அலங்காநல்லூர் அப்புசாமி

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,680 
 

“கொம்பைச் சீவறானா? எதுக்குடா, ரசம்?” பதறினார் அப்புசாமி.
 
ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந்தேகம் கேட்டான்.

“ஏன் தாத்தா, ‘வீர’வுக்கு ‘ற’ வா? ‘ர’ வா?”

இலக்கணப் பிழை பற்றிக் கவலைப்படும் நிலையில் அப்போது அப்புசாமி இல்லை. இலக்கணம் பிழைக்கிறதோ இல்லையோ, தாம் உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்.

“கொம்பை ஏண்டா சீவறான்? அதைச் சொல் முதலில்.”

ரசகுண்டு கையிலிருந்த பெயிண்ட்டிங் பிரஷ்ஷைத் தூக்கி எறிந்துவிட்டுக் கோபத்துடன் அவரருகே வந்தான். “வேலை செய்ய விடமாட்டீங்களே. உயிரோடிருக்கிற மாட்டுக் கொம்பை ஒருத்தன் எதற்குச் சீவுவான்? சீப்பு செய்யறதுக்காகவா சீவுவான்? மாட்டைப் பிடிக்கிற உங்கள் குடலைக் குத்தி உருவறதுக்குத்தான் சீவறான்.”

அப்புசாமிக்கு அப்போதே உருவு மயக்கமாகி விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “ஏண்டா ரசம். போட்டியிலிருந்து வாபஸ் வாங்க ஏதாவது வழியில்லையாடா? கொஞ்சம் யோசனை பண்ணுடா.” என்று கெஞ்சினார்.

“வாபஸா?” அதிர்ச்சியடைந்தான் ரசகுண்டு. “விடிந்தால் வீரப் போட்டி. இனிமேல் ‘செய் அல்லது செத்து மடி’தான் தாத்தா. நீங்க மாட்டைப் பிடித்துத்தான் ஆகணும். நான் தட்டியெல்லாம் எழுதியாச்சு. நீங்க தான் கரிமாட்டுக் கருவாயன்!”

அப்புசாமி அவசரமாகவும் ரோஷமாகவும் வாயைத் துடைத்துக் கொண்டார். “நான் ஏண்டா கரிமேட்டுக் கருவாயன்?”

“கரிமேட்டு இல்லே தாத்தா. கரிமாட்டுக் கருவாயன். கறுப்பான மாட்டைப் பிடிக்கப் போறீங்களில்லையா? அதுக்காக வீரப் பட்டம்!”

தான் எழுதிய விளம்பரத் தட்டியை அப்புசாமியின் முன் காட்டினான்.

சென்னையில் ஓர் அலங்காநல்லூர்! வீர விளையாட்டு! கரிமாட்டுக் கருவாயன். வீரர் அப்புசாமி விடும் சவால்! நமது பேட்டையின் திமிர் பிடித்த காளையின் கொட்டத்தை அடக்கப் போகிறார்! இன்றே கண்டுகளியுங்கள்!

அப்புசாமிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. “ஆமாண்டா, ரசம். இன்றே கண்டு களிக்கட்டும்! நாளைக்குன்னா செத்துப் போயிடுவேனில்லையா?”

தெருவில் பயங்கரமானதொரு செருமல் சத்தம் கேட்டது.
 

அப்புசாமி கலவரத்துடன், “என்னடா ரசம் சத்தம்?” என்றார். “போபால் காஸா?”

“போபால் காஸ¤மில்லை, நேப்பால் காஸ¤மில்லை. பொட்டுவோட பொலி காளைதான் செருமுது!” என்று வாசலுக்கு ஓடி, எட்டிப் பார்த்துவிட்டு வந்தான்.

“பொட்டுவோட பொலி காளையேதான். காலைக் காலை மண்ணில் அடிக்சுக்கிட்டுச் செருமுது! நீங்களும் ஒரு எதிர்ச் செருமல் கொடுங்க, தாத்தா! அப்பத்தான் அதுக்கு ஒரு பயம் இருக்கும்.”

அப்புசாமியின் கலவரக் கண்கள் மேலும் சிலோன் ஆயின.
ரசகுண்டு அவரருகே வந்து, அவரது ஜிப்பாவுக்குள் கை விட்டு, அவர் மார்பைச் சந்தனம் தடவுவது போல நீவி விட்டான்.

“என்ன தாத்தா, டீசல் ஜெனரேட்டராட்டமா மார்பு டங்கணக்கான் டங்கணக்கான்னு அடிச்சுக்குது. நாளைக்குப் பொலி காளையோடு மோதி, எப்படித்தான் அதை மண்டியிட வைக்கப் போறீங்களோ? பாட்டி வேறு உங்களைப் பெரிசா நம்பிக்கிட்டிருக்காள். இந்தத் தெருவைப் பிடித்த பீடையை நீங்கள் விரட்டி அடித்துவிடப் போறீர்களாம்.”

பெருமூச்சு விட்டார் அப்புசாமி. “அவள் நினைப்பாள்டா; நல்லா நினைப்பாள். நான் அல்லவா நாளைக்குச் சாகணும்!”

சீதாப்பாட்டியின் தெருவில் பால்காரப் பொட்டு என்னும் புள்ளி இருந்து வந்தான். எல்லாக் கட்சிக் கொடிகளும் அவனுடைய மாட்டுக் கொட்டகையில் ஸீஸனுக்குத் தகுந்தபடி பறக்கும். காலைச் சாய்த்துச் சாய்த்து நடப்பான். அரசியலிலும் நல்ல சாய்கால் உள்ளவன். ஆகவே, அவன் வம்புக்கு யாரும் போவதில்லை. பால் வியாபாரத்தைத் தவிர, பொலிகாளை விவகாரம் வைத்துக் கொண்டிருந்தான்.
பட்டப் பகலில் அந்தப் பொலி காளை செய்யும் கற்பழிப்பும் – அனுமதி பெற்ற கற்பழிப்பு – உடந்தையாக வில்லன்கள் கும்பல் போல் ஏழெட்டுச் சங்கிலி முருகன்கள், அந்தக் கற்பழிப்புக்குப் பலியாகும் பசு ஓடி விடாமல் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொள்ள, பசு பலாத்காரத்துக்கு உள்ளாகும். சில பசுக்கள்சில வேளைகளில் நாலு கால் பிராணியா, எட்டுக்கால் பிராணியா என்று குழப்புகிற அளவு கீழே தரையோடு தரையாகச் சட்னி மாதிரி பொலி காளையால் அழுத்தப்பட்ட பதிப்பாகி, எலும்பு முரிந்து குற்றுயிரும் குலையுயிருமாய் – புத்தூர் போய்க் காலைக் கட்டிக்கொண்டு வருவதும் உண்டு.

இந்த அசிங்கங்கள் தெருவில் வேண்டாமென்று சீதாப் பாட்டி பல தரம் பால்காரப் பொட்டுவைக் கூப்பிட்டு எச்சரித்துப் பார்த்தாள்.

அவன் அவளை மதிக்கிறவனாக இல்லை. நீலக் காட்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

அப்புறந்தான் அலங்காநல்லுர் விவகாரத்தில் அப்புசாமி மாட்டிக் கொண்டார். அப்புசாமியின் போதாத காலந்தான், அவர் அலங்காநல்லூர் போய்ச் சல்லிக்கட்டு பார்க்க ஆசைப்பட்டது.
“எவனெவனோ வெள்ளைக்காரன் எல்லாம் வந்து வேடிக்கை பார்க்கிறான். வீர விளையாட்டு வீர விளையாட்டுன்னு…”

அலங்காநல்லூர் போகணுமா அலங்காநல்லூர்! நம்ம தெருவிலே நடக்கிறதே ஒரு நாஸ்ட்டி மெனஸ்! அப்ஸீனிடி டு த கோர். அந்தப் பால்காரப் பொட்டுவை ஓர் அதட்டல் போட்டு அவனுடைய ஸ்டட் புல்லை வேறு எங்காவது கொண்டு போகச் சொல்லத் தில் இல்லாதவருக்கு, அலங்காநல்லூர் என்&icc; கேடு?” என்றாள் சீதா பாட்டி சுடச்சுட.

அப்புசாமி அதே சுடச்சுட, “பொட்டு என்ன பொட்டு அவனைப் பொளந்து வெச்சுடுவேன். காளை இன்னாம்மே காளை? இந்தப் பொலி காளையென்ன, இதனுடைய பாட்டன், முப்பாட்டன் காளையையெல்லாம் கீழே போட்டுப் பட்டுனு ஒரே மிறி மிறிச்சுக் காட்டறேன் பார்க்கறியா?” என்று கிரிகிரி காட்டினார்.

அவரது போதாத காலம், தெருப்பக்கம் அந்தச் சமயம் பார்த்துப் பால்காரப் பொட்டு போய்க் கொண்டிருந்தான். அவன் காதில் “பொலிகாளை, பொட்டு” என்று விழுந்தவுடன் ஓசைப்படாமல் உள்ளே வந்து, அப்புசாமியும், சீதாப்பாட்டியும் பேசியது முழுவதையும் எந்த வித நவீன “பக்கிங்” கருவிகளும் இல்லாமல், நேர் காது மூலமாகவே கேட்டுக் கொண்டுவிட்டான்.

“நீ ஆம்புளைன்னா, நம்ம பொலிகாளை மேலே கையை வைச்சிப் பார்ரா!” என்று ஏக வசனத்தில் பேச, அப்புசாமி மனைவியின் முன்னிலையில் தம் மானம் போவதா என்று ஓர் அவசர புத்தியில், “பந்தயமடா! மைதானத்திலேயே வேணுமின்னா ஏற்பாடு செய்! உன் பொலி காளையைப் பிடிச்சுக் காட்டறேன்” என்று கூவினார்.

இதற்குள் தெருவில் அக்கம் பக்கத்தினர் வேறு கூடி, அப்புசாமியின் தைரியத்தைப் பாராட்டி, ஊக்கம் கொடுத்து அவரைப் பலிகடாவாக்கி விட்டார்கள்.

போட்டி தினம். சூரியன் வழக்கம் போலச் சரியாகக் கிழக்கே உதித்துவிட்டுத் தப்பான பிளாட்பாரத்துக்கு வந்துவிட்ட இரயில் மாதிரி திருதிருவென்று விழித்தது. நாம் ஒரு கால், லேட்டாக உதித்துத் தொலைத்து விட்டோமா? மாமூலாக நான் உதிக்கும் போது அப்புசாமி, கட்டிலில் துப்பட்டிக்குள் அல்லவா இருப்பார்? இன்றைக்குக் குளித்து ஈரம் சொட்டச் சொட்டக் கண்ணை மூடி ஏதோ சாமி கும்புட்டுக் கொண்டிருக்கிறாரே! வாய் என்னவோ முணுமுணுக்கிறதே!

சீதாப்பாட்டி நெற்றிக் குங்குமத்தை அழுத்தமாக வைத்துக்கொண்டு வெளியே வந்தாள். முணுமுணுத்துக் கொண்டிருந்த அப்புசாமியின் அருகில் ஓசைப்படாமல் வந்தாள். “ஸ்பெஷலாக ஏதோ மந்த்ராஸ் சாண்ட் செய்கிறார் போலிருக்கிறது” என்று அவர் அருகே மதிப்புடன் நெருங்கினாள்.

அப்புசாமியின் உதடுகள் “ஆறிலும் சாவு, நூறிலும் சாவு…, ஆறிலும் சாவு, நூறிலும் சாவு….” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

ரசகுண்டு, “பெப்பர பெப்பர பெப்!” என்று பெரிய ஊதலை ஊதிக்கொண்டு வந்து சேர்ந்தான். “தாத்தா! இப்பவே சொல்லிட்டேன். அப்பப்போ கைக்கு மண்ணு தடவிக்கணும். பார்த்தீங்களா, இந்தச் சின்னச் சிமிழைக் கையிலே வெச்சுக்கங்க. இதிலேதான் நீங்க ஜெயிக்கிற இரகசியமே இருக்கு!”
அப்புசாமி ஆவலுடன் கண்ணைத் திறந்தார். “ஏண்டா ரசம்! ஏதாவது வசிய மையா? பொலிகாளை தானாக வந்து என் முன்னாலே மண்டியிட்டுடுமா?”

“தாத்தா! இந்தச் சிமிழ்லே இருக்கிறது மந்திரக் களிம்பு இல்லை. ரோஜனம் தெரியுமா, ரோஜனம். அந்தப் பொடி. கைக்குத் தடவிக்கிட்டா நல்லா கிரிப் இருக்கும். குரங்குப்பிடி மாதிரி கப்புனு கொம்பைப் பிடிக்கிறீங்க. மளுக்! ஒரே திருப்பு. லெப்டுலேயோ, ரைட்டுலேயோ, லாரிக்காரன் ஸ்டியரிங்கை ஒடிக்கிற மாதிரி ஒரே ஒடி! மளுக்! மாடு காலி!”

அப்புசாமி ரோஜித்தவாறே ரோஜனத்தை வாங்கிக் கொண்டார். “அடியே சீதே! நான் மாட்டைப் பிடிச்சுத்தான் ஆகணுமா? நீ கற்புள்ள பொம்மனாட்டி தானே? ஏதாவது அவ்வையார் மாதிரி ஒரு பாட்டுப் பாடி மழை, புயல், குளிர் வரவழைக்க முடியுமா, பாருடி! கிரிக்கெட் மாட்சும் போதெல்லாம் அந்தக் காலத்திலே நம்ம ஊர்ப் பத்தினிகள் மழை வரவழைச்சு எத்தனையோ ஆட்டத்தை டிரா பண்ணியிருக்காங்க!”

சீதாப் பாட்டி சிரித்தாள். “உங்கள் வீரத்தைக் காட்ட சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு யூ ஷ¤ட் பி ஹாப்பி. ரசம், எத்தனை மணிக்குப்பா மைதானத்துக்கு மாடு வருது? நிறையப் பேர் மாட்டுக்கு மாலை போடுவாங்களில்லையா? என் சார்பாக ஒரு மாலை தர்றேன், போட்டுடுப்பா.”

அப்புசாமி அலறினார். “சீதேய்! அடியே கியவி! நீ போடற மாலை மாட்டுக்கு இல்லேடி! என் மரணத்துக்கு!”

“ஆல் ரைட்! எனக்கு இன்னிக்கு வேலை இருந்தாலும் கட்டாயம் மைதானத்துக்கு வந்துடறேன். ஸீ யூ.”

“சீதே… என்னை நீ ஸீ பண்ண முடியாதுடி. என் குடலைத்தான் நீள நீளமாய் மைதானம் பூரா வடாம் பிழிந்தது போல் பார்க்கலாம்.”

மைதானம், கும்பல், குதூகலம் – அப்புசாமி நீங்கலாக.

ரசகுண்டு தேர்ந்தெடுத்த சில இசைத் தட்டுகளைப் போட்டுக் கொண்டிருந்தான்.

கண்டசாலா பாடிக்கொண்டிருந்தார்.

“துணிந்தபின் மனமே
துயரம் கொள்ளாதே…”

அப்புசாமிக்கு அத்தனை படபடப்பிலும் ஆறுதலாக இருந்தது. ‘கண்டசாலா நல்ல மனுஷன்! கொல்லாதே, கொல்லாதேன்னு அனுதாபமா பாடறார். ஆனால், அது அந்தப் பொலி காளைக்குப் புரியுமா? கொல்லாது விடுமா?’
 

திடீரென்று அவர் மூக்குக்கிட்டே ஓர் உஷ்ண வீச்சு!

பொட்டுவின் பொலிகாளை! அவருக்குச் சரியாக ஆறடி தூரத்தில்.

கழுத்து நிறைய மாலைகளைப் போட்டுக் கொண்டு, காலால் மைதானத்து மண்ணைக் குழி பறித்தவாறு, அவரைப் பார்த்து ஆயிரம் மில்லி அடித்துவிட்டு வந்ததைப் போலச் சிவப்பாக முறைத்தது.
பால்காரப் பொட்டு தன் கையிலிருந்த கயிற்றை எந்த நிமிஷத்திலும் விட்டு விடலாம். தாரை, தப்பட்டை, மைக், கை விசில், குலவை, டப்பாங்குத்து!

பால்காரப் பொட்டு அப்புசாமியைப் பார்த்து ‘உய்ய்’ என்று ஒருவிசில் அடித்தான். “யோவ்! வஸ்தாத்! வுடட்டுமாய்யா கயிற்றை!”

வாய் வார்த்தை வாயிலிருக்கும் போதே காளையின் கயிற்றை விட்டுவிட்டான்.

அப்புசாமி பழங்கால சந்திரபாவுவாக மாறி ஜகா வாங்குவதற்குள், காளை வேகமாக வந்து அவரை ஒரு மோதல்…

“ஆ! சீதே!” என்று அவர் அலறினதுதான் தெரியும். அதற்குள் இரண்டு மூன்று போலீஸ் ஜீப்புகள் மைதானத்துக்கு வேகமாக வந்தன.

அடுத்த நிமிடமே அவை பொலிகாளையைச் சுற்றி வளைத்துக் கொண்டு, காளை எங்கேயும் ஓட முடியாமல் செய்துவிட்டன. ஜீப்பிலிருந்து இறங்கிய சிறிய போலீஸ் பட்டாளம், காளையின் கயிற்றைப் பிடித்து, அதை அருகிலிருந்த மரத்தில் கொண்டு கட்டியது. சில நிமிஷங்களில் பால்காரப் பொட்டு கை கட்டிக்கொண்டு வினயமாக வந்து நின்றான்.

“தப்பு அவர் மேலதாங்க. அவர் தானுங்க சவால் விட்டார். டீ சாப்பிடறீங்களா? போர்ன்விடாவா?” என்றான் போலீஸ் அதிகாரியிடம் – சத்யராஜ் பாணியில்.

போலீஸ் அதிகாரி சொன்னார். “நாங்கள் இப்போது வந்தது, நீங்க ஏன் இங்கே ஜல்லிக்கட்டு நடத்தினீங்க என்பதை விசாரிக்கிறதுக்கு அல்ல. அதற்குத்தான் நீங்க ஏற்கனவே பர்மிஷன் வாங்கியிருக்கீங்களே. வைரக் கம்மல் திருட்டு விஷயமா விசாரிக்க வந்திருக்கிறோம். உன் பொலிகாளை கழுத்திலேயிருக்கிற மாலைகளையெல்லாம் நீயே கழற்று! நீ நிரபராதின்னா உன்னை விட்டுடிறோம். இல்லேன்னா… உன்னையும் உன் பொலி காளையையும் அரெஸ்ட் பண்ணறதைத் தவிர வேறு வழியில்லை.”

“சார், மில்லி கில்லி அடிச்சீட்டு வந்தீங்களா…?”

உதட்டில் ஒரு தட்டுத் தட்டினார். “இது சினிமா போலீஸ் அல்ல, அசல் போலீஸ். கழற்றுப்பா முதலிலே மாலைங்களை.”

பால்காரப் பொட்டு, ஆயுளில் முதல் தடவையாகச் சற்றே பயத்துடன், தன் காலையின் கழுத்தில் பலரும் போட்ட மாலைகளைக் கழற்றினான். ஒரு குறிப்பிட்ட மாலையில் சிறிய துணி முடிச்சு!

இன்ஸ்பெக்டர் அதை எடுத்துப் பிரித்தார். ஒரு ஜோடி வைரத் தோடுகள் பளபளத்தன.

“சார்! சார்! எனக்கு ஒண்ணும் தெரியாது, சார்!”

அப்புசாமி கால் கை கட்டுடன் படுத்திருந்தார். “சீதே! உன்னை நான் புரிஞ்சுக்காத முட்டாள்! பொலி காளை மாட்டுக்கு நீயும் மாலை போடப் போறேன்னதும் எனக்கு உன் மேலே எவ்வளவு ஆத்திரம் வந்தது தெரியுமா?” என்றார்.

“உங்கள் ஆத்திரம் நியாயமான ஆத்திரந்தான். நான் மாலைக்குள் என் வைரத் தோட்டை வைத்து, அதை மாட்டுக் கழுத்திலே போட்டுப் பால்காரப் பொட்டுவை மாட்ட வைப்பேன் என்பதை, புவர் மேன், நீங்கள் எப்படி ஊகித்திருப்பீர்கள்? ஆனாலும், நான் கொஞ்சம் ஓவராகவே ரிஸ்க் எடுத்துக் கொண்டுவிட்டேன். சப்போஸ், போலீஸ் மட்டும் காளையை ரவுண்டப் பண்ண இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தால் என் நெற்றிப் பொட்டு கதி என்னாயிருக்கும்?”

அப்புசாமி அலுத்துக் கொண்டார். “உன் நெற்றிப் பொட்டுதான் உனக்குப் பெரிசு! என் குடல் என்னாயிருக்கும்னு கவலைப்படறியா?”

Print Friendly, PDF & Email

1 thought on “அலங்காநல்லூர் அப்புசாமி

  1. ஹஹஹஹா என்ன சொன்னாலும் சரி அப்புசாமி தாத்தா கதையை அடிச்சிக்க ஆல் இல்லைங்கோ …. செம ஸ்டோரி சூப்பர் . தங்கள் படைப்பிற்கு நன்றி வாழ்த்துக்கள் கதாசிரியர்களே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *