தீரன் சின்னமலையின் வாரிசுகளைக் கொல்ல காத்திருப்பவன்

 

கிருஷ்ணகுமாருக்கு சமூக அக்கறை அதிகம். அதிகம் என்றால் அது அடுத்தவர்களின் கார்களில் கல் அல்லது கம்பியைக் கொண்டு அழுந்தக் கீறும் அளவுக்கான சமூக அக்கறை. பெங்களூர் சாலைகளில் ஓடும் இன்னோவோ, ஸ்கார்ப்பியோ, சஃபாரி, புதிதாக வந்திருக்கும் எக்ஸ்.யூ.வி போன்ற பெரிய வாகனங்களில் ஒற்றை ஆள் மட்டும் அமர்ந்திருப்பதை பார்த்தால் கிருஷ்ஷூக்கு ஏறும் சூட்டில் உச்சந்தலையின் நடுவில் ஒரு ஆணி முளைத்துக் கொள்ளும். இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் இப்படி ஒற்றை ஆளுக்காக பெரிய கார்களை ஓட்டுவதனால்தான் இந்த ஊர்ச் சாலைகளில் ட்ராபிக் அதிகமாகிவிட்டது என்று புலம்புவான். கடுப்பேற்றும் வண்டிகளின் பின்னாலேயே சென்று அடுத்த சிக்னலில் ஒரு கீறல் போட்டுவிடுவது அவனது வாடிக்கை. கன்னடம் தெரியாத அவன் ஒருவேளை இந்த ஊரில் சிக்கிக் கொண்டால் நசுக்கியே தார் ரோட்டில் தேய்த்துவிடுவார்கள் என்று தெரிந்தேதான் களமிறங்கினான். களமிறங்கினான் என்ற வார்த்தைதான் அவனுக்கு பிடித்தமானது. கீறல் போடத்துவங்கிய ஆரம்பகாலங்களில் வண்டிக்காரர்கள் கவனித்து கீழே வருவதற்குள் தலை தப்பித்து ஓடியிருக்கிறான். ஆனால் இப்பொழுதெல்லாம் கை தேர்ந்தவன் ஆகிவிட்டான் சத்தமே இல்லாமல் கீறலை அழுந்தப் போட்டுவிடுகிறான். நெம்பர் எழுதாத புது வண்டிகளில் கீறல் போடுவதற்கு முன்பாக ஒரு வினாடி மெளனம் அனுசரிப்பானாம். இது அவனே போட்ட ’பிட்’தான்,

காரும் கீறலுமாய் பெங்களூரில் சுற்றிக் கொண்டிருந்தவன் கடந்த ஒரு வருடமாக கத்தியைத் தூக்கிக் கொண்டு சுற்றுகிறான். தீரன் சின்னமலையின் வாரிசு யாராவது கண்ணில் பட்டால் கொல்லப்போகிறானாம். ஆரம்பத்தில் இதை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவனது பெற்றோர் சங்ககிரி, ஓடாநிலை என சின்னமலை வாழ்ந்த இடங்களிலெல்லாம் கிருஷ்ணக்குமார் வெறித்தனமாக அலைந்தபோதுதான் அலறத் துவங்கினார்கள்.
***

தீரன் சின்னமலைக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி. அவர் இளவட்டமாகச் சுற்றிக்கொண்டிருந்த சமயத்தில் கொங்குப்பகுதி மைசூரை ஆண்ட திப்புசுல்தானின் ஆளுகையில் இருந்தது. திப்புவின் ஆட்கள் கொங்கு நாட்டு பகுதியில் வரி வசூல் செய்வது வழக்கம், வசூலித்த பணத்தோடு திப்புவின் ஆட்கள் சங்ககிரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவர்களை மடக்கி சின்னமலை வரிப்பணத்தை பறித்துக்கொண்டாராம், பணத்தை நான்தான் களவாடிவிட்டதாகச் சொல்லி மைசூர் அரசாங்கம் என்னை தண்டிக்குமே என பணத்தை பறிகொடுத்த திப்புவின் ஆள் வருந்தியபோது சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் சின்னமலை பறித்துக்கொண்டதாகச் சொல் என்று பஞ்ச் டயலாக் அடித்து துரத்தியடித்திருக்கிறார். அதிலிருந்து தீர்த்தகிரி சின்னமலை ஆகிவிட்டார். சின்னமலை என்பது மரியாதைக் குறைவாக இருக்கிறது என நினைத்த அவரின் சாதியைச் சேர்ந்தவர்கள் பிற்காலத்தில் சின்னமலையின் பெயரோடு ‘தீரனை’ச் சேர்த்து தீரன் சின்னமலை ஆக்கிவிட்டார்கள். திப்புவின் படையில் சேர்ந்த சின்னமலை வெள்ளையர்களுடன் சண்டையிட்டது, மீண்டும் ஓடாநிலைக்குத் திரும்பி கோட்டையமைத்தது, வெள்ளையர்கள் அவரைக் கைது செய்து சங்ககிரி மலையில் தூக்கிலிட்டது போன்றவை எல்லாம் வரலாறு. ஆனால் நம் கிருஷ்ணகுமார் கதைக்கு இந்த வரலாறு அவுட் ஆஃப் சிலபஸ்.

திப்புவின் படையில் சேர்வதற்கு முன்பாக ஊருக்குள் தன் வயசு ஆட்களை சோடி சேர்த்துக் கொண்டு சுற்றி வந்தார் சின்னமலை. இரவு நேரங்களில் தன் நண்பர்களுடன் வீட்டிற்கு வந்து அவர்களுக்கும் சேர்த்து சோறு போடச் சொல்லி தன் அண்ணன் கொழந்தசாமியின் மனைவி கொம்பாயிக்கு உத்தரவு போடுவது வழக்கம். கொஞ்சநாட்களுக்கு முகம் கோணாமல் சோறு வடித்த கொம்பாயி எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மாமிச மலைகளுக்குச் பொங்கிப்போடுவது என்று ஏதோ பழமை பேசிவிட்டாள். வாக்குவாதத்தில் வார்த்தைகள் தடித்து தன் அப்பன் வீட்டுக்கு பெட்டி படுக்கையை சுருட்டிக் கொண்டும் போய்விட்டாள். இந்த இடத்தில் கொழந்தசாமியின் ஃபீலிங்கஸை நினைத்து வருத்தப்படாமல் அடுத்த வரிக்கு நகர்ந்துவிடுங்கள்.

பிறந்தவீட்டில் மூக்கைச் சிந்திய பொம்மாயி, சின்னமலை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக போட்டுக்கொடுத்திருக்கிறாள். கடுப்பாகிப்போன கொம்பாயியின் அப்பன் ஆரியப்பட்டி பட்டக்காரர் அந்த ஆண்டு நடைபெற்ற தன் ஊர்த்திருவிழாவிற்கு வந்த சின்னமலையையும் அவரது கூட்டாளிகளையும் பிடித்து தேரில் கட்டிவைத்துவிட்டார். ஊரே சிரித்துக் கொண்டிருக்க அடுத்த அசலூர்காரன் இப்படி அசிங்கப்படுத்திவிட்டானே என தலையை தொங்கவிட்ட சின்னமலையை அவனது தங்கையின் கணவன்தான் ஆயிரம் பேர்களை திரட்டிவந்து அழைத்துச் சென்றான். அன்றிரவில் சின்னமலைக்கு கறிஞ்சோறு ஆக்கிப்போட்ட அவனது தங்கை உன்னைக் கட்டி வைத்தவன் தலையை வெட்டி எடுத்தால்தான் தான் ஆக்கிப்போட்ட சோறு செரிக்கும் என்று சொல்லிவிட்டாளாம்.

இதற்கு பிறகாக மைசூர் சென்று வெள்ளைக்காரனோடு சண்டை போட்ட சின்னமலை திப்புவின் மறைவிற்கு பிறகாக ஊர் திரும்பினார். அண்ணியின் அப்பன் மீதும் அவளின் அண்ணன் மீதும் கோபம் தீராமல் இருந்த சின்னமலை நடுராத்திரியில் அவர்கள் வீட்டுக்கதவை தட்டியிருக்கிறார். தீப்பந்தம் பிடித்துக் கொண்டு வெளியே வந்த இரண்டு பேரையும் வெட்டி தலைகளைத் தூக்கி வந்து ஊருக்கு முன்னால் வைத்துவிட்டு ரத்தக் கறையோடு தங்கையிடம் பெருமை பேசினாராம்.

***

இந்த வரலாற்றை படித்த பிறகுதான் சின்னமலையின் மீது எரிச்சல் அடைந்தவனாய் கிருஷ்ணகுமார் சுற்றிக் கொண்டிருந்தான். யார் சொல்லியும் இந்தக் கதையை மறப்பதாக இல்லை. தன் மகள் வாழாவெட்டியாக வந்து நின்றால் எந்த அப்பனுக்கும் அண்ணனுக்கும் கோபம் வரத்தானே செய்யும் என்று புலம்பியவன் இதையே இரவும் பகலுமாக நினைத்து மனநிலை பிறழ்ந்தவன் ஆகிவிட்டான். தர்க்காவில் தண்ணீர் மந்திரித்தும், அல்லேலூயா கூட்டத்தில் ஜெபித்தும், சித்தேஸ்வரன் கோயில் திருநீறு பூசியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

மனநல மருத்துவர் தனபால்தான் கிருஷ்ணகுமாருக்கு வந்திருக்கும் நோயின் பெயர் மல்ட்டிப்பிள் பெர்சனாலிட்டி எனப்படும் பிளவாளுமை என்று சொன்னார். சந்திரமுகியில் ஜோதிகாவுக்கும், அந்நியனில் விக்ரமுக்கும் வந்த அதே மனநோய்தான். சரி செய்துவிடலாமாம் ஆனால் கொஞ்சம் நாள் ஆகுமாம். அதுவரைக்கும் இவனை எப்படி சமாளிப்பது என்பதுதான் வில்லங்கமே. தன்னை தலை வெட்டுப்பட்ட ஆரியப்பட்டி பட்டக்காரரின் வாரிசு என்று சொல்லிக் கொள்கிறான் கிருஷ். சின்னமலையின் வாரிசுகளை தேடிக் கண்டுபிடித்து வெட்டுவது மட்டுமே தன் குறிக்கோள் என்றும் பிதற்றுகிறான். சின்னமலையின் பெயரைச் சொல்லி வாக்குச் சேகரிப்பவர்களுக்குத் தெரிந்தால் விவகாரம் பெரிதாகிவிடுமே என்று சோப்பு நீரைக் கரைத்துக் குடித்தவர்களைப் போல அலைந்து திரியும் கிருஷ்ணகுமாரின் பெற்றோரின் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது.

செய்வன திருந்தச் செய் என்று அந்தக் காலத்தில் சும்மாவா சொல்லி வைத்தார்கள். வரலாற்றை வாசித்தவன் முழுமையாக வாசித்திருக்க வேண்டும் அல்லது வாசிக்காமலேயே இருந்திருக்க வேண்டும். சின்னமலைக்கு கல்யாணமும் ஆகவில்லை குழந்தை குட்டியும் இல்லை. இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் சின்னமலையின் வாரிசை வெட்டுவேன் குத்துவேன் என்று சொல்லித் திரிகிறான் கிருஷ்ணகுமார். அவனுக்கு யார் புரிய வைப்பது? இதை அவனிடம் சொல்லப்போன சங்கர் கடந்த பதினைந்து நாட்களாக கழுத்தில் கட்டுப்போட்டுத் திரிகிறான். கிருஷ்ணகுமாரிடம் வரலாற்றைச் சொல்லி வெட்டு வாங்க நான் தயாரில்லை. நீங்கள் முயற்சிக்கிறீர்களா?

- மே 21, 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
மது பிணமாகக் கிடந்தான் என்று ஆரம்பித்தால் எவனோ ஒரு மதுதானே என்று நீங்கள் அடுத்த பக்கத்துக்குச் சென்றுவிடலாம். அதுவே உங்கள் மகன் அல்லது உங்கள் கணவன் அல்லது உங்களின் காதலன் பிணமாகக் கிடந்தான் என்று தொடங்கினாலும் சோகத்தை ஏற்று அடுத்த வரிக்குச் ...
மேலும் கதையை படிக்க...
சொக்கநாதன் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக தூக்கநாதன் என்று வைத்திருக்கலாம். அரசு அலுவலர்களே கூட அவ்வப்போது வந்து டிப்ஸ் கேட்டுச் செல்லலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு சொக்கநாதன் தூக்கத்தில் நிபுணராக ஆகியிருந்தான். படுத்தால் தூக்கம், படித்தால் தூக்கம் என்றிருந்தால் பிரச்சினையில்லை. நின்று ...
மேலும் கதையை படிக்க...
ஒரு திருடனின் கையை உடைப்பது என்பது சாதாரண விஷயமா அதுவும் என்னைப் போன்ற நோஞ்சானுக்கு. நான் குடியிருக்கும் ஒண்டிக் குடித்தன வீட்டிற்கு எதிர்புறமுள்ள வீட்டில்தான் திருட்டு நடந்தது. அந்த வீட்டு அம்மிணி சாயந்திரமானால் வாக்கிங் போவார். அரை மணி நேரம்தான். ஆனால் ...
மேலும் கதையை படிக்க...
சாவதும் ஒரு கலை
உங்களுக்கு சில்வியா பிளாத் பற்றித் தெரியுமா? எனக்கு ஷோபனாவைத் தெரியும் வரை சில்வியா பிளாத் தெரியாது. ஷோபனாவை எப்படித் தெரியும் என்பதும் சொல்ல வேண்டிய விஷயம்தான். அருண்ஜவர்லால் எனது முக்கியமான நண்பர்களில் ஒருவர். ஜவகர்லால் இல்லை-ஜவர்லால். என்னோடு வேலூரில் படித்தவர். தற்பொழுது, ...
மேலும் கதையை படிக்க...
விஜயலட்சுமி என்னும் பெண் வண்டிச்சக்கரம் படத்தில் ஸ்மிதாவாக அறிமுகமாகிய 1979 ஆம் ஆண்டுதான் நந்தகோபால் பிறந்தான். ஈரோட்டுக்கு பக்கம் கவுந்தப்பாடியில் நந்து பிறந்த போது ஸ்மிதாவுக்கு பத்தொன்பது வயது. ஸ்மிதாவாக மாறுவதற்கு முன்பாகவே விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகியிருந்தது. ஆனால் கொடுமைகளில் இருந்து ...
மேலும் கதையை படிக்க...
தெறித்து விழுந்த கனவுகளின் கதை
தூங்கான் (எ) சொக்கநாதன்
மொக்கையான சோகக் கதை
சாவதும் ஒரு கலை
சில்க் ஸ்மிதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)