மாணிக்கம் சார்

 

”ஹலோ… வணக்கம் சார்… நல்லாயிருக் கேன் சார்… கடையிலதான் இருக்கேன். வாங்க சார்!”

பேசி முடித்ததும் முகத்தைச் சுளித்தபடி போனை ‘டொக்’ என்று வைத்தான் நாச்சியப் பன். முதலாளியின் முகமாற்றத்திலிருந்து ஏதோ ஒரு கெட்ட செய்தி என்று புரிந்துகொண்டார் கணக்குப்பிள்ளை வடிவேலு.

‘என்ன விஷயம்?’ என்ற ஆர்வத்தை அடக்கி, நாச்சியப்பனது முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார் அவர்.

”நம்ம மாணிக்கம் சார்தான் பேசினார்!” என்றான் நாச்சியப்பன். தன் மனதுக்குள் ஏற்பட்ட நமைச்சலை யாரிடமாவதுபகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற துடிப்பு அவனுக்குள் வெடித்திருந்தது.

”போன மாசம் ஸ்கூல்ல இருந்து ரிட்டயர் ஆனாரே, அவர்தானே?”

”ஆமாமா! அவருக்கு அவசரமா பணம் தேவைப்படுதாம். அடகுவைக்க அவர்கிட்டே ஏதும் நகை இல்லையாம்…”

”பாவம்… நல்ல மனுஷன். அவர்கிட்டே பணமாவது, நகையாவது? புள்ளை குட்டி இல்லை. அதனால தன் சம்பளத்தையெல்லாம் ஏழைப் பிள்ளைகளுக்குச் சம்பளம், புத்தகம், சாப்பாடுன்னு செலவழிச்சிடுவார். ஸ்கூல்ல படிக்கிற புள்ளைகளையெல்லாம் தான் பெத்த புள்ளையா நினைக்கிறவரு!”

”அப்படி வீணா செலவழிச்சதுனாலதான் இப்போ காசு பணம் இல்லாம கஷ்டப்படுறார்!” என்றான் நாச்சியப்பன்.

”அவர் செலவழிச்சதையெல்லாம் வீண்னு சொல்லிட்டா, அப்புறம் உலகத்திலே தர்மம் செய்யுறதுக்கு அர்த்தம் இல்லாம போயிடுங் களே” என்று தன்னை மீறி முதலாளிக்கு எதிரான கருத்தைச் சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டார் கணக்கப்பிள்ளை.

சிறிது நேரத்தில், அந்த வட்டிக்கடையின் முன், பழுப்பாகிப் போன கதர்ச்சட்டை வேட்டியோடு, வெளுத்துப்போன கறுப்புக் குடையின் கீழ் ஒடிசலாக நின்றுகொண்டிருந்தார், ஆசிரியர் மாணிக்கம். அவரைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து வரவேற்றான் நாச்சியப்பன்.

”வாங்க சார்! உக்காருங்க. நல்லாயிருக்கீங்களா?” என்று விசாரித்தான்.

”நல்லாயிருக்கேம்பா! உன் தொழில் நல்லா நடக்குதா? படிக்கிற காலத்திலே உனக்கு கணக்குதான் வீக். ஆனா, இப்போ வட்டிக்கணக்குப் போடுற தொழிலுக்கே முதலாளி ஆயிட்ட!” என்று சிரித்தார் ஆசிரியர்.

”கணக்குப் பரீட்சையிலேதான் சார் நான் வீக். கணக்குப்பாடத்திலே இல்லை! வட்டிக்கடை எங்க ளுக்குப் பரம்பரைத் தொழில்!” என்று தெளிவாக் கினான் மாணவன்.

”நாச்சியப்பா! கொஞ்ச நாளா சம்சாரத்துக்கு உடம்பு சரியில்லே. அடிக்கடி ‘மயக்கமா வருது’ன்னு படுத்துடுறா. மதுரைக்குக் கூட்டிட்டுப் போய், பெரிய டாக்டர்கிட்டே காட்டலாம்னு நினைக்கிறேன். ரிட்டயராகி ஒரு மாசமாகியும், எனக்கு வர வேண்டிய பணம் இன்னும் வரலை. இப்போ அவசரமா ரெண்டா யிரம் ரூபாய் வேணும். அடகு வைக்கலாம்னா எந்த நகைநட்டும் சேர்த்து வைக்கலை. எனக்கு உடனே உன் ஞாபகம்தான் வந்துச்சு. உன்கிட்டே நம்பிக்கையின் பேர்ல கடன் வாங்கிட்டுப் போலாம்னு வந்திருக்கேன்” என்றார் மாணிக்கம்.

”சரி சார்… ரெண்டாயிரம்தானே? தரேன்!” என்று பெட்டியைத் திறந்து ரூபாயை எண்ணிக் கொடுத்தான் நாச்சியப்பன்.

”ரொம்ப தேங்க்ஸ்பா! அரியர்ஸ் பணம் வந்ததும், திருப்பித் தந்துடுறேன்!” என்று பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார் மாணிக்கம்.

‘கேட்டவுடன் கொடுக்காமல், கொஞ்சம் இழுத் தடித்துக் கொடுத்திருக்கலாமோ? கேட்ட இரண்டாயிரத் தையும் கொடுக்காமல், கொஞ்சம் குறைத்துக் கொடுத் திருக்கலாமோ? இனி இப்படி அடிக்கடி கடன் கேட்டு வந்து நிற்பாரோ!’ என நாச்சியப்பனை விடாமல் துரத்தின பல யோசனைகள்.

கணக்கப்பிள்ளையிடம், ”ரெண்டாயிரத்தையும் தர்மச் செலவுல கணக்கு எழுதிடுங்க!” என்றான். ‘மறுபடி கடன் கேட்டு ஆசிரியர் வந்துடக் கூடாது’ என்று தினசரி சாமியைக் கும்பிட்டு வந்தான்.

மீண்டும் ஒருநாள், தொலைபேசியில் ஆசிரியரின் குரல்!

பொய் சொல்ல வாயெழாமல், ”கடையிலதான் இருக்கேன் சார்!” என்றான் நாச்சியப்பன். சிறிது நேரத்தில், நாச்சியப்பனின் எதிரே மாணிக்கம் சார். ‘கடன் என்று ஆரம்பித்தால், அவர் மனம் கோணாதவாறு மறுப்பது எப்படி’ என வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருந்தான்.

ஆனால், ”இந்தா நாச்சியப்பா, ரெண்டாயிரம் ரூபாயும் மூணு மாச வட்டியும்!” என்று பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார் மாணிக்கம். திடுக்கிட்ட நாச்சியப்பன், அதிர்ச்சியுடன் பணத்தை வாங்கினான். பின்பு, சுதாரித்து இரண்டாயிரம் ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை அவரிடம் நீட்டினான்.

”அசல் மட்டும் போதும் சார். வட்டி வேண்டாம்!” என்றான்.

”அட, பிடியப்பா! வட்டி வாங்குறது உன் தொழில். தொழில்ல கணக்காயிருக்கணும். புரியுதா? கோயில்ல, ஸ்கூல்ல, சத்திரத்திலே கொடுத்தா அது தர்மம். இங்கே கடையிலே நீ கொடுத்தா அது யாசகம்!” என்று அழுத்தமாகச் சொன்னார் மாணிக்கம்.

”சார், வந்து… எத்தனை வருஷம் உங்ககிட்டே படிச்சிருக்கேன்…” என்றதும் குறுக்கிட்டார் ஆசிரியர். ”அதுக்கு அரசாங்கம் எனக்குச் சம்பளம் கொடுத்துது. இப்ப பென்ஷனும் கொடுத்துக்கிட்டிருக்கு. சரி, நான் வரட்டுமா?” என்று கிளம்பிச் சென்றார் மாணிக்கம்.

மாணிக்கம் சாரின் உடையின் வெண்மையைவிட அவர் மனதின் வெண்மை பளிச்சென நாச்சியப்பனின் மனதில் அறைந்தது!

- 29-04-09 

தொடர்புடைய சிறுகதைகள்
மாண்புமிகு மாணவன்
எனக்குள் பதற்றம் பொங்கிப் பரவிக் கொண்டிருந்தது. தாலி கட்ட இன்னும் சில நிமிடங்கள்தான் இருந்தன. சோதிடர் குறித்துக் கொடுத்த நேரப்படி அழைப்பிதழில் போட்டிருந்த நேரப்படி, இன்னும் பத்து நிமிடங்களுக்குள் தாலி கட்ட வேண்டும். திருமண வீட்டில் யாரும் இதைப்பற்றி பரபரப்படைந்ததாகவே தெரியவில்லை. எல்லாரும் வடக்கே ...
மேலும் கதையை படிக்க...
அன்று சூரப்பட்டி. மாரியம்மன் உற்சவம் போல். விழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர் நுழைவாயில் கோயில் எதிரே கொட்டகை போட்டு, வாழை மரங்கள் கட்டியிருந்தார்கள். அங்கிருந்து. கிராமத்தின் ஓரே "தேசிய சாலை' யான வீதியில். இரண்டு பக்கங்களிலும் ராமாயி வீடு வரை, கம்பங்கள் நட்டு, ...
மேலும் கதையை படிக்க...
மாண்புமிகு மாணவன்
மண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)