சி.சு.செல்லப்பா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 6,237 
 

(இதற்கு முந்தைய ‘சாம்பலான முதல் கதை’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது)

சித்தப்பாவின் இந்தச் செய்கையால், சொற்ப நிமிடங்களில் அற்புதமான ஒரு பவித்திரத் தன்மை அடித்து நொறுக்கி நாசப்படுத்தப்பட்டு விட்டது.

எப்போதும் சுனை நீர் சூழ்ந்து இருப்பதுபோல் தன்மையுடன் இருக்கும் சமையல் அறை, அன்று அக்னி குண்டமாய் மூண்டு விட்டிருந்தது. வீசப்பட்ட சுடு சொற்களால் என் உடம்பு பூராவும் பற்றி எரிந்தது.

பற்களை இறுகக் கடித்தவாறு நான் கண்களை மூடி நின்று கொண்டிருந்தேன். நெருப்பில் தீய்ந்த காகிதங்களின் நெடி வீசியது. கொடிய அநாகரீகமான உன்மத்தம் பிடித்த ஆபாசமான வார்த்தைகளை மனோதர்மம் கடுகளவும் இல்லாமல் கொட்டி விட்டுப் போன சித்தப்பாவை அடித்துத் துவைத்து தரை மட்டமாக்க எனக்கு விரல் சொடுக்கும் நேரம் கூட ஆகாது. சித்தப்பா இரக்கமில்லாமல் அடித்து வீழ்த்தப்பட வேண்டிய கொடிய விலங்கும்தான்.

ஆனாலும் நான் அந்த ஆளின் அருகில் கூட செல்லவில்லை. என் நகம் அந்த ஆளின் மேல் படுவதேகூட இழுக்கு எனக்கு. சிவராமன் சித்தப்பா அழுகிய மலம். மலத்தை தொடுவதற்கில்லை.

கனத்த கசப்பான நிமிடங்களுக்குப் பிறகு நான் கண்களைத் திறந்தேன். அடுப்பின் பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்த மதுரம் சித்தியின் முதுகுதான் தெரிந்தது. சித்தியின் முகம் தெரியவில்லை. உடம்பு குலுங்கியது. அழுகிறார் போலும்…

“நான் வரேன் சித்தி…” என்று சொல்லவே வராத சொற்களை சொல்லிவிட்டு அங்கிருந்து நான் வெளியேறினேன். இந்த கசப்பான சம்பவத்திற்குப் பிறகு நான் சித்தியின் வீட்டிற்கு போகவேயில்லை. வெளியில் கூட அதிகம் நான் போகவில்லை.

கண் முன்னால் மேன்மைகள் சிதறிடிக்கப்பட்ட அதிர்வில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். கண் இமைக்கும் நேரத்தில் ஒரு வாழ்க்கை எனக்குக் காணாமல் போயிருந்தது. ஏற்கனவே இழந்திருந்த பெங்களூர் வாழ்க்கை பற்றிய ஏக்கம் படிந்த சஞ்சலத்தில் திசையற்றுப் போயிருந்த எனக்கு, திருநெல்வேலி மேலும் ஒட்டாத மணலாய் நெருடிக் கொண்டே இருந்தது. அப்படிப்பட்ட வாழ்க்கை எண்ணையும் தண்ணீரும் கலந்த கலவா மிதவையாய் சஞ்சலித்துக் கிடந்தது.

மீண்டும் பெங்களூர் சென்று சில கடுமையான சூழல்களை எதிர்கொள்ளும் வலிமை அந்தப் பருவத்தில் என்னிடம் இல்லை. அப்போதுதான் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மெண்ட் அகமதாபாத், வெளியிட்ட ஒரு விளம்பரத்தை நான் தி ஹிண்டு நாளிதழில் காண நேரிட்டது.

உடனே பரபரப்புடன் அதற்கு அப்ளை செய்தேன்.

அகமதாபாத் எனக்கு பெங்களூர் ஆகிவிடாது. ஆனாலும் ஒரு தப்பித்தல் அகமதாபாத்தில் கிடைக்கும். அப்போது எனக்கு தப்பித்தல்தான் உடனடியாகத் தேவைப் பட்டது. என்னுடைய யோகம் நேர்முகத் தேர்விற்கு ஐஐஎம் என்னை திருவனந்தபுரத்திற்கு அழைத்தது. அங்கு போனால் நான் செலக்ட் ஆகிவிட்டேன். ஆர்டர் அகமதாபத்திலிருது இன்னும் ஒரு வாரத்தில் வரும் என்றார்கள்.

அகமதாபாத் போகும் என் எண்ணத்தையும் விருப்பத்தையும் அப்பாவிடம் சொன்னேன். வாழ்க்கையில் நான் அவரிடம் கேட்ட எதையும் அப்பா எனக்குத் தரத் தயங்கியதும் இல்லை, மறுத்ததும் இல்லை. அப்பா சற்று யோசித்து, “அகமதாபாத் குஜராத்தில் இருக்கிறது; உனக்கோ தமிழ் தவிர எதவும் பேசத் தெரியாது… ஹிந்தியும் தெரியாது. உன் இஷ்டம்..” என்றார்.

அப்போது தமிழகத்தில் காங்கிரசை தோற்கடித்துவிட்டு திமுக ஆட்சிக்கு வந்திருந்தது. அப்பாவி ஜனங்களிடையே துவேஷத்தையும், வெறுப்பையும் மூலதனமாக்கி ஆட்சிக்கு வந்த ஒரே குடும்பக் கட்சி திமுகதான். மொழி, இனம், மதம் என வெறுப்பைத் தூண்டிவிட்டு, தமிழ் தமிழ் என உசுப்பேத்தி கட்சியை குடும்பத்துடன் நடத்தி மக்களைச் சுரண்டி வாழும் கட்சி. நாங்களெல்லாம் ஹிந்தி மொழியை படிக்க விடாமல், திமுக “ஹிந்தி ஒழிக” என்ற கோஷத்தை எழுப்பி தமிழகத்தை குட்டிச்சுவராக மாற்ற ஆரமிபித்த கேவலமான கால கட்டம் அது.

அதன் ‘தாக்கம்’ இன்னமும் தமிழகத்தை வதைத்துக் கொண்டிருகிறது.

அகமதாபாத் நான் செல்வதற்கு “உன் இஷ்டம்” என்று அப்பா சொன்னதும்தான் என் மனம் ஒரு நிலைக்கு வந்தது. அகமதாபாத் வாழ்க்கைக்கு ரயில் ஏற நான் காத்துக் கொண்டிருந்தேன்.

அப்படிக் காத்திருந்த அந்த இடைக்காலத்தில் எனக்கு சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் அறிமுகமாயிற்று. ஜெயகாந்தனின் கதைகளைப் படித்து ஒருவித உற்சாகத்தில் வீங்கிப் போயிருந்த எனக்கு, செல்லப்பாவின் ‘எழுத்து’ இதமாக இருந்தது. ஆசுவாசம் தந்தது.

நான் படித்த தூய சவேரியார் கல்லூரிக்கு அருகில் இருந்த சென்ட்ரல் லைப்ரரியில் ‘எழுத்து’ பத்திரிக்கையை விடாமல் படித்து வந்தேன். அந்த நூல் நிலையத்தில் யாராலும் தொடக்கூடப் படாமல் செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் மடிப்புக் கலையாமல் மேஜையின் மூலையில் கிடக்கும். வாசகர்கள் ஆனந்த விகடனையும், குமுதத்தையும்தான் விரும்பிப் படித்தார்கள். தரமான பத்திரிகைகளை அப்போதும் சரி, இப்போதும் சரி யாரும் தீண்டுவதில்லை.

‘எழுத்து’ படிக்க ஆரம்பித்ததில் இருந்து ஒரு புதிய ‘எழுத்து உலகம்’ என்னை அயராத வாசகனாய் கையில் எடுத்துக் கொண்டது. தவிர அந்த நூலகக் கிளையின் அலமாரிகள் எனக்கு ரா.சு.நல்ல பெருமாளின் ‘காலச் சக்கரம்’ மற்றும் ‘கல்லுக்குள் ஈரம்’ நாவல்களை அறிமுகப் படுத்தியது. படித்துப் பிரமித்துப் போனேன். உடனே பாளையங்கோட்டை வாய்க்கால் தெருவில் இருந்த அவருடைய வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்தேன்.

சி.சு.செல்லப்பாவின் ‘சரசாவின் பொம்மை’ தமிழ் சிறுகதைகளில் மறக்க முடியாதது. அவருடைய ‘வாடி வாசல்’ குறுநாவல் தமிழ் இலக்கியத்தில் இணை சொல்ல முடியாத படைப்பு. அன்றைய கால கட்டத்தில் தமிழக இலக்கியவாதிகள் அடிக்கடி அபிப்பிராயம் ஒன்றை முன் வைத்தார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட ஜாதி சார்ந்த எழுத்தாளர்களால்தான் படைக்க இயலும் என்பதே அந்த அபிப்பிராயம். இது முற்றிலும் பிழையான அபிப்பிராயம். செல்லப்பாவின் ‘வாடி வாசல்’ பிராமண சமூகத்தைப் பற்றிய படைப்பு இல்லை. ஆனால் செல்லப்பா யார்?

நான் செல்லப்பாவால் மிகவும் ஈர்க்கப்பட்டு அவரைப் பார்க்க அவரது சொந்த ஊரான வத்தலகுண்டு போனேன். இரண்டு நாட்கள் அவருடன் அளவளாவினேன். அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது ஏராளம்.

“ஒரு சிறுகதை என்றால், ஓடுகிற பாம்பை நடுவில் பிடித்துத் தூக்குகிற மாதிரி இருக்கணும்… பாம்பு கையை கடித்து விடுமோ; அல்லது கையை உதறிவிட்டு தப்பித்துக் கொள்வானோ என்கிற பதைபதைப்பு இருக்க வேண்டும்.. அடுத்து என்ன ஆகுமோ என்கிற எதிர்பார்ப்புதான் சிறந்த படைப்பு” என்று செல்லப்பா சொன்னார்.

மொத்த வாழ்க்கையையும் இலக்கியத்திற்கு அர்பணித்த இலக்கிய யாத்ரீகன் சி.சு.செல்லப்பா. அந்த அயராத இலக்கிய யாத்ரீகனின் மரணம், அதற்கான மாபெரும் அஞ்சலியைப் பெறவில்லை என்பது மிகப்பெரிய சோகம். அவரை நினைவு கூறும் இலக்கிய கொண்டாட்டங்கள் கொண்டாடப் படவில்லை. காரணம், அதற்கான நிறுவன பலம் செல்லப்பாவிற்குப் பின்னால் இல்லை. அவருக்குக் கொடி கட்டுவதற்கான வலைப்பின்னல் அமைப்புகள் உலகம் பூராவும் விரிந்து கிடக்கவில்லை.

Print Friendly, PDF & Email

1 thought on “சி.சு.செல்லப்பா

  1. திரு. கண்ணனின் பயணத்தில் அதிகம் புகழப் படாத ஆனால் புகழப் படவேண்டிய எழுத்தாளர் பெருமக்களின் ஒரு சலனப் படம் மாதிரி கிடைக்கிறது. நன்று.
    லென்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *