சுகமாக அழ வேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 7,542 
 

“கஸ்டங்களும் பிரச்சினையளும் நடக்கிற காலத்திலைதான் பிள்ளை வேதனை. காலங்கடந்த பிறகு அதுகளை நினைக்கேக்கை இவ்வளவையும் தாண்டி வந்திருக்கிறம் எண்ட பிரமிப்பும், சந்தோசமும் வரும். ஆனால் சந்தோசங்கள் அப்பிடியில்லை நடந்து முடிஞ்சபிறகு காலங்கடந்து நினைக்கேக்கை நடந்ததெல்லாம் அப்பிடியே தொடர்ந்திருக்கக்கூடாதோ எண்ட ஏக்கமும் கவலையும் தான் மிஞ்சும்.”
“நீ ஒண்டுக்கும் யோசியாதை பிள்ளை. எங்களுக்கும் விடிவுகாலம் வரும் அப்ப இதையெல்லாம் நினைச்சுப்பார் நான் சொன்னது சரியெண்டு விளங்கும்.”
எதிர்காலம் என்பது என்னவென்றே தெரியாத சூழலில் யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாத நெருக்கடியான – நெருடலான இந்த வாழ்விலும் ‘கதிரண்ணை’யால் மட்டும் எப்படி இவ்வளவு தெளிவாக, தீர்க்கமாக, குழப்பமில்லாமல் சிந்திக்க முடிகின்றது என்று நினைக்கும் போது பிரமிப்புத்தான் மிஞ்சுகிறது.
“நான் அவ்வளவாப் படிக்கேலைப்பிள்ளை. நாலு ஊருக்கும் திரிஞ்சு அடிபட்டதாலை மூண்டு பாஷையும் நல்லாப் பேசுவன், அதாலையே நான் மெத்தப் படிச்சதாய் கனபேர் நினைச்சுக்கொண்டிருக்கினம்”.
இவர் ஏதாவது அரச உயர்பதவியில் இருந்திருக்கலாம் என்ற ஊகத்தின்அடிப்படையில் நலன்புரிமுகாமில் பக்கத்துக்கூடாரத்தில் இருந்த பெண்மணி ஒருதடவை
“ஐயா என்ன உத்தியோகம் பார்த்தனீங்கள்”
என்று கேட்டு வைக்க ‘கதிரண்ணை’ சொன்ன பதில் இது
எப்போதுமே தெளிவாகவும் கனிவாகவும் பேசுகிற நிதானம், அந்த நிதானம் தந்த பிரமிப்பு, அதனால் ஏற்படக்கூடிய மரியாதை, இந்தத்தகுதிகள் எல்லாம் சேர்ந்து முட்கம்பி மூடிய முகாம் வாழ்விலும் ஒரு சமூகத்தலைவராக “கதிரண்ணை” என்கிற கதிர்காம சேகரத்தை உருவாக்கியிருந்தது
“அண்ணை உங்கடை குடும்பம் என்னமாதிரி? ஏதாவது தகவல் கிடைச்சுதோ.”
சுகம் விசாரித்தவரின் தொனி ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காகக் கேட்டது போலப்பட்டது. அவரிலும் தவறில்லை இங்கு யாரும் யாரையும் நலம் விசாரிக்கக் கூடிய அளவிற்கு தாங்கள் நலமாக இல்லையே.
“மனிசி கைதடி முகாமில் இருக்கிறாவாம்;;;; பிள்ளையள் இரண்டுபேரும் போனதுகள் போனது தான். அதுகளாய் எங்கை போனது; கொண்டு போனவையள்.
எல்லாம் நல்லாச் செய்தவங்கள் ; சனமும் நம்பிக்கையோடை தான் இருந்தது.
கடைசி நேரத்திலை எல்லாம் அநியாயமாய்ப்போச்சு
தாங்களும் அநியாயமாய்ப்போய், சனத்தையும் அநியாயப்படுத்திப்போட்டாங்கள்”
“நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப்புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி” என்ற பாரதியின் வேதனையின் ஆழமும் கனதியும் என்னவென்று இப்போது புரிந்தது.
“இருப்பது எல்லாவற்றையும் இழந்து விடுவது மட்டும் துறவல்ல, அவ்வாறு இழந்து விட்டோம் என்ற அந்த நினைப்பையும் அந்த நினைப்பினால் வரக்கூடிய கர்வத்தையும் இழந்து விடுவதுதான் துறவு” என்று எங்கோ படித்தவரிகள்; இவரைப்பார்க்கிற போது அடிக்கடி ஞாபகத்திற்கு வருகிறது. அவை யாருடைய வரிகள் என்பது தான் ஞாபகத்திற்கு வரவேயில்லை.
“கதிரண்ணை” எனக்கு அறிமுகமான சந்தர்ப்பம் வித்தியாசமானது மட்டுமல்ல விபரீதமானதும்கூட. அப்போது இவரது ஊர், பெயர் எதுவும் எனக்குத்தெரியாது.
பகுதி,முழுமை என்ற கணக்கை விட்டுப்பார்த்தால்; நான்கு மாவட்டத்தில் இருந்த சனங்கள் ஒன்றாகி கடைசியில் நாலு சதுரமைல் பிரதேசத்தில் நெருக்குப்பட்டு நெஞ்சளவு தண்ணீரிலும் காலளவு சேற்றிலும் நந்திக்கடலைக் கடந்து, மக்களை மீட்பதற்காக “மனிதாபிமான மீட்பு நடவடிக்கை” செய்தவர்களின் கட்டுப்பாட்டுபட்டுப்பகுதியை அடைந்த நேரத்தில் எங்கள் கூட்டத்தில் ஒருவராகஇருந்தவர்தான் இந்தக் கதிர்காமசேகரம்.
வயது ரீதியாக, பால் ரீதியாக, விசாரணைக்காக குழுக்களாக்கும் முதலாம் கட்ட நடவடிக்கையில் என்னை ஒரு சிப்பாய் விரல் சுட்டி அழைத்தபோதுதான் “கதிர்காமசேகரம்.” முதன் முதலாய் பேசினார்.
“மெயா மகே துவ தமாய், எயா மாத்தெக்க தமய் ஆவா.
மெயாட்டத் பொடி புத்தெக் இன்னவா”
என்ற கதிரண்ணை தீவிரமாக உறுத்துப்பார்க்கப்பட்டார்
ஏய்! நீங்களுக்கு அப்பா ….?
என்று அவரைக்காட்டி என்னைப்பார்த்து அவர்கள் கேட்ட கேள்வி, என்னை தனது மகள் என்று சொல்லியிருக்கிறார் என்பதை ஊகிக்க வைத்தது. ஆமென்றும் கொள்ளலாம் இல்லையென்னும் எடுத்துக்கொள்ளலாம் என்ற விதமாகத் தலையை ஆட்டினேன். தொடர்ந்து கதிரண்ணா எனது மூன்றுவயதேயான மகன் “ஈழவாசனை”த்தூக்கி வைத்துக்கொண்டு என்னையும் காட்டித் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருந்தார். மொழி அவ்வளவாக புரியவில்லை. என்றாலும் என்னை மகளாகவும் ஈழவாசனை பேரனாகவும் நிரூபிப்பதற்காக வாழ்வியல் தேற்றங்களை நிறுவிக்காட்டுகிறார் என்று மட்டும் புரிந்தது.
அவரது பேச்சில் இருந்த தெளிவும் நிதானமும் அவர்களை நம்பவைத்திருக்க வேண்டும். என்னை அதிகம் தொந்தரவு செய்யவில்லை. என் வயதையண்டிய பெண்கள் பலர் வேறு இடத்திற்கு குழுக்களாக இடம்மாற்றப்பட நான் முதியவர்கள் பிள்ளைகள் உள்ளபிரிவில் கதிரண்ணையுடன், மன்னிக்கவும் – அப்பாவுடன் நலன்புரிநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன்.
“பிறப்பித்தோன், கற்பித்தோன், மணமுடிப்பித்தோன், அன்னந்தந்தோன், ஆபத்துக்குதவினோன்” ஐவரும் தந்தையர் எனத் “தமிழிலக்கணம்” கூறும் விதியால் என் ஐந்தாவது தந்தையாக கதிரண்ணா மாறிப்போனார்.
எனது கணவர் “தமிழ்மாறன்” போராளியாக இருந்தவர். பொறுப்பான குடும்பத்தலைவராக இருக்கவும் தன்னால் இயன்றவரை முயன்றவர். போர் தீவிரமாகி யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்தபோது என்னையும் பிள்ளையையும் முன்னே போகும்படி அனுப்பி விட்டு பின்தங்கிவிட்டார். நந்திக்கடலைக்கடந்து நாங்கள் கரையேறினாலும் எங்கள் வாழ்வுதான் கரையேறாமற் போய்விட்டது. “புனர்வாழ்வு – மறுவாழ்வு என்ற கட்டங்களுக்குள் நுழைய விரும்பாமல்” அவர் வாழ்வு முடிந்து போக எங்கள் வாழ்வு இருண்டுபோனது. இந்தச் சூழலில் தான் கதிரண்னையின் சந்திப்பு நிகழ்ந்தது.
நலன்புரிமுகாமில் வாழ்வில் மறக்க முடியாத இன்னொரு சந்திப்பும் நிகழ்ந்தது
ஒரு தடவை புலம்பெயர்ந்த பெரும்பான்மை இனமக்கள் சேகரித்த நிவாரணப்பொருட்களை வழங்குவதற்காக பின்னேரம் நாலு மணியளவில் எல்லோரையும் வரிசையில் வரச்சொன்னார்கள். எல்லோருக்கும் உடுபுடவைப்பொதியும், பிளாஸ்ரிக்வாளிகளும் தந்தார்கள். பொதிகளைப் பிரித்துப்பார்த்த பலருக்கு அதிர்ச்சி. அநேகமாக எல்லாம் பழைய உடுப்புக்கள் அழுக்கான கிழிந்த துணிகளும் சிலரது பாசலில் இருந்தது. வேதனையும் விரக்தியும்தான் மிஞ்சியது. நொந்து போனவர்களை மேலும் நோகடிக்கிறார்கள் என்ற வேதனையைக் கூடப்பகிர்ந்து கொள்ளப்பயமான சூழ்நிலையில் தான்
“பூனை இளைச்சுப் போச்சண்டா சுண்டெலி கூட
என்னத்துக்கோ வாறியோ? வாறியோ? எண்டு கேக்குமாம்
அதைப்போலை எங்களைக் கொண்டு வந்து அடைச்சு வைச்சிட்டு
பழந்துணி தந்து கேவலப்படுத்துறாங்கள்! இவங்கள் நல்லா இருக்க மாட்டாங்கள்.!”
என்ற இந்த குரலுக்குச் சொந்தக்காரி கமலம் அக்கா சந்திப்பு.
எல்லோரும் வாய்திறக்கத் தயங்குகின்ற நிலையில் அத்தனை பேரினதும் ஒட்டுமொத்த ஆதங்கத்தின் பிரதிநிதியாய் ஒலித்த இந்த உரிமைக்குரல் எல்லோருக்கும் பிடித்திருந்தது. மௌனமாய் ஆமோதித்து நகர்ந்தார்கள். ஆனால் எவரும் வெளிப்படையாய் ஆதரிக்கவில்லை
“வலயம்-04 இலையும், ஆனந்தகுமாரசாமியிலையும் இப்பிடித்தான் பழையஉடுப்புகள் குடுத்தவங்களாம்”
யாரோ ஒருவர் இது எல்லோருக்கும் பொதுவான வேதனைதான் என்று குறிப்பாக சொன்னார். ஆனந்தகுமாரசாமி அருணாசலம்,இராமநாதன் கதிர்காமர் என்று தமிழ்த்தலைவர்கள் எவ்வளவு கௌரவமாக நினைவுகூரப்படுகிறார்கள் என்பதை நினைக்க மனம் பெருமையால் நிறைந்தது.
மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் தான். ஆனால் யாருக்கு நல்லவர்கள் என்பது தான் புரியாமல் இருக்கிறது. சிலர் தனக்கு மட்டுமே நல்லவர்களாக இருக்கிறார்கள். சிலர் மட்டுமே எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்கிறார்கள், தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் கவலைப்படுகிறார்கள், குரல் கொடுக்கிறார்கள். சிலர் குரல் கொடுப்பதில்லை செயற்படுகிறார்கள். இதில் கமலம் அக்கா குரல் வகை, கதிரண்ணா செயல் வகை.
அன்றொருநாள் காலை பத்து மணியிருக்கும் ஒவ்வொரு குடும்பமாக அழைக்கப்பட்டு பெயர்ப்பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டார்கள். சீருடையினரால் ஒவ்வோரு குடும்பத்தவரும் துருவித்துருவி விசாரிக்கப்பட்டார்கள். மேலோட்டமாகப்பார்த்தால் கணக்கெடுப்புப் போலத் தெரிந்தாலும் வேறு தேவைகளும் இருப்பது அவர்கள் கணக்கெடுப்பில் காட்டிய அக்கறையில் தெரிந்தது.
“தங்கைச்சி வீட்டை விடப்போகினமாம் பிள்ளை, வன்னிக்குப் போகப்போறன் எண்டு சொன்னால் இப்போதைக்கு அங்கை விடமாட்டினம். யாழ்ப்பாணம் போற ஆக்களைத்தான் முதல் விடப்போகினம் போலை கிடக்கு, எங்களுக்கு தீவிலை காணி இருக்கு, இவற்றை ஆக்களும் அங்கை இருக்கினம், நான் அங்கத்தை விலாசந்தான் குடுத்துப்பதிஞ்சனான், நீயும் யாழ்ப்பாணம் போக வசதியெண்டால் அங்கை ஆரும் தெரிஞ்சவை இருந்தால் அங்கை போகப்போறன் எண்டு பதிஞ்சு கொள்ளு. இந்த நரகத்துக்காலை வெளிக்கிட்டாக்காணும்”
என்ற கமலம் அக்காவின் யோசனைதான் என்னையும் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற வழி செய்தது.
பதிவின் போது குடும்ப விபரங்கள் பற்றி துருவித்துருவிக்கேள்விகள் கேட்டார்கள். அப்பாவின் பதிலில் திருப்தியடையாதவர்களாய்
“அக்கா! நீங்களுக்கு அண்ணா எங்க?”
என்றார்கள். என்னால் பதில் சொல்ல முடியவில்லை, முடியவில்லை என்பதை விட சரியான பதில் தெரியவில்லை. கண்ணீரை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை
‘செத்த போச்சு” என்ற கேள்விக்கு ஆமென்று தலையசைத்தேன்
“சரி, சரி, நீங்களுக்கு வீடு போறது. அதுதாங் பதிஞ்சு”
என்ற பதிலில் ஒரு விடியலின் அறிகுறி மெல்லத்தெரிந்தது.
தீவகத்தைச் சேர்ந்தவர்கள் முதற்கட்டமாக நலன்புரிநிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட போது கமலம் அக்கா குடும்பம் சென்றுவிட, தனிமையும் வெறுமையும் மனதில் எஞ்சியது. வெளியே போனால் கதிரண்ணையும் தன் குடும்பத்தைத் தேடிப்போய்விடுவார். அதற்குப்பிறகு எதிர்காலம் என்ன? என்ற கேள்வி வெறுமையாக எஞ்சி நிற்க இதற்குமேல் யோசிப்பதற்கே அயற்சியாக இருந்தது.
காலம் எமக்காக காத்திருக்காமல் தன்பாட்டில் நகர்ந்தது. முகாமில் பதிவுகளுக்குப் பொறுப்பாக இருந்த கச்சேரி உத்தியோகத்தர்
“யாழ்ப்பாணத்திலை மீளக்குடியேற்றத்திற்குப் பதிஞ்ச ஆக்கள்நாளைக்குப்பயணத்துக்கு தயாராக இருங்கோ”
என்ற தகவலை வழங்க, முகாம் பரபரப்பானது. நானும்,மகனும்,கதிரண்ணையும் இரவு உறங்கவில்லை என்பதைவிட உறக்கம் வரவில்லை. முகாம் வாழ்விலிருந்து விடுதலை என்ற மகிழ்ச்சியா? ஆளுக்கொரு திக்காக பிரிகிறோம் என்ற பிரிவுத்துயரோ? தெரியவில்லை. நிரந்தர உறவுகளின் பிரிவால் எழுந்த சோகம் மெல்ல தணிந்திருக்க காலநிர்ப்பந்தம் தந்த உறவின் பிரிவும் சேர்ந்து பழைய நினைவுகள் மனதைப்பிழிந்தது.
“எங்களை எல்லாம் யாழ்ப்பாணம் துரையப்பா ஸ்ரேடியத்திலை வைச்சு அமைச்சர் சொந்தக்காரரிட்டைக்கையளிக்கப்போறாராம்” என்று பேசிக்கொண்டார்கள். ‘கதிரண்ணை’ அதிகமாக மௌனமாகவே நாளைக்கழித்தார்.
“என்னப்பா கதைபேச்சில்லாமல் இருக்கிறியள்”
“இல்லைப்பிள்ளை சொந்தப்பிள்ளையளைத் துலைச்சுப்போட்டன். இப்ப நீங்களும் நாளையோடை போயிடுவியள், உன்னைப்பற்றிப்பெரிசா யோசினையில்லை இவனை விட்டுட்டு இருக்கிறதுதான் ஏலுமோ தெரியேல்லை”
முகாம் மின்சாரவிளக்கு வெளிச்சம் தறப்பாள் கூடாரத்திற்குள் மங்கலாகத்தெரிந்தாலும் அந்த வெளிச்சத்திலும் கதிரண்ணையின் கண்களில் பளபளப்பையும் கண்ணீரையும் உணரமுடிந்தது. ஏனோ துக்கத்தில் தொண்டை அடைத்தது.அழுவதற்கு அவகாசமில்லாத நேரத்து இழப்புக்களுக்கும் சேர்த்து இப்போது அழவேண்டும் போலிருந்தது. நீண்ட நாட்களுக்குப்பின்னர் மனம் விட்டு சுதந்திரமாக அழுகை வந்தது. இந்த அடிமை வாழ்வின் இறுதிக்கண்ணீர் என்பதாலோ தெரியவில்லை.
“இல்லையப்பா யாழ்ப்பாணம் தானே போறம், கட்டாயம் திருப்பிச்சந்திப்பம். உங்கடை பிள்ளையளும் எங்கையாவது இருப்பினம். பிடிபட்ட கனபேர் வெலிக்கந்தை மாதிரியான இடங்களிலை இருக்கினமாம், அப்பிடி எங்கையும் இருப்பினம்.”
ஏதோ பேசவேண்டும் என்பதற்காக அல்ல மனப்பூர்வமாகவே அப்படி ஒரு நம்பிக்கை அடிமனதில் இருந்தது.
“நானும் பிள்ளையும் வந்து வந்து உங்களைப் பாப்பமப்பா” என்று சொன்னபோது கதிரண்ணை ஈழவாசனை அள்ளி அணைத்துக்கொண்டு விக்கி அழுதார்.
“பிள்ளை இனி எப்ப சந்திக்கிறமோ நீ ஒண்டுக்கும் கவலைப்படாமல் போ. நானும் யாழ்ப்பாணத்திலை தான் இருக்கப்போறன். கைதடி போய் மனிசியைப்பார்க்க வேணும். நான் எங்கை இருக்கப்போறன் எண்டு தீர்மானிக்கயில்லை, இப்ப மருமகன் வீட்டைதான் போகப்போறன், வெளியிலை போனால் தான் பிள்ளையளைப்பற்றியும் முடிவு தெரியும்”
அவரிடம் சுன்னாகத்தில் இருக்கும் அக்காவின் முகவரி கொடுத்திருந்தேன்;.
“சுன்னாகத்திலை நீ சொன்ன அக்கா வீட்டை தானே பிள்ளை போறாய், வந்து பாக்கிறன், நான் அழுது உன்னையும் கவலைப்படுத்திப்போட்டன்.” என்று மறுநாள் விடை பெற்றுக்கொண்டார்.
இதெல்லாம் நடந்து ஏறத்தாழ ஒருவருடம் கடந்து இப்போது நடந்ததெல்லாம் நினைக்க ‘கதிரண்ணை’ சொன்ன வரிகள் தான் ஞாபகம் வருகிறது. கொழும்பு பயணத்துக்கு முன்னம் கதிரண்ணா குடும்பத்தையும் கமலம்; அக்காவையும் பார்க்க வேணும் என்று ஆவலாக இருந்தது.
கமலம்; அக்காவின் வீடு தேப்பிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. முகாமிலிருந்து புறப்படும்போது சொன்ன
“நீ அங்கை வந்து சூசையப்பர் கோயிலடி எண்டால் ஆரும் காட்டுவினம் இவற்றை தேப்பன்ரை பேர் இராசையா . இராசையா வீடு எண்டால் தெரியாத ஆக்கள் இருக்காது”
என்ற அடையாளம் சரியாக இருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கி ஒரு பெரியவரைக்கேட்டபோது
“நான் அவையின்ரை வீட்டுப்பக்கம்தான் போறன் என்னோடை வா தங்கைச்சி”
என்று சைக்கிளை உருட்டிக்கொண்டு என்னுடன் நடந்தவர், சிறிது தூரத்தில் ஒரு வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தி
“பரமு உங்களைத்தேடி ஆரோ ஒரு பொம்பிளைப்பிள்ளை வந்திருக்கடா”
என உரத்துக்குரல்கொடுத்தார்
வசதியான வீடு, வீட்டோடு சேர்ந்த காணியில் புகையிலை பயிரிடப்பட்டிருந்தது. கமலம்; அக்காவின் கணவர் பரமசாமி அண்ணா புகையிலைச்செடிகளுக்கிடையே ஏதோ வேலையாக நின்றவா,; பார்த்தவுடன் அடையாளம்கண்டு கொண்டார்.
“எடி பிள்ளை நீயே வா! வா!
என்னெண்டு இடம் தேடிப்பிடிச்சனி உள்ளை வாவன்
கமலம் இஞ்சை கொஞ்சம் வெளியிலையும் எட்டிப்பாரப்பா
என்ரை மனிசிக்கு காது கேட்கிறதும் குறைவு”
அவரின் உற்சாகம் புதுமையாக இருந்தது. முகாமில் இருந்த பரமசாமி வேறு இவர் வேறு என்பதாகப்பட்டது.
“எப்பிடியண்ணை இருக்கிறியள் அக்கா எப்பிடியிருக்கிறா”
என்ற எங்கள் சம்பிரதாய உரையாடலுக்கிடையில் எனக்கு வீடு காட்டியவர் காணாமல் போனதை அவதானிக்கவில்லை. சம்பிரதாயமான உரையாடல்கள், அவர்களின் உள்ளுர் உறவுகளுக்கான அறிமுகம் முடிந்து.
“இப்ப என்னபிள்ளை செய்யிறாய்? எங்கையிருக்கிறாய்?”
என்ற விசாரிப்புத்தொடர்ந்தது.
விடுதலை வாங்கித்தருவதற்காய் போராடிவர்களுக்கு இப்போது ஒருவேளை உணவுக்காக போராடுவது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை வார்த்தைகளால் விபரிக்க என்னால் முடியவில்லை. சொந்த சமூகமும் உறவுகளும் அன்னியமாகப்பார்க்கின்ற வேதனை கண்ணீராய் வெளிப்பட்டது.
“சரி பிள்ளை அழாதை, எல்லாருக்கும் பயம்தான்.
நாளைக்கு உனக்கு மட்டும் பிரச்சினையில்லை தங்களுக்கும் ஏதும் பிரச்சினை வருமோ எண்டு பயப்பிடுகிறதை நாங்கள் குறை சொல்லேலாது. எல்லாரும் ஒரேமாதிரி இருக்கமாட்டினம்தானே.
சரி அதைவிடு! ஏன் பிள்ளையைக்கூட்டிக்கொண்டு வரயில்லை”
கடைசிக்கேள்வி இதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை வேதனைகளையும் கிளறிவிட என்னால் அழுவதைக்கட்டுப்படுத்த முடியவில்லை.
“பத்துமாதம் வயிற்றிலை சுமந்து, இரண்டு வயதுவரை மடியிலை சுமந்து, நந்திக்கடலிலை தோளிலை சுமந்து, பாதுகாத்த பிள்ளை என்ரையில்லையாம், தகப்பன்ரை ஆக்கள் வந்து பறிச்சுக்கொண்டு போயிட்டினம்”
என்று சொன்னபோது கமலம் அக்காவிடம் நான் எதிர்பார்த்த அதிர்வு எதுவுமில்லை,
“அதுகும் நல்லதுதான் தங்கைச்சி, நீ உன்னைப்பாக்கக்காணேல்லை மகனையும் வச்சிருந்து என்ன செய்வாய்? எங்கையெண்டாலும் பிள்ளை வளரட்டன். ஒருகாலம் பிள்ளை அம்மாவைத்தேடும் தானே? அப்ப வரட்டன்.
அதுசரி அவையள் ஏன் உன்னைக்கூப்பிடயில்லை? பிள்ளையை மட்டும் கேக்கினம்?
‘சிங்களவர் பழைய உடுப்புக்கொடுக்கிறார்கள்’ என்பதற்காக குரல் கொடுத்த அந்த பழைய ‘கமலம் அக்கா’ இந்தக்கேள்வியைக் கேட்டிருந்தால் யாழ்ப்பாணத்தில் முப்பது வருடம் உறங்கிய சாதியப் பேயும் சமூக அடுக்குகளும் மீண்டும் துளிர்ப்பதை விபரித்திருக்கலாம் இப்போது தேவையில்லை என்று பட்டது .
“அவைக்கு விருப்பமில்லையாக்கும்” என்ற பதிலோடு நிறுத்திக்கொண்டேன்
“சரியக்கா நான் வெளிக்கிடப்போறன் இன்னொரு நாள் ஆறுதலாய் வாறன்”
என்று விடைபெற முயன்றேன்
“ஓமடா குஞ்சு போட்டு வாவன். இண்டைக்கு நீ வந்தது நல்ல நேரம்.
நாங்கள் நிக்கிறது குறைவு. வாறதெண்டால் போன்பண்ணிப்போட்டு வாடாம்மா”
“தம்பி அந்த ரெலிபோன் நம்பரை ஒருபேப்பரிலை எழுதி அக்காட்டைக்குடு”
“இல்லாட்டில் பொறு நான் வாறன்”
என்று தொலை பேசி இலக்கத்தை தானே ஒரு கடதாசியில் எழுதித்தந்தார். புறப்படும் போது இங்கு வந்திருக்க வேண்டாமோ என்ற அயர்ச்சி தோன்றியது.
யாழ்பாணம் பஸ்நிலையத்தில் சுன்னாகம் பஸ்ஸிற்காக காத்திருக்கவேண்டியதாயிற்று
“இனி மூண்டுமணிக்குத்தான் பஸ்”
என்று நேரக்காப்பாளர் சொன்ன போது நேரம் 2.45 இன்னும் பதினைந்து நிமிடம் காத்திருப்பது தவிர வேறு மார்க்கமிருக்கவில்லை.
“கமலம் அக்கா எழுதித்தந்த ரெலிபோன் நம்பரை போனிலை பதிஞ்சு வைப்பம்”
என நினைத்து பதிந்த பின்தான் எனது ரெலிபோன் நம்பரைக் கொடுத்திருக்கலாம் என்ற நினைப்பு வந்தது
“ஒருக்கால் அவையின்ரை நம்பருக்கு எடுத்துப்பாப்பம்” என அழைத்த போது எதிர்முனையில்
“மெம அங்கய பாவித்தாவே நொமத்த”
என இனிமையான குரல் பெண்ணொருத்தி ஓவ்வொருதடவையும் தொடர்ந்து பேசினாள். இந்த வசனத்தைப் பலதடவை கேட்டு மனப்பாடம் செய்து கொண்டிருந்தபோது ஆதரவாக தோளில் ஒரு கை படிவதை உணரமுடிந்தது. – “கதிரண்ணை”
“ஐயோ! அப்பா எப்பிடியிருக்கிறியள்? ஏன் வாறனெண்டு வரயில்லை?
பிள்ளையள் என்னமாதிரி? அம்மா என்னமாதிரி?
என்னுடைய தொடர் கேள்விக்கு ஒரே பதிலாக
“எல்லாரும் இருக்கினம்” என்றார்
“பிள்ளையள் இரண்டுபேரும் இருக்கினமோ? ஏன் அப்பா ஒரு மாதிரி இருக்கிறியள்.?
“இருக்கினம், இப்ப பொங்கலுக்குத்தான் விட்டவங்கள@;
நான் அவையோடை இல்லை ,சகோதரியோடை இருக்கிறன்”
“ஏனப்பா அவை உங்களோடை இல்லை? ஏதும் பிரச்சினையே?
“பிள்ளை என்னை அப்பா, அப்பா எண்டு கூப்பிடாதை. கதிரண்ணையெண்டு சொல்லு காணும்
நீ எப்பிடியிருக்கிறாய்”
“இருக்கிறன் கதிரண்ணை பெரிசாய் பிரச்சினை ஒண்டும் இல்லை”
நீங்களும் நாளையோடை போயிடுவியள் உன்னைப்பற்றிப் பெரிசா யோசினையில்லை இவனை விட்டுட்டு இருக்கிறதுதான் ஏலுமோ தெரியேல்லை”
என்ற பேரப்பிள்ளையைப் பற்றி எதுவும் கேட்கவில்லை
“சரி கதிரண்ணை பஸ்ஸ_க்கு நேரமாகுது நான் வாறன்”
என்று புறப்பட்டேன்.
எனது சொந்த அக்காவே
“நீ இஞ்சை இருக்கிறது அத்தானுக்குப்பிரச்சினை. நெடுக சுன்னாகம் ஆமி உன்னைப்பற்றி அவரிட்டை விசாரிக்கிறானாம்”
என்ற போது முன்பின் தெரியாத என்னை ஆபத்தில் மகள் என்று உரிமை பாராட்டிய கதிரண்ணை மனதில் வானளாவ உயர்ந்து நின்றார் . இந்தச்சந்திப்பு நிகழா விட்டால் அந்த பிம்பம் அப்படியே இருந்திருக்கும். தனிமரமாய் போய்விட்ட என்னிலையைக் “கதிரண்ணை”யிடம் சொல்லி ஆறுதல் கேட்க நினைத்திருந்த என்னைப்பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது.
“ஆடைத்தொழிற்சாலைக்கு ஆட்களை எடுக்கினமாம் நல்ல சம்பளமாம் எண்டு சொல்லுகினம்.
ஆனால் வேறை விதமாய் சிங்கள ஆக்கள் பொம்பிளைப்பிள்ளையளுக்கு பிரச்சினை குடுக்கிறாங்கள் எண்டும் கதை . சரி இது வரை பாக்காத பிரச்சினையே. போய்ப்பாப்பம்.”
என்று முடிவு பண்ணி அந்தப் பயணத்துக்கு முன்னம் கதிரண்ணா குடும்பத்தையும் கமலம்; அக்காவையும் பார்க்க வேணும் என்ற ஆசை அதிர்ஷ்ட வசமாய் இன்று இப்படி நிறைவேறியிருக்கிறது.
எனது பிரச்சினை இது, அத்தானின் பிரச்சினை வேறு
“அக்காவைச்சந்திக்காமல் முதல் உம்மைச் சந்திச்சிருந்தால் ஆர் எதிர்த்தாலும்; உம்மைத்தான் கட்டியிருப்பன்” என்று அக்கா இல்லாத நேரத்தில் பகிடி என்ற போர்வையில் பல்லிளிப்பது படு அபத்தமாக இருக்கும். இதற்கு நான் எந்தப்பிரதிபலிப்பும் காட்டுவதில்லை. அதனாலோ என்னவோ தெரியாது அண்மைக்காலமாக நான் வீதியால் போக வர பார்த்துக்கொண்டிருக்கும் சுன்னாகம் ஆமி என்னிடம் எதுவும் கேட்காமல் அவரிடம் என்னைப்பற்றி விசாரிக்கிறானாம், பாவம் அத்தான்.
“சுன்னாகம் மாசியப்பிட்டி அளவெட்டி போறாக்கள் வாங்கோ”
என்ற மினிபஸ் கொண்டக்ரரின் சத்தம் என்னை சுயநினைவுக்கு கொண்டு வர பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.
‘அக்கா! அந்த ஐயாவை என்னண்டு தெரியும்?
மினிபஸ் கொண்டக்ரரின் கேள்வி ‘கதிரண்ணையை’ப்பற்றியது என்பது விளங்கினாலும் பதிலளிக்கும் மனநிலையில் நான் இல்லை
“எனக்குத்தெரியாது”
என்று பேச்சைத்துண்டித்தேன்
“நான் நினைச்சன் உங்களுக்குத்தெரிஞ்ச ஆளாக்குமெண்டு
ஆள் சரியான வில்லங்கப்பேர் வழி அவதானமாயிருக்கோணும்;
ஒருபதின்மூண்டு வயதுப்பிள்ளையோடை பிரச்சினையெண்டு பொலிஸ் பிடிச்சு வைச்சிருந்தது.
இப்ப கிட்டடியிலைதான் வெளியிலை வந்தவர்.
வீட்டுக்காரர் கலைச்சு விட்டுட்டுதுகள், இப்ப ஆரோ ஒரு பொம்பிளையோடை உரும்பிராயிலை இருக்கிறார்.”
நான் எதுவும் கேட்காமலே மினிபஸ் பொடியன் சொல்லிக்கொண்டிருந்தான்.
எனக்கு மெதுவாகத்தலை சுற்ற ஆரம்பித்தது.
மினிபஸ்ஸில் உள்ள சீடி பிளேயரில் பி.சுசீலா பாடிக்கொண்டிருந்தார்
“நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்
என்கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்”
(யாவும் சிந்தனைக்கு)
வரணியூரான் (ஜுனியர்)

இக்கதை எனது www.alaveddy.ch இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *