வழிபாடு

 

உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் ஓர் ஏழை அந்தணனுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா என்று பொருமினான் வடுக நாய்க்கன். தனக்கு இத்தனை பெரிய வீடும், கட்டிக்காக்க ஆட்களும், செல்வமும் இருந்து என்ன பயன்? வரதையனுக்கு லட்சுமி கடாட்சம் இல்லாவிட்டாலும், அவன் மனைவி லட்சுமி இருக்கிறாள். லட்சுமி கடாட்சம் யாருக்கு வேண்டும், லட்சுமி போன்ற அழகான பெண் அருகிலிருந்தால்?

அளவிறந்த செல்வத்தைப் பெற்ற வடுக நாய்க்கன் அதற்கு இணையான கற்பனையையும், அழகை உபாசிக்கும் ரசனையையும் பெற்றிருந்ததுதான் அவன் துர்ப்பாக்கியம். லட்சுமிக்கு திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே அவன் அவளை மணக்க வேண்டு மென்பதற்காக எவ்வளவோ முயன்றான். தன்னுடைய செல்வம் அனைத்தையும் லட்சுமியின் தந்தையாகிய வேங்கடநாதருக்குத் தருவதாகச் செய்தி அனுப்பினான், பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடக்கக்கூடிய காரியமா இது? அவனிடம் செல்வம் இல்லாமல் இருந்திருந்தால் அவனை அடித்து ஊரை விட்டே விரட்டி யிருப்பார்கள். பணமிருந்த காரணத்தினால் பைத்தியம் என்ற பட்டம் சூட்டிவிட்டு சும்மா இருந்தார்கள்.

லட்சுமிக்குக் கல்யாணமான பிறகு வடுக நாய்க்கன் தன் சாதிப்பெண் ஒருத்தியை மணந்தான். அவளை மணந்த நாளிலிருந்து, அவளைப் பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கையில் தான் இழந்தது என்ன என்பதுதான் அவன் நினைவுக்குவரும் திருமகள் நகையாக மாறி, இவளை இப்படி அலங்கரிக்கிறாளே, தன்னுடைய இயற்கைப் பொலிவை இவளுக்கு தந்திருக்கக் கூடாது? ‘கூலவணிகனாகப் பிறந்து விட்டால் மளிகைப் பட்டியலின் கூட்டல் கணக்குத்தான் என்றுமே எனக்கு இன்பத்தைத் தரவேண்டுமென்று, இந்த உலகம் எதிர் பார்க்கிறதே, இது என்ன கொடுமை? சாதி! பொல்லாத சாதி! பக்தியுடைய பறையனும் பிராமணன் தான் என்று இராமாநுஜர் சொன்னதாகவும் பிரசாரம் செய்து வருகிறோமே; இது ஏன் இந்த முட்டாள் ஜனங்களுக்குப் புரியவில்லை ? எனக்கு இருப்பதும் பக்திதான். அழகை வழிபடும் பக்தி. அழகை வழிபடத் தெரிந்தவன்தான் பக்தனாகிறான். உறங்காவில்லி பக்தனானது எப்படி, இராமாநுஜர் திருப்பதிக்குப் போகும் வழியில் இந்த ‘அஷ்டசகஸ்ர’ கிராமத்துக்கு வரப்போவதாகச் சொல்கிறார்கள். அவரால் ஒருவேளை என்னை புரிந்து கொள்ள முடியும்.

லட்சுமியால் இந்த வரதையனிடம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? வீட்டில் இப்படிக் கொள்ளை அழகு குடி வந்திருக்கிறதே; இதைக் காப்பாற்றுவதற்காகவாவது நாம் நிறைய சம்பாதிப்போம் என்றில்லாமல், போதும் போதாமல் தினசரி உஞ்சவிருத்தி செய்தே பிழைக்கிறான். தங்க விக்கிரகத்தை அழுக்குத் துணியால் மூடி வைத்திருக்கிறானே, படுபாவி, ரசனையற்ற மடையன்! இந்தச் சூழ்நிலையினின்றும் அவளை விடுவிக்க வேண்டுமென்பதற்காக நான் எவ்வளவோ முயன்றும் என் அழைப்புகளையெல்லாம் நிராகரித்து விட்டாள் அந்த அசட்டுப் பெண்! கணவன் ரோகியாகவோ அல்லது புதல்வனைத் தர முடியாதவனாகவோ இருந்தால், மனைவி வேறு ஆடவனை அடைவதில் தவறு ஒன்றுமில்லை என்று வியாச பகவான் சொல்லி யிருக்கிறார். இவற்றுடன் சோறு போட முடியாத கணவனையும் சேர்த்துக் கொள்வதில் தப்பில்லை.

‘லட்சுமி நிரந்தரமாக என்னிடம் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை . ஓரிரவு வந்தால் போதும். இதற்காக வரதையனை நான் கோடீசுவரனாக ஆக்கக் காத்திருப்பதாகச் சொல்லி அனுப்பியும் அவள் மறுத்துவிட்டாள். லட்சுமியின் அழகை அவயவம் அவயவமாக வடுநாய்க்கன் நினைத்துப் பார்க்கத் தொடங்கினான். இராவணனுடைய வேதனை அவனுக்கு இப்பொழுது புரிகிறது. ‘சே! அழகான பெண்கள் இப்படி இரக்கமற்றவர்களாகவா இருக்க வேண்டும்? கூற்றுவனைக் காட்டிலும் கொடியவர்கள். விரகதாபம் உண்டாக்கியே ஆடவர்களைக் கொன்று விடுவார்கள். லட்சுமி, உன்னை நான் இந்தப் பிறவியில் இந்தப் பருவத்திலேயே எப்படியாவது அடைந்து தீரவேண்டும். ஒரு தடவை. அது போதும். உன்னை அடையாத நாட்கள் அனைத்தும் வீணே கழிகின்ற நாட்கள். லட்சுமி லட்சுமி!

வடுகநாய்க்கன் எழுந்திருந்தான். அவன் உடம்பு அனலாய்க் கொதித்தது. அப்பொழுது ஒரு பணியாள் அவனிடம் வந்து தணிந்த குரலில் சொன்னான்:

“உங்களைப் பார்க்க…”

“என்னால் இப்பொழுது யாரையும் பார்க்க முடியாது.”

“ஒரு பெண் வந்திருக்கிறாள்.”

“பெண்ணா?”

“ஆமாம். வரதையனின் மனைவி.”

வடுகநாய்க்கன் திகைத்து நின்றான். உண்மையாக இருக்குமா? அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதனால் தனக்கு உருவெளித் தோற்றம் ஏற்படக் கூடியது இயல்பு. ஆனால் இவன் அல்லவாலட்சுமி வந்திருப்பதாகக் கூறுகிறான்? இது என்ன விந்தை!

“வரதையனின் மனைவி லட்சுமியா?”

பணியாள் தலையசைத்தான். வடுகநாய்க்கன் அவசர அவசரமாக வாசலுக்குச் சென்றான்.

லட்சுமிதான்; சந்தேகமில்லை. உடம்பைச் சுற்றி பட்டுப் பரிவட்டம். ‘இது இவளுக்கு எப்படிக் சிடைத்தது? இந்தப் பட்டாடையில் இவள் எப்படி ஜொலிக்கிறாள்? இவள் என்னை நாடிவரக் காரணம் என்ன? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை . அவளைக் கண்ட அதிர்ச்சியில் அவனுக்கு ஒன்றும் பேசவும் முடியவில்லை. அவளைப் பார்த்துக் கொண்டு செயலற்று நின்றான். இலட்சுமி அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். இது கனவா, அல்லது தெய்வம் தன்னை சித்திரவதை செய்ய வேண்டுமென் பதற்காக இப்படி ஒரு மானஸிகத்தை உருவாக்கி ஏமாற்றுகிறதா? அவள் புன்னகையில் நனைந்த அவன் உடம்பு லேசாக நடுங்கியது.

“எங்கள் கிருகத்தில் ஒரு விருந்தாளி எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு அமுதிட வேண்டும். ஆனால் வீட்டில் ஒரு குன்றிமணிகூட அரிசி இல்லை. உங்கள் உதவி எனக்கு வேண்டும்” என்றாள் லட்சுமி.

லட்சுமி வீடுதேடி தன் உதவியை நாடி வந்திருக்கிறாள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், வாழ்நாள் முழுவதும் தான் வருந்த நேரிடும். தன்னைப் பற்றித் தெரிந்திருந்தும் அவள் இங்கு வந்திருக்கிறாள் என்றால் …. அவன் உள்ளம் உவகையால் நிறைந்தது.

“இந்தப் பட்டாடையில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்” என்றான் அவன்.

“இந்தப் பட்டாடை யாருடையது என்று நீங்கள் அறிந்தால் என் அழகைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள்.”

“யாருடையது?”

“அக அழகும் புற அழகும் உடைய ஒரு தெய்வீகப் புருஷ னுடையது. நாரின் மணம் உங்களுக்கு ஆச்சரியமாகவா இருக்க வேண்டும்? மாற்றுடை எனக்குக் கிடையாது. அன்றாடம் துவைத்து உலர்ந்த பின்புதான், இருக்கும் ஒரே புடவையை அணியும் நிலையிலுள்ள, என் சிறு குடிலுக்கு இன்று காலை ஒரு பெரியவர் வந்து கதவைத் தட்டினார். நீராடிவிட்டு கந்தல் துணியைக் கட்டிக்கொண்டிருந்த நான் சாளரத்தின் வழியே அவரைக் கண்டதும் திடுக்கிட்டேன். கதவைத் திறந்து, தெரியும் அந்த ஆடை அலங்காரத்துடன் அவரை எப்படி வரவேற்பது?”

“யார் அவர்?” என்றான் வடுகநாய்க்கன்.

”என்னுடைய நிலைமையை அவரிடம் சொன்னேன். பரிவட்டத்தை சாளரத்தின் வழியாக விட்டெறிந்தார். உள்ளே வந்ததும், ‘எங்கே உன் கணவன்? அமுதுண்ண வந்திருக்கிறேன்’ என்றார். பக்கத்து ஊருக்கு என் கணவர் போயிருக்கும் செய்தியைச் சொல்லி அவருக்கு தடை இல்லையென்றால் அமுதுண்டு என்னை சிறப்பிக்க வேண்டினேன். அவர் இதற்கு இசைந்து நீராடிவிட்டு வருவதாக புஷ்கரிணிக்குச் சென்றிருக்கிறார். வீட்டில் தளிகைக்கு ஒரு சிறு தானியங்கூட கிடையாது. இதுதான் நான் உங்களை நாடி வந்திருப்பதற்குக் காரணம்.”

“யார் அவர்?”

“உடையவர்.”

‘உடையவர்! எவ்வளவோ பேர் அவரை வரவேற்று உபசரிக்கக் காத்திருக்கும் போது, இந்த ஏழை அந்தணனின் வீட்டுக்குத் தாமாகவே விஜயம் செய்து அவர் அமுது வேண்டுகிறார்! விசித்திரமான மனிதர்தாம், சந்தேகமில்லை. அவரை நாம் கட்டாயம் பார்த்தாக வேண்டும். அழகுக்கு அடிமையாகி அதை வழிபடுவதைத் தவிர வேறு தரிப்பு இல்லை என்னும் ஒருவனை ‘தகும், தகாது’ என்ற நடப்பு முறை தர்ம நியாயங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதை உறங்காவில்லியை ஆட்கொண்ட உடையவரால் தான் புரிந்து கொள்ள முடியும். இவளுடைய உடலா அல்லது உள்ளமா, எது தேவை எனக்குள்ளத்தை அடைபாதை கடலைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்’ லட்சுமி உன்னை நான் முழுமையாக ஆளவேண்டும் உடலுறவைத் தவிர, இதைத் தெரிவிக்கும் மொழி உலகில் வேறு எதுவும் இல்லையே!”

“உடையவருடன் அவருடைய சிஷ்யர்கள் எழெட்டுப் பேர் இருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது உதவி செய்தால் அதை நான் எப்பொழுதும் …” என்று லட்சுமி கூறிக் கொண்டிருந்தாள்.

“என்னைப் பற்றித் தெரிந்திருந்தும் என்னைத் தேடிக் கொண்டு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால்…” என்று இழுத்தான் வடுக நாய்க்கன்.

“நான் இப்பொழுது உங்களிடமிருந்து பெறப்போகிற பொருள்களுக்கு விலை என்னவென்று எனக்குத்தெரியும். அந்த விலையை நான் கொடுத்தாக மேண்டு மென்று நீங்கள் வற்புறுத் தினால், ஒரு விஷயம், நீங்கள் பொருள்களைக் கொடுங்கள். விருந்தினர்களை உபசரித்து அனுப்பிவிட்டு நான் வருகிறேன்.”

“விலைக்கு உரிய தொகையை கொடுத்து பொருள்களை வாங்குவது தான் உலக இயல்பு” என்றான் நாயக்கன்.

“நான் கொடுக்கப் போகிற விலையை நீங்கள் இதுவரை யாரிடமும் பெற்றிருக்க மாட்டீர்கள். இது உலக இயல்பு அல்ல.”

‘நீங்கள் இந்த விலையை கொடுத்து உபசரிக்க வேண்டிய அளவுக்கு உடையவர் அவ்வளவு அருமையானவரா?”

“நீங்கள் கேட்கும் விலை எத்தனை அற்பமானது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? சரி, பொருள்களைக் கொடுங்கள். விருந்தினர்கள் நீராடிவிட்டு வந்து விடுவார்கள்.” பார் லட்சுமி பொருள்களை வாங்கிக் கொண்டு போய்விட்டாள். வடுக நாய்க்கன் பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருந்தான். “நீங்கள் கேட்கும் விலை எத்தனை அற்பமானது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?” இத்தனை ‘அற்பமானது’ என்றால் அவன் எத்தனை விலை கொடுக்கக் காத்திருந்தும் அப்பொழு தெல்லாம் அவள் ஏன் வரமறுத்தாள்? அதுவரை ஒவ்வொரு விநாடியையும் அவளைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து, தொடுவானமாகிய அவளை அடைவதே வாழ்க்கையின் பயணம் என்ற இன்ப வேதனை தந்த கற்பனை சுகத்தில் இளைப்பாறி வந்த அவனுக்கு, அவள் தன்னை சுலபமாக்கிக் கொண்டு எதிரே நின்றது ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

வடுக நாய்க்கனின் மனைவி அப்பொழுது அங்கு வந்து அவனெதிரே அமர்ந்தாள். அவன் அவளை ஏறிட்டு நோக்கினான். அவளுடைய இடக் கன்னத்தில் இருந்த மறு அவன் கண்ணுக்குப் புலப்பட்டது. ‘இத்தனை நாட்களாக நான் இதை கவனிக்கவில்லையோ?’ அவள் புன்னகையுடன் அவனை வினவினாள்.

இந்தக் கன்னங்களின் குழிவும் என்னை ஏன் இதுவரை கவரவில்லை?

“வரதையனின் மனைவிக்கு சமையலுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்தீர்களாமே? யார் விருந்தாளிகள்?”

அவன் பதில் சொல்லவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

”ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்?” அவன் இதற்கும் பதில் சொல்லவில்லை. பேசாமலிருந்தான்.

“யார் விருந்தாளிகள்? என்ன ஆகிவிட்டது? ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்?”

“உடையவர்…”

அவன் மனைவி இதைக் கேட்டதும் எழுந்திருந்தாள்.

“உடையவரா? அவரைப் பார்த்து நான் கேட்க வேண்டும்.”

“என்ன கேட்கவேண்டும்?”

“வறுமையால் உழலும் ஒரு பெண் தன்னை விற்று அவரை விருந்தோம்ப வேண்டியது அவசியந்தானா என்று.”

வடுக நாய்க்கன் மௌனமாக இருந்தான். ‘இவளுக்குத் தெரிந்துவிட்டது. இவளுக்கு இதுவரை தெரியாமலா இருந்தது? ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை. உடையவரைப் பார்த்துக் கேட்கப் போகிறேன் என்கிறாளே; இவளால் இவ்வளவு தூரம் பேச முடியுமென்று நான் எதிர் பார்க்கவே இல்லை. இவளைப்பற்றி எனக்கு என்ன தெரியும்? இரவில் தேவைப்பட்ட போது, விளக்கணைந்த பிறகு என் உடல் இவளுடலை அறியுமே யன்றி, எனக்கு இவளைத் தெரியுமா? மண்டோதரிக்கு இராவணனைத் தெரிந்த அளவுக்கு இராவணனுக்கு மண்டோதரியைத் தெரியுமா? தெரிந்திருந்தால் இராமாயணக் கதையே நடந்திருக்காது. அப்படியென்றால்…? அவன் மனம் குழம்பியது.

“அவள் செய்வது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“எது?”

“உங்களிடமிருந்து வாங்கிக் கொண்டு சென்ற பொருள்களுக்கு விலையைத் தர திரும்பவும் வரப்போகிறாளே, அது”

“நான் கேட்கும் விலை மிக அற்பமானது என்று அவள் சொன்னாள்.”

“அவள் சொல்வது உண்மைதான்” என்றாள் அவன் மனைவி சிறிது நேர அமைதிக்குப் பிறகு. அவன் அவளை வியப்புடன் நோக்கினான்.

“நீயும் அப்படித்தான் நினைக்கிறாயா?”

“நான் நினைக்கவில்லை. நீங்கள் நினைக்கிறீர்களா?”

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை”

“இரவிலே பிணத்தைக் கூடுவது போல, தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களால் ஆணையோ பெண்ணையோ தேடுபவர்களுக்குத் தான் அது எவ்வளவு அற்பமானது என்று புரியும். நீங்கள் என்னை நாடி வருவதற்கும், அவள் இப்பொழுது உங்களை நாடி வரவேண்டி யிருக்கிற சூழ்நிலைக்கும் வித்தியாசம் இல்லை”

இதைச் சொல்லிவிட்டு அவள் உள்ளே போனதும், வடுக நாய்க்கன் அவள் போன திசையையே பார்த்துக்கொண்டு நின்றான். பெண்கள் எவ்வளவு சுவாரசியமானவர்கள்!

வடுக நாய்க்கன் சாப்பிட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான். லட்சுமியையும் தன் மனைவியையும்பற்றி மாறி மாறி நினைத்துக்கொண்டிருந்தான். அவன் மனத்தில் பெரிய போராட்டம்.

“என் மனைவி சொன்ன சொல்லைக் காப்பாற்ற வந்திருக்கிறாள்” என்று குரல் கேட்டதும் அவன் திரும்பினான். வரதையனும் லட்சுமியும்! அவன் திடுக்கிட்டு எழுந்திருந்தான்.

“என்ன சொல்லுகிறீர்கள்?”

“நீங்கள் கேட்ட விலையைத் தர அவள் வந்திருக்கிறாள்” என்றான் வரதையன்.

கணவனையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள்! என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு?

“நீங்களும் வருவீர்களென்று நான் எதிர்பார்க்கவில்லை !” என்றான் வடுக நாய்க்கன்.

“ஏன்?”

”உங்களுக்கும் நான் கேட்ட விலை இத்தனை அற்பமானது என்றுதான் படுகிறதா?”
“ஆமாம். என் மனைவி என்னிடமிருந்து எதையும் மறைப் பதில்லை . மிகப் பெரியவர் ஒருவரை உபசரிப்பதற்காக நீங்கள் கொடுத்த பொருள்களுக்கு இத்தனை அற்பமான விலை கேட்டீர்கள் என்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.”

“உங்களுக்கு இது அற்பமாகப் படுகிறது!”

”ஆமாம். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் இன்றியமையாமை என்பதன் பொருள் உள்ளத்தளவு என்று எங்கள் இருவருக்கும் தெரியும். கற்பு என்பது வெறும் உடலை மட்டும் அடிப்படையாகக் கொண்டதன்று. கௌதமனை முட்டாளாக்கத்தான், கல்லுக்கு உயிரூட்டினான் அந்தக்கருணைவள்ளல். நீங்கள் வேண்டுவது இவள் உடலைத் தானே? எடுத்துக்கொள்ளுங்கள். இவள் உள்ளத்தை உங்களால் பறிக்க முடியாது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.”

“அவ்வளவு நிச்சயமாக உங்களுக்கு எப்படித்தெரியும்? உடல் வழியாகத்தானே உள்ளத்தில் குடியேற முடியும்?”

வரதையன் சிரித்தான்.

“எதற்குச் சிரிக்கிறீர்கள்?”

“பஞ்ச பாண்டவர்கள் பாஞ்சாலியின் மனத்தில் உடல் வழியாகத்தான் குடியேறப் பார்த்தார்கள். ஆனால் அவள் உள்ளத்தில் நிரந்தரமாகக் குடியேறி இருந்தவன் கண்ணன்தான். இச்சை பிறப்பதற்கு உள்ளந்தான் அடிப்படையேயன்றி உடலல்ல என்பதுகூடவா உங்களுக்குத் தெரியாது?”

“உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் உங்களுக்கு இந்தப் பெண்ணின் உடல் அருமையைப்பற்றி என்ன தெரியும்?”

அவன் லட்சுமியைப் பார்த்துக் கொண்டே இதைச் சொன்னான். அவள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியுமில்லை . ஆடாமல் அசையாமல் வெறித்த பார்வையுடன் நின்றுகொண்டிருந்தாள். சலனமின்றி வெறும் உடலாக அவனுக்கு அவன் மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது. இரவில் பிணத்தைக் கூடுவது போல் …’ அங்கு அப்பொழுது அவன் லட்சுமியைக் காணவில்லை. வெறும் பிணம்! ‘இச்சை பிறப்பதற்கு உள்ளந்தான் அடிப்படையே யன்றி உடலல்ல உடலின் அருமை இவ்வளவுதானா?

உடலின் ‘அருமை’யைப் பற்றி அவன் ஏதோ ஒரு நூலில் படித்திருக்கிறான். லட்சுமிக்கு வயதாகிக் கொண்டே போவது போல் தோன்றியது. தலை நரைக்கத் தொடங்கியது. தோலில் சுருக்கங்கள், வில் போன்ற புருவத்துக்கு பதிலாக இறால் மீனின் வற்றல். செங்கழுநீர்ப் பூக்களுக்கு பதிலாக எப்போதும் நீர் கசிந்து கொண்டேயிருக்கும் கருப்புக் குழிகள்! இந்தச் சுரைப் பழத்தின் விதைகளா ஒரு காலத்தில் முத்துப் பற்களாக இருந்தன? செறிந்த மார்பகம் போய் வயதையும் வேதனையையும் சுமக்கும் தளர்ந்த பைகள்! அதோ, உலர்ந்து முதிர்ந்த தென்னைகளைப் பார்! அவைதாம் ஒரு காலத்தில் தளிரடி வண்ணம் காட்டின. குமிழம்பூ என்று நான் நினைத்த அந்த மூக்கு இப்பொழுது சீழ் ஒழுகும் … போதும், போதும்!

வடுக நாய்க்கன் அச்சங் கொண்டு உள்ளே ஓடினான்.

உடையவரைப் பார்த்துவிட்டு வடுக நாய்க்கன் வீடு திரும்பிய போது, அவன் மனம் உற்சாகத்தால் பொங்கி வழிந்தது. அவன்மனைவி அவனுக்காக வாசலில் காத்துக் கொண்டிருந்தாள்.

“உடையவர் எதற்காக உங்களைக் கூப்பிட்டு அனுப்பினா ராம்?”

“உடையவரால்தான் என்னைப் புரிந்து கொள்ள முடியுமென்று எனக்குத் தெரியும். என்னைப் பார்த்ததும் அவர் சிஷ்யர்களிடம் சொன்னார்: “பாருங்கள் இவனை, இவன்தான் பரம பக்தன்’ என்று.”

“உங்களையா?”

“ஆமாம். என்னையேதான். அவர் மேலும் என்ன சொன்னார் தெரியுமா? ‘உள்ளம் பற்றிய அழகுணர்ச்சியை மலினப்படுத்த விரும்பாத இவனுக்குத்தான் புலாலின் அழியும் தன்மை கண்ணுக்குப் புலப்பட்டிருக்கிறது. இது தெய்வ தரிசனத்துக்கு சமானம். அழியாத ஒன்றை வழிபடுவதுதான் அழகுணர்ச்சி. அடிப்படையாக மன நேர்மை உடையவர்களுக்குத்தான் மனமாறுதல் என்பது இயல்பாக ஏற்படும் நிகழ்ச்சி. லட்சுமியை உடலளவில் அநுபவித்துத் தீரவேண்டுமென்ற சுயநல வெறி இவனிடம் இருந்திருக்குமானால் மன மாறுதலை ஒப்புக்கொள்ளாமல் எதிர்ப்பதற்கான தீய குணம் இவனுள் இருந்திருக்க வேண்டும். இராவணனைப் போல் இவன் ஒரு பரமபக்தன், அவர் சொன்னது அவருடைய சிஷ்யர்களுக்குப் புரிந்ததோ என்னவோ, எனக்குப் புரிகிறது.”

“இராவணனைப் போல பக்தன்’ என்றாரா உடையவர்? எனக்கு விளங்கவில்லையே?”

“உனக்கு ஏற்பட்ட சந்தேகம் போல அவருடைய சிஷ்யர் களுக்கும் ஏற்பட்டது. உடையவர் கூறினார்: ‘இராவணன் பரம பக்தன். ஏன் தெரியுமா? தெய்வ வசத்தால் ஒருவனுக்குள் இருக்கும் அழகுணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் ஒருவன் காமுகனாகிறான். கட்டுப்படுத்தத் தெரிந்தவன் பக்தனாகிறான். காமுகர்கள் தீவிர பக்தர்களாக மாறும் அதிசயம் இதுதான். இராவணன் காமுகனாக சீதையைத் திருடிக் கொண்டு போய் அசோக வனத்தில் வைத்தது உண்மைதான். ஆனால் இறக்கும்போது அவன் ஒரு பரம பக்தன். அழியாத அழகுக்கு அடிமையான ஓர் உபாசகன். தெய்வத்தையே எதிர் நின்று போராடக்கூடிய அளவுக்கு, அவனுடைய பக்தி அவனுக்குத் தெம்பை அளித்தது.’ உடையவரின் சொற்கள் என் மனத்தில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக் கின்றன! இப்படி ஒரு நிலைமையை உருவாக்கி, என்னை ஆட்கொள்ள வேண்டு மென்று நினைத்துத்தான், உடையவர் லட்சுமியின் வீட்டுக்கு அழையாத விருந்தாளியாகச் சென்றாரோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது!”

“அவரிடம் நேரில் சென்று நான் என்ன கேட்கவேண்டுமென்று நினைத்தேனோ அதற்கு பதில் கிடைத்துவிட்டது” என்றாள் அவன் மனைவி. 

தொடர்புடைய சிறுகதைகள்
ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம். ’வனாந்திரமான இடம். பாம்புப் புற்று போல் ஓங்கி வளர்ந்திருந்த மண்மேடிட்ட பெரிய குகைகள். அவன் தனியாக அந்தப் ...
மேலும் கதையை படிக்க...
அம்பி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். எதிரே சேறும் சகதியுமாயிருந்த வராகக் குளத்தை தூர்த்துக் கொண்டிருந்தார்கள். எதற்காகத் தூர்க்கவேண்டும், சேறும் சகதியுந்தானே வராகருக்கு ஏற்றதொரு இடம் என்று நினைத்தான் அம்பி. ஆனால் பாசி படர்ந்த அவ்விடத்திலிருந்து புறப்பட்டு ஊரில் வியாதியைப் பரப்பும் ...
மேலும் கதையை படிக்க...
பக்கத்திலிருந்த வங்கிக்குப் போகலாமென்று கிளம்பினார் ராமதுரை. ஒன்பது மணிக்கே நல்ல வெயில் வந்து விட்டது. குடை எடுத்துக் கொண்டு போவதென்பது அவர் வாழ்க்கையிலேயே செய்திராத ஒரு செயல். அவருக்கு மறதி அதிகம் என்பது இதற்கு ஒரு காரணம் என்றாலும், இதை விட முக்கியமான ...
மேலும் கதையை படிக்க...
குருதட்சணை!
அது பசுபதிக்குப் பிடித்தமான ‘பேன்ட்’. தமிழில் என்ன சொல்வார்கள் ‘பேன்ட்’டுக்கு? ‘இகந்த வட்டுடை’ என்று மணிமேகலையில் வருகிறது. ‘இகந்த’ என்றால், ‘தொளதொள’ என்றிருப்பது. பைஜாமாவாக இருக்கலாம். அப்படியென்றால், வட்டுடை என்பது பேன்ட்டைக் குறிக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழர்கள் பேன்ட் போட்டுக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
கிருஷ்ணன் அன்று மிகவும் உற்சாகத்தில் இருந்தார். அரசாங்க நிறுவனத்தைச் சார்ந்த எஃகு உற்பத்திச் சாலையின் விற்பனைப் பகுதித் தலைவராக இருந்த அவருக்கு அரைமணி முன்புதான் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்தது. ஓர் அயல்நாடு தங்கள் ரயில்வே நிறுவனத்துக்காக எஃகு வேண்டி சர்வதேச ...
மேலும் கதையை படிக்க...
'தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!' இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே அவன் எழுதிய 700 பக்க நாவல் அக்னிக்கு உணவாவதை அவன் பார்த்துக்கொண்டு நின்றான். அவனே எரிந்துகொண்டு இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. இந்த அனுபவம் ...
மேலும் கதையை படிக்க...
திடீரென்று விழிப்பு. விழிப்பா? ஆழ்ந்து உறங்கினால் தானே விழிப்பு? ஒரு கணம் கனவு, அடுத்த கணம் விழிப்பு... எது கனவு, எது விழிப்பு என்று பிரித்தறிய முடியாதபடி ஒரு குழப்பம். சொப்பணாவஸ்தை. எது பாம்பு, எது பழுதை? சங்கரரும் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டிருப்பாரோ? வள்ளுவர் ...
மேலும் கதையை படிக்க...
பரசுராம் அந்தப் பதினாறு மாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தான். கோபத்தின் சக்தியைக் கனலாக மாற்றக்கூடிய வலிமை அவனுக்கு இருந்திருந்தால், அக்கட்டடம் எரிந்து சாம்பலாகி யிருக்கும். அவன் வெளியிலிருந்து அண்ணாந்து அந்தப் பதினாறாவது மாடியை நோக்கினான். அவனுக்கு நெற்றிக் கண்ணுமில்லை. அதுதான் அவன் ...
மேலும் கதையை படிக்க...
வாசல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா? டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்... ‘‘இவ்வளவு பெரிய அட்டாக்... நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!’’ தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன். உலகத்தில் நடப்பன அனைத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று சிலர் சிலர் சொல்கிறார்கள்; யதேச்சையாக ...
மேலும் கதையை படிக்க...
ரயில் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு 'ஸ்டேஷனு'க்குள் தயங்கித் தயங்கிச்சென்றது, தமது மனநிலையைச் சுட்டிக் காட்டுவது போல் தோன்றிற்று. சபேசனுக்கு. கும்பகோணம் வந்துவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் சாரங்கபாணி சன்னதித் தெருவுக்குச் சென்று.... மூன்று தலைமுறையாக அவருக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டை அடைந்து விடலாம். இந்தத் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கப் காப்பி
நாசகாரக் கும்பல்
நாயகன்
குருதட்சணை!
பாரத நாடு பழம்பெரும் நாடு
முடியாத கதை!
கோட்சேக்கு நன்றி
திரிவிக்கிரமன்
எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
அற்றது பற்றெனில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)