கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 10,185 
 

“ஈஸ்வரா” சொம்பைக் கையில் வாங்கி கை கால்களை அலம்பினார் விஸ்வநாதய்யர். மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரமாக ஒரு காலத்தில் இருந்து தற்போது என்னவென்றே தெரியாமல் இருக்கும் துணியை உதறி கையைத் துடைத்துக் கொண்டவர், அப்படியே முள்முள்ளாக இருந்த முன்னுச்சி மண்டையைத் துடைத்துக் கொண்டார். முற்றத்தைக் கடந்து பின் கதவைத் திறந்து புழக்கைடைக்குச் சென்றவர் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த தோய்க்கும் கல்லில் அமர்ந்தார். அவர் பின்னாலேயே வந்த விசாலம், கிணற்றில் சாய்ந்தவாறு நின்று கொண்டாள்.

விசாலம் கேட்டாள் “ஏன்னா, போன காரியம் என்னாச்சு? அவா என்ன சொன்னா?”

“என்னத்தச் சொல்ல விசாலா! அவரும் கையை விரிச்சுட்டார். இந்தக் காலத்திலே போஸ்ட் கிராஜுவேட் படிச்சவனே வேலைக்கு அல்லாடறான் ஸ்வாமி. இதுலே உம்ம பையன் வெறும் பி. ஏ. கிராஜுவேட். இங்கிலீஷும் பெரிசா வராது. சமஸ்கிருதத்தையும் தமிழையும் மட்டும் வச்சிண்டு இந்தக் காலத்திலே ஒண்ணுமே பண்ண முடியாது. நீங்க எவ்வளோ பெரிய ஞானி. நீங்க போய் இப்படி உம்ம பையனை கவனிக்காம விட்டுட்டேளெ?” அப்படீங்கறார். இருந்தாலும் சித்த பொறுங்கோ… எப்படியாவது ஒரு வேலை பண்ணி வெக்கறேன்னு சொல்லியிருக்கார்.

“நான் என்ன பண்றது விசாலம்? நானும் நம்ம கொழந்தே ஒரு வேத வித்தா வரணும்னுதான் அவனுக்கு வேதத்தையும் மந்த்ரங்களையும் பாடம் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா காலம் போற போக்கிலே வேதத்தை ரக்ஷிக்கறதுக்கு யாருமே இல்லேன்னு ஆயிடுத்து. என்னோட வரும்படிக்கேத்த நம்ம கிராமத்து ஸ்கூல்லேதான் சேக்க முடிஞ்சது. கான்வெண்டிலே சேக்கிற அளவுக்கு நமக்கு வசதியில்லே. நான் படிச்சப்போல்லாம் வாத்தியார்லாம் உசுரக் குடுத்து சொல்லிக் குடுப்பா. எனக்கு இங்கிலீஷ் பாஷை தண்ணிபட்ட பாடாயிருக்குன்னா அதுக்கு அவாதான் காரணம். ஆனாக்கா இப்போ இருக்க வாத்தியார்லாம்….”

விஸ்வநாதய்யர் பெரிய ஞானி என்பதில் விசாலத்துக்குப் பரம திருப்தி. ஆனா மனசுக்கு திருப்தி தருவதெல்லாம் வயித்துக்குத் திருப்தி தருவதில்லையே…. பாதி நாள் அரை வயிறுதான். ஸ்ரார்த்தம் பண்ணி வைக்கப் போனா இஷ்டப்படி கார்த்தால ஒம்பது மணிக்குள்ளே முடிச்சிட்டு ஆஃபீஸ் போகணும்னு பறக்கறவாளுக்கும் இவருக்கும் ஒத்தே வராது. அதனாலே லீவு நாளாயிருந்தா மட்டும்தான் இவரைக் கூப்பிடுவா. மத்தபடி வேலையிலிருந்து ரிட்டையர் ஆனவா ஒரு ரெண்டு மூணு பேர் இருக்கா. அவா கூப்பிட்டாதான் உண்டு. கல்யாணங்களுக்கும் போறதுண்டு. அங்கேயும் இதே தகறாருதான். மேடையிலே உட்கார்ந்திருக்கற பெண்ணோ பையனோ யாரோடவாது பேசினால் உடனே உர்ருனு கோவம் வந்துடும். “அக்னியை முன்னாடி வெச்சிண்டு இப்படி அபத்தமா பேசக்கூடாது’’ன்னு பொரிஞ்சு தள்ளிடுவார்.

பத்திரிகைகள்லேர்ந்தும் மீடியாவிலேர்ந்தும் பல பேர், அப்புறம் உபன்யாசம் பண்றவா சிலபேர், இவரை தேடி வந்து வேதத்திலேயும் உபநிஷதங்களிலேயும் சந்தேகம் கேட்டுண்டு போவா. அப்புறம் அவாளோட கண்டுபிடிப்பு மாதிரி அது உலகத்துக்கு சொல்லப்படும். விஸ்வநாதய்யருக்கு ஒரு வேஷ்டி, துண்டு, வெத்திலை. பாக்கு, பழம்தான். அதுவும் அவர் வேண்டாம்னுதான் சொல்லுவார். இருந்தாலும் இது உங்களை மாதிரி ஒரு வேதவித்தைப் பாக்கும்போது வெறுங்கையோட போகக்கூடாதுன்னு சம்ப்ரதாயம்னு சொல்லி மடக்கிடுவா.

வேஷ்டியும் துண்டும் ஈரமாக்கி வயிற்றில் காயப்போட உதவும் பல நாள்.

இந்த வீடு கூட யாரோ ஒருத்தர் இவருக்கு தானமாக் கொடுத்தது. இவரோட சின்ன வயசுலேயே இவரோட பாண்டித்யத்தைப் பார்த்த ஒருத்தர் தானமா எழுதிக் கொடுத்தார். இத்தனை வருஷத்தில் அங்காங்கே சுவரில் காரையெல்லாம் பெயர்ந்து, ஓடெல்லாம் உடைந்து போய் மழை பெய்தால் வீட்டுக்குள்ளே இருப்பவர்களை நனைத்து… இதையெல்லாம் சரி செய்யணும்னா நிறைய செலவாகும். எங்கே போறது?

“இலையைப் போடவா?”

ஒன்றும் பேசாமல் கூடத்துக்குள் நுழைந்தார் விஸ்வநாதய்யர்.

இலையைப் போட்டு தண்ணீர் தெளித்ததும் காலையில் எடுத்து வைத்திருந்த பழைய சாதத்தைப் போட்டாள் விசாலம்.

“அவனுக்கு இருக்கா?”

“கொஞ்சமா சாதம் வடிச்சேன் கார்த்தால. அது அவனுக்கு இருக்கட்டும். நாம பழையதை சாப்டுக்கலாம்”

எப்போதோ மாங்காய் சீஸனில் போட்டு வைத்திருந்த மாங்காய் வத்தலில் நாலு ஊறவைத்து புளிக்குப் பதில் அதையே ஒப்பேத்தி தோட்டத்தில் விளைந்த ரெண்டு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போட்டு ஒரு மாதிரி ரசம் வைத்திருந்தாள் விசாலம். பழைய சாதத்தில் சூடான ரசத்தை விட்டுப் பிசைந்ததும் சாதம் ஒரு மாதிரி ஆகி விட்டது.

“விசாலா. உன் கைப்பக்குவம் இத்தனை வருஷமாகியும் குறையலேடி”

நொந்து போன சாதத்திலும் நொந்து போகாத தங்களது தாம்பத்யத்தை நினைத்து மகிழ்ந்தாள் விசாலம்.

சாப்பிட்டு விட்டு இலையை எடுத்துத் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மாட்டுக்குப் போட்டார் விஸ்வநாதய்யர். அதுவும் பாவம் கறவை நின்று பல மாதங்களாகி விட்டது. இருந்தும் எப்படியோ அதைப் போஷித்து வருகிறார். அதன் கிட்டே போய் அதனைத் தடவிக் கொடுத்தார். அதுவும் தலையை ஆட்டியபடி அவரை நக்க முற்பட்டது.

“பிராமணனும் பசுமாடும் ஒண்ணுன்னு சொல்லுவா… இப்போ கொஞ்சம் மாத்தி சொல்லணும் – வேதபிராமணனும் கறவை நிந்த பசுவும் ஒண்ணு. போஷிக்கறதுக்கு ஆளில்லை.”

சாயங்காலம். சந்தியாவந்தனம் முடிந்தவுடன் ஒரு திரி மற்றும் ஏற்றி வைக்கப்பட்ட குத்து விளக்கின் முன் உட்கார்ந்து சுந்தரகாண்டம் வாசித்தார்.

“விசாலம், அவன் எங்கே?”

“யாரோ சினேகிதனப் பாக்கப் போறேன்னு கும்மோணம் வரைக்கும் போயிட்டு வரேன்னான். சைக்கிள்ளேதான் போனான். ஒரு வேளை சைக்கிள் பஞ்சராயிடுத்தோ என்னமோ?”

“ஈஸ்வரா… கிட்டத்தட்ட இருபது மைலாச்சே… எவ்ளோ தூரம் குழந்தை சைக்கிளை ஓட்டிண்டு போயிருக்கான்? அதுக்கேத்த தெம்பு கூட இல்லையே அவனுக்கு…. பகவானே ஏண்டா எங்களை இப்படி சோதிக்கறே?”

எங்கே விசாலம் காதில் விழுந்தால் அவளும் சேர்ந்து கவலைப்படுவாளோ என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டார் விஸ்வநாதய்யர்.

கொஞ்ச நேரத்தில் சைக்கிள் மணியின் ஓசை கேட்டது. துருப்பிடித்த அந்த மணி அது மாலிதான் என்று சொல்லியது.

“எங்கேடா போயிட்டு வரே?”

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் மாலி. இருபத்தியஞ்சு வயசாறது. ஆனாலும் இன்னும் ஒரு குழந்தையின் சாயல் அவனை விட்டுப் போகலை. கொஞ்சமும் கல்மிஷம் இல்லாத குணமும் வேத அத்யயனமும்தான் இப்படி ஒரு தேஜஸைக் குடுத்திருக்குன்னு நினைச்சுண்டார் விஸ்வநாதய்யர்.

“ஒரு கை பிடிங்கோப்பா”

சைக்கிளின் கேரியரில் இருந்து ஒரு பையை இறக்கினான் மாலி.

“என்னடா இது?”

“அப்பா என்னோட சினேகிதன் குமாரசாமியைப் பாக்கப் போனேனோல்லியோ… அவன் கொஞ்சம் அரிசியும் காய்கறியும் கொடுத்தான்”

விஸ்வநாதய்யருக்குப் பெருத்த கோபம் எழுந்தது. “ஏண்டா. எங்கப்பா ஒண்ணும் சேத்து வைக்கலைன்னு சொல்லி கண்டவா கிட்டே பிக்ஷை வாங்கிண்டு வரயா?”

“அப்பா… ஏம்பா கோபப்படறேள்? அப்படியெல்லாம் செய்வேனாப்பா? அவனோட தென்னந்தோப்புக்குப் போயிருந்தேன். வழக்கமா தேங்கா உரிச்சிப்போடற ஆள் வரலயாம். அதனால நான் உரிச்சிப் போட்டேன். சினேகிதனாச்சே. காசா எப்படிக் குடுக்கறதுன்னு கொஞ்சம் அரிசி, பருப்பு, காய்கறி எண்ணெய்னு குடுத்து விட்டான்”

“மாலி…” கண்கள் கலங்கியபடி அவனது கைகளைப் பிடித்துக் கொண்டார் விஸ்வநாதய்யர். கைகள் கன்றிப் போய் காய்த்திருந்தன. “வேதத்தை ரக்ஷிக்கறவா இல்லாம போயிண்டிருக்கா இந்த லோகத்துலே. ஆனா அதுக்கு நீ பலியாகணுமா?:

பேசமுடியாமல் உள்ளே கை காட்டினார். அவனும் புரிந்து கொண்டு கைகால் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.

உழைத்த களைப்பில் தூங்கி விட்டான் மாலி. விசாலமும் விஸ்வநாதய்யரும் தூக்கம் வராமல் துக்கத்தில் உழன்றனர்.

அமாவாசைக்கு மூன்று நாட்களே இருந்ததால் நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தன.

“விசாலா. இதுக்காகவா நான் இவனை வேதம் படிக்க வெச்சேன்? தேங்காய் உறிக்கவா….”

“பகவான் நம்மளை சோதிக்கறான். வேறென்ன சொல்றது… இந்தக் கஷ்டத்தையெல்லாம் நாம பாக்கணும்னு இருக்கே.. அதை நினைச்சாத்தான்….”

“என்ன சொல்றே விசாலா.. நாமளும் போயிட்டா அந்தக் குழந்தைக்கு யாரு கதி? இன்னும் ஒரு வேலை பண்ணி வெக்கலே… அதுக்கப்புறம் கல்யாணம் கார்த்தின்னு ஆகணும்…. இதையெல்லாம் பாக்கணும்னு ஆசையில்லையா உனக்கு?”

“இதெல்லாம் மாயைன்னு நீங்கதானே சொல்லுவேள்?”

“விசாலா….”

அவர் குரலில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்து பயந்துபோனாள் விசாலம்.

“ஷமிக்கணும். நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?”

“இல்லே விசாலா… நான்தான் எதோ அஞ்ஞானத்துல பேசிட்டேன்…”

எது ஞானம் எது அஞ்ஞானம்னு தெரியாமலே தூங்கிப் போனாள் விசாலம்.

இரண்டு நாட்களாக வீட்டை விட்டு எங்கேயும் போகாமல் தோட்டத்திலேயே ஏதேதோ செய்து கொண்டிருந்தான் மாலி. மண்டிக்கிடந்த புதர்களை அகற்றினான். புதிதாக விதைகளை ஊன்றினான். எங்கிருந்தோ போய் லக்ஷ்மிக்கு புற்கள் பறித்து வந்தான். ராத்திரி சீக்கிரமே தூங்கப் போய்விட்டான்.

எப்போதும் காலையில் விஸ்வநாதய்யர்தான் சீக்கிரம் எழுந்திருப்பார். அன்று மாலி முந்திக் கொண்டான். காலை நாலு மணிக்கே எழுந்து குளித்து விட்டு ஜபதபங்களை முடித்து விட்டுக் கையில் ஒரு பையுடன் கிளம்பி விட்டான். போகும்போது எங்கே போகிறாய் என்று கேட்க மனமில்லை விஸ்வநாதய்யருக்கு.

சைக்கிள் தெருமுனையில் உருண்டோடி மறையும் ஓசை கேட்டது.

“எங்கே போறான் இவ்ளோ காலங்கார்த்தாலே?”

“எனக்குத் தெரியலே… காலங்கார்த்தாலே நாலு மணிக்கெல்லாம் எழுப்பும்மான்னான். ஆனா நான் எழுப்பறதுக்கு முன்னாடியே அவனே எழுந்துண்டுட்டான்.”

“மறுபடியும் தேங்காய் பறிக்கவா?”

“அதுக்கு இவ்ளோ காலங்கார்த்தாலேயா?”

“ஈஸ்வரா… இந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல வழி காட்ட மாட்டியா?”

மாலி கொண்டு வந்த அரிசியும் பருப்பும் இன்னும் ஒரு வாரத்துக்கு வரும். கார்தாலயே சுடச்சுட சாதம் போட்டாள் விசாலம். வாழையிலையில் சுடச்சுட போட்டதும் ஆவி எழுந்து நாசியை நிறைத்தது. பையன் என்ன பண்றானோ என்ற விசாரத்திலேயே அவரால் அந்த மணத்தை அனுபவிக்க முடியவில்லை.

மதியம் மூணு மணி இருக்கும். சற்றே திண்ணையில் கண்ணசந்த விஸ்வநாதய்யர் சைக்கிளின் ஒலி கேட்டுக் கண் விழித்தார்.

மாலிதான். சைக்கிளில் ஒரு மூட்டை. வழக்கத்திற்கு மாறாகப் பஞ்சகச்சம் கட்டியிருந்தான். மேலே சட்டையில்லை.

“என்னடா இது?”

“ஒரு கை பிடிங்கோப்பா”

இறக்கியதும் உள்ளே கொண்டு போனான் மாலி.

மூட்டையைப் பிரித்து உள்ளே இருந்ததை எடுத்து வைத்தான் மாலி.

அரிசி, பருப்பு, வாழைக்காய்கள். எண்ணெய், நாலு வேஷ்டி. துண்டு. ஒரு புடவை.

விஸ்வநாதய்யருக்கு ஏதோ புரிவது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது.

“மாலி. என்னடா இதெல்லாம்? இன்னிக்கும் தேங்கா உறிச்சியா?”

“இல்லேப்பா”

“பின்னே… இதெல்லாம் ஏதுடா?”

“அப்பா இன்னிக்கு அமாவாசையில்லையா. அதான் தர்ப்பணத்துக்குப் போயிருந்தேன்”

“மாலி…. வேணாம்டா…. வேண்டவே வேண்டாம்…. நீயும் என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டாம்டா.. எங்கேயாவது ஒரு நல்ல வேலை பாத்து வெக்கறேன்… கொஞ்சம் பொறுமையா இருடா”

“ஏம்பா… இதிலென்னப்பா தப்பு….”

“வேண்டவே வேணாம்டா.. இது கலிகாலம். வேதத்தை ரக்ஷிக்கறவா கொறஞ்சு போயிட்டா… கலி முத்திப் போச்சு…. வேதத்தை நம்பி நம்மால ஜீவனம் பண்ண முடியாதுடா”

“இல்லேப்பா…. இன்னிக்கு மட்டும் நாலு எடத்துக்கு தர்ப்பணத்துக்குக் கூப்பிட்டாப்பா…. எல்லாம் என்னோட சினேகிதன் குமாரசாமியோட பங்காளிகள். கையிலே நிறைய தக்ஷிணையும் தந்தா”

“ஈஸ்வரா….அவாள்லாம் அப்ராமணாளாச்சேடா… தக்ஷிணைக்காக என்ன வேணாம்னாலும் பண்ணலாம்னு நினைச்சிட்டியா? வேதத்தை நல்ல விலைக்கு விக்க ஆரம்பிச்சிட்டியா? இதுபெரிய பாவம்டா..:”

“அப்பா வேதத்தை ரக்ஷிக்கறதுன்னா என்னப்பா?”

“என்னடா. என்னையே கேள்வி கேக்கறயா?”

“அப்பா அப்படி இல்லேப்பா… தயவு செஞ்சி சொல்லுங்கோளேன்”

“வேதத்தை அத்யயனம் பண்றது, வேதம் சொல்றது, அடுத்த தலைமுறைக்கு வேதத்தை எடுத்துண்டுபோறது… இதெல்லாம் தான் வேத ரக்ஷணம்”

“அப்போ அதை வேதம் படிக்கறதுக்கு நமக்கு மட்டும்தான் உரிமை இருக்குன்னு சொல்ற நாம செய்யணுமா? இல்லே வேதத்தையே தொடக்கூடாதுன்னு ஒதுக்கி வைக்கப்பட்டவா செய்யணுமாப்பா?”

“மாலீ……”

“சொல்லுங்கோப்பா,,, வேதம் படிக்கறதுக்குன்னே பொறந்தவா நாமன்னு சொல்றேளே. அப்போ நாமதானே வேதத்தை ரக்ஷிக்கணும்?”

விஸ்வநாதய்யருக்கு ஏதோ ஒன்று உலுக்கியது போலிருந்தது.

“வேதம் படிக்கற பிராமணாளை ரக்ஷிக்கலைன்னு சொல்லுங்கோ. நான் ஒத்துக்கறேன்..ஒரு காலத்துலே ஒசந்த குலம்னு சொல்லிண்டு எல்லார்கிட்டேந்தும் ஒதுங்கி நின்னோம். இப்போ? நீங்கள்லாம் ஒசத்தின்னு மத்தவா நம்மளை ஒதுக்கி வைக்கறா… இதிலே யாரைப்பா குறை சொல்றது? அப்ராமணாள்னு சொன்னேளே…. எல்லா ஆத்மாவும் ஒண்ணுதானேன்னு ஆதிசங்கரருக்கு அந்த சங்கரனே புரியவைக்கலயாப்பா? ஜீவனோட இருக்கும் ஆத்மாவே ஒண்ணுங்கிறபோது ஜீவன் போனதுக்கப்புறம் ஏதுப்பா வித்யாசம்? அந்த ஆத்மாக்களும் பித்ருக்கள் தானேப்பா… எல்லா ஆத்மாவையும் ஒண்ணா பாவிச்சு கரை சேத்து விடறதுதானேப்பா ஒரு வேதம் படிச்ச பிராமணனோட கடமை?”

விஸ்வநாதய்யர் திண்ணையில் சரிந்தார்.

ஆனா ஒரே நாள்லே நாலு எடத்துக்கா? எப்படிடா? ஒரு ஸ்ரார்த்தத்துக்கே அரை நாள் வேணுமேடா.. அவாளோட அவசரத்துக்காக மந்த்ரங்களைக் குறைச்சு பின்னமாக்கி சீக்கிரமா முடிச்சு ஒரே நாள்லே நாலு எடத்துக்குத் தர்ப்பணத்துக்குப் போனியா?

“ஒரே நாள்லே நாலு எடத்துலே தர்ப்பணம் பண்றது சாஸ்த்ர விரோதம்தான். இல்லேங்கலே. ஆனா யோசிச்சுப் பாருங்கோப்பா… இன்னைக்கு இருக்கற அவசர உலகத்துலே அரை நாள் செலவு பண்ணி தர்ப்பணம் பண்றதுங்கறது எல்லாராலும் முடியுமா? இப்போ நாம ஏன் அரை வயிறும் கால் வயிரும் சாப்பிட்டு உயிரோட இருக்கணும்னு பாக்கறோம்?

நாம உயிரோட இருந்தாத்தானே வேதத்தை அத்யயனம் பண்ண முடியும்? அது மாதிரித்தாம்பா… இந்தக் கலியுகத்திலே தர்மதேவதையே ஒரு காலோட நிக்கறான்னு சொல்றோமே. அது மாதிரி இப்போ நான் அவாளுக்கு ஏத்தா மாதிரி தர்ப்பணத்தை சீக்கிரமா பண்ணி முடிக்கலேன்னா தர்ப்பணமே வேண்டாம்னு போயிடுவா… அதுக்கு இது பரவாயில்லை இல்லையா?”

விஸ்வநாதய்யரின் கண்களில் நீர் பெருகியது.

“ஏதோ கொஞ்சமாவது வேதத்து மேலயும் சம்ப்ரதாயங்கள் மேலேயும் ஜனங்களுக்கு நம்பிக்கை இருக்கே அதை நினைச்சு சந்தோஷப்படணும்பா…. இது பூர்ணமில்லேதான். ஆனா பூஜ்யமுமில்லேப்பா….”

மாலி மெதுவாக விஸ்வநாதய்யரின் பாதங்களருகில் உட்கார்ந்தான்.

“அப்பா… நீங்கதானேப்பா சொல்வேள்… பிராம்மணனாப் பிறக்கறது ரொம்ப உசந்த பாக்கியம். அப்புறம்தான் ஒரு ஆன்மா மோட்சத்துக்குப் போகும்னு… அப்போ உசந்த ஜென்மா மட்டும் வேணும். அதுக்கேத்த கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாதுன்னா எப்படிப்பா? கால்வயிறு அரைவயிறானாலும் வேதத்தை நாமதானேப்பா ரக்ஷிக்கணும்?”

அவரது மடியில் தனது தலையைச் சாய்த்தான் மாலி.

“அப்பா நான் ஏதாவது தப்பாப் பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்கோ.”

“மாலீ…. ….” விஸ்வநாதய்யரின் கைகள் உயர்ந்து கும்பிட்டன.

ஸ்வாமிமலைக் கோவிலிலிருந்து சாயரட்சை பூஜைக்கான மணி ஒலித்தது.

Print Friendly, PDF & Email

4 thoughts on “வேத வித்து

  1. இரண்டு மூன்று விஷயங்களில் நெருடுகிறது. மற்றபடி எனது நண்பரின் எழுத்து அசாத்தியமானது என்று நான் கர்வம் கொள்கிறேன்.
    நெருடும் இடங்கள்,
    பிரம்மச்சாரி பையன் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு வருவது.
    சிரார்தம், தர்ப்பணம் வித்தியாசங்கள் அடிபட்டுப் போயுள்ளன.
    சிரார்தம் செய்ய அரைநாள் தேவைப்படும். தர்ப்பணம் மிஞ்சிப்போனால் 30 நிமிட வேலை.

  2. திரு.ஶ்ரீஅருண்குமார் முகநூலில் இருந்தவர் என்று நினைக்கிறேன். மிகவும் யதார்த்தமான கதை. வாழ்த்துக்கள். தர்மத்திறகும் அதர்மத்திற்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம்.

  3. இக்கதையின் நாயகன் மாலிதான் உண்மையான பிராமணன் — உயர்வு, மட்டம் என்று பாராது பிறருக்குத் தன்னாலான சேவையைச் செய்வதால்.

  4. ஹரே கிருஷ்ண. ஓரிரு முறைகள் இப்பதிவை படித்துள்ளேன். இந்த பதிவை மறுபடியும் படித்ததில் மிக்க சந்தோஷம் அடைந்தேன். இன்றைய நிலவரத்தை கதையாசிரியர் மிக நன்றாக பதிவு செய்த்துள்ளார். நன்றி ஹரே கிருஷ்ண.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *