கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 9,940 
 

அவள் அழகான பெண் என்பதையும் மீறிக் கோபம் வந்தது.

இடம் நார்ட்ஸ்டார்ம் பார்.

பேரைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஸ்பென்ஸர் ப்ளாஸா மாதிரியான பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சின் ஒரு மூலையிலிருக்கும் காபிக்கடை. நாளெல்லாம் கம்ப்யூட்டரை முறைத்து முறைத்து போர் அடித்தால் அங்கே காபி சாப்பிடப் போவோம்.

வழக்கமாய் ” ஹலோ ” – சொல்லும் காபிக் கடை அமெரிக்க அழகி அன்றைக்கு, ” நமஸ்தே ” என்றதும்தான் கோபம் வந்தது. ஆச்சரியப்பட்டுப் போய் அவளைப் புகழப் போகிறேன் என்று எதிர்பார்த்தவளுக்கு என் முகம் போன போக்கைப் பார்த்து திகைப்பு.

இங்கேயும் இந்தித் திணிப்பா !

” நமஸ்தேன்னா உங்க பாஷைல ஹலோதானே ? ”

குமுறலோடு அவளிடம் சொன்னேன். ” இல்லே, அது வேற பாஷை. ”

” நீ இந்தியன் இல்லையா ? ”

” இந்தியன்தான். ஆனா இது என் பாஷை இல்லை. எனக்கு என் பாஷைல ஹலோ சொல்லணும்ன்னா வணக்கம்ன்னு சொல்லணும். ”

” வனக்கம் ? ”

” இல்லை. வணக்கம். நாக்கை நல்லா அழுத்தி சொல்லணும். ”

” வநக்கம்? வணக்கம்? ”

” ஆங் ! கரெக்ட். வணக்கம். ”

” உன் பாஷை கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ”

” எழுதி வெச்சுக்கோ. சுலபமா இருக்கும். இனிமே யாராவது இந்திய மூஞ்சியைப் பார்த்தா நமஸ்தே சொல்லக் கூடாது. வணக்கம் சொல்லணும். ஓக்கே? ”

” ஓக்கே. ”

யாரோ ஒரு இந்திக்காரனை பழி வாங்கிய திருப்தியோடு காபியை உறிஞ்சிக் கொண்டு திரும்பினேன்.

அடுத்த நாள் அங்கே சென்றபோது, ” இன்னொரு வார்த்தை பழகிட்டேன். இது உன் பாஷைதான். ” சொல்லிக் கொண்டே கீழே குனிந்து எழுதி வைத்த வாக்கியத்தை வாசித்தாள்.

” மீரு பாஹ உன்னாரா ? ”

– ஏப்ரல் 27, 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *