கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 4,868 
 

அவையோருக்கு என் கழிவான வணக்கம்! மன்னிக்கவும் , கனிவான வணக்கம்!

கைத்தட்டல்…

கழிவு என்றவுடன் எப்படி நாம் முகம் சுழிக்கின்றோம்? ஆனால் முகம் சுழிக்கின்ற விஷயம் இல்லை. முகம் மலரும் விஷயம்!?

ஆம் ! அதன் அருமை அவதிப்படுவோருக்கு மட்டுமே புரியும்.

கழிவு வராதவரை கேட்டுப்பாருங்கள்! அல்லது கழிவு அறை இல்லாதவங்களை கேட்டுப் பாருங்கள்! அதன் கஷ்டம் புரியும்!

இன்று நம் எல்லோர் வீட்டலும், ஒன்று, அல்லது மேற்பட்ட கழிவறைகள் உண்டு.நாம் அதன் அத்தியாவசத்தை உணர்ந்து, அதற்காக இடம் ஒதுக்கி, சிலபேர், இல்லை பல பேர் வாஸ்து பார்த்து பார்த்து கட்டியுள்ளோம்.

கைத்தட்டல்..

வாஸ்து பார்த்து கட்டிய நாம், வசதியே இல்லாத, கழிவறை வசதிக் கூட இல்லாத குடும்பங்களும் நம் நாட்டில் உள்ளது, அதன் பால் நம் சிந்தனை திரும்புவது எப்போது?

ஒரு நாட்டின் வளர்ச்சி கிராமத்தில் தொடங்குகிறது , என்றால்…
தூய்மை மற்றும் சுகாதாரம் கிராமத்திற்கு இன்று வரை செல்லாதது ஏன்?

அரசாங்கம் பல திட்டங்களை தீட்டி மக்களுக்கு கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் திட்டங்கள் பயனாளிகளை சென்றடைகிறதா? என்றால் ஒரு பெரிய கேள்வி குறி?

வட நாட்டிலே மணப்பெண், தான் புகுந்த வீட்டில் கழிவறை இல்லாததால் வாழ மறுத்து தாய் வீட்டிற்கு வரும் அளவிற்கு விழிப்புணர்வு வந்து விட்டது.

இன்றும் நம் கிராமங்களில் வெளியே ஒதுங்குவது குறைந்துள்ளதா? இல்லை.

அரசுப் பள்ளிகள் எல்லாம் கழிவறைகளில் தன்னிறைவு அடைந்து விட்டதா? இல்லை.

தூய்மைக்கான விழிப்புணர்வு இல்லாமல், நோயினால் அவதிப் படுவதும், ஆரோக்கியம் குன்றிக் காணப்படுவதும் கிராமங்களில் வளர்ச்சியை பாதிக்கும்.

கிராமங்களிலும்,பள்ளிகளிலும் கழிப்பறைகள் அமைப்போம்!!

தூய்மையான கிராமமே வளர்சியடைந்த இந்தியா! என்பதை புரிந்துக் கொள்வோம்.

கைத்தட்டல்…. நன்றி ! வணக்கம்!!

நல்லா பேசினே! அபி! குட். யாரு அப்பா எழுதியதா?

சார் உங்கப் பொண்னு பிண்ணிட்டா!

இதெல்லாம் அபி பயிலும் பள்ளி தூய்மை விழாவில் மேடைப் பேச்சு போட்டியில் …. ஆசிரியர்களின், பின்னூட்டம்.

அபி, பெண்ணாகடத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி.

அபியின் அப்பா அன்பழகன், இறையூர் நடு நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணி புரிகிறார்.

மறு நாள் சுதந்திர தினம் ,

அன்பழகன் பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டு இருக்கையில்,

அப்பா நானும் உங்களுடன் வருகிறேன்! என்றாள் அபி.

வேண்டாம் அபி! இன்றைக்கு வேண்டாம், உனக்கு உடம்பு சரியா இல்லை, அதனாலேதான் உன்னை உன் பள்ளிக்கே அனுப்பலே.

ஓய்வு எடுத்துக்கோ! என்றாள் அம்மா!

வரட்டும், நான் பார்த்துக்கிறேன்,கொஞ்ச நேரம்தான், கொடி ஏற்றி, மிட்டாய் கொடுத்துட்டு வரவேண்டியதுதானே! என்றார்.

அதற்குள் அவள் தனது பள்ளியின் சீருடை அணிந்து தயாராக இருந்தாள்.

ஏம்மா, அந்த டிரெஸ் நல்லாதானே இருந்தது?!

பள்ளிக்கு போகிறோம், கலராடை அணிவதை விட சீருடைதான் நல்லா இருக்கும். என முதிர்ச்சியாக யோசித்தாள் அபி.

பள்ளியில் ,மாணவ,மாணவியர்கள் அழகாக தரையில் செம்பருத்தி பூ போல் அமர்ந்து இருக்க, மேடையில், தலைமை ஆசிரியர், சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கத் தலைவர் அவர்கள் அமர கொடிக்கம்பம் அருகே மாக்கோலம் ,பள்ளி எங்கும் வண்ணக் கொடிகள், இரு பால் ஆசிரியர்கள் வரிசையாக நிற்க, அந்த இடமே விழாக் கோலம் பூண்டு இருந்தது.

அபியின் வருகையை அனைத்து ஆசிரியர்களும் வரவேற்று அவளிடம் பேசிக் கொண்டு, வட்டாரக் கல்வி அலுவலரின் வருகைக்காக காத்து இருந்தனர்.

அப்பா,டாய்லெட் எங்கப்பா இருக்கு?

ஏன்? அதோ அங்கிருக்கு.

பாத்ரூம் போகனும் அப்பா! என்றாள் அபி.

வாம்மா,தலைமை ஆசிரியரின் இல்லம் பக்கத்தில்தான் இருக்கு. அங்கே போகலாம்.

ஏம்பா, எல்லோரும் அங்கேதான் போவாங்களா?

இல்ல,இங்கே,நல்லா இருக்காது. மறைவுச் சுவர் இடிந்து போய் இருக்கும். அதான் அபி. நீ வா! ஆசிரியைகளுக்கான அறை இருக்கு! என்றார்.

இல்லை, நான் வரலை, அடக்கிக் கொள்கிறேன்.

அடக்கிக் கொள்கிறேன் என்ற சொல், ஒற்றை வரி இல்லை. அவளின் வலியை உணர்த்தியது.

இவரின் இயலாமையை உணர்த்தியது. தந்தையாக! ஆசிரியனாக, ஒரு சமூக பிரதிநிதியாக.

அனைவரும் மேடையில் பேசி முடிக்கும் தருவாயில்…. அப்பா! நான் பள்ளியில் அன்று பேசியதை இங்கேயும் பேசி காண்பிக்கட்டுமா? எனக் கேட்டாள்.

தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்து பின் பேசத் துவங்கிளாள்.

அனைவருக்கும் என் கழிவான வணக்கம். மன்னிக்கவும்.
கனிவான வணக்கம்.என ஆரம்பித்தாள்..

பள்ளியில் இருக்கும் வகுப்பறைகள் மன வளர்ச்சிக்கு வித்திடும்.!
கழிவறை இல்லாப் பள்ளிகள் மன உளைச்சளுக்கு காரணமாகிடும்!
என முடித்தாள் அபி!

கழிவறை பற்றி அன்று அங்கே தனது பள்ளியில் பேசியதற்கு அனைவரும் உரையை கேட்டு நடு நடுவே கைத்தட்டி பாராட்டுத் தெரிவித்தனர். ஆனால் இப் பள்ளியில் இறுதி வரை கை தட்டவே இல்லை.

இவள் உரையை முடித்தவுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பலத்த நீண்ட கர ஓசையை அவளுக்கு அளித்தார்கள்.

நன்றி எனக் கூறி விட்டு,

நம் பள்ளியில் கழிவறை உள்ளதா? இருக்கிறது, ஆனால் பயன் படுத்தும் நிலையில் இல்லாத நிலையைக் கண்டு இங்கேநான் வேதனையோடு பதிவு செய்கின்றேன்.
சிறு பிள்ளை திருஞானசம்பந்தர் நடந்து துயரப்படக்கூடது என முத்துப்பல்லக்கு வழங்கியவர் நம் தாகம் தீர்த்த இறையூர் ஈசன்..

நாற்பது கிராமங்களுக்கு நீர் கொடுக்கும் நம் ஊரில் ஒரு பள்ளியில் சுத்தமான கழிவறை இல்லையா நம் பிளைக்களுக்கு… ?

வட்டார கல்வி அலுவலர் அவர்கள் முன்னிலையில் கூறுகின்றேன்,

என் உண்டியல் சேமிப்பு சுமார் ஆறாயிரம் ரூபாய், மற்றும் வரவிருக்கும் தீபாவளிக்கு எனக்காக என் அப்பா எடுக்கும் புத்தாடையை தவிர்த்து ஒரு நான்காயிரம் ரூபாய், ஆக ரூபாய் பத்தாயிரம், இப் பள்ளிக்கு தரமான இரு கழிவறைகள் , கட்ட முதல் நிதியாக தர என் அப்பாவின் அனுமதியை வேண்டுகிறேன்.

சரிம்மா! என்றார்.சந்தோஷமாக!
நன்றி எனக் கூறி இறங்கி விட்டாள். அனைவரின் மனத்திலும் சிம்மாசனமிட்டு ஏறி அமர்ந்து விட்டாள்.

அதே சபதம் அனைத்து மாணவர்களும் ஏற்க, ஆசிரியர் பெருமக்களும் தனது ஒரு நாள் சம்பளத்தை வழங்கவும்,முன் வந்தனர். சிறப்பு விருந்தினராக வந்த ரோட்டரி சங்கத் தலைவர் எங்கள் மாவட்ட நிதியிலிருந்து தாங்கள் பங்களிப்பைப் போல் ஒரு மடங்கு பெற்றுத் தருகிறேன் என உறுதி கொடுத்தார்.

நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது.

அனைவரும் அபியைத் தேடினார்கள், மற்றவர்களின் வலிகளை உணரச்செய்து விட்டு, தன் வலி களைய தனது இல்லம் சென்றிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *