Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தப்பித்தேன்

 

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.

கோலாலம்பூரில் `லிட்டில் இண்டியா’ என்று அழைக்கப்பட்ட பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியின் கடைவீதி கலகலப்பாக இருந்தது. கடைகளுக்கு வெளியே மேசைகளின்மேல் கண்கவர் வண்ணங்களில் வாழ்த்து அட்டைகள், (பட்டாசு வெடிக்க அரசாங்க அனுமதி இல்லாததால்) கேப், கம்பி மத்தாப்பு, சட்டி வாணம் போன்றவை.

கடைசி நிமிட நெரிசலை வேடிக்கை பார்க்க வந்தவர்களை இரண்டு இனமாகப் பிரிக்கலாம் என்று தோன்றிது சங்கரனுக்கு. ஸாரோங் கெபாயா, குட்டைக் கவுன் அல்லது பாவாடை என்று விதவிதமாக உடுத்தியிருந்த மலாய், சீன, வெள்ளைக்காரப் பெண்கள், பேரம் பேசிக்கொண்டிருந்த, இடுப்பில் கைலியுடன் இடுப்புக்கீழ் தொங்கிய சட்டையோ, அல்லது முழுநீள கால்சட்டையோ அணிந்திருந்த தமிழ்ப்பெண்கள் (இவர்களில் வெகு சிலர் புடவையும் கூட!)

சங்கரன் தன் முழுநிஜாரின் பின்பக்கத்திலிருந்த பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அதிலிருந்த பர்ஸ் பிதுங்கவில்லை. ஆனால், பல ஆயிரம் ரிங்கிட்டை யோசியாமல் செலவழிக்க கிரெடிட் கார்டு வைத்திருந்தது பலம் அளித்தது.

வாழ்த்து அட்டைகளின் உள்ளிருந்த கவிதைகளைச் சுவாரசியமாகப் படித்துக்கொண்டிருந்தவனுக்கு கழுத்தின் பின்னால் குறுகுறுப்பு ஏற்பட்டது.

ஒரே சாரியாக கார்களும், பஸ்களும் விரைந்துகொண்டிருக்க, தெருவின் எதிர்ப்புறம் நின்றிருந்த குண்டுப் பெண்மணி ஒருத்தி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவள்தானா?

`யாராக இருந்தால் என்ன!’ என்று தன்னையே கடிந்துகொண்டான்.

இந்த வருடமாவது சுதாவுக்கு நல்லதாக ஏதாவது வாங்க வேண்டும். இவளும் தன்னை, `ஒன்றுமில்லாதவன்’ என்று எண்ணிவிடக் கூடாது.

முப்பத்தைந்து வயதுவரை பிரம்மச்சாரியாகவே இருந்த தன்னைத்தான் நண்பர்கள் எப்படிப் பரிகாசம் செய்தார்கள்! `பிச்சைக்காரனுக்குக்கூட துணையும், சுகமும் வேண்டியிருக்கு! ஒரு வேளை, ஒன் கவனம் வேற பக்கம் திரும்பிடுச்சா?’ என்று அவன் பிற ஆண்களை நாடுபவன் என்ற பொருள்பட ஏசினார்கள்.

அவனுக்கா பெண்களைப் பிடிக்காது!

ஒவ்வொரு நாளும், எவ்வளவு பூரிப்புடன் பூமாவைப் பூங்காவில் சந்திக்கப் போவான்!

திடீரென்று அவள் வருகை நின்றது. அவன் அழைத்தபோதெல்லாம் தொலைபேசியையும் அவள் எடுக்கவில்லை. பதிலுக்கு அவளது திருமண அழைப்பிதழ் வந்தது — தபாலில்.

பத்திரிகையைக் கிழித்துப்போடவேண்டும் என்ற ஆவேசத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அதைப் பிரித்தான். அவன் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் யாரோ அமெரிக்க மாப்பிள்ளை!

கடைசியில், இவளுக்குப் பணம்தானே பெரிதாகப் போய்விட்டது!

தன்னை ஒரு விளையாட்டுக் கருவியாகத்தானே உபயோகப்படுத்தி இருக்கிறாள்!

இன்னொரு முறை இப்படி ஏமாறக்கூடாது. கைநிறையச் சம்பாதிக்க வேண்டும். அதன்பின்தான் கல்யாணத்தைப்பற்றிய யோசனை என்றெல்லாம் தீர்மானம் செய்துகொண்ட பின்னரும் மனம் சமாதானமாகவில்லை.

முப்பத்தாறு வயது மணமகனாக அவன். பக்கத்தில், அவனைவிட ஒரே வயது இளைய சுதா. ஒல்லியாக, சோடாபுட்டிக் கண்ணாடியும், குடமிளகாய் மூக்காகவும் இருந்த அவளுக்கு அதுவரை கல்யாணம் ஆகாததில் அதிசயமில்லை என்று தோன்றிற்று அவனுக்கு. அவனைப் பொறுத்தவரை, சதா கேலி செய்த நண்பர்களிடமிருந்து தப்பிக்கத்தான் அந்தக் கல்யாணம். மனைவி எப்படி இருந்தால் என்ன!

சுதாவை மணந்தபின்னர், பழைய துடிப்பு வற்றியிருந்தது அவனுக்கே தெரிந்தது. `இதுவே அந்தப் பாவி பூமாவாக இருந்தால், இப்படியா இயந்திரம்போல இயங்கியிருப்பேன்!’ என்று அவனது எண்ணம் போக, வருத்தம்தான் மிஞ்சியது.

அந்தக் குண்டுப் பெண்மணி தெருவைக் கடந்து, அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள், உதடுகளை விரித்து புன்னகை செய்தபடி.

பூமாவா இவள்!

இவளை நினைத்தா உருகினேன்! எல்லா அழகும் எங்கே போயிற்று?

“ஹலோ சங்கரன்! நீ அப்படியேதான் இருக்கே!”

`பின்னே, எல்லாருமா ஒன்னைப்போல ஓயாம தின்னு தின்னு கொழிச்சிருப்பாங்க?’ என்று சுடச்சுட — கேட்கவில்லை, நினைத்துக்கொண்டான்.

“நான் தீபாவளிக்கு வந்தேன், சும்மா பத்து நாளைக்கு!” பல ஆயிரம் ரிங்கிட் செலவழித்துக்கொண்டு வந்திருக்கிற பெருமை அவள் குரலில்.

“நீ மட்டும்தான் வந்திருக்கியா?” ஏதாவது பேசினால்தான் மரியாதையாக இருக்கும் என்று நினைத்துக் கேட்டான்.

“தனியாத்தான் வந்தேன். என் ஹஸ்பண்ட் ரொம்ப வசதியா வாழ்ந்து பழகிட்டாரில்ல, அவருக்கு இங்கே சரிப்படாது!” மலேசியத் தலைநகரை ஏதோ ஒரு சிற்றூரைப் பழிப்பதுபோலச் சொல்லிச் சிரித்தாள். “எங்க கல்யாண சமயத்திலேயே ஆயிரம் குறை சொன்னவரு!”

இவளும், இவளுடைய பணப்பெருமையும்! வெறுப்பாக இருந்தது சங்கரனுக்கு.

`தப்பிச்சேன்!’ தன்னுடைய நல்ல காலத்தை எண்ணி மகிழ்வும், நிம்மதியும் ஒருங்கே எழுந்தன. மனத்தைவிட பணத்தை மேலாக மதிப்பவளுடன் வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்?

விடை பெறும் தோரணையில் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, “என்னவளுக்குப் புடவை வாங்க வந்தேன்,” என்று புளுகியபடி நடந்தான்.

தன்னையுமறியாமல், மனைவியுடன் அவளை ஒப்பிட்டுப் பார்த்தான்.

இன்றுவரையில், தன் வாய்திறந்து ஏதாவது கேட்டிருப்பாளா சுதா?

தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம், என்ன செலவு செய்கிறோம் — ஊகும். அவனுடைய அலட்சியப் போக்கால் சற்றும் மனங்கலங்காது, எவ்வளவு பணிவாக இருந்தாள்!

அவனுக்குக் குற்ற உணர்ச்சியும், தன்மேலேயே கோபமும் எழுந்தது. தன்னைவிட பணக்காரனான ஒருவனை காதலி தேடிப் போய்விட்டாளே என்ற தாழ்வு மனப்பான்மையில் மனைவியின் நல்ல குணத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோமே!

அழகுதான் எல்லாமா? அது அழியும் என்று ஏன் தனக்குத் தோன்றாமல் போயிற்று? படிப்பது எல்லாம் மனதில் படிவதில்லையோ?

இந்தக் காலத்தில் யார்தான் கண்ணாடி அணியவில்லை? அட, லேசர் சிகிச்சைக்கு அழைத்துப்போனால் ஆயிற்று! அப்படியே, அந்த குடமிளகாய் மூக்கையும்..!

சீச்சீ!

தன் எண்ணம் போன போக்கைப் பார்த்துத் தன்னையே கடிந்துகொண்டான்.

சுதா என் மனைவி! அவள் நடிகையா என்ன, அடிக்கடி மூக்கையும், முகத்தையும் மாற்றிக்கொள்ள!

பூமாவிடம் சொன்ன பொய்யை நிசமாக்க வேண்டும். சுதாவுக்கு என்ன வாங்குவது — தங்க நகையா, பட்டுப்புடவையா?

எதுவாக இருந்தாலும், அவளையும் கடைக்கு அழைத்து வந்து, அவளது அமைதியான முகம் விகசிப்பதைப் பார்க்க வேண்டும்.

தடை விதிக்கப்பட்டிருந்ததை பொருட்படுத்தாமல், யாரோ துணிச்சலாக ஊசிப் பட்டாசை வெடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சரவெடிச் சத்தத்தைக் கேட்டு, எல்லோர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

`இப்பவே தீபாவளி வந்திடுச்சு!’ என்று கூட்டத்தில் யாரோ சொல்லிப்போனது தனக்காகவே சொன்னது போலிருந்தது சங்கரனுக்கு. 

தொடர்புடைய சிறுகதைகள்
“சாப்பிட்டு முடிடா, செல்லம்! சமர்த்தில்லே!” ஞாயிறு தினசரியில் காளைமாட்டின் படத்தைப் பார்த்து, `நந்தி பகவானே! உனக்கு வந்த கதியைப் பாத்தியா?’ என்று, மானசீகம்மாக கைலாயத்திற்கே போய்விட்டிருந்த கமலநாதன் மனைவியின் குரலைக் கேட்டு நனவுலகிற்கு வந்தார். வீரம், பண்பாடு என்றெல்லாம் பேசுகிறவர்கள் `கருணை’ என்ற வார்த்தைக்கு ...
மேலும் கதையை படிக்க...
அம்மா பெயர் மங்களம். அதை முதன்முதலில் தெரிந்துகொண்டபோது, "எப்படிம்மா இந்தப் பேரு வெச்சாங்க?" என்று கேட்டேன். "என் பாட்டி பேரு," என்றாள். "என் பேருமட்டும் ஏன் பிரேமா?" பாட்டியின் பெயர் பிரேமா இல்லை. "ஒன் கேள்விக்கெல்லாம் யாரால பதில் சொல்ல முடியும்?" என்று அம்மா அலுத்துக்கொண்டாள். ...
மேலும் கதையை படிக்க...
"பெரிய மனசு பண்ணுங்க மண்ட!" பினாங்கு துறைமுக நகரத்தில் அதிக நடமாட்டம் இல்லாத ஒரு கோடி. அதில் இருந்தது பழைய உலோகப் பொருட்களை வாங்கி அடைக்கும் அந்த இடம். கடையென்று சொல்ல முடியாது. உயர்ந்த சுவற்றுக்குள் ஒரு பெரிய வளாகம். அவ்வளவுதான். அதன் ...
மேலும் கதையை படிக்க...
“நாளைக்கு அப்பாவோட திவசம், பாபு. லீவு எடுத்துடு!’ அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பாபுவாம், பாபு! பாலசுப்ரமணியம் என்று பெற்றோர் வைத்திருந்த பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் என்னவாம்? பெயரை மாற்றிவிட்டால் மட்டும் தான் அவர்களுக்குப் பிறந்த பிள்ளை இல்லை என்றாகிவிடுமா? மீனாட்சி இன்னும் இரண்டு முறை ...
மேலும் கதையை படிக்க...
“என்னை விட்டுடுங்க! இதுதான் என்னோட கடைசி வெளிநாட்டுப் பயணம்!” முகத்தில் அருவருப்புடன், முணுமுணுப்பான குரலில் கூறிய மனைவியைப் பார்த்தார் அருண். தன்னால்தானே அவளுக்கு இவ்வளவு கஷ்டம் என்ற நினைப்பில் சற்று குற்ற உணர்வு உண்டானது அவருக்கு. “கொஞ்ச நேரம்தானே பிரபா? புதுச்சேரியிலிருந்து மூணே ...
மேலும் கதையை படிக்க...
குற்ற உணர்ச்சியே கருணையாக…
என் பெயர் காதல்
பெரிய மனசு
யார் பிள்ளை?
ஒரு பேருந்துப் பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)