தில் இதயம் வெகுவேகமாக அடித்துக் கொண்டது. டக்டக்டக். ஒன்று இரண்டு மூன்று ஆணியை இறுக அடித்தாகிவிட்டது. பச்சை மரம், ஆணி உள்ளிறங்கக் கேட்கவா வேண்டும்? சட்டை நுனி சிக்கிக் கொண்டிருந்ததை எடுப்பதற்காகச் சுத்தியலைத் தலைக்கு நேரே கவட்டை போலிருந்த இரண்டு கவடுகளுக்கிடையில் தொங்கவிட்டான். சிக்கலை எடுத்தாகிவிட்டது. இதயம் அளவுகடந்த வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது. அந்த வேகத்தில் சுத்தியலைத் தொங்கவிட்டதை அவன் மறந்துவிட்டான்.
இறங்குவதற்காக அடுத்த கொப்பில் காலை வைத்தான். ‘பரட்’ வேஷ்டி கிழிந்தது. பின்னாலிருந்து யாரோ பிடித்து இழுப்பதுபோன்ற உணர்ச்சி. பட்டென்று மண்டையில் ஒரு அடிசுத்தியல் குறி பார்த்து வைத்தாற்போல் மண்டையில் விழுந்தது. அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி. பக்கத்துப் பலாமரத்துப் பொந்திலிருந்து கோட்டான் ஒன்று கிரீச்சிட்டது. அதே சமயம் மரத்திலிருந்து நேராக விழுந்த மகிழங்கொட்டை ஒன்று சொல்லிக் கொண்டே விழுந்தாற்போலப் பாட்டரியின் அமுக்கு ஸ்விட்சின் மேல் விழுந்தது. விளக்கு அணைந்துவிட்டது. சிறு கொட்டையானாலும் உயரத்திலிருந்து விழுந்த அதிர்ச்சியால் கல் விலகிவிட்டது. லைட் கீழே உருண்டது. எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் நடந்துவிட்டன. முனியாண்டி பிணமாகத் தொங்கினான்.
காரியத்தை வெற்றிகரமாக முடிக்கப் போகிறோம் என்ற பயமில்லாத சந்தோஷத்தில் தன்னை மறந்திருந்த முனியாண்டி ஆணி அடிக்கும்போது முன்தானையாகத் தொங்கிக் கொண்டிருந்த தன் வேஷ்டியையும் வைத்து நன்றாக இறுக்கி அடித்திருந்தான். கீழே இறங்கத் திரும்பும்போது பின்னே பிடித்திழுத்ததும் அவன் மரத்தோடு வைத்து அடித்திருந்த வேஷ்டி முன்தானையே. ஏதேதோ நண்பர்கள் சொன்னதெல்லாம் கண்முன்வந்தன. கண் அரண்டு விட்டது! கோட்டான் கத்தியதும் சுத்தியல் மண்டையில் விழுந்ததும், பாட்டரி அணைந்து உருண்டதும் ஒரே சமயத்தில் நடந்துவிட்டன. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக அத்தனை சம்பவங்களும் ஒன்றுகூடி அவனுக்கு ஏதோ ஒரு பயங்கர உருவத்தை முன் நிறுத்திவிட்டன. அத்தனை நேரம் இருந்த அசட்டுத் துணிவு ஒடிவிட்டது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே. திடீர் அதிர்ச்சியில் மூச்சு நின்றுவிட்டது. முன்தானைப் பிடிப்பும் மரக்கிளையின் அடர்த்தியும் அவனை அப்படியே தாங்கிக் கொண்டன. முனியாண்டியின் உயிரற்ற சடலம் மகிழ மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. உருண்டு போன பாட்டரி கல்லிலும் கட்டியிலும் அடிபட்டுக் கண்ணாடி உடைந்து போய் ஓர் மூலையில் பாறை இடுக்கில் தடுக்கப்பட்டுக் கிடந்தது. கீழே விழுந்த சுத்தியல் மரத்தடியிலிருந்த பிள்ளையாரின் மூக்கைக் கொஞ்சம் பேர்த்து விட்டுப் பக்கத்தில் விழுந்து கிடந்தது. காற்று ஹோ,வென்று அடித்துக் கொண்டிருந்தது. பிலாவடி ஒரு உண்மைத் துணிச்சல்காரனை அவன் கையால் நடந்த தவற்றைக் கொண்டே உயிரை வாங்கிவிட்ட பெருமையை அந்தக் காற்று அறிவித்தது போலும். பலாப் பொந்திலிருந்த கோட்டான் தைரியமாக இன்னும் கிரீச் கிரீச் என்று சாவுச் சங்கீதம் பாடிக் கொண்டிருந்தது.
“மணி இரண்டே முக்காலாகி விட்டது. இங்கே சாவடியில் நண்பர் கூட்டம் நிலைகொள்ளாமல் தவித்தது. பய மாட்டிக்கிட்டானோ?” செங்கப்படையன் சந்தேகத்தைத் துணிந்து வெளியிட்டான். “சே! சே! அப்படிச் சொல்லாதே அண்ணே தூக்க வெறிச்சா இருந்திருக்கும்! முனி வீட்டுக்குப் போயிருப்பான்.” முத்தையா இப்படிச் சொல்லவும், சிலர் அதை ஆமோதித்தனர். வேறு சிலர் “அண்ணாச்சி! என்ன இருந்தாலும் நாம் இனிமேல் இப்படி இருக்கிறது நியாயமில்லை. முனி வீட்டுக்கு ஆள் அனுப்பி விசாரிச்சிக்கிட்டு ஆகிறதைச் செய்யனும்” என்றனர். முனி வீட்டுக்கு ஆள் அனுப்பப்பட்டான். கடைசியில் போன ஆள் திரும்பினான். கையை விரித்துவிட்டான்.
சாவடியை வெளிச்சம் செய்துகொண்டிருந்த அந்த ஒட்டை அரிக்கேன் லாந்தரில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு வேகமாகப் பிலாவடியை நோக்கிப் புறப்பட்டது அந்தக் கோஷ்டி அவர்களிடம் பயத்தின் பரபரப்புக் காணப்பட்டது. செங்கப்படையனுக்கு வாய் அடைத்துப் போனது. பேசத் தோன்றவில்லை. முத்தையா துடிதுடித்தான்.
நண்பர் கூட்டம் நாலு மணிக்குப் பிலாவடியை அடைந்தது. அங்கே கண்ட காட்சி காணச் சகிக்கவில்லை. ‘பய பிள்ளையார் மூக்கை உடைச்சிட்டு மரத்திலே ஏறியிருக்கான். யட்சிணி சும்மா வந்தாலே விடமாட்டாளே, சாமியை உடைக்க வேறே செய்திருக்கான். எதிர்பார்த்ததுதானே இப்படி நடக்கும்னு?’ செங்கப்படையனே இவ்வாறு மனதில் நினைத்துக்கொண்டான். வெளியே சொன்னால் அப்போதிருந்த கோபத்தில் முத்தையன் அவன் கழுத்தை நெறித்திருப்பான். முனியாண்டி காலம் முடிந்துவிட்டது. முத்தையன்தான் உண்மையாக வருந்தினவன்.
“ஆமாம். திருவடியா பிள்ளை இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது:” நான் கேட்டேன்.
“அந்த விடலைப் பசங்களில் நானும் ஒருவனையா” என்றார் பூரீமான் பிள்ளை. பூந்துறைக்காரரான பூரீமான் பிள்ளையிடம் விடைபெற்றுக்கொண்டு நான் எழுந்தேன்.
– 1963-க்கு முன், நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை