கணேசர் வீட்டுப் பேய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 145,711 
 

இப்போது இந்த வீடு பேய் வீடு போல இருக்கிறது. அப்படி எண்ண நினைத்த கணேசர் அதைத் திருத்தி இல்லை இது பேய்வீடே என்கின்ற அனுபவத்தை முடிவாக ஞாபகப்படுத்திக் கொண்டார். பின்பு மிகுந்த கவலையோடும், வேதனையோடும் எழுந்து சாளரங்களை இறுக்கமாக இழுத்து மூடினார். அடக்க முடியாத கவலையும், பொறுக்க முடியாத பயமும் வெடித்து விடுமோ என்கின்ற நடுக்கத்தை அவருக்கு உண்டு பண்ணியது. அழுதுவிடுவேனோ என்பதான எண்ணம் அவருக்குத் திறந்த குளிர்பானத்தில் இருந்து வெளிவரும் குமிழிகளாய் தோன்றி அவர் நெஞ்சத்து உறுதியைக் கரைத்துக் கண்ணீரை வரவழைத்தது.

இந்தச் சாளரங்களின் வழியே மட்டும் அந்தப் பேய் வருவது இல்லை என்பதை அவர் நன்கு அறிவார். என்றாலும் அதை மூடினால் பிரதான பாதையை அடைத்த ஒரு பிரமை அல்லது திருப்தி அவருக்கு உண்டாகும். பாதை முழுவதையும் மூட நினைத்தாலும் முழுமையாக அதை மூடிவிட முடிவதில்லை என்பது அவருக்கு அதன் பின்பு தெளிவாக விளங்கியது. மூடிவிட்டதாக நினைத்தாலும் அதற்கு உள்ளே வருவதற்குப் பல வழிகள் உண்டு என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்கியது. அப்படியே அது ஒவ்வொரு வழியாகக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்து அவரைத் திகில் கொள்ள வைக்கிறது. அதனிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்பது அவருக்குச் சிறிதும் விளங்கவே இல்லை. கொடிய மிருகம் என்றால் ஒரு அடியில் அடித்துவிடும். இது அதைவிடக் கொடுமையானது. அப்படி அடிக்காது ஒவ்வொரு நாளும் அவரை வதைக்கிறது.

அதன் வெள்ளை நீட்டான ஆணிகள் போன்ற கோரமான பற்கள் பார்ப்பவரின் இரத்தத்தை உறைய வைக்கும். பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோளம் போன்று கனலும் அதன் கண்கள் திகிலோடு அனைவரையும் நடுங்க வைக்கும். கொக்கச்சத்தகம் போல வளர்ந்து வளைந்து கிடக்கும் அதன் கை நகங்கள் இதயத்தைப் பிளக்க வருவது போல கலக்கத்தை உண்டுபண்ணும். தசைகள் அற்ற எலும்பான அதன் உடல் நெஞ்சில் பாய வருவது போல உறுத்தும். உறைந்து போகும் குளிரைப் பரப்பும் அதன் வரவு உள்ளத்தை நித்தமும் கலக்கும். மண்டையில் அறைவது போல உறைய வைக்கும் அதன் அலறல் அண்டத்தைத் தாண்டியும் கேட்கும் என்பது கணேசரின் எண்ணம்.

*

இப்படி அதன் கோரத்தை எண்ண எண்ணக் கணேசருக்கு இந்த ஜன்மமே வெறுத்தது. இந்த வீட்டை விட்டு வேறு வீடு சென்றால் இந்தப் பேயிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாமா என்று ஒரு குறுக்கு யோசனை கணேசருக்குத் தோன்றியது. அவர் ஒரு சாமியாருடன் தொடர்பு கொண்டு அதைக் கேட்டார். அவரின் கால பலனிற்கு அவர் எங்கே சென்றாலும் அது தொடரும் என்றும், இருக்கும் இடத்தில் இருந்தபடி போராடுவதே மிகவும் சிறந்த வழி என்றும் அந்தச் சாமியார் உறுதியாகச் சொல்லிவிட்டார். வேறு வழி இல்லை என்பதால் கணேசர் தொடர்ந்தும் இந்தப் பேய் வீட்டிலேயே வாசிக்க வேண்டி இருந்தது. இந்தப் போராட்டத்தில் யாரும் அவருக்குத் துணை இல்லை. அவரே அவருக்குத் துணை. அதுவே அவர் மாற்ற முடியாத விதியாகியது.

*

அவரது அன்பான மனைவி சுமதி இருக்கும் வரைக்கும் இந்தப் பேய் வீட்டிற்குள் மறந்தும் நுழைந்ததே இல்லை. அவளின் தாலிக்கு அந்த வலிமை இருந்து இருக்க வேண்டும். சுமதியும் கணேசரும் அகதிகளாக நோர்வேக்கு வந்தார்கள். இங்கு வந்து பின்பு காதலித்துத் திருமணம் செய்தார்கள். அவர்களுக்கு ஆசைக்கு ஒரு புத்திரனும் அவதரித்தான். அவதரித்தவன் அபூர்வ அறிவோடு அவதரித்ததால் அமெரிக்காவில் இருக்கும் நாசா நிறுவனம் அவனைத் தத்தெடுத்துக் கொண்டது. அது வரமா அல்லது சாபமா என்பதில் அவர்களுக்குள் எந்த விவாதமும் எழுந்தது கிடையாது. அதன் பின்பு அவனுக்கு அப்பா அம்மாவைப் பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவன் பிரிவு இந்தப் பேய்க்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பம். இருந்தும் சுமதியின் தாலிக்கு இருக்கும் வலிமையை எண்ணி அது வீட்டிற்குள் வராது வெளியே மட்டும் உலாவி வந்தது. உள்ளே புக நேரம் பார்த்து நெடு நாளாய் காத்து இருந்தது. மரங்களில் ஏறி மறைவாக உள்ளே நோக்கியது. என்றாலும் சுமதிக்குப் பயந்து அது தொடர்ந்தும் அமைதி காத்தது. அங்கேயே விலகாது குடி இருந்தது அவர்களை நுணுக்கமாக அவதானித்தது.

பேய்க்கு மட்டும் அல்லக் கடவுளுக்கும் கருணை கிடையாது. இந்தப் பேயிடம் இருந்து கணேசரைக் காப்பாற்றும் எந்த எண்ணமும் அவருக்குத் தோன்றவில்லை. சுமதிக்கு வயிற்றில் புற்றுநோய் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது. வருத்தம் வந்ததை அறிவதற்கு முன்பு மரணம் வந்துவிட்டது. அவள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். சில நாட்கள் மருத்துவமனை வாசத்தோடு இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டாள். கணேசரால் அந்தச் சோகத்தையும், இழப்பையும் தாங்க முடியவில்லை. அவர் துக்கத்தாலும் வேதனையாலும் துவண்டார். அவரின் அந்தத் துக்கத்திலும் வேதனையிலும் ஆனந்தம் கொண்ட அந்தப் பேய் இனி தன்னை யாரும் தடுக்க முடியாது என்கின்ற துணிவுடன் வீட்டிற்குள் அகங்காரமாகப் புகுந்தது. கணேசரால் அதை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. சாமியார் எப்போதோ கை விரித்துவிட்டார். இப்போது அதற்குப் பயந்து பயந்து கணேசர் அதே வீட்டில் குடியிருக்க வேண்டிய கொடுமை தொடர்கிறது.

*

இந்தப் பேயிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்பது கணேசருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அந்தப் பேய் வீட்டுக்குள் வருவது தெரிந்தால் அதைப் பார்க்காது வேறு திசைக்குத் தலையைத் திருப்பிக் கொள்வார். சில வேளை அவர் திரும்பினாலும் அது அவரின் முதுகின் பின்பே நின்று அவரை முறைத்துப் பார்த்த வண்ணமே நிற்கும். கணேசர் பயப்படுகிறார் என்பது அந்தப் பேய்க்குத் தெரியும். அதுவே அதற்கு பெரும் பலம் போல. இருந்தும் அதனிடம் ஒரு சிறு நெகிழ்வு உண்டு. அவரை ஒரேயடியாக அடித்துவிட்டுப் போய்விடும் எண்ணம் அதற்கு ஒரு போதும் வந்தது இல்லை. ஒரு வகையில் அது தலையில் இருக்கும் பேன் போல. கணேசர் தலையாக வாய்த்த சௌகரியம் அதற்கு. கணேசர் இல்லாவிட்டால் அதற்கு இந்த வீட்டில் இருப்பதில் எந்தவித சுவாரசியமும் இருக்காது.

அன்று கணேசர் படுத்துவிட்டார். அந்தப் பேய் குளறிக் கொண்டு வேகமாக வீட்டிற்குள் வந்தது. கணேசருக்கு கையும் ஓடவில்லைக் காலும் ஓடவில்லை. அவர் முதலில் அசையாது படுத்து இருந்தார். பின்பு அருகில் இருந்த போர்வையால் தலைவரை முழுமையாக மூடிக்கொண்டு கிடந்தார். பேய் வேகமாக வந்து வாசலில் நின்று அவர் போர்த்திக் கொண்டு படுப்பதை முறைத்துப் பார்த்தது. பின்பு பெரிதாக நகைத்த வண்ணம் சமையல் அறைப் பக்கம் சென்றது.

இரவு நேரத்தில் கணேசருக்கு விழிப்பு வந்து விட்டால் சிறிது நேரத்தில் அது வந்து கதவடியில் நின்று முறைக்கும். கணேசருக்குக் கதி கலங்கினாலும் எங்கும் ஓடுவதற்குத் துணிவு இருக்காது. போர்வையால் தலையை மீண்டும் மூடிக் கொண்டு கவுண்டு படுப்பார். இருந்தும் அடுத்தது என்ன நடக்கப் போகின்றது என்கின்ற திகில் தொடரும்.

இப்பாடியாக வந்து குடியேறிய பேயின் அட்டகாசம் வரவர அதிகரித்துக் கொண்டே சென்றது. கணேசருக்கு அதனோடு இனியும் சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை. எப்படியாவது அதனிடம் இருந்து தப்பித்து விவாகரத்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் வலுவாகத் தோன்றியது. கணேசர் கடுமையாகச் சிந்திக்கத் தொடங்கினார். எப்படி என்றாலும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது அவர் எண்ணம் ஆகியது. அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது விளங்காது அவர் தவித்தார். அப்படித் தவித்தவர் இறுதியாக ஒரு வழி கண்டுபிடித்தார்.

அதை அடுத்து இரகசியமாக எல்லா அலுவலும் அதற்காகச் செய்து முடித்தார். இருந்தாலும் அது அங்கேயும் வரும் என்பது அவருக்குத் தெரியும். அந்த உண்மை தெரிந்தாலும், அது அங்கு வந்தாலும், அதனால் தொடர்ந்தும் இங்கு ஆக்கினை செய்வது போல் அங்கே ஆக்கினை செய்ய முடியாது என்கின்ற ஒரு பெரிய உண்மையை அவர் அறிந்து வைத்திருந்தார். சாமியாருக்கே விளங்காத அந்த உண்மை இப்போது அவருக்கு விளங்கி இருந்ததில் ஒருவித பெருமை அவருக்கு. இதுதான் நிஜமான விளக்கமா என்பது அவருக்கு முழுமையாக விளங்கவில்லை. அந்தப் பேய்க்குக் கணேசரால் கொடுக்க முடிந்த மரண அடி அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பது மட்டும் அவருக்கு நன்கு விளங்கியது. அதனால் கணேசர் தான் நினைத்ததைச் செய்து முடிப்பதில் உறுதியாகச் செயற்பட்டார். கணேசரின் திட்டம் பேய்க்கு விளங்கிவிட்டது. அது அவரை வஞ்சத்தோடு பார்க்கத் தொடங்கியது. அதற்குக் கணேசரை ஒரே அடியில் அடித்துப் போட்டு போக முடியும். இருந்தும் அதற்கு அப்படி அடிப்பதற்கு ஏனோ மனது வரவில்லை. எங்கே வேண்டும் என்றாலும் போகட்டும். எங்கே போனாலும் என்னால் தொடர முடியும் என்கின்ற துணிவில் அது கணேசரைப் பார்த்து நையாண்டியாகச் சிரித்தது.

கணேசரின் திட்டப்படி அவர் அந்தப் பேயோடு அந்த முதியோர் இல்லத்தில் குடியேறினார். பேய்க்கு இப்போது அவர் மீது அடக்க முடியாத கோபமாக இருந்தது. இருந்தும் அது அவரை உயிரோடு விட்டு வைத்திருந்தது. கணேசர் இங்கு வந்த பின்பு அறையில் பொதுவாக தங்குவதில்லை. எப்போதும் மனிதர்கள் உள்ள இடம் பார்த்தே இருப்பார். அதனால் பேய்க்குத் தெண்டாட்டம். ஆட்களோடு கதைக்கும் போது வந்து அவரைத் தீண்டும் எந்த எண்ணமும் அதுக்கு இருந்தது இல்லை.

கணேசர் இரவு மட்டுமே படுக்கைக்குச் செல்வார். அதுவும் சில வேளைகளில் விரைவாக நித்திரையாகிவிடுவார். அப்படி நித்திரை கொள்ளவிட்டால் அந்தப் பேய் அவரைக் கடுமையாக வெறிக்கும். கைகளை அவரை நோக்கி நீட்டும். கொல்லப் போவதாகப் பயம் காட்டும். இல்லாவிட்டால் எதுவும் செய்யமுடியாது வெறித்துக் கொண்டு இருக்கும்.

இறுதியாகக் கணேசருக்கு ஒன்று விளங்கியது. சாமியாரும் தானும் தப்புக்கணக்குப் போட்டது தெளிவாகியது. இங்கு இருப்பது அங்கு இருந்ததைவிட ஆறுதலாக இருந்தது. இருந்தும் இறுதியாக அந்தப் பேயிடம் இருந்து எப்படி நிரந்தரமாகத் தப்பிப்பது என்பது தீர்க்கமாக இன்றுதான் அவருக்கு விளங்கியது. எது எப்படி இருந்தாலும் தானும் அதைப் போல் ஆகாது அதற்கான காலத்திற்கு காத்திருக்க வேண்டியதே சரியான செயல் என்று அவர் முடிவு செய்தார்.

அதன் பின்பு அவர் அதைப் பார்த்துச் சிரித்தார். அது அவரைப் பார்த்து கோபமாக முறைத்தது.

– ஓகஸ்ட் 15, 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *